நாற்பதிலும் ஆசை வரும்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2023
பார்வையிட்டோர்: 3,374 
 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உடம்பெல்லாம் ஒரே வலி. முதல் நாள் இரவில் என் மனைவி அப்படிச் சொல்லியதை நினைத்தபோது என் மீதே எனக்கு ‘சே’ என்று வந்தது. அப்படி என்ன சொல்லி விட்டாள்? ‘உங்களுக்கு வயசாகி விட்டது. இனிமெ இதெல்லாம் அடிக்கடி வச்சுக்கக் கூடாது.’ அவள் சொல்றது சரிதான், ஆனா ஆசை விடமாட்டேன் என்கிறதே என்று நினைத்துக் கொண்டே கடிகாரத்தைப் பார்த்தேன். 7.30 ஆகிவிட்டிருந்தது. ஐயோ நேரம் ஆகிவிட்டது. ‘சரி இங்க வா’ இதற்காகவே காத்திருந்தவளாய் ‘என்ன?’ என்ற போலிச்சலிப்போடு அருகே வந்தாள் என் மனைவி, அப்படியே அவளைக் கட்டிப்பிடித்து இரண்டு கன்னங் களிலும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்தேன். ‘போதும் புள்ளைங்க பாத்துடப்போறாங்க’, என்றாள். அவளைப் பிரிய மனமில்லாமல் பிரிந்து ‘பை…பை’ சொல்லிக்கொண்டே புறப்பட்டேன் அலுவலகத்திற்கு. ‘எல்லாம் மறக்காம எடுத்துக்கிட்டீங்களா?” வந்தனாவின் குரல் என்னை வந்தடைவதற்குள் கடைசிப்படிக்கட்டில் நான். வேகம் கூட்டினேன் நடையில். தினமும் லேட்டாகி விடுகிறது.

பேருந்து நிறுத்தத்தை அடைந்து நான் செல்ல வேண்டிய பேருந்துக்காகக் காத்திருக்கும் போதுதான் அந்த அழகு தேவதையைக் கண்டேன். அவள் மேல் விழுந்த என் பார்வையை அகற்ற நான் பிரயத்தனப் பட வேண்டியிருந்தது. அதை அவளும் கவனித்து இருக்கக்கூடும் என்பதே பின்னா ளில் என் கணிப்பு. அவளின் மாசுமருவற்ற அழகில் நான் மலைத்துதான் போய்விட்டேன்.

அவளைப் பதிவு செய்த என் மூளை தன்னுள் ஒத்த படிமங்களைத் தேடிச் சிலநினைவுகளைத் தூண்டியது. அவள் முகம் ம.செ. (மணியம் செல்வம்) யின் ஓவியத்தை நினைவூட்டியது. அவள் கண்கள் நான் ரசித்த நெல்லை ஜெயந்தாவின் ஒரு கவிதையை நினைவூட்டியது. இதோ அந்தக்கவிதை… ‘அவள் கண்களைப் பார்த்தால் மீன்கள். அவள் கண்களால் பார்த்தால் தூண்டில்’. மிகப் பொருத்த மான கவிதை. நான் ஏற வேண்டிய பேருந்து வந்தது.

அவளும் அதே பேருந்தில் ஏறிக் கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே. நான் அவளைப் பார்க்கத் தோதான இடத்தில் நின்று கொண்டேன். என் கண்கள் வேறு எங்காவது பார்ப்பது போல் பாசாங்கு செய்து விட்டு மீண்டும் மீண்டும் அவளைப் பார்ப்பதிலேயே குறியாய் இருந்தன. அவளின் கூந்தல் நீண்டநாகம் போல் தொடைவரை இருந்தது. மாநிறம். மிகைப்படுத்தப்படாத அழகு என்னை மயக்கிப் போட்டிருந்தது உண்மை.

நான் அவளைப் பார்க்கிறேன் என்பதை அவள் அறிவாள் என்றே என் உள்மனம் உரைத்தது. இரண்டு மூன்று நிறுத்தங்கள் தாண்டியதும் பயணிகள் கூட்டம் அதிகமாகி என் பார்வையிலிருந்து அவளைப் பாதுகாத்தார்கள். நான் இறங்க வேண்டிய நேரம் வந்ததும் இறங்கிப் பார்வையை ஓட்டினேன் கடைசியாய் ஒருமுறை பார்த்துவிடலாம் என்று. கூட்டம் அதிகமாக இருந்ததாலும் பேருந்து நகர்ந்து விட்டதாலும் அது முடியாமல் போனது. அலுவலகத்தில் பணிகளில் மூழ்கிப்போனதில் அந்த அழகுத் தேவதையை மறந்தே போய்விட்டேன்.

மறுநாள் காலை அதே பரபரப்பு. அதே மனைவி. அதே கட்டிப்பிடிப்பு. அதே முத்தம். அதே ஓட்டம். அதே பேருந்து நிறுத்தம். என்ன ஆச்சரியம் என் கண்முன்னே சற்று தூரத்தில் அதே அழகுத் தேவதை. அதுவரை இல்லாத சுவாரஸ்யம் எனக்குள் வந்து ஏறிக்கொண்டது. கூடவே குற்ற உணர்வும்தான். கல்யாணமாகி புள்ளகுட்டிக்காரனான எனக்கு இதெல்லாம் தேவையா? அவள் அருகே வந்தாள். நான் மீண்டும் பார்த்தேன். இம்முறை அவள் மெலிதாகப் புன்னகைத்தாள். என் மனசுக்குள் மத்தாப்பூ பூக்க நானும் சற்று குறைவாகப் புன்னகைத்துவிட்டு யோக்கியன் போல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். எங்கே சட்டையைப் பிடித்து ஏதாவது கேட்டுவிடுவாளோ என்று பயம் வேறு. இன்று ஒழுங்காக இருக்க வேண்டும். என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன். அவள் பக்கம் திரும்பவேயில்லை. பேருந்து வந்தது. ஏறிக்கொண்டேன். சற்று நேரமானதும் ஓர் உள்மன உறுத்தல்- ‘யாரோ என்னைப் பார்க்கிறார்கள் என்று’ நிமிர்ந்தேன். எனக்கு எதிர் வரிசையில் அந்த அழகுத் தேவதை என்னையே பார்த்துக்கொண்டு, எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. பார்வையைத் திருப்பி வேறு எங்கோ பார்த்து விட்டுத் திரும்பியபோது அவள் என்னையே வைத்த கண் மாறாது பார்த்துக்கொண்டிருந்தாள். எனக்குச் சந்தோஷமான அவஸ்தையாக இருந்தது. மீண்டும் உள்மன உறுத்தல். அதை உறுதிப்படுத்தியது அவளின் தொடர்ந்த பார்வை. இம்முறை நான் கொஞ்சம் தைரியத்தை வர வழைத்துக்கொண்டு அவள் கண்களைச் சந்தித்தன என் கண்கள். அவள் மிக அழுத்தமானவளாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் அப்படி ஒரு நிலைகுத்தலான பார்வை, அதுவும் ஒரு அறிமுகமில்லாத ஆணைப் பார்ப் பாளா? நான்தான் கடைசியில் பார்வையைத் தளர்த்திக் கொள்ள வேண்டியதாயிற்று. அன்று பணியின் இடையிடை யே அவளின் கண்களும், நான் ஏதோ தவறு செய்கிறேனோ என்ற எண்ணமும் வந்து வந்து துன்புறுத்திக் கொண்டேயிருந்தன.

மாலை வீடு திரும்பியதும் அந்த நினைப்பு என்னைப் பாடாய்ப் படுத்தியது. மனைவியிடம் எதையும் பகிர்ந்து கொள்கிற என்னால் இந்த விஷயத்தைச் சொல்லமுடிய வில்லை. சொன்னால் ரகளை பண்ணிவிடுவாள். அடுத்த நாள் காலை எப்போது வரும் என ஏங்க ஆரம்பித்தது மனசு. விடிந்ததும் சுறுசுறுப்பானேன். எனக்குப் பிடித்த உடை யாகப் பார்த்து உடுத்திக்கொண்டேன். காதோரம் எட்டிப் பார்த்த நரைக்குக் கண்மை எடுத்துப் பூசிக்கொண்டேன். ‘சரி

வரட்டுமா?’ கேட்டுக்கொண்டே புறப்பட்டேன். ‘என்ன இன்னிக்கு ஒன்னும் இல்லியா?’ வந்தனாவின் ஏக்கம் வார்த்தைகளாக வந்தது. ‘சாரி மறந்துட்டேன்’ என்று அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் தந்துவிட்டுப் பறந்தேன். பஸ் நிறுத்தத்தில் அவள் வந்திருக்கவில்லை. இரண்டு பேருந்துகளைத் தவற விட்ட பிறகே வந்தாள். என் மனசுக்குள் பட்டாம் பூச்சி சிறகடித்தது. அன்றைய நாள் பார்வைப் பரிமாற்றங்களோடு சுகமாகக் கழிந்தது,

பல கேள்விகள், ஊகங்கள் எனக்குள். இவள் யார்? வேலைக்குச் செல்கிற இந்தியப்பெண். என்ன வயது இருப் பாள்? 30 மதிக்கலாம். திருமணமானவளா, எனக்குள் எப்படி அவள் மீது ஒரு ‘இது’ ஏற்பட்டது? இதே தவிப்பு அவளுக்கும் இருந்திருக்குமா? ‘இருந்திருக்க வேண்டும்’ என்று என் உள்ளுணர்வு சொல்லியது. என்னை அவளுக்குத் தெரியுமா? என்னைப்பற்றி என்ன நினைப்பாள்? நாற்பதைக் கடந்த எனக்கு ஏன் இப்படி எண்ணம் போகிறது? நான் பதின்ம வயதில் இருந்தால் இதனைக் ‘காதல்’ என்றே வகைப் படுத்தியிருப்பேன். இதனை என்னவென்பேன்? இப்படியே விட்டுவிடலாமா? கட்டுப்பாடு இல்லாமல் காமத்தின் வலைக்குள் விழுந்து கொண்டிருக்கிறேனா? இப்படி விடை தெரியாத வினாக்களோடு சில நாட்கள் கழிந்தன. ஆனால் அந்த நாட்களில் அவளைப் பார்ப்பதில் ஒன்றும் குறை வைக்கவில்லை. அதில் கிடைக்கிற ஒரு சுகமான இன்பம், எதிர்பார்ப்பு எதையும் எளிதாக விட்டுவிட முடியவில்லை. தவறு எனத் தெரிந்தும் அதை விட்டுவிட முடியாமல் அதில் திளைத்துக்கொண்டிருந்த போதுதான் அது நடந்தது. அன்று வாரக் கடைசி நாள் வெள்ளிக்கிழமை. அலுவலகத் திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் என் முன்னே கார் ஒன்று நின்றது. வேறு யாருமல்ல, இவள் இவ ளேதான். ‘ஏறிக்கொள்ளுங்கள். அங் மோ கியோ தானே, நான் டிராப் செய்கிறேன்’ என்றாள். நான் தயங்கினேன். ‘பயப்படாதீர்கள். உங்களைக் கடத்திப் போய்விடமாட்டேன்’ என்றாள். அவள் குரலும் அவளைப் போலவே இனிமையாகவே இருந்தது. நன்றி சொல்லிக் கொண்டே ஏறிக்கொண்டேன். கார் பறந்தது.

“உங்களைப் பேருந்தில் பார்த்திருக்கிறேன்” என்றேன் நான்.

“ஆமாம், நன்றாகவே பார்த்திருக்கிறீர்கள்” என்று கண்ணடித்துச் சிரித்தாள். எனக்குள் இனம் தெறியாத ஒரு படபடப்பு தொற்றியிருந்தது.

“நான் கணேஷ், கணிணி துறையில் பணியாற்றுகிறேன்” எனது சுருக்கமான அறிமுகத்தை அக்கறையோடு கேட்டுக் கொண்டாள்.

பதிலுக்கு அவளும் “நான் மோகனா. சேல்சில் இருக்கிறேன். சிங்கிள், இப்போது இந்தப்பகுதிக்கு வீடு மாற்றிக்கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்லி என்னைப் பார்த்தாள். பார்த்தாள் என்பதைவிட கண்களால் என்னை ஆராய்ந்தாள் என்பதே பொருத்தமாய் இருக்கும்.

அவள் பதிலில் இருந்த ‘சிங்கிள்’ எனக்குள் தன்னை அடிக்கோடிட்டுக் கொண்டது.

“நீங்கள் நன்றாக டிரைவ் செய்கிறீர்கள். பின்னே ஏன்…” என்று இழுத்தேன்.

“அதுவா, காடி வாங்கிவிட்டேன் ஒரு ஆசையில், பேருந்தே எனக்கு வசதியாக இருக்கிறது எப்போதாவது வெளி வேலைகள் இருந்தால் காடியை எடுப்பேன்” என்றாள்.

“நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்”

“அப்படியா… நன்றி” என்றாள்.

“ஏன் திருமணம்…” நான் முடிக்காமல் அவளைப் பார்த்தேன்.

“நேரம் கிடைக்கவில்லை” என்று சொல்லி சிரித்தாள். சிரித்தபோது அவள் கன்னங்களில் குழி விழுந்ததை ரசித்தேன்.

“நாளை விடுமுறைதானே?” என்றாள்.

“ம். எதற்காக?” என்றேன் நான்

“ஃபிரீயாக இருந்தால் மதியம் எங்க வீட்டுக்கு வாங்களேன். உங்களுக்கு விருந்து வைக்கிறேன்” அவளின் அழைப்புக் கெஞ்சலாக வந்தது.

எனக்குள் ஆயிரம் நீரூற்றுக்கள் பீய்ச்சி அடித்தன. நான் இன்ப அதிர்ச்சிக்குள்ளானதால் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் இருந்தேன்’ “என்ன யோசனை?” என்றாள்.

“இல்லை, வேலை ஏதாவது இருக்கிறதா என யோசிக்கிறேன்.”

“இந்தாருங்கள்” என்று அவள் முகவரி அட்டையை நீட்டினாள். வாங்கிக்கொண்டேன். அந்த அந்த அட்டை அவளைப் போலவே அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. முன்புறம் ஓர் ஒற்றை ரோஜா, அதன் கீழே ‘வித் லவ் மோகனா’ என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. பின்புறம் முகவரி இருந்தது. வீட்டுக்குச்சற்று முன்னே இறங்கிக் கொள்ள வேண்டும் என நினைத்திருந்ததால் சீக்கிரமே ‘சரி நான் இறங்கிக் கொள்கிறேன்’ என்றேன்.

“ஓ… உங்கள் வீடு வந்துவிட்டதா” என்று கேட்டுக் கொண்டே ஓரமாக வண்டியை நிறுத்தினாள். நான் இறங்கிக்கொண்டு ‘பை’ என்றேன். “ஓகே, பை, நாளை உங்களை எதிர்பார்ப்பேன்” என்று சிரித்தாள். அவள் கண்களும் என்ன அழைத்தன.

நான் அப்போது ஒருவித மயக்கத்தில் இருந்தேன் என்று சொன்னால் அது சற்றும் மிகையாகாது.

அந்தச் சனிக்கிழமை பல எதிர்பார்ப்புகளோடு விடிந்தது. மோகனா சொன்ன ‘விருந்து’ பற்றியே மனம் சுற்றிக்கொண்டிருந்தது. கைத்தொலைபேசி சிணுங்கியது. அலுவலகத்திலிருந்து அழைப்பு. நல்லவேளை வெளியில் செல்ல ஒரு காரணம் கிடைத்துவிட்டது என நினைத்துக் கொண்டேன் வேலையை முடித்து வரும் போது மோகனா வீட்டுக்குப் போய்விட்டு விருந்து முடித்து வந்துவிடலாம்.

“வந்தனா, நான் ஆபீஸ் போறேன். மதியச் சாப்பாட் டுக்கு எனக்காகக் காத்திருக்க வேண்டாம். நான் வெளியே சாப்பிட்டுக்கொள்கிறேன்” சொல்லிவிட்டுக் கிளம்பினேன். ஆபீஸ் வந்து என் வேலைகளைச் சுறுசுறுப்பாக முடித்தேன். மெய்ல் பார்த்துக்கொண்டிருந்தபோது யாகூ மெசெஞ்சரில் யாரோ செய்தி அனுப்பியிருந்தார்கள். யார் எனப் பார்த்தேன்.

மோகனா: ‘நான் மோகனா’ ஹாய்

ஒன்றும் புரியாமல் நானும் உரையாடலைத் தொடர்ந்தேன்.

நான்: ஹாய்

மோகனா: நான் உங்களோடு சற்று உரையாடலாமா?

நான்: உரையாடலாம்.

மோகனா: நான் உங்களை விரும்புகிறேன்

நான்: ம்.

மோகனா: நான் உங்களைத் திருமணம் செய்து கொள்ளலாமா?

நான்: முடியாது!

மோகனா: ஏன்?

நான்: நான் ஏற்கனவே திருமணமானவன். எனக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

மோகனா: அப்பா நீங்கள் பாஸ்…!

நான்: யாரது?

மோகனா: அப்பா, நாந்தான் உங்க மகள் சுமதி, உங்களோடு சும்மா விளையாடினேன். ராத்திரி உங்க சட்டைப் பையில் ஒரு கார்டு பார்த்தேன். அதில் ‘வித் லவ் மோகனா’ என்று இருந்தது. யாகூ மெசெஞ்சரில் மோகனா என்று ஐடி கிரியேட் செய்து உங்களுக்கு ஒரு பரிட்சை வைத்தேன். அதில் நீங்க பாசாயிட்டீங்க. ‘நல்ல அப்பா’ என்று அம்மாவிடம் உங்களுக்கு சர்டிஃபிகேட் கொடுக்கிறேன். ஓகே பை. பை.

அப்பாடா, எனக்கு எல்லாம் புரிந்தது. எனக்குள் புயலடித்து ஓய்ந்த அமைதி. என் பதினாலு வயது மகளின் விளையாட்டில் எனக்குள் ஒரு தெளிவு பிறந்திருப்பது புரிந்தது. நான் செய்வது தவறு என்று தெரிந்தும் பெண் சபலத்தின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாக இருந்த என்னை என் மகளின் விளையாட்டு அறிவுறுத்திவிட்டது.

சபல எண்ணங்களைத் தூக்கிப்போட்டு விட்டு ‘நல்ல அப்பாவாக’ இருக்க முடிவு செய்து கொண்டேன். போனில் என் மகளிடம் மதியம் சாப்பிட வருவதாக அவள் அம்மாவிடம் சொல்லச் சொல்லிவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டேன்.

– தமிழ் முரசு, புன்னகைக்கும் இயந்திரங்கள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2008, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

புன்னகைக்கும் இயந்திரங்கள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2008, மணிமேகலைப் பிரசுரம், சென்னை. இந்நூலாசிரியர் திரு.இராம.வைரவன் தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் பிறந்தவர். இவரின் பெற்றோர் இராமநாதன் செட்டியார், நாச்சம்மை ஆச்சி. சிங்கப்பூரில் 10 ஆண்டுகளாகக் கணினி துறையில் பணியாற்றி வருகிறார். இது இவரின் முதல் சிறுகதைத் தொகுதி. எழுத்துலகம் சிறுகதை, கவிதை என விரிகிறது. படைப்புகள் இணைய இதழ்களிலும், சிங்கை, பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவரது க கவிதைகளும் பல பரிசுகளை வென்றுள்ள…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *