தேரும் தேவர்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 8,810 
 
 

அஞ்சி வயசு வரைக்கும் நான் பாத்துப் பழகின அதே மாதிரி தான் மாணிக்கம் மாமா இப்பவும் இருந்தாரு. அவர சுலபமா அடையாளம் தெரிஞ்சிக்கிடற விஷயம் ரெண்டு மூணு இருக்கு

அந்த ரெண்டு மூணு விஷயங்களோடதான் மாணிக்கம் மாமா தானாமேராவிலர்ந்து புருவாஸ் வரைக்கும் போய் திரும்புகிற சித்தியவான் டிரன்ஸ் போர்ட் கம்பெனி பஸ்ல சன்னல் ஓரமா உக்காந்து வெளிய இருந்த காட்சிங்கள பாத்து ரசிச்சிகிட்டு இருந்தாரு.

சரியா பதினஞ்சி வருஷம் இருக்கும். பொறங் கான் தோட்டத்த விட்டு எங்க பாட்டியும் தாத்தாவும் சிலோனியாவுக்கு வந்து வெள்ள அரைக்கை சட்டையும், சிலுவாரும் போட்டுகிட்டு பவுனு பல்லுங்க வெளிய தெரிகிற மாதிரி வெத்தலய மென்னுகிட்டு, அழகழகான சுருட்டை முடியோட, இப்பவும் பாக்கிறதுக்கு அழகாதான் இருக்காரு மாணிக்கம் மாமா கைபோட்டு பஸ் நின்னதும் நான் ஏறினப்பவே, மாணிக்கம் மாமாவ அடையாளம் கண்டுக் கிட்டேன்.

பஸ்ல நெறய ஆளுங்க. என்னோட அதிர்ஷ்டம். மாமாவோட பக்கத்து சீட்டு காலியாவே இருந்திச்சு. என்னை யாருன்னு தெரிஞ்சுக்கப் பிரியப்படாமலே தள்ளி உக்காந்து எடம் குடுத்தாரு.

தானாமேரா (லூமூட்) புருவாஸ் ரூட்டுல ஒரு மணிக்கு ஒன்னு தான்னு பஸ் விடுறாங்க.

புருவாஸ் வரைக்கும் முப்பது சொச்ச மைலு ரூட்டு அது. அதுல பத்துப் பதினஞ்சி எஸ்டேட்டுங்க. இருவதுக்கு மேல மலாய்க்காரன் கம்பங்க, ஆறு சீனங் குடியிருக்கிற கேமுங்கன்னு அந்த பஸ் நிண்டு நிண்டு போய் சேர்றதுக்கு ரெண்டு மணிநேரம் ஆயிடும்.

புருவாஸ் போயி சேர்ந்தொடனே வடக்க தைப் பிங் பினாங்குக்கும், தெக்கே ஈப்போ கோலாலம்பூருக்கும் அங்கெருந்துதான் பயணம் வெக்க முடியும்.

அங்கயோ இல்ல வேற எங்கயோ போறதுக்குத் தான் மாணிக்கம் மாமா அந்தப் பஸ்ல ஒக்காந்திருந் தாருன்னு தெரியுது.

நான் பக்கத்துல ஒக்காந்ததப் பத்தியோ, அவரயே நான் ரொம்ப நேரமா உத்துப் பாத்துக்கிட்டு இருக்கிறதயோ மாமா கண்டுக் கிடல.

பஸ்சு போற வேகத்துல எதிர்காத்து அறயிற மாதிரி வீசினாலும் அதப் பத்தியெதையுமே கண்டுக்காம தான் இருந்தாரு படிய எண்ணெய் தடவி எடது பக்கம் கோடு எடுத்து தலய வாரி விட்டிருந்தாலும் தல கலஞ்சி பிரிஞ்சி அவர் மொகத்த மறைச்சிகிட்டு இருந்திச்சு. எதயுமே கண்டுக்காம மாமா வேற ஏதோ சிந்தனையில இருந்தது தெரிஞ்சிச்சு.

பத்துப் பதினஞ்சி நிமிசத்துக்கு அப்புறமும் சும்மா இருக்க என்னால முடியில. அவரோட புள்ளைங் கள எல்லாம் கூப்புட்டு சுத்தி ஒக்கார வச்சிட்டு, நடு மத்தி யில என்னய ஒக்கார வச்சி, சோத்த தின்னச் சொல்லி தெனமும் நண்டும் மீனுமா மங்குல போட்டு சாப்புட வச்சி வளர்த்தவரு தான் இந்த மாணிக்கம் மாமா

மாமான்னு சொல்லிக் கூப்புட்ட ஒடனே திரும்பிப் பாத்தாரு. பஸ் போட்ட இரச்சல் சத்தத்திலயும் மாமாவுக்கு காது சட்டுனு கேட்டுருச்சி.

திரும்பி ஒக்காந்தவரு என்னய மேலயும் கீழயும் உத்துப் பாத்தாரு. நெத்தியெல்லாம் ஏராளம் சுருக்கம் ஏறி எறங்கிச்சி. நான்தான் மாமா, கோபாலு ‘குக்கூ’ பேரன்னு என்னய அறிமொகப் படுத்திகிட்டப்ப கொஞ்ச நேரம் பொறி தட்டிய மாதிரி ஆனாரு மாணிக்கம் மாமா.

சடக்குன்னு என்னய புடிச்சிக்கிட்டாரு. என்னோட கைங்கல கெட்டியா புடிச்சி இழுத்து அணச்சிக் கிட்டாரு. எனக்கு கண்ணெல்லாம் கலங்கிடிச்சி. “ஐயா நல்லாருக்கியா, தலய மொகத்தயெல்லாம் தடவித் தடவிக் கொடுத்தாரு.

“அடேயப்பா நல்லா வளந்து பெரிய ஆளா எனக்கு மேல ஆளாய்ட்டியே”

“எவ்ளோ நாளாச்சிடா ஒன்னயெல்லாம் பாத்து. ம்.. என்னயெல்லாம் மறந்திட்டியேடா”ன்னு மாமா சொல்லும் போது கொரலு கொஞ்சம் தழுதழுத்தது. என்னோட கைகள விடவே அவருக்கு மனசு வரல. தாத்தா பாட்டி அப்பா அம்மா தம்பி தங்கச்சிங்களப் பத்தியெல்லாம் ரொம்பவே வெசாரிச்சாரு.

“இப்பதாம் மாமா! ஆறுமாசம் ஆச்சி. டிசம்பர்ல தவறிப் போனாரு தாத்தா”ன்னு சொன்னேன். “அவருக்கு தொண்ணூரத் தாண்டியிருக்குமேன்னாரு”. “ஆமாம் மாமா”.

ச்சொ ச்சொன்னு உச்சுகொட்டி அனுதாபப் பட்டாரு. “கடசீல நெனவுத் தப்பி ரொம்ப சிரமப் பட்டு தான் மாமா தாத்தா போனாரு.

பாட்டி நம்பவீட்டுல கொஞ்ச நாளும், லச்சிமி அத்த வீட்டுல கொஞ்ச நாளுமா கடத்திகிட்டு இருக்காங்க மாமா. தாத்தா போனதுலர்ந்து அவங்களுக்கும் மன நெல சரியில்லாம போயிடிச்சி”.

“டேய்! ஒன்யை எப்படி தூக்கி வளத்தாரு தெரியுமா, ஒங்க தாத்தா. ஆறடி ஒசரம். அடேயப்பா என்ன ஒசரம் என்னா தெடகாத்திரம்.

ஒங்க தாத்தா ‘குக்கு’ ஆறுமுகம்னா சுத்துப்பட்டு தோட்டத்துல இருந்த பொம்பளங்களுக்கு கண்ணுல மத்தாப்பு பறக்கும் டோய்.

ஒன்னயக் கையில புடிச்சிக்கிட்டு தொர பங்களாவுக்கும் வீட்டுக்கும் நடக்கிற அழகு சொல்லி முடியாதுடா”. மாமா கொஞ்ச நேரம் பதினஞ்சி வருசம் தாண்டிப் போயி திரும்பி வந்தாரு.

“கோபாலு, கோபாலுன்னு உம்பேர்ல உசுரையே வச்சிருந்தாரேடா. உன்னைய உட்டுப்புட்டு ஒருநாளும் அவரால இருக்கவே முடியாதுடா. என்னா ஆகிருதிடா அவர் கிட்ட.. வெப்பர் தொர பங்காளவுல உங்க தாத்தாவுக்கு தனி மரியாதடா.

தொர பொண்டாட்டி மேடமுக்கும் ஒங்க தாத்தாவுக்கும் தொடுப்பு உண்டாயிடிச்சின்னு, அவங்கள லண்டனுக்கு அனுப்பிட்டான வெப்பர் தொரயின்னு பங்களாவுல வேல பாத்த தோட்டக்காரன், ஜாகாக்காரன் லாம் வெளிய வந்து சொல்லிப் புட்டானுங்க.

அதுக்கு அப்புறம் ஒங்க தாத்தனுக்கும் பாட்டிக் கும் ஏற்பட்ட சண்ட ஓய ரெண்டு மாசம் புடிச்சது ஓய்…

எப்படிப்பட்ட மனுசண்டா அவரு. அவரும் போய் சேந்துட்டாரா தொண்ணூறு வயசு.ம். 30 வருஷம் வெள்ளக்காரன் வீட்டு சாப்பாடுன்னா சும்மாவா.

பொறங்கான் தோட்டத்துல எங்களுக்கு பக்கத்தூடு மாணிக்கம் மாமாவோடது.

அவங்க வீட்டுல வசவசன்னு ஏராளம் புள்ளங்க. பாப்பாத்தி, பொன்னம்பலம், கிஷ்டன், சுந்தரம், கண்ணம்மா இவங்கள்ளாம் பெரிய ஆளுங்களா ஆகி இருப்பாங்க. என்னோட ஈடுலயும், அதுக்கு கொஞ்ச மேலயும், ரெண்டு மூணு பேரு இருந்தாங்க. அதுல ஒருத் தன் பேரு தாமோதரன் இன்னொருத்தன் பேரு நடராசு. ஒருத்தன் பேரு இப்ப எனக்கு ஞாபகத்துக்கு வரல.

அப்பாவுக்கும் பாட்டிக்கும் வாய் வார்த்தயில ஆரம்பிச்ச சண்ட பெரிய வாக்கு வாதமா மாறி, ஒனக்கு பண்ணி வெச்ச கல்யாணக் கடன பைசா பாக்கியில்லாம வச்சிட்டு அப்புறம் பேசுடான்னு பாட்டி பெரிய போடா ஒரு போடு போட்டதுக்கு பதிலா தான் தோ! நீ பண்ணி வச்ச கல்யாணக் கடனுக்கு இத்த எடுத்து ஆளாக்கிக்கன்னு மூனு மாசக் கொழந்தயாயிருந்த என்னய தூக்கி பாட்டி மடியில போட்டுட்டு போனாங்களாம் எங்க அப்பாவும் அம்மாவும்.

மாட்டுப் பாலும் எடச்சி மார்க் பாலும், பக்கத் தூட்டுலர்ந்த மாணிக்கம் மாமா வூட்டுச் சோறும் சாப்பிட்டு ஆளா வளர்ந்தவன் நீன்னு எப்பப் பாத்தாலும் குப்பம்மா பாட்டி சொல்லிக்கிட்டு இருப்பாங்க.

பாட்டிய அம்மான்னு கூப்புடுற பழக்கம் எனக்கும் இருந்திச்சு லச்சிமி அத்தவூட்டு பசக்களுக்கும் இருந்திச்சி. இது! எங்க குப்பம்மா பாட்டிக்கு மட்டுந்தான். எங்க அம்மாவோட அம்மாவெல்லாம் பாட்டின்னுதான் கூப்பிடுவோம். என்னைய எங்க அப்பாவும் அம்மாவும் கல்யாணக் கடனுக்கு போட்ட பிள்ளயின்னு குப்பம்மா பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க.

நான் எப்ப? சோறு சாப்பிட மறுத்தாலும் தாத்தா கிட்டயும் பாட்டி கிட்டயும் அடம் புடிச்சாலும் மாணிக்கம் மாமா வீட்டுல கொண்டாந்து வுட்டுட்டுப் போயிடுவாங்க. மாணிக்கம் மாமா மெரட்டுனார்னா நான் ரொம்ப பயப்படுவேன்.

ஏன்னா, மாணிக்கம் மாமா பாம்பு, நண்டு, பூரான், உடும்பு, மூசாம் பூனை எல்லாத்தையும் கையில புடிச்சி தோள்ள கழுத்துலயெல்லாம் உட்டுக்குவாரு.

அதயெல்லாம் பாத்தப்ப மாம பேர்ல ரொம்ப பயம் உண்டாயிடுச்சி.

மாமாவோட எல்லாம் புள்ளைங்களயும் சுத்தி ஒக்கார வச்சிட்டு என்னைய நடுமத்தியில ஒக்கார வப்பாரு.

சோத்த போட்டுக்குடுத்திட்டு, இப்பவே எல்லா சோறும் உள்ள எறங்கியாவணும். இல்லண்ணா என்ன நடக்கும்ன்னு தெரியும்ல. ஆதிலெட்சுமி அந்த காண்டா நண்ட கொடுக்கு ஒடிக்காம கொண்டா.

எம் மச்சான் இங்க சோறு திங்காம ஆட்டம் காட்டிக்கிட்டு இருக்கான். இன்னிக்கு அவனா நானான்னு பாத்துப் புடரேன்னு சொல்லி நான் சோறு தின்னு முடிக்கிற வரைக்கும் பக்கத்துலயே ஒக்காந்துக்குவாரு.

நான் சோறு திங்க படற பாட்டப் பாத்து பெரிய கூட்டமே ரசிச்சி சிரிச்சுகிட்டிருக்கும்.

எனக்கு துக்கம் தாள முடியாம கண்ணிலர்ந்து தண்ணி பொலபொலன்னு கொட்டுனாலும் அழுதாலும் சோறு திங்காம மாணிக்கம் மாமாகிட்ட இருந்து தப்பிக்க முடியாது.

மாணிக்கம் மாமா எப்பவாச்சும் டவுனுக்குப் போயி வந்தார்ன்னா பழம், ரொட்டி, மிட்டாயெல்லாம் வாங்கி வந்து பத்து பங்கு வெப்பாரு.

அதுல ஒரு பங்கு கோபாலுக்குன்னு சொல்லி கூப்புட்டு குடுப்பாரு.

மாணிக்கம் மாமா வூட்டு மனுசாளுங்க மேல எப்பவும் நண்டு மீனு வாசம் வர்ற கவிச்சியே அடிச்சிக்கிட்டு இருக்கும்.

மாமா பால்மரம் வெட்டற வேல செஞ்சாலும், வேல முடிஞ்சி வீட்டுக்கு வந்து பரி, தூண்டி, வலை, சாக்கெல்லாம் எடுத்துக்கிட்டு தோட்டத்துக்கு பின்னால இருக்கிற காண்டா காட்டுக்கு போவாங்க.

அங்க கடல் தண்ணியெல்லாம் பெருவுற எடத் துக்குப் போயி நண்டு மீனெல்லாம் குத்தி எடுத்துகிட்டு வருவாரு. அப்போ பொன்னம்பலம் கிஷடயெல்லாம் மீன்புடிக்க கூட்டிக்கிட்டு போவாரு.

மாணிக்கம் மாமா கூட சேந்துக்கிட்டு எங்க லயத்துல இருக்கிற ஆளுங்களும் தூண்டில் வலையெல் லாம் எடுத்துகிட்டு சைக்கிள்கள்ல ஏறிப்போவாங்க.

அவங்க பின்னாடியே ஏழெட்டு நாய்ங்க கொலச்சிகிட்டு லொங்கு லொங்குனு ஓடுங்க.

மாணிக்கம் மாமா இந்த நாய்ங்கள கூட்டிகிட்டு போறதே உடும்புகள அடையாளம் காட்டுறதுக்கு தான்னு சொல்லுவாரு.

கடலுக்கு போறவுங்க எத்தன மணிக்கு திரும்பி வருவாங்கன்னே சொல்ல முடியாது.

மாணிக்கம் மாமா வூட்டுல பாட்டுப் பொட்டி ஒன்னு இருந்திச்சு. அதுல பாப்பாத்தி அக்கா மட்டும் தான் பாட்டு வெப்பாங்க. பிளேட்டு வச்சி சாவிய சுத்தனாதான் பாட்டுப் பொட்டியிலர்ந்து பாட்டுவரும்.

ஓரிடம் தனிலே, நிலையில்லா உலகினிலே, உருண்டோடிடும் பணம் காசிலே, பாட்டும், அம்மாவே: தெய்வம் உலகினிலே, பாட்டும்தான் பாப்பாத்தி அக்கா வெப்பாங்க. மாமா வீட்டுல இருந்தாங்கண்ணா, பூமியில் மானிட ஜென்மம் பாட்டும், சேவை செய்தாலே, காணலாம் என்ற பாட்டும் வெக்கச் சொல்லி கேப்பாரு. பாப்பாத்தி அக்காவும் அவரு கேக்கிர பாட்ட வெப்பாங்க.

தாத்தா தொர பங்களாவுக்கும், பாட்டி வெளிக்காட்டு வேலக்கும் போகும் போது மாணிக்கம் மாமா வூட்டுலதான் சொல்லி உட்டுட்டுப் போவாங்க.

என்னோட கைல பால்போத்தலும், தாத்தா வோட கைலி துணியும் இருக்கும். மாமா வூட்டுப் பசங்களோட அவங்க வீட்டுக்கு எதிர்ல ரொம்பப் பெரிய சேரி மரம் ஒன்னு இருக்கும். மழ பேஞ்சா கூட அந்த மரத்துக்கு கீழ தண்ணியே படாது. அவ்ளோ பெரியமரம்.

அதுக்கு கீழ மாமாவூட்டுப் பசங்க நடராசன், தாமோதரன் கூட வௌயாடிக்கிட்டு இருப்பேன்.

பாதிநேரத்துல பாட்டி வீட்டுக்கு வந்து சோறு ஊட்டிட்டுப் போவாங்க.

தாத்தா பங்களாவுக்கு பொறப்படுற நேரம் பார்த்து சில சமயங்கள்ல அடம் புடிப்பேன்.

என்னையக் கூட்டிக்கிட்டு தொர பங்களாவுக்கு போவாரு. தொரவூட்டு நாய்ங்க என்னை மொறச்சி மொறச்சிப் பாக்குங்க.

எனக்கு ரொம்ப பயமாயிருக்கும். நான் அழ ஆரம்பிச்சிடுவேன். அதனால தாத்தா என்ன தொரபங்களா பக்கம் கூட்டிகிட்டு போகாம உண்ணி கிராணி வீட்டுல வுட்டுட்டுப் போவாங்க. உண்ணி கிராணி மக தங்கமணிக்கும் என்னோட வயசுதான்.

தங்கமணி செக்க செவேல்னு ரொம்ப அழகாயிருக்கும். அவங்க பங்களாவுல எப்பவும் ஓடாத காடி ஒன்னு நிப்பாட்டி வெச்சிருப்பாங்க. அதுல ஏறிக்கிட்டு வௌயாடிக்கிட்டு இருப்போம்.

தங்கமணி அம்மா என்ன கூப்புட்டு இட்டிலி தோசயெல்லாம் குடுப்பாங்க.

அப்படி வௌயாடிக்கிட்டு இருந்தப்ப ஒரு நாளு தங்கமணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்.

தங்கமணி, ‘ச்சீ போடா’ ன்னு தள்ளிவுட்டுச்சி.

மாணிக்கம் மாமா குடும்பத்தோட நானும் தாத்தா பாட்டியும் ஔவையாரு படம் பாத்துட்டு வீட்டுக்கு வந்தப்பதான் அப்பாவும் அம்மாவும் என்னப் பாத்துட்டு போரதுக்கு வந்திருக்காங்க.

நாங்க படம் பாக்க போயிட்டம்னு தெரிஞ்சதும் எங்களுக்காவ காத்திருந்தாங்க.

படம் பாக்க போவும் போது “மீனா கம்பத்துல நொழஞ்சி குறுக்கால போனா சீக்கிரம் போயிடலாம். அதுக்காவ எல்லாரும் மலாய் கம்பத்துல நொழஞ்சி நடந்தாங்க. அப்படிக் கம்பத்து பாதையில் போவும் போது நாவ மரத்துலர்ந்து நீல கலர்ல பழமெல்லாம் உளுந்து கெடக்கும். ஆளாளுக்கு பொறுக்கிக்குவாங்க. பாட்டிக்கும் எனக்கும் அஞ்சஞ்சுப் பழம் கெடச்சது.

அந்தப் பழம் எனக்கு புடிக்காது. ரொம்ப தொவப்பா இருக்கும்.

சிலுவார் பையிலல்லாம் அதப் போட முடியாது. பாட்டி வெத்தலப் பையில வெச்சிக்கிட்டாங்க.

அந்த ஞாபகம் வந்து வெத்தலப் பையிலர்ந்து நாவல் பழத்த எடுத்து அம்மாகிட்ட குடுத்தேன்.

அம்மா என்ன கட்டிப்புடிச்சி முத்தம் வெச்சாங்க.

அப்பாவுக்கும் பாட்டிக்கும் தாத்தாவுக்கும் இருந்த சண்டயெல்லாம் தீந்து போயி சமாதான மாயிட்டாங்க. அதெல்லாம் கொஞ்சம் நாளக்கிதான். அப்புறம் மறுபடியும் சண்டதான்.

அம்மாவும் அப்பாவும் பாட்டி வீட்டுக்கு வந்துட்டுப் போறப்பல்லாம் சண்ட நடக்கும்.

அதுக்கு அப்புறம் பாட்டி ஒப்பாரி வச்சி அழுவாங்க. பாட்டி அழுதா எனக்குத் தாங்காது நானும் அழுவேன்.

இதப்பாத்துட்டு தாத்தா பாட்டிய திட்டுவாரு. தாயியென்னா இதுவெல்லாம் புள்ளங்கள அனுப்பி வெச்சிட்டு ஒப்பாரி வெக்கிற பழக்கம்னு” பேசுவாரு.

ரொம்ப நேரம் அழுதப்பறம் தான் பாட்டி ஒப்பாரிய நிப்பாட்டுவாங்க.

ஒரு நாளு தாத்தா மத்தியானம் போல டவுனுக் குப் போனவரு சாயங்காலமாகியும் வீட்டுக்கு வரல.

அன்னக்கி பாத்து மழ வேற புடிச்சி பேஞ்சிகிட்டு இருந்திச்சு.

எனக்கு தாத்தாவ ரொம்ப நேரமா காணமேன்னு கவலயா போயிடிச்சி.

அடிக்கடி பாட்டிகிட்டப் போயி தாத்தாவக் காணமின்னு கவலயா கேட்டுக்கிட்டு இருந்தேன்.

வீட்டு வாச படியில நின்னுக்கிட்டு தாத்தா டவுனுக்குப் போன வழியவேபாத்துக்கிட்டு நின்னேன்.

கொஞ்ச தூரத்துல ஒரு உருவம் மழயில நனஞ்சி கிட்டு வர்றதுமாதிரி தெரிஞ்சது.

அது தாத்தாவேதான். மழயில நனஞ்சிக்கிட்டு தோளுமேல ஏதோ ஒரு பொருள் சொமந்துக்கிட்டு வர்றது தெரிஞ்சது. தாத்தாவப் பாத்துட்ட சந்தோஷம். என்னால தாங்கமுடியில. வெளிய எறங்கி மழயின்னும் பாக்காம நனஞ்சிக்கிட்டே ஓடி தாத்தாவக் கட்டிப் புடிச்சிகிட்டேன்.

தாத்தாவோட தோள்ள இருந்தது எனக்கு வாங்கிவந்த செகப்பு கலர் சைக்கிள் வண்டி.

மழயில நனஞ்சிகிட்டே தாத்தாவெப் பாத்து ஓடனப்போ பின்னாலர்ந்து யார் யாரோ அதட்டற சத்தம் கேட்டது.

ஒரு கையில் செகப்பு கலர் சைக்கிள் வண்டியும், இன்னொரு கையில என்னயும் தூக்கிக்கிட்டு நடந்தாரு. தாத்தா. மழ பேஞ்சிக்கிட்டே தான் இருந்துச்சு.

லயத்துல உள்ளவங்களும் மாணிக்கம் மாம வீட்டுல இருக்கிறவங்களும் எங்க ரெண்டு பேரையுமே பாத்துகிட்டு நிக்கிறாங்க.

தலயில கட்டியிருந்த தலப்பாவ அவுத்து புழிஞ் சிட்டு என்னைய தல கால் ஒடம்பெல்லாம் தொடச்சி விடராரு தாத்தா.

அந்த தலப்பாத் துண்டாலெயெ செகப்புக் கலர் சைக்கிள் வண்டியையும் தொடச்சாரு.

என்னால பொறுக்க முடியில. ஈரத்தோடயே வீட்டுக்குள்ள ரெண்டு வட்டம் போடறன்.

எப்படா மழநிக்கும்னு பாத்துக்கிட்டே இருந்திட்டு மழ நின்ன வொடனே மாணிக்கம் மாமா வீட்டுக்குள்ள சைக்கிள கொண்டு போய் ரெண்டு வட்டம் வுட்டேன். என் ஈட்டுப் பசங்க நடராஜனுக்கும் தாமோதரனுக்கும் ஓட்டறதுக்கு சைக்கிள கொடுத்தேன்.

அவனுங்க மெதிக்கும் போது மாமா வீட்டுல ஒரே சத்தம் கௌம்பிடுச்சி. பாப்பாத்தி அக்காதான் அங்க வந்து அவனுங்க ரெண்டு பேரு முதுவுலயும் ஒன்னு ஒன்னு வச்சி சைக்கிளப் புடுங்கி எங்கிட்ட குடுத்தாங்க.

எனக்கும் எந்தம்பி சுப்ரமணிக்கும் லச்சுமி அத்த வூட்டுப் பசங்க விசுருவேல், ராஜகிளி, காளியம்மாவுக்கும் பெரிய பந்தல் போட்டு காது குத்தெல்லாம் நடந்திச்சு. சிம்மம்பா (சித்தியவான்) மாரியம்மன் கோயில்ல போய் கெடா வெட்டி சாமியெல்லாம் கும்புட்டு வந்து தான் எங்க அஞ்சி பேருக்கும் வாயில வாழப்பழம் திணிச்சி நாக பத்தர வச்சி காது குத்துனாங்க.

கொஞ்ச நாளு சுப்ரமணியும் எங்கூடவே தான் தாத்தா பாட்டி வீட்டுல இருந்தான்.

லச்சுமி அத்த வூட்டு பசங்க மூணு பேரும் என்னவிட மூத்தவங்க. பள்ளிக்கூட லீவுல மட்டும்தான் பொறங்கானுக்கு வருவாங்க.

அவுங்க மூணு பேரும் பொறங்கானுக்கு வந்துட்டு போறப்ப நடேச மாமா வருவாரு.

எனக்கு அவங்க மூணு பேரும் பொறப்படும் போது ரொம்ப அழுகை வரும்.

நடேச மாமா என்னைய செல்லமா கொஞ்சி ராமுடு கட பக்கம் கூட்டிக்கிட்டு போயி புளிபழம், கிஸ்மிஸ் பழமெல்லாம் வாங்கிக்கொடுத்து சமாதானப்படுத்துவாரு.

அப்புறந்தான் லச்சிமி அத்தக்கி ஜெயகோபி பொறந்தான். அதுக்கு அப்பறமெல்லாம் விசிரு வேலும் ராஜகிளியும் ஆளுக்கு ஒரு சைக்கிள்ளயும் அத்த, மாமா, காளி, ஜெயகோபின்னு ஒரு சைக்கிள்ளய்யும் வந்து போவாங்க.

லச்சுமி அத்த வீட்டுகுடும்பம் பொறங்கானுக்கு வந்துட்டா குப்பம்மா பாட்டிக்கு சந்தோசம் புடிபடாது.

மலாய் கம்பத்துக்கு ஆளவுட்டு அனுப்பி கொக்கு நாலஞ்சி கொண்டாந்து அறுத்து சமைப்பாங்க.

என்னையும் தம்பியையும் கூட்டிக்கிட்டு போறதுக்கு ஒரு நாளு அப்பா மட்டும் வந்தாரு.

சைக்கிள்ள வச்சி கூட்டிக்கிட்டு போன அன்னக்கி பாதி வழியில சைக்கிள நிப்பாட்டி ரெண்டு பேரு காதுலயும் மாட்டியிருந்த தோடுங்கள கழட்டிக்கிட்டாரு.

அம்மா கேட்டா பாட்டி கழட்டி வெச்சிக் கிட்டாங்கன்னு சொல்லிப் புடனும்னு சொல்லிக் குடுத்துட்டாரு. பின்னால இந்தக் கத அம்மாவுக்குத் தெரிஞ்சி ஒரு சண்ட நடந்திச்சு.

ரொம்ப மொரட்டுத்தனமா அம்மாவ அப்பா அடிச்சிப் புட்டாரு.

ரொம்ப நாளு அம்மா கையில கட்டுப் போட்டுக்கிட்டு இருந்தாங்க.

என்னைய மட்டும் பொறங்கானுக்கு கூட்டிக் கிட்டு வந்து விட்டப்ப பாட்டி வீட்டுலயும் பாட்டிக்கும் அப்பாவுக்கும் வாய்ச்சண்டதான்.

எனக்கு பொறங்கானுக்கு வந்தப்ப ஒரு ஆச்சரியம் நடந்திருச்சி.

பாட்டியும், தாத்தாவும் வீடு மாறியிருந்தாங்க. இப்ப நாங்க மாணிக்கம் மாமா வூட்டுக்குப் பக்கத்துல இல்ல. இப்பல்லாந்தான் நான் சோத்த தட்டுல போட்டுக் கொடுத்த ஒடனே சாப்பிட்டுறனே. இனிமே நானு மாணிக்கம் மாமா வூட்டு நண்டுக் கொடுக்கு, பூரான், பாம்பு, உடும்புக்கெல்லாம் பயப்படமாட்டேன். குப்பம்மா பாட்டி சொல்ராங்க எங்க கோபாலகிருஷ்ணன் ஆம்பளையா ஆயிட்டான்னு.

பாட்டி வீட்டுக்கு பக்கத்து வூட்டுல இப்ப பாப்பாத்தி அக்கா குடியிருக்கிறாங்க.

என்னன்னு பாத்தா, பாப்பாத்தி அக்காவுக்கு கல்யாணம் ஆயிடிச்சி. அக்காவோட வீட்டுல ரொம்ப செகப்பா ஒருத்தரு இருக்கிறாரு.

யாருன்னு பாத்தா பாப்பாத்தி அக்காவ இவருதான் கட்டிக்கிட்டாருன்னு சொல்றாங்க.

பாப்பாத்தி அக்காவ விட ஒசரமா இருந்தாரு.

பாப்பாத்தி அக்காவ கட்டிக்கிட்ட வரு பாப்பாத்தி அக்காவ ரெங்கநாயகி ரெங்கநாயகின்னு வேற பேர்ல கூப்புடுறாரு.

பாட்டி வீட்டுக்கு பக்கத்துல பாப்பாத்தி அக்கா வூடு மட்டும் இல்லா இருந்திருந்தா எனக்கு இந்த வூடு புடிக்காமயே போயிருக்கும்.

பொறங்கானுக்கு அப்பா கூட்டிக்கிட்டு வந்து சைக்கிள்ள எறக்கி விட்டொடனே பாப்பாத்தி அக்கா வந்து என்யை கட்டிப் புடிச்சிக்கிட்டு முத்தம் குடுத்தாங்க… எங்கல்யாணத்துக்கு வந்து நிக்காம எங்க போயி ஒளிஞ்சிக்கிட்டன்னு கேட்டாங்க.

பாப்பாத்தி அக்கா முன்னயவிட இப்ப ரொம்ப அழகா இருந்தாங்க. கழுத்துல புதுசா மஞ்ச கயிறு தொங்கிக்கிட்டு இருந்திச்சு.

கையப் புடிச்சி இழுத்துக் கிட்டுபோயி ஒருத்தரு முன்னாடி நிப்பாட்டுனாங்க.

பாப்பாத்தி அக்காவ அவரு என்னன்னு கேட்டாரு.

அப்பதான் பாப்பாத்தி அக்கா என்னப் பத்தி அவருகிட்ட எல்லாக் கதயையும் சொன்னாங்க.

என்னோட கைங்க ரெண்டையும் அவரு கெட்டியா புடிச்சிகிட்டாரு.

எங்கூட வா மாப்பிளேன்னு கூட்டிக்கிட்டுப் போனாரு.

அதிரசம், முருக்கு, எடுத்து எங்கிட்டே குடுத்தாரு.

முதல்ல எனக்கு தயக்கமா இருந்திச்சு.

அவரு சிரிச்சாரு. ரெண்டயும் வாங்கிக்கச் சொன்னாரு. வாங்கிக்கிட்டேன். அவருகிட்ட இருந்து நழுவி ஒடியாந்து பாப்பாத்தி அக்கா பக்கத்துல நின்னுக்கிட்டேன்.

அதப் பாத்து அக்கா சிரிச்சிகிட்டாங்க.

அக்காவப் பாத்தேன். “டே! அவரு உங்க மாமாடா”ன்னு சொன்னாங்க.

பாப்பாத்தி அக்கா பக்கத்துல நின்னுக்கிட்டு அந்த மாமாவப் பாத்து சிரிச்சேன்.

“அவரு எழுந்து ஏதோ வேலயா வாசப்பக்கம் போனாரு”. அக்கா, அவரு ஏங்க்கா ஒம்பேர மாத்தி வேறமாதிரி கூப்புடறாரு”.

“டேய்! அது வேற மாதிரி பேரு இல்லடா அக்காவுக்கு அது பள்ளிக்கொடத்துல வச்ச பேரு. அந்தப் பேரச் சொல்லித்தான் இப்ப மாமா கூப்புடுறாரு”ன்னு சொன்னாங்க.

அதுக்குள்ள வாசப்பக்கம் போயிருந்த பாப்பாத்தி அக்கா வூட்டு மாமா, வீட்டுக்குள்ளாற வந்தாரு.

பாப்பாத்தி அக்கா அவரப் பாத்து “பாப்பாத் தின்னு பேரச் சொல்லிக் கூப்புடாம, ஏன் ரெங்க நாயகின்னு பேரச்சொல்லி கூப்புடுறாருன்னு ஒங்க மாப்பிள கேக்கிறாரு. நீங்க அவனுக்கு பதில் சொல்லுங்க”.

மாமா என்னக் கூப்புட்டாரு. பக்கத்துல போய் நின்னேன். பேரப் பத்தியெல்லாம் பாப்பாத்தி அக்காகிட்ட நான் வெசாரிச்சது மாமாவுக்கு புடிச்சிப்போயி இப்ப அவரு உட்கார்ந்திருக்கிற நாற்காலிக்குப் பக்கத்து நாக்காலியில ஒக்கார வெச்சிக்கிட்டாரு.

அப்பதான் மாமா கேட்டாரு. “உம் பேரு என்ன?”

“எம் பேரு கோபாலகிருஷ்ணன்”.

“பாட்டி எப்பிடி ஒன்யைக் கூப்புடுவாங்க” கோபாலகிருஷ்ணான்னு தான் கூப்புடுவாங்க”.

“தாத்தா, எப்பிடி ஒன்யைக் கூப்பிடுவாரு”.

“கோபாலுன்னு தான் கூப்புடுவாரு”.

“அக்கா ஒன்யை என்னா சொல்லி கூப்புடுறாங்க”.

“கோபாலுன்னு தான் கூப்புடுவாங்க”.

“நாளக்கி நீ பெருசாயி பள்ளிக்கொடம் போனீனா அங்க சாருங்கல்லாம் ஒன்யை வேர பேரு வச்சிதான் கூப்புடுவாங்கன்னு” மாமா சொன்னாரு.

அப்பா பேரு, அம்மா பேரு, தாத்தா பாட்டி பேரு, தம்பிங்க பேரு எல்லாத்தயும் கேட்டாரு.

ஒன்னு விடாமச் சொன்னேன்.

“எம் பேரு என்னன்னு ஒனக்குத் தெரியுமான்னு கேட்டாரு”.

“தெரியாதுன்னு சொல்லி தலய ஆட்டுனேன்”.

“பழனிசாமின்னு சொன்னாரு”. பெரிய ஆளுங்களப் பாத்தா மாமா அண்ணன்னு சொல்லித்தான் கூப்புடணும்.

பேரெல்லாம் சொல்லி கூப்புடக் கூடாது.

“சரி.மாமா”ன்னு சொன்னேன்.

பழனிசாமி மாமாவோட அப்புறம் நான் ரொம்ப ஒட்டிக்கிட்டேன்.

பழனிசாமி மாமா புது ரய்லீ சைக்கிள் வச்சிருக்கிறாரு. பாப்பாத்தி அக்காவும் பழனிசாமி மாமாவும் அந்த சைக்கிள்ல தான் ‘சிம்மம்பா’ (சித்தியவான்) வுக்கெல்லாம் போயிட்டு வருவாங்க.

ஒரு தடவ அப்பிடி போயிட்டு வரும்போது, எனக்கு சிலேட்டு பல்பம் குச்சியெல்லாம் வாங்கிட்டு வந்து குடுத்தாங்க.

அ, ஆ, இ, ஈ, 1, 2, 3 ல்லாம் எழுதி சொல்லிக் குடுத்தாரு பழனிசாமி மாமா.

ஒரு நாள் காலயில அப்பா வீட்டுக்கு வந்து பாட்டிகிட்டயும் தாத்தாகிட்டயும் அழுதாரு.

என்னோட தம்பி கனகரத்தினம் காய்ச்ச வந்து செத்துப் போயிட்டான்னு சொன்னாரு.

அதக்கேட்ட ஒடனே குப்பம்மா பாட்டி ஒப்பாரி வச்சி அழுதாங்க.

என்னையும் கூட்டிக்கிட்டு, தாத்தாவும் பாட்டியும் சப்போக் தோட்டத்துக்கு போனாங்க.

என்யைப் பாத்தொடனே அம்மா, சின்னம்மா எல்லாம் கட்டிப்புடிச்சி அழுதாங்க.

லச்சிமி அத்தயும் நடேச மாமாவும் புள்ளங்கள எல்லாம் கூட்டிக்கிட்டு குடும்பத்தோட வந்திருந்தாங்க. அத்த வீட்டுக் குடும்பத் தோடவெல்லாம் அம்மா எப்பவும் ஒட்டுறவா இருக்க மாட்டாங்க.

கனகரத்தினம் தம்பிய கெடத்தி வச்சிருந்த எடத்துல சுத்தி ஒக்காந்துகிட்டு பாட்டியும் அத்தயும் கதறி அழுதாங்க. அதப்பாத்து எனக்கும் ரொம்ப அழுக வந்திச்சு.

தாத்தாவ எப்பவும் அப்பா நைனான்னு தான் கூப்புடுவாரு.

பாட்டிகிட்டயும் தாத்தாகிட்டயும் வந்து அப்பா “கொஞ்ச நாளக்கி இவன் இங்கியே இருக்கட்டும்”னு சொன்னாரு. பாட்டி ஒத்துக்கிடல.

சத்தம் போட்டாங்க. “ஏண்டா, மாமியா வூட்டு மந்திரமா”ன்னு கேட்டாங்க.

தாத்தாவும் பாட்டியும் என்னய அப்பாகிட்ட உட்டுட்டு போவுரதப்பாத்து அழுதேன்.

பாட்டியும் தாத்தாவும் இல்லாம என்னால இருக்க முடியாது.

அவங்க ரெண்டு பேரயும் நெனச்சி நெனச்சி அழுதுக்கிட்டே இருந்தேன்.

கிஷ்டம்மா சின்னம்மாவும் பத்மாவதி சின்னம்மாவும் என்னக் கூட்டிக்கிட்டு போயி சமாதானப் படுத்துனாங்க.

கொஞ்ச நாளு கழிச்சி பொறங்கான்ல இருக்கிற பாட்டி வீட்டுக்குப் போனப்ப பாப்பாத்தி அக்கா வீட்டுல ஒரு குட்டிப்பையன் இருந்தான்.

ரொம்ப அழகா இருந்தான். பழனிசாமி மாமா பாக்கிறதுக்கு ஜெமினி கணேசன் மாதிரி இருப்பாரு. அவரவிட வெள்ளயா இருந்தான் அவன்.

பழனிசாமி மாமா “டேய், கோபாலகிருஷ்ணா இவன் பேரு என்னன்னு கண்டுப் புடிச்சி சொல்லு பாக்கலாம்”னு சொன்னாரு.

“தெரியாது மாமா”ன்னு சொன்னேன்.

“நம்ம வீட்டுக்கு புதுசா தம்பி பாப்பா வந்திருக்கான். நீ அவனக் கூட வந்துப் பாக்காம உங்க அம்மா வூட்டலயே இருந்திட்ட. ஒன்ன நெனச்சி உங்க பாட்டியும் தாத்தாவும் தெனம் அழுது ஒப்பாரி வெச்சிகிட்டு இருந்தாங்கடா”ன்னு பாப்பாத்தி அக்காவும் வந்து சொன்னாங்க.

அதெயெல்லாம் கேக்கும் போதே எனக்கு அழுக வந்திருச்சி.

“தாத்தா பாட்டின்னா ஒனக்கு அவ்ளோ உசுராடா பழனிசாமி” மாமா கேட்டாரு. ஆமான்னு தலயாட்டினேன்.

இனிமே யாரு வந்து கூப்புட்டாலும் தாத்தா பாட்டிய விட்டு போயிடக் கூடாதுன்னு நெனச்சிகிட்டேன்.

ஒரு நாளு சாயங்காலமா துலுக்கானம் தாத்தா வீட்டுப் பையன் பரசுராமனும் நானும் தகரக் குவள அடுக்கி வச்சி கல்லால அடிச்சி சாய்க்கிர வௌயாட்டு விளயாடிக்கிடடு இருந்தோம்.

அப்போ பரசுராமன் விட்டெறிஞ்ச கல்லு பட்டு எகுருன குவள பறந்து வந்து நெத்தியில பட்டு பொளந்துக்கிச்சி.

அந்த எடத்துலர்ந்து ரத்தம் வேகமா கொட்டுச்சி.

அதப்பாத்தவொடனே பரசுராமன் ஓட்டம் புடிச்சிட்டான்.

பாப்பாத்தி அக்காதான் பதறித் துடிச்சி ஒடியாந்து துணியெல்லாம் வச்சி கட்டி ரத்தத்த நிப்பாட்டுனாங்க.

பாட்டியும் தாத்தாவும் வேலக்கி போன சமயத்துல இது நடந்திருச்சி.

சின்னப் புள்ளங்க வௌயாட்டுன்னு பாட்டி அத சும்மா விடல.

துலுக்கானம் வீட்டு வாச வரைக்கும் போயி கத்தி கூச்சல் போட்டு சண்டய பெருசாக்கிட்டாங்க.

சண்ட வெவகாரம், தொரவரக்கும் போயிடிச்சி.

அப்ப அந்தத் தோட்டத்துல பெரிய கிராணி உன்னி மேனன் சின்ன கெராணியா வேல பாத்தவரு, நடேச மாமாவோட தம்பி. மணியம் கெராணி.

மணியம் கெராணி எனக்கு காயம் உண்டாக்குன பரசுராமன் அக்காவ கல்யாணம் கட்டியிருந்தாரு.

தொரகிட்ட போயி பாட்டியப் பத்தி புகார் குடுத்துட்டாரு மணியம் கெராணின்னு பாட்டி பொலம்பிகிட்டு இருந்தாங்க.

தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஓயாம சண்ட. பாட்டி தோட்டத்தவுட்டு போயிடனும்னு புடிவாதம் புடிச்சாங்க.

காடியில சாமானுங்கள எல்லாம் ஏத்திகிட்டு இருந்தப்ப, மாணிக்கம் மாமாவும் ஆதிலட்சிமி அத்தயும் ஒடியாந்தாங்க. பாப்பாத்தி அக்காவும் பழனிசாமி மாமாவும் பாட்டியவும் தாத்தாவையும் தோட்டத்த வுட்டு போக வேண்டாம்னு கெஞ்சினாங்க.

பாட்டி எதயுமே கேக்கிற மாதிரி தெரியல. பரசுராமன் வூட்டு குடும்பத்து ஆளுங்களத் தவிர எல்லாரும் வந்து பாட்டி வீட்டாண்ட கூடிட்டாங்க. பாப்பாத்தி அக்காவோட பையன் நாகலிங்கம் என்னப் பாத்து சிரிச்சிக்கிட்டே இருந்தான்.

மாணிக்கம் மாமா கண்ணு ரெண்டும் கலங்கி அழுதாரு ஆதிலட்சுமி அத்தயும் பாப்பாத்தி அக்காவும் அழுதாங்க. அதுக்கு அப்புறம் மாணிக்கம் மாமாவ பதினஞ்சி வருஷம் கழிச்சி புருவாசுக்கு போற பஸ்ல வச்சி பாக்கிறேன்.

மாமான்னு அவரப் பாத்து கூப்பிட்டேன்.

நடந்தது எல்லாத்தயும் நான் நெனச்சது போலவே மாமாவும் நெனச்சிருப்பாரோ.

இன்னும் அரை மணி நேரத்துல நான் எறங்குற எடம் வந்துடும் அதுக்குள்ளாற சொல்ல வேண்டியத சொல்லிடனும்னு தவிப்பு வந்துடுச்சி.

மாணிக்கம் மாமா பக்கத்துல ஒக்காந்திருந்தது எனக்கு ரொம்பவே வசதியா வேற போயிடுச்சி.

மாணிக்கம் மாமா என்னயப் பாத்தப்ப சடார்னு குனிஞ்சி காலப் புடிச்சிகிட்டு கதறிட்டேன்.

இத கொஞ்சமும் எதிர்பார்க்காத மாமா பதறிட்டாரு.

“மாமா, என்னய ஆசிர்வதிச்சு வாழ்த்துங்க மாமா, இன்னக்கி எனக்கு கிருஷ்ணர் கோயில்ல வச்சி கல்யாணம் நடக்குது”ன்னு நான் சொன்னப்ப மாமா கொஞ்சம் குலுங்கிட்டாரு.

“அட! என் செல்லமே, நல்லாருப்பா. நல்லா இரு. இந்த மாமனெல்லாம் மறந்திட்டிங்க பாத்தியா”. மாமா ரொம்பவும் ஆதங்கப்பட்டாரு.

“ஒனக்குத்தான் ஞாபகமிருக்காது. ஒப்பனுக்கு எங்க போச்சி யோசன”

“இப்பவே இந்த நிமிசமே நான் எறங்கிப் புடுவேன். ஒரு முக்கிய விஷயமா அவசரமா நான் ஈப்போ போயிக்கிட்டு இருக்கேன். போய்க்கிட்டிருக்கிற வேல ரெண்டொரு நாள்ல முடிஞ்சிடும்.

நான் வீட்டுக்கு கண்டிப்பா வந்து எல்லாத்தயும் பாக்கிறேன், ஒப்பன்கிட்ட மறக்காம சொல்லு”.

“கல்யாணத்துக்கு மல்லியப் பூவு சொல்லி வச்சிருந்த எடத்துலர்ந்து வராமப் போயிடிச்சி மாமா.

எல்லாரும் ஆளாளுக்கு வேலயா இருந்தாங்க. வீட்டுல சொல்லிட்டு, இங்க ஒரு எடத்துல அவசரத்துக்கு கேட்டா கெடைக்கும்னு சொன்னாங்க. அதான் மாமா பொறப்பட்டு வந்து வாங்கிக் கிட்டு பஸ் ஏறும் போது உங்களப் பாத்துப் புட்டேன்”.

“நீயா வந்து, நான்தான் கூக்கு ஆறு மொகத்தோட பேரன்னு சொல்லிக்கிடலனா எனக்கு எப்படிடா ஐயா தெரியும்.

டேய்! நான் அடிச்சி பயமுறுத்தி உனக்கு சோறு ஊட்டுனவன்டா, அந்தப் பாசம் இப்பவும் வந்து பக்கத்துல ஒக்கார வச்சி ஆசிர்வாதம் வாங்கிக்கிச்சு பாத்தியா. இத வீட்டுல போயி எல்லாருக்கும் சொல்லுவண்டா”!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *