நஜ்மா நாடிய பாதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2023
பார்வையிட்டோர்: 2,064 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நான் என்ன பண்ணுவேன் மஸ்தான்? தலையை முட்டிக்கிட்டு அண்ணனிடம் எவ்வளவோ மாரடிச்சுப் பார்த்துட்டேன். தலையெழுத்து இப்படிக் குதியாட்டம் போட்டுடுச்சே!” என்று அங்கலாய்த்தாள் பாத்திமா. நீர் முட்டி நின்ற விழிகளை மைந்தனின் சாந்தம் பொலியும் வதனத்தின் மீது ஒட்டியதும், நீர்த் திவலைகள் சிதறி. சுருக்கங்கள் படிந்த கன்னங்களில் உருண்டோடின.

“இது விதி செஞ்ச தமாஷா என்று நினைக்காதே. அம்மா . பெண்ணாகப் பிறந்த ஜீவன்களைச் சொக்கட் டான் காய்களாக மாற்றி இந்தத் துனியாவில் மனித குலம் ஆடும் சூதாட்டம், அம்மா!” என்றான் மஸ்தான் மனமொடிந்தவனாய். தலையை இறுகப் பிடித்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நீங்கி வெளிவாசலுக்குச் சென்றான். திண்ணையில் அமர்ந்து கொண்டு ஜலப்பிரளயம் போல் கண்ணீர் வடித்தான்.

சுருட்டு வியாபாரியான யூசுப் ராவுத்தர் பெற்றெடுத்த பொற்கொடியைத் தாங்கிக்கொள்ள இரு கொழு கொம்புகள் வாட்ட சாட்டமாக வளர்ந்து நின்றதைக் கொடிக்கால் பாளையத்து வாசிகள் கவனித்து வந்தார்கள். ஒருவன் மஸ்தான். மற்றவன் ரஹமத்துல்லா.

ராவுத்தரின் தங்கை மகன் மஸ்தான். நற்குணங்கள் வாய்ந்த நல்ல திடகாத்திரமான ஜவான். மூன்றாம் படிவம் வரை படித்தவன். பீடியோ. சுருட்டோ, ரேக்கோ அவன் சுருள் விட்டதை யாரும் பார்த்ததில்லை. இவ னுக்கு முற்றும் மாறுபட்டவன் யூசுப் ராவுத்தரின் மைத் துனன் மகன் ரஹமத்துல்லா. உள்ளூர் மாத்திரமல்ல; சுற்று வட்டாரங்களில் கூட ஏதாவது கலாட்டாவும் சச் சரவும் நிகழுமானால், அங்கே ரஹமத்துல்லா தரிசன மளிப்பான் என்பது எல்லாரும் அறிந்த விஷயமாகும்.

நஜ்மாவின் தளிர்க் கரத்தைக் கைப்பற்ற ரஹமத் துல்லாவுக்குத் துணிச்சல் உண்டானதற்கு ஒரே காரணம் தன் அத்தையிடம் அவன் செலுத்திய செல்வாக்குத்தான். குடும்ப விவகாரங்களில் யூசுப் ராவுத்தர் தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மை என்றும், தர்பார் நடத்திச் சட் டங்களை அமலாக்குவது அத்தை ஒருத்திதான் என்றும் அவன் பல வருஷங்களுக்கு முன்பே தெரிந்து கொண்டான். அத்தைக்குப் பிரியமான பன்னீர்க் கொய்யாப் பழங்களை யும், கும்பகோணம் வெற்றிலையையும் வீட்டிற்கு விஜயம் செய்யும் போதெல்லாம் கொண்டுவந்து அன்புக் காணிக் கைகளாக அளித்து, காத்தூன் பீயின் அபிமானத்தையும் நம்பிக்கையையும் அடைவதில் ‘பிறைக்கொடி’ நாட்டி விட்டான் அந்தக் கில்லாடிப் பயல்!

“என்னாங்க, பாக்கு வெட்டி வேணுமா?” என்று காத்தூன் பீ மிக்க பரிவுடன் பீடிகை போட்டாள். அந்தச் சமயத்தில் யூசுப் ராவுத்தரின் மிஞ்சிப் போன கடைப் பற்கள் கொட்டைப் பாக்குடன் யுத்தத்தில் ஈடு பட்டு அதைத் துவம்சம் செய்து விடக் குஸ்தி போட்டுக் கொண்டிருந்தன.

“வேணாம். சுண்ணாம்புக் குவளையை எடுத்துவை” என்றார் ராவுத்தர்.

வெற்றிலைக் காம்பை ஒழுங்காகக் கிள்ளி. அதை மடித்து நாக்கில் லாகவமாகக் கொடுத்து உள்ளுக்குள் தள்ளி, ராவுத்தர் சப்புக் கொட்டிய அந்தச் சிறந்த சுப வேளையில், “என்னாங்க இது. உங்க தமாஷா! நீங்க பாட்டுக்குக் காசுக்கு உதவாத கூட்டாளிங்களோடு திரிஞ் சுட்டு இருந்தா , பனைமரம் மாதிரி வளர்ந்த நம்ம நஜ்மாவை என்ன தான் செய்ய நினைச்சிருக்கீங்க?” என்று காத்தூன் பீ கறுவியதும், ராவுத்தருக்குத் திக்கென்றது.

“நான் சும்மானாச்சும் நேரத்தை வெட்டிக்குக் கழிக்கி றேன்னு நினைச்சுக்காதே. நல்ல இடமாப் பாத்துத்தான் வெயில்லே அலையறேன்.”

“கையிலே கெளுத்தி மீன் வச்சுக்கிட்டு ஆணத்திற்குக் கத்திரிக்காயைத் தேடி அலைஞ்சாளாம். அப்படித்தான் இருக்கு உங்க கதை.”

ராவுத்தரின் உதடுகள் விரிவதற்குள் மேலும் தொடர்ந்தாள் : ”உங்க சோம்பலைப் பார்த்து அலுத்துப் போய் நானே இந்த விஷயத்திலே குதிச்சுட்டேன். பேச்சு வார்த்தையும் நடத்தி முடிச்சுட்டேன்!”

“என்ன சொன்ன?” – ராவுத்தரின் தலை கிறு கிறுத்தது.

“நீங்க ‘பொவிலை ‘ வாங்க அறந்தாங்கிக்குப் போன வேளையிலே என் அண்ணன் இங்கே ஒரு நாள் வந்துட்டுப் போச்சு.”

“அப்படியா?”

“ஆமாங்க. மெத்தைப் பாய், அஞ்சறைப் பெட்டி, தாழாம் பெட்டி நிறைய அச்சுப் பணியாரமும் கொய்யாப் பழமும் , வாத்து முட்டையும் கொண்டு வந்து கொடுத்துச்சு.”

“அப்புறம்?”

“நம்ம நஜ்மாவைப் பத்தி அதுக்குச் சொல்ல முடியாத கவலை. உங்களுக்குக்கூட அவ்வளவு இல்லைன்னு சொல்வேன். மேல் விசயத்தை யெல்லாம் பேசி முடிச் சுட்டு , புள்ளேயின் நிக்காஹ்வை சட்டுப்புட்னு முடிச் சுடு , காத்தூன்’ என்று தாக்கீது கொடுத்துப் போச்சு.”

“மாப்பிள்ளை யாராம்?” “இது என்னாங்க புதுசாக் கேக்கிறீங்க? நம்ம ரஹமத் துல்லா தான் “

“உன் அண்ணன் மவனா” – ராவுத்தருக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“அந்த உறவுகூட அதுக்குள்ளாற மறந்துட் டீங்களே”

“அந்தக் கேப்மாரி, பேமானி. ஹராமியா உன் மகளைக் கட்டப் போகிறவன்?” – குமுறினார் யூசுப் ராவுத்தார்.

“ஏங்க தாறாமாறாக வாய் போனபடி உதட்டைச் சுளிச்சுச் சுளிச்சுப் பேசுறீங்க? நாம் சுகமாயிருக்கோம்னு உங்க சொந்தக்காரங்களுக்குப் பொறுக்கமாட்டேன் கிறது. அதுவும் உங்க தங்கச்சி இருக்கே. உம்மாடீ! என் மேலேயும் சரி , என் அண்ண ன் மேலேயும் சரி, என் குடும்பத்து மேலும் சரி, பொறாமையாலே வயிறு எரிஞ்சு என்ன என்னமோ கதை யெல்லாம் கட்டி எங் கெங்கேயோ பேசிக்கிட்டுத் திரியுது. நம்ம ரஹமத்துல்லா வுக்கு என்ன குறைச்சலாம்? ஆறுவேலி நிலம் இல்லையா? தோப்பிலிருந்து முந்நூறு தேங்காய் வரலியா? குளம் குட்டை குத்தகைக்கு எடுத்து மீன் பிடிச்சு லாபம் அடிக்கிலியா?”

“காத்தூன், போதும் புள்ளே. அந்தப் பேச்சு வேணாம்” என்றார் ராவுத்தர் பொறுமை இழந்தவராய்.

“எனக்குத் தெரியுமே உங்க பகல் வேஷம்! அந்தத் தடிப்புள்ளே உங்க தங்கச்சி மவனை மனசிலே வச்சிக் கிட்டு, சைத்தான் மாதிரி பேயாட்டம் ஆடுறிங்க.”

“அவனும் வேணாம். இவனும் வேணாம் ” – ராவுத்தர் எரிச்சலுடன் சீறிவிட்டு இடியாப்பத் தட்டைப் போன்ற வெண்மை நிற வலைத் தொப்பியைத் தரையில் ஓங்கி அடித்தார்.

வழக்கம்போல் எதிர்த் தாக்குதலை ஆரம்பிக்கக் காத்தூன் பீ தயங்கவில்லை .

“சரிங்க. சொல்லிப்புட்டேன். அந்த ரஹமத்துல்லா வுக்கு நஜ்மாவைக் கொடுக்காட்டிப்போனா நானே அந்தக் குட்டியைத் தரதரன்னு இளுத்துட்டுப் போய்க் குட்டை யிலே தள்ளிடப் போறேன். அப்புறம் உங்களுக்கும் எனக்கும் அறுந்து போச்சுன்னு நினைச்சுக்குங்கோ’ – கர்ஜித் தாள் அந்த அடங்காப் பிடாரி!

தம் அருமைத் துணைவியின் எண்ணத்தை மாற்ற முடியாத துடைநடுங்கி யூசுப் ராவுத்தர் இந்தக் கிடுக்கித் தாக்குதலுக்குப் பின் உடல் நடுங்கிக் ‘குடாக் ‘காக மாறி விட்டார்!

புழைக்கடைப் பக்கம் நீர் முட்டி நின்ற நயனங் களுடன் சகடையில் தாம்புக் கயிற்றைத் திணித்த வண்ணம் கிணற்றிடம் நின்று கொண் டிருந்தாள் நஜ்மா.

“நஜ்மா” என்ற ஜீவனற்ற ஹீனக் குரலைச் செவி மடுத்துச் சிரத்தையின்றிக் கழுத்தைத் திருப்பினாள். தன் மருங்கிலே மஸ்தான் நிற்பதைக் கண்டதும் அவள் உடலின் உதிர ஓட்டம் உறைந்துவிட்டது.

“விஷயம் காதில் விழுந்தது, நஜ்மா” என்று மஸ்தான் நடுங்கிய குரலில் நவின்றவுடன் அந்தக் காரிகையின் கயல் விழிகளில் தத்தளித்த நீர் கன்னங்களில் சிந்தி உருண்டோடியது.

“நான் என்ன செய்வேன்? பெண்ணாக இந்த உலகத் திலே தலை காட்டிவிட்டால் இரண்டு உதடுகளையும் ஒன்று சேர்த்துத் தைச்சுடுறாங்களே இந்த மனித சாதி” விம்மலுக்கிடையே மேலும் ஆர்ப்பரித்தாள் : “இத்தனை நாளா ராவும் பகலும் அழுது அழுது என் கண்கள் அவிஞ்சு போச்சு , மஸ்தான். என் நெஞ்சிலே கொழுந்து விட்டெரிந்த பிரேமையை அம்மாவின் காதிலே நான் போட்டதன் பலன் என் கன்னங்கள் தடிச்சுப் போச்சு. என் எண்ண மும் எரிஞ்சு சாம்பலாயிடுச்சு.?” இருதயத் தைக் கீரிக்கொண்டு எழுந்த அவள் ஓலம் மஸ்தானை ஆட்டி விட்டது.

“மனத்தை அலட்டிக்காதே. நஜ்மா . வாழ்க்கையைத் தன் இஷ்டம் போல் ஆட்டி வைக்கும் விதிக்கு முன் நீயும் நானும் என்ன செய்ய முடியும்? எனக்கு ஒன்றும் கவலை இல்லை. ஆனால் உனக்கு வரப் போகிறவனை நினைத்தால் ஏக்கம் என் இருதயத்தை ரம்பம் போல் அறுக்குது. நஜ்மா. ஜவந்திப் பூப்போன்ற உன்னை ஒரு முரடனிடம் ஏன் உன் வாப்பா ஒப்படைக்கப் போறாரோ? இந்த ஏழையால் என்ன உதவி செய்ய முடியும்? நஜ்மா ! என் ஆசை நஜ்மா!” என்று மிக்க உணர்ச்சியுடன் சொல்லி, தன் முன் நிற்பவளின் தோள்களின் மீது கைகளை வீசி இறுக அணைத்துக்கொண்டு கண்ணீர் , சாரல் சார லாகப் பொழிந்தான் மனமொடிந்த அத்தை மகன்.

“எல்லாம் குழப்பமாயிருக்கு. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.”- கைகளைப் பிசைந்துகொண்டு விசித்து விசித்து விம்மினாள் நஜ்மா.

“இதுதான் நம் கடைசிச் சந்திப்பு! இத்தனை வருஷங் களாக நமக்குள் வளர்ந்த அன்பையும் காதலையும் சாட்சி களாகக் கவனித்த இந்தக் கிணற்றுச் சுவர் இனிமேல் இடிந்து விழுந்துவிடும்; அந்தப் பூவரச மரம் ஒடிந்து மடிந்துவிடும்; உன் மனசிலே நிலைத்து நின்ற என் உருவங் கூட உருக் குலைந்து அழிந்துவிடும். நஜ்மா” – நாத் தழு தழுக்கச் சொல்லி, காதலியின் கொய்யாக் கன்னங்களை ஆசையுடன் தடவினான் மஸ்தான்.

“நான் சொல்வதைக் கேட்பீங்களா?” என்றாள் நஜ்மா கம்மிய குரலில்.

“சொல், என் ஆசைக் கிளியே! எது வேண்டுமானாலும்; இந்த அடிமைக்கு உத்தரவு கொடு.”

“உங்கள் வேதனை என்னை வாட்டுது. உங்கள் நிலைமை என்னைப் பைத்தியமாக்குது. என்னை எங்கே யாவது அழைத்துக்கொண்டு போய்விடுங்கள்” என்று நஜ்மா அவன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு மன்றாடியதும், மஸ்தான் மேலும் கலங்கிவிட்டான்.

“உன்னைப் பெற்றவர்களின் ஆசையிலே மண்ணைப் போட்டுவிட்டு என்னுடன் கிளம்பவா போறே. நஜ்மா? அதைவிடப் பெரிய பாவமும் துரோகமும் இந்த உலகத் தில் இல்லை. வேண்டாம் இந்த எண்ணம்.”

நஜ்மா குலுங்கிக் குலுங்கி அழலானாள்.

“ஒன்று மாத்திரம் நிச்சயம், நஜ்மா. என் பாக்கி நாட் களை இப்படியே ‘ஒண்டாங்கட்டி’யாகக் கழித்து விடத் தீர்மானித்து விட்டேன்.”

“ஹா” வாயை இறுகப் பொத்திக்கொண்டு பேந்தப் பேந்த விழித்தாள் நஜ்மா.

“நீ குடி புகுந்த என் நெஞ்சிலே வேறு எவளுக்கும் இடம் இல்லை. இது நிச்சயம்.”

‘மஜ்னூ’, தன் லைலா விடம் விடை பெற்றுக் கொண்டு நேத்திரங்களிலே நீர் கொப்பளிக்க, நெஞ்சிலே நெருப்புக் கொழுந்துவிட்டெரிய மறைந்தபின் ஒரு மாதம் சோகத்துடன் மாண்டுவிட்டது.

தஞ்சாவூர் ஞானமணி பாண்டு ஜாம் ஜாமென்று முழங்க, மாலையில் நாகூர் ‘இசைத்தேனீ’ மஜீதின் இஸ் லாமிய ‘கவ்வாலி’ கீதங்கள் சக்கை போடு போட யூசுப் ராவுத்தரின் செல்வி நஜ்மாவுக்கும் விற்கொடி ஜனாப் க.த. த . ப . ரஹமத்துல்லாவுக்கும் அல்லாஹுத்தாலாவின் பேரருளால் நிக்காஹ் நிறைவேறியது.

திருமணம் ஆகி இரண்டு வாரங்களுக்குள் யாதொரு முன்னறிவிப்புமின்றித் திடீரென்று தன் இல்லத்திற்கு மணமகள் திரும்பி வந்ததைக் கண்டதும் யூசுப் ராவுத்த ருக்குச் சொரேலென்றது.

“என்னம்மா , நஜ்மா? இப்படித் திடுதிப்புனு சொல் லிக்கொள்ளாமல் வந்துட்டே? கன்னம் ஏன் அப்படி உப்பியிருக்கு? பொன்னுக்கு வீங்கிபோல் இருக்கு” என்று மகளின் கன்னங்களைப் பாசத்துடன் ராவுத்தர் தடவிக் கொடுத்ததும், தாவணியின் தலைப்பினால் தன் முகத்தை மறைத்துக்கொண்டு விம்மினாள் நஜ்மா.

“கன்னம் மாத்திரமல்ல, வாப்பா. இரண்டு பல்லை யும் தட்டி எடுத்துக்கிட்டுத்தான் என்னை அவர் அனுப்பி னாரு” என்று நாத் தழுதழுக்க நஜ்மா சொன்னதும் தந் தையின் கண்கள் குளங்களாக மாறின. நெற்றியை இறு கப் பிடித்துக்கொண்டு வெளித் திண்ணையில் அசந்து உட் கார்ந்துவிட்டார்.

இந்தச் சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு மறுமுறை நஜ்மா விஜயம் செய்தபோது, அவள் தோற் றத்தைக் கண்டு பெற்றோர் வெலவெலத்துப் போனார்கள். மகளின் செவிகளைச் சிங்காரித்திருந்த அரச இலை வாளி கள் காணவில்லை. கழுத்தில் மின்னிக்கொண் டிருந்த அகத்திக்காய்ச்சுவடி மாலையும், காசுமாலையும் மறைந்து விட்டதைக் கண்டதும் காத்தூன் பீயின் நெஞ்சு பகீ ரென்றது.

“அம்மா, என்னை ஒரு பாறாங்கல்லோடு கட்டிப் பாழுங் கிணற்றிலாவது நீங்க தள்ளியிருக்கக் கூடாதா?” என்ற ஆவேசத்துடன் ஆர்ப்பரித்துத் தாயை இறுகக் கட்டிக்கொண்டு கதறினாள் நஜ்மா.

ஒரு வருஷம் கழிந்தபின் நஜ்மா திரும்பியபோது ஓர் பயங்கரச் செய்தியுடன் வந்து சேர்ந்தாள்.

“அவர் அக்கரைக்குப் போறாராம்” என்றாள் நஜ்மா. தலையைக் கவிழ்த்துக்கொண்டு.

“போய்த் தொலையட்டும்” என்றார் யூசுப் ராவுத்தர். எரிச்சலும் வெறுப்பும் அவர் தொனியில் தாண்டவ மாடின.

‘நானும் கூட வரணுமாம்; அவர் தாக்கீது கொடுத்து விட்டார்.”

இதைக் கேட்டதும் ராவுத்தருக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“நீ எதற்காம்?”

“அவருக்குச் சோறு ஆக்கிப்போட.”

“போட்ட நகை நட்டுகளை நாசமாக்கிவிட்டு, கொடுத்த சீர் வரிசைகளை அடகு வச்சு, பனா’வாக்கிவிட்டு, இப்போ இந்தச் சீமையிலே செஞ்ச அக்கிரமம் போதாதுன்னு அங்கே அழைத்துப் போய் அறைகளும் உதைகளும் கொடுக்க அந்தப் படுபாவி உன்னைக் கூப்பிடுகிறானா?”

“அவர் குணத்தைப் பார்த்து என் நாக்குப் புரளக்கூட மாட்டேங்குது. நான் அவரோடு ஒரு நிமிசம் இல்லாட்டிப் போனால் அவர் நிலைமை இன்னும் படுமோசமாகி விடும். தலைவிதி காட்டிய வழியிலே நான் போயிடுறேன். வாப்பா. அல்லாவின் அருளினால் திரும்பி ஒருநாள் வரா மலா போவேன்?”

மகளை இறுகத் தழுவிக்கொண்டு தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தார் ராவுத்தர்.

நான்கு வருஷங்கன் உருண்டோடின.

மகளின் பிரிவையும் அவளுடைய கேவலமான இல் லற வாழ்க்கையையும் நினைந்து நினைந்து ஏங்கிய யூசுப் ராவுத்தர் வெகுநாட்கள் இக்குவலயத்தில் இருக்கவில்லை. இறுதி யாத்திரை செய்து விட்டார்.

கயிற்றுக் கட்டிலில் புற்றுநோயினால் அவதிப்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடந்த காத்தூன் பீயின் பஞ் சடைந்த விழிகள் யாரோ ஒருவனை எதிர்பார்த்துக் கொண்டு வாசற் கதவை நோக்கியவண்ணம் சுழன்று கொண்டிருந்தன.

கதவை மெதுவாகத் திறந்து கொண்டே உள்ளே நுழைந்தான் மஸ்தான்.

“வந்தூட்டியா மஸ்தான் ” – அனல் போன்ற நெடு மூச்சு , காத்தூன் பீயின் உடலை உலுக்கிவிட்டு வெளிக் கிளம்பியது.

“தந்தி கிடைச்சவுடனே புறப்பட முடியாமே போச்சு. மாமி. ரெயில் தவறிப்போச்சு. பஸ்ஸிலும் மாட்டு வண்டியிலும் மாறி மாறி ஏறி வந்து சேர்ந்தேன்.”

தன் இடுப்பில் செருகியிருந்த கடிதத்தை எடுத்து நீட்டினாள் காத்தூன் பீ . லிகிதத்தின் மடிப்பை மஸ்தான் பிரித்ததைக் கண்ட பிறகு கழுத்தை வேறுபக்கம் திருப் பிப் புரண்டு படுத்தாள்.

கடிதம் பின்வருமாறு:

அன்பார்ந்த அம்மாவுக்கு வணக்கம்.

அல்லாஹுத்தாலாவின் அருளால் நான் சுகமாயிருக் கிறேன். எவ்வளவோ பாடுபட்டு, பணமென்று பார்க்கா மல் தண்ணீர் போல் வாரி இறைத்து என் வாழ்க்கையை மலரச் செய்ய நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமங்களுக்கு நான் எந்த விதத்தில் நன்றி செலுத்த முடியும்?

கடல் கடந்து இங்கே வந்து நான்கு வருஷங்களாகியும் அவர் பழைய மனிதராகவே இருந்தார் ! வேலை செய்யும் ரப்பர்த் தோட்டத்திலேயும் தம் தீய வேலைகளைக் காட்ட அவர் தயங்கவில்லை. எப்போது பார்த்தாலும் சீனாக்கார னோடும் மலாய்க்காரனோடும் சண்டைதான். யரோ ஒரு பாவி அவரைக் குத்தி, உயிரைக் குடித்து விட்டு, உடலைப் புதருக்குள்ளே மறைத்துவிட்டான். அவரை அடக்கம் செய்து, நாற்பதாவது நாள் பாத்தியாவும் ஓதியாச்சு. குழந்தை குட்டி இல்லாத நான் இந்தப் பாழும் வயிற்றுக் குத் தீனி போட இங்கேயே தங்கிவிடத் தீர்மானித்து விட்டேன். உங்களுக்கு நான் எந்த விதத்திலும் தொந்த ரவு கொடுக்கமாட்டேன்.

தங்கள்,
நஜ்மா .

(இந்தக் கடிதம் நஜ்மா பீ சொன்னபடியே கெலாங் எஸ்டேட் மானேஜர் க.கா. ச. சா. ஷேக் தம்பி மரக்காய ரால் எழுதப்பட்டது.)

கடிதத்தைப் படித்து முடித்ததும் திக்பிரமையுடன் நின்றுவிட்டான் மஸ்தான். கூடத்தில் பரவி நின்ற மயானத்தின் நிச்சப்தத்தை ஊடுருவிக்கொண்டு கிளம்பியது காத்தூன் பீயின் ஹீனக் குரல்.

“நான் பாவி மஸ்தான்! நேருக்கு நேராகப் பார்க்க ஆண்டவன் கண்ணிரண்டும் கொடுத்தும், குருடாகிவிட் டேன். பெற்ற மகளையே சகதியில் தள்ளிய மிருகமான நான் ராவுத்தரையும் நரகத்துக்குச் சீக்கிரம் அனுப்பி விட்டேன்” என்று மிக்க வேதனையுடன் சொல்லிவிட்டு, சப்பியெறிந்த மாங்கொட்டை போன்ற வாடி வதங்கிய தன் முகத்தைப் படார் படாரென்று அடித்துக்கொண்டாள் காத்தூன் பீ . குச்சி போன்ற அவள் கரங்களை இறுகப் பிடித்துக்கொண்டான் மஸ்தான்.

“நான் இப்போ சொல்லப்போவதை நீ கேப்பியா. மஸ்தான்?”

“சொல்லுங்கோ , மாமி.”

“இந்தப் பாவியின் முகத்தில் முழிக்கக் கூடாதுன்னு அந்த அறியாப் பொண்ணு அக்கரையிலே தங்கிடுச்சு. நீ கப்பலேறி அவளை அழைச்சுட்டு வந்துடு.”

ஒரு விநாடி மௌனம் சாதித்தான் மஸ்தான். “என்ன, சட்டுனு சொல்லேன்.” – காத்தூன் பீயின் நெஞ்சு படபடத்தது.

“அப்படியே செய்கிறேன், மாமி.”

“அப்படி அந்தக் குட்டி வர இடக்குப் பண்ணினா. கொழுநனைப் பறிகொடுத்த அந்த அபலையை நிக்காஹ் செய்து கொண்டு அங்கேயே தங்கிவிடு, என் கண்ணு!”

மஸ்தான் மலைத்துவிட்டான்.

“சரின்னு சொல்லேன், மஸ்தான் ! இந்தக் காதாலே நான் கேட்டுடுறேன்.” ஹீனக் குரலில் கெஞ்சினாள் காத்தூன் பீ .

தன் சம்மதத்தின் அறிகுறியாக மஸ்தான் லேசாகத் தன் சிரத்தை அசைத்தவுடன், காத்தூன் பீயின் தலையும் இறுதி அசைவுடன் சாய்ந்துவிட்டது!

வாளி போன்ற தகர டப்பா இடது கரத்தில் தொங்கிக்கொண் டிருக்க, சிறு கத்தியினால் ரப்பர் மரத் தின் பட்டையைச் செதுக்கிக்கொண் டிருந்த நஜ்மாவை எலும்பும் தோலுமாகக் கண்டதும் மஸ்தானின் நாடித் துடிப்பு ஒரு விநாடி நின்று விட்டு, மறுபடி அடிக்கத் தொடங்கிற்று. “நஜ்மா” என்று அவளை அழைக்கக்கூட அவனுக்குத் தைரியமில்லாமற் போயிற்று.

“நீங்க எப்படி இவ்வளவு தூரம் வந்துட்டீங்க” என்றாள் நஜ்மா நிதானத்துடன்.

“நீ நஜ்மாதானா என்று கண்களை நம்பாமல் அப்ப டியே நின்றுவிட்டேன்!” என்றான் மஸ்தான் தழுதழுத்த குரலில் .

“ஏன், நான் நல்லாத்தானே இருக்கேன்?” – வறட்டுச் சிரிப்பு அவள் அதரங்களில் கிளர்ந்து மறைந்தது.

“உன் நிலைமை எனக்குத் தெரியாதா. நஜ்மா? வாழ் விலே உன்னைப்போல் வரம்பில்லா வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவித்தவர் வேறு யார் இருக்கப் போகிறார்கள்? உன்னைப் பாழ்படுத்தியவர்கள் வந்த வழியே திரும்பி விட்டார்கள். நீ சந்தோஷமாக நல்ல முறையில் வாழவேண்டுமென்ற ஒரே திடமான எண்ணத் துடன் காலத்தையும் கடலையும் கடந்து வந்த நான் நீட்டிய கரங்களுடன் உன் முன்னால் நிற்கிறேன்.”

“அதற்காகவா வந்தீர்கள்?” – பஞ்சடைந்த அவள் விழிகள் சுழன் றன. சிரம் கவிழ்ந்த து.

“ஆமாம், படுகுழியில் வீழ்ந்து தத்தளிக்கும் உன் னைக் கைகொடுத்து மீட்பது என் கடமை அல்லவா நஜ்மா.”

“வீணான எண்ணம்” “தஞ்சைச் சீமையிலே பிறந்த பெண்ணொருத்தி அயல் நாட்டில் உற்றார் உறவினரின்றித் தனித்து வாழ் வது உகந்த தல்ல. என்னுடன் புறப்படு. வாதாடாதே

“என் உடல் இந்த ஊர் மண்ணோடு மண்ணாகப் போகுமே தவிர, இவ்விடத்தை விட்டு நகர எனக்கு உத் தேசமே இல்லை!” – நஜ்மாவின் குரலில் கண்டிப்புத் தொனித்தது.

“எல்லாம் வல்ல இறைவனின் தீர்ப்பை யாரால் மாற்றமுடியும்? சரி, நீ வரவேண்டாம். இதையாவது கேள். உன்னை இழந்ததனால் உள்ளம் இரு கூறுகளாகப் பிளந்தும், உயிரை எப்படியோ சமாளித்து வந்த நான் உன்னை நிக்காஹ் செய்து கொண்டு நீ இழந்த இல்லறச் செல்வத்தை மீட்டு உனக்கு அளிக்கப்போகிறேன், நஜ்மா. இது உன் தாய் இறக்கும் போது கொண்ட விருப்பங்கூட ; நான் வந்ததன் நோக்கம் இதுவே.”

“நிக்காஹ்வா!” உன்மத்தம் பிடித்தவள் போல் அந்த அடவியே எதிரொலிக்கும்படி உரக்கச் சிரித்தாள் நஜ்மா.

“கணவனை இழந்த உன் போன்ற இளம் பெண் மறு விவாகம் செய்து கொள்வது ஓர் உத்தமமான காரியமாகும். நீ இஸ்லாத்தில் பிறந்தவள் என்பதை ஞாபகம் வை.”

கோடையிடி போல் குமுறிக்கொண்டு கடகடவென்று பேய்ச்சிரிப்பை எழுப்பினாள் நஜ்மா.

“என் கழுத்துக் கருவமணி அறுந்தாலென்ன. மஸ் தான்? என்னை அன்புடன் பீவியாக ஏற்றுக்கொண்டு நாலு வருஷங்கள் ஆசையுடன் அணைத்துக்கொண்டு வாழ்ந்த என் எசமானர் இங்கே யல்லவா தங்கிவிட்டார்? அவரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனிடம் பாத்தியா’ ஓதிவிட்டு அவர் சமாதியில் ஒவ்வொரு நாளும் ஊதுவத்தி களை ஏற்றிவைக்கிறேன்.”

“அநியாயங்களும் அக்கிரமங்களும் புரிந்து ஒரு பாவமு மறியாத பெண்ணின் வாழ்வைக் குலைத்த ஒரு பாவிக்கா இந்தத் தொண்டை நீ செய்கிறாய், நஜ்மா?”

‘கணவனிடம் தலாக்’ வாங்கிக்கொள்ளும்படி என் னைப் பெற்றவங்களே எவ்வளவோ முறை வற்புறுத்தியும் என் கையை ஆசையுடன் பிடித்தவரின் சுண்டு விரலைக் வேளை தனித்துவிடும் இத் தப்பித் மறுக்குக் கடத்தக் கூட நான் நழுவவிடவில்லை. ஏதோ அவர் போதாத காலம், என்னோடு நேர்மையான வாழ்க்கையை நடத்தக் கொடுத்துவைக்கவில்லை. என் வயிற்றுக்குக் கஞ்சி ஊற் றிய அந்த அமீர் எனக்குத் தப்பித் தவறிச் செஞ்ச தீங்கு களை மன்னித்துவிடும்படி அந்த ரஹ்மானிடம் ஐந்து வேளைத் தொழுகையிலும் கெஞ்சிக் கேட்கிறேன். என் நாளை இப்படியே போக்கிவிட்டால், என் நொந்த நெஞ்சு ஆறாமலா போயிடும், மஸ்தான்?” – குபுகுபுவென்று பீரிட் டெழுந்த கண்ணீர் அவளது அங்கி யாவையும் தாவணியை யும் நனைத்துவிட்டது.

“நஜ்மா, என்னென்னமோ கனவுகளுடன் வந்து சேர்ந்தேன் நான்.” – கைகளைப் பிசைந்து கொண்டு திரு திருவென்று விழித்துக்கொண்டு வெடவெடவென்று நடுங்கிய துடைகளுடன் மஸ்தான் நின்றிருந்த கோலம் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

“அட, கனவுகள் தானே! பொழுது விடிஞ்சுபோச்சே! உங்கள் உபதேசங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு வந்த வழியே தயவு செஞ்சு திரும்பிப் போங்கள்” என்று தலை குவித் துச் சலாம் போட்டுவிட்டுத் தான் நாடிய நாட்டத்தை நிரூபிப்பதுபோல் மாரியாகக் கண்ணீரைப் பொழிந்த கண்களைத் தாவணியின் தலைப்பினால் கசக்கிக்கொண்டே நடைபாதையில் விறுவிறுவென்று நடந்து, மேடு பள்ளங்களைக் கடந்து, புதர்களிடையே மறைந்தாள் நஜ்மா.

– பெருநாள் பரிசு, முதற் பதிப்பு: டிசம்பர் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.

– 1956-ஆம் ஆண்டு கலைமகள்’ தீபாவளி மலரில் மணம் பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *