நாளை மற்றுமொரு நாளே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2023
பார்வையிட்டோர்: 7,246 
 
 

(1974ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

ஜீவாவும் மீனாவும் கந்தனின் குடிசைக்கு வந்ததும் நிலையிலேயே ஒரு கணம் நின்றுவிட்டு, ஜீவா அடுத்த குடிசைக்குச் சென்றாள். மீனாவைக் கண்டதும் கந்தன், “உனக்கு எத்தனைவாட்டி சொல்றது, நான் வைக்கிற பணத்தை எடுக்காதேன்னு?” என்றான். 

“நான் எடுக்கலேயே” என்றாள் மீனா, சாவதான மாகப் பாயில் உட்கார்ந்தவாறே, 

“எடுக்கலயா? பின்னே எங்கே போச்சு அந்த அஞ்சு ரூவாத் தாளு?” 

“எந்த அஞ்சு ரூவாய்?” 

“நேத்து ரவைக்கு உம் பெட்டிலே போட்டேனே, அதுதான்.” 

“அஞ்சு ரூபாய் ஏது பெட்டீலே போட்டீங்க? சட்டையைக் களட்டினப்ப, பைலேந்து ஒரு ரெண்டு ரூவாய்தான் கீளே விளுந்திச்சு; அதை வளக்கம்போலே தலையணைக்கு அடிலே வச்சேன்” என்று கூறிக்கொண்டே, உட்கார்ந்தபடியே தலையணையை எடுத்துப் பார்த்தாள் மீனா. 

“அதை எடுத்துக்கிட்டேன். நேத்தி நீ எதுவும் கொண்டாரலையா?” என்றான் கந்தன். 

“அதான் நேத்து நைட்டே நீங்க வந்ததும் சொன் னனே. ஆறரை மணிக்கு அக்கா வீட்டுக்குப் போகும் போதே சந்துக்கு எதிரா மெயின் ரோட்ல லாரி நின்னுக் கிட்டிருந்திச்சு. யாரையும் கண்டுக்காதது போல அப் படியே சுத்தி வீட்டுக்கு வந்திட்டேன்.” 

“இப்ப என்ன செய்யறது?” 

“எதுக்கு என்ன செய்யறது?”

“பணத்துக்குத்தான்?” 

“எங்கிட்டே ஒரு ரூபாயும் சில்லரையும் இருக்கு” என்றாள் மீனா, இடுப்பு முடிச்சை அவிழ்த்தவாறே. பெரிய தொகையாக இருந்திருந்தால் ஒரு பர்சில் ரவிக்கைக்குள் போட்டு வைத் திருப்பாள். 

“அது எதுக்குப் போதும்? இந்த சரகத்து ஆளுங்களுக்குத் தான் தரணும். நேத்தே ஏட்டையா பாத்துக் கேட்டார். இன் னைக்குக் காலேலே தந்துடறேனிருந்தேன்” என்றான். 

“இப்ப எவ்வளவு வேணும்?” 

“அஞ்சு ரூவா போதும், சமாளிச்சிடுவேன்.” 

“அதுக்கென்ன பேச்சியக்காகிட்டே வாங்கித் தரேன். நாளெக்குக் கொடுத்திட்டாப் போகுது” என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள் மீனா. 

“எனக்குன்னு சொல்லாதே. அதுக்கு என்னெக் கண்டா அவ்வளவா பிடிக்காது.” 

“உங்களையா அக்காவுக்குப் பிடிக்காது? இப்ப, நான் வரும்போது கூட, மச்சானுக்கு சூடா நாலு இட்டிலி கொண்டு போன்னு சொல்லிச்சு.” 

“அப்படியா? அப்ப இட்டிலியை வேணாக் கொண்டு வா. நான் தின்னறேன். ஆனா எனக்கூன்ட்டு சொல்லாதே” என்றான் கந்தன். 

அவன் வெளியே ரோட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான். இரண்டு நாய்கள் ஒன்றையொன்று முந்துவதும் பிந்துவதுமாய் ஓடி வந்தன. மூன்றாவது நாய் ஒன்று தனக்கும் அவற்றுக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட இடைவெளி குறையாதவாறு பார்த்துக் கொண்டு அவற்றைத் தொடர்ந்து வந்தது. வெளியே கிளம்பயிருந்த மீனா, பெட்டியிலிருந்து வெளியே எடுத்துப் போடப்பட்டிருந்த துணிகளைப் பெட்டியினுள் வைக்கச் சென்றாள். பெட்டியருகே சென்றதும், நாலைந்து இடங்களில் இரண்டு கைகளாலும் அழுத்தி அழுத்திப் பார்த்தாள். 

“என்னங்க, காலி புட்டியெல்லாம் எங்கே?” என்றாள் மீனா. 

“துணிப்பெட்டீலே காலி புட்டியெல்லாம் எதுக்கு?” என்றான் கந்தன். 

“அதெல்லாம் எங்கே வச்சீங்க?” 

“சாக்கடேலே போட்டுட்டேன்.” 

மீனா எழுந்து வெளியே ஓடப்போனாள். 

“இப்ப அங்கே ஒன்னும் இல்லே, தோட்டிக எடுத்திட்டுப் போயிட்டாங்க” என்றான் கந்தன். 

“அதெல்லாம் கடேலே போட்டிட்டுக் காசு சேத்து வளையல் வாங்கலாம்னு இருந்தேன்.” 

“என்ன வளையல்?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தான் கந்தன். 

“கவரிங் வளையல்” என்று கூறிவிட்டு, “சரி, நா பேச்சியக் காவே பாத்திட்டு வரேன்” என்று கூறிக்கொண்டு மீனா குடிசையை விட்டு வெளியே சென்றாள். 

“உம், இதுக்கு ஏதாவது ஏற்பாடு செய்யறதுதான் நல்லது” என்று முனகிக்கொண்டான் கந்தன். 


அது ஒரு நல்ல ஏற்பாடாக இருக்கும் என்று எண்ணித்தான் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவன் அவளைச் சேர்த்துக் கொண்டான். இப்போதுதான் அது அவ்வளவு நல்ல ஏற்பாடாக அமையவில்லை என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் அவளை முதலில் சந்தித்தது கோவிலில். அன்று வெள்ளிக்கிழமை. அவன் கோவிலுக்குள் நுழையும்போது அவள் கோவிலிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். அநேகமாக கோவிலில்தான் அவர்கள் சந்தித்தனர். அவளைக் கண்டதும் அவன் மனது அவளைப் பார்த்து, ‘இத்தனை காலமா எங்கே இருந்தே நீ?’ என்று கேட்டது. அவளும் அவனைப் பார்த்தாள். எல்லாம் ஒரு கணம்தான். அவன் கோவிலுக்குள் நடந்தான். அவள் வெளியே சென்றாள். கந்தன் பத்துப் பனிரெண்டு எட்டுக்கள் கோவிலுக் குள் நடந்திருப்பான்; சட்டென்று நின்றான். அவனது பின் புறத்தை யாரோ உற்று நோக்கிக்கொண்டிருப்பது போன்ற ஓர் உணர்வு; மல்லிகை மணம் வேறு இன்னும் மூக்கைச் சுற்றி வளைத்துக்கொண்டிருந்தது. கந்தன் திரும்பிப் பார்த் தான். அவள் அங்கு நின்றுகொண்டிருக்கவில்லை. வேகமாகக் கோவிலை விட்டு வெளியே வந்து சாலையின் இருபுறங்களை யும் மாறிமாறிப் பார்த்தான். அதோ, அவள்தான் அங்கு சென்றுகொண்டிருந்தாள். அவளைப் பின்தொடர்ந்தான். அவள் ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். நேராக வேகமாக நடந்துகொண்டிருந்த அவள் எதிர்பாராதவிதமாய் ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு ஒரு சந்தினுள் திரும்பினாள். கந்தனும் அதே சந்தினுள் திரும்பினான். தெருவில் போகிற வருகிறவர் கள் எல்லாம் அவர்கள் இருவரையுமே கவனித்துக் கொண் டிருப்பது போன்றதொரு பிரமை கந்தனுக்கு ஏற்பட்டது. அவன் முன்னே சென்று கொண்டிருந்த அவள் மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். அவள் அவனைப் பார்த்து இலேசாகச் சிரித்தாளா? பல சந்துகளின் வழியாகச் சென்றுவிட்டு இறுதி யில் ஒரு சந்தினுள் நுழையும் முன் ஒரு முறை திரும்பிப் பார்த்துக்கொண்டாள். இப்போது அவர்கள் சென்றுகொண் டிருந்த சந்தைப்பற்றி கந்தனுக்குத் தெரியும். அந்தச் சந்தில் பல வீடுகளில் போலீசுக்கு மாமூல் தருவதுண்டு. 

அவள் உயரமான படிக்கட்டுகளைக் கொண்ட ஒரு வீட்டினுள் நுழைந்தாள். வீடு திறந்திருந்தது. அவன் வீட்டோர மாக வீட்டினுள் பார்த்துக்கொண்டே நடந்தான். அவள் தெருவைப் பார்த்தவண்ணம், வீட்டினுள் சற்று உட்புறமாக நின்றுகொண்டிருந்தாள். ‘வாங்க’ என்றது ஒரு மெல்லிய குரல். தவம் செய்துகொண்டிருந்த தெருவிளக்குகள் திடுக்கிட்டது போலக் கண்களைத் திறந்து வியந்தன. அந்த உயரமான படி களின் மீது ஏறி உள்ளே நுழைந்தான் கந்தன். 

“உள்ளே வாங்க” என்று சொல்லிக்கொண்டே முறுவலித்தாள் அவள். 

“காசு கொண்டு வரலே” என்றான் கந்தன். 

“போய் கொண்டு வாங்க; இப்ப வீடு தெரியுமில்லையா?” 

“இது யார் வீடு?” 

“தெரியலே, அத்தான்தான் வாடகை தராரு.” 

“ஓஹோ! அத்தான் யாரு?” 

“அவர் பேரு சோலை. வெத்திலக் கடே சோலை எம்பாங்க” 

“அவருக்கு என்ன வெத்திலெ வியாபாரமா?” 

“உஹும்” என்றுவிட்டு அவள் சிரித்தாள். “அவருக்கு வியாபாரமெல்லாம் இதுதான். ரொம்ப நேரம் வெத்திலெப் பேட்டை பிச்சையாவோட அவர் கடேலேயே உக்காந்து இருப்பாரு. அதான் அவரெ வெத்திலெக் கடே சோலை எம்பாங்க.” 

“நீ ஊருக்குப் புதுசா?” 

“இங்கே வந்து ஒரு மாசமானது.” உள்ளே ஒரு கதவு திறக்கும் சத்தம் கேட்டது. 

“என்ன மீனா?” என்று கேட்டுக்கொண்டே, நன்றாகச் சிவப்பாகத் தடித்திருந்த ஒரு பெண் மிடுக்காக நடந்து வந்து, இருவர் அருகிலும் நின்றுகொண்டாள். ஒரு கையை இடுப்பில் மடக்கி வைத்துக்கொண்டு, “என்ன, பேசிட்டிங்களா?” என்று மீனாவைப் பார்த்துக் கேட்டாள். 

“நான் அதுக்கெல்லாம் வரலே, ஓங்க மொதலாளியெப் பார்க்கணும்; அதுக்குத்தான் வந்தேன்” என்றான் கந்தன். 

“என்ன விஷயமா?” 

“எனக்குத் தெரியாது. எங்க மொதலாளி பாத்திட்டு வரச் சொன்னாரு.” 

“ஒங்க மொதலாளி யாரு?” 

“சன் தியேட்டர் ஓனர் சிக்கையா நாயக்கர்.” 

“உம்,நாளைக் காலேலே ஒம்பது மணிக்கு வந்தா, இந்த அடுத்த வீட்டுலே அவரெப் பார்க்கலாம்” என்று சிவப்பு சுந்தரி கூறிவிட்டு ‘வா’வென்று அழைக்கும் பாவனையில் மீனாவிடம் கையை அசைத்தாள். 

“வர்றேங்க” என்று கூறிவிட்டு கந்தன் வெளியே வந்தான். அவன் படிகளில் இறங்கும்போது மீனா உரக்கச் சிரிப்பது அவன் காதுகளில் விழுந்தது. 

அடுத்தநாள் காலையில் வெற்றிலைக் கடை சோலை தன் வீட்டின் கூடத்தில் பாயில் உட்கார்ந்துகொண்டு, ஒரு பத்திரிகையைப் புரட்டிக் கொண்டு இருக்கையில் கந்தன் அவர்முன் நின்று கைகூப்பி வணங்கினான். சோலை வயதான வர். ஆனாலும் கட்டுமஸ்தான உடல். கந்தன் இளைஞன். அவனுக்கும் கட்டுமஸ்தான உடல். 

“யாரப்பா நீ?” என்றார் பெரியவர். 

“எம் பேரு கந்தன். நா ஒங்ககிட்டே ஒரு விஷயம் பேசணும்” என்றான் கந்தன். 

“உட்காரப்பா” என்றார் அனுபவசாலி. 

கந்தன் உட்கார்ந்தான். அவர் எதுவும் கேட்பதற்கு முன்னால், “உங்ககிட்டே இருக்கே, அந்தப் பொண்ணு மீனா, நா அதைக் கல்யாணம் கட்டிக்கணும்” என்றான் கந்தன். 

பத்திரிகையைப் பக்கத்தில் வைத்துவிட்டுக் கந்தனைக் கூர்ந்து நோக்கினார் பெரிய மனிதர். 

“எந்தப் பொண்ணு? மீனான்ட்டா சொன்னே?” “ஆமா, அடுத்த வீட்லே இருக்கே, ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் ஊருக்கு வந்ததுல்லே, அதுதான்.” 

“என்ன தம்பி, நீ சொல்றது விளங்கலேயே! நீ யாரு? எந்த ஊரு?” 

“நீங்கதானே வெத்திலெக்கடே சோலைங்கறது?” என்று கேட்டான் கந்தன். 

“ஆமா…” என்று இழுத்தார் சோலை. 

“எம் பேரு கந்தன். இந்த ஊர்தான்” என்றான் கந்தன். 

“எந்தத் தெரு?” 

“பழக்காரத் தெரு” 

“பழக்காரத் தெருவா? அய்யா பேரு?” 

“அய்யா ரொம்ப காலத்துக்கு முன்னாலே இறந்து போயிட்டாரு. அம்மா பேரு சொர்ணத்தம்மாள்.” 

“சொர்ணத்தம்மாளா? பேரு கேட்ட பேரு மாதிரி தெரியுதே… நீங்க வடம்போக்கித் தெரு குறுக்குச் சந்துலே குடியிருந்தீங்களா?” 

“ஆமா, அங்கே ஒரு காலத்துலே குடியிருந்தோம்னுட்டு அம்மா சொல்லும். அப்ப நான் ரொம்பச் சின்னவன், வெவரம் தெரியாது. ஆனா, இப்பக்கூட எங்களுக்குக் குறுக்குச் சந்துலே ஒரு வீடு இருக்கு.” 

“நீ சொர்ணம் மகனா?” என்று கேட்டுவிட்டுச் சோலை யார் கடகடவென்று சிரித்தார். கந்தனுக்கு ஒரு வகையில் சந்தோஷம். நபர் முற்றிலும் புதியவரல்ல. 

“குறுக்குச் சந்து வீட்டே வாடகைக்கு விட்டிருக்கீங்களா?” 

“ஆமா.” 

“என்ன வருது?” 

“எழுபது ரூவா தர்றாங்க.” 

“வீடு கொஞ்சம் பெரிசா இருக்குமே … பெரிசுதான், ஆனா, ரொம்பப் பழசு.” 

“குடியிருக்கறவங்க ரொம்ப காலமா இருக்காங்க. கண்ணிய மான ஆளுங்க. நாங்களும் வாடகையைக் கூட்டிக்கலே” என்றான் கந்தன். 

“உம்” என்று விட்டு, தனது கை மோதிரங்களைப் பார்த்துக் கொண்டார் செல்வந்தர். 

“நான் கேட்டது…” என்றான் கந்தன். 

“அந்த மீனாங்கற பிள்ளையைப் பாத்திருக்கையா?” 

“உம்.” 

“எப்ப?” 

“நேத்து.” 

“உடனே ‘லவ்’வாயிரிச்சாக்கும்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் சோலைப்பிள்ளை. 

கந்தன் பேசாமல் இருந்தான். 

“சொர்ணம் சம்மதிக்குமா?” என்றார் சோலை. 

“சம்மதிச்சிடும்” என்றான் கந்தன். 

“அம்மாவுக்கு செல்லப்பிள்ளை, உம்… சொர்ணத்துக்கு எத்தனை கொழெந்தேங்க?” 

“நா மட்டுந்தான்.” 

“என்ன தொழில் பாக்கறே?” 

“சன் தியேட்டர்ல கேட்கீப்பரா இருக்கேன்.” 

“என்ன தர்றாங்க?” 

“நாளைக்கு ரெண்டு ரூவா.” 

“மாதம் அறுபது கெடைக்கும், உம்.” 

“வெள்ளிக்கிழமை நான் ‘ஆப்’ எடுத்துக்கிடுவேன்; கொஞ்சம் கொறெச்சலாத்தான் கெடைக்கும்.” 

“ஏதாவது தொழில் பண்றதுதானே? இன்னூத்தர்கிட்டே வேலை பார்த்து முன்னுக்கு வர முடியுமா?” 

“ஆமா, எனக்கும் அதான் யோசனை. டிரைவிங் கத்திட்டு இருக்கேன். நல்ல வெலையா வந்தா வீட்டே வித்திட்டு, சொந்தத்துலே கார் வாங்கி, டாக்சி அடிக்கலாம்ன்ட்டு நெனெப்பு.” 

“அதுதான் நல்ல ஐடியா. வேறெங்கேயும் வெளியூர்க் கெல்லாம் போக வேண்டாம். கோவிலுக்கும் ஸ்டேஷனுக்கும் அடிச்சாலே போதும், நல்ல மிச்சமிருக்கும்” என்று சொந்தத் தொழில்காரரான சோலையார் கூறிவிட்டு, “முத்து” என்று உரக்கக் கூப்பிட்டார். ஒரு சிறுவன் வந்தான். “வெளிக்கதவெ அடைச்சிட்டு அதெக் கொண்டு வா” என்றார் சோலை, கந்தனுக்கு ஒரு கணம் நிம்மதி இல்லை. சோலை தொடர்ந்தார். 

“அந்த மீனா விவகாரம் கேட்டேயே?… இந்தா தம்பீ, நீ சொர்ணத்தம்மா மகன்தானே, எல்லாம் பிளெயின்னாவே சொல்லிடறேன். அந்தப் பிள்ளையெ ஐந்நூறு கொடுத்து வடக்கேந்து கூட்டியாந்தேன். எட்டுப் பவுனுக்கு நகை செஞ்சு போட்டிருக்கேன். எந்தக் கொளெந்தெயானாலும் சரி, கையிலே களுத்துலே போட்டதெ எடுக்கறவன் நான் இல்லை. ஒனக்குத் தெரியாது; அம்மாவெக் கேட்டுப் பாரு. சொர்ணம் ஒரு வகைலே எனக்குச் சொந்தம்தான். நீயும் நல்ல பையன் மாதிரி தான் தெரியுது. அந்தப் பிள்ளேயும் ஒனக்கு ஏத்ததுதான். தங்கமான பிள்ளை. அதிகம் கேக்கலே, ஆயிரத்து ஐந்நூறைக் கொடுத்துட்டு, பிள்ளையெக் கூட்டிட்டுப் போ. ஏதாவது கோவில்ல வச்சுத் தாலியெக் கட்டு. ஆனா, ஒண்ணுலே மட்டும் நான் கண்டிப்பா இருப்பேன். அம்மாவெக் கேட்டுக்காம ஒண்ணும் செய்யாதே ஒரு வாட்டிக்கு ரெண்டு வாட்டி நல்லாக் கேட்டுக்க. அது பூர்ணமா சம்மதிச்சா நீ மீனாவைக் கட்டிக் கிறதுலே எனக்கு ஆட்சேபணை இல்லை.” 

இந்த நேரத்தில் முத்து ஒரு பாட்டிலுடனும், ஒரு கிளா சோடும் வந்து இரண்டையும் சோலை முன் வைத்தான். “இன்னொரு கிளாஸ் எடுத்திட்டு வா” என்று கூறிவிட்டுக் கந்தனைப் பார்த்து, “தம்பி சாப்பிடறது உண்டா?” என்று கேட்டார் சோலை. 

“எப்போதாவது” என்றான் கந்தன். 

“அளவோடே சாப்பிட்டா ஒண்ணும் கெடுதி இல்லே, ஒடம்புக்குக்கூட நல்லது. மூளையும் நல்லா வேலை செய்யும்” என்று சுருக்கமாகக் குடியின் சிறப்பை உணர்த்தினார் சோலை. இதற்குள் மற்றொரு கிளாசும் வந்தது. 

ஒரு கிளாசில் நிறையவும், மற்றதில் பாதியளவும் ஊற்றி ரண்டாவது கிளாசை கந்தன் முன் வைத்தார் சோலை. கந்தன் அதைத் தொடவில்லை. சோலைப்பிள்ளை ஒரு சிறு காகிதப் பொட்டலத்தை அவிழ்த்து அதை இருவருக்கும் பொதுவாக வைத்தார். 

அதில் ‘சூஸ்பரி’ இருந்தது. சோலைப்பிள்ளை கிளாசை எடுத்துக் குடிக்க ஆரம்பிக்கவும், அவர் குடிப்பதைக் கவனித்துக் கொண்டே தன் கையில் கிளாசை எடுத்தான் கந்தன். அவர் அளவுக்கு நிதானமாக திரவத்தை உறிஞ்ச முடியவில்லை கந்தனால்; குமட்டிற்று. இருந்தாலும் வலுக்கட்டாயமாக கிளாசைக் காலி செய்தான். வாந்தி எடுக்கக் கூடியவன் போல அவன் சப்தமிடவும், “இந்தா, இந்தா” என்று கூறிக் கொண்டே ஒரு பிஸ்கோத்தை அவன் வாயில் திணித்தார் சோலைப்பிள்ளை. அதைத் கடித்துத் தின்னவும் கந்தனுக்குக் குமட்டல் நின்றது. சிறிது நேரத்தில் சாராயம் வயிற்றிலே வேலை செய்வதை அவனால் உணர முடிந்தது; தலையை ஏதோ ஒன்று முன்னும் பின்னும் தள்ளிற்று. 

ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு சோலைப் பிள்ளை பேச்சைத் தொடர்ந்தார். 

“அந்த டாக்சி ஐடியா சொன்னயே, அது நல்ல ஐடியாத் தான். இந்தக் காலத்துலே வீட்டைக் கட்டி எவன் மாரடிக்கிறது? அதுவும் பழைய வீடு. மராமத்து செய்ய சொர்ணமக்கா கிட்டே பணம் இருக்குமோ என்னவோ. வீட்டுக்கு நல்ல பார்ட்டியா நானே பாத்துத்தர்றேன். அம்மாகிட்டேயும் சொல்லு. என்னெ ஒண்ணும் அவ்வளவு சுலபமா மறந்திருக்காது; நெனவு வச்சிருக்கும்… இப்ப அதுக்கு என்ன வயசு இருக்கும்? எனக்கே ஐம்பதாயிருச்சு; அதுக்கு அறுபது, அறுபத்திரெண்டு ஆகுமே.” 

“அறுபதாயிருக்கும்” என்றான் கந்தன். அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது. வாந்தி வந்துவிடுமோ என்ற பயம் வேறு. வந்த காரியத்தை நினைத்தான். ஒரு ஆயிரத்து ஐந்நூறு இருந்தால் மீனா அவனுக்குத்தான். அவளைக் கல்யாணம் செய்து கொண்டு, வீட்டை விற்று ஒரு டாக்சி வாங்கி விட்டால்…? கந்தன் எழுந்து நின்றான். 

“அப்ப, நான் வரட்டுங்களா?” 

“கிளம்பிட்டியா? மீனாவைப் பார்க்க வேண்டாமா?”

“நேத்தே பாத்துட்டேனுங்க.” 

“அதெச் சொல்லலே; அதுகூட இருந்து பேசிட்டுப் போகலே?” 

“நேத்தே கொஞ்ச நேரம் அதுகூடப் பேசிட்டேனுங்க.” 

சோலைப்பிள்ளை ‘கடகட’வென்று சிரித்தார். பிறகு, “சரி போய்ட்டு வா தம்பீ. நான் சொன்னதெக் கவனமாக் கேட்டுக்கிட்டே இல்லே. அம்மாவைக் கலந்துகிட்டு ஒரு காலா காலத்துலே முடிவுக்கு வா. சின்னப் பிள்ளைங்க கல்யாணம்னு ஒண்ணைப் பண்ணிக்கிட்டு, சொந்தமா ஒரு தொழில்லே உக்காந்துகிட்டாத்தான் நல்லது” என்று முத்தாய்ப்பு வைத்தார் அனுபவசாலி.

கந்தன் மீனாவைச் சந்தித்து மூன்று நாட்களாகவில்லை, சொர்ணத்தம்மாள் மாரடைப்பால் இறந்துபோனாள். 


பேச்சியின் வீட்டிலிருந்து மீனா திரும்பி வந்தாள். நோட்டும் சில்லறையுமாகக் கந்தனிடத்து ஐந்து ரூபாயைத் தந்தாள். சில்லறையிலிருந்து முக்கால் ரூபாயை எடுத்து மீனாவிடம் கொடுத்து “நீ போயி லாண்றிலேந்து துணியை வாங்கிட்டு, சுடுதண்ணி போட்டுவை. நான் முகத்தை வழிச்சிட்டு வர்றேன்” என்றான் கந்தன். 

“வெறகுக் கடை சண்முகம் ஓங்களெ ஒடனே வரச் சொன்னாரு” என்றாள் மீனா. 

“நான் இப்ப அங்கே ஒண்ணும் போகலே” என்றான் கந்தன். 

“அஞ்சு ரூபாயையும் போலீசுக்குத் தரணூம்னீங்களே; இப்ப முக்கா ரூவாயை எங்கிட்டே தந்திட்டீங்களே ?” 

“எங்கிட்டே ரெண்டு ரூபா இருக்கில்லே” என்று சமாளித்துக் கொண்டே, மீனாவின் கன்னத்தை இலேசாகத் தட்டிவிட்டு வெளியே நடந்தான் கந்தன். ரோட்டையும் வீட்டையும் பிரிக்கும் சாக்கடையின் மீது குறுக்காகக் கிடந்த மரப்பலகை மீது ஸ்திரமாகவே அவனால் நடக்க முடிந்தது. 

கந்தன் நேராகச் சென்றது சண்முகத்தின் விறகுக் கடைக்குத் தான். விறகுக் கடை என்றால் ஓரளவுக்குத்தான் விறகுக் கடை. கூரை வேய்ந்த கடையின் முன்புறத்தில், ஒரே நீளத்துக்கு வெட்டப்பட்ட, கட்டை விரலுக்கும் சற்று அதிகமான பருமனுள்ள கழிகள் அடுக்கடுக்காகக் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அருகே பிளக்கப்பட்ட பெரிய விறகுக் கட்டைகளின் ஒரு குவியலும், பிளக்கப்படாத பெருங்கட்டை களும், ஒரு தராசும் இருந்தன. கடையின் பின்புறம் சற்று விசாலமான திறந்தவெளி இருந்தது. அப்பகுதியின் முக்கிய மான பாகம், ஒரு சுவராலும் இரண்டு தட்டிகளாலும் அடைக்கப் பட்டிருந்த சிறு அறை. அறையின் ஒரு மூலையில், மூடிய ஒரு பானையும் அதன்மீது ஒரு கிளாசும் இருந்தன. கந்தன் நேராக வந்தது அந்த அறைக்குத்தான். அவனைத் தொடர்ந்து காக்கி நிற அரைக்கால் சட்டையும், அளவுக்குப் பெரிதான மேல் சட்டையும் அணிந்த சிறுவன் ஒருவன் வந்தான். சிறுவ னுக்குப் பத்துப் பனிரெண்டு வயதிருக்கும். சற்று மாறுகண். சிறுவன் இடுப்பிலிருந்து ஒரு பாட்டிலையும், காற்சட்டைப் பையிலிருந்து ஒரு பிளாஸ்டிக் அவுன்சு கிளாசையும் எடுத் தான். கந்தன் “மூணு” என்றான். சிறுவன் கிளாசை எடுத்து, அளந்து, ஜிஞ்சரை ஊற்றிவிட்டு, தரையில் கிடந்த அலுமினியத் தம்ளரில் தண்ணீர் எடுத்து கிளாசில் ஊற்றி, கிளாசைக் கந்தன் கையில் கொடுத்தான். ஜிஞ்சரை ஒரே மடக்காகக் குடித்துவிட்டு, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான் கந்தன். “சிகரெட்டே வெளிலே வச்சுக் குடிங்கண்ணே” என்றான் சிறுவன். “பரவாயில்லேடா, தம்பி” என்று கூறிக்கொண்டே, ‘மருந்து’க்குப் பணமும், சிறுவனுக்குச் சில்லரையும் கொடுத் தான் கந்தன். 

“முன்னே மாதிரியே போகுதா?” என்று கேட்டான் கந்தன்.

“ஆமா, இந்த எளவைச் சாப்பிட்டவங்க வேறெ எதை யும் சாப்பிட மாட்டாங்களாம். சில ஆளுங்களுக்குச் சாராயக் கடைக்குப் போகவேறெ சங்கடமா இருக்கு. இதிலே சாரா யத்துலே கர்ப்பத்தடை மாத்திரை கலக்கறாங்கன்ட்டு பொரளி கூட இருக்கு” என்று விளக்கினான் சிறுவன். 

“ஒரு நாளெக்கி எத்தனை பவுண்டு போகுது?”

“மூணு, இல்லாட்டி நாலு போகும்”. 

கந்தன் மனதுக்குள் ஒரு சிறு கணக்குப் போட்டுப் பார்த் தான். பவுண்டு எட்டு ரூபாய்க்கு வாங்கலாம். வாடிக்கையா வாங்கினா ஏழு ரூபாய்க்குக்கூடக் கெடைக்கும். ‘லூசா’வே வித்தா மூணு பவுண்டுக்கு பன்னென்டு, இல்லாட்டி பதினஞ்சு ரூபாய் ஆயிரிச்சு. பையனுக்கு ரெண்டு ரூபா; மாமூலுக்கு ரெண்டு ரூபா; நாளெக்கு எப்படியும் பத்து மிச்சம் பாத்திறலாம். உம், அடுத்த வாரமே வீட்லே கடையைப் போட்டுற வேண்டியது தான். கந்தனுக்குக் கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. 

“இதென்ன செத்த வியாபாரம்!” என்றான் சிறுவன். கந்தனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆச்சரியத்தை அடக்கிக் கொண்டு, “நீ இதெத்தானே ஊத்திக் கொடுத்திட்டிருக்கே?” என்றான். 

“அய்யோ, பெரியவரோடெ பளகின தோசத்துக்காக இந்த வேலையைப் பாத்துக்கிட்டு இருக்கேன். அதுவும் காலேலே ஏளு மணிலேந்து பத்து மணி வரைக்குந்தான். பெறகு பொளுது சாயவும் ஆறு மணிலேந்து ரவைக்குப் பத்து மணி வரெதான்.” 

“மத்த நேரத்துலே?” 

“வெல்டிங் வேலெ பாக்கறேன்.” 

“எங்கே?” 

“டவுன்லே ஒரு இடத்திலே.” 

“என்ன கெடைக்குது?” 

“இப்ப நாகக் கம்பிலே கூடை வெல்டு பண்றேன். கூடைக்கு அரை ரூபாய் கெடைக்கும். நாளெக்கி பதினஞ்சு, இருபது கூடை முடிச்சிடுவேன்.” 

“சண்முகம் என்ன தராரு?” 

“நாளெக்கி ரெண்டு ரூபா தராரு.” 

“மே வரும்படி?” 

“ஒண்ணும் கேட்டுக்கிறதில்லே; கொடுத்தாலும் வாங்கிக் கிடறதில்லே.” 

கந்தன் இன்னும் ஒரு அவுன்சு வாங்கிக் குடித்துவிட்டு இடத்தை விட்டு அகன்றான். 

விறகுக் கடை இருந்த ரோட்டின் மறுபுறம், ஒரு பெரிய தாழ்வான பரப்பு இருந்தது. அப்பரப்பில் மழைக் காலத்தில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும். சுற்றுப்புறக் குடிசைவாசி களுக்கு வசதியாக இப்போது அது வறண்டு கிடந்தது. பள்ளத் துக்கு அப்பால், விறகுக்கடை இருந்த ரோட்டுக்கு இணையாக, ஒரு பர்லாங்கு தூரத்தில் மற்றொரு ரோடு சென்றது. இரண்டு ரோடுகளையும் இணைக்கும் சற்று உயரமான பாதை வழியே கந்தன் நடந்தான். பாதையின் இருபுறமும் சில மரங்களும், சில பெட்டிக் கடைகளும் நின்றன. அந்தப் பாதையின் வழியே வரும்போதுதான், பின்னால் திடீரென்று ஒரு ஊதல் சத்தம் கேட்கவும் கந்தன் திரும்பிப் பார்த்தான். ஒரு சினிமாப் பாட்டைத் தனது ஊதலில் விகாரமாக வாசித்துக்கொண்டே, பலூன்கள் விற்றுக்கொண்டு ஒரு கிழவன் வந்து கொண்டிருந் தான். எத்தனை பலூன்கள்! பந்து மாதிரி! சுரைக்காய் மாதிரி! புடலங்காய் மாதிரி! பாம்பு மாதிரி! நீண்டிருந்த, வளைந்திருந்த, சுருண்டிருந்த பலூன்கள்! எல்லா வண்ணங்களிலும் பலூன்கள். ‘பிளெய்’னாக இருந்த பலூன்கள் வேறு, வண்ணப் பொட்டுகளைக் கொண்ட பலூன்கள் வேறு. கிழவன் தன்னைக் கடந்து செல்லும்வரை பலூன்களைப் பார்த்துக்கொண்டு நின்றான் கந்தன். 


நாள் பூராவும் கீதா அந்த மஞ்சள் நிற பலூனை வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். விளையாட்டாக இருக்கும் என்று கந்தன் அவனது சிகரெட்டு நுனியைக் கொண்டு பலூனைத் தொட்டான். பலூன் பட்டென்று வெடித்தது. அவன் வெடித்துச் சிரித்தான். ஆனால் அவளுக்கு அது வேடிக் கையாக இல்லை. ‘ஓ’வென்று அழுதாள். “நாளெ புது பலூன் வாங்கித் தர்றேன்” என்றான் அவன். அவள் “இப்பவே வாங்கித் தா ” என்றாள். “சந்திரனோடெ பலூனை வாங்கி வச்சிக்க” என்றான் அவன். “தரமாட்டேன்” என்று அடம்பிடித்தான் சந்திரன். பலூன் வாங்கக் கந்தன் வெளியே சென்றான். திரும்பி வரும்போது இரவாகி விட்டது. ஆனால் பலூன் வாங்கிவர மறந்து விட்டான். தள்ளாடி வீடு திரும்பினான். 

கீதா ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கிடந்தாள். அங்கே மீனா கவலையோடு உட்கார்ந்திருந்தாள். “தலையே வலிக்குதே, தலையே வலிக்குதே” என்று கீதா அவ்வப்போது அலறினாள். “வாந்தி வாந்தியா எடுக்குது” என்றாள் மீனா. பரமேஸ்வரனிடமிருந்து கந்தன் மண்டையடித் தைலம் வாங்கி வந்தான். கீதா இரண்டு நாட்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டும் முனகிக்கொண்டும் சுருண்டு கிடந்தாள். வெளிக்குப் போகவில்லை; நீர் இறங்கவில்லை. மலச்சிக்கலுக்கு ஹோமியோபதி டாக்டர் மருந்து கொடுத்துவிட்டுச் சென்றார். மருந்தையெல்லாம் கீதா வாந்தி எடுத்தாள். ஜோசியர் சம்சாரம் வந்து குழந்தையைப் பார்த்தாள். வேப்பங்கொழுந்து, அதி மதுரம், பசு நெய் இன்னும் என்னவெல்லாமோ சேர்த்து மருந்து தயாரித்துக் கொடுத்தாள். குழந்தை மருந்தை விழுங்கி விட்டுச் சுருண்டு கிடந்தது. வெள்ளரி விதையை அரைத்து அடி வயிற்றில் பூசினார்கள். இலேசாக நீர் பிரிந்துவிட்டதாக அறிவித்தாள் ஜோசியர் மனைவி. மூன்றாம் நாள் கீதாவின் உடல் பூராவும் தடிப்புத் தடிப்பாக ஏதோ தோன்றியது. தடிப்புகள் செக்கச் சிவந்து இருந்தன. விஷக்கடி என்று தீர்மானித்தார் ஜோசியர் சிவஞானம். மந்திரித்து விபூதி போட்டுவிட்டு, வீட்டில் யாரும் லாகிரி வஸ்துகள் உபயோகிக்கக் கூடாதென்று உத்தரவிட்டார் அவர். நாள் பூராவும் குடிசைக்கு வெளியே பரமேஸ்வரனது கட்டிலைப் போட்டுக்கொண்டு அவனோடு உட்கார்ந்திருந்தான் கந்தன். “குழந்தைங்க ஆசையா ஒண்ணை வச்சிருக்கும்போது அதை நாசப்படுத்தக் கூடாது” என்றான் பரமேஸ்வரன். பலூன் பட்டென்று வெடித்ததும், தான் வெடித்துச் சிரித்ததும் கந்தனின் நினைவுக்கு வந்தது. 

கீதாவின் உடலில் தோன்றிய தடிப்புகள் ஒரு நாளில் மறைந்தன. அது தனது முதல் வெற்றி என்று தெரிவித்துக் கொண்டார் ஜோசியர். ஆனால் மறுநாளே கீதாவுக்கு தலையைப் பக்கவாட்டிலோ, மேலும் கீழுமோ திருப்ப முடியவில்லை. கைகளை அகல விரித்து மல்லாந்து கிடந்தாள். முதுகும் கழுத்தும் லேசாக வில்லைப்போல வளைய ஆரம்பித்தது. ஓரிரு தடவைகள் வலிப்பு ஏற்பட்டுக் கீதாவின் கால்களும், கைகளும் ‘குண்டக்கா மண்டக்கா’வென்று நெளித்துக் கொண்டு சென்றன. தலை வீங்கிக்கொண்டது. குழந்தையைப் பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் ஹோமியோபதி டாக்டர். கீதாவுக்குக் காது மந்தப்பட்டு, என்ன சொன்னாலும் பேந்தப் பேந்த விழித்தாள். “இதுவெல்லாம் ஒண்ணுமில்லை; குட்டிப் பனைமர மடல்காம்பை அடுப்பிலே வாட்டிச் சாறு எடுத்துக் காதுலே ஊத்தினாப் போதும்’ என்றாள் ஜோசியர் மனைவி. ஆனால் கீதா வில்லாக வளையவும், முழங்கால் முட்டுகள் வீங்கிச் சிவக்கவும் கந்தனுக்கும் மீனா வுக்கும் பயம் அளவு கடந்து போயிற்று. பெரிய ஆஸ்பத்திரிக்கு கீதாவை எடுத்துச் சென்றனர். சாப்பாடே சாப்பிடாது மூன்று நாட்கள் பொரி கடலையும், தண்ணீரையும் கொண்டு வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்தான் சந்திரன். 

பெரிய ஆஸ்பத்திரியில் கீதாவுக்கு முதுகெலும்பில் ஊசி போட்டார்கள். “அய்யோ, அப்பா” என்று அலறிவிட்டுச் சிறிது நேரத்தில் இறந்து போனாள். பரமேஸ்வரன் மீண்டும் கந்தனிடத்து, “குழந்தைங்க ஆசையா ஒண்ணை வச்சிருக்கும் போது அதை நாசப்படுத்தக் கூடாது” என்று சொன்னான். “அப்படி இருக்குமா?” என்று கந்தன் மீனாவைக் கேட்டான். அவள் அழுதுகொண்டிருந்தாள்.

– தொடரும்…

– நாளை மற்றுமொரு நாளே…(நாவல்), முதல் பதிப்பு: 1974.

ஜி.நாகராஜன் (செப்டெம்பர் 1, 1929 - பிப்ரவரி 19, 1981 ) மதுரை, இந்தியா) தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர். இலக்கிய வாழ்க்கை ஜி.நாகராஜன் நெல்லையில் இருக்கும்போதே சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். அவருடைய முதல் கதையான `அணுயுகம்’ ஜூன் 8, 1957 அன்று `ஜனசக்தி' வார மலரில் வெளியானது. ஜனசக்தி', `சாந்தி', `சரஸ்வதி' போன்ற இடதுசாரி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *