தேவியின் ஆசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 5,272 
 

அகல்யாவிடம் தேவி சொல்லிவிட்டாள். அம்மா இந்த காலத்துக்கு வீட்டுக்கு வந்து பெண் பார்க்கறதெல்லாம் வேண்டாம். எங்கேயாவது கோயிலுக்கு வரச்சொல், பிடிச்சிருந்தா “ஓகே” இல்லையின்னா அப்படியே விட்டுடலாம் என்ன சொல்றே?

அம்மா பிரமிப்புடம் பார்த்தாள். ‘இந்த காலத்தில்தான் எவ்வளவு விவேகமாக இருக்கிறார்கள்.

சரி என்னைக்குன்னு சொல்றது? ஏன் அவங்க சொல்லலயா? எதிர் கேள்வி கேட்டாள் மகள்.

நாம சொன்னா அன்னைக்கே பாத்துக்கலாம் அப்படீங்கறாங்க. சரி அடுத்த வாரம் சனிக்கிழமை சாயங்காலம் தண்டு மாரியம்மன் கோயிலுக்கு வரச்சொல்லிடு.

அன்னைக்கு எனக்கும் லீவு இருக்கும். சொல்லிவிட்டு விறு விறு வென வெளியே சென்று வண்டியை எடுத்து கிளம்பினாள்.

அகல்யாவிற்கு தன் மகள் மட்டுமா ! இல்லை எல்லா இளைஞர்களும் இப்படித்தானா? என்று ஆச்சர்யமாய் இருந்தது.நம் காலத்திலேயே ஓரளவு முடிவு எடுத்து செய்யும் அளவுக்கு வந்து விட்டோம். இருந்தாலும் இன்றைய வளர்ச்சி அபரிதமாய் இருக்கிறது. இது நல்லதுக்கா?

என் அம்மா கூட எனக்கு சுதந்திரமாய் தான் முடிவெடுக்க விட்டாள்.என் வாழ்க்கை, படிப்பு எல்லாமே என்னிஷ்டப்படிதான் நடந்தது.ஆனாலும் இயற்கை என் கணவனை பிரித்து
விட்டதே? தேவி பிறந்து நான்கு வருடங்கள் இருக்குமா? அலுவலகம் சென்றவனை வெறும் உடலாகத்தானே வீட்டுக்கு எடுத்து வந்தார்கள்.

நல்ல வேளை பெற்றோர் எனக்கு கொடுத்த உரிமைகள் என்னை நல்ல உத்தியோகத்தில் உட்காரவைத்திருந்தது. சமாளித்து விட்டோம்.இவளுக்கு இருபத்தி மூன்று வயதும் ஆகிவிட்டது. இப்பொழுதாவது ஒத்துக்கொண்டாளே. பையனும் தெரிந்தவன்தான். குடும்ப நண்பர்கள் என்பதால் பெரியதாக எதிர்பார்ப்பு இருக்காது. இவள் ஒத்து வருவாளா என நினைத்தபோது ஒத்துக்கொண்டதே பெரிய விசயம்.இருந்தாலும் சம்பிரதாயம் என்று ஒன்று இருக்கிற்தே.

கோயிலில் ரகுவும்,தேவியும் அறிமுகப்படுத்திக்கொண்டு நன்கு பேசிக்கொண்டு இருந்தார்கள். தேவியை விட ரகு இயல்பாய் இருந்தான். ஆண்டி என்று அவனே இவளிடம் பேசி பின் தேவியிடம் “ஹலோ” என்று கை குலுக்கியது இவளுக்கு இதமாய் இருந்தது.ரகுவின் அம்மாவும் இவளுடன் பணி புரிந்து கொண்டிருப்பதால் ரகுவின் அப்பாவையும் அழைத்துக்கொண்டு, மூவரும் தனியே கோயில் பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தனர்.

அவர்கள் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு வரும்போது அகல்யா தன் மகளின் முகத்தை கூர்ந்து கவனித்தாள்.தேவியின் முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பை ஆண்டி என்று ரகு அவளிடமும், தேவியிடம் “பை” என்று சொல்லி விடை பெற்று சென்றார்கள். மகள் என்ன நினைக்கிறாள் என்ற யோசனையில் நின்று விட்டாள். அப்படியே நின்று கொண்டிருந்தவளை, உலுக்கி கார் எடுத்துட்டு வர்றேன்.இங்கேயே நில்லு என்று தேவி சொன்னவுடன் தான் நிகழ்காலம் இவள் நினைவுக்கு வந்தது.

ஒரு வாரம் ஓடி விட்டது. மகள் ஏதாவது சொல்லுவாள் என எதிர்பார்த்திருந்த அகல்யாவுக்கு அவள் எதுவும் பேசாதது உறுத்தலாகவே இருந்தது. ஒரு நாள் வேலைக்கு கிளம்ப ஆயத்தமானவளை நிறுத்தி தேவி நீ என்ன நினைச்சுட்டு இருக்கே? என்று கேட்கவும் எதைய? என்று தேவி திருப்பி கேட்க அதிர்ந்து நின்றவள், ரகுவைப்பத்தித்தான் நீ என்ன நினைச்சுட்டு இருக்கேன்னு அவங்க கிட்ட சொல்ல வேணாம்மா?

ஸ்.. அலுத்துக்கொள்வது போல முகத்தை வைத்துக்கொண்ட தேவியை பார்த்து அகல்யாவுக்கு மனசு பதறி விட்டது.

ஏம்மா உனக்கு ரகுவை பிடிக்கலயா?

அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா, அப்புறம் ஏன் பதில் சொல்ல மாட்டேங்கறே?

ஒரு பெருமூச்சுடன் அம்மா ரகு நல்லவன்தான், நல்ல பிரில்லியண்ட், ஆனா அவனுக்கு என்ன குறைச்சல் நல்ல வசதி, இத்தனை இருந்தும் கல்யாணமானவுடனே வெளி நாட்டுக்கு போகணும் அப்படீன்னு சொல்றான். ஏன் அவன் திறமைக்கு இங்க வேலையில்லயா? சொன்னேன் ஆனா காது கொடுத்து கேக்க மாட்டேங்கறான். சொல்லிவிட்டு சரிம்மா நான் கிளம்பறேன் என்று சென்றுவிட்டாள்.

சிறிது நேரம் அப்படியே நின்றுவிட்ட அகல்யா, கொஞ்சம் தெளிவு பெற்றவளாய், ரகுவின் வீட்டுக்கு சென்று அவன் அம்மாவை அழைத்துக்கொண்டு அலுவலகம் செல்லலாம் என்று தீர்மானம் செய்தவள் காரை எடுக்க சென்றாள்.

மாலை வீடு வந்த தேவிக்கு வீட்டில் ரகுவும், அவனின் பெற்றோர்களும் இருப்பதை பார்த்து வியந்தவள் ஹலோ அங்கிள், ஹாய் ஆண்டி என்று சந்தோசமாய் சொன்னவள் ஹலோ ரகு என்று அழைத்தாள். அவளின் குரலில் இருந்த குழைவு மகளின் மனதை அகல்யாவுக்கு உணர்த்தியது. ரகுவின் அம்மா “தேவி” போய் கைகால் கழுவிட்டு வா நாம எல்லாம் வெளியே கிளம்பறோம்.என்றவளுக்கு “தேவி”இப்ப வந்துடுறேன் என்று வேகமாய் உள்ளே சென்றாள்.

அவர்கள் நால்வரும் கொடீசியா வளாகத்தில் காரை ஒதுக்கு புறமாய் நிறுத்திவிட்டு ரகுவையும், அவன் அப்பாவையும்,அகல்யாவையும் முன்னர் நடக்க சொல்லிவிட்டு, ரகுவின் அம்மா மெல்ல தேவியின் கையை பிடித்துக்கொண்டு தேவி உனக்கு ரகுவை பிடிச்சிருக்கில்ல, என்று கேட்டாள்.

தேவி மெல்ல தலையாட்டினாள். இப்ப உன் கவலை என்ன அவன் வெளி நாடு போகக் கூடாது அப்படித்தானே?சடாரென திரும்பி ரகுவின அம்மா முகத்தை பார்த்தவள் நான் அப்படி சொல்லலை, அங்கேயே போய் செட்டிலாகக்கூடாது அப்படின்னு சொன்னேன்.

கொஞ்சம் நில்லு,உண்மையை சொல்லு உன் அம்மாவை தனியா இருப்பாங்க அப்படீன்னுதானே பயப்படறே?

உண்மைதான் ஆண்டி, அம்மா என்னை எப்படி தனியா வளர்க்க கஷ்டப்பட்டிருப்பாங்க.நான் மட்டும் அவங்களை தனியா விட்டுட்டு வெளி நாட்டுல போய் வாழனும்னு ஆசைப்படறது பெரிய துரோகமில்லையா?

மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தி “இங்க பாரு” உங்கம்மா நீ பிறக்காதத்துக்கு முன்னாடி இருந்து எனக்கு பழக்கம். எங்களை நம்பு. ரகு தன்னுடைய படிப்புக்கு ஒரு அங்கீகாரம் வெளி உலகத்துலயும் கிடைக்கணும்னு மட்டும்தான் ஆசைப்படுறான். மற்றபடி தன்னுடைய வாழ்க்கை இந்தியாவுலதான் இருக்கணும்னு விரும்பறான்.அப்படி எதிர்காலத்துல அங்கேயே வாழனுனும்னு அவன் ஆசைப்பட்டா நீ உன் குழந்தை குட்டிகளோட இங்க வந்துடு, இங்கே நானும் உங்க அம்மாவும் காத்துகிட்டு இருப்போம்.

சொன்னவளின் தோளில் மெல்ல சாய்ந்து கொண்டாள் தேவி. அவள் கண்களில் மெல்லிய நீர்த்திவலைகள் உருண்டோடின.

Print Friendly, PDF & Email

ஒட்டாத உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023

பணம் பிழைத்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *