நிஜங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 4, 2023
பார்வையிட்டோர்: 2,332 
 
 

“அம்மா இருந்தாலும் சுத்த மோசம் ராதா”.

“எத வச்சு சொல்ற கீதா?”

“பின்னே என்ன? சித்தி மாங்கு மாங்குன்னு அப்பா காரியம் எல்லாம் பார்த்துகிட்டா. எவ்வளவு அழுகை; அம்மா ஜடம் மாதிரி இருந்தா, அழக்கூட இல்லை. வந்தவளுக்குத் துக்கம் கொடுப்பதில் இருந்து நமக்கு அடிக்கடி காபி – ஜீஸ் கொடுப்பது வரை அவதான் பார்த்துக்கிட்டா. வைதீக காரியம் எதுவும் வைக்காம எவ்வளவு நேர்த்தியா செஞ்சா”.

“இந்த அம்மா என்னன்னா சித்தி முகத்தைப் பார்க்காமல் பேசுறதும், ஒற்றை வார்த்தையில் பதில் சொல்றதும் நல்லாவா இருக்கு? என் பிரண்சுகளே சொன்னாங்க, உங்க சித்தி மாதிரி கிடைக்கக் குடுத்து வச்சு இருக்கணும் என்று. இத்தனைக்கும் நாம பிறந்தபோது அவதான் இங்கேயே அப்பா வேலை பார்த்தக் கல்லூரியில் படிச்சுக்கிட்டு நம்மைக் கவனிச்சுக்கிட்டாளாம். பாட்டி சொல்லி இருக்காங்க. பாட்டி, தாத்தா கூடவும் அம்மா அதிகம் பழக மாட்டா”

“அப்பா கிட்ட மட்டும் அம்மா சௌஜன்யமா இருந்தாளா என்ன? சித்திகிட்ட பேசுற மாதிரிதான் முகத்தைப் பார்க்காமல் பேசுறது. முத்து உதிர்ந்திடுமோ என்ற நினைப்பு. உண்டு – இல்லைன்னு தலையத் தலைய ஆட்டுகிறது. பாவம் அப்பா. எவ்வளவு துடிப்பானவர். கலகலப்பாப் பேசுறவர். அவருக்குன்னு இந்த தொட்டாச் சிணுங்கி அம்மா வாய்த்தது எப்படி?”

“இப்படிப்பட்ட அம்மாவை மத்தவங்க முன்னாடி விட்டுக் குடுக்காம என் சாரதா போல வருமான்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் அப்பா. அம்மாவோட டார்ச்சர் தாங்காமத் தான் அம்பது வயசிலேயே ஹார்ட் அட்டாக்குல போய்ச் சேர்ந்துட்டாரோ? சித்தி வீட்டுக்குப் போகும்போது நல்லாத்தானே அப்பா போனாங்க. வந்ததும் நெஞ்சை வலிக்குதுன்னு சொன்னாங்க. டாக்டர் வருவதற்குள் எல்லாம் முடிஞ்சு போச்சு. அப்போகூட அம்மா மௌனமாக வெறித்தபடி தானே இருந்தாள். பதறவில்லை, கதறவில்லை ஏன்?”

“ஆமாம், இந்த அம்மாவுக்கு என்ன ஆச்சு? எப்போதும் தையல்மிஷினைக் கட்டிக் கொண்டு அழறா. நமக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இது நடக்குது. ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ சுஹாசினி மாதிரி இது நடக்குது. இவ தைச்சுதான் இங்க விடியப் போவுதா? அப்பா இருக்கும் போதும் தைச்சா, இப்ப அப்பா போய் ஒரு மாசம் கூட ஆகல, மறுபடியும் தைக்க ஆரம்பிச்சிட்டா இரவு பூரா இடுப்புவலி, முழங்கால் வலின்னு முனகல். பகல்ல தையல் தேவையா? அப்பா இருக்கும் போதும் நல்ல சம்பளம். அப்பா போனதும் பென்ஷன் வருது. சொந்த வீடு. அடுத்த வருஷம் நம்மப் படிப்பு முடிஞ்சிடும். கேம்பஸ் இண்டர்வியூல கட்டாயம் ஜெயிச்சிடுவோம். அப்புறம் என்ன கவலை அம்மாவுக்கு? சித்தி வந்து இருக்கா, அவளை வச்சுகிட்டு இதுக்கு இன்னைக்கு ஒரு முடிவு கட்டணும். அம்மாவ இப்படியே விடக்கூடாது”.

இரட்டையர்களான ராதாவும், கீதாவும் மாறி மாறிப் பேசி ஒரு முடிவுடன் மொட்டை மாடியில் அம்மாவைக் காணச் சென்றார்கள். சித்தியின் கேவல் தங்கள் பெயர் அடிபடவே தயங்கி நின்றனர் படிக்கப்படிலேயே.

“அக்கா நான் செஞ்சது தப்புதான். சிறுவயசுல அத்தானிடம் மயங்கி, அவரும் அதற்கு இணங்கித் திருமணத்திற்குப் பின்னும் எங்கள் உறவு தொடர்ந்தது. என் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்தது வசதியாய்ப் போச்சு. உன் வீட்டில் தங்கிப் படித்த போதே தொடங்கிய உறவு. நீ நம்ம பெற்றோரிடம் முறையிட்டாய். அவர்கள் கண்டு கொள்ளவில்லை. கையாலாகாத அப்பாவுக்கு அத்தான் மூலம் வரும் வரும்படி கண்ணை மறைத்தது. அப்புறம் எனக்குக் கல்யாணம் ஆச்சு. நீ எதுவும் என்னைக் கேட்டுக்கல. பிறந்த வீட்டையும் மறந்துட்ட. அப்பா, அம்மா இறந்தபோது கூட நீ இப்படித்தான் மௌனமாக இருந்தாய்.

இருந்தாலும், எங்க உறவு தொடர்ந்தது. ஆனா அத்தான் மட்டும் புலம்புவார். நீ மனசலவுள அவரை விட்டு விலகிட்டேன்னு. எங்க தப்ப நான் நியாயப்படுத்தல. சாவுற அன்று கூட என் வீட்டுக்கு வந்துட்டுத் தான் போனாரு. அப்பகூட உன்னைப் பத்திதான் சொல்லிகிட்டு இருந்தாரு. நீ சண்டை போட்டாக்கூட தேவலாம். இப்படி மௌனம் சாதிச்சே என்னைக் கொல்லாமக் கொல்றா. செத்துப் போயிடலாமான்னு கூடத் தோணுது. எம் பெண்ணுகளுக்காகத்தான் அந்த முடிவுக்குப் போகலைன்னு புலம்புனாரு. இப்ப ஒரேயடியாப் போயிட்டாரு. என்னை மன்னிச்சிடுன்னு கேட்கக்கூட எனக்கு அருகதை இல்ல. இருந்தாலும் நீ மௌனம் சாதிப்பது எனக்கு பயமா இருக்கு. உனக்காக இல்லாவிட்டாலும் உன் பெண்களுக்காக உன்னை மாத்திக்க உனக்குத் துரோகம் செஞ்சதாலதான் எனக்கு வயிறு திறக்கவே இல்லை என்று நினைக்கிறேன்”.

சித்தி விஜயா சொல்ல சொல்ல அதிர்ந்தனர் இருவரும்.

சாரதா பேச ஆரம்பித்தாள்.

“அறிஞ்சோ, அறியாமலோ அவரோடு வாழ்ந்து இரட்டைப் பொட்டைப் புள்ளைங்களைப் பெற்று விட்டேன். அதுக என்ன பாவம் பண்ணிச்சு? அதுகளுக்கு நல்ல வாழ்வு அமைச்சிக் குடுக்குற வரைக்கும் நான் சாக மாட்டேன். உங்க விபரம் தெரிஞ்சதும் அவர் நிழல் பட்டால்கூட கூசிக் குறுகி விடுவேன். நானே சோரம் போனதுபோல் எனக்குள் ஒரு தகிப்பு. பெத்தவங்க, கட்டினவர், கூடப் பிறந்தவர் யாருமே எனக்குன்னு ஒரு மனம் இருக்கு, அதுல எவ்வளவு ரணம் இருக்குன்னு நினைக்கல. அவுங்க அவுங்க சுயநலத்தோடவே வாழ்ந்தீங்க. இப்போ அந்த நினைவுகளில் இருந்து ஒருவகையில் விடுதலை உணர்வு. எனவே எனக்குள் துக்கம் இல்லை. குழந்தைகள் எதிரே இரட்டை வேஷம் போட வேண்டிய அவசியம் இல்லை என்ற நிம்மதி.

கொண்டவன் சரியா இருந்தா கூரை ஏறிக் கோழி புடிக்கலாம்னு பழமொழி. எனக்கு அந்த பாக்கியம் இல்லை. நீ ஆட்டி வச்சபடி ஆடினாரு. வெளியில இரண்டு பேருமே நல்லா வேஷம் கட்டுவீங்க. ஆகாத பெண்டாட்டி கைபட்டாக் குற்றம் கால் பட்டாக் குற்றம்னு இது வரை வாழ்ந்துட்டேன். அந்த ஆகாத கணவரின் வருமானத்தில் வாழ விரும்பாமல்தான் தையல் வேலை செய்கிறேன். அதில் வரும் வருமானம்தான் எனக்கு வெகுமானம். உங்க ஊழலைத் தெரிஞ்சுக்கிட்டா என் பெண்கள் தாங்க மாட்டார்கள். அவர்தான் போயிட்டாருல்ல. இனிமே உனக்கு இங்கு என்ன வேலை? இதுவரைக்கும் சுமங்கிலி என்ற பெயரில் வாழ்ந்தேன். அதுதான் எனக்குப் புருஷனால் கிடைச்ச சுகம். இனிமே அதுவும் இல்லை. உனக்கு எந்த இழப்பும் இல்ல. மீறி என் பெண்களோட உறவைத் தொடர்ந்தால் மௌனமாக இருந்த நான் வாய் திறக்க ஆரம்பித்து விடுவேன். பிறகு நாறிப் போயிடுவ, ஜாக்கிரதை” என்றாள் கறாராக.

அழுத கண்களுடன் சித்தி வெளியேற கண்மூடி அமர்ந்து இருந்த சாரதாவின் தோளைப் பற்றினர் ராதாவும், கீதாவும். திடுக்கிட்டவளின் காதில் அம்மா ‘யூ ஆர் கிரேட்’ என்று இருவரும் ஒருமித்த குரலில் கூற உடைந்து அழ ஆரம்பித்தாள் சாரதா!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *