தன் தம்பி அழைப்பு தான் என்று, நம்பரை பார்த்ததும் தெரிந்து கொண் டாள் சுமதி.
குப்பென்று வியர்க்க, லேசான பட படப்புடன், தன் மொபைல் போனை ஆன் செய்தாள். “கடவுளே… தம்பி நல்ல செய்தி சொல்ல வேண்டும்…’ மனதுக்குள் கடவுளை வேண்டியபடி, “”என்னாச்சு பாலு… பயந்த மாதிரி இல்லியே?” தன் எதிர்பார்ப்பையே கேள்வியாக்கினாள் சுமதி.
சில நொடிகள் மவுனம். சுமதியின் பயம் அதிகரித்தது.
“”அக்கா… வேற வழியில்லை… நாம ஜீரணிச்சுதான் ஆகணும். அத்தான் தான் இந்த ஊர்ல இருக்காரு. என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தேன். வீடு சன்னதி தெருவுல இருக்கு. தொடர்ந்து ரெண்டு மணி நேரம் நோட்டம் விட்டேன். அந்த வீட்ல ஒரு பொண்ணு, உன் வயசு இருக்கும்; ஒரு பையன், பத்து வயசு இருக்கும்; ஒரு வயசான அம்மாவும் இருக்காங்க.”
சுமதிக்கு இடி விழுந்தது போல், <உடல் நடுங்கியது. அமைதியான இல்வாழ்க்கையில் எதற்கு சுனாமியாக இந்த நிகழ்வு? விதியின் விளையாட்டா?
""பாலு... நல்லா பாத்தியாடா?''
அழுகை கலந்து கேட்டாள் சுமதி.
""ஆமாக்கா... தூரமா மறைந்து நின்னு போன் கூட பண்ணினேன்... அத்தான் எடுத்தாரு. எங்கன்னு கேட்டா, சேலத்துலேன்னாரு. உடனே எதிரில் நிக்கணும்ன்னு தோணிச்சுக்கா... ஆனா, இந்த விஷயத்த நீயும், அத்தானும் பேசி முடிச்சுக்கணும். வேற யாருக்கும் தெரிய வேண்டாம்ன்னு அடக்கிகிட்டேன்.''
""என்னடா சொல்ற... நாம மோசம் போனது உண்மைதானடா... எப்படியும் ஊர் சிரிக்காமலா போகும்? நீ இப்பவே போய் கேளுடா. இல்ல <உடனே நான் புறப்பட்டு வரவா?''
இப்போது சுமதிக்கு கோபமும் வந்தது. பாலு நிதானமிழக்காமலேயே பேசினான்.
""அக்கா... உன் அவசர புத்தினால காரியத்த கெடுத்துடாத... ஆம்பளைங்க சபலத்துல சறுக்கறது பெரிய அதிசயமில்லை. நாம தான் பக்குவமா அதுலேர்ந்து அவர விடுவிக்கணும்; அதுவும் நாலு பேருக்கு தெரியாம.
""உனக்கும் பையன் இருக்கான். பொறுமையா இரு. அத்தான் வீட்டுக்கு வந்ததும் விசாரி. அவரு பொய் சொன்னா... அப்புறம் நான் வர்றேன். எதையும் கண்ணால் காண்பது, காதால் கேட்பதை விட, தீர விசாரிக்கணும்க்கா!''
பாலுவின் தத்துவார்த்தமான பேச்சு, சுமதியை ஆறுதல் படுத்தவில்லை. அவள் 99 சதவீதம் ஏமாற்றப்பட்டாள் என்பது உண்மை. மீதி ஒரு சதவீதம் பெரிதாக என்ன சாதித்துவிடப் போகிறது?
லைனை கட் செய்தாள். மனசும் உடலும் துவண்டன. அவள் நொந்து போக காரணங்கள் உண்டு.
அவள் கணவன் சங்கர், ஒரு மினரல் வாட்டர் கம்பெனியில் மேனேஜர். மாதம் ஒரு முறை சேலத்தில் உள்ள தலைமை அலுவலகத் திற்கு சென்று, கணக்கு வழக்குகளை காட்ட வேண்டிய பொறுப்பும் <உண்டு.
இது சுமதியின் திருமணமான மாதத்தில் இருந்தே நடைபெறுவது வழக்கம் தான். போன மாதம் ஒருநாள், திடீ ரென்று அவள் தம்பி பாலு, போன் செய்தான்.
சங்கரை விழுப்புரத்தில், பஸ் ஸ்டாண்டில் அல்ல, ஒரு தெருவில்... ஆட்டோவில் சங்கரை பார்த்துவிட்டு, பிறகு சுமதிக்கு போன் செய்தான். விழுப்புரம் வழியாக சேலம் சென்றாலும், சங்கர் கூடியவரை நேர் பஸ்சில் தான் செல்வான்.
அப்படியிருக்க, விழுப்புரத்தில் ஏதோ ஒரு தெருவில், சங்கருக்கு வேலையில்லையே?
சங்கர் அந்த முறை ஊர் திரும்பிய பிறகு சுமதி விசாரிக்க... "நானா... தெருவிலயா... அதுவும் ஆட்டோவுலேயா... உன் தம்பி வேற யாரை யாவது பாத்திருப்பான்!' சங்கர் சாதாரணமாக மறுத்து விட்டான்.
சுமதிக்கு பாலு மீது தான் சந்தேகம் வந்தது.
"போடா... போய் கண்ண செக் பண்ணிக்க!' என்றாள்.
விஷயம் அத்தோடு முடிந்தாலும், பாலு விடவில்லை.
"அக்கா... இன்னொரு தடவ அத்தான் சேலம் போகட்டும். அப்ப வெச்சுக்கறேன்...' என்றான்.
இந்த முறை சங்கர், சேலம் செல்வதை அறிந்து, முன்கூட்டியே பாலு, விழுப்புரத்தில் காத்திருந்தான். சுமதியிடம், "ரெடியாக இரு...' என்றும் சொல்லியிருந்தான்.
பொறிக்குள் எலியாய் சங்கர். உடனே சுமதிக்கு தொடர்பு கொண்டான்.
அக்காவின் வாழ்க்கை, பிரச்னை ஆகக்கூடாது என்ற பாலுவின் அக்கறை... சுமதிக்கு மகிழ்ச்சி தரவில்லை. சங்கரின் பித்தலாட்டம், அவளை நொடிக்க செய்தது.
"கடவுளே... எல்லாம் கனவாக இருக்க கூடாதா?'
மறுநாள் இரவு, சங்கர் வீட்டிற்கு நுழைந்தான். அவனுக்கு சுமதியின் சோகம் அதிர்ச்சியாக இருந்தது.
""சுமதி... என்னாச்சு... உடம்பு சரியில்லையா? தலைக்கூட சீவல?'' சற்று பதறினான்.
அவனையே வெறித்தும் பார்த்தாள் சுமதி.
""எங்க போய்ட்டு வர்றீங்க?''
சங்கரின் பார்வையும், நொடியில் மாறி சற்று மிரண்டன.
""என்ன கேட்ட?''
""எங்க போயிட்டு வர்றீங்க?'' சுமதியின் குரல் சற்று உயர்ந்தது.
சங்கர் கண் மூடி, சற்று யோசித்தான். பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டான். பிறகு, ""அம்மா எங்கே?'' மெதுவாக கேட்டான்.
""எதுக்கு அத்தைய தேடறீங்க... அவங்க தூங்கிட்டாங்க... உங்க பதிலுக்காகத் தான் உயிர வெச்சிருக்கேன்!''
சொன்ன சுமதியை பாவமாக பார்த்தான் சங்கர்.
""சுமதி... உன் நிலமை புரியுது. மொதல்ல ஒண்ணு சொல்றேன். எங்கேயும், எந்த தப்பும் நடக்கல... பயப்படாத... வா... இப்படி உட்கார்.'' எழுந்து சுமதியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து, ஒரு சேரில் உட்கார வைத்தான். ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருக சொன்னான். பிறகு, தானும் எதிரில் அமர்ந்தான்.
""குழந்த?''
""அவனும் தூங்கிட்டான்!''
""சரி... நானா எல்லாத்தையும் சொல்றதை விட, <உன் சந்தேகங்களை கேளு. நான் உண்மையை சொல்றேன். ம்... கேளு!''
""அப்ப இதுவரைக்கும் உண்மையை மறைச்சிருக்கீங்களா?''
""ஆமாம்... அது நம்மோட நன்மைக்காக!''
""நம்மோட நன்மைக்குன்னு எப்படி நீங்க உறுதியா சொல்றீங்க?''
""அத... நீ என்னோட மத்த பதில்லேந்து புரிஞ்சுப்ப.''
""சேலத்துக்கு போனீங்களா?''
""போனேன்.''
""விழுப்புரத்துல ஏன்... எப்ப இறங்கினீங்க?''
""போகும் போதே இறங்கினேன். ஒரு பைவ் அவர்ஸ் வேலை முடிஞ்சதும், என் ட்யூட்டிக்காக சேலம் போயிட்டேன்.''
""விழுப்புரத்துல ஏன்னு கேட்டேன்?''
சற்று யோசித்தான் சங்கர்; பிறகு சொன்னான்.
""என் தங்கச்சிய பார்க்க!''
சுமதிக்கு அதிர்ச்சி... அதில் கூடவே ஒரு நிம்மதி!
""யார் அது புதுசா... ஒரு தங்கச்சி?''
""புதுசு இல்ல... பழசுதான். உனக்கு புதுசு... இப்பதான் தெரிஞ்சது. தங்கச்சின்னா கூட பொறந்தவ இல்ல... தங்கச்சி முறை. இன்னும் விளக்கமா சொன்னா, என் அப்பாவோட இல்லீகல் மனைவியோட மகள். எங்க ரெண்டு பேர் உடம்புலேயும் ஒரே ரத்தம்தான் ஓடுது!''
""இது ஊருக்கு தெரியுமா?''
""தெரியாது சுமதி! எப்படி சொல்ல முடியும். எங்கப்பா சாகறதுக்கு ஒரு நாள் முன்னாடிதான் என்கிட்டயே சொன்னார்.''
""அவர் செஞ்சது தப்பில்லியா?''
""தப்புதான்.''
""ஏன் கண்டிக்கல?''
""கண்டிக்கற வயசு எனக்கில்ல. மேலும் கண்டிச்சாலும் அப்பா திருந்தி எந்த புண்ணிய முமில்லை. எல்லாம் காலம் கடந்து போச்சு! அத பக்குவமா கையாள்றதுதான் வாழ்க்கை!''
""அம்மாவுக்கு, அதாவது அத்தைக்கு தெரியுமா?''
""தெரியாது!''
சுமதிக்கு மீண்டும் அதிர்ச்சி!
""ஏன் அத்தைகிட்ட சொல்லல?''
""அம்மாவோட நிம்மதிய, எந்த மகனும் கெடுக்க விரும்ப மாட்டான்!''
""எதுக்கு மாசம் ஒரு தடவ போறீங்க?''
""எங்கப்பாவை நம்பின அவங்களுக்கு, ஒரே உறவு நான்தான்! எனக்கு கடமையும் உண்டு; ஒரு அண்ணன் செய்ய முடிஞ்சத செஞ்சேன். தங்கைக்கு சிம்பிளா கோவில்ல கல்யாணத்த முடிச்சேன். மச்சான் வெளியூர்ல வேல பாக்குறாரு. ஒரு பையனும் <உண்டு.''
""அப்பாவோட தப்பான முறையில் வந்த உ<றவுக்கு, ஏன் மரியாதை தர்றீங்க?''
""சுமதி... இந்த என்னோட <உடம்பு, என் அப்பாவோட ஒரு வடிவம்தான். இந்த வீடு, என் அப்பாவோட சொத்து. எப்படி அப்பாவோட நல்லது எல்லாம் எனக்கு சேருமோ... அதே மாதிரி இதுவும் சேரத்தான் செய்யும். இதுல மட்டும் விலகறது சுயநலம் தான?''
""அப்ப ஊர் அறிய சொல்ல வேண்டியது தானே?''
""கரெக்ட் தான்; சொல்லலாம். இந்த ஊர் என்னோட அணுகுமுறைய புரிஞ்சுக்கும்ன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. ஊருக்கே தெரியும் போது, எங்கம்மாவுக்கு தெரிய வந்தா... நான் அத விரும்பல?''
""எப்படி எல்லாத்துக்கும் ஒரு பதில ரெடியா வெச்சிருக்கீங்க?''
பயம், பதட்டம் நீங்கியவளாய் கேட்டாள் சுமதி.
""அடிப்படையில் நான் தப்பு செய்யல. உண்மைய சொல்றேன். எதுக்கு யோசிக்கணும்?
""எல்லாம் சரிங்க... என் கிட்ட ஏன் மறைச்சீங்க?''
இதற்கு சங்கர், என்ன பதில் தருவான் என்று சுமதி மிகவும் ஆர்வமாக இருக்க... சங்கர் தொடர்ந்தான்...
""ரொம்ப சிம்பிள் சுமதி! நீ எங்கப்பாவ பத்தி கேவலமாக நினைக்கலாம். சின்ன பிரச்னை வரும்போது, குத்தி காட்டலாம். அப்புறம் நான் தங்கச்சிய பாக்கிறத விரும்பாம போகலாம். மீறிப் போனா, அம்மாகிட்ட சொல்லிடுவேன்னு மிரட்டலாம். இத தவிர்க்கத்தான் நான் சொல்லல?''
""அட இப்ப தெரிஞ்சிருச்சே... இனிமே அது மாதிரி நடந்தா... என்ன செய்வீங்க?''
""என்ன செய்ய முடியும் சுமதி! போராடித்தான் ஆகணும் இல்ல. இப்பவாவது புருஷன் உண்மைய சொன்னானேன்னு, நீயும் என்னை மாதிரி சுமூகமா மாறிடலாம்! ஆனா, இந்த ஏழெட்டு வருஷம் நான் நிம்மதியா இருந்தது உண்மைதான? உன்கிட்ட மறைச்சதால, அது லாபம்தான?''
கணவனின் ஒவ்வொரு வார்த்தையும், உண்மையின் உரைகற்களாக இருப்பது சுமதிக்கு புரிந்தது. சில மணி நேரம் முன்பு வரை, அவள் நம்பிக்கையிழந்து காணப்பட்டாலும், அந்த மீதி ஒரு சதவீதம், அவளை காப்பாற்றப்பட்டது புரிந்தது. கணவனின் மடியில் நிம்மதியாக தலைசாய்ந்தாள் சுமதி.
- செப்டம்பர் 2010