கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 16,477 
 
 

வாயின் இரண்டு ஓரங்களில் இருந்தும் வெள்ளி நூல் போல, சேகருக்கு சதா எச்சில் ஒழுகியபடியே இருந்தது. வீட்டில் இருந்து கிளம்பும்போதே உடலில் சின்னதாக ஓர் அரிப்பை உணர்ந்தான். உடல் முழுக்க அந்த அரிப்பின் அடையாளமாகச் சிறிது சிறிதாகத் தடிப்புகள் முளைத்தன. ரெஜிஸ்ட்டரில் கையெழுத்து போட்டுவிட்டு உடை மாற்றிக்கொண்டவனுக்கு, நேற்று ஒரு நாயைப் பிடிக்கும்போது அது பிராண்டிவைத்ததில் பிய்ந்துபோன தன் கால்சட்டை பட்டனின் நினைவு இப்போதுதான் வந்தது. கால்சட்டை, இடையில் நிற்கவில்லை. ஊக்கை மாட்டிச் சமாளித்தான். நா வறண்டு தாகம் எடுத்தது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அடங்காத தாகம்.

முதலில் இதைச் சாதாரணமாகத்தான் நினைத்திருந்தான். ஒரு வாரத்துக்கு முன்பு மேயரைப் பார்த்து மனு கொடுப்பதற்காகச் சென்றிருந்தார்கள். வழக்கத்துக்கு மாறாகத் தொண்டை வறண்டு கடுமையான தாகம் ஏற்பட்டதுடன் நாக்கும் வறண்டது. தொடர்ந்து நான்கு வார்த்தைகள்கூட பேச முடியவில்லை. அவனுடன் வந்த மாரிதான் சமாளித்துப் பேசிக்கொண்டிருந்தான். எப்படியும் தன் வேலை நிரந்தரமாகிவிடும் என்ற நம்பிக்கையோடு சேகர் இந்த வேலைக்குச் சேர்ந்து இது எட்டாவது வருடம். ஒவ்வொரு தேர்தல் முடியும்போதும் புதிய மேயரைச் சந்தித்து, அவன் மனு கொடுப்பான்.

ஒரு கோடி பேருக்குப் பக்கமாக மனிதர்கள் வசிக்கும் இந்த மாநகரில் நாய்களுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால், அந்த நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், சரியான நேரத்தில் ஊசிபோட்டு வெறி ஏறாமல் பார்த்துக்கொள்ளவும் இருக்கும் நாய் பிடிக்கிறவர்கள் மொத்தம்

30 பேர்தான். அதிலும் 15 பேரைத் தவிர்த்து மற்றவர்கள் தற்காலிகப் பணியாளர்கள். நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் சம்பளத்தில் குறைந்தபட்சம் 15 நாய்களைப் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் வேறு. ‘நாய் பிழைப்பு’ என விளையாட்டாகக்கூட அவன் தன் வேலைகுறித்து பேச மாட்டான். பகல் முழுக்க நாய்களின் சத்தத்தோடும் அலறலோடும் கழிவதால், இரவில் எந்தச் சத்தம் கேட்டாலும் நாய் ஓலமாகவே எதிரொலிக்கும்.

சேகருக்கு வேலை நேரத்திலும் குழந்தை நினைப்புதான். தனக்கு குழந்தை இல்லை என்பதால், பார்க்கிற எல்லா குழந்தைகளிலும், தன் குழந்தைக்கான சாயலைத் தேடினான். ‘வூட்டுக்காரியைத் தாஜா பண்ணி புள்ள பெத்துக்கடா… ஊர்ல இருக்க புள்ளைங்களுக்கு எல்லாம் பொற வாங்கிக் குடுத்துனு இருக்க! இன்னா ஆளுடா நீ?’ – பழனியும் மாரியும் டபாய்க்கும்போது வெகுளியாகச் சிரித்துச் சமாளிப்பான். குழந்தை வேண்டும், அதற்காக தன் மனைவியைச் சிரமப்படுத்தக் கூடாது என்பதால், மல்லிகாவே சம்மதிக்கும் வரை காத்திருப்பது என உறுதியோடு இருக்கிறான். கார்ப்பரேஷனில் வேலை செய்வதாகச் சொல்லித்தான் சேகருக்கு அவளைத் திருமணம் செய்துவைத்தார்கள். எதிர்பார்ப்புகளின் எந்தச் சுவடுகளும் இல்லாது இவனோடு வந்தவள், இயல்பில் யாருடனும் அதிகம் பேசாத இவனையும், எல்லோரையும்போல் சிரித்துப் பேசிக் கலகலப்பாக்கினாள். அவள் முன்னால் சந்தோஷமாகச் சிரிக்கும் ஒவ்வொரு நொடியும் அவளை ஏமாற்றுகிறமோ என்ற குற்றவுணர்ச்சி எழ, சில நாட்களுக்குப் பின் சேகரே அவளிடம் நிஜத்தைச் சொல்லிவிட்டான்.

”கார்ப்பரேஷன்லதான் வேலை பாக்கிறேன் மல்லிகா. ஆனா, நாய் புடிக்கிற வேலை. இன்னும் பெர்மனென்ட்கூட ஆகல. எப்பிடியும் இந்த வருஷம் ஆக்கிடுவாங்க.”

”நீ என்ன சொல்றனு புரியல.”

அவன் விளையாட்டுக்குச் சொல்லக்கூடும் என நினைத்தாள். ஆனால் விளையாட்டுத்தனமாக எதையுமே பேசத் தெரியாதவன் சேகர். கைகள் தடுமாற, கண்கள் ஓரிடத்தில் நிலைகொள்ள முடியாமல் அலைந்தன. சொல்லப்படாது அடைத்துவைக்கப்படும் உண்மை, ஒரு மனிதனுக்குள் ஏற்படுத்தும் குற்றவுணர்ச்சியை எதிர்கொள்ளும் திராணி இல்லை அவனிடம். மல்லிகா முதல் தடவையாக தன் வாழ்க்கையில் நாய் பிடிக்கும் ஒருவனை எதிர்கொண்டபோது, அவன் யாரோ ஒருவன் என்பது இல்லாமல் தன் கணவனாக இருந்ததற்காகச் சங்கடப்பட்டாள்.

‘ஏன்டா நாயே… குடும்பத்தோடு சேர்ந்து ஏமாத்துனீங்க?’ – சேகர் முகத்திலும் மார்பிலும் அடித்துக் கேட்க வேண்டும் எனக் கைகள் பரபரத்தன. அடக்கிக்கொண்டு அவனையே பார்த்தாள். ‘மனிதனுக்கு எத்தனை நெருக்கமாக இருந்தாலும், நாய் ஒரு மிருகம். சதா நாய்களுடனேயே வாழும் இவனுக்குள்ளும் அந்த மிருக உணர்ச்சிதான் அதிகமாக இருக்குமோ..!’ என அவளுக்குச் சந்தேகம் எழுந்தது. அதுவரையிலுமான அவனது எல்லா செயல்களையும் இப்போது சந்தேகத்துடன் யோசித்துப்பார்த்தாள்.

”நாய் பிடிக்கிற வேலையா? நாயைப் பிடிச்சு என்ன செய்வீங்க… அடிச்சுக் கொல்வீங்களா?”

”இல்லை. நாய்ங்களுக்கு வெறி பிடிக்காம இருக்க ஊசி போடுவோம். அப்புறம் கருத்தடை ஆபரேஷன் பண்ணிட்டு, மூணு நாள் வெச்சிருந்துட்டு, எந்த ஏரியாவுல புடிச்சோமோ அங்கேயே கொண்டுபோயி விட்டுருவோம்!”

தனக்குள் எழும் கோபத்தை என்ன செய்வது எனத் தெரியாமல் வெறுப்போடு வேறு பக்கமாகத் திரும்பிக்கொண்ட மல்லிகாவின் முகம் மாறியது.

”இதை ஏன் முன்னாலயே சொல்லலை?”

அது கேவலமான அல்லது வெளியில் சொல்லத்தகுந்த ஒரு வேலை அல்ல என்பதை, எல்லோரையும் போலவே அவளும் அப்போது நினைத்தாள்.

”நான் சொல்லணும்னுதான் நெனச்சேன். வீட்ல இருக்கிறவங்கதான் விடலை. மன்னிச்சுக்கோம்மா.”

சேகர் அப்போதைய சூழலில் அவளின் காலில் விழுந்தாலும் தப்பு இல்லை என நினைத்தான். மல்லிகாவுக்கு அவன் அருகில் இருக்கவே கசந்தது. அவனைவிட்டு எங்கும் போகவும் நாதி இல்லை. பிறந்த வீட்டுக்குப் பல காலமாகவே வேண்டாதவளாக இருந்தவள். குறைந்தபட்சம் இங்கு இருக்கும் இந்தத் தனிமை போதும் என நினைத்துக்கொண்டாள்.

சில நாட்கள் கோபத்தில் பேசாமல் விலகி இருந்தவளுக்கு, நாய் பிடிக்கும் அவனது வெவ்வேறான பிம்பம் புதிரான ஆசைகளை உருவாக்கியது. நாள் ஒன்றுக்கு 15 நாய்களைப் பிடிக்கிறான் எனத் தெரிந்ததும், நாயை எப்படிப் பிடிப்பார்கள் எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்துவிட்டது. மெலிந்த அவன் உடலில் ரகசியமாக மிருகங்களின் பாவங்களைத் தேடத் தொடங்கினாள். சேகர் எல்லோரையும்போல இயல்பாக இருக்க முடியும் என்பதை அவளால் நம்பியிருக்க முடியவில்லை.

”நீ நாய் பிடிக்கிறதைப் பாக்கணும். ஒரு நா என்னியக் கூட்டினு போறியா?” – தயக்கத்தோடு மல்லிகா அவனிடம் கேட்டாள். அவனுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. மறுக்க முடியாமல் அடுத்த நாள் காலையில் கூட்டிப்போவதாகச் சொன்னான்.

அதிகாலையில் வீட்டில் இருந்து கிளம்பியவன், அவளிடம் நான் கூப்பிடும்போது வந்தால் போதும் எனச் சொல்லியிருந்தான். காலை எட்டு மணிவாக்கில் யுத்தம் ஒன்றைப் பார்க்கப்போகும் ஆர்வத்துடன் போனாள். சூளைமேடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நெல்சன்மாணிக்கம் சாலையோடு சேரும் வீதியில், மஞ்சள் நிற வேன் ஒன்று நின்றது. அதுதான் அவன் சொன்ன அடையாளம். சேகரைத் தேடினாள். எதிரில் இருக்கும் டீக்கடையில் அவனும் அவனது சகாவும் தேநீர்க் குடித்துவிட்டுப் பேசிக்கொண்டிருந்தனர். இருவர் கையிலும் மெல்லிசான நீண்ட சுருக்குக் கயிறுகள் மட்டும் இருந்தன. ‘இதைவைத்து எப்படி நாயைப் பிடிப்பார்கள்?’ என அவளுக்கு ஆச்சர்யம். சேகர் இவளைக் கவனித்துச் சிரித்தான். சாலையைக் கடக்க முற்பட்டவளை, அங்கு இருந்தே பார்க்கும்படி சைகை செய்தான்.

சேகரும் அவன் சகாவும் இயல்பாக நடந்துபோவதுபோல் ஒரு நாயைத் தொடர்ந்து சென்றனர். சேகர் முன்னாலும் மற்றவன் பின்னாலுமாக நடக்க, தன் கையில் இருந்த சுருக்கை நாயின் கழுத்தில் தூக்கிப்போட்டான் சேகர். அதுவரையிலும் இயல்பாக ஓடிய நாய், சடாரெனச் சுதாரித்து உடலை உசுப்பி ஒரு துள்ளு துள்ளியது. தன்னைக் காப்பாற்றச் சொல்லி தெருவில் போவோர் வருவோரை எல்லாம் பார்த்து மன்றாடியது. பின்னால் வந்தவன் லாகவமாக அதன் கால்களைப் பிடித்துத் தூக்க, நாயின் கழுத்தை அசையாதபடி பிடித்துத் தூக்கிக்கொண்டுபோய் வேனில் போட்டான் சேகர். அந்த வீதியில் இருந்த எல்லோரும், சில நொடிகள் அவர்கள் இருவரையும் அருவருப்பான ஜந்துக்களாகவே பார்த்தனர். மல்லிகாவுக்கு அவனிடம் நெருங்கிப்போய் பேசவேண்டும் என இருந்த விருப்பம் போய், அங்கு இருந்து தப்பித்து ஓடினால் போதும் என்றாகிவிட்டது. சுருக்கு மாட்டப்பட்ட நாய் தான்தானோ என்கிற வலி மல்லிகாவுக்கு. வேகவேகமாக ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நடந்தாள். இதை முன்பே எதிர்பார்த்திருந்ததால், சேகர் அவளை நிறுத்த முயற்சிக்கவில்லை.

சேகர் நாய் பிடிக்கிறவன் என்பது அவள் குடும்பத்துக்குத் தெரியவந்தபோது, அவனோடு சேர்த்து இவளையும் தவிர்க்கவே நினைத்தார்கள். அவர்கள் பார்வைகளில் இருந்த அருவருப்பு சகித்துக்கொள்ள முடியாத குமட்டலைத் தந்தது. யாரோ சிலர் எப்போதும் தன்னைக் கேலி செய்துகொண்டிருக்கிற வலியும் சந்தேகமும் அவளுக்குள் எழ, அந்த உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக, அவனிடம் இருந்து மல்லிகாவுக்குள் ஓர் இடைவெளியை உருவாக்கியது. தனக்குள் வெறுமை நீண்ட சுவரென வளர்ந்துகொண்டிருந்ததைக் காட்டிக்கொள்ளாமல், தன்னை இயல்பாக வைத்துக்கொள்ள சிரமப்பட்டாள். தன் மீதான கோபம் தீரும் நாளில் அவள் இயல்பாகிவிடுவாள் என நம்பியிருந்த சேகர், கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்தான். குழந்தை பற்றின பேச்சு வரும்போது அவள் முன்பைவிடவும் இறுக்கமாகிவிடுவாள்.

”எல்லாரும் கேக்கிறாங்க மல்லிகா… ‘இன்னாடா புள்ள பெத்துக்கிற ஐடியா இருக்கா… இல்லியா?’னு இதாச்சும் பரவாயில்லை. நான் டொக்காயிட்டேன்னு ஆபீஸ்ல முதுகுக்குப் பின்னால பேசிச் சிரிக்கிறாங்க. அசிங்கமா இருக்கு” – தயங்கித் தயங்கிச் சொன்னவனை, முறைத்தாள்.

”உனக்கு வர்ற துட்ட வெச்சுக்கினு கொழந்தைய எப்படி வளர்க்கிறது? இன்னும் கொஞ்ச நாள் போவட்டும்.’

அப்போதைக்குச் சமாதானம் சொன்னாலும் இவனுக்காக ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள் வதில் அவளுக்கு மனம் ஒப்பவில்லை. தன்னை நன்றாகத்தான் பார்த்துக்கொள்கிறான். ஆனாலும் சந்தோஷமாக இருக்க முடியவில்லையே என நினைக்கும்போது, சமயங்களில் அவளுக்கே வருத்தமாகக்கூட இருக்கும். கரிசனத்தோடு பார்த்துக்கொள்ளும் அவன் மீது நேசம் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு தினமும் எத்தனை பேரைப் பாதுகாப்பதற்காகத் தன்னைப் பணயம் வைக்கிறான் என நினைத்தபோது, அவன் மீது பெரிய மரியாதை வந்தது மல்லிகாவுக்கு. அவன் உடலில் இருக்கும் காயங்களைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும்.

”சொம்மா புள்ள வோணும் வோணும்னு சொல்லினே இருக்கல்ல. போ… போயி ஆளுங்களைப் பாத்து, துட்டு எதுனா குடுத்துனாலும் பெர்மனென்ட் ஆவறதுக்குப் பாரு.”

”நானும் ஆளுங்களைப் பாத்துனுதான் மல்லிகா இருக்கேன். எதுவும் செட் ஆவ மாட்டேங்குது.”

”இந்த டபாய்க்கிற வேலையெல்லாம் வோணாம். ஏதோ நானா இருக்கச்சொல்ல, உன்னாண்ட குடும்பம் பண்ணினு இருக்கேன். வேற ஒர்த்தின்னா, எப்பவோ எகிறிருப்பா.”

அவள் கோபமாகவும் கேலியாகவும் பேசுகிற நேரங்களில், ஏதோவொரு வகையில் தன் மீது அவளுக்கு அக்கறை இருக்கிறது என சந்தோஷப்பட்டுக்கொண்டான்.

வீட்டிலேயே இருக்கப் பிடிக்காமல் மல்லிகாவும் வேலைக்குப் போகத் தொடங்கியபோது, தெருவில் இருந்தவர்களால் அவள் எல்லோருடனும் சகஜமாகப் பழகியதை இயல்பாகப் பார்க்க முடியவில்லை. தங்களின் ஏராளமான கற்பனைகளால் வெவ்வேறு ஆட்களோடு தொடர்புபடுத்தி, நேரடியாகவும் மறைமுகமாகவும் இவனிடம் கதைகளைச் சொல்லத் தொடங்கினார்கள். சேகர் எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. தனக்கான உலகையும் மனிதர்களையும் பெற்றுவிட்ட சந்தோஷத்தில், ஒரே வீட்டில் இருந்தபோதும், சேகரைவிட்டு மல்லிகா கொஞ்சம் கொஞ்சமாகத் தனியான ஓர் உலகை வடிவமைத்துக்கொண்டாள்.

மல்லிகா எனும் ஒரே பெண்ணைப் பற்றி எப்படி ஏராளமான கதைகளை இவர்களால் சொல்ல முடிகிறது.

சில நாட்களுக்குப் பின் அந்தக் கதைகள் அவனோடு வேலை செய்கிறவர்களிடம் இருந்தும் வரத் தொடங்கியபோது, அவனால் முன்புபோல் இயல்பாக இருக்க முடியவில்லை. தன்னிடம் அவள் ஏற்படுத்திவைத்திருக்கும் தூரத்தையும் இந்தக் கதைகளையும் சேர்த்துப் பார்த்தபோது சந்தேகத்தின் கோரமான பிம்பம் அவனை சதா சுரண்டிக்கொண்டிருந்தது. உறங்க முடியாது சிரமப்பட்டான். இரவுகளில் உறக்கம் தப்ப, நாய்களைக் கையாளும்போது கவனம் சிதறியது. தொடர்ந்து இரண்டு நாட்கள் நாய்களின் பல் தடம் பட்டபோது பழனி பதற்றமாகிப்போனான்.

”ஏய்… கண்ணுல எதும் பிரச்னையாடா? நீ கயிறு வலிக்கிறதே பழைய மாதிரி இல்ல’ – சேகர் இயல்பாக மறுப்பதுபோல், ‘அதெல்லாம் ஒன்னியும் இல்ல பழனி. ரெண்டு நா மிந்தி கையில சின்னதா சுளுக்கு. அதான் லெஃப்ட் கையால வலிக்க முடியல. சரியாயிடும் வுடு..’ எனச் சமாளித்தான். எத்தனை நாய்களைப் பிடிக்கிறோம்? எந்த ஏரியாவுக்குப் போகிறோம் என்ற கவனம் இல்லாமல், மனம் சதா வேட்டை நாய்போல் மல்லிகாவைப் பற்றியே யோசித்தது. வறண்டு உலர்ந்த உடலில் சோர்வை மீறி தகிப்பே பெருகி வழிந்தது. உடலில் இருந்த காயங்களைப் பற்றி கவலையும் இல்லை. நாய்களுக்காகச் சுருக்குப் போடும்போது எப்போதும் கவனமாக இருப்பான். கையில் ஒரு முனை இருக்கும். இன்னொரு முனை மிகத் தளர்வாக இருந்தாலும் நாயின் கழுத்தில் விழுந்ததும் பிடி நகராதபடி இருக்கும். ஆனால் அன்று காலையில் இருந்தே அவன் சமநிலையில் இல்லாததால், எல்லாம் சிதறலாகவே இருந்தன.

உடல்நிலையைக் காரணம்காட்டி விடுமுறையே எடுக்காத சேகருக்கு, இரண்டு நாள் காய்ச்சல் என்ற விஷயம், அவனோடு வேலைசெய்த எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. மல்லிகாவும் அவனுடனே இருந்தாள். அத்தனை நாட்களும் அவனுக்கு என சேமித்திருந்த பரிவு, நேசம் அவ்வளவும் மல்லிகாவுக்குள் இருந்து கசிந்தன. அவனுக்குத் தேவை எல்லாம் இந்த அன்பும் அரவணைப்பும்தான் என்பதை மற்ற எல்லோரையும்விட அவள் மிக நன்றாகப் புரிந்திருந்தாள். கொதித்துக்கொண்டிருந்த காய்ச்சலையும் மீறி அவளைச் சந்தேகப்பட்டுவிட்டதற்காக சேகர் நொறுங்கிப்போனான். யாரோ சிலரின் வார்த்தைகள் மீது இருந்த நம்பிக்கை, ஏன் நாம் நேசித்தவளின் மேல் இல்லை? எல்லாவற்றையும் பேசிக் கொட்டித் தீர்த்துவிட வேண்டும். அவள் மடியில் புரண்டு அழவேண்டும் என நினைக்கும்போது இதென்ன… எல்லாம் அவனுக்குள் பேச முடிகிறது. ஆனால், பேச முடியாதபடி நா வறட்சி. தண்ணீர் குடித்துக்கொண்டே இருந்தான். இன்னொரு புறம் வாயின் இரண்டு ஓரங்களின் வழியாகவும் கோழை வழியத் தொடங்கியது.

”இன்னாது இது… வாய் எல்லாம் எச்சியா வருது. வெறும் ஜொரமாட்டம் தெரியல. வா நாம எதுக்கும் ப்ளட் டெஸ்ட் எடுத்திரலாம்.”

மல்லிகாவுக்கு நிஜக் காரணம் தெரிந்தால் பயந்துவிடுவாள் எனத் துணியால் வாயைத் துடைத்துக்கொண்டு, ‘அதெல்லாம் ஒன்னியும் வோணாம். ரெண்டு நாள்ல சரியாப்போகும்…’ எனச் சிரித்தபடி சொன்னான்.

காய்ச்சல் குணமாகி அவன் வேலைக்கு வந்தபோது, மல்லிகா முழுதாக அவனுக்கானவளாக இருந்தாள். சேகருக்குத்தான் இப்போது அந்த அன்பை எதிர்கொள்ள அச்சமாக இருந்தது. எல்லோரிடம் இருந்தும் விலகியவனுக்கு, கண்கள் நிலைகொள்ளாது அலைந்தன. தேகம் வறண்டு ரோகியைப்போல் இருந்தான். அவனுக்குள் இருந்த நிதானம் கொஞ்சம் கொஞ்மாக மறைந்து, எல்லாவற்றுக்கும் சின்னதோர் உறுமலோடு, அவன் பேசுவதை மல்லிகாதான் முதலில் கவனித்தாள்.

”என்னாச்சு உனக்கு? கண்ணு ஒரு எடத்துல இருக்க மாட்டேங்குது. தல நிக்க மாட்டேங்குது. கஞ்சா எதுனா அடிக்கிறியா?” – அவள் அச்சத்தோடு கேட்டதற்கு, சேகர் வெறுமனே சிரிக்க மட்டுமே செய்தான். உடலுக்குள் அதீதமான மிருக உணர்ச்சி ஒரு பக்கம் பெருக, அதை யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் தவித்தான். அவளுக்கு இந்த விஷயம் தெரிந்தால், தன்னை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவாளோ என அச்சம்.

குளிர்காலத்தின் தொடக்கத்தில் மொத்த மாநகரமும் நீண்ட உறக்கத்தை நாடியிருக்க, நாய்கள் தங்களின் இணைகளைத் தேடி எல்லாத் தெருக்களிலும் பசியின் வெறியோடு சுற்றிக்கொண்டிருந்தன. சேகருக்கு நாய்களைப் பார்க்கும்போதெல்லாம், கண்களில் ஒருவித ரௌத்திரம் பொங்கி அடங்கியது. இதற்கு முன் சாதாரணமாகச் செய்த வேலையை மூர்க்கத்துடன் செய்ய ஆரம்பித்தான். இந்த மாநகரில் இருக்கும் மொத்த நாய்களையும் வேட்டையாடிவிடும் மூர்க்கம் அது. உடன் வந்திருந்த பழனி களைத்துப்போக, ”போதும் மச்சி, இப்பவே எட்டு உருப்படியாச்சு. இன்னும் எம்மா நேரம் இங்கேயே சுத்தினு இருப்பே? போலாம்’ – மதிய சாப்பாட்டுக்கான நேரமாகிவிட்டதை அவனோடு சேர்ந்து வேன் டிரைவரும் அடிக்கொரு தரம் நினைவுபடுத்திக் கொண்டிருந்தான். சேகர் வெறுமனே சரியெனத் தலையாட்டினான். இரைச்சலான சாலையில் மிக மெதுவாக வேன், இவர்களை நோக்கி வரும்போதே சேகர் மயங்கி விழுந்தான்.

கண்களை முழுமையாக விரித்துப்பார்க்க முடியவில்லை. சில நாட்களாக எதையுமே உட்கொள்ள முடியாமல் போய், அவன் உடல் சோர்ந்து மெலிந்திருந்தது. மங்கலான வெளிச்சம் வந்த இந்த அறை புதிதாகத் தெரிய, மெதுவாக எழுந்து உட்கார்ந்துகொள்ளப் பார்த்தான். ஒரு கையில் டிரிப் ஏறிக்கொண்டிருந்தது. காட்டமான மருந்து வாசனை ராயப்பேட்டை மருத்துவமனை என்பதை உணர்த்த, சுற்றிலும் கண்களைத் துழாவி மல்லிகாவைத் தேடினான். இறப்புக்கு முன் தனது நேசத்துக்குரிய எஜமானனைத் தேடும் நாய்க்குட்டிபோல், அவன் கண்கள் அவளைத் தேடிக்கொண்டிருந்தன. சில அடிகள் தள்ளி கதவுக்குப் பின்னால் அவள் உட்கார்ந்திருந்தாள். சத்தம் போட்டுக் கூப்பிட முயன்றான். தொண்டையில் இருந்து குரல் வரவில்லை. கட்டிலில் தட்டினான். மல்லிகா வேகமாகக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வரப் பார்த்தாள். வாசலில் இருந்த நர்ஸ் தடுத்து நிறுத்தினாள்.

”எங்க போறீங்க? அவரு ரேபிஸ் பேஷன்ட்டும்மா. அதுவும் ரொம்ப சீரியஸ் ஸ்டேஜ். இப்போ பக்கத்துல யாரும் போகக் கூடாது. இவ்ளோ நாளா அவரு உங்ககிட்ட சொல்லாம தாக்குப்புடிச்சதே பெரிய விஷயம்!’

”கதவை மட்டுமாச்சும் தொறங்க. நான் ரெண்டு வார்த்தை பேசணும்.”

‘ஏய்… லூஸாம்மா நீ? அவரால பேச முடியாது.’

‘இல்ல அவரு பேச வேணாம். நான் பேசறதை அவர் கேட்டாப் போதும். தயவுசெஞ்சு விடுங்கம்மா. நான் இந்தக் கதவுக்குப் பக்கத்துலயே நின்னுக்கிறேன்.”

மன்றாடியவளைக் காணச் சகிக்காமல் கதவை மட்டும் திறந்துவிட்டு, அவளின் ஒரு கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு நகரவிடாமல் நர்ஸும் அருகிலேயே நின்றாள். அவளோடு சேர்ந்து வாழ நினைத்திருந்த அவனின் கனவுகள் அவ்வளவும் சிதறி, அந்த அறைக்குள் அவர்களுக்கு நடுவில் நசுங்கிக்கொண்டிருந்தது. வெறுமனே லேசாகச் சிரித்தான். வாயில் இருந்து மெல்லியதாக இப்போது கோழை வழிந்தது. நீர்மையே இல்லாத உடல் என அவனுக்குள் இன்னும் அவள் மீதான காதல் மட்டும் மிச்சம் இருந்தது.

”உன் ஒருத்தனுக்காகத்தான இவ்ளோ நாளும் இருந்தேன். தனியா விட்டுட்டுப் போறியே மாமா!’

வாழ்வின் மீதான தீராக் காதலோடு செய்ய ஏதுமற்றவனாக, இவளையே பார்த்துக்கொண்டிருந்தவனின் கண்கள் ரொம்பவும் இடுங்கிப்போனது.

”வுடுங்க நர்ஸம்மா.. நானும் சாவறேன். இருந்து என்ன ஆவப்போவுது. வுடுங்க!”

கைகளை உருவித் திமிறியவளை நர்ஸால் கட்டுப்படுத்த முடியாமல் உதவிக்கு ஆட்களைக் கூப்பிட்டாள். மல்லிகாவின் குரல் அலறலாக வெடிக்க, அவன் முகம் ரொம்பவும் வறண்டது. அழ முயற்சித்திருக்க வேண்டும். இடது கண்ணில் இருந்து மட்டும் துளித்துளியாக கண்ணீர் கசிந்தது. கடைசித் துளி நீர்மையையும் இழந்துகொண்டிருக்கும் அவனுக்கு முன், அடக்க முடியாமல் அழுது அரற்றினாள் மல்லிகா. நர்ஸைத் தள்ளிவிட்டு அவனோடே போய்விடலாம் என ஓடியவளை, சிலர் வந்து தூக்கிக்கொண்டு போயினர். தனக்கும் சேர்த்து அலறும் அவளை இனி ஒருபோதும் பார்க்கப்போவது இல்லை என்கிற ஏக்கத்தோடு, கண்களை மூடினான். அந்த அறை முழுக்க மல்லிகாவின் ஸ்பரிசம் அவனோடு நிறைந்திருந்தது!

– மார்ச் 2015

Print Friendly, PDF & Email

1 thought on “நாய்வேட்டம்

  1. வேண்டும் என்கிறபோது இல்லாது போகும் என்ற கருத்து யாவையும் அழிக்கிறது……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *