தொடு வான நட்சத்திரங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 9,050 
 
 

நந்தினியின் மனதில் தங்க மறுத்து நழுவி ஓடும் வெற்றுச் சங்கதிகளைக் கொண்ட உயிரோட்டமற்ற நினைவுகள் சூழ்ந்த அந்தகார இருப்பினிடையே அந்த வயதிலேயே அவள் கண்டது நிழலாகத் திரிந்து போகின்ற வாழ்க்கையையல்ல, அதிலும் மேலான ஓர் பெரும் ஒளி நிலா,, ஆன்மாவின் உயிர்ப்பு நிலைமாறாமல் அவள் அடி மனசெங்கும் வியாபித்துக் கிடப்பதாய் அவளுக்கு உணர்வு தட்டும். அந்த நிலாக் குளித்த சங்கதிகள் அவளுள் ஏகமாய்க் குவிந்திருக்கும் அதன் பொறிதட்டும் போதெல்லாம் ஆன்மீக ஞானம் கைவரப் பெற்ற ஒரு ஞானி போல் மிகவும் தெளிவோடு அவள் பேசுவதை விளையாட்டாகவே பிறர் கிரகித்துச் செவிமடுப்பது அவளுக்கும் புரியாமலில்லை. என்ன செய்வது? அவர்கள் வழி அப்படி துக்கமே முடிவாக இருக்கும் சலன வாழ்க்கையில் மூழ்கி மாய்ந்து போனாலும் அவர்கள் வழி அது தான். அந்த மாயக் குளிப்பிலேயே சுகம் கண்டு வீழும் அடி மட்ட புத்தி மயக்கச் சுவடுகள் இருக்கும் வரை இது மாறாது என்று பட்டது .

நந்தினிக்கு அவர்களுக்கு அப்படிப் பழக்கப்பட்ட அந்தச் சுவடுகளே பெரும் சலிப்பைத் தந்தன. ஏனோ நிலையற்ற வாழ்க்கையே பெரும் சுமையாகப் பட்டது. அதைத் துச்சமெனத் தூக்கி எறிந்து விட்டுத் துறவு நிலை பூண்ட ஒரு தபஸ்வினியாகத் தன்னைப் பிரகனப்படுத்தி வெற்றி மாலை சூடக் கூடிய அந்த வாய்ப்புகள் அவளைப் பொறுத்தவரை வெறும் பகற் கனவாகவே இருந்து வந்தன. பெண்ணாகப் பிறக்க நேர்ந்த பாவம் அதனால் அவளுக்குக் கல்யாண விலங்கு பூட்டி அவளைக் கழுவிலேற்றி விடுவதிலேயே அவளின் குடும்ப அங்கத்தவர்கள் குறியாக இருந்தனர்

ஆனால் அவள் அப்பா மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவர் ஒரு குடும்பஸ்தனாக இருந்த போதிலும், தாமரை இலை மேல் தண்ணீர் போல உறவுச் சகதிக்குள் சிக்கி மனம் நிலை குலைந்து போகாத உயிரில் மெய்யறிவு காண்கின்ற, மிகத் தெளிவான சுய புத்தி வைராக்கியம் கொண்ட சிறந்த புத்திஜீவி அவர். அவர் எப்போதும் நுண்ணறிவு கொண்ட ஆளுமையுடன் வாழ்க்கை பற்றித் தீர்க்கமான வேதாந்தக் கருத்துக்களையே, சொல்லி, வந்ததன் நற்பலனோ என்னவோ பெண்னாகப் பிறந்திருந்தும் நந்தினியிடம் இப்படியொரு மாற்றம். எப்போதும் அவள் ஆழ் மனதில் துறவு பற்றிய நினைப்புத் தான்.

அதையும் தாண்டி பொய்மை வெளிச்சம் காட்டி அவளை அழைக்கும் வாழ்க்கையின் நிழல். புறம் போக்கு உலகில் அவளை மயக்கி வலை போட்டு இழுக்கத் தான் எத்தனை ஆயிரம் வரட்டுச் சங்கதிகள் அவளை இரை வ்ழுங்க இவையெல்லாம் போதாதென்று ஆண்களின் கழுகுப் பார்வை நெருப்பு ஒரு புறம்

அம்மா அவளின் மனசறிந்து இதையே தாரக மந்திரமாக தினமும் ஓதத் தவறுவதில்லை” நந்து! நான் ஒன்று சொல்லுறன். கேட்பியே?என்றாள் ஒரு நாள்

“”நான் எப்ப சொன்னனான்?உங்கடை சொல்லுக் கேக்க மாட்டனென்று எப்பவும் உங்கடை வழி தான் நானும் அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு?”

“ நீ போற போக்கு அப்படித் தான் நினைக்கத் தோன்றுது உன்னை நினைச்சால் எனக்கு வயிறு கலங்குது கொப்பருக்கு விசர் வீண் கதைகளைச் சொல்லி உன்னைக் குழப்பி விட்டிருக்காரே இது எங்கை போய் முடியப் போகுதோ?

“பயப்படாதையுங்கோ அம்மா. நான் உங்கடை விருப்பத்துக்கு மாறாக ஒரு சாமியம்மாவாய் மாற நினைக்கிறது அவ்வளவு பெரிய குற்றமா? நீங்கள் அதைத் தானே சொல்ல வாறியள்? உங்களைப் போல கல்யாணம் ஒன்றைப் பண்ணிக் கொண்டு காலம் முழுக்க இந்தச் சிறையிலை கிடந்து மூச்சு முட்டி நானும் சாக வேணுமென்றுதானே உங்கடை விருப்பம் நல்லாய்ச் செய்யுங்கோ ஆனால் ஒன்று சொல்லுறன். எல்லாப் பொம்பிளையளையும் போலை, கல்யாணம் என்ற பெயரிலை பூசி மினுக்கிக் கொண்டு, ஆண்களின்ரை கண்ணை மயக்க ஒரு காட்சி தேவதையாய் மாறுவதையே சுத்த அபத்தமான ஒரு விபரீதப் போக்கு என்று நம்புகிறவள் நான். உங்கடை ஆக்கினைக்காக ஒரு வேளை கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சாலும் அந்த அளவுக்கு நான் மாறுவேனென்று நீங்கள் நம்பினால் அதுக்கு நான் பொறுப்பல்ல . சொல்லிப் போட்டன்” உங்கடை வற்புறுத்தலுக்காக நான் கல்யாணத்துக்குச் சம்மதிச்சாலும் மனசளவிலை எல்லாம் துறந்த ஒரு துறவி போலை தான் நான் இருக்க விரும்புறன்”

“என்னவோ போ எனக்கு இது சரி வருமென்று படேலை ஒரு பொம்பிளையாலை இதெல்லாம் சாதிக்க முடியுமே?

“முடியுமென்று நான் நம்புகிறேனே. அது போதும். வேண்டுமானால் இருந்து பாருங்கோ. எப்பவோ ஒரு நாளைக்கு நான் விட்டு விடுதலையாகி வெளியேறி வந்து நிக்கேக்கை, உங்களுக்குப் புல்லரிக்கும் . அப்ப ஒரு முழு தபஸ்வினியாய் என்னை நீங்கள் காண முடிஞ்சால் அதுவே என் பாக்கியம் பொறுத்திருந்து பாருங்கோ. உங்கள் கண் குளிர எல்லாம் நடக்கத் தான் போகுது “

“அதையும் பாத்து விடுவம்”

அதன் பிறகு அம்மா ஆசைப்பட்டபடியே நந்தினிக்கு அந்தக் கல்யாண விலங்கு. அவள் காலிலல்ல .கழுத்தில் அதை அவள் சூடுவதற்காகக் கொண்டு வந்தவன் அம்மாவும் மற்றவர்களும் நம்பியது போல் அவளை ஒளியேற்றி வாழ்விக்க வந்த ஒரு யுக புருஷனல்லன் மாறாக அவளை இருள் விழுங்கிச் சாகடிப்பதற்கென்றே அவனின் முனைப்புடன் நிற்கும் ஆணாதிக்க வெறிக் கோல வெளிப்பாடெல்லாம் அப்பா பெரிதும் விரும்பி அலைந்து திரிந்து சல்லடை போட்டுத் தேடிக் கிடைத்த வரமல்ல அது சாபமே வந்து தலையில் விழுந்த கணக்காய் அவளின் வாழ்க்கை நிலை விழுக்காடுகள் ஒரு பெண்ணாகவல்ல உணர்ச்சியுள்ள மனிதப் பிறவியாகாக் கூட அவன் அவளை மதிப்பதில்லை/ கேவலம் தசை உணர்வே பெரிதென்று நம்புகின்ற அந்த மோசமான அடி சறுக்கிய கல்யாண வாழ்க்கைக்குப் பதிலாக உள்ளுலகில் ஆன்மீகஞானம் பெற்று உலக வாழ்வை வென்றெடுத்த தூய்மையான ஒரு பெண், துறவியாய் வாழும் பாக்கியம் அவளுக்குக் கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் எங்கே விட்டார்கள்?

இனி இந்தத் துருப்பிடித்த இல்லற வாழ்க்கை முடிவுக்கு வர ஒரு யுகம் செல்லும். புருஷனை ஒரு வேளை துறக்க நேர்ந்தாலும் அவனோடு சேர்ந்து அநியாயத்துக்குத் துணை போய் பெற்றுப் போட்ட பிள்ளைகளென்ற பெரும் பாசக் கடலை எப்படித் தான் நீந்திக் கரை சேரப் போகின்றாள்? ஆகவே இனித் துறவென்பது கைக் எட்டாத தொடு வான வெளிச்சம் தான்.

அதை தொடுவதற்காகவே இன்னும் அவளின் காத்திருப்புத் தவம் அதற்கான காலம் கனிந்து வந்திருக்கிறது. கலி மூண்ட காலப் புயலில் அள்ளுண்டு இடம் மாறி அவள் கொழும்புக்கு வந்து காலூன்றிய நேரம். இப்போது பிள்ளைகளோடு அவள் மட்டும் தான் கழுத்தில் கோர்த்துக் கொண்ட புருஷ விலங்கு அறுந்து இப்போது அவள் தனி விருட்சம். பிள்ளைகளென்ற விழுதுகளும் கல்யாணமாகிக் கழன்று தூர தேசம் போன பின் அந்தப் பாசக் கடலும் வற்றி அவளின் தேடுதல் தொடு வானம் நோக்கிப் போனது

யாழ்ப்பாணத்தில் அம்மாவோடு இருந்த காலத்தில் குடும்ப வேடம் களைந்து போட்ட பெண் துறவிகளாய் அவர்களைப் பார்த்த ஞாபகச் சிலிர்ப்பு இன்னும் இருக்கிறது அவர்கள் உசன் மடத்திலிருந்து வருவதாக அம்மா கூறிக் கேட்டிருக்கிறாள்.எப்போது அவர்கள் வீட்டிற்கு வந்தாலும் அவர்களுக்கு அன்னமிட அம்மா தவறுவதில்லை மஞ்சள் காவி உடை அணிந்த அந்த இளம் பெண் துறவிகள் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருக்கிற மனோலயம் காரணமாகவே நந்தினியின் மனதில் இப்படியொரு இலட்சியக் கனல் . அது ஒரு காலம். இப்போது அதற்கான எல்லா வாசல்களுமே அடைபட்டு இருள் மூடிக் கிடந்தாலும் அதையும் ஊடுருவிக் கொண்டு அவளைக் கை தூக்கிக் கரை சேர்க்க ஒரு ஞான குருவே நேரில் வந்து, காட்சி தரிசனம் தருகிற மாதிரி என்னவொரு ஜோதி மயமான மாற்றம் அவளுடைய வாழ்வில், அவள் எதிர்பாராதவிதமாகத் திடுமென்று நேர்ந்தது. .அந்த ஜீவன் முக்தி கை கூடிய ஞான குருவை ஒரு போதும் அவள் நேரில் கண்டதில்லை. தமிழ் நாட்டிலுள்ள அந்த இளந்துறவி பற்றி ஊடகங்கள் மூலம் அறிந்த நாள் தொடக்கம் முற்றிலும் மானஸீகமாக அவரிடமே பக்தி கொண்டு சரணடைந்த பூரண துறவு நிலை இப்போது அவளுக்கு. உலகெங்கும் கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்டிருக்கிற இறை சக்தி மேலோங்கிய மகாஞானி அவர். அவரின் ஒளி தீர்க்கமான அருள் சொரியும் திருவடிகளை நோக்கி இனி அவள் பயணம் தொடரும். அதற்கு அவள் துணிந்து விட்டாள்

என்றோ ஒரு நாள் எல்லாம் விடுபட்டு விடுதலையான இருள் விடியலாய் தோன்றிய ஒரு சுப முகூர்த்த நன்னாளில், அவள் இப்படித் துறவியாகி வீட்டை விட்டு வெளியேறிய அந்தக் காட்சி தரிசனத்தைக் கண்Bகூடாகவல்ல, கனவிலே கண்ட மாதிரி யாரோ சொல்லக் கேட்டு நெஞ்சிலே அடித்துக் கொண்டு ஊரிலேயிருந்த, அவள் வயதான அம்மா ஓங்கிக் குரலெடுத்து அழுகிற சப்தம் கற்பனையில் கேட்க நேர்ந்த போதும் அவள் திட சித்தம் மாறாமல் தனக்குள் சொல்லிக் கொண்டாள்

“இதிலே அழ என்ன இருக்கு? எல்லாம் ஒழிஞ்சு போய் நான் போறன் இப்ப பிரபஞ்சமே எனக்குள்ளே வந்திட்டுது இன்னும் நான் கேட்டுக் கற்றுத் தேறிய என் ஞான குருவின் வேதவாக்கியமாகச் சொல்வதானால், இப்ப நான் கூட இல்லை எல்லாம் நிறைஞ்ச மாதிரி சுத்த வெளி அகண்ட பிரபஞ்ச சத்தியத்துக்கெல்லாம் எது மூலமாக நிற்கிறதோ அதுவே நான் அதுவே பரம் பொருள் அம்மா இதை அறிஞ்சால் அவளும் கண் மல்ர்வது மட்டுமல்ல என் சந்நியாச இருப்பு நிலை கண்டு வணங்கினாலும் ஆச்சரியமாகாது. ஒரு பெண் துறவியைப் பெற்றெடுத்த புண்ணியம் அவளையும் கரை சேர்க்கும் நிச்சயம் இது நடக்கும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *