கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 17, 2022
பார்வையிட்டோர்: 5,953 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த இடம் ஒரு கணத்தில் பரபரப்பானது. ‘எழுந்திரு, எழுந்திரு’ என்று பெரியவன் அவசரப்படுத்தினான். சின்னவன் சோர்வினால் கண்ணயர்ந்திருந்தான். அவனை அந்நிலையில் விட்டுவிட்டு ஓடுவதற்கு இவனுக்கு மனம் வரவில்லை .

தூரத்தில் வாகனங்கள் நிரையாக வருவதாக ஒருவன் கூறினான். அவனை நெருக்கி விசாரித்தபோது அவன் தான் பார்க்கவில்லையென்றும் இன்னொருத்தன்தான் பார்த்ததாகவும் சொன்னான். சனங்கள் ஒவ்வொரு திசையில் ஓட ஆரம்பித்தனர். தங்களுக்கு வேண்டிய மாதிரி வரிசை செய்து நின்றார்கள்; பிறகு ஆர்வமிழந்து வரிசையைக் குலைத்தார்கள்.

மறுபடியும் குரல் எழும்பியது. யார் முதலில் கண் டது? உண்மையில் வாகனங்கள் வருகின்றனவா? பொய் சொல்லுவதற்கு இது நல்ல சமயமல்ல! எந்த திசையில் இருந்து வாகனங்கள் வருகின்றன? நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள்.

அந்த தொக்கையான மனுஷி நாலு பிள்ளையையும் இழுத்துக்கொண்டு முன்னேறினாள். அவள் கைகளில் பெரிய பாத்திரங்கள் இருந்தன. அவள் எல்லாவற்றையும் முன்கூட்டியே யோசித்துப் போதிய ஏற்பாடுகளுடன் வந்திருந்தாள்.

பெரிய பட்டாளம் போனது போல அவள் போன பின் பின்னால் நல்ல இடைவெளி தோன்றியது. அந்த இடைவெளியை நோக்கி ஓடுமுன் அது விரைவில் மூடிக்கொண்டது.

அப்போது ஹெலிகொப்டர்கள் சுழன்று சுழன்று பறந்தன. அவற்றிலே பொருத்தியிருந்த துப்பாக்கிகள் மௌனமாக அசைந்தன. காற்றாடி சுழலும்போது ‘சாவு, சாவு’ என்று சொல்வது போலத் தோன்றியது. பெரியவன் தன் பெற்றோரை ஒரு கணம் நினைத்துக் கொண்டான். இப்பொழுது எல்லோருக்கும் வாகனங்கள் வந்துவிட்டன என்பது நிச்சயமாகத் தெரிந்தது.

அவன் அணிந்திருந்த தொளதொள ஓவர்கோட்டைப் பற்றியபடி சின்னவன் ஓடினான். எங்கே அவன் தன்னைவிட்டுப் போய்விடுவானோ என்ற பயம் அவன் முகத்தில் தெரிந்தது. அவன் மூக்குக்குக் கீழே சளி காய்ந்துபோய் இருந்தது. அது மூன்று நாளாக அவன் சருமத்துடன் ஒட்டிக்கொண்டுவிட்டது.

பெரியவன் கையிலே ஒரு நெளிந்துபோன டின் இருந்தது. அதை அவன் கெட்டியாகப் பிடித்திருந்தான். டின்னிலிருந்த ஓட்டைகளையும் அவன் அடைத்திருந்தான். அவனுக்கு வயது பதினொன்றுக்கு மேலே இருக்காது. சின்னவனுக்கு ஆறு வயது சொல்லலாம். அந்த இரண்டு சிறுவர்களும் ஜனக்கூட்டத்தில் பெரிய அலையில் எத்துண்ட இரண்டு சிறிய இலைகள் போல அங்குமிங்கும் தத்தளித்தார்கள்.

கடைசியில் பெரிய தடித்த உருவம் ஒன்று வந்தது. கீழோரிடம் அதிகாரம் செய்து பழக்கப்பட்ட முகம். கறுப்பு நிறத்தில் அளவுக்கதிக மான ஓவர்கோட், பெல்ட், தொப்பியுடன் அவன் இருந்தான். கையிலே சிறு தடியை வைத்து உருட்டிக்கொண்டிருந்தான். தடித்த குரலில் அடிக்கடி ஏதோ கூறினான். அவன் என்ன சொன்னான் என்பது புரியவில்லை. ஆனால் அந்தப் பெரிய கூட்டம் அவனுடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டது.

இருந்தாற்போல ஒரு சன வெள்ளம் வந்து அடித்தது. அந்த அலையில் பெரியவன் தன் கைப்பிடியைச் சிறிது தளர்த்திவிட்டான். சனக்கூட்டம் தள்ளிக்கொண்டே போனது. சின்னவன் ‘அண்ணா, அண்ணா’ என்று கத்தும் சத்தம் கேட்டும் அவனால் திரும்ப முடியவில்லை. சனத்திரள் அப்படியே அவனை இழுத்துக்கொண்டு போய்விட்டது. இப்பொழுது சின்னவனுடைய அலறல் அவனுக்குக் கேட்கவில்லை.

சின்னவன் அதே இடத்தில் நிற்காமல் அழுதபடியே அண்ணனைத் தேடி ஓடினான். இருவரும் இப்படி தேடிக்கொண்டே எதிர்த்திசையில் சென்றார்கள். அப்பொழுது ஓர் அதிகாரி வந்து இவனுடைய கையைப் பிடித்து இழுத்து ஒரு கூடாரத்தின் முன்பு நிறுத்தினார். இவன் அங்கேயே அழுதபடி ஓர் அரை மணி நேரம் காத்திருந்தான்.

இறுதியில் அந்த அதிகாரி அவன் அண்ணனுடன் வந்தார். இவன் ஓடிப்போய் அண்ணனைக் கட்டிக்கொண்டான். அவன் தலைமயிரை இழுத்துக் கொஞ்சினான். தலையிலே சன்னம் பட்ட தழும்பு தெரிந்தது. அதில் மயிர் முளைக்காமல் பெரிய வட்டமாக இருந்தது. பெரியவன் கண்களில் கண்ணீர். அதை ஒருவரும் அறியாதவாறு தன் புஜத்தினால் மெல்லத் துடைத்துக்கொண்டான்.

ஒழுங்கில்லாமல் பல புது வரிசைகள் இப்போது உண்டாகின. பெரியவன் ஓடிப்போய் ஒரு வரிசையிலே நின்று கொண்டான். அடிக்கடிப் பின்னுக்குத் திரும்பிப் பார்த்தான். வரிசையிலே புது ஆட்கள் சேரச்சேர இவனுக்கு நிம்மதியாக இருந்தது. எல்லோரும் பெரியவர்களாக இருந்தார்கள். இவன் அவர்களுடைய இடுப்பு அளவுக்குத்தான் இருந்தான். அவர்கள் ஆவேசமாக இடிபடும் போது இவன் இடையிலே நசிப்படாமல் இருக்க முயற்சித்தான்.

அவன் அடிக்கடி திரும்பி சின்னவனை எச்சரிக்கை செய்தான். சின்னவன் வரிசையில் நிற்காமல் வேலி ஓரத்தில் குந்திக் கொண்டிருந்தான். அங்கே வேறு சிறுவர்களும், சில கிழவர்களும் படுத்துக் கிடந்தார்கள். சின்னவன் கிழவர்களை எல்லாம் சுற்றிவந்து மேற்பார்வை பார்த்தான்.

ஒரு சிறுமி துணிப்பொம்மை ஒன்றை அணைத்துக்கொண்டி ருந்தாள். அந்தப் பொம்மைக்குச் சிவப்புத் தலைமயிரும் பெரிய கறுத்த விழிகளும் இருந்தன. இவன் கிட்டப்போய் அதை ஆசையோடு பார்த்தான். அந்தப் பெண்ணுக்கு அது பிடிக்கவில்லை. பொம்மையைத் தூக்கிக்கொண்டு விலகி ஓடிவிட்டாள். இவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

வரிசை இப்பொழுது நகரத் தொடங்கியிருந்தது. இன்றைக்குக் கட்டாயம் இறைச்சி கிடைக்கும் என்று சின்னவனிடம் சொல்லியிருந்தான். இப்பொழுது ஒரு வாரமாக இதைச் சொல்லி ஏமாற்றியாயிற்று. இனி அவன் தாங்கமாட்டான். இன்றைக்குக் கிடைத்தால் நல்லாக இருக்கும் என்று பெரியவன் யோசித்துக்கொண்டான்.

வரிசையின் முடிவு எங்கே என்று திரும்பிப் பார்த்தான். அது தெரியவில்லை. நீண்டு கொண்டே போனது. சந்தோஷமாக இருந்தது. அவனுக்கு முன்னால் ஓர் இருபது பேர் மட்டுமே இருந்தார்கள். அவனது முறை விரைவில் வந்துவிடும்.

மெல்லிய பனிக்காற்று வீசத்தொடங்கியது. அது பெருக்காமல் இருந்தால் சரி. சூரியன் விடுப்பில் போய்விட்டதுபோல அன்று வெளியே வரவே இல்லை. ஓட்டை விழுந்த காலணிகள் எதிர்ப்புச் சக்தியை இழந்துவிட்டன. இறுக்கிப் பிடித்த ஓவர் கோட்டை ஊடுருவிக் குளிர் அவன் வயிற்றைக் குறிவைத்தது.

அவன் தாயாரின் தோற்றமுள்ள ஒரு மனுஷி தலையிலே ஸ்கார்ப் கட்டியிருந்தாள். பெரிய கூடைகளிலே இருந்து ரொட்டியை எடுத்து விநியோகம் செய்தாள். அவள் கைவிரல்களின் நகப்பூச்சுகூட அவன் தாயாரையே நினைவூட்டியது. அவள், பக்கத்திலே நின்றவனுடன் நாகரிகமான அங்க அசைவுகளுடன் பேசினாள். அவளை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. பக்கத்துக்காரன், வேலையிலே மிக்க கவனத்துடன் சுடச்சுட சூப் அள்ளி ஊற்றிக்கொண்டிருந்தான். ரொட்டியை வாங்கிய பிறகு சூப்பை டின்னிலோ, பிளேட்டிலோ பெற்றுக்கொண்டார்கள். சிலர் உடனேயே அதை ருசித்தபடி நகர்ந்தார்கள்.

பெரியவன் ஒரு ரொட்டியை வாங்கி ஓவர் கோட்டின் உள் பக்கட்டில் வைத்துக்கொண்டு டின்னை நீட்டினான். பதிவு அட்டையைக் கேட்டான் ஒரு மீசை வைத்தவன். இவன் கொடுத்தான். ‘ஏய், இங்கே வா! இங்கே வா! எப்படி உள்ளே வந்தாய்? இது இங்கே செல்லாதே’ என்றான். இவன் சூப் வாங்கும் இடத்துக்கு நகர்ந்துவிட்டான். மீசைக்காரன் அட்டையைத் திருப்பிக் கொடுத்து விட்டு, ‘இனிமேல் இங்கே வராதே’ என்றான்.

பெரியவனின் கண்கள் சூப் கொடுப்பவன் மேலேயே இருந்தது. அவன் அள்ளி ஊற்றும்போது இறைச்சித் துண்டுகள் இருக்கின்றனவா என்று கூர்மையாக அவதானித்தான்.

இவனுக்கு முன்னால் நின்ற பெரியவர், ‘நண்பரே! ஆழத்தில் இருந்து கலக்கி ஊற்று’ என்றார். அவனும் அப்படியே செய்தான். இவன் முறை வந்தது. இவனும், ‘நண்பரே! அடியில் நல்லாய் கலக்கி ஊற்றுங்கள்’ என்றான். அந்த நல்ல மனிதனும், ‘உன் விருப்பப்படியே, சிறிய நண்பரே!’ என்று சொல்லியபடி ஆழமாகக் கலக்கி வார்த்தான். பேணி நிறைந்தது. பெரியவன் நன்றி கூறிவிட்டு உற்சாகமாகத் துள்ளி ஓடினான்.

ரொட்டியை மூன்று பகுதிகளாகப் பிரித்தான். ஒரு பகுதியைக் கோட்டில் மறைத்து வைத்தான். மறுபகுதியைத் தம்பியிடம் தந்து மற்றதைத் தான் எடுத்துக்கொண்டான். அவசரமாக சூப்பிலே ரொட்டியைத் தோய்த்து சாப்பிட்டார்கள். சூப்பிலே ஒரு இறைச்சியும் இல்லை.

‘அண்ணா! நீ என்னை ஏமாற்றிவிட்டாய். இறைச்சி இன்றைக்குக் கிடைக்கும் என்று சொன்னாயே? ஐந்து மைல் தூரம் நடந்தது இதற்குத்தானா? என் கால் எல்லாம் வலிக்கிறது’ என்றான். ‘பொறுத்துக்கொள் தம்பி. ஏதோ பொல்லாத காலம்; நாளைக்குக் கட்டாயம் கிடைக்கும்; பயப்படாதே’ என்றான்.

இன்னும் இரண்டு மணி நேரமே சூரிய ஒளி இருக்கும். விரைவிலே திரும்பவேண்டும். கம்பி வலை ஓட்டையிலே முதலில் தம்பி புகுந்து வெளியே வந்தான். அந்த ஓவர்கோட்டை இவன் கழற்றி ஓட்டை வழியாகத் தம்பியிடம் எறிந்தான். பின்பு சுலபமாக இவனும் வெளியே வந்துவிட்டான்.

நெடுஞ்சாலையில் நூறு மீட்டருக்கு இரண்டு ராணுவ வீரர் வீதம் காவல் நின்றார்கள். தானியங்கி துப்பாக்கிகளுடன் அவர்கள் நேராக நின்றதை இந்த சிறுவர்கள் ஆர்வத்தோடு பார்த்தார்கள். அவர்கள் உடுப்பும், தோரணையும் ஒருவித பயத்தைத் தோற்றுவித்தது. அதிலே ஒருவன் சிவப்பாக, நெடுப்பாக இருந்தான். மற்றவன் ஏதோ யோசனையில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான்.

அந்த ராணுவ வீரர்களை அணுகினார்கள். இவர்கள் வெகு சமீபமாக வருமட்டும் அந்த வீரர்கள் கவனிக்கவில்லை. இவர்களைக் கண்டதும் ஒருவன் துள்ளி எழுந்தான். சிறுவர்கள் பயந்துபோனார் கள். அந்த ராணுவ வீரன் பேசியது இவர்களுக்குப் புரியவில்லை. அந்த பாஷை சுத்தமாகவும், எஜமானத்தனம் கொண்டதாகவும் இருந்தது. இராணுவத்துக்கு ஏற்ற பாஷையாகவும் பட்டது.

பெரியவன் இரண்டு விரல்களை உதட்டிலே வைத்து சிகரெட் என்று சைகையில் சொன்னான். இராணுவ வீரன் என்ன நினைத் தானோ, ஒரு புது சிகரெட்டை எடுத்து நிலத்திலே வீசினான். சிறுவன் அதை எடுத்துக்கொண்டு ஓடினான்.

ஒரு புதருக்குப் பக்கத்தில் அவர்கள் தங்கிச் சிறிது இளைப்பாறினார்கள். பெரியவன் சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்தான். சின்னவன் தனக்கும் வேண்டும் என்றான். அதற்கு ‘நீயும் என்னைப் போல பெரியவன் ஆனதும் பிடிக்கலாம். இப்ப நல்ல பிள்ளையாம்’ என்று ஆறுதல் கூறினான். சின்னவன் அந்த நியாயத்தை ஏற்றுக் கொண்டான்.

ஒரு நீண்ட தடியை எடுத்துத் துப்பாக்கி போல பிடித்தபடி சின்னவன் நேராக நடை போட்டான். இருட்டும் போது அவர்கள் கராஜ் கிட்ட வந்துவிட்டார்கள். சின்னவன் கையை நீட்டி ‘அதோ, அதோ’ என்று காட்டினான். அந்த நாய் மறுபடி வந்து நின்றது. மெலிந்து எலும்பும் தோலுமாய் இருந்தது. அதுவும் அகதி நாய்தான். பதிவு கார்ட் இல்லாத நாய். நிலத்தை முகர்ந்து பார்த்தபடி தயங்கித் தயங்கி வந்தது.

‘அண்ணா, அந்த நாய்க்கு ஒரு பேர் வைப்போமா?’ என்றான் சின்னவன். வேண்டாம். பேர் வைத்தால் அதுவும் எங்கள் குடும்பம் ஆகிவிடும்.’ பையில் இருந்த ரொட்டியை எடுத்து சரி பாதியாகப் பிய்த்து ஒரு பகுதியை அந்த நாயிடம் கொடுத்தான். அது அந்த ரொட்டியைத் தூக்கிக்கொண்டு நொண்டி நொண்டி ஓடியது.

கராஜ் வெளியே பெரிய பூட்டுப்போட்டுப் பாதுகாப்பாக இருந்தது. பெரியவன் பின்பக்கம் போய் பலகையை நீக்கினான். இரண்டு பேரும் உள்ளே நுழைந்த பிறகு பலகையை நேராக்கினார்கள்.

உள்ளே கந்தலும், வியர்வையுமாக ஒரே வாடை. இருட்டில் கண்கள் பழகுவதற்குச் சிறிது நேரம் எடுத்தது. பெரிய அட்டைப் பெட்டிகளை இழுத்துப் பழைய கம்பளிகளைப் போட்டு சரியாக்கிய பின்பு சிறியவன் அலுப்பு மேலிடப் படுத்துக்கொண்டான். பெரியவன் மீதியான ரொட்டித் துண்டைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான். அடுத்த நாள் அதிகாலை சிறியவன் பசியில் அழும்போது அது பயன்படும்.

பெரியவன் பெட்டி விளிம்பில் சாய்ந்தபடி இருந்தான். சின்னவன் தூங்கிவிட்டான் போலும். திடீரென்று அவன் எழும்பி அனுங்கியபடி ஊர்ந்து ஊர்ந்து வந்தான். அண்ணனைக் கட்டிக்கொண்டான். ‘அண்ணா, அண்ணா நீ என்னை விட்டுப் போக மாட்டியே, போக மாட்டியே!’ என்று அழுதான்.

பெரியவன் அவனை இறுக்க அணைத்தான். ‘இல்லை, என் கூடப்பிறந்தவனே, உன்னை விட்டு ஒரு நாளும் போக மாட்டேன்’ என்றான். அந்தக் குரலில் இருந்த உறுதி சின்னவனுக்கு நம்பிக்கை தருவதாக இருந்தது.

பெரியவன் அப்படியே வெகுநேரம் தூங்காமல் இருந்தான். அடுத்த நாளுக்கு வேண்டிய ஆலோசனைகள் அவனுக்கு நிறைய இருந்தன. நாளைக்கு கஞ்ச முகாமுக்குப் போகலாம் என்று தீர்மானித்தான். அது பெரிய முகாம். பத்து மைல் தூரத்தில் இருந்தது. அங்கே கட்டாயம் இறைச்சி கிடைக்கும்.

அப்படித்தான் அவன் கேள்விப்பட்டிருந்தான்.

– 1999-2000

– மஹாராஜாவின் ரயில் வண்டி, முதற் பதிப்பு: டிசம்பர் 2001, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *