அக்கா போன் சேய்தாள்!
” நந்தினி! எங்க வீடு வரைக்கும் வந்துட்டு போகிறாயா? மனசு சரி இல்லை! நீ வந்து பேசிட்டு போனா கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும்!”
அக்கா இப்படித்தான் சின்ன விஷயத்துக்கெல்லாம் பயப்படுவாள்.
தன் ஒரே பையன் வினோத்தை கல்லூரி ஹாஸ்டலில் சேர்த்த இந்த இரண்டு மாதமாக ரொம்பவும் தனிமையில் கஷ்டப்படுகிறாள்.
மாமா காலை 9 மணிக்கு ஆபிஸுக்கு சென்றால் மாலை 6 மணிக்கு மேல்தான் வருவார்.அது வரை அவள் சும்மா இருந்தாலும் பரவாயில்லை.
இந்த டி.வி நாடகங்களைப் பார்த்து ரொம்பவே குழம்பிப் போகிறாள்.
எனக்கு என் வீட்டில் வேலை சரியாக இருக்கும்.இரண்டு பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு மதியம் அவர் வீட்டில் வந்து சாப்பிடுவதால் சமையல் வேலையை முடிக்க,மாலை பசங்களுக்கு ஹோம் ஒர்க் சொல்லிக் கொடுக்க என்று பிஸியாக இருப்பதால் எதைப் பற்றியும் நினைக்க எனக்கு நேரமில்லை.
அக்கா வீட்டிற்கு சென்று கதவைத் தட்டினேன்.
“யாரு?”கொஞ்சம் எச்சரிக்கையாகத் தான் இருக்கிறாள்.
“நான்தான் நந்தினி”
“இதோ வர்ரேன்”
கதவைத் திறந்து பார்த்துவிட்டு அதன் பிறகு பூட்டி இருந்த கம்பிகேட்டை திறந்தாள். ரொம்பவே பயந்து போயிருந்தாள்.
“நந்தினி பயமா இருக்குடி! மாடி வீட்டு அந்த குண்டு பையன் பார்வையே சரிஇல்லை.எதிர்த்த வீட்டம்மா என்னப் பார்த்து நக்கலா அடிக்கடி சிரிக்கிற மாதிரி இருக்கு.மாமா பைக்ல போகும்போது ஏதாவது ஆகிவிடுமோ? இப்படி எதையாவது நினைச்சுகிட்டே இருக்கிறேன்.”கண் கலங்கினாள்.
டி.வி.யில் ஒரு பெண் யாரை எப்படி போட்டுத் தாக்கலாம் என்று பிளான் போட்டுக் கொண்டிருந்தாள்.ஏதோ சீரியல் ஓடிக் கொண்டிருந்தது.
“முதல்ல டி.வி.யை நிப்பாட்டு அக்கா.
இனிமேல் இந்த மாதிரி சீரியல் எல்லாம் பார்க்காத!”
“பக்கத்து வீட்டு சாரதா அக்கா யோகா,தியான கிளாஸ்ஸீக்கு போயிட்டு இருந்தாங்களே இப்போ போறாங்களா?”
“போறாங்கடி.என்னையும் கூப்பிட்டாங்க நான் தான் போகிறதில்லை.”
“நாளைல இருந்து அவங்க கூட யோகா கிளாஸுக்கு போக்கா. அப்புறம் டெய்லி சாயந்திரம் பக்கத்துல இருக்கிற கிருஷ்ணர் கோவிலுக்கு போய்ட்டு வா! உன் கிட்டதான் நல்ல புத்தகங்கள் இருக்கே அதையெல்லாம் வாசிச்சுப்பார்.டி.வி.அதிகம் பார்க்காதே.சமையல்ல புது வெரைட்டி யு டியூப்ல கத்துகிட்டு மாமாவுக்கு செஞ்சு கொடு.இதையெல்லாம் செய்க்கா அப்புறம் நீயே மாறிடுவ. மத்தவங்க நம்மள எப்படி பார்க்கிறாங்கனு சிந்தனையே வராது.”
“அப்ப என் மேலதான் தப்புங்கிறீயா? சரிடி! நீ சொல்ற மாதிரி நல்ல விஷயங்களை எல்லாம் செய்து பார்க்கிறேன்!”
“வெரிகுட்! நாளைக்கே யோகா கிளாஸ் ஜாய்ன் பன்னிடு.நான் போகிறப்ப சாரதா அக்கா கிட்டே சொல்லிட்டு போயிடரேன். போயிட்டு வர்ரேன் அக்கா.”
இரண்டு வாரம் கழித்து மாமாவிடம் இருந்து போன்.
“நந்தினி! உங்க அக்கா ரொம்பவே மாறிட்டாள்.எனக்கே தியானம் எப்படி செய்றதுனு கிளாஸ் எடுக்கிறானா பார்த்துகோ.டி.வி. சீரியல் எல்லாம் பார்க்கிறதில்லை.ரொம்ப ஹாப்பியா இருக்காடி. ”
அப்பாட இப்போ தான் நிம்மதியா இருக்கு எனக்கு.