நான் பெண்தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 8,422 
 

என்றாவது வீட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்பது எதிர்பார்த்திருந்ததுதான்.

இன்றா, நேற்றா, முதன்முதலில் பெரியக்காவின் பாவாடை சட்டையை எடுத்து அணிந்துகொண்டு, கண்ணாடிமுன் நின்றபடி அழகுபார்த்தானே, அன்றே அவன் மனதில் அந்த எண்ணம் புதைந்துவிட்டது.

“நாலு பொம்பளைப் புள்ளைங்களுக்கப்புறம் ஒரு ஆம்பளைப் புள்ளையாவது பொறந்திச்சேன்னு நான் எவ்வளவு சந்தோசப்பட்டுக்கிட்டு இருக்கேன்! நீ இப்படி ஒரு காரியம் செஞ்சுட்டு நிக்கிறயேடா!” நடக்கக் கூடாதது நடந்துவிட்டமாதிரி அம்மா அதட்டியபோது, எதுவும் விளங்காது விழித்தான்.

தான் எதைக் கேட்டாலும் மறுக்காத அம்மா இப்போது தனக்கு மகிழ்ச்சி தரும் இந்தக் காரியத்தால் ஏன் தானும் மகிழவில்லை? அந்த மூன்று வயதுக் குழந்தைக்குப் புரியத்தான் இல்லை.

அம்மா அதோடு நின்றிருந்தாலாவது தேவலாம். “இங்க வந்து பாருங்க இந்த அநியாயத்தை!” என்று அப்பாவையும் அல்லவா துணைக்கு அழைத்தாள்!

எப்போதும்போல, அம்மா கோபித்தால் அப்பாவும், அப்பா திட்டினால் அம்மாவும் பரிந்து பேசுவார்கள் என்ற நம்பிக்கையுடன், சிறுவன் புன்சிரிப்பு மாறாமல் நின்றுகொண்டிருந்தான்.

ஆனால், நடந்ததென்னவோ..!

அம்மா வாய் வார்த்தையாகத்தான் திட்டினாள். அப்பாவோ, ரோத்தானால் (ROTAN, மலாய் மொழியில், மெல்லிய பிரம்பு) கண்மண் தெரியாது அடித்து நொறுக்கினார், “இன்னொருவாட்டி இப்படிச் செய்வியா? செய்வியா?” என்று கத்தியபடி.

`அப்பா, அம்மா இருவருக்குமே என்னைப் பிடிக்கவில்லை!’ என்ற வடு மனதின் ஆழத்தில் பதிந்தது அன்றுதான். அச்சம்பவத்தால் வயதுக்கு மீறிய சூட்சுமம் பிறந்தது: நான் பெண்மாதிரி இருந்தால், யாருக்குமே பிடிக்காது!

பிறருக்குப் பிடித்ததோ, இல்லையோ, அவனுக்கு அதுதான் வேண்டியிருந்தது. அதனாலேயே தனித்துப் போனான். பெற்றோர் மற்ற குழந்தைகளை சினிமா, லேக் கார்டன்ஸ் என்றெல்லாம் அழைத்துப் போனபோது, ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி, வீட்டிலேயே தங்கிவிடுவான். அம்மா அவிழ்த்துப் போட்டிருந்த புடவையைக் கட்டிக்கொள்ள இதைவிட நல்ல சந்தர்ப்பம் ஏது!

`பதின்மூன்று வயதில்தான் எத்தனை பாடுபட்டோம்!’ நினைக்கும்போது இன்றும் உடல் நடுங்கியது.

இடுப்பை ஆட்டி ஆட்டி நடப்பதும், கழுத்தை ஒடித்து மிகையான கையசைவுடன் பேசுவதும் அவனது இயல்பு. இதை ஏன் பிறர் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்ற தாபம் எழுந்தது. தனக்கு மட்டும் மார்பகம் பெரிதாக வளரவில்லையே என்று பெண்களின்மேல் பொறாமை.

`நான் பெண்தான்! எனக்கு ஏன் பொருத்தமில்லாமல் இந்த ஆண் உடம்பு!’ சுயவெறுப்பு கிளர்ந்தது. இரவில் காமக்கனா கண்டு எழுச்சி ஏற்பட்டபோது தற்கொலை செய்து கொள்ளலாம்போல இருந்தது. காலிடுக்கில் துணியைச இறுகக் கட்டிக்கொண்டு தூங்கப்போனான். இந்த அவலம் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமே என்ற பதைப்பு வேறு.

சின்னக்கா அரைத்து வைத்திருந்த மருதாணியை சுண்டு விரல் நகத்தில் ஆசையோடு இட்டுக்கொண்டான். ஒரு வளையலை எப்போதும் தன் புத்தகப் பையில் வைத்திருந்து, அதை அவ்வப்போது அணிவதில் அற்ப சுகம் ஏற்பட்டது.

அவனது போக்கை முதலில் கண்டித்த ஆசிரியர்கள்கூட அவன்மேல் எழுந்த பரிதாபத்தாலோ, இல்லை அவன் நன்றாகப் படித்ததாலோ, அவனைச் சும்மா விட்டுவிட்டார்கள்.

ஆனால், சகமாணவர்களும், ஏன், ஆசிரியர் ஒருவருமே கண்ணை விஷமமாகச் சிமிட்டியபடி, அவனைத் `தொட்டுப் பார்க்க’ விரும்பியபோது, `செத்துப் போய்விடலாமா!’ என்ற விரக்தி எழுந்தது.

மகனை இனி மாற்ற முடியாது என்பது திட்டவட்டமாகப் புரிந்துபோக, `தங்களுக்கு ஒரு மகன் பிறக்கவே இல்லை’ என்பதுபோல் நடந்துகொண்டார்கள் அவனைப் பெற்றவர்கள். அவனுடைய அத்தியாவசியமான செலவுகளைக் கவனித்துக் கொண்டதுடன் தம் பொறுப்பு தீர்ந்துவிட்டதுபோல நடந்து கொண்டார்கள். குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை அறவே அற்றப் போக, `எனக்கு யாருமேயில்லையே!’ என்று அவன் மனம் அழுதது.

ஒருவழியாக பள்ளிப் படிப்பு முடிந்துபோக, `சுதந்திரம்’ என்று உள்ளம் ஆர்ப்பரித்தது. எப்போது வீட்டைவிட்டு வெளியேறுவோம் என்று, அந்த நன்னாளை எதிர்பார்த்து ஏங்கியிருந்தவன்தானே! எவரிடமும் சொல்லிக் கொள்ளாது புறப்பட்டான்.

இவனைப் போன்ற பலர் கோலாலம்பூர் மத்தியில், ஒரு காலத்தில் `மஸ்ஜிட் இண்டியா’ என்று அழைக்கப்பட்ட நீண்ட கடைவீதி ஒன்றில் அடுக்கு மாடியில் குடியிருந்தனர்.

“இங்கே ஒன் இஷ்டப்படி இருக்கலாம். இனிமே ஒன்னைத் திட்டவோ, அடிக்கவோ யாருமில்லை!” என்று உற்சாகப்படுத்திச் சிரித்தான் நண்பன். ஆணுமில்லாது, பெண்ணுமில்லாததால் அடையாளக் கார்டு வாங்க முடியாது. வேலை கிடைப்பதும் எளிதாக இல்லை. வேறு வழி இல்லாது, அங்குள்ள பலரும் உடலை விற்றுப் பிழைத்தனர். ஏதோ, அவர்களால் முடிந்தது! வயிறு என்ற ஒன்று இருக்கிறதே!

அழகு நிலையம் ஒன்றில், இவனைக் கேள்வி எதுவும் கேட்காமல் சேர்த்துக் கொண்டார்கள். வேலை முடிந்து அறைக்குத் திரும்பியதும், முதல் வேலையாக, தான் வாங்கிச் சேர்த்திருந்த பெண்கள் உள்ளாடைகளை அணிந்து அழகு பார்த்தான்.

“எனக்கு இந்த ஒடம்பு வேணாம்டி. எப்பவுமே இப்படி பிரா போட்டுக்கிட்டு, சூடிதாரும், சேலையும் உடுத்த முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்!” என்று பெருமூச்செறிந்தான்.

அதற்கு ஒரே ஒரு வழிதான் இருந்தது. தான் உடல் ரீதியில் பெண்ணாக வேண்டும்.

நடக்கிற காரியமா? பல்லாயிரக்கணக்கான ரிங்கிட்டுக்கு எங்கே போவது! ஒரு வழிதான் புலப்பட்டது.

“ஏண்டா! இப்படியே இருந்திட்டுப் போவியா! என்னமோ ஒரு நாளைக்கு ஒரே வேளை சாப்பிட்டுக்கிட்டு, சினிமா, ஹோட்டலுன்னு பணம் செலவழிக்காம, ஏதோ தவம் பண்றாப்போல சேமிக்கிறியே!” என்று கேலியும், அக்கறையுமாக அவனையொத்த நண்பர்கள் கூறியபோது, அவன் மனம் தளரவில்லை.

அவனுடைய முதல் வெளிநாட்டுப் பயணம் மலேசிய நாட்டின் வட எல்லையைத் தாண்டியவுடன் இருந்த ஸோங்க்லா என்ற ஊருக்கு. தாய்லாந்தில் அவனைப் போன்றவர்கள் சர்வ சாதாரணமாக இடுப்புக்குக் கீழே முழு நிஜாரும், இடுப்புக்கு மேல் நின்றுவிடும் டி-சர்ட்டுமாக, வயிறு தெரிய உடுத்தி இருந்தனர். முகத்தில் நாடகத்தில் நடிக்கப் போவதுபோல் மிகையான ஒப்பனை. ஆனால் குரல் மட்டும் ஆணைப் போன்றது. `இவர்களும் மனிதர்கள்தாம்!’ என்று பிறர் அவர்களிடம் வித்தியாசம் பாராட்டாமல் நடந்துகொண்டதைப் பார்க்க மகிழ்ச்சியும், `நானும் இந்த சொர்க்கத்தில் பிறந்திருக்கக் கூடாதா!’ என்ற ஏக்கமும் ஒருங்கே எழுந்தன.

`என் துயரெல்லாம் முடியும் நாள் தூரத்தில் இல்லை!’ என்ற நம்பிக்கையோடு கழித்தான் அடுத்த சில வருடங்களை. காசு சேரச் சேர, அவ்வப்போது அங்கு அறுவைச் சிகிச்சைக்காகப் போய்வந்தான். உடல் மாற்றத்துடன், கூடவே பெண்களுக்கான ஹார்மோன்களும் உடலில் ஏற்றப்பட்டதில், இப்போது இவன் சோமு அல்ல, சாந்தினி.

பிறந்ததிலிருந்து முப்பது ஆண்டுகளாக அனுபவித்த குழப்பமும் வேதனையும் விலக, அளப்பரியா நிம்மதி பிறந்தது.

தலையைப் படியப் படிய வாரி, நிறையப் பூ வைத்துக்கொண்டாள் சாந்தினி. வண்ண வண்ண வளையல்கள், தங்கமாகவே மின்னிய நெக்லஸ், வெள்ளிபோல் ஜொலித்த கொலுசு, நைலக்ஸ் புடவை என்று பேராசையுடன் எல்லாமே வாங்கிக்கொண்டாள்.

ஆனாலும் மனதில் ஒரு வெறுமை. அது ஏன் என்று அதிகம் யோசிக்க வேண்டியிருக்கவில்லை. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “அம்மா! நான்தாம்மா பேசறேன்,” என்று தொலைபேசியில் அழைத்தாள் ஒருமுறை.

பத்து வருடங்களுக்குமேல் ஆனதினாலோ, அல்லது எத்தனையோ பயிற்சியின் பயனாக பெண் குரலில், மேல் ஸ்ருதியில் பேசினதாலோ, தாய்க்கு முதலில் புரியவில்லை. “யாருங்க?” என்றாள், குழப்பத்துடன்.

“நான்தாம்மா… சோமு..,” சொல்லும்போதே அடிநாக்கில் கசந்தது. அவசரமாக, “இப்ப நான் சோமு இல்ல. சாந்தினி. பேரில மட்டுமில்லம்மா, ஒடம்பாலேயும் பொண்ணாயிட்டேன்!” என்று பெருமையுடன் தெரிவித்தாள்.

அம்மா அடைந்த அதிர்ச்சி தொடர்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டதில் தெரிந்தது.

தான் அப்படிப் பிறந்தது தன் குற்றமா? வாய்விட்டு அழுதாள் சாந்தினி. `அம்மா! அம்மா!’ என்று கதறியபோது, தான் என்றுமே அம்மாவாகவும் ஆக முடியாது என்ற உண்மை உரைக்க, அந்தப் பெண்ணின் அழுகை பலத்தது.

(1960-களின் இறுதியில், ஆசியாவில் –சிங்கப்பூரில்– இருபது முறைகளுக்குமேல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, அவரிடம் மன்றாடிய ஓர் ஆணை — நீண்டகால மனோதத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு — முதன் முதலாக அறுவைச் சிகிச்சைவழி பெண்ணாக ஆக்கிய டாக்டர் ரத்னம் என்பவருடன் நான் நிகழ்த்திய பேட்டியினால் உதித்தது இக்கதை).

(இதே தலைப்புகொண்ட எனது மின்னூலிலிருந்து)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *