நாணயக்கயிறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 7,018 
 
 

‘மாடா! டேய்… எழும்படா!”

‘நான் கத்துறன் அவன் விறுமகட்டை மாதிரிக் கிடக்கிறான்!… எழும்பன்ரா எருமை!”

‘ராசாவுக்கு நான் கத்துறது கேக்கயில்லையோ?…. பொறும் வாறன்!”

வீட்டுக்கார அம்மாவின் அதட்டலில் மாடு இன்னும் எழும்பவில்லை. நான் எழும்பிவிட்டேன். மேற்கொண்டு நிலவிய மௌனம் அம்மா அடுத்த நடவடிக்கையில் இறங்கப் போகிறார் என்பதை உணர்த்தியது.

வெளியே கடுமையான பனி பெய்கிறது. இன்னும் இருள் அகலாத அதிகாலை. போர்வையை இழுத்து உடலை மூடிக்கொண்டு சொகுசைத் தேடுகிறேன். வெளியே சீமேந்துத் தரையில் கிழிந்த துணியொன்றைப் போட்டு படுத்துக்கொண்டிருக்கும் சுந்தரத்தினுடைய நிலை பரிதாபமாக இருந்தது.

வீட்டுக்கார அம்மாவால் ‘மாடு” என அழைக்கப்பட்டவன் சுந்தரம்தான். இந்த வீட்டு வேலைக்காரன். பத்தோ பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க பொடியன். அம்மா இந்த வீட்டு அல்லிராணி.

நான் உத்தியோக நிமித்தம் கொழும்புக்கு வந்தவன். என்னைப்போல் இன்னும் ஏழோ எட்டுப் பேர் இந்த வீட்டில் வாசம் செய்கிறோம். கொழும்புக்கு வேலையாகி வந்த புதிதில், அறையொன்று தேடி அலைந்தபொழுது மிஸ்ஸிஸ் அருள்நாயகம் வீட்டில் இடம் இருக்கிறது. என இங்கே கொண்டுவந்து சேர்த்துவிட்டான் நண்பனொருவன்.

வாசற் கதவில் ‘கடிநாய் கவனம்” என அழகாக எழுதப்பட்ட ஒரு பலகை தொங்குகிறது. அதுகூட அலங்காரத்திற்காகத்தான்! உள்ளே வந்தாற்தான் நிஜமான நாய்கள் ஏதும் இல்லை எனும் உண்மை தெரியும். ஆனால் வீட்டில் இருக்கிற எங்களைப் பொறுத்தவரையில் அம்மாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பு ஒழுகும். அதுதான் எங்களை மடக்கி வைத்திருக்கும் மந்திரமும் கூட!

‘மாடு! எழும்பு… எருமைமாதிரி விடிய விடியக் கிடக்காமல்…” என்றவாறே பாத்திரத்திலிருந்து தண்ணீரை ஊற்றுகின்ற சத்தம் கேட்கிறது. இதைத் தொடர்ந்து ‘ஐயோ… அம்மா!…” என்ற சுந்தரத்தின் அலறல். அவன் இந்த அம்மாவை அழைக்கிறானா அல்லது தனது சொந்த அம்மாவை அழைக்கிறானா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். பகல் முழுவதும் அயராது உழைக்கிற அலுப்பிற்தான் அவன் இந்த கடுங்குளிரிலும் சீமேந்துத் தரையில் ‘மாடு மாதிரி” உறங்குவதன் இரகசியம்! அப்படி ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருப்பவனின் முகத்தில் சடுதியாக குளிர்ந்த நீரை ஊற்றினால் எப்படி இருக்கும்? இது வழக்கமான சங்கதிதான்.

‘போ! மாடு, தேத்தண்ணிக்குத் தண்ணியை வை…” ராணிஅம்மாவின் அதட்டல்தான்.

சுந்தரம் பாத்திரங்கள் கழுவத் தொடங்கிவிட்டான். குளிர் தாங்கமுடியாமற்போலும் பாத்திரங்கள் சிணுங்குகின்றன. அவன் இவ்வீட்டிற்குத் ‘தொட்டாட்டு” வேலைகள் செய்வதற்கு என்றுதான் கொண்டுவரப்பட்டவனாம். ஆனால் அவனுடைய வயதுக்கும் அவனுடைய சக்திக்கும் மீறியே வேலை வாங்கப்படுகிறான். அவன் ராணிஅம்மாவுக்கு மாடாகத்தான் உழைக்கிறான்.

‘ராணிஅம்மா அசையமாட்டா.. அலுவல் செய்தால் அவவுக்கு முதுகு முறிஞ்சுபோடும்! பாவம் .. இந்த பொடியனைப் போட்டு என்ன பாடு படுத்திறாள்…” இப்படி எனது சக அறைவாசிகள் கதைத்துக்கொள்வார்கள். ஆனால் ராணியிடம் கதைக்கத் துணிவு வராது.

‘ஐயா…!… கண்ணன் ஐயா!” – எனது அறைக்கதவு தட்டப்படுகிறது. சுந்தரம் தேநீருடன் வந்திருப்பான்.

‘ஆரது?… சுந்தரமே?… வா ராசா..!”

நான் அவனுடன் கதைக்கும் பொழுதுகளில் அவனுக்கு இனிக்கக்கூடியதாக அன்பைத் தாராளமாகவே கலந்துவிடுவேன். எங்களுடன் கதைக்கும்போதாயினும் ஆறுதலடையட்டுமே என்ற எண்ணத்தில்.

‘சுந்தரம்!… நீ தேத்தண்ணி குடிச்சிட்டியே?”

நான் மிகவும் கரிசனையோடு கேட்க, அவன் அதில் வெட்கமடைகிறான். இப்படித்தான் அவன்மேற் கரிசனைப்பட்டு அக்கறையோடு நாங்கள் ஏதாவது கேட்டால் பதிலளிக்க முடியாமல் வெட்கப்படுவான்.. ஏதோ கேலிக்குட்பட்டவனைப்போல! தன்னிலும் கரிசனைப்படக்கூடிய ‘ஐயாக்கள்” இருக்கிறார்களே என்ற அதிசயம் போலும்.

தேநீரை அருந்திவிட்டு அவனது சொக்கிலே தட்டி எனது நன்றியைச் செலுத்துகிறேன். அவன் ஏதோ தவறுக்குத் தான் உடந்தையாகுபவனைப்போல வெருண்டுகொண்டு ஓடுகிறான்.

வேலைக்குப் போகிறவர்களுக்கு சாப்பாடு போடுவதற்காக சுந்தரம் ஒற்றைக்காலில் நின்று சுழலத் தொடங்கிவிட்டான். இதற்குள்ளே… தவறுதலாக தேநீர் பாத்திரமொன்றைப் போட்டு உடைத்திருக்கவேண்டும்.. ராணி அம்மாவினுடைய பத்திரகாளித்தனம் தொடங்கிவிட்டது. எனக்கு இதைப் பார்க்கச் சகிக்கவில்லை.

‘ஏன் இப்படி அடிக்கிறீங்கள்… பாவம்.” என்கிறேன்.

‘பாவமோ?… இவன்ரை திமிரைப் பாருங்கோவன்!… என்ன குறை வைச்சனான்?… விழுங்கக் குடுக்கிறதிலை குறைவே?… சாப்பிட வழியில்லாமல் கிடந்த மாட்டுக்கு நேரத்துக்கு நேரம் விழுங்கக் குடுத்தால்… கொழுப்பு வைக்கும்தானே…”

‘ஐயோ!… அம்மா… அடிக்காதீங்கம்மா..!”

‘சரி, சரி ! இனி விடுங்கோ… போதும்!”

‘இவனுக்கு நாரி முறியக் குடுக்காட்டித் திருந்தமாட்டான்… இப்படித்தான், ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்டைப் போட்டு உடைக்குது.. மாடு!”

‘ஒரு பாத்திரம் தவறுதலாக விழுந்து உடைந்ததற்கு இவ்வளவு தண்டனையா? பக்குவமாக சொல்லித் திருத்தலாமே.. உங்கட பிள்ளையும் தவறி எதையாவது உடைச்சால் இப்படித்தான் அடிப்பியளோ?’ என்று கேட்கவேண்டும்போலிருக்கிறது. கேட்கவில்லை. கேட்டால் ராணிஅம்மாவின் பத்ரகாளித்தனம் என் மேல் திரும்பி விடுமோ என்ற பயம்!

‘ஐயோ! அம்மா…. அடிக்காதீங்க… நான் போறேங்க… அடிக்காதீங்கம்மா… நான் போறேங்க!

‘என்னடா? போகப்போறியோ?… இஞ்சை திண்டு திண்டு கொழுப்பு வைச்சிட்டுதல்லே?.. இனி உப்பிடித்தான் சொல்லுவாய். மெய்யடா? போகப்போறீயே?..

‘டேய் மாடா, நான் கேட்டதுக்கு பதில் சொல்லிப்போட்டு அழடா… போகப்போறீயே?”

சுந்தரம் தன் தேகத்தில் அடி விழுந்த இடங்களை உரசி உரசி அழுதுகொண்டிருக்கிறான்.

‘உவன் சரியான சாலக்காரன் பாருங்கோ!.. அடிக்கயிக்கை போகப்போறன், போகப்போறன் எண்டு கத்துவான்.. பிறகு கேட்டால் மாட்டனெண்டிடுவான்! அங்கை போனால்… தின்னக் குடிக்க வழியில்லாமல் கிடந்து சாகவேணுமெல்லே!..

‘உவன்ரை தமையனொருத்தன் அழகப்பன் எண்டு பேர்… முந்தி இவற்றை தேப்பனோடை நிண்டவன்.. இப்ப நல்லாயிருக்கிறான்… இவனையும் அவன்தான் கொண்டுவந்து சேர்த்துவிட்டவன்..

‘அவனுக்குச் சொன்னால் தம்பியின்ட தோலை உரிச்சுப்போடுவான்… உப்பிடித்தான்… இவன் முந்தியுமொருக்கால்… போகப்போறனெண்டு… ஓடப்பார்த்தான். பிறகு அவன் தமையனைக் கூப்பிட்டுச் சொன்னம்… நல்ல வடிவாய்க் குடுத்திட்டுத்தான் போனவன். நாங்கள் பாவத்தைப் பார்த்து எப்பன் தட்டினவுடனை… இவனுக்குக் கோபம் வந்திடுது…”

‘மெய்யேடா..? சொல்லு.. போகப்போறீயே?… அப்படியெண்டால் சொல்லு.. கொண்ணனைக் கூப்பிடுவம்..”

சுந்தரத்தினுடைய அழுகையின் சுருதி குறையத் தொடங்கியது.

‘சொல்லன்ரா கெதியாய்!… இஞ்சை உன்ரை வாயைப் பார்த்துக்கொண்டு நிக்க எங்களுக்கு நேரமில்லை…!”

‘…அம்மா! அடிக்காதையுங்கோ, நான் போகயில்லீங்கம்மா”

‘பாத்தீங்களே!.. தமையனுக்கெண்டால் சரியான பயம். அவன் கேள்விப்பட்டால் இவரைக் கொண்டுபோடுவான்..?

‘போ! மூதேவி… போய் அலுவலைப் பார்!”

சுந்தரம் அழுதுகொண்டே குசினிக்கள் செல்கிறான்.

சுந்தரத்தினுடைய அண்ணனை நினைக்கும்போது எரிச்சல் மேலிடுகிறது. மடையன், அவனும் இந்தப் பாலனுக்குப் போட்டு அடித்திருக்கிறானே! ‘வீட்டிற் சாப்பாட்டுக்கு வழியில்லை.. இங்கு ஏதாவது கிடைப்பதே கடவுள் புண்ணியம்! இதையும் விட்டால் எங்கே போவது..’ என்ற ஆத்திரத்தில் அடித்திருப்பான்.

சுந்தரத்தின் பலவீனமும் இதுதான். அடியிலும் உதையிலும் வதைபட்டாலும், பின்னர் சாப்பாட்டின் தேவை வரும்பொழுது அந்த வேதனைகளை மறந்துவிடுகிறான்போலும். இந்த காட்டுமிராண்டித் தனத்தையெல்லாம் அவன் சகித்துக்கொள்வதைப் பார்த்தால் முன்னர் பசியின் கொடுமையை எவ்வளவு உணர்ந்திருப்பான் என்று தோன்றியது.

ராணிஅம்மாவின் நாணயக்கயிறும் அதுதான். மாடு மாதிரி வேலை வாங்குவாள். விருப்பம் போல அடிப்பாள். உதைப்பாள். சாப்பாட்டை அளந்து போடுவாள். சாப்பாட்டை குறைத்து, கூட்டி தனது எண்ணத்துக்கு ஆட வைப்பாள். அதில் அவன் சுழலுவான். சொன்னபடி நிற்பான்.

மாடு வண்டி இருக்கிறதுதான். எவ்வளவோ பாரத்தை அது எசமான் சாப்பாடு போடுகின்ற நன்றியுணர்வுடனும், கடமையுணர்வுடனும் இழுத்தாலும் ஏனோ வண்டிக்காரன் ஏதோ நியதிக்குட்பட்டவன்போல அதை அடிக்கொருதரம் அடித்து இம்சைப்படுத்துகிறான்? வண்டி இழுக்கின்ற மாட்டின் கட்டுப்பாடும் அவனது கையிற்தான். அதன் மூக்கினூடு துளையிட்டுச் செலுத்தப்பட்ட கயிறு (நாணயக்கயிறு) அவன் கையிலிருக்கும். அதை சுண்டி இழுப்பதன் மூலமும், அசைப்பதன் மூலமும் மாடு போகவேண்டிய திசையையும், நிற்கவேண்டிய இடத்தையும் அவனே நிர்ணயிப்பான்.

சுந்தரத்தின் நாணயக்கயிறு ராணிஅம்மாவின் கையிலிருக்கிறது. காரணமற்ற அடியிலும் உதையிலும் இம்சைப்பட்டு போகவேண்டும் என முனைபவன், பின்னர் சாப்பாட்டு மந்திரத்தில் அடங்கிவிடுகிறான்.

இப்படி எண்ணியவாறு, இனி வேலைக்குப் போகவேண்டும் என ஆயத்தமாகிக்கொண்டு சாப்பாட்டு மேசையில் அமர்கிறேன்.

‘டேய்! கெதியில் சாப்பாட்டை வையேண்டா!… ஐயா வேலைக்குப் போகவேணும்…” ராணிஅம்மாவின் அதட்டல்தான். சாப்பாட்டு மேசைக்கு ஓடி வருகிறான்.

‘அங்கை பாருங்கோ… அவன்ரை வண்டியை…ராத்திரிச் சாப்பிட்டது இன்னும் செமிக்கையில்லை, அதுதான் இந்தத் திமிர்…”

அவனுடைய வயிற்றின் பருமனைக் குறிப்பிட்டு ராணிஅம்மா கதைக்க, அதில் அவன் மாத்திரமல்ல… நானுமே சங்கடப்படுகின்றேன்.

‘ஏன்டா மறைக்கிறாய்?… இஞ்சாலை திரும்பன்ரா எருமை!… வயித்தை எக்கிக்கொண்டு நில்லாமல் வடிவாய் நில்லடா..”

அவன் என் பக்கம் வயிறு தெரியக்கூடியதாக திரும்பி, ஏதோ குற்றம் செய்துவிட்டவனைப்போல கூனிக் குறுகினான். சாதாரணமாகவே அவனது வயிறு சற்றுப் பருமனான தோற்றமுடையதுதான். ராணிஅம்மா அடிக்கடி, ‘அங்கை பாருங்கோ வண்டியை!… மூக்கு முட்ட விழுங்கிப்போட்டு நிக்கிறான்.” என எங்களுக்குச் சொல்லிக்கொள்வது வழக்கம். அவனுக்கு குறைவில்லாமல் சாப்பாடு போடுவதாகக் காட்டிக்கொள்வதற்குப்போலும்! ஆனால்… இங்கு அறைகளில் இருக்கின்ற நாங்கள் அனைவரும் தாங்களும் சாப்பிட்ட பின்னரே, மிகுதியில் சுந்தரத்துக்குச் சாப்பாடு போடுவதை நான் எத்தனையோ முறை கவனித்திருக்கிறேன். அதையும் அவன் உடனே சாப்பிடுவது தண்டனைக்குரிய குற்றம். அவனுடைய பாத்திரத்தில் ராணிஅம்மா அளந்து போடுவாள். அதை ஒரு புறத்தில் வைத்துவிட்டு மற்றவர்கள் சாப்பிட்ட பாத்திரங்களையெல்லாம் கழுவி ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டுப் பின்னர்தான் சாப்பிடலாம்.

நான் வேலைக்குச் சென்றுவிட்டு மதியச் சாப்பாட்டிற்காகத் திரும்பியபொழுதும் அமர்க்களம் ஓயவில்லை. இப்பொழுது அம்மாவுடன் ஐயாவும் சேர்ந்துகொண்டுவிட்டார்.

‘ஐயோ!… அடியாதைங்க சாமி…!”

‘மாடு!..கொண்டுபோடுவன்! வேலையைச் செய்யடா எழும்பி!…”

சுந்தரம் விறாந்தையிற் கிடந்து உருண்டவாறே அழுகிறான்.

நான் வந்ததும் ராணிஅம்மா நியாயம் கூறத் தொடங்குகிறாள்.

‘இல்லை பாருங்கோ… அவன் இண்டைக்கு ஒரு குணம் கொண்டு நிக்கிறான்… ஒரு அலுவலும் செய்யிறானில்லை! சொல்லுறதைக் கேக்கிறானில்லை… அவரும்தான் எழும்படா எழும்படா எண்டு வாய் கிழியக் கத்திக்கொண்டு நிக்கிறார்… அவன் அசைஞ்சால்தானே!”

நான் பதில் பேசாமலே நிற்கிறேன்.

என்னைக் கண்டதும், சுந்தரத்தினுடைய குளறல் கூடுகிறது.

‘ஐயா! கண்ணன் ஐயா!… அடிக்கிறாங்க ஐயா!… என்னைக் கொல்றாங்க ஐயா… ஐயா…!”

கூப்பிட்ட குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்! இங்கே சுந்தரத்தினுடைய அவலக் குரலைக் கேட்டும் மௌனம் கொண்டு நிற்கிறேன், கண்ணன் என்கிற நான்!

‘டேய்! வாய் பொத்தடா மாடு!”- இது ஐயா,

‘ஐயோ! அடிக்காதீங்க சாமி!”

ஐயாவுக்கு சுந்தரத்தின் பால் சற்று இரக்கம் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால்… ராணிஅம்மாவின் அன்பைச் சம்பாதித்துக்கொள்வதற்கு, இது அவருக்கு ஒரு சுலபமான வழி!

சுந்தரத்தின் முதுகிலே பல புதிய தழும்புகள். வலதுபக்க தோள்மூட்டிலே ஒரு காயத்திலிருந்து இரத்தம் வழிகிறது. நான் பொறுக்கமுடியாமல் ஐயாவிடமே கேட்கிறேன்.

‘அங்கை பாருங்கோ அவனுக்கு ரத்தம் வழியுது… நல்லாய் அடிச்சுப் போட்டீங்களா?”

ஐயா ஒரு சமாளிப்புச் சிரிப்புடன் சொல்கிறார்.

‘சீ! அப்பிடி அடிப்பமே?… அது… அவ அடுப்புக்கு வைக்க விறகுக்கொள்ளியை எடுத்தா… இவன், தனக்கு அடிக்க போறாவாக்குமெண்ட பயத்தில திரும்பினான்… அதுதான் சாதுவாய் பட்டிட்டுது…”

‘சாதுவாய்த் தட்டுப்பட்டு இந்தமாதிரி காயம் வந்து ரத்தம் கொட்டும் எண்டு இண்டைக்குத்தான் கேள்விப்படுறன்…!” எனது பேச்சில் சற்று சூட்டைக் கூட்டுகிறேன்.

அதைத் தாங்கமுடியாமற்போலும் ராணிஅம்மாவின் கோபம் சுந்தரத்தின்பால் அதிகரிக்கிறது:

‘உன்ரை திமிருக்குக்… காலமை பட்டினி போட்டது போதாது… இண்டு முழுக்க உனக்குச் சாப்பாடு தாறதில்லை… கிடந்து வத்தினால்த்தான் புத்தி வரும்.”

‘அம்மா!… அடிக்காதீங்கம்மா! நான் போறேங்க… என்னைக் கொல்லாதீங்கம்மா…!…” என்றவாறே சுந்தரம் எழுகின்றான். வாசலை நோக்கி ஓட முயற்சிக்கிறான். ராணிஅம்மா எட்டிப் பிடித்துவிடுகிறாள்.

‘என்னடா?… போகப் போறியோ?”

‘ஆமாங்க! நான் போறேங்க… எனக்கு அடிக்காதீங்க… உங்களைக் கும்புடுறேம்மா..”

அம்மாவின் தாக்குதலின் உக்கிரம் அதிகரிக்கிறது. அடியின் கோரத்தில், ‘நான் போகலீங்க…” என சுந்தரம் சொல்லவேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. அவன் நெளிந்து நெளிந்து குழறுகிறான்.

‘நான் போகறேங்க!… போறேங்க.. போகப்போறேங்க!..”

“தோட்டக்காட்டுச் சனியன்! உன்ரை புத்தியை காட்டிப்போட்டாய்… நாங்கள் இவ்வளவு காலமும் தின்னத் தந்ததுக்கு என்னடா கூலி!…”

எனக்கு சுரீரென்றது! இவ்வளவு கீழ்த்தரமாக… இவர்களால் பேச முடிகிறதே..!

‘அடிக்காதீங்கம்மா!… நான் போறேங்க…”

‘நான் கேட்டதுக்குப் பதிலைச் சொல்லிப்போட்டு போய்த் துலையன்ரா…! உடுத்த துணியோட நிக்குதெண்டு ரெண்டு சாரமெல்லே எடுத்துத் தந்தனாங்கள்… அதையெல்லாம் தந்திட்டுப் போடா!”

சுந்தரத்தின் அழுகை குறைகிறது… அம்மாவை நோக்கித் திரும்புகிறான். ‘போகலீங்க..!” என்று சொல்லப் போகின்றானோ!

‘மெய்யடா மாடா, திண்டதுக்குக் கூலி என்னடா?”- அம்மாவின் ஆவேசம்.

சுந்தரத்தின் அழுகை நிற்கிறது.

‘நீங்க தானே கூலி தரணும்?… நான் எவ்வளவு வேலை செஞ்சிருக்கிறேன்.. அதுக்கெல்லாம் என்ன கூலி தந்தீங்க..?”

‘என்னடா? திமிர் புடிச்ச மாடு?”

ராணிஅம்மா அவனுடைய வயிற்றில் ஓங்கி உதைக்கிறாள். தொப்பென விழுந்து மீண்டும் எழ முயற்சித்தபொழுது ஐயா தன் பங்கைச் செலுத்துகிறார். அந்த உதையில் சுந்தரம் வீட்டுக்கு வெளியில் விழுகிறான்.

“எருமை மாடு! உன்னை என்ன செய்யிறன் பார்!” என்றவாறே அவனை நோக்கி ஓடுகிறாள் ராணிஅம்மா.

சுந்தரம் எழுந்துவிட்டான்.

‘தூ! மிறுகங்கள்!” என்றவாறே அவன் ராணிஅம்மாவை நோக்கித் துப்புகின்றான். எச்சில் அம்மாவின் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றது. அந்த எதிர்பாராத தாக்குதலில் அவள் அதிர்ந்துபோய் நிற்க,

அவனுடைய பாதங்கள் ஒரு புதிய தீவிரத்துடன் பூமியை உதைத்துச் செல்கின்றன!

– நாணயக்கயிறு அறுந்தது!

– இனி மாடு அதன் எண்ணத்துக்கு ஓடும்.

(சிரித்திரன் சஞ்சிகையிற் பிரசுரமானது – 1976)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *