இப்பவெல்லாம் அந்த வீட்டில் வைத்த சாமான்கள் வைத்த இடத்தில் உள்ள ஒழுங்கும் எவர்சில்வர் பாத்திரமெல்லாம் கண்ணாடி போலப் பளபளப்பாயிருக்கிறதும் அஞ்சலை வந்த பிறகு தான்.
அஞ்சலையிடம் விமலாவுக்கு ரொம்ம நாளாகவே ஒரு கண். அதனால் தான், மானேஜர் வீட்டைவிட்டு அவள் வந்ததும் உடனடியாகச் சம்பளத்தில் ஒரு ஐந்து ரூபாயை ஏற்றிக் கொடுத்து வேலைக்கு வைத்துக் கொண்டாள். வேலையில் அத்தனை சுத்தம் அஞ்சலை!
அதுமட்டுமல்ல… “ஆமாம்; அந்த மானேஜர் பொஞ்சாதி இருக்கே… கொண்டைப் பூவும், குதிகால் செருப்பும், பொட்டை அதிகாரமும்… நாலு பருப்பிலே நானுhறு பேருக்கு சாம்பார் வச்சிடும்! அட்டக்கருமி…” என்று நீட்டி முழக்கி அவள் பேசும் பொழுது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
அந்த வட்டாரத்திலே அஞ்சலை வாயிலே புகுந்து புறப்படாதவர்களே கிடையாது! ஒட்டுமொத்தமாக ஒவ்வொருத்தர் கருமித்தனத்தையும் சொல்லிக்காட்டாமல் இருந்ததில்லை.
முன் ஜாக்கிரதையாக விமலா, அஞ்சலை நம்மையும் அப்படிச் சொல்லிவிடக் கூடாதே என்று பஞ்சமில்லாமல் சோறும், கறியும் தந்து, பணவிஷயத்திலும் தாராளமாகவே இருந்தாள்.
ஒரு நாள் மாலை.
விமலாவும், ரகுவும் ‘ஷாப்பிங்’ சென்றார்கள். அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், அஞ்சலை யாரிடமோ கதை அளந்துகொண்டிருந்தாள்.
“ஏண்டி அஞ்சலை, உன்னைக் கண்ணிலேயே காணோமே… உன் புது எஜமானி எப்படி?”
“அதேயேன் கேட்கிறே… பட்டணத்திலே பி.ஏ. படிச்சிட்டா போதுமா? ஆத்திலே போட்டாலும் அளந்து போடுன்னு சொல்வாங்க. ஏதோ அந்த மனுஷன் ஓவர்டைம் அது, இதுன்ன உயிரை விட்டு சம்பாதிச்சு என்ன… இந்தப் பொண்ணு அளவில்லாமல் அள்ளி என் தலையில் கொட்டறா ஒரு கணக்கு வழக்கு இல்லைன்னா அந்தக்குடும்பம் என்னத்துக்கு ஆகும்? அந்த பொண்ணுக்குக் கட்டு, செட்டே தெரியலை… பின்னால ரொம்பக் கஷ்டப்படும்!”
அஞ்சலையின் பேச்சைக்கேட்ட விமலாவுக்கு சர்வநாடியும் ஒடுங்கியது.
சிலவற்றை நிமிர்த்த முடியாது என்ற உண்மை அப்பொழுதுதான் புரிந்தது அவளுக்கு.
– 14-07-1985