தோழர்களே… இன்னும் இருக்கிறது காலம்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,838 
 
 

அகிலா, கொல்லைப் புறத்துக் கதவைத் திறந்து, துணி காயப் போடுவதற்காகச் சென்ற போது, “”அம்மா… ஒரு நிமிஷம் வாயேன்,” என்று பாபுவின் குரல் கேட்டது.
“”இருடா பாபு… துணி காயப் போட்டுட்டு வர்றேன்,” என்று பதில் சொல்லும் போது தான் கவனித்தாள்… கயிறு அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அது ஒன்றும் பழைய கயிறு இல்லைதான். ஆனால், எட்டு குடித்தனங்கள் இருக்கிற வீட்டில் என்னுடையது, உன்னுடயது என்று எதையும் எல்லைக்கோடு போட்டு வைத்துக் கொள்ள முடியாது. அனுபவிக்கிற வரை லாபம்; அவ்வளவுதான்!
கயிற்றை இழுத்துக் கட்டுவது, சிறிது கடினமான வேலையாகத்தான் இருந்தது. கையை உயரத் தூக்கி தலையையும் உயர்த்தி அந்தரத்தில் முடிச்சுப் போடுவதற்கு முழுமையாக, ஐந்து நிமிடங்கள் பிடித்தன. இட்லி வெந்து, பானையின் நீர் வற்றியிருக்கும். இன்னும், ஓரிரண்டு நிமிடங்கள் போனால் இட்லி அடி பிடித்து விடும். விற்கிற விலைவாசியில் அடித்தட்டு குடித்தனங்களுக்கு இதெல்லாம் கட்டுப்படி ஆகுமா?
தோழர்களே... இன்னும் இருக்கிறது காலம்!அகிலா உள்ளே விரைந்தாள். நினைத்த மாதிரியே இட்லி கடைசி சொட்டு நீரை ஆவியாக்கிக் கொண்டிருந்தது. பூ போல மலர்ந்து, சிரித்துக் கொண்டிருந்த இட்லிகளை எடுப்பதற்கு முன், பாத்ரூம் கதவைப் பார்த்தாள். நல்ல வேளையாக மூடி இருந்தது. கணவன் குளிக்கப் போய் விட்டான். அவன் வருவதற்கும், இட்லியை எடுத்து வைப்பதற்கும் சரியாக இருக்கும்.
“”நான் கூப்பிட்டேன்ல?” என்று மறுபடி அழைத்தான் பாபு.
“”இதோ வர்றேன்பா… ஒரு நிமிஷம்…” என்று அவனிடம் ஓடினாள்.
“”உனக்கு இங்கிலீஸ் தெரியும்தானே!” என்றான் முகவாயைத் தொட்டபடி.
“”பிளஸ் டூ படிச்சவப்பா… சொல்லு,” என்றாள் புன்னகைத்து.
“”பலாப்பழத்துக்கு இங்கிலீசுல என்ன?”
“”ஜாக் புரூட்… கரெக்ட்டா?”
“”அட அம்மா,” என்று வியந்தான். “”அப்பாகிட்ட கேட்டேன்… அவருக்கு தெரியலம்மா. ஆனா, நீ பெரிய ஆளும்மா… கொஞ்சம் கூட யோசிக்காம சொல்லிட்டியே… நல்ல மூளைம்மா உனக்கு.”
“”சரி சரி… அப்பாவுக்கு மறந்திருக்கும்; அவ்வளவுதான். நீ படிச்சுட்டு வா… சுடு தண்ணி வெக்கிறேன்.”
“”இட்லிக்கு தேங்கா சட்னிதானே… இதோ வர்றேன்,” என்று குனிந்து எழுதத் தொடங்கினான்.
“அப்பாவுக்கு ஒண்ணும் மறந்திருக்காது… மெஷின்களோட பழகி, பழகி அவருக்கு மூளை மழுங்கிப் போயிருக்கு…’ என்று அவன் முணுமுணுத்தது, அவள் காதில் அரைகுறையாக விழுந்தது.
“பாபு… அப்பாவை ஒண்ணும் சொல்லாதே…’ என்று சொல்ல திரும்பியவள், குளியலறைக் கதவைத் திறக்கிற சப்தம் கேட்டு, சட்டென்று அடுப்பிடம் விரைந்தாள்.
தட்டில் இட்லிகளைப் போட்டு, மிளகாய் பொடியில் எண்ணை விட்டுக் குழைத்தாள். தம்ளரைக் கழுவி, குடிநீர் வைத்தாள்.
“”படிடா…. படிச்சு முடிச்சு, “ஏசி’ ஆபீசுல பந்தாவா வேலை பாருடா… நீல யூனிபார்ம் இந்த தலைமுறையோட முடிஞ்சு ஒழியட்டும்டா,” என்றபடி வந்து உட்கார்ந்தான் குமார்.
“”என்ன… மொகத்தை தூக்கி வெச்சிட்டுருக்க?” என்றான் அவளைப் பார்த்து.
“”இல்ல… இன்னொரு இட்லி போடவா?”
“”போட்டவரைக்கும் போதும்… சொல்லு என்ன பிரச்னை?”
“”புதுசா ஒண்ணும் இல்லீங்க… நீங்க சாப்பிடுங்க.”
“”அப்ப பழைய பிரச்னைன்னுதான்னு சொல்றீயா? என்னன்னுதான் சொல்லித் தொலையேன்,” என்றான் சற்று எரிச்சலுடன்.
“”கொடிக்கயிறு அடிக்கடி அறுந்து போகுது… நானும் கெட்டியா இழுத்துக் கட்டித்தான் முடிச்சு போட்டு வெக்கிறேன்… எவளாவது ஒருத்தி வெயிட்டா போர்வைய தோச்சுப் போட்டுட்டு போயிடறா… அறுந்து போனா, மறுபடி இழுத்து கட்டிட்டுப் போகிறதும் இல்ல.”
“”இதோ பாரு… நீ ஜான்சி ராணி இல்ல, நானும் திப்பு சுல்தான் இல்ல… நாம ஏழை பாழைங்க.. ஏதோ புண்ணியத்துல தொழிற்சாலைல வேலை கிடைச்சு, மானத்தோட பொழச்சுக்கிட்டிருக்கோம். “இது சரியில்ல, அது சரியில்ல…’ன்னு புகார் பட்டியல் படிக்காத… மாடு மாதிரி உழச்சுட்டு வர்ற மனுஷனுக்கு அனுசரணையா இல்லாட்டியும், தொந்தரவு கொடுக்காமலாவது இரு… புரியுதா? அதென்ன தேங்கா சட்னியா?”
“”ஆமாங்க… பாபு பொடி தொட்டுக்கிட்டு சாப்பிட மாட்டானே… ரெண்டு கீத்து தேங்கா வாங்கி, சட்னி அரச்சு வெச்சேன்… அதுவே நாலு ரூபா!”
“”ஓகோ… தொர தேங்கா சட்டினிதான் சாப்பிடுவாரா? ஆற்காட்டு நவாப் பரம்பரை பாரு…” என்றான் கோபமாக.
பாபு உடனே குரல் கரகரக்க, “”எனக்கொண்ணும் இட்லியும் வேணாம், சட்னியும் வேணாம்… பள்ளிக் கூடத்துல ஆயாகிட்ட சத்துணவு சாப்பிட்டுக்கிறேன்,” என்றான் முகம் நிமிராமல்.
“”ஏங்க இப்படி பேசறீங்க? பாவம் புள்ள… நாலு ரூபா செலவு செஞ்சா குறஞ்சா போயிடுவோம்… பொறுப்பாத்தானே படிக்கிறான்?” அவளால் பொறுக்க முடியாமல் கேட்டு விட்டாள்.
“”நீ பேசுறது சரியில்ல அகிலா…” என்றான் அழுத்த மாக… “”ஏழை வீட்டுப் புள்ள எப்பிடி வளரணுமோ அப்பிடித்தான் வளரணும்… சீமான் கணக்கா சீராட்டக் கூடாது… நாடு போயிகிட்டிருக்கிற திசையே மோசமா இருக்கு… கையில இருக்கிற வேலயே கடைசி வரைக்கும் நிலைக்குமான்னு தெரியல… ஆள் குறைப்புங்கிறான், சீப் லேபர், வி.ஆர்.எஸ்., – சி.ஆர்.எஸ்.,ன்னு என்னென்னவோ சொல்றான்… இன்னிக்கு கூட மீட்டிங் இருக்கு, கட்சித் தலைவரே வர்றாரு, எங்க யூனியன் ஆளுங்ககிட்ட பேச… புரிஞ்சுகிட்டு நடந்துக்க தெரியுதா?”
அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்தாள். குடிநீர் எடுத்துக் கொடுத்தாள். வாய் துடைக்க துண்டு எடுத்துக் கொடுக்கும் போது மெல்ல நிமிர்ந்தாள்.
ஒரு புன்னகையை அணிந்து, இதழ்கள் மெல்லப் பேசின…
“”நீங்க படுகிற கஷ்டம் எனக்கு தெரியாதா? தினம், தினம் பார்த்து, பார்த்து மனசுக்குள்ள தவிச்சுக்கிட்டுதான் இருக்கேன். தயவு செய்து கோபப்படாம கேளுங்க… நானும் நாலு எழுத்து படிச்சிருக்கேன்… எக்ஸ்போர்ட் கம்பெனில நல்ல வேலை காலியிருக்காம் … 7,000 ரூபா சம்பளமாம் .. பி.எப்., – இ.எஸ்.ஐ., எல்லாம் உண்டாம்; நான் போகட்டுமா? பாபுவோட படிப்புக்கு ரொம்ப உதவியா இருக்கும் இல்லீங்களா?”
அவன் சட்டையை அணிந்து கொண்டான். குனிந்து கண்ணாடி பார்த்து தலை சீவிக் கொண்டான். பவுடர் எடுத்து அப்பி, மறுபடி சீப்பைக் கையில் எடுத்தபடி அவளைப் பார்த்தான்…
“”இத்தோட, நூறு வாட்டி நீயும் கேட்டுட்ட, நானும் பதில் சொல்லிட்டேன்… இப்ப மறுபடி சொல்றேன் கேட்டுக்க… எனக்கு வீடு அமைதியா இருக்கணும்… வீட்டை பொண்டாட்டி அருமையா பாத்துக்கணும்… நாயா, பேயா ஒழச்சுட்டு வர்றவனுக்கு நிதானமா, ஒரு தம்ளர் தண்ணி எடுத்துக் கொடுக்கிற மனைவி எப்பவும் வீட்டுல இருக்கணும்… இனி, வேலைக்குப் போறது பத்தி பேச்சே எடுக்காதே… புரியுதா?” அவன் விரல்கள், பேச்சில் இல்லாத கோபத்தை தலையை விருட் விருட் என்று சீவுவதில் காட்டின.
“”சரி…” என்றாள்; உதடுகள் துடித்தன.
பாபு பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு, சரேல் என்று குளியலறைக்கு ஓடினான்.
வாசல் வரை சென்ற குமாரின் கால்கள், திரும்ப அவளிடம் வந்தன.
“”இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கு அகிலா,” என்றான்.
நிமிர்ந்தாள்.
“”நான் சுத்த கம்யூனிஸ்ட்… எங்க அப்பா, தாத்தா எல்லாருமே கம்யூனிஸ்ட்தான். தேவைக்கு மேல வெச்சிருக்கிறவன் மட்டுமில்ல, தேவைக்கு மேல சம்பாதிக்கிறவன் கூட திருடந்தான். நம்ம குடும்பத்துக்கு என் சம்பாத்தியம் போதும். உன், 7,000 ரூபா சம்பளம் நம்மை விட ஏழைக் குடும்பத்துக்கு போகட்டும், வர்றேன்!”
அவன் முகத்தின் சிவப்பையும், நடையின் கோபத்தையும் பார்த்தபடி, எப்போதும் போல அவள் இயலாமையுடன் நின்றாள்.
எந்த ஒரு விஷயத்தையும் அதன் சரியான கோணத்தில் பார்த்துப் புரிந்து கொள்ள ஒரு தனியான திறமை வேண்டும் என்று ஏனோ தோன்றியது. பாபு பள்ளிக்கூடம், டியூஷன் என்று போன பிறகு, வீட்டு வேலைகளெல்லாம் முடிந்த பிறகு, மாலை பாபு திரும்பி வரும், வரை அவள் உத்திரத்தைப் பார்த்தபடிதான் உட்கார்ந்திருக்கிறாள். கொஞ்சம் அரட்டை, வாசலில் வேடிக்கை, சிறிது நேரம் உதவாக்கரை, “டிவி’ என்று, காலத்தைக் கொல்வதை நினைக்கும் போது, இதயத்தில் ரத்தம் வடியும். ஆனால், பெண்ணாய்ப் பிறந்தவள், திருமணத்திற்குப் பிறகு தன் சுயத்தையே கொன்று விட நேர்கிற போது, நேரத்தைக் கொல்வது எம்மாத்திரம்?
அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வரும்.
குமார் அன்று உற்சாகமான மனநிலையில் இருந்தான்.
அகிலாவிடம் தன் கோபத்தை மறைத்து, பொறுமையாக எடுத்துச் சொன்னது தன் மேலேயே பெருமிதத்தைக் கொடுத்தது. பேதைப் பெண்; சரியான லூஸ். சாப்பிட்டு, தூங்கி, நிழலில் கிட என்றால் கசக்கிறது! கூவம் நதிக் கரையிலும், பிளாட்பாரங்களிலும் அன்றாடங் காய்ச்சிகளாய் நெளிகிற கூட்டத்தைப் பார்த்தால், தன் ராஜபோக வாழ்க்கை அவளுக்குத் தெரிந்திருக்கும். போகட்டும், அவன் சொன்னதை குறுக்கிடாமல் கேட்டாளே!
“”என்னப்பா குமார்… நீ கூட சொல்லலையே… இன்னிக்கு கூட்டத்துக்கு கோல்கட்டாவில் இருந்து முகர்ஜி வருகிறாராமே…” என்று கோபால் விரைந்து வந்தான்.
“”அட ஆமாம்பா, எனக்கே நேத்துதான் விஷயம் தெரியும். முகர்ஜி சாதாரண ஆள் இல்லப்பா… நாலு வாட்டி சிட்டிங் எம்.பி., போக்குவரத்து துறைக்கு, இருபது வருஷ தொழிற்சங்கத் தலைவர். என் பர்சுல அவர் போட்டோ என்னிக்கும் இருக்கும்; நல்ல அறிவாளி. அத்தோட நல்ல கனிவான மனசு. கௌம்பலாம்பா கோபால், நேரமாச்சு,” அவன் முகம் துடைத்துக் கொண்டான்.
நல்ல கூட்டம் கூடியிருந்தது. தலைவர் அதே சிரித்த முகத்துடன், அதே மெல்லிய உடலமைப்புடன் இருந்தார். இவனை முன்வரிசையில் அடையாளம் கண்டு சிரித்தார்; சிலிர்த்துக் கொண்டான். அதுதான் தலைவர் என்று நினைத்துக் கொண்டான்.
நாட்டின் பொருளாதாரச் சிக்கல்கள், அரசுகளின் அரைகுறை கோட்பாடுகள், நடைமுறை குளறுபடிகள் என்று உரை நிகழ்த்தி, மென்மையாக அவர்களைப் பார்த்தார்.
“”நாமும், நம்முடைய தத்துவங் களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணங்கள் வந்து விட்டன. வாழ்வின் வசீகரம் வெறும் உழைப்பில் மட்டும் இல்லை. மனோ பாவம், நன்றி யுணர்வு, உதவுகிற மனசு, கலை, இலக்கியம் என்று எத்தனையோ விஷயங்களில் அது கொட்டிக் கிடக்கிறது. ரஷ்யாவில் கம்யூனிசம் அழிந்து விட்டது. ஏன்? “யாருக்கு இல்லையோ அவர்களுக்குக் கொடு…’ என்ற நல்ல விஷயத்தைத் தானே சொன்னது அது? அப்படியும் ஏன் அழிந்தது? ஏழைகள் மேலும், மேலும் ஏழைகளாகிக் கொண்டே போனதுதான் காரணம். அறிவுப் பெருக்கமோ, வளர்ச்சியோ, தனித் திறமைகளின் அங்கீகாரமோ, கல்வியின் பெருமையோ எதுவுமே மேம்படுத்தப்படாமல் எல்லாருக்கும் உணவு, உடை, இருப்பிடம் என்று விடுதிவாசிகளாக அவர்களை மாற்ற முனைந்ததுதான் காரணம். தோழர்களே… இப்போதும் இருக்கிறது காலம். எல்லாருக்கும் இன்பத்தை வழங்குவோம்; நாமும் இன்பத்துடன் இருப்போம்!”
குமார் நிமிர்ந்து உட்கார்ந்தான். அகிலாவின் மென்மையான முகம் நினைவில் எழுந்தது. அதில் இன்பமான புன்னகையை உருவாக்குவதே தன் முதல் கடமை என்று தோன்றியது.

– வி.என்.ஷண்மதி (ஜூலை 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *