நவீன கார்த்திகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2018
பார்வையிட்டோர்: 5,253 
 
 

ஊரிலிருக்கும் போது பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது யமுனாவிற்கு.

அம்மா ஒவ்வொரு பண்டிகையையும் சின்ன வயசில எப்படிக் கொண்டாடினாள் என்று பாட்டி சொல்லியிருந்தாள்.

கார்த்திகைத் திரு நாளுக்கு முந்தைய தினம் அம்மாவும், அவளின் தோழிகளும் சக்கரம் பொறுத்தப்பட்ட யானை விளக்கு, பாவை விளக்கு, ஐந்து முக விளக்கு, அன்ன விளக்கு என்று பல விதமான விளக்குகளை ஒரு கூடையில் வைத்து குளத்திற்கு எடுத்துச் செல்வார்களாம்.விளக்குகளில் புளி தடவி கரையிலுள்ள மண்ணை எடுத்து தேங்காய் நாரினால் தேய்த்துபளபளக்கச் செய்வார்களாம். இதில்யார் வீட்டு விளக்கு பளிச்சென மின்னுகிறது என்பதில் போட்டி வேறு. தேய்த்தபின் கழுவி குளக்கரையில் காய வைத்து விட்டு அவர்கள் விளையாடுவதற்குள் அவை காய்ந்து விடுமாம்.

பின்னர் வீட்டிற்குஎடுத்துச் சென்று ஒவ்வொரு விளக்கிற்கும் திரியிட்டு பொட்டு வைத்து ஏற்றுவதற்குத் தயாராக அடுக்கி வைப்பார்களாம்.

பாட்டியும் மற்ற பாட்டிகளுடன் சேர்ந்து நெல்லை மண்ணுடன்சேர்த்து சட்டியில் வறுத்து அது பொரிந்தவுடன் அந்த அரிசிப்பொரியை வெல்லப்பாகு , தேங்காய்த் துருவல்சேர்த்து உருண்டையாகப் பிடிப்பார்களாம்.

பின் அப்பமும் அடையும் செய்து, பொரி உருண்டையையும் வைத்து விளக்கேற்றி வழிபடுவார்களாம்.

சகோதரன் நன்றாக இருக்கவேண்டும் என வேண்டிக் கொண்டு யானை விளக்கில் நெய் ஊற்றி ஏற்றுவார்களாம். அதே நேரத்தில் ஊர் மக்கள் செழித்துவாழ கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துவார்களாம்.

பள்ளிப் பேருந்தில்அமர்ந்துகொண்டே இத்தனை யோசனைகள் யமுனாவிற்கு. வீட்டிற்குள் நுழைந்தவுடன் யமுனா பேச ஆரம்பித்தாள் தொலைபேசியில்.

அம்மா இன்னிக்கு கார்த்திகை தானே. நான் பட்டுப் பாவாடை சட்டை போட்டுக்கிட்டேன். விளக்குகளை எங்க வச்சிருக்கீங்க. நீங்க வரதுக்குள்ள நான் சுத்தப்படுத்தி தயாரா வைக்கிறேன்.

விளக்கு ஏத்திட்டு நாமெல்லாரும் கோவிலுக்கு சொக்கப் பனை பாக்கப் போலாமா? .

ஒன்ணும் அவசரமில்லை. நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. சொக்கப்பனை நேரடி ஒளி பரப்பு டி.வி ல யே பாக்கலாம். அம்மாவின் பதிலைக் கேட்ட யமுனாவுக்கு ஒரே ஆச்சரியம்.

இப்போதே மணி ஐந்து. ஆறு மணிக்குள்ள எப்படி விளக்கேற்ற முடியும். சோகத்துடன் அமர்ந்தாள்.

அரை மணி நேரம் கழித்து அவளின் அம்மாவும், அப்பாவும் வந்தனர் கை நிறைய சாமான்களுடன்.

ஐந்தே நிமிடத்தில்அப்பா விளக்குகளைப் பெட்டியிலிருந்து எடுத்து பாலிஷ் செய்து வைத்தார். அதன் மேல்திரி போடுதற்குப் பதில் அம்மா விளக்கின் ஒவ்வொரு முகத்திலும் விதவிதமான மெழுகு வர்த்திகளை அடுக்கினாள்.

யானை விளக்கில் நெய் ஊற்ற வேண்டாமா. கேட்டுவிட்டுத் திரும்பிய யமுனாவுக்கு ஆச்சரியம். அப்பா யானை விளக்கில் சிறிய சுடர் போன்ற பல்பைப் பொருத்திக் கொண்டிருந்தார்.

அலங்கரிக்கப்பட்ட தட்டுக்களில் வெளியிலிருந்து வாங்கி வந்த கார்த்திகைப்பொரி, அப்பம், அடைகள் அடுக்கப்பட்டன. ஆறு மணிக்கு முன்னரே யமுனாவின் வீடு கார்த்திகைத் திருநாளுக்குத் தயாரானது.

இனி மெழுகுவர்த்தி விளக்கை ஏற்றி, சுவிச்சை அமுக்க வேண்டியதுதான். அவளுடைய மும்பை அபார்ட்மெண்ட்

வீட்டிலும் நவீன கார்த்திகை தீபம் ஒளிரும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *