நாளை இன்று நேற்று!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 12, 2019
பார்வையிட்டோர்: 5,935 
 
 

2123ம் ஆண்டு மே மாதம். 25ம் திகதி, இடம் யாழ்ப்பாணம் சென்றல் நேர்சிங்கோம்.

ஏழாம் நம்பர் பிள்ளை… அதான் கலைத்துறையில் நல்லா இருக்கப்போறார்!

முணுமுணுத்தபடி நேர்ஸ் பிறந்த நேரத்தை குறித்துக்கொண்டிருக்கும்போதே அவசரமாக உள்ளே நுழைந்த யாழ்ப்பாணம் கம்பன் கழக செயலாளர் வில்வராஜா தொட்டிலில் கிடந்த வயோதிபரை கண்டதும் நிம்மதிப்பெருமூச்சு விட்டார்.

“அப்பாடி .. எங்க டைமிங் பிழைச்சிடுமோ எண்டு பயந்திட்டன் .. வெளியீட்டு விழாவுக்கு நேராமாச்சுது .. ஐயாவை கெதியா ரெடிப்பண்ணுங்க”

“ஐயா” ஆறடித்தொட்டிலில் ஆவென்று விட்டத்தை பார்த்து கொட்டாவி விட்டார். பிறந்து அரைமணிநேரமே ஆகியிருக்கும். தலையில், மயிர்கள் பலது நரையோடும், சிலது கறுப்போடும் பெரும்பாலும் வெட்டவெளியாகவும் இருந்தது. மீசை தாடி இல்லை. “கிளீன் ஷேவாக இப்போதெல்லாம் கிழடுகள் பிறப்பதே அரிது” என்று நேர்ஸ் குனிந்து அந்த ஐயாவுக்கு முத்தம் கொடுத்தாள். வைத்தியர் வந்து மூளையை ஸ்கான் பண்ணி எடுத்த ரிப்போர்ட் பிரிண்டை மேலோட்டமாக நோட்டம் விட்டார்.

“எண்பத்தொரு வயதில் பிறந்திருக்கிறார் .. மூளையின் டிசைன் ஆச்சர்யமாக இருக்கு… இவர் ஒரு ஜீனியஸ்”

“தாங்க்யூ டொக்டர்”

ஐயா முதன் முதலில் வாய்திறந்தார். சிரித்தார். வில்வராஜா மீண்டுமொருமுறை வந்து அவசரப்படுத்த, நேர்ஸ் ஐயாவுக்கு வேட்டி கட்டி, சேர்ட் பட்டன் போட்டுவிட்டாள். ரெடியானதும் வெளியே நின்ற பென்ஸ் காரில் ஐயாவை தட்டுத்தடுமாறி ஏற்றிவிட்டார்கள். ஐயா அசுவாரசியமாக உலகத்தை பார்த்தார். “இந்த உலகத்தோடு தான் மாரடிக்கவேண்டுமா?”

நேர்சிங்கொமில் இருந்து வண்டி புறப்பட்டு கோயில் வீதியை அடைகிறது. வழிநெடுக பதாகைகள் முழுதும் பிரெஞ்சுதாடியில் ஒருவர் சிரித்துக்கொண்டிருந்தார். நல்லூர் பின்வீதியில் “எழுத்தாளர் திலகமே வருக வருக” என்று அறுபதடி பனர் ஒன்று கட்டப்பட்டு பாலூற்றப்பட்டிருந்தது. வண்டி கம்பன்கோட்டத்தில் நிற்க, எல்லோரும் முண்டியடித்தபடி கதவை திறந்து ஐயாவை வரவேற்றார்கள். வடக்கு வாசல் மணல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமேடை. நடுவிலே அரியாசனம் போன்ற இருக்கையில் “ஐயாவை” இருத்தினார்கள். பேச்சுக்கள் சூடுபிடிக்கத்தொடங்கின.

“இன்று பிறந்த நாகலிங்கப் பூவே, நீ பிறந்தவுடனே தமிழுக்கு சேவை செய்ய வகை செய்த விதிப்பயனை விதந்து தொழுகிறேன். இருநூற்று நாற்பத்தேழு புத்தகங்கள், நாற்பத்தேழு சாகித்திய அக்கடமிகள், “நேற்று என்பது வெறுங்கனவு” நாவலுக்காக நோபல் பரிசு வாங்கும்போது கூட மேடையில் “எல்லாப்புகழும் இந்த நாகலிங்கத்துக்கே” என்று தற்பெருமை பேசப்போகும் தன்மானச்சின்னமே”

வாழ்த்தா? இல்லை உயர்வு நவிற்சியா என்று புரியாதவகையில் பேச்சு இருக்க, ஐயா சலிப்பில் முன்னே ஸ்டூலில் இருந்த புத்தகத்தை கையில் எடுத்தார்.

“நேற்று இன்று நாளை – நல்லை நாகலிங்கம்”

சிக்கலான கதையாயிற்றே, எடுபடுமோ என்ற சந்தேகத்திலேயே பக்கங்களை புரட்டினார். எண்ணூறு பக்கங்கள். எழுத எத்தனை நாட்கள்? சரியாக எட்டு மாதங்கள், பதினொரு நாட்கள் எடுக்கப்போகிறது. இந்த நாவலுக்காக அடுத்த எட்டுமாதங்களில் தூக்கம் தொலைக்கப்போகிறேன். பசி தொலைக்கப்போகிறேன். சற்குணம் சசிகலாவை ஏமாற்றிவிடுகின்ற இடத்தில் கண்ணீர் விட்டு அழப்போகிறேன். இதெல்லாம் எதற்கு செய்யப்போகிறேன். யாரோ ஒருவன், புத்தகத்தையே வாசிக்காமல் மேடையில் ஏறி இந்த கத்து கத்துவதற்கா? எல்லாம் கமலாதேவிக்காக. அவள் இல்லாத காலத்தை எழுதி எழுதி கழிப்பதற்காக. யாருக்கு இது தெரியப்போகிறது? இந்த கதையாவது யாருக்கும் புரியுமா? கதையின் முடிவை யாராவது கடந்த காலத்தில் கண்டுபிடித்து இருப்பார்களா? இல்லை எனக்கு மட்டும் தான் அது வெளிச்சமா? நானே இந்த கதையை எட்டு மாதத்தில் மறந்துவிடுவேனே. நினைக்க, நினைக்க நாகலிங்கத்துக்கு வருத்தமாக இருந்தது. என்ன நியதி இது?

***

பூமியின் இயக்கம் ஆச்சர்யமானது. இங்கே எல்லாமே நியதிப்படி இயங்குகிறது. விதியை வரைந்து அதன்படி வாழ்ந்து முடிப்பது வாழ்க்கையின் ஆதாரமாகிறது. இன்று பலனை அனுபவித்துவிட்டு அதற்கான வினையை நாளை விதைக்கவேண்டும். கமம் செய்வதை போல. கமத்திலும், இன்றைக்கு சமைக்கும் உருளைக்கிழங்கு கறிக்கு ஆறுமாதம் கழித்து தான் பயிர் நடுதல் வேண்டும் அல்லவா. இங்கே ஞாபகங்கள், பதிவுகள் எல்லாமே எதிர்காலம் சார்ந்தே இருக்கும். அதைவைத்து இறந்தகாலத்தில் என்ன நிகழ்ந்திருக்கலாம் என்ற ஊகங்கள் செய்யலாம். ஜோசியர்கள் சாதகம் குறிக்கலாம். அவ்வளவே.

இன்றைக்கு காதலிக்கு முத்தம் கொடுக்கிறோம் என்றால், நான்கு நாட்களுக்கு பின்னர் அவளிடம் காதலை சொல்லவேண்டும். காதலியை பார்க்கும் போது வாந்தி வருகிறதா? ஓங்கி கன்னத்தில் அறையவேண்டும் போல இருக்கிறதா? ஆனாலும் நாற்பது நாட்களுக்கு பின்னர் அவளை துரத்தி துரத்தி காதலித்தே ஆகவேண்டும். காலை எழுந்தவுடன், தலையிடி, ஊதினால் வாயில் கள்ளு குப்பென்று நாறுகிறதா? அடுத்தநாள் நண்பர்களுடன் குடித்து கும்மாளமிடவேண்டும். நமக்கு முன்னே இருக்கும் வாழ்க்கை மாத்திரமே நன்றாக தெரியுமே ஒழிய கடந்து போன வாழ்க்கை எதுவும் எமக்கு தெரிய சந்தர்ப்பமில்லை. ஆக நேற்று நடந்த சம்பவத்துக்கு தான் இன்றைக்கு ஏதோ செய்கிறோம் என்று புரியுமே ஒழிய, நேற்று என்ன நிகழ்ந்தது என்பதை சுத்தமாக மறந்துவிடுவோம். நேற்றை பற்றிய கனவுகளுடமும், நாளை பற்றிய நனைவிடை தோய்தல்களுடனும் வாழ்க்கை இங்கே வாழ்ந்து கழியும்.

***

நாகலிங்கம் தன் மனைவிக்காக நீண்டகாலம் காத்திருக்கவேண்டிய தேவை இருக்கவில்லை. கமலாதேவியும் எட்டு வருடங்களில் பூவோடும் பொட்டோடும் பிறந்துவிட்டாள். பிறந்தநாள் முதல் அவளுக்கு நிமோனியா காய்ச்சல் அலைக்கழித்துக்கொண்டிருந்தது. அது இழுத்தடித்து போய்ச்சேர இன்னமும் இருபது நாட்கள் எடுக்கும் என்று நாகலிங்கத்துக்கு தெரியும். வைத்தியசாலைக்கும் வீட்டுக்குமாய் கடந்த சிலநாட்களாய் நாயாய் நாகலிங்கம் அலைந்தார். காலையிலேயே கண்ணன் லொட்ஜில் இடியப்பம் பார்சல் வாங்கிக்கொண்டு போய், ஆஸ்பத்திரியில் வைத்து நாகலிங்கமும் கமலாதேவியும் சாப்பிடுவார்கள். நாகலிங்கம் ஒரு ஓய்வுபெற்ற வைத்தியராக இருந்ததால் எந்த நேரமும் கமலாதேவியை போய் வார்டில் சந்திக்கும் சௌகர்யம் இருந்தது. நட்பு காரணமாக சிறப்பாக வைத்தியர்கள் கமலாதேவியை கவனித்துக்கொண்டார்கள். அதனால் தானோ என்னவோ, பொதுவாக பிறந்து நான்கைந்து நாட்களில் மாறிவிடும் நிமோனியா நோய், கமலாதேவியை தேவையில்லாமல் நாட்கணக்காக இழுத்தடித்தது.

எட்டுவருடங்கள் கமலாதேவியை எதிர்பார்த்திருந்த ஏக்கத்தில், அவள் பிறந்தவுடனேயே, விட்டுப்பிரிய மனமில்லாமல் நாகலிங்கம் சதா ஆஸ்பத்திரியே கிடையாக கிடந்தார். அவள் முழித்திருக்கும் தருணங்களில் இருவரும் எதிர்காலத்தில் தாங்கள் செய்யப்போகும் விஷயங்களை நினைவுபடுத்தி சிரிப்பார்கள். இப்போது செடில் காட்டும் இஞ்சினியர் மகன் சுதாகர் இன்னும் நாப்பத்தைந்து வருஷத்தில் வயித்தில் இருப்பான், பின்னர் அவனை சந்திக்கவே மாட்டோம் என்று நாகலிங்கம் சொல்ல கமலாதேவி முகத்தில் கவலை படர்ந்தது. இருமினாள்.

“உனக்கு விசரே, அதுக்கு இன்னும் நாப்பத்தைந்து வரியம் இருக்கு, இப்ப யோசியாத”

என்று சொன்னவுடன் சிரித்தாள். ஒருநாள் அவள் கண்ணயர்ந்த சமயத்தில் ஞாயிறு வீரகேசரியை புரட்டினார். எட்டாம் பக்கத்தில் அவருடைய தொடர்கதை “நாளை நடந்த கொலை” எட்டாம் அத்தியாயம் வெளியாகி இருந்தது. “அடடா இந்த சனியனை வேறு ஒப்பேத்தி ஆசிரியருக்கு அனுப்பவேண்டுமே” என்று கதையை வாசிக்கத்தொடங்கினார். வாசிக்க வாசிக்க விழிகள் ஆச்சர்யத்தில் விரியத்தொடங்கின. “அட, இவ்வளவு டெக்னிக்கலாக எழுதியிருக்கிறோமோ, இந்த அத்தியாயத்தை இரண்டு நாளில எழுதி முடிக்கிறது சீவன் போற வேலையாயிற்றே” என்று அலுத்துக்கொண்டார்.

***

வருடங்கள் உருண்டோடின. நாகலிங்கத்துக்கு நாற்பத்தொரு வயசு ஆகியது. ஒரு மே மாதம் இருபதாம் திகதி அவர் அம்மா வர்ஷா பிறந்தார். வைத்தியராகையால் அம்மா பிறந்தபோது அருகிலேயே இருந்தார். அன்றைக்கு நாகலிங்கத்துக்கு சந்தோசம் தாங்கவில்லை. எல்லோருக்கும் சொக்கலேட் வாங்கிக்கொடுத்தார். Facebook இல் “அம்மா … நீ பெற்ற பிள்ளை, இங்கே நிக்குது பார் முல்லை” என்று ஸ்டேடஸோடு வயதான வர்ஷாவை கொஞ்சுவது போல படம் போட்டு டாக் பண்ணினார். என்ன கோபமோ தெரியாது கமலாதேவி தன்னை டாக் பண்ணவேண்டாம் என்று சொல்லிவிட்டாள். வர்ஷா பிறந்த நாள் முதலாய் கமலாதேவியின் நடவடிக்கைகள் கொஞ்சம் மாறத்தொடங்கியது. வர்ஷாவோடு தேவையில்லாமல் விரோதம் பாராட்டதொடங்கினாள். ஒரு நாள் பேசாமல் இருப்பார்கள். அடுத்தநாள் பயங்கரமாக சண்டை பிடிப்பார்கள். அதற்கு அடுத்தநாள் இருவருமே சேர்ந்து புடவைக்கடை போவார்கள். நாகலிங்கம் இவர்கள் சர்ச்சையில் பெரிதாக தலைபோடுவதில்லை. பத்து வருஷங்களுக்கு பிறகு இருவரும் காதலிக்கும்போது, அது அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்காமல் போகும், அம்மா வீட்டு வாசற்படி மிதிக்கமாட்டேன் என்று சபதம் இடுவாள் என்று அவருக்கு தெரிந்ததால் நடப்பது எல்லாமே விதிப்படி என்று பேசாமல் விட்டுவிட்டார்.

***

கமலாதேவி கர்ப்பமாக இருந்தபோதுதான் வர்ஷா நாகலிங்கம் வீட்டுக்கே முதன்முதலில் வந்தார். தனக்கு தெரியாமல் நாகலிங்கம் வேறுசாதிப்பெண்னை திருமணம் முடித்தது வர்ஷாவுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. அன்று முதல் அவர்களோடு பேசுவதையே விட்டுவிடுவாள். இன்றைக்கு கர்ப்பம் என்று கேள்விப்பட்டவுடன் இவர்கள் வீடு தேடி வந்திருக்கிறாள். எது இவர்களை இயக்குகிறது? இப்படி வரவைக்கிறது? பேரப்பிள்ளை எப்படி இருக்கும் என்றே தெரியப்போவதில்லை. ஆனாலும் ஏதோ ஒரு சக்தி இந்த பெண்களை இப்படி இழுக்கிறது என்று நினைத்துக்கொண்டார். “நாளைக்கு அம்மா வீட்டில் இருக்கமாட்ட .. இருக்கும் வரைக்கும் அந்த மனிசியை நன்றாக கவனி” என்று கமலாதேவிக்கு அவர் உத்தரவு போட்டார். இன்றைக்கு கவனித்தாலும் கமலாதேவியும் அம்மாவும் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் சண்டை பிடித்திருக்கலாம், எவன் கண்டான் என்றும் நினைத்துக்கொண்டார்.

***

நாகலிங்கத்துக்கு முப்பது வயது. அன்றைக்கு அவன் நாள் முழுதும் படபடப்பாக இருந்தான். கமலாதேவியும் தான். வீடு முழுதும் ஆட்கள் குறுக்கும் நெடுக்குமாக வந்து போய்க்கொண்டிருந்தனர். ஒரு சிலர் தகரக்கதிரைகளை அடுக்கி லாண்ட்மாஸ்டரில் ஏற்றுகின்றனர். சமையல்பாத்திரங்களை கிணற்றடியில் வைத்து பலர் கழுவிக்கொண்டிருந்தார்கள். பந்தல்காரன் ஒவ்வொரு அலங்காரமாக பிடுங்கிக்கொண்டிருந்தான். கமலாதேவி மெல்லிய கருநீல மைசூர்சில்க்கில் ஜொலித்தாள். கைகள் பூராக எட்டடுக்கு காப்புகள். நடுவில் கனடா மாமன்காரன் கொடுக்கப்போகும் பூட்டுகாப்பு மின்னியது. கழுத்தில் ஒன்பது பவுண் தாலி. தலையில் கனகாம்பரப்பூ கோர்த்திருந்தாள். நாகலிங்கம் பட்டுவேட்டி, மார்ட்டின் சேர்ட் போட்டு மேல் பட்டன் திறந்து விட்டிருந்தான். இரண்டிருக்கை கதிரையில் இரண்டு பக்கமும் குட்டி குஷன்கள் மினுங்க, நடுவில் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். கைகள் கோர்த்தபடி.

“மன்னிக்கோணும் டாக்குத்தர் நாளைக்கு உங்கட கலியாண வீட்ட வரமுடியேல்ல .. அதால தான் இண்டைக்கு வந்தனான் … எல்லாமே நல்லா நடக்குமா?”

கார்த்திக் மாமா “எல்லாமே நல்லா நடக்குமா?” என்று கேட்க நாகலிங்கம் கதிரைப்பின்பக்க பின்னல் ஓட்டை வழியாக கமலாதேவி இடுப்பை இஸ்க்கென்று நோண்டினான். “ஐயோ அம்மா” என்று திடுக்கென்று எழுந்தாள் கமலாதேவி. கார்த்திக் மாமா “என்ன பிள்ளை மூட்டையோ?” என்று கேட்டுவிட்டு மெதுவாக அண்மையில் பிறந்திருந்த மதுமிதா ஆச்சியை பார்க்கவென்று என்று நைசாக நழுவினார்.

“என்ன சேட்டை இது நாக்? ஆக்களுக்கு முன்னால…”

“மாமா கேட்டாரே .. எல்லாமே நல்லா நடக்குமா?… ஞாபகம் இருக்கா?”

“என்ன இருக்கா?”

“ஏய்… இண்டைக்கு எங்களுக்கு முதலிரவு .. ”

“தெரியும் தெரியும் .. ஏதோ புதுசா செய்யப்போற மாதிரி .. நாளைக்கு கலியாணம் … இவ்வளவு காலம் என்ன எல்லாம் பண்ணியிருப்பமோ ..”

“என்ன இருந்தாலும் முதலிரவு இஸ் டிஃபரேன்ட் … இல்லையா … என்ன எல்லாம் செய்யப்போறம் எண்டு யோசிச்சியா?”

“அதை நினைக்கத்தாண்டா டென்ஷனா இருக்கு … நாய் மாதிரி நிப்பாயேடா”

“விடுடி … இதாண்டி கடைசி இல்லையா … நாளைக்கு கலியாணம் .. அதுக்கு பிறகு ம்ஹூம் ஒண்ணுமே கிடையாதே?”

“ஆ .. நம்பிட்டோம் .. அப்ப இன்னும் ஐஞ்சு வருசத்தில மெடிக்கல் காம்ப் போவோமே? அங்க நடக்கப்போறதுக்கு பெயர் என்னவாம்?”

நாகலிங்கம் பதில் சொல்லமுதல் மறுவீட்டழைப்புக்காக கமலாதேவி வீட்டுக்காரர் காரில் வந்திறங்க, வீடு மீண்டும் அமளி துமளிப்பட்டது.

***

உயர்தர பரீட்சைக்காலம். அன்றைக்கு பௌதீகவியல் பரீட்சை நாள். பரீட்சை முடிந்து ஏதோ ஒரு டென்ஷனில் அவசர அவசரமாக நாகலிங்கம் கச்சேரி நல்லூர் ரோட்டில் சைக்கிள் மிதித்துக்கொண்டிருக்கும் போதுதான் “நாக் நில்லு … ” என்று பெண் குரல் கூப்பிடுவது கேட்டு திரும்பிப்பார்த்தான். கமலாதேவி. ஏசியா பைக்கில், சுண்டுக்குளி டை தோளுக்கு மேலால் போய் பின்பக்கம் விழுந்து கிடக்க, மூசி மூசி பெடல் மிதித்தபடி வந்தாள். ஸ்லோ பண்ணினான்.

“எக்ஸாம் முடிஞ்சா எனக்காக வெயிட் பண்ண மாட்டியா? ஒல் படிக்கேக்க மணித்தியால கணக்கா வந்து சுத்துவாய் தானே அப்ப பார்ப்பம்”

“அப்ப தான் இப்ப நடக்கிறது ஒண்டும் ஞாபகம் இருக்காதே!”

நாக் சிரித்தான். அவள் முகத்திலும் ஒரு சிரிப்பு தெரிந்தது. இலகுவில் இப்படி சிரிக்கமாட்டாள். இன்றைக்கு ஏதோ சந்தோஷத்தில் இருக்கவேண்டும்.

“எப்பிடி எக்ஸாம்?”

“நல்லா செய்திருக்கிறன் போல தான் கிடக்கு. எம்சீகியூ எல்லாம் மண்டைக்கேள்விகள் .. ஆனா எல்லாமே எங்களுக்கு தெரிஞ்ச கணக்குகள் .. அம்பத்தஞ்சு சரிவந்திருக்கும் எண்டு நினைக்கிறன் .. அம்பது வந்தாலே ‘ஏ’ தானே .. உனக்கெப்படி?”

“அதாண்டா .. தெரிஞ்ச கேள்விகள் .. ‘ஏ’ வந்திருக்கும் .. வந்திருந்தா எவ்வளவு நல்லம் .. இரண்டு பேருக்குமே மெடிகல் பஃகல்டி கிடைச்சிருக்கும் … எல்லாமே நல்லா நடந்திருந்தா .. நாங்க கலியாணம் கட்டி பிள்ளை எல்லாம் பெத்திருப்போம்டா.. ”

“அத நினைக்க தான் டென்ஷனா இருக்கு”

“என்ன சொல்லுற?”

“வாழ்க்கைல இது இது நடந்திருக்கும் எண்டு கனவு காணுறதுக்கு .. நிறைய உழைக்கோணுமே .. இப்ப பாரு .. எக்ஸாம் ஈஸியா போயிட்டுது .. இதுக்கு அடுத்த ரெண்டு வருஷம் மொங்கி மொங்கி படிக்கோணுமே?”

“படிப்போம்டா .. எங்கட இறந்தகாலம் நல்லா இருந்ததுக்காக எதிர்காலத்தை தியாகம் செய்யிறதில பிழையில்ல.. அதுவும் சேர்ந்து படிக்கபோறமே .. ஸோ ஒகே.. அதுவும் நீ எவ்வளவு யோக்கியன்! .. மூன்று வருஷத்தில ஒரு கிஸ் கூட குடுக்கமாட்டாய் .. அதான் எக்ஸாம் முடிஞ்சுதே .. இனி சதா படிப்பு தான் .. ஒருக்கா .. ஒரே ஒருக்கா ஒரு கிஸ் தந்தா குறைஞ்சிடுமா?”

“நோ வே .. அதெல்லாம் ரெண்டு பெரும் டொக்டரானா பிறகு குடுத்திருப்போம். இப்ப படிப்ப பார்ப்போம்”

“அரக்கன்டா நீ .. உன்னை கட்டி என்ன எல்லாம் கஷ்டப்பட்டேனோ!”

***

வருடங்கள் கழிந்தன. நாகுக்குட்டிக்கு இப்போது மூன்று வயது. வர்ஷா மடியில் இருந்து தவண்டு கொண்டிருந்தான். கொஞ்சும் மழலை தமிழில் “ஓடி விளையாடு பாப்பா” என்று அட்சரம் பிசகாமல் பாரதியார் பாட்டு பாடினான். இவன் இன்னமும் இரண்டு வருடங்களில் பேசமாட்டானே என்று நினைத்து கண் கலங்கினாள். “ஏனம்மா அழுறாய்? நான் வேணுமெண்டால் நேர்சரி ரைம் சொல்லட்டா?” என்று நாகுக்குட்டி கேட்க, வர்ஷா முகத்தில் கண்ணீர் வழிய “ஆராரோ .. ஆராரோ” என்று நூறாண்டு கழித்து வரப்போகின்ற Life of Pi பாடலை பாடினாள். மூன்று வருடங்களில் இவனை பார்க்கவே மாட்டோமே என்ற நினைப்பு வர தாங்கமுடியவில்லை அவளுக்கு. குரல் அடைத்தது.

***

அந்த மூன்று ஆண்டுகளும் விறுக்கென்று ஓடிவிட்டது. அந்த நாளும் வந்தது. ஐயா, நல்லை நாகலிங்கம், நாக், நாகுக்குட்டி என்றெல்லாம் வாழ்க்கை முழுதும் அழைக்கப்பட்ட நாகலிங்கம், வாழ்க்கையில் என்ன சாதித்தான் என்ற சுவடே தெரியாமல், அவன் விஞ்ஞானியா, மருத்துவனா, பஸ் ஓட்டுனரா? பைலட்டா, வெட்டியா? அவன் மனைவி யார், மகன் யார், மகள் யார் என்று எதுவுமே தெரியாமல் சக மனிதனோடு எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாதவனாக, குழந்தையோடு குழந்தையாய் சமத்துவத்தோடு இறந்த நாள். இந்த நாள். இந்த இடம்.

2042 மே மாதம். 25ம் திகதி, இடம் யாழ்ப்பாணம் சென்றல் நேர்சிங்கோம். பிரசவ விடுதி.

வீல் என்று பிரசவ வேதனையில் அலறினாள் வர்ஷா.

– ஏப்ரல் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *