நாளை மற்றுமொரு நாளே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2023
பார்வையிட்டோர்: 3,219 
 

(1974ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7

ஒங்களுக்குச் சந்திரன் நெனெப்பே வரதில்லையா? வராமல் இருக்குமா, வரத்தான் செய்யுது. ரெண்டு முறுக்கு வாங்கி வந்தால்கூட, பெரியது எது என்று பார்த்துவிட்டு அதை எடுத்துக்கொள்கிறான் சந்திரன்; சிறியதைத்தான் கீதாவுக்குத் தருகிறான். அவன் சுயநலத்தில்தான் எத்தனை அழகு? சுயநலத்தை மறைக்க முயன்றால்தான் அது அசட்டுத்தனமாகவோ, விகாரமாகவோ தோன்றுகிறது. இல்லாவிட்டால், அதில் உதயசந்திரனின் தற்புகழ்ச்சியைக் காண முடிகிறது. சந்திரன் எல்லாப் பிள்ளைகளோடும் சண்டை போடுகிறான். அவர்களை அடிக்கிறான்; அவர்களால் அடிக்கப்படுகிறான். ஒரு நாள் மூக்கில் ஒரு காயம்; மறுநாள் முழங்காலில் ஒரு காயம். ஒரு சமயம் கீழ் உதட்டில் காயத்தோடு சட்டை பூரா ரத்தம் தோய்ந்திருக்க வீடு வந்து சேர்ந்தான். 

“அய்யோ” என்று மீனா அலறினாள். “நான் ஒரு கல்லே வீசிப் போட்டேன். அது முருகேசனோட பல்லை ஓடச்சது. அவன் அக்கா மரகதம் பிளேடை வச்சு என் ஒதட்டை அறுத்திடிச்சு” என்று சுருக்கமாக விளக்கினான் சந்திரன். மீனா, மரகதத்தின் அம்மாவோடு சண்டைக்குச் சென்று, ‘தேவிடியாச் சிறுக்கி’ என்ற பட்டத்தை வாங்கிக் கட்டிக்கொண்டாள். மீனாவும் சும்மா விடவில்லை. 

“பொம்பளேன்னு பொறந்துட்டாலே தேவடியாச் சிறுக்கிதான்; ஒருத்தனோட படுத்தா என்ன, பத்துப் பேர்க கிட்டே படுத்தா என்ன, எல்லாம் ஒண்ணுதான்” என்று பொழிந்துவிட்டு வந்தாள். சாப்பிடும் போதுதான் “அய்யோ உதடு எரியுதே” என்று அலறினான் சந்திரன். “உப்புக் காரம் பட்டா உதட்டுப் புண்ணுக்கு நல்லது” என்றான் கந்தன். கந்தன் சொன்னது சரிதான். சீக்கிரமே சந்திரனின் உதட்டுப் புண் ஆறியது. 

சந்திரனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தாள் மீனா. நிறையக் கெட்ட வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு வந்தான். இனி மேலும் கற்றுக்கொள்ளக் கெட்ட வார்த்தைகள் பள்ளிக்கூடத்தில் கிடைக்கவில்லை என்பதை அறிந்ததும், பள்ளிக்கூடத்துக்குப் போவதை நிறுத்திக்கொண்டான். தெருவோரம் மீன் விற்றுக்கொண்டிருந்த ஆயிசா பீபிக்கு உதவியாகச் சில காலம் அவளோடு இருந்தான். அவள்தான் அவனைக் கெடுத்துவிட்டதாக மீனாவுக்கு எண்ணம். ஆயிசா பீபி சந்திரனுக்குச் சிறு வயதிலேயே பெரிய விஷயங் களைச் சொல்லித் தந்துவிட்டாளோ என்று கந்தனுக்குச் சந்தேகம். சந்திரன், வீட்டுக்கு வராமலேயே பல நாட்கள் ஆயிசா பீபியின் வீட்டிலேயே தங்கிவிடுவான். சந்திரனுக்கு ஆயிசா பீபியே சாப்பாடும் துணியும் கொடுக்க ஆரம்பித்தாள். மீனா வழக்கம் போலச் சண்டைக்குப் போனாள். ‘தேவடியாச் சிறுக்கி’ என்ற பட்டத்தையே மீண்டும் வாங்கிக் கட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். கந்தன் எதைப் பற்றியும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவ்வப்போது கீதா வோடு கொஞ்சுவான்; மீனாவோடு விளையாடுவான். மீனா எதுவும் சொன்னால், “நாலு காசு சம்பாரிச்சாப் போதும், எல்லாம் சரியாகி விடும்” என்று சொல்லிவிட்டு, “குடிக்கக் காசு இருக்கா?” என்று மீனாவிடம் கேட்பான். 

ஆயிசா பீபி கருப்பாக அழகாக இருப்பாள். அவள் முலைகளைப் பார்த்ததும் கந்தனே அசந்துவிட்டான் ஒரு சமயம். ஆனால் கந்தனின் சாமர்த்தியம் அவளிடம் பலிக்க வில்லை. ‘குவாரி’ கான்ட்டிராக்ட்டு எடுத்திருந்த முத்துக் கோனார் அவளிடம் ஒவ்வொரு நாளும் எக்கச்சக்கமாக மீன் வாங்கிப் பார்த்தார். ஊருக்கு வெளியே ஒரு தென்னந் தோப்பும், தென்னந் தோப்பில் தனக்கென்று ஒரு சிறு வீடும் இருப்பதாகவும் ஆயிசா பீபியிடத்துத் தெரிவித்துப் பார்த்தார். தென்னந் தோப்பிலோ, அங்கு இருந்த முத்துக்கோனாரின் வீட்டிலோ ஆயிசா அக்கறை காட்டவில்லை. முத்துக்கோனார் அவர் தம்பியை வைத்துப் போட்டி மீன் கடை போட்டார். ஆயிசா மீன் வியாபாரத்தை நிறுத்திவிட்டு முத்துக்கோனாரின் தென்னந் தோப்புக்குச் சென்று வர ஆரம்பித்தாள். சில வாரங்களில் ஆயிசா பீபி வீட்டைக் காலி செய்துவிட்டு எங்கேயோ சென்றாள். சந்திரன் சில நாட்கள் வீட்டிலேயே தங்கியிருந்து விட்டு, ஒரு நாள் ஒன்றுமில்லாததற்குக் கந்தனிடம் செம்மையாக உதை வாங்கிவிட்டு வீட்டைவிட்டு ஓடினான். குடித்து விட்டுத் தூங்கிக்கொண்டிருந்த கந்தனின் மீது ஒரு பானையை வீசியெறிந்து, பானையை உடைத்து நொறுக்கிவிட்டு ஓடியவன் தான், பிறகு வீட்டுப்புறமே தலை காட்டவில்லை. 


ஒருவாறாக இரைச்சல் தணிந்ததும், வண்டி சற்று அமைதி யான தெருப் பக்கம் திரும்பவும் கருப்பையா பத்திரிகையை உயர்த்திப் படித்தான். 

“போதும் தம்பி, இந்தக் கோர்ட்டு விவகாரமெல்லாம் யாருக்கு வேண்டிருக்கு?” என்றான் கந்தன். கடுமையான வெய்யில். கந்தனுக்கு வியர்த்துக் கொட்டியது. 

“ஆமா, இப்ப என்னமோ சொல்லிட்டிருந்தியே?” என்றான் கந்தன், கருப்பையாவிடத்து. 

“அந்த வேதவல்லி அம்மாவெப் பத்தி என்னவோ உளறிட்டிருந்தான்” என்றான் குப்பு. மூவரில் அவன் ஒருவன் தான் வெயிலால் பாதிக்கப்படாதவன் போல் தெரிந்தான். 

“அண்ணே, யாருக்கும் சொல்லாதீங்க; இந்தக் கேசு பத்தி ஒரு முக்கியமான வெஷயம் எனக்குத் தெரியும்” என்றான் கருப்பையா. 

“என்ன வேதவல்லியும் சந்திரசேகர மொதலியும் ‘டபார் டபார்’ன்ட்டா?” என்றான் குப்பு. 

“அண்ணனும் தங்கச்சியுமா ?” என்று கேட்டான் கந்தன்.

“அப்படியும் ஒரு பேச்சு உண்டு அண்ணே ; ஆனா நா அதெப்பத்தி இப்ப சொல்ல வரலே.” 

“பின்னே எதைப் பத்தி?” என்றான் கந்தன். 

“சிவராசுவுக்கு மூச்சுத் திணறவும், குத்திப்புடுங்கவும், அவனெ அணைச்சி எடுத்துக்கிட்டு டாக்டர்கிட்டே கொண்டு போக முதலியார் ஓடினாரு. ஆனா உள்ளுக்கிருந்த வேதவல்லி அம்மா மட்டும், என்ன ஆயிரிச்சு, அய்யோ என்ன ஆயிரிச் சுன்னு கதறிக்கிட்டே கொளந்தெக்குக் கடுக அரைச்சுக் கொடுங்க, கடுக அரைச்சுக் கொடுங்கோன்ட்டு அலறிக்கிட்டே மூர்ச்சையா விளுந்திரிச்சு.’ 

“நீ போயி அம்மாவே உசுப்பினே இல்லே?” என்றான் குப்பு. 

“போ அண்ணே, உனக்குப் பாயின்ட்டே புரியலே” என்று விட்டு, கருப்பையா தாழ்ந்த குரலில் ரகசியம் போலப் பேச ஆரம்பித்தான். 

“ஏன் அண்ணே, எதுக்கு கடுகே அரைச்சுக் கொடுப் பாங்க? வாந்தி வரத்தானே? வெசம் கிசம் தின்னுட்டா, வாந்தி வரச் செய்யத்தானே கடுகே அரைச்சுக் கொடுப் பாங்க?” என்றான் கருப்பையா. 

“அப்ப அந்தப் பயல் வெசெத்தத்தான் தின்னுட்டான்னு வேதவல்லிக்குத் தெரிஞ்சிருக்கணூம்ங்கறே, இல்லே” என்றான் கந்தன். 

“அதான் அண்ணே. ஆனா மொதலாளிகூட அதெக் கவனிக்கலெ, நானும் அதெல்லாம் போலீசுக்குச் சொல்லிக்கலே.” 

“ஆமாம், வெட்டி வேலெ” என்றான் கந்தன். 

“மொதலாளி வாக்குமூலம் என்ன தெரியுமாண்ணே? சமயக்காரப் பொண்ணு அவர் தட்டுலே கறியை வைக்கவும், சிவராசு எனக்குத் தான் மொதெல்லேன்னு கத்திச்சாம். மொதலாளி அவர் தட்டுலேந்து எடுத்துக் கறியை சிவராசு தட்டுலே வச்சாராம். அந்தக் கறிலேதான் வெசம் இருந்திருக்கு.” 

“போட்ட கறியெப் பூராவும் சிவராசு தின்னிரிச்சா?” “இல்லண்ணே. மீதிக் கறியையும் பரிசோதனைக்கு அனுப்பினாங்களாம். அதுலே துளிகூட இந்த சையனைடு வெசம் இல்லையாம்.” 

“டாக்டர்கிட்டே அந்தப் பையனே யாரெல்லாம் கூட்டிக் கிட்டுப் போனது?” 

“நானும் மொதலாளியும் மட்டுந்தான்.” 

“அப்ப வீட்லே யாரெல்லாம் இருந்தாங்க?” என்று தொடர்ந் தான் கந்தன். 

“வேதவல்லி அம்மா, சந்திரசேகர மொதலி, சமயக்காரப் பொண்ணு இவுங்கதான் இருந்தாங்க. அந்தச் சமயக்காரப் பொண்ணே ஒரு நா விட்டு ஒரு நா ஸ்டேசனுக்குக் கொண்டு போயி போலீசுக்காரங்க விசாரிக்கிறாங்க. அதுதான் போலீசுக்கு ஒரு முக்கிய சாட்சியாத் தெரியுது. அது வாயெத் தெறந்தா எல்லாம் வெளெங்கிப் போயிடும்.” 

“ஆமாம், ஆமாம் எல்லாம் வௌங்கிப் போயிடும்; இப்ப இறங்கிக்கோங்க” என்று சொல்லிக்கொண்டே குப்பு வண்டியைத் தெருவோரமாக நிறுத்தினான். 

“அண்ணே இங்கே பக்கந்தானே; என்னே வீட்லே கொண்டு விட்டிருங்கண்ணே” என்றான் கருப்பையா. 

“சரி, வந்து தொலே” என்றான் குப்பு. கந்தன் ஒரு இரண்டு ரூபாயைக் குப்பு கையில் திணித்துவிட்டு, “வரேன் குப்பு; வரேன் தம்பி” என்று சொல்லிக்கொண்டே வண்டியை விட்டிறங்கி தேவி லாட்ஜுக்குள் நுழைந்தான். 

தேவி லாட்ஜ் இப்போது இருக்கும் இடம் ஒரு கோவி லுக்குச் சொந்தமானது. முன்பு அங்கே இரண்டு வீடுகள் இருந்தன. வீடுகளிலிருந்து வந்த வாடகைப் பணம் கோவில் பணிக்குச் செலவிடப்பட்டது. சுப்பு நாயுடுதான் அந்த வீடு களை இருபது வருட ‘லீசு’க்கு எடுத்து, வீடுகளை இடித்துவிட்டு தேவி லாட்ஜைக் கட்டினார். ‘லீஸ்’ காலம் முடிந்ததும் லாட்ஜுக் கட்டிடம் கோவிலுக்கே சொந்தமாகிவிடும். சுப்பு நாயுடு மிகவும் கறாரான பேர்வழி. முதல் பத்து வருடங்கள் வரை லாட்ஜை மிகவும் ‘டீசன்ட்’டாகவே வைத்திருந்தார். நாளா வட்டத்தில் சுற்று வட்டாரத்தில் புதுப்புது லாட்ஜுகள் ‘பாத்ரூம்’ இணைந்த அறைகளோடும், ‘லிப்ட்டுகளோடும் முளைக்க ஆரம்பிக்கவும், நாயுடு தனது கொள்கைகளைத் தளர்த்திக் கொண்டார். “பிசினெஸ்ல எல்லாம் கொஞ்சம் நெளிவு சுளிவு வேண்டும்” என்று அடிக்கடி தன் மானேஜரிடத்துச் சொல்வ தோடு, தான் அதிகம் லாட்ஜுப் பக்கம் வருவதையும் நிறுத்திக் கொண்டார். அதன் விளைவாக இப்போது தேவி லாட்ஜ பள்ளி நிர்வாகி – ஆசிரியை, கிராமப்புற டாக்டர் – நர்ஸ், சமுதாய அபிவிருத்தி அதிகாரி – சமூக சேவகி ஆகிய ஜோடிகளில் சிலவற்றுக்கு நம்பகமான புகலிடமாக இருப்பதோடு,எந்தக் குறிப்பிட்ட ஆடவரோடும் தங்களை வாழ்க்கை பூராவும் பிணைத்துக்கொள்ள விரும்பாத சில பெண்களுக்குத் தங்கு பற்றிக் கேள்விப்பட்ட கோவில் டிரஸ்டி ஆத்திரத்தோடும் மிடமாகவும் உள்ளது. தேவி லாட்ஜின் புதுக் கீர்த்தியைப் ஆவேசத்தோடும் வந்து சுப்பு நாயுடுவோடு தகராறு பண்ணினார். இருவரையும் சமாதானப்படுத்தி வைப்பதில் கந்தனுக்குப் பெரும் பங்கு கிடைத்தது. கோவில் டிரஸ்டிக்கு, அவர் கார்கோட்டைக்கு வரும்போதெல்லாம் தேவி லாட்ஜில் ‘சகல வசதிகளோடு எத்தனை நாட்கள் வேண்டுமானாலும், எந்த அறையில் வேண்டு மானாலும், யாரோடும் இலவசமாகத் தங்கும் சலுகை அளிக்கப் பட்டது. “பிசினெஸ்ல கொஞ்சம் நெளிவு சுளிவு வேண்டி யிருக்கு” என்று இளித்தார் நாயுடு. “பிசினெஸ்ல என்ன கோவில் காரியங்களில்கூட கொஞ்சம் நீக்குபோக்கு வேண்டி யிருக்கு. நாமென்ன அரசியல்வாதிகளா, கொள்கேன்னு வம்பா இருக்க?” என்றார் டிரஸ்டி, ஒன்றும் தெரியாமலோ எல்லாமே தெரிந்தோ. 

கந்தன் லாட்ஜுக்குள் நுழையவும், மானேஜர் “வாங்க” எனக் கூறிக் கந்தனை வரவேற்றார். “எந்த ரூம் காலியா இருக்கு?” என்று கேட்டான் கந்தன். மானேஜர் அறை நிலவரப் பலகையைப் பார்த்து விட்டு, “கீழே நாலு காலி இருக்கு” என்றார். கந்தன் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஏதாவது ஒரு அறையில் படுத்துவிட்டுச் செல்வது வழக்கமாதலால், மானேஜர் அவனிடத்து நான்காம் எண் அறைச் சாவியைக் கொடுத்தார். சற்றுத் தூரம் நடந்து பிறகு ஒரே வரிசையில் இருந்த பத்து அறைகளுக்கு இட்டுச் செல்லும் பாதையின் பக்கம் வளைந்தான் கந்தன். அறைகள் வெளியே பூட்டப்பட்டோ, உட்புறமாக அடைக்கப்பட்டோ இருந்தன. கந்தன் நான்காம் எண் அறையைத் திறந்துகொண்டிருக்கும் போது, அடுத்த அறை வாயிலில் நின்றுகொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்த வரிசையில் இருந்த கடைசி அறையின் வெளிப்படியில் உட்கார்ந்துகொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவளும் அவரையே பார்த்துக் கொண்டிருப்பதுபோல் இருந்தது. கந்தன் தன்னறைக் கதவைத் திறக்கும் சத்தம் காதில் படவும், நடுத்தர வயதுக்காரர் கந்தன் பக்கம் திரும்பினார். பிறகு தன்னறைக்குள் சென்று கதவுகளைத் ‘தடால்’ என்று அடைத்துக்கொண்டார். கந்தன் தன்னறையை உட்புறமாகத் தாளிட்டுக்கொண்டு, வேட்டியையும் சட்டை யையும் களைந்துவிட்டு, கத்தியை உறையோடு தலையணைக்கு அடியில் ஒளித்து வைத்தான். பிறகு மின்விசிறியைத் தட்டி விட்டுவிட்டு, மெத்தைக் கட்டிலில் விழுந்தான். தூக்கம் வரும் போல் இருந்தது. ஆனால் அடுத்த அறைக் கதவு ‘படால்’ என்று திறக்கப்படும் சத்தம் கேட்டது. இரண்டு, மூன்று நிமிடங்கள் கழித்து, மீண்டும் கதவு ‘தடால்’ என்று அடைக்கப்படும் சத்தம். இவ்வாறே தொடர்ந்து இரண்டு, மூன்று நிமிடங் களுக்கு மாறி மாறி ‘தடாலோ படாலோ’ கேட்டுக்கொண் டிருந்தது. இந்த ஒலி நாடகம் சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு நடந்துவிட்டு ஒருவாறாக ஓய்ந்தது. கந்தன் அரைத் தூக்கத்தில் இருந்தான். வானத்தில் பறப்பது போன்றதொரு கனவு. இல்லை, வானளவுக்கு உயர்ந்துள்ள மலைச் சிகரங் களின் மேல் தாவித் தாவிச் செல்கிறான். ஒரு மிக உயர்ந்த சிகரத்துக்கு வந்துவிட்டான். கண்ணுக்கெதிரே மலை மலையாக மணற்குவியல்கள். கந்தன் அடுத்த மணல் மலைக்குத் தாவு கிறான். மணல் மலையைக் காணோம். ஒரு பாதாளத்தில் விழுந்துகொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு. விழித்துக் கொள்கிறான். அடுத்த அறைக் கதவை யாரோ வெளியிலிருந்து மெதுவாகத் தட்டிக்கொண்டிருப்பது கேட்கிறது. அடுத்த அறையிலிருந்தோ ஒரு சத்தமும் இல்லை. வெளியே தட்டுவது சற்றுப் பலப்படுகிறது. தொடர்ந்து ஒரு பெண் குரல், “இந்தாங்க கதவெத்தெறங்க, யாருமில்லை” என்கிறது. அடுத்த அறைக் கதவை மெதுவாகத் தட்டும் ஓசையும், ‘இந்தாங்க, இந்தாங்க’ என்ற சொற்களும் கந்தனின் காதுகளில் சிறிது நேரம் விழு கின்றன; பிறகு ஓய்ந்து போகின்றன. ஒரு பெண் நடந்து செல்வது போல் காலடிச் சத்தம். சிறிது நேரம் கழித்து அடுத்த அறைக்கதவு ‘படால்’ என்று திறக்கிறது. 

கந்தன் மீண்டும் அரைத் தூக்கத்தில் விழுகிறான். சில சில்லறைக் கனவுகள் தோன்றி மறைகின்றன. அவன் ஒரு கடையில் சிகரெட்டு வாங்கிவிட்டுக் கடன் சொல்கிறான். சந்திரனைத் தற்செயலாகத் தெருவில் பார்ப்பதுபோல் தெரிகிறது. கந்தன் அவனிடத்துப் பேசவோ, அவனை வீட்டுக்கு அழைத்துவர எண்ணுவதாகவோ தெரியவில்லை. சிகரெட்டை வாங்கிவிட்டுக் கடையிலிருந்து திரும்புகிறான். எதிரே மோகனா என்ற ராக்காயி நின்றுகொண்டு அழுவது போல் இருக்கிறது. காட்சிகள் படிப்படியாக மறைகின்றன. அரைகுறைத் தூக்கம். ஏதோ கொஞ்சம் நினைவு. முத்துச்சாமி யும் அவன் ‘காதலி’யும் ஒருவரையொருவர் இறுகக் கட்டி அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கின்றனர். சோலைப் பிள்ளை யும், மீனாவும்… கந்தன் திடுக்கிட்டு எழுகிறான்.அடுத்த அறைக் கதவு திறக்கும் ஓசை கேட்கிறது. அங்கிருந்து சுண்ணாம்பு வாடை வெளிப்படுவதாகக் கந்தன் நினைத்துக்கொள்கிறான். அடுத்த அறை நடுத்தர வயதுக்காரர் ‘பாத்ரூம்’ பக்கம் நடந்து செல்வதாகக் கந்தனுக்குப்படுகிறது. அரைகுறைத் தூக்கத்தில் கந்தன் தலையணைக்குக் கீழே கத்தி இருக்கிறதா என்று பார்த்துக் கொள்கிறான். மீண்டும் தூக்கம். மீண்டும் சில்லரைக் கனவுகள். 

சுமார் நாலரை மணிக்குக் கந்தன் விழித்து எழுந்து உட்கார்ந் தான். வெளியே இருந்து இரைச்சல் வந்துகொண்டிருந்தது. தொண்டையைக் கிழித்துக்கொண்டு, மூன்று நான்கு பேர்கள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். கந்தன் அறைக் கதவுகளைத் திறக்கவும், லாட்ஜு சிறுவன் ஒருவன் வந்து, “காப்பி வேணுமா சார்?” என்றான். “ஒரு பாட்டில் எடுத்துக் கிட்டுப் போய் எரநூறு மில்லி சாராயம் வாங்கிட்டு வா” என்று சொல்லிக்கொண்டே கந்தன் சிறுவனிடத்து ஒரு ஐந்து ரூபாய்த் தாளை நீட்டினான். சிறுவனுக்குக் கந்தனைத் தெரியும்; ஒன்றும் கூறாமல் பணத்தை வாங்கிக்கொண்டு அகன்றான். கந்தன் சிறுவனை மீண்டும் கூப்பிட்டு, “மொதல்லே மானேஜர் கிட்டே நாங்கேட்டேன்னு சொல்லி ஒரு சோப்புக்கட்டி, ஒரு சீப்பு,மொகம் தொடைக்க ஒரு துண்டு வாங்கியாந்து கொடுத்துரு” என்றான். சிறுவன் அவற்றைக் கொண்டுவரவும், தனது அறையை அடைத்துப் பூட்டிக்கொண்டு, முகம், கை, கால்களைக் கழுவ லாட்ஜின் பின்புறம் சென்றான். பத்தாம் எண் அறை வாயிலில் இன்னும் அந்தச் சிறுமி உட்கார்ந்திருந் தாள். அவனைப் பார்த்ததும் இலேசாகச் சிரித்தாள். கந்தன் குளியலறையிலிருந்து தன் அறைக்குத் திரும்பியதும் வேட்டி சட்டையை அணிந்து கொண்டு, கத்தியையும் இடுப்பில் சொருகிக் கொண்டு, தலையைச் சீவிவிட்டுக் கொண்டு வெளியே வந்தான். மானேஜர் இருந்த பகுதியிலிருந்து வந்த இரைச்சலின் ஆக்ரோஷம் படிப்படியாக உயர்ந்துகொண்டே சென்றது. கந்தனும் வேடிக்கை பார்க்கச் சென்றான். 

மானேஜர் ஸ்தானத்துக்கு எதிரே இரண்டு சோபாக்கள் போடப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றில் அரைகுறையாய் உட்கார்ந்திருந்த, டெர்லின் பான்ட்டும், ஸ்லாக்கும், கண்ணாடி யும் அணிந்திருந்த ஒரு இளைஞன் அவன் முன்னால் உட்கார்ந் திருந்த சற்று வயது வந்த ஒரு ஜிப்பாக்காரரிடத்துக் கையை நீட்டி நீட்டிப் பேசிக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் தோன்றிய படபடப்பையும் ஆவேசத்தையும் காணும்போது, அவன் எங்கேயோ அனுபவித்த அவமானங்களுக்கு வேறெங் கேயோ அர்த்தமற்ற நிவாரணம் தேடிக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. மற்றொரு இளைஞன் பரட்டைத் தலையோடு அவர்களிடமிருந்து சற்று விலகி உட்கார்ந்திருந்தான். மூவரை யும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு தன் இருக்கையில் உட்கார்ந்திருந்தார் மானேஜர். கந்தனும் வந்து ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டான். 

“தொழிலாளி வர்க்கத்தை யாராலும் அடக்கி ஒடுக்க முடியாது. ஹிட்லர் அடக்கிப் பார்த்தான், முடியலே. முசோலினி பார்த்தான், முடியலே. சர்ச்சில் பார்த்தான், முடியலே” என்று அடுக்கிக்கொண்டு போனான் கண்ணாடிக்கார இளைஞன். 

“ஆனா, ஸ்டாலின் பார்த்தான், முடிஞ்சது” என்றான் பரட்டைத் தலையன் சிரித்துக்கொண்டே. மற்ற இருவரும் அவன் சொன்னதைக் கேட்கவில்லை. 

“நாங்களும் சமதர்ம சமுதாயத்தை அமைக்கத்தான் பாடுபட றோம்” என்றார் ஜிப்பாக்காரர். ஏதோ சமதர்ம சமுதாயத்துக்குப் பாடுபடாதவர் வாழத் தகுதியற்றவர் என்ற குற்ற உணர்வு மிகுந்தவர்போல. 

“ஆமாம் ஆமாம், தொழிலாளி போனஸ் கேட்டா குண்டாந் தடியை காட்டறது, தேர்தல் வந்தா மொதலாளிகிட்டே போயி பல்லெக்காட்டறது, இதுதானே ஒங்க சமதர்மம்?” என்று எரிந்து விழுந்தான் கண்ணாடிக்காரன். 

“ஆமா கேக்கிறேன், மொதலாளி இல்லாம தொழிலாளி எப்படி வந்தானாம்?” என்று ஒரு பாயின்ட்டை உதிர்த்தார் மானேஜர்.ஜிப்பாக்காரரோ, டெர்லின் இளைஞனோ அவர் பாயின்ட்டைக் கேட்டதாகத் தெரியவில்லை. 

“நாங்க படிப்படியாக ஜனநாயக மொறைலே சமதர்மம் கொண்டு வரணுங்கறோம்; நீங்க கத்தி, கபடா வச்சிக்கிட்டு ரத்தம் சிந்தி சமதர்மம் கொண்டுவரப் பாக்கறீங்க” என்றார் ஜிப்பாக்காரர். இதைக் கேட்டதும் கண்ணாடிக்கார இளை ஞனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. உண்மை யிலேயே கத்தி, கபடா இல்லாமல் ஒரு சமதர்மப் புரட்சி வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்துக்கொண்டு ஏமாற்ற வெறியில் துள்ளி எழுந்தான். ஆவேசத்தோடு எழுந்து நின்று விரலைத் துப்பாக்கி போல ஜிப்பாக்காரர் முகத்துக்கு நேரே நீட்டி, “நீங்க எங்க தலைவர் போன மாசம் கொடுத்த அறிக்கை யைப் படிச்சீங்களா?” என்று அதிர்ந்தான் – சண்டித்தனம் செய்யும் வழிப்போக்கனிடத்து ஒரு கொள்ளைக்காரன் அதிர்வதுபோல். 

ஜிப்பாக்காரர் மிரண்டு போனார். இளைஞன் குறிப் பிட்ட அறிக்கையைப் படித்திராதது ஒரு தேசத்துரோகக் குற்றம் என்று உணர்ந்தவர் போல், “ஆமாமாம், வாசிச்சேன்” என்று புளுகினார். “அந்த அறிக்கைலே எங்க தலைவர் என்ன சொல்லி இருக்கார்?” என்று மிடுக்காக உறுதியாகக் கேட்டான் இளைஞன்.ஜிப்பாக்காரர் முழித்தார். 

“தலைவரது அறிக்கையைப் படிக்காதது முதற் குற்றம்; அதைப் படித்ததாகப் புளுகியது இரண்டாவது குற்றம். இந்த இரண்டு குற்றங்களுக்கும் உமக்கு என்ன தண்டனை தகும்?” என்று கேட்கும் தோரணையில் இளைஞன் ஜிப்பாக்காரரைப் பார்த்து அவர்மீது வெறுப்பை உமிழ்ந்தான். 

“உங்க தலைவர் அறிக்கைலே என்ன சொல்லி இருக்காரு?” என்றார் ஜிப்பாக்காரர் பணிவோடு. 

“அப்பப் படிக்கலேன்ட்டு ஒத்துக்கோங்க” என்றான் இளைஞன் வெற்றித் திமிரோடு. ‘எங்கெ தலைவர் விட்ட அறிக்கையைப் படிக்காத நீயும் ஒரு மனிதனா’ என்று கேட்கும் முறையில் இளைஞன் ஜிப்பாக்காரரை ஏளனத்தோடு நோக்கி னான். ஜிப்பாக்காரரும் அவன் உள்ளத்தை உணர்ந்தவர் போல வெட்கித் தலை குனிந்தார். 

“எந்த எளவெல்லாமோ படிக்கிறோம்; எதை ஞாபகத் துலே வச்சுக்கிறது?” என்று ஜிப்பாக்காரருக்காகச் சமாளித்தார் மானேஜர். 

“என்ன சொன்னீங்க?” என்று கண்ணாடிக்கார இளைஞன் மானேஜர் பக்கம் திரும்பினான். “இல்லே, படிக்கற தெல்லாம் நினைவுலே இருக்குதான்னேன்” என்றார் மானேஜர் சற்று பயந்தவாறே. “கண்டதெப் படிக்கிறோம்; அதெப்பத்தி இப்பப் பேச்சில்லே. எங்க தலைவர் அறிக்கையைப் பத்தி இப்ப நான் கேட்டேன்” என்றான் இளைஞன் ஆணித்தரமாக. 

“அது சரி, ஒங்க தலைவர் என்ன சொல்லியிருக்காரு?” என்றான் பரட்டைத் தலையன். 

இளைஞன் பல்லைக் கடித்துக்கொண்டு, “பலாத்காரம் இல்லாமே அமைதியான முறைலே மக்களைத் திரட்டி இந்த நாட்டிலே சோஷலிசத்தைக் கொண்டுவர முடியூம்ன்ட்டு எங்க தலைவர் கடந்த மாத பதினெட்டாம் தேதி அறிக்கை யிலே மட்டுமில்லே, அதுக்கு முன்னும் பின்னும் பல தடவை சொல்லியிருக்காரு” என்று சொல்லி முடித்தான். அவனுக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. 

“இதையும் அமைதியாகவே சொல்றது; எதுக்கு இத்தனை பதட்டம்?” என்றான் பரட்டைத் தலையன். 

ஜிப்பாக்காரர் வாய்மூடியாக இருந்தார். அவருக்குப் பதிலாக மானேஜர், “நாங்கதான் இந்த நாட்டுலே சோஷ லிசத்தைக் கொண்டு வந்திட்டிருக்கோமே; நீங்க வேறே எதுக்கு?” என்றார். 

ஜிப்பாக்காரரது அமைதி இளைஞனைச் சங்கடப்படுத்தியது. தான் வரம்பு மீறிக் கத்திவிட்டோமோ என்ற பயம் வந்தது. 

அமைதியாக சோஷலிசத்தைக் கொண்டுவர முடியும் என்பதை ஆத்திரத்தில் கத்துவது பொருத்தமாக இருக்காது என்பதை உணர்ந்தவன்போல இளைஞன் தனது போர் தந்திரத்தை மாற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தான். 

“உங்க கட்சிலே உங்க மாதிரி சோஷலிசத்துலே உண்மை யான நம்பிக்கை வச்சிருக்கிற சாதாரண ஊழியர் இல்லேன்னு நாங்க சொல்லலே” என்று இளைஞன் கூறவும், ஜிப்பாக்காரர் ஒரு கணம் தனக்குச் சேராத சட்டையை யாரோ மாட்டி விட்டதுபோல் விழித்தார். அடுத்த வினாடி ‘ஜனநாயகத்துலே இதெல்லாம் சகஜம்’ என்றுணர்ந்தவர் போல் சமாளித்துக் கொண்டார். 

“ஆனா உங்க கட்சித் தலைமையின் சிண்டைத்தான் முதலாளிக வசம்மா பிடிச்சிட்டிருக்காங்களே?” என்று இளைஞன் மாற்றுக் கட்சித் தலைமைக்கு அனுதாபப்பட்டான். 

“சிண்டுக்கும் சோஷலிசத்துக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டார் மானேஜர். 

“எப்படீன்னு கேளுங்க” என்று கூறிக்கொண்டே ஜிப்பாக் காரரின் அருகிலேயே உட்கார்ந்துகொண்டான் இளைஞன். 

“ஆமா, எப்படி?” என்றார் மானேஜர். 

“சாதாரண மக்கள் அன்றாடம் பயன்படுத்தற பண்டம், சீனியெ எடுத்துக்கோங்க” என்று ஆரம்பித்த இளைஞன் ஒரு கணம் திகைத்தான். 

பிறகு தொடர்ந்தான். “இன்னிக்கு சீனி என்ன வெலேலே விக்குது? மூணு ரூபாய்.” ‘மூணு ரூபாய்’ என்பதைக் கேட்டதும் அனைவரும் அசந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தான் போலும் இளைஞன். யாரும் மயங்கி விழாதிருக்கவே, “இன்னிக்கு ஒரு கிலோ சீனி விற்பது மூணு ரூபாய்” என்று ஒவ்வொரு வார்த்தையையும் தனித்தனியே அழுத்தி அழுத்திக் கூறினான். “ஆனா போன வருஷம் இதே சீனியை என்ன வெலெக்கு வாங்கிட்டிருந்தோம்” என்று அடுத்துக் கேட்டான். இளைஞன் பேசுவதெல்லாம் அரசியல் மாதிரியே படவில்லை போலவும், ஆனால் வேறு வழி இல்லையே என்று இளைஞனது கத்தல்களை எல்லாம் சகித்துக்கொண்டிருந்தது போலவும் ஜிப்பாக்காரர் உட்கார்ந்திருந்தார். அவர் உள்ளத்தை அறிந்தவராய் மானேஜர், “ஆமா,சமதர்மத்துக்கும் சீனிக்கும் என்ன சம்பந்தம்?” என்றார். 

மானேஜர் கேள்வியைப் பொருட்படுத்தாது இளைஞன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். 

“போன வருஷம் கிலோ இரண்டரை ரூபாய்க்கு வித்த சீனி இன்னிக்கு கிலோ மூணு ரூபாய். இந்த வெலெ ஏத்தத் துக்குக் காரணம் என்ன? உற்பத்தி கொறெஞ்சுடுத்தா? இல்லையே. அரசாங்கப் புள்ளி விவரக் கணக்குப்படியே உற்பத்தி எட்டு சதவீதம் உயர்ந்திருக்கு. கரும்புவெலெ கூடிறிச்சா? இல்லையே. தொழிலாளிக்கு அதிகக் கூலி கொடுத்து உற்பத்திச் செலவு கூடிறிச்சா? இல்லையே. சீனியை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பிச்சுட்டோமோ? இல்லையே” என்று இளைஞன் கேள்விகளையும் ‘இல்லை’ பதில்களையும் அடுக்கிக் கொண்டே போனான். 

“சனங்க கைலே பணம் பெருத்துப் போச்சு; என்ன வெலெ சொன்னாலும் சீனி வாங்கறேன்கறாங்க. தோட்டிலேந்து தொண்டைமான் வரை நாளைக்கு எட்டுத்தரம் டீயும் காபியும் குடிக்கணுங்கறாங்க. ஏன் சீனி வெலெ உயராது?” என்றார் மானேஜர். 

“அதெல்லாம் காரணமில்லே; அடுத்த வருஷம் தேர்தல் வருது” என்றான் இளைஞன். “அப்ப தேர்தல் வர வேண்டாங் கறியா?” என்றான் பரட்டைத் தலையன். கண்ணாடிக்காரன் பரட்டைத் தலையனைப் புறக்கணித்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தான். 

“ஒரு கிலோ சீனி தயாரிக்க ஒரு ரூபா நாப்பது காசு ஆகுது. விக்கறது கிலோ மூணு ரூபாய்னு. ஒரு கிலோ சீனிலே மொத லாளிக்கு மிச்சம் ஒரு ரூபா அறுபது காசு. நம்மூர் ரெட்டியார் ஷுகர் மில்லுலே நாளைக்கு முன்னூறு டன் கரும்பு பிழியறாங்க. ஒரு டன் கரும்பிலே தாராளமா எழுபது கிலோ சீனி தேறும். கணக்குப் பார்த்துக்கோங்க. கிலோவுக்கு அரை ரூபாய் கூடி னாலும், ரெட்டியாருக்கு ஆறு மாசத்துலே கெடெக்கிற உபரி லாபமட்டும் இருபது லட்சத்துக்கும் அதிகமா இருக்கும். இதுலே ஒரு பங்கை வாங்கிட்டுத் தான் ஒங்க கட்சி தேர்தல்லே ஜெயிக்க முடியிது” என்று விளக்கி முடித்தான் இளைஞன். 

“என்னங்க தம்பி உளர்றீங்க? நம்ம அரசாங்கம் ஒண்ணும் அப்படி ஏமாளி அரசாங்கம் இல்லை. ஒரு லிமிட்டுக்கு மேலே போனா, நூறு ரூபாய் வருமானத்துக்கு அரசாங்கம் தொண்ணூற் றொன்பது ரூபாய் வருமான வரியா வாங்கிடறது, தெரியுமா? வருஷா வருஷம் இன்கம்டாக்ஸ் ஆபீசுக்குப் போற எனக்குத் தெரியுமா; இல்லாட்டி கட்சித் தலைவர் அறிக்கயப் படிச்சிட்டுப் பேத்தற உனக்குத் தெரியுமா?” என்றார் மானேஜர். 

இதற்குள்ளாக வெளியே சென்றிருந்த லாட்ஜ் சிறுவன் திரும்பி வரவும், அவனோடு தன்னறைக்கு வந்தான் கந்தன். அறையிலிருந்த ஒரு கிளாசை எடுத்து அதில் இரண்டு தடவை ஊற்றி பாட்டிலைக் காலி செய்துவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். வெளியே சென்றிருந்த ஐந்தாம் எண் அறைக் காரர் திரும்பி வந்துகொண்டிருந்தார். கடைசி அறையை நோக்கியவாறே தன்னறைக்குச் சென்றார். 

கந்தனுக்கு மீனா ஒருமுறை அவனிடத்துக் கூறியது நினைவு வந்தது. சிலருக்கு ஆசை ஏற்படுமாம்; ஆனால் தீர்த்துக்கொள்ள முடியாதாம். சோலைப்பிள்ளைக்குக்கூட அதே வியாதி என்று மீனா கூறியதும் நினைவுக்கு வந்தது. ஆரம்பத்திலே ஒரு பொலிகாளையெ வச்சிகிட்டுக் காலே நேரத்துலே மைதானத் துலே நின்னுக்கிட்டு நாளைக்கு நாலும் அஞ்சும் சம்பாதிச்சவன்; இன்னைக்கு என்னடான்னா, வீடு என்ன, நெலம் என்ன, கார் என்னன்ட்டு இருக்கான்! கந்தன் சிகரெட்டைத் தூக்கி எறிந்துவிட்டு, அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தான். வெளியே ஜிப்பாக்காரரும் மானேஜரும் மட்டும்தான் இருந்தனர்; மற்ற இருவரும் சென்றுவிட்டனர். சாவியை மானேஜரிடம் கொடுத்துவிட்டுத் தெருவில் இறங்கினான் கந்தன். எதிராக ஒரு சைக்கிள் ரிக்ஷா வந்தது. ரிக்ஷாவை நிறுத்தி அதில் ஏறிக்கொண்டு, “ஷெனாய் நகர்” என்றான் கந்தன். ரிக்ஷாக்காரன் வண்டியைத் திருப்பினான். 

– தொடரும்…

– நாளை மற்றுமொரு நாளே…(நாவல்), முதல் பதிப்பு: 1974.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *