நான் யார் தெரியுமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 3, 2020
பார்வையிட்டோர்: 5,205 
 
 

என்னைய யாருன்னு நினைச்சுட்டாங்க, நான் இப்ப இப்ப நினைச்சன்னா, அவங்களை இந்த இடத்தை விட்டு துரத்த முடியும். பாவமேன்னு பாத்தா ரொம்பத்தான் ஆட்டம் காட்டறாங்க. கோபமாக பக்கத்து வீட்டுக்காரரிடம் கத்திக்கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியும், குழந்தைகளும் அப்படியே பயந்து என் முகத்தை பார்த்து கொண்டிருந்தனர். என் வீட்டிலும் என் பேச்சை கேட்டு குழந்தைகளும், மனைவியும் பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

விடுங்க சார் அவங்க குணம் அப்படி தயவு செய்து இதை பெரிசு பண்ணாதீங்க, நாம பொறுமையா இதை கையாளாலாம், அவர் இப்படி சொன்னதும் எனக்கு கோபம் இன்னும் மண்டை உச்சிக்கு ஏறியது. என்ன சார் சொல்றீங்க, இவங்களை இப்படி மெல்லமா செய்யலாம்.

மெல்லமா செய்யலாமுன்னு சொல்லிகிட்டே இருந்தோமுன்ன ஆட்டை கடிச்சு, மாடை கடிச்சு கடைசியில நம்மை கடிக்க ஆரம்பிக்கும்ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்களே அதை மாதிரி ஆயிடும். இந்த பிரச்சினைய எங்கிட்ட விட்டுடுங்க, நான் எப்படி டீல் பண்ணறேன்னு பாருங்க, என்னைய பத்தி இவங்களுக்கு தெரியாது. முகம் சிவக்க சொல்வதை சங்கடத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் பக்கத்து வீட்டுக்காரர்.

அவர் தனக்குள் சங்கடப்படுவதற்கு காரணம் இருக்கிறது. அவர்தான் இந்த பிரச்சினையை ஆரம்பித்து வைத்தார். பிரச்சினையை ஆரம்பித்து வைத்தார் என்று சொன்னவுடன் அவரை தப்பாக எடுத்துக்கொள்ள கூடாது. மாலையில் நான் வீடு வந்த பொழுது வீட்டு எதிர்புறம் மலை போல் மண் குவிக்கப்பட்டு இருந்தது. அந்த குவியல் மண்ணுக்கும் எங்களது வீட்டுக்கும் இடையில் ஒரு முப்பது அடி ரோடு இருந்தாலும் வீட்டு முன் மண் குவிக்கப்பட்டிருந்தது பார்ப்பதற்கு என்னவோ போல் இருந்தது.

அதை பார்த்தவுடன் மனைவியிடம் கத்தினேன், வீட்டு முன்னாடி இப்படி மண்ணை கொட்டி வச்சிருக்காங்க, நீ பார்த்துட்டு என்ன பண்ணிகிட்டு இருந்தே?

என் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் வேகமாக வெளியே வந்தார். அவர் குடி வந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது. நான் பத்து வருடங்களாக இங்கு குடியிருக்கிறவன். சார்.. நான் கூட சொன்னேன் சார், ஏம்ப்பா வீட்டு முன்னாடி மண்ணை கொட்டி வச்சிருக்கியே? அப்படீன்னு அதுக்கு இங்கதான் எங்களை கொட்ட சொல்லியிருக்காங்க, அவங்க வந்த பின்னால நீங்க அவர்கிட்டே பேசிக்குங்க, அப்படீன்னு சொல்லிட்டு பாக்க பாக்க மண்ணை கொட்டிட்டு போயிட்டாங்க. அவர் பாவமாய் சொல்ல சொல்ல எனக்கு கோபம் விர் என்று ஏறி விட்டது.

யாராமா இந்த மண்ணை கொட்ட சொன்னது? நான் கேட்ட தோரணையிலேயே அவர் அரண்டு விட்டார். அந்த மாதிரி இருந்தது நான் கேட்ட தோரணை. அதுவும் மண்டையில் ஏறிய கோபத்தின் தக தகப்பு அப்படி கேட்க வைத்தது. நம்ம தெருவுக்கு திரும்பும்போது வலது பக்க முக்குல ஒரு வீடு இருக்குதுல்லை, அங்க இருக்காராமா, அதுவும் அந்த வண்டிக்காரன்தான் சொன்னான், வேணுமின்னா போய் நீங்களே பேசுங்க, அப்படீன்னு சொன்னான். அதன் பிறகுதான் எனக்கு வந்த அந்த கோபமும், ஆங்கார பேச்சும், உள்ளே வந்து சட்டையை போட்டு கிளம்பலாம் என்ற போது என் மனைவி தடுத்தாள், கொஞ்சம், இருங்க, மெதுவாக சொல்லலாம், இப்பவே இருட்டிடுச்சு, காலையில போய் பாத்துக்கலாம், சொன்னவளை முறைத்தேன். என்னை தடுக்காதே, நான் யாருன்னு அவனுக்கு தெரியலை, இப்பவே போய் பேசி அந்த மண்ணை வழிச்சுட்டு போக வைக்கறனா பாரு, விரு விருவென சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

பக்கத்து வீட்டுக்காரர் அவர் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருப்பது காதில் விழுகிறது, பயங்கர கோபக்காராரா இருப்பாரு போல இருக்கு. இப்பவே போறேன்னு நிக்கறாரு.

அவர் மனைவி சொல்வதும் காதில் கேட்கிறது நமக்கு எதுக்கு வம்பு, நீங்க பேசாம் இருங்க.

எனக்கு இதை கேட்டவுடன் இப்படி சொல்லி சொல்லி ஆண்களை கோழைகளாக்கி விட்டீர்கள். சிரித்துக்கொண்டே தெரு முக்குவில் அவர் அடையாளம் சொன்ன வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

இந்த வீடாகத்தான் இருக்கவேண்டும், அனுமானித்தேன். காம்பவுண்டுக்குள் வீடு இருந்தது. முன்புறம் ஒருவரும் இருப்பதாக தெரியவில்லை. அழைப்பு மணி எங்காவது இருக்கிறதா என்று பார்த்தேன். காமப்வுண்டு கேட் அருகில் பின் புறம் இருப்பதாக தென்பட்டது.கொஞ்சம் இருளாக இருந்ததால் மெல்ல அந்த பாக்சை தடவி தட்டுப்பட்ட ஒரு சுவிட்சை அழுத்தினேன்.

டிங்..டிங் என்று அழைப்பு மணி வீட்டுக்குள் ஒலிப்பது இங்கு கேட்டது. ஐந்து நிமிடம் காத்திருந்தேன். சட்டென கதவு திறக்கப்பட்டு ஆஜாபாகுவான ஒரு ஆள் வெளியே வந்தார். என்ன வேணும்? யார் நீ? அவர் கேட்ட தோரணையும், அந்த உருவத்தையும் பார்த்தவன் அப்படியே சிறிது மிரண்டு போய் நின்றேன். அவர் மரியாதை குறைவாக கூப்பிட்டது கூட எனக்கு பிடிபடவில்லை. அதிலும் மீசை வேறு பயமுறுத்தியது.

என்ன வேணும்? மீண்டும் கேட்ட அதிகார குரலில் சட்டென நினைவு பெற்றவன் அடுத்து என்ன சொல்ல வந்தோம் என்பதை மறந்து சார்.. என்று இழுத்தேன்.

என்னயா இந்த நேரத்துல வந்து சார்..ன்னு இழுத்துட்டு, அந்த உருவத்தின் சலிப்பு எனக்கு பேசுவதற்கு தைரியத்தை உருவாக்குவதாக இல்லை.

இல்லை மண்..மண்.. இரண்டு முறை இழுக்கவும், என்னயா மண் வேணுமா? எத்தனை லோடு வேணும்?

அதில்லைங்க,.மண்ணை வீட்டு முன்னாடி ..குரலை தழைத்துக்கொண்டே கொட்டி வச்சிருக்கீங்க, இதை சொல்லி முடிப்பதற்குள் எனக்கு வாய் உலர்ந்து நெஞ்சு பட படவென அடித்துக்கொண்டது.

மண் கொட்டி வச்சிருக்கா? என்று யோசனை செய்த உருவம் நிறைய இடத்துல கொட்டி வைக்க சொல்லியிருக்கேன், எந்த இடத்துலன்னு சொல்லு, உனக்கு மண் வேணுமா?

இல்லீங்க நம்ம தெருவிலயே ஆறு வீடு தள்ளி…. நம்ம வீட்டு முன்னாடி…வார்த்தையை முழுங்கினேன்.

அதுக்கு என்ன இப்போ?

இல்லீங்க வீட்டு முன்னாடி மண் கொட்டியிருந்தா போக வர புழங்க முடியாது, தயங்கி சொன்னேன்.

மண் கொட்டறது என் சைட்டுலதான, அது எங்க கொட்டியிருந்தா என்ன? உன் வீட்டுல வந்து கொட்டலையில்ல, இப்பொழுது அந்த ஆளின் குரலில் கோபம் எட்டி பார்த்தது.

அப்புறம் என்ன நினைத்தாரோ அந்த ஆளே அடுத்த வாரம் ஒரு பார்ட்டி எடுத்துட்டு போயிடும். அவராகவே சொல்லிக்கொண்டார்.

இது போதும் இது போதும், மனதுக்குள் நினைத்துக்கொண்டு, ரொம்ப நன்றி சார், சும்மா இதை சொல்லிட்டு போகலாமுன்னுதான் வந்தேன், முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்க்கொண்டு சரி நான் வரேங்க, சடாரென அங்கிருந்து நகர்ந்தேன்.

வீட்டுக்கு வந்த எனக்கு ஒரே மரியாதையான பார்வைகள்தான். பக்கத்து வீட்டுக்காரரோ என்னை ஒரு ஹீரோவாகவே பார்த்தார்.

ஒரு வாரம் டைம் கேட்டுருக்காரு, சரி பரவாயில்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன். என் குரலில் பெருமை வழிந்த்து. ஆனால் அந்த மண் குவியல் இரண்டு மாதம் அங்கிருந்த பின்தான் காலியானது.இந்த இரண்டு மாதங்களும் என் வீடும் பக்கத்து வீட்டுக்காரரும் என்னை மீண்டும் சண்டைக்கு போவார் என எதிர்பார்த்து பார்க்கும்போது நான் அதை கண்டு கொள்ளாதது போல நடித்தது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.

Print Friendly, PDF & Email

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *