நான் பாடிய பாட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 15, 2014
பார்வையிட்டோர்: 9,172 
 
 

“முடியவே முடியாது” என்று கறாராகச் சொல்லிவிட்டேன். விடவே விடமாட்டோம் என்று கெஞ்சிக்கொண்டிருந்தார்கள்.

இந்தப் பிள்ளைகளைப் பார்த்தாலும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. போனால் போகிறது என்று அவர்கள் போக்குக்கு ஒத்துப்போகலாம் என்றுதான் தோன்றிற்று என்பது என்னவோ உண்மைதான். ஆனாலும் எனக்கென்று ஒரு ‘இது’ இருக்கிறது அல்லவா? அதை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது.

“சொன்னா கேளுங்க தம்பி. மொதல்ல நீங்க என்னத்தச் சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்தீங்களோ, அதுக்கு ஒத்துக்குட்டாப்போல என் வேலயச் செஞ்சி முடிச்சிட்டேன். அவ்வளவுதான் என்னால முடியும்!”

“இது எனக்கு இன்னைக்கு நேத்தைக்கு அனுபவமில்ல; இருபது இருபத்தஞ்சி வருஷமா இதேதான் நடந்துக்குட்டு இருக்கு. இனியும் அப்படித்தான் நடக்கும்; இன்னைக்கும் அப்படித்தான் நடக்கும்,” ஆங்காரமாய் ஆடும் மனதுக்கு ஆறுதலாகச் சொல்லிக்கொண்டேன்.

இப்பவே இடத்தைக் காலி செய்துவிடலாம் என்று நினைத்தாலோ பேரை பரிசு தருகிறோம் என்று கூப்பிட்டு ஏலம் போட்டுவிடுவார்களே! கட்டாயம் எல்லாம் முடியும்வரை இங்கே இருந்துதான் ஆகவேண்டும். ஆனால் அதுவரைக்கும் இதுகள் கண்ணில் இருந்து தப்பித்தாக வேண்டும்!

இருண்டு கிடக்கும் மண்டையோட்டின் உட்புறத்தில் வேலை செய்த களைப்பில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மூளையை மீண்டும் உசுப்பேற்றினேன். பாவம், வயதான களைப்பில் சுறுசுறுப்பாக இயங்க வக்கில்லாமல் “என்னய்யா?” என்று கேட்டது. உடனே கட்டளையிட்டேன். “எனக்கு ஒரு உபாயம் தா!”

“அதெல்லாம் முடியாது” என்றெல்லாம் சொல்லுமா என்ன? கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு யோசனையைச் சொன்னது. அந்த யோசனை கொஞ்சம் நாற்றமடித்தாலும் பரவாயில்லை, முதலில் இதுக கண்ணில் சிக்கப்படாது என்று படாத பாடு படவேண்டிக்கிடக்கிறது.

மண்டபத்தை விட்டு நுழைவாயில் பக்கமாக நகர்ந்தேன். நல்ல வேளை யாரும் கவனிக்கவில்லை. கவனித்தால் மட்டும் என்ன, கட்டாயமாக அங்கே யாரும் எனக்குத் தொந்தரவு செய்யமாட்டார்கள். “தாராளமாய் போய் வா மகனே” என்ற அசரீரி வாழ்த்துடன் மண்டப நுழைவாயிலை அடைந்தேன்.

அடேயப்பா! அந்தக் காலத்திலெல்லாம் கட்டாந்தரையிலயும் கூடாரத்திலயும் நிகழ்ச்சி நடத்திக்கொண்டு வந்திருந்தோம். வெயிலடிச்சாலும் போச்சி, மழையடிச்சாலும் போச்சி. நிகழ்ச்சி நடக்குதோ இல்லையோ மக்கள் நடையைக் கட்டிவிடுவார்கள். இப்போது பார். வெளியே மழை பெய்தாலும் வெயிலடித்தாலும் உள்ளே ஒன்றும் தெரிவதில்லை. தொழில்நுட்பம் பலவற்றைச் சூனியமாக்கிவிட்டது. இது இந்தப் பொடுசுகளுக்கு தெரியுமா என்ன?

நுழைவாயிலைக் கடந்ததும் இந்தப் பக்கமா திரும்பைய்யா என்று எனக்கே கட்டளையிட்டது காகிதத்தில் சிவப்பு நிறத்தில் வரைந்து வைத்த அம்பு குறி. உன்னை ஏசவா முடியும் என்று ‘போனால் போகிறது’ கணக்கில் விட்டுவிட்டேன். அம்பு குறியின் முனை எங்கே குவிந்துள்ளதோ அதைப் பற்றுக்கோடாக்கிக்கொண்டு நடந்தேன்.

ஆண் பொம்மையும் பெண் பொம்மையும் வரைந்து நடுவில் கோடு போட்டிருந்தால் அது கழிப்பறை என்று மகன் பலதடவை சொல்லிக் கொடுத்திருக்கிறான். இருந்தாலும் மூன்று பொம்மையை வரைந்து அதைச் சுற்றி ஒரு சதுரத்தை வரைந்திருப்பார்களே அதற்குள்தான் சென்று பலமுறை மாட்டியிருக்கிறேன். நுழையும்போது ஓரிடமும் வெளியாகும்போது வேறு எங்கோ கொண்டு சென்று விட்டுவிட்டு ஆளை சுற்றலில் விட்டுவிடும் அந்த சதுரத்தினுல் வரையப்பட்ட பொம்மைகள் கொண்ட அடையாளம்! பலமுறை அனுபவப்பட்டாலும் வயசாகிப்போன மூளையில் பதியமாட்டேன் என்கிறது எதுவும்!

நல்லவேளை, இங்கே தெளிவாக கழிப்பறை என்று எழுதியும் வைத்திருக்கிறார்கள். ஆண் பொம்மைப்படம் உள்ள அறையினுள் நுழைந்து பார்த்தேன். எல்லா கழிப்பறைகளும் நன்றாகவும் நாசூக்காகவும்தான் இருந்தன. “ஏதோ ஒன்னு, இதுககிட்டயிருந்து தப்பிச்சா சரி” என்று சடக்கென உள்ளே நுழைந்தேன்.

உள்ளே சமாச்சாரம் ஏதும் இல்லையென்பதால் உட்கார்ந்துத் தொலையவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. உட்கார வேண்டியிருந்தால் மூட்டு அதை ரொம்ப நேரம் சகித்துக் கொள்ளாது. உடனே ஊசியால் குத்தி எழுந்திருக்க வைத்துவிடும்.

அந்தப் பிள்ளைகள் கொடுத்த காகிதம் ஒன்று சட்டைப்பையில்தான் மடித்து வைத்தேன். எப்பவுமே இதுபோன்ற காகிதங்களை அங்குதான் வைப்பேன் என்றாலும் ஒரு பழக்க தோஷத்திற்காக உடம்பு முழுக்க தேடித் தடவிய பின்னரே சட்டைப்பையில் உள்ளதைக் கண்டுபிடித்ததுபோல் எடுப்பேன்

நிகழ்ச்சி நிரல்.

ம்… ம்… விரல் நின்றது. இப்போது நகைச்சுவை நாடகம் ஓடிக்கொண்டிருக்கிறது. கைமணிக்கட்டில் மணிகாட்டிக்கொண்டிருந்த காலச் சக்கரத்தைப் பார்த்தேன். இன்னும் அறைமணி நேரம் இருக்கிறது பரிசளிப்புக்கு. அதற்காக அறைமணி நேரமும் இங்கேயா குடும்பம் நடத்திட முடியும்? வேண்டுமானால் பதினைந்து நிமிடம் இங்கேயே கிடப்போம். பையன்கள் என்னைத் தேடித்தேடி அலுத்துவிடுவார்கள் அதற்குள்!

நிகழ்ச்சி, நிரலைக் காட்டிலும் மதமதப்பாக மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. எனக்கு உள்ளே எவ்வளவு நேரந்தான் சகித்துக்கொண்டு கிடப்பது என்று இருக்க, மூளை கொடுத்த உபாயத்துக்கு நன்றியை எட்டி உதைத்துவிட்டு வெளியேறினேன்.

நான் யாரிடம் அகப்படக் கூடாது என்பதே மறந்து போய்விட்டது இந்தக் குட்டிச் சிறைவாசத்தில். என் ஞாபக மண்டலத்தை என்னவென்று திட்டுவது? நிறம்பிக்கிடப்பது வெறும் பாடல்கள் மட்டும்தான் அந்த மண்டலத்தில்.

குத்துமதிப்பாக வெளியேறி சிவப்பு அம்புகுறியோடு முறைத்துக்கொள்ளாமல் அதன் போக்கிலே அடிபணிந்துச் சென்றேன். கூட இருக்கும் ஞாபக ராணுவம்தான் அடிக்கடி மண்ணைக் கவ்வுகிறதே. வேறு எங்கும் வழிதவறி காணாமல் போயொழிவதற்குள் பாதுகாப்புக்காக மீண்டும் மண்டபத்துக்குள்ளேயே நடந்தேன். நாடகம் முடிந்து இறுதிச் சொற்பொழிவு நடந்துகொண்டிருந்தது.

நான் மண்டபத்து நுழைவாயிலில் நிற்பதைக் கண்டதுமே வயதான தாத்தா வழிதெரியாமல் தடுமாறுகிறார் என்று என்னைக் கேட்காமலேயே முடிவெடுத்து ஓடோடி வந்து கையைப் பிடித்து வழிகாட்டிச் சென்றாள் என் பேத்தி போல் ஒருத்தி. ஏதோ பேச்சுக்கொடுத்தால் என்பது அவள் வாயசைவை வைத்துத் தெரிந்துகொண்டேன். மற்றபடி சொற்பொழிவாளர்தான் அங்கு ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார்.

எனக்காக முன்னமே ஒதுக்கப்பட்டிருந்த நாற்காலியில் மீண்டும் என்னை அமர வைத்துவிட்டு பணிவாசச் சென்றுவிட்டாள். அப்பெண்ணுக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத வயது; எட்டாத உயரம்! சிரித்துக்கொண்டேன் என் உயரத்தை எண்ணி.

பார்க்கப் போனால் பத்து நிமிடத்தில் முடிந்திருக்க வேண்டிய சொற்பொழிவு இருபது நிமிடத்துக்கு செழிப்பாகி வளர்ந்துவிட்டிருந்தது. அவர் முடித்ததும் நினைவுச்சின்னம் வழங்குவார்கள், பின்னர் நன்றியுரை, அவ்வளவுதான்.

யார் யாரோ என்னைக் கழுகுக்கண் கொண்டு கொத்துவதற்குத் தயாராய் இருப்பதுபோல் பிரமை தோன்றியது. அந்த பிரமைகளைச் சொற்பொழிவாளரின் கனத்த குரல் தகர்த்தெரிந்து சுயநினைவு தந்துச் சென்றாலும் பிரமையோடு முழுநேரப் போராட்டத்தில் குதிக்கத் தயாராய் இல்லைதான். இயன்றவரை விசுவாமித்திரன்போல் கவனத்தைச் சிதறவிடாமல் பேச்சில் நிஷ்டை செலுத்தினேன். ஆனாலும் மனசு பேச்சோடு ஒன்றவில்லை. திமிறித் திமிறிச் சென்று பகுடி காட்டியது.

எண்ணமெல்லாம் கெஞ்சிக் கூத்தாடிய அந்தப் பிள்ளைகளையே நினைத்திருந்ததை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த காலத்திலும் தமிழின் திருமையைப் பாடும் செந்தமிழ் பாட்டுக்காக எவ்வளவு நேரம் கெஞ்சியும் நான் மறுத்துவிட்டேனே. எவ்வளவு கல்நெஞ்சக்காரன் நான்? உள்ளுக்குள் நெருடல் ஓங்கியது.

இந்த மக்களை நினைத்தால்தான் எனக்குக் கோபம் கோபமாய் வரும். நினைவுச் சின்னம் வழங்கிவிட்டால் அல்லது பரிசு கொடுத்துவிட்டால் போதும். விட்டால் போதும் வீடுபோய்ச் சேருவோம் என்று பறபறவென பறந்தோடித் தொலைந்துவிடுவார்கள். அதற்குப் பிறகு மேடையில் பேய் ஏறினால் என்ன பிசாசு ஏறினால் என்ன? பாவம் நன்றியுரை ஆற்றும் ஜீவன்தான் கேட்க ஆளில்லாமல் உரையை அவசர ஆம்புலன்ஸ் மாதிரி ஓட்டிக்கொண்டிருக்கும்.

இந்த லட்சணத்தில் நான் வேறு போய் பாடவேண்டுமாம் பாட்டு. சாக்காடு நெருங்கி நிக்கிற என்னை மேடையில் பார்த்தாலே முகத்தடிலே சுனக்கத்தக் காட்டும் சனங்கள், நல்ல வேளை என் குரலுக்கும் தமிழ் உச்சரிப்புக்கும் இன்னும் மரியாதை கொடுத்தே வைத்துள்ளனர்.

இந்த மரியாதையை நான் கெடுத்துகோண்டே ஆக வேண்டுமா? பல தடவை முகத்தில் கரியை அப்பிக்கொண்டது பத்தாதா? சுரத்தை எடுத்து சிரத்தையோடு பாடல் வரிகளை பார்த்துப் பாடுவதில் கவனம் செலுத்தும் நேரத்தைச் சந்தர்ப்பமாகப் பிரயோகித்து விடுகிறார்களே. பாடி முடித்து அவையிடம் கவனம் செலுத்தும்போதுதான் தெரியும் அங்கே எஞ்சி நிற்பது நானும் மைக் செட்டைக் கழற்ற வந்தவர்களும்தான் என்று.

சே! அவமதிப்பு எனக்கா, என் வயதுக்கா அல்லது தமிழ் திருப்பாட்டுகளுக்கா?

அதனால்தான் சொல்கிறேன். முடியாது, முடியாது, முடியாது! இருந்தாலும் அவர்கள் என்னை விடுவதாக இல்லை. நிகழ்ச்சி நிரலில் உள்ள கடைசி பாட்டையும் படித்தேயாகவேண்டும் என மல்லுக்கு நிற்பது என் விரைப்பை மீறி அரண் உடைக்கிறது.

“அப்படியானால் ஒரு கண்டிஷன்! நான் பாடி முடிக்கும்வரை யாரும் இந்த அரங்கை விட்டு வெளியேறக் கூடாது. ஏற்பாடு செய்ய முடியுமா உங்களால்?”

தலையை மாங்கு மாங்கென அடிமட்ட விலைக்கு விலைபோகும் மாட்டை நினைவுறுத்தத் தலையாட்டினான் ஒருத்தன். எனக்கே ஆச்சரியமாகிவிட்டது அவனது அசைத்தாலும் அசையாத நம்பிக்கை.

சரி, பாடித்தான் தொலைவோமே என்று ‘போனால் போகிறது’ கணக்கில் இதையும் சேர்த்துக்கொண்டேன்.

இருந்தாலும் அவனது நம்பிக்கையில் எனக்கு ஐயம் எழத்தான் செய்கிறது. நினைவுச் சின்னம் வாங்கிக் கொண்டு அவரவர் பொட்டிப் படுக்கையை மூட்டை கட்ட ஆரம்பித்துவிட்டது நன்றாகப் புலப்பட்டது.

“கடைசியாக தமிழின் அழகைப்பற்றி பாட தனது கானக் குரலோடு வருகிறார்” என்று அறிவித்தாள் அறிவிப்பு செய்யும் பெண். ஆனால், சத்தியமாகச் சொல்கிறேன் கானக் குரலோடு நான் மீண்டும் மேடை ஏறவில்லை; கனக்குரலோடுதான் ஏறினேன். வழித்துணைக்கு வந்து சென்ற பெண்ணொருத்தி மைக்கையும் சரிசெய்துவிட்டு இறங்க நான் தமிழின் அழகு எனும் பாடலைத் தேடிப் பக்கத்தைத் திறந்துகொண்டேன்.

பாடும்போது ஜீவன் பாட்டில் லயிக்கவேண்டும் என்பது நான் சொல்ல முயலும் தத்துவம். அதனால், பாடல்வரி நினைவிலிருந்தால் கண்ணை மூடிக்கொண்டு பாடுவேன்; இல்லையானால், எழுத்துக்களைப் பார்த்துப் படிப்பேன்.

நான் பாடினேன் தமிழின் அழகை கவனம் சிதறாமல்.

பாடலை, குறிப்பாக தமிழின் திருமையைப் பாடும் பாடலைப் படித்து முடித்துவிட்டால் ஒரு நிம்மதியோ பெருமையோ அல்லது அதுபோன்ற எதுவோ கிடைத்த மாதிரி இருக்கும். அதை எனக்கென்ற பாணி என்பதுபோல் குட்டிப் பெருமூச்சி விட்டபடி கம்மென்று மூடிய கண்களை கண்ணியமாய்த் திறப்பேன்.

அடடா! இங்கு வந்த கூட்டத்தைத் தப்பாக எடைபோட்டேனே! பொட்டி படுக்கையெல்லாம் மூட்டைக் கட்டிய மக்கள் போய்த் தொலைந்துவிடுவார்கள் என்று நினைத்தது பொய்யாய்த் தொலைந்ததே! என் கரங்களிலும் உச்சி மண்டையோட்டிலும் எறும்பு ஊருவதாக ஓர் உணர்வு.

பாடல் வரிகளை தாங்கிய காகிதங்களைக் கைகளின் இடுக்கில் வைத்துக்கொண்டு கூப்பி நன்றி என்று சொன்னேன். அதற்காகவே காத்திருந்த வழித்துணைப்பெண் ஓடிவந்தாள். நான் மேடையை விட்டு கீழிறங்க ஒத்தாசை செய்தாள்.

அடுத்து நன்றியுரை. என் யூகப்படி அனுபவப்படி இன்னேரம் இடம் காலியாகியிருக்க வேண்டும். ஆனால், இங்கு அவ்வாறு இல்லை. இங்கு குழுமியிருந்த மக்களெல்லாரும் பண்பு தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். எனக்கும் ஒருவித பெருமிதம்தான்.

நிகழ்ச்சி இனிதே நிறைந்தது.

நான் எழுந்து மண்டப நுழைவாயிலை நெருங்கினேன். அங்கே இன்னும் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களையெல்லம் கடந்து எப்படியோ கட்டட வாசலைக் காட்டும் லிஃப்ட்டைக் கண்டுபிடித்தேன். மிந்தூக்கிக்குள் ஒன்றாம் எண்ணை அழுத்தினால் போதும் சரியாக கட்டட நுழைவாயிலில் கதவைத் திறக்கும் என்று எனக்கு முன்னமே சொல்லி வைத்திருந்தார்கள்.

நானும் ஒன்றாம் எண்ணை அழுத்தினேன். என்னை எங்கெங்கோ நகர்த்தி, பின்னர் கதவு திறந்துகொண்டது; வெளியேறினேன்.

நன்றாகவே தெரிந்தது; வெளியே பெய்யென பெய்யும் மழை!

(3 மே 2009இல் மக்கள் ஓசை நாளிதழ் ஞாயிறு பதிப்பில் பிரசுரமானது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *