கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 6,017 
 

சுமதிக்கு இருபத்தியாறு வயது. கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களில் கணவருடன் மேட்டூர்டாம் மால்கோ காலனி குடியிருப்பில் தனிக் குடித்தனம் வந்துவிட்டாள். புது இடம், எவரையும் தெரியாது…எப்படிக் குடித்தனம் நடத்துவது என்று தவித்துக் கொண்டிருந்தபோது அறிமுகமானவள்தான் பக்கத்துவீட்டு மல்லிகா.

மல்லிகாவுக்கு முப்பத்தைந்து வயது இருக்கும். சிரித்தமுகத்துடன் சுறுசுறுப்பாக இருந்தாள். அவளின் அளவான, கவர்ச்சியான சிரிப்பைப் பார்த்து சுமதிக்கு அவளை ரொம்பப் பிடித்துவிட்டது. தானே போய் அறிமுகப் படுத்திக்கொண்டு அவளிடம் ஈஷிக் கொண்டாள். ஒரு சின்ன சந்தேகம் என்றாலும் அடிக்கடி அவள் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தாள்.

இருவருக்கும் நல்ல புரிதலுடன் நட்பு உண்டானது. மல்லிகாவுக்கு பள்ளிக்குச் செல்லும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். காலையில் அதுகளை எழுப்பிவிட்டு; பல்தேய்ச்சு குளிக்கச்செய்து; தலையைப் படிய படிய வாரி பின்னல்போட்டு; யூனிபார்ம் அணிவித்து; தேடாமல் சாக்ஸ் போட்டுவிட்டு; ஷூ அணிவித்து… இதற்கு நடுவில் மால்கோ ஆபீஸுக்கு கிளம்பும் அவள் கணவனையும் கவனித்துக்கொண்டு, பிரேக்பாஸ்ட் தயார்பண்ணி, பரபரன்னு அவள் செயல்படும் அழகே தனி. ஒரு நாளும் இதுகுறித்து அவள் அலுத்துக்கொண்டதில்லை.

ஒரு பகல் பொழுது சுமதி “எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு நீங்க எப்படி இவ்வளவு சுறுசுறுப்பா இருக்கீங்க?” என்று மல்லிகாவிடம் கேட்டாள்.

“நான் அப்படி ஒன்றும் நினைத்ததில்ல சுமி. யாருக்காக இந்த சுறுசுறுப்பு? என் கணவர் குழந்தைகளுக்குத்தானே…! அவர்கள் மூவரும்தானே என் உயிர்மூச்சு? என்ன கொஞ்சம் யோசித்து ஆர்கனைஸ்டா இருந்தா எல்லாம் ஈஸியாக இருக்கும். முந்தையநாள் இரவே நான் குழந்தைகளின் ஹோம்வொர்க்கை முடிக்கச் சொல்லி, யூனிபார்ம், கர்சீப், சாக்ஸ் எடுத்து வைத்து, மூன்று பேரின் ஷூவையும் பாலீஷ் போட்டு வைத்துவிடுவேன். எல்லோரும் இரவு பத்து மணிக்கு படுத்துக்கொண்டு விடுவோம். அடுத்தநாள் காலை நான் கொஞ்சம் சீக்கிரம் எழுந்து இரண்டு பாத்ரூம் கீசரையும் போட்டுவைத்து, அவர்களை எழுப்பிவிட்டு, வரிசையாக அனைவரையும் குளிக்கச் சொல்லி விரட்டுவேன். அவர்கள் குளிக்கும்போது பிரேக்பாஸ்ட் ரெடி…. அவ்வளவுதான்.” வரிசையான பற்களில் அழகாக சிரித்தாள்.

ஒரு கட்டத்தில் சுமதி எல்லாவற்றையும் மல்லிகாவிடம் கேட்டு, கேட்டு கற்றுக் கொண்டாள். அவர்கள் எங்கு சென்றாலும், ஒன்றாக வெளியே சென்று திரும்பினர். இருவரும் நகமும் சதையுமாக நல்ல தோழிகளாயினர்.

சுமதிக்கு வெகுநாட்களாக ஒரு ஏக்கம் மனதை அரித்துக் கொண்டிருந்தது. இவ்வளவுதூரம் தன்னிடம் வாஞ்சை காட்டும் மல்லிகா அக்காவிடம் தனக்குள் இருக்கும் அந்த ஏக்கத்தை சொன்னால், அதற்கு உண்டான விடை கிடைக்குமா என்று அடிக்கடி சுமதி யோசித்தாள்.

இது எளிதில் அக்காவிடம் பேசி அதற்கான தீர்வு கிடைக்கும் விஷயமா என்றும் தயங்கினாள். இருப்பினும் என்றேனும் ஒருநாள் வெட்கத்தைவிட்டு பேசிவிட வேண்டியதுதான்…..ஒருவேளை தனக்கு நல்லது நடந்தாலும் நடக்குமே!?

அன்று ஒருபுதன் கிழமை, காலை பத்துமணி.

மல்லிகா சுமதியிடம் அரட்டையடிக்க அவள் வீட்டிற்கு வந்தாள்.

சுமதியின் கணவர் பாஸ்கர் வேலைக்குப் போயிருந்தார். மல்லிகாவின் கணவர் சரவணன் இன்று சீக்கிரமே கிளம்பிப்போய் விட்டாராம். அவர் திரும்பி வர மாலை ஆறு மணியாகும். அக்காவின் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருந்தன. மல்லிகா சிரித்துக்கொண்டே ரொம்ப இயல்பாக இருந்தாள். இன்று ஒரு நல்ல சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. தைரியமாக கேட்டுவிட வேண்டியதுதான்.

அவளை வீட்டின் பின்புறம் தோட்டத்துப் பக்கமாக அழைத்துச் சென்றாள்.

அவர்களின் இரண்டு வீட்டிற்கும் அது பொதுவான தோட்டம்.

“மல்லிக்கா, உங்ககிட்ட நான் மனசுவிட்டு ரொம்ப பர்சனலா பேசணும்…. எனக்கு நீங்கதான் அட்வைஸ் தரணும். . கேட்கட்டுமா?”

“என்ன சுமி இன்னிக்கி பெரிய பீடிகையோட ரொம்ப வித்தியாசமா பேச்சை ஆரம்பிக்கிற? எதுவேணாலும் கேளு சுமி…..நான் உங்க அம்மா வயித்துல பொறக்கல அவ்வளவுதான். மற்றபடி நான் உன்னோட அக்காதான்.”

“ரொம்ப தேங்க்ஸ். எங்களுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சுக்கா….ஆனா அவரு இன்னமும் என்னை ஆசையா கட்டிப்பிடிச்சு ஒண்ணுமே செய்யலக்கா…ஆனா மத்தபடி என்கிட்ட அன்பாத்தான் நடந்துக்கிறாரு. கேட்டதல்லாம் வாங்கித் தராறு….ஆனா அதுமட்டும் திருப்தியா இன்னும் நடக்கலக்கா..”

“………………………”

“பல சமயங்களில் வெட்கத்தைவிட்டு நானே அவர்மேல போய் உரசுவேன்…கட்டிப் பிடிப்பேன், அதுக்கு அவரும் என்னை ‘கடனே’ ன்னு கட்டிப் பிடிப்பாரு….அப்புறம் என்கிட்ட இருந்து விலகிப் படுத்துகுவாறு…”

சொல்லிமுடிக்கையில், சுமதியின் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென கொட்டியது.

“இத நான் யாருகிட்ட போய் சொல்லுவேங்கா? உங்களை விட்டா எனக்கு வேற யாரு இருக்கா? அவர நான் எப்படி மாத்தறதுக்கா?” .

“இவ்வளவுதானே? இதுக்குப்போய் அழுவாங்களா?”

மல்லிகா மிகுந்த வாஞ்சையுடன் சுமதியை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

“கவலைப்படாதே சுமி, பலருக்கு இது ஒருபெரிய பிரச்சினை…சில வீடுகளில் பெண்கள்; சில வீடுகளில் ஆண்கள்….அவ்வளவுதான் வித்தியாசம். நீ அவரின்முன் எப்போதும் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும்…அடிக்கடி அவரை புகழ்ந்துபேசி கொஞ்ச வேண்டும்….அவருக்கு என்ன பிடிக்குமோ அது மட்டுமே செய்ய வேண்டும்…”

“இதெல்லாம் பண்ணிப் பார்த்துவிட்டுதான், வேறு வழிதெரியாமல் உங்களிடம் நான் கேட்டேன் அக்கா…”

“சரி…அப்ப நீயும் அவரும் என்னிக்காவது சேர்ந்து ப்ளூ பிலிம் பார்த்திருக்கீங்களா?”

“இல்லக்கா….அதுக்கு நான் எங்க போவேன்?”

“நாங்க அடிக்கடி வீட்ல சேர்ந்து ஸி.டி பார்ப்போம்…. அவரு இந்த விஷயத்துல கில்லாடி. எங்க வீட்ல அவரு பீரோவுல பூட்டி நிறைய ஸி.டி வச்சிருக்காரு. அத நான் வாங்கித்தரேன். நீயும் பாஸ்கரும் பாருங்க அவருக்கு உடனே மூடு கிளம்பும்.”

“ஐயோ, அவர்கிட்ட என்ன சொல்லி ஸி.டி கேட்பீங்க?”

“நீ அதைப்பற்றி கவலைப் படாதே சுமி…. கண்டிப்பா உன் பெயர் வெளிய வராது போதுமா?”

“சரிக்கா….ஆனா எனக்கு ரொம்ப பயமா இருக்கு….பாஸ்கர்கிட்ட என்னத்தை சொல்லி இத எப்படிப் புரிய வைக்கிறது?”

“அதெல்லாம்….மகளே உன் சமர்த்து…” சிரித்தாள்.

அன்று இரவு குழந்தைகள் தூங்கியதும், மல்லிகா சரவணனிடம் “என்னங்க நான் ஒண்ணு கேட்பேன், தருவீங்களா?” என்றாள்.

“நீ என்ன கேட்டு நான் இல்லைன்னு சொல்லிருக்கேன் மல்லி….உனக்கு சீக்கிரம் ஒரு ஆம்பளைப்பிள்ளை வேண்டுமா?”

“ச்சீ….போங்க உங்களுக்கு எப்பவும் அதே நினைப்புதான்…”

“சரி….என்ன வேணும் சொல்லு?”

“நீங்க பீரோவுல ஒளிச்சு வச்சிருக்கிற ஸி.டி லருந்து ரெண்டு, மூணு வேண்டும்…”

“யேய்….கழுத, இது என்னடி புதுசா இருக்கு? யாரோட பாக்கப்போறே? எனக்கு அந்த உண்மை தெரிஞ்சாகணும்…”

இந்த மாதிரி விஷயங்களில் எதையும் மறைக்காமல் புருஷனிடம் உண்மையைச்சொன்னால் பிற்காலத்தில் சந்தேகங்களுக்கு இடமிருக்காது என்று நினைத்து, சரவணனிடம், சுமதியின் ஏக்கத்தை விலாவாரியாகச் சொன்னாள்

“ஓ அப்படியா…. பாவம். ரொம்ப ஹாட்டா மூணு ஸி.டி. எடுத்துத் தரேன்….அதுதவிர அன்னிக்கி பளபளன்னு போட்டோஸ்போட்டு ஒரு பெரிய இங்லீஷ் புக் பாத்தமே….அதையும் குடு.”

படுக்கையிலிருந்து எழுந்து பீரோவைத் திறந்து அவைகளை எடுத்து அவளிடம் கொடுக்க, அவள் அதை தன் பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினாள்.

மறுநாளே அவைகளை எடுத்துக்கொண்டு சுமதியிடம் ஓடினாள்.

அவற்றை வாட்ரோபில் தன் புடவைகளுக்கு மத்தியில் சுமதி வைத்துப் பூட்டினாள்.

எனினும் சுமதிக்கு அவைகளைப்பற்றி பாஸ்கரிடம் சொல்லி எப்படிப் புரியவைத்து, எப்படி சேர்ந்து பார்ப்பது என்ற பயத்தில் நாட்களை கடத்தினாள்.

அன்று அதுஒரு சனிக்கிழமை.

மல்லிகா, தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என இரண்டு நாட்கள் சேலம் சென்று வருவதாக சுமதியிடம் சொல்லிவிட்டு குழந்தைகளுடன் கிளம்பினாள்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை. சரவணன் தன் வீட்டின் கொல்லைப் புற கதவைத்திறந்து பார்த்தபோது, அங்கு தோட்டத்தில் சுமதி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

அவனுக்கு உடனே தான்கொடுத்த அந்த ஸி.டிகள்தான் ஞாபகம் வந்தது.

அக்கம்பக்கம் பார்த்தான். யாருமில்லை. ஆள் அரவமற்ற அந்த அமைதியான நேரத்தில் அவளிடம் சென்று, சற்றும் நாகரீகம் இல்லாமல், மெதுவான குரலில் “குட் மார்னிங்…. நான் மல்லியிடம் கொடுத்தனுப்பிய ஸி.டி யைப் பார்த்தீங்களா?” என்றான்.

அடுத்த கணம் சுமதியின் உடம்பு கூசிக் குறுக, முகம் வெளிறி, மனம் பதைக்க, அந்த இடத்தைவிட்டு ஓடிச்சென்று தன் வீட்டினுள் நுழைந்து கதவை அடித்துச் சாத்தினாள்.

இவை எதுவுமே தெரியாத மல்லிகா, திங்கட்கிழமை எப்போதும்போல் சுமதியைப் பார்க்க வந்தாள்.

தன் அம்மாவின் உடல்நிலை பற்றி அவளாகவே நிறையப் பேசினாள். சுமதி எதிலுமே பட்டுக்கொள்ளாமல் அமைதி காத்தாள். மல்லிகாவுக்கு ஏதோ முணுக்கென்று உறைத்தது.

“என்ன சுமி, உடம்புக்கு சரியில்லையா?”

“உங்கள நம்பித்தான நான் எல்லாத்தையும் சொன்னேன். அப்படியே அதை உங்க வீட்டுக்காரரிடம் சொல்லிருக்கீங்க…..ச்சே, எனக்கு எவ்வளவு அசிங்கமான கேவலம்? இந்தாங்க உங்க ஸி.டிக்கள், புக் எல்லாம்…நல்லவேளை இந்தக் கண்றாவியை நான் இன்னும் பார்க்கல…”

வாட்ரோபைத் திறந்து அவைகளை மல்லிகாவின் கையில் திணித்தாள்.

“சுமி…ப்ளீஸ் என்ன ஆச்சு….? எனக்கு எதுவும் புரியல, எதுக்கு இவ்வளவு கோபம்?”

“உங்க வீட்டுக்காரர்கிட்ட கேளுங்க….விவரமா சொல்லுவாறு.”

பெட்ரூமினுள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டு பெருங்குரலெடுத்து வெடித்து அழுதாள்.

அன்று இரவு மல்லிகாவின் வீட்டில் பெரிய களேபரமே நடந்தது. சரவணன் நடந்த உண்மைகளை அவளிடம் ஒப்புக்கொண்டான்.

பத்துநாட்களுக்கு மேல் சென்றுவிட்டன.

சுமதியும், மல்லிகாவும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

அன்று திடீரென சுமதி மல்லிகாவின் வீட்டிற்குச் சென்றாள்.

“அக்கா நாங்க இன்னிக்கு மத்தியானம் வீட்டைக் காலி செய்து ஏ ப்ளாக் போகிறோம். என்னதான் இருந்தாலும் நீங்க எனக்கு எவ்வளவோ கற்றுக் குடுத்துருக்கீங்க….சொல்லிகிட்டு போகலாம்னுதான் வந்தேன்.”

“சுமி, உன்னோட மனவேதனை எனக்குப் புரியுதும்மா….என்னோட வீட்டுக்காரர்கிட்ட உன்னைப்பத்தி சொல்லித்தான் நான் ஸி.டிக்கள் வாங்கிக் கொடுத்தேன். ஆனா அவரு நாகரீகம் தெரியாம உன்கிட்ட கேவலமா நடந்துகிட்டாரு. அதுக்காக நான் உன்கிட்ட மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்கிறேன். ஆனா…நீ கொஞ்சம் யோசிச்சுப்பாரு, நான் வேற என்னத்தைச் சொல்லி அவர்கிட்ட அதை கேட்க முடியும்? அதுனால உண்மையைச் சொன்னேன். ஒருபாவமும் அறியாத நான் , இப்ப ஒரு நல்ல தோழியை இழந்துட்டேன்.”

“இல்லக்கா, தப்பு என்பேரில்தான். ஆசை வெட்கமறியாது என்பார்கள். இந்த சென்ஸிடிவ் விஷயத்தை நான் உங்களிடம் சொல்லியிருக்கவே கூடாது. அதனாலத்தானே இவ்வளவும்?”

இருவரும் கட்டிக்கொண்டு அழுதார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *