கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 28, 2023
பார்வையிட்டோர்: 8,282 
 
 

கால்கள் புதையப் புதைய ஆசை தீரும் வரை தனக்குப் பிடித்த ஹாஃப் மூன் பே கடற்கரை மணலில் நடந்தாள் கற்பகம்..இந்த சொர்க்கபுரியை விட்டு நிரந்தரமாகப் பிரியப் போகும் நாள் நெருங்கிவிட்டது..

சொர்க்கபுரியா…? உலகமே அப்படித்தானே நினைக்கிறது…? பின் அதைவிட்டு ஏன் போக தீர்மானித்து விட்டாள்…? இது அவளாக விரும்பி எடுத்த முடிவு தானே! யார் இருக்கிறார்கள் அவளை கட்டாயப்படுத்த?

எத்தனை நாட்கள் மார்க்கின் கைகளைக் கோர்த்தபடி , பாதுகாப்பான, மிருதுவான கைகளைக் கோர்த்துக் கொண்டு நடந்திருப்பாள்… ஆறடி உயரத்தில் பொன்னிற தலைமுடியை அடிக்கடி கோதிவிட்டபடி, இடையிடையே அவளை அணைத்து ஒரு முத்தப் பரிசு தரவிழையும்போதெல்லாம் தடுத்து விட்டிருக்கிறாள் ……!

அமெரிக்க கலாச்சாரம் இன்னும் அவளுக்குள் நுழைந்து விடாமல் கவனமாய் இருந்தாலும், அவனுடன் கைகோர்த்து நடப்பதற்கு ஒரு தடையும் சொன்னதில்லை…

‘ மார்க்கின் கைகள் இத்தனை மிருதுவாக இருக்கும் என்று அவள் எதிர் பார்க்கவே இல்லை… அவனுடைய மனது மாதிரி..!

தாய்நாட்டிற்கு திரும்புமுன் அவனை மட்டும் பார்த்துவிட்டு போக வேண்டும் என்று அவள் உள்ளுணர்வு நச்சரித்துக்கொண்டே இருந்தது…

தாய்நாடா…? இந்தியாவா…? அமெரிக்க குடியுரிமை பெற்று இருபது வருடங்களாக விட்டது மறந்து விட்டதா…? இல்லை..!! எத்தனை வருடங்கள் ஆனால் என்ன…? அவள் தாய்நாடு இந்தியா என்று இல்லாமல் போகுமா..? அப்படியானால் இது தந்தை நாடாக இருந்துவிட்டு போகட்டும்…!

இருபத்தைந்து வயது இளநங்கையாய் அவள் கலிபோர்னியாவில் காலடி எடுத்து வைத்தபோது இருந்த பிரமிப்பு இப்போது எங்கே போய்விட்டது..?

கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்த வானுயர கட்டிடங்கள் இப்போது வாழ்க்கையின் ஒரு அங்கமாய், மாறிப்போன மாயமென்ன? எல்லாமே கையில் கிடைக்கும் வரைதான்..!

ஆனால் மார்க் மட்டும் இதற்கு விதிவிலக்கானான்.. கையிலிருந்த ஒரு புதையலை நழுவ விட்டு விட்டாளே..! இல்லை.. அவள் கையிலிருந்து பிடுங்கி எறிந்து விட்டார்கள்…

ஆனால் இப்போதோ அவர்களைப் பார்க்க, நிரந்தரமாய் அவர்களுடன் சேர்ந்திருக்கப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறாள்…


“அம்மா..! கல்பா குட்டி! கல்பா குட்டின்னு தூக்கி தலைல வச்சிட்டு ஆடுவியே…பாரு.. இப்போ உன்ன விட்டு ரொம்ப தூரம் போகப்போறா…!”

“அவ மேல படிக்கத் தானே போறா…! படிச்சு முடிச்சு திரும்பி வராமலா இருப்பா…”

“அம்மா…நீ எந்த காலத்துல இருக்க…? அமெரிக்கா போனவா யாராவது நிரந்தரமாக திரும்பி வந்ததா கேள்விப்பட்டதுண்டா…? அஞ்சு வருஷத்துல க்ரீன் கார்ட்..பத்து வருஷத்துல சிட்டிசன் ஷிப்… அப்புறம் இந்தியாவுக்கே டாடா..பை..பை…”

அம்மா அழ ஆரம்பித்தாள்…

“கல்பா.. நீ இவங்க சொல்றமாதிரி அங்கேயே இருந்துடுவியாடா…? இந்த அம்மாவ மறந்திடுவியா…? அப்போ நீ போகவே வேண்டாம்…”

“அம்மா..அம்மா..! அவுங்க சொல்றதப் போய் நம்பறியே.. உன்ன விட்டுட்டு என்னால இருக்க முடியுமா…? நீ வேண்டான்னு சொன்னா நான் போகல…”

கடைசியில் அவர்கள் சொன்னது அச்சு பிசகாமல் நடந்துவிட்டதே…!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மிகவும் புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முழு உதவித்தொகை பெற்று நுண்ணுயிர் ஆராய்ச்சி படிப்பை ஏற்றுக் கொள்ளும்போது கற்பகத்துக்கு இருபத்தைந்து வயது…

தங்குவதற்கு வாடகை வீடு தேடிக்கொண்டிருக்கும் போதுதான் கண்ணில் பட்டது அந்த விளம்பரம்..

கொலராடோ அவென்யூ, பாலோ ஆல்டோ நகரில் இரண்டு படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட்டை பகிர்ந்து கொள்ள அழைப்பு… நான்சி என்ற பெண்ணுடன்…

அவளை நேரில் பார்த்தவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி…

நான்சி அவளுடைய இளங்கலை வகுப்பு தோழி.. தஞ்சாவூர் செவிலியர்கள் கல்லூரியில் நர்சிங் படித்து மேற்படிப்புக்காக ஸ்டான்போர்ட் மருத்துவமனையில் சேர்ந்தவள் இப்போது புற்றுநோய் சிகிச்சை வார்டில் ஒரு பகுதிக்கு சீஃப் நர்சாக இருப்பதை அறிந்ததும் உலகமே சுருங்கி விட்டது போல ஒரு உணர்வு…

வாரக் கடைசி எப்படி பறந்து போனதென்றே தெரியவில்லை… இருவரும் சுற்றாத இடமில்லை…


ஹாஃப் மூன் பே கடற்கரை… சந்திரப்பிறை போன்ற தோற்றம் கொண்ட கடற்கரை…இருவரும் மனம் விட்டுப் பேசிய நாட்களை எண்ணிப் பார்க்கிறாள் ..

அங்குதான் மார்க் அவளுக்கு அறிமுகமானான்.. அவனும் ஸ்டான்போர்ட் மருத்துவமனையில் ஃபிசியோதெரப்பிஸ்ட்டாக வேலை பார்க்கிறான் என்று அறிந்தபோது அவர்களது மகிழ்ச்சி இரட்டிப்பானது.

அவனுக்கு இந்தியாவைப்பற்றி தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம்… அவள் சொல்வதை கேட்கும் போது கோலிக்குண்டு நீலக் கண்கள் விரியும் அழகில் கற்பகம் மனதைப் பறிகொடுத்தாள்…

“அடுத்த முறை இந்தியா போகும்போது நானும் உன்னுடன் வரலாமா…? உன் குடும்பத்தை சந்திக்க ஆவலாயிருக்கிறேன்…

கற்பகம்…! நான் உங்கள் நாட்டின் மேல் அதிக மோகம் கொண்டு விட்டேன்… ஒரு இந்தியப் பெண்ணைத் துணைவியாக்கிக் கொள்ள விரும்புகிறேன்.. அது நீயாக இருந்தால் …?”

அப்போதுதான் கற்பகம் விழித்துக் கொண்டாள்… இருவரும் மனதால் நெருங்கிவிட்டோமோ..! உண்மை அவளை ஊமையாக்கியது..!


“கற்பகம்.. மார்க் மாதிரி ஒரு பையன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்… ஆனா உன் குடும்ப சூழ்நிலைய யோசிச்சு பாரு… அப்பா இருந்தவரைக்கும் எத்தனை கண்டிப்பு…உங்க அம்மாவுக்கு உலகமே உங்க நாலுபேரச் சுத்திதான்..!

உங்க அண்ணனே கல்யாணம் ஆனதும் மாறிட்டான்னு சொல்ற… அடுத்த அக்காவும் அம்மாவுக்கு உதவி செய்யுற நிலைமைல இல்ல.. மூணாவது அக்காதான் ஏதோ சம்பாதிச்சு குடும்பம் ஒரு மாதிரி தட்டுத் தடுமாறி ஓடிட்டிருக்கு… நீ அனுப்புற பணத்துக்குத்தான் அங்கே காக்கா கூட்டம் மாதிரி எல்லோருமே சுத்திவராங்க..!

இந்த நேரத்துல மார்க்க கல்யாணம் பண்ணிக்க அவுங்க யாரும் நிச்சயமாக சம்மதிக்க மாட்டாங்க.. அதுவும் உங்க அம்மா உயிரையே விட்டிடுவாங்க… நீ இங்கேயே நிரந்தரமா தங்கிடுவன்னு பயப்படுவாங்க..

யூ ஹாவ் டு ஹாண்டில் வித் கேர்…

அதே சமயம் சொல்லாம இருந்தா , அப்புறம் வாழ்நாள் முழுசும் ஃபீல் பண்ணுவ… யோசிச்சு முடிவெடு…”

நான்சி அவளை எப்படி புரிந்து கொண்டிருக்கிறாள்… அவளை அப்படியே இறுகத் தழுவிக் கொண்டாள்…

“மார்க்…! இந்தமுறை நீ என்னோட இந்தியா வரவேண்டாம்… வீட்ல எல்லார் கிட்டேயும் பேசிட்டு அடுத்த முறை நீ என்னோடு வந்தால் உன்னை எல்லோரும் புரிஞ்சுப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கு… விஷ் மீ குட் லக்…”

ஆனால் அந்த அடுத்த முறை வரவேயில்லை…


கற்பத்தின் தேவைகள் மிகக் குறைவு…

அவள் ஒவ்வொரு முறையும் ஊருக்கு கிளம்பும் போது (ஆண்டுக்கு ஒரு முறை நிச்சயம்) அவளுடைய பெட்டியை அடைத்துக்கொண்டு நிற்பவை பரிசுப் பொருட்களே…!

ஒரு மாதம் முன்பே லிஸ்ட் போட்டு வாங்க ஆரம்பித்து விடுவாள்..

ஒவ்வொருவருக்கும் பெயர் எழுதி, பேக் பண்ணும் காகிதங்களையும் தேர்ந்தெடுத்து வாங்குவதில் அவளுக்கு அவர்கள் மேல் இருக்கும் அக்கறையைக் கண்டு நான்சி வியந்து வியந்து பாராட்டுவாள்…


“தாங்யூ அத்த…! இதோட இருபது டீ ஷர்ட் ஆச்சு… என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் புலம்பறாங்க.. ’எங்களுக்கு இப்படி ஒரு அத்த இல்லியே‘ ன்னு…”

அண்ணா மூர்த்தியின் பையன் அபினவ் அவளை தனது ரோல்மாடலாகவே வைத்திருந்தான்…

“சித்தி… போனவாரம் தான் நீங்க வாங்கிக் குடுத்த பெர்ஃப்யூம் தீந்து போச்சுன்னு நெனச்சேன்.. ஸோ தாட்ஃபுல் ஆஃப் யூ…! எப்படி மறக்காம வாங்கிட்டு வரீங்க…”

அக்கா பெண் அமுதா அப்படியே அவளைக் கட்டிக் கொண்டாள்…

“அம்மா..இது உனக்கு…”

குளிர் காலத்துக்கு இதமான போர்வை…!

அப்புறம் அண்ணாவுக்கு ஐ பாட், அக்காவுக்கு டின்னர் செட், இன்னும் ஷாம்பூ, சோப், வாசனை மெழுகுவர்த்திகள்..! “

“கல்பா…சவிதா இன்னும் இரண்டு வருஷத்துல ஒரு டாக்டரா நம்ம கண்முன்னால நிக்கப்போறான்னா அது உன்னாலதான்…!! என் குடும்பமே அவளாலதான் தலைநிமிர்ந்து நிக்கப்போறது…”

அக்கா சாவித்திரி உண்மையிலேயே கண்கலங்கினாள்…

இரண்டு நாட்கள் எல்லோரும் கற்பகம் புராணம் தான்…

எப்போது மார்க்கைப்பற்றி சொல்லப்போகிறோம் என்ற கேள்வியே அவள் தலைக்குள் பொறியில் அகப்பட்ட எலியைப் போல் பிராண்டிக்கொண்டிருந்தது…

‘எல்லோர் முன்னாலும் பட்டென்று விடலை தேங்காய்போல போட்டு உடைக்கலாமா… ?இல்ல அம்மாவிடம் மட்டும் முதலில் ரகசியமாக சொல்லலாமா…?

எப்படியும் அம்மா ஊரைக் கூட்டப்போகிறாள்…

நிச்சயம் ஒரு புயல் வீசும் என்று எண்ணியவள் இடி, மின்னல், சுனாமி, பூகம்பம், ஏன் ஒரு பிரளயமே, சேர்ந்து தன்னை மூச்சு முட்ட மூழ்கடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை…!

அவளை நோக்கி பாய்ந்த கேள்விக் கணைகள் ஒவ்வொன்றும் விஷம் தோய்ந்த அம்புகளால் அவள் இதயத்தை அணுஅணுவாய் சித்திரவதை செய்தது…

அம்மா அடுத்த நிமிடமே உயிரை விடப்போவதாய் மிரட்டிய இமோஷனல் பிளாக்மெயிலுக்கு முன்னால் அவள் காதல் கருகி சாம்பலாகிப் போனது. அவர்களது சுயநலத்துக்கு முன்னால் கற்பகத்தின் வாழ்க்கையே திசைமாறிப் போனது…

அவர்களுடைய கவலையெல்லாம் அவள் அமெரிக்காவிலேயே நிரந்தரமாய் தங்கிவிட்டால்…? தங்கள் உறவு நிரந்தரமாய் அறுந்துவிட்டால்…?

மார்க்குக்கு என்ன பதில் கூறுவது என்ற தீர்மானம் செய்துவிட்டாள் கற்பகம்…


அவளுக்கு மார்க்கிடம் விடைபெறாமல் இந்தியா திரும்ப மனம் ஒப்பவில்லை..

நான்சி சில வருடங்களுக்கு முன்பே இந்தியா திரும்பி விட்டாள்.

அவனிடமிருந்த தொடர்பு நின்று போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.. இப்போது எங்கிருக்கிறான்..?

புதிய விலாசம் கண்டுபிடிப்பது அமெரிக்காவில் அத்தனை கடினமில்லை.. சரியான தகவல்கள் தந்தால் இதற்கென நிறையவே ஏஜென்சிகள் செயல்படுவதால், ஒருவழியாக கண்டுபிடித்து விட்டாள்.

அவனுக்காக மிச்சிகனின் டெட்ராய்ட் நகரத்துக்கு பயணம் செய்யும்போது மனம் உற்சாகத்தில் துள்ளியது..

நீலநிற கோலிகுண்டு கண்களில் அதே ஆர்வம்… அவள் கைகளை மென்மையாக பற்றியபடி சூசனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்..

“நான் உன்னிடம் அடிக்கடி கூறும் ‘லாஸ்ட் இண்டியன் டைமண்ட் ‘ இவள்தான்…! கற்பகம்..!

வீடு முழுவதும் குழந்தைகள்…அவனுடையதும், அவளுடையதும், அவர்களுடையதும்!.

மார்க்கின் இதயம் பெரிது… அதில் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் இடமுண்டு… கற்பகத்துக்கு இல்லாமல் இருக்குமா…?

“மார்க்.. நீ கண்டிப்பாக இந்தியா வரவேண்டும்.. சூசனின் கணவனாக உனக்கு கிடைக்கும் வரவேற்பு உன்னை திக்குமுக்காட வைத்துவிடும்…

அவள் அவனுக்காக தீட்டிய ‘ ஹாவ் மூன் பே‘ யின் வண்ண ஓவியம்…

“இது நமது நட்பை என்றும் உனக்கு நினவூட்டிக்கொண்டேயிருக்கும்!


இந்தியாவில் அவளுக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவத்துக்குப் பின் அவளுக்கு தாய்நாட்டுக்கு செல்லும் ஆர்வம் குறைந்து போனது.. வருடத்துக்கு இரண்டு முறையானது… பின் மூன்று…

இதோ வருடங்கள் பறந்து போனது… ஆனாலும் அவளுடைய கடமையிலிருந்து தவறியதே இல்லை…

அவர்களுக்கும் அவளிடமிருந்த எதிர்பார்ப்பும் தேவைகளும் குறைந்து வருவது அவளுக்கு புரியாமலில்லை..

பின் எதற்காக தன்னை வாழவைத்த சொர்க்கபுரியைவிட்டு நிரந்தரமாக கிளம்புகிறாள்…?


ஆறு வருடங்கள் அவள் இந்தியா போவதைத் தவிர்த்துவிட்டாள்..

பொருளாதார தேவைக்காக அவள் கையை எதிர்பார்த்த நிலை மாறிவிட்டது.. குழந்தைகள் நல்ல வேலையில் செட்டிலாகி இருந்தனர்..

சவிதா இப்போது குழந்தை நல மருத்துவர். அபினவ் ஒரு எம் என்.சி.கம்பெனியில் வைஸ் பிரசிண்ட் என்று கேள்விப்பட்டாள்..

ஆனால் இப்போது ஒரேயடியாக இந்தியாவில் குடியேற தீர்மானிக்கக் காரணம்…அவளது சேவை அவர்களுக்குத்தேவை என்ற எண்ணமே..

கற்பகத்துக்கு யாருக்காவது உதவி செய்து கொண்டிருக்க வேண்டுமென்ற பிடிவாதம்..

அண்ணா இப்போது தனியாகத்தான் இருக்கிறான்… மனைவியைப் பறிகொடுத்த துக்கத்தில் மன அழுத்தம், சுகர்..பி.பி..!

அம்மா கீழேவிழுந்து எலும்பு முறிவு. படுத்த படுக்கை.. அக்காவால் தனியாக பார்த்துக் கொள்வது சிரமம்…

தன் உடலில் வலு இருக்கும்வரை அவர்களுக்கு நிச்சயம் உதவி செய்ய வேண்டும்…

ஏர்போர்ட்டுக்கு யாரும் வரவில்லை..

“கல்பா..இங்க யாரும் உன்ன வந்து கூட்டிட்டு போற நெலைல இல்ல…நீ அம்மா வீட்டுக்கு வந்திடு… நான் அங்கதான் இருக்கேன்…”

சின்னக்கா சாவித்திரி பேசியவிதத்தில் ஒரு சகோதரி பாசம் மிஸ்ஸிங்..


அம்மா படுத்து கற்பகம் பார்த்ததேயில்லை.. எப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்தாகவேண்டும்..

“அம்மா..! கற்பகம் வந்திருக்கா பாரு…!”

“கற்பகமா…இங்க வந்து பக்கத்துல உக்காரு…ஏம்மா இத்தன நாள் அம்மாவ பாக்க வரல?”

“அம்மா…இனிமே உன்னோடதான் இருக்கப் போறேன்…”

“நிஜம்மாவா சொல்ற…?”

“யெஸ்.. உங்க பக்கத்திலேயே…”

சாவித்திரி.. நீ இத்தன நாள் தனியா கஷ்ட்டப்பட்ட…இப்போ நான் கூடவே இருப்பேன்…கவலப்படாத…”

“கற்பகம்… நானும் சவிதாவும் சேர்ந்து முடிவு பண்ணிட்டோம்… அம்மாவ ஒரு அஸிஸ்டட் கேர்ல சேர்க்க முடிவு பண்ணிட்டோம்.. அட்வான்ஸ் கூட கட்டியாச்சு.. நான் சவிதாவோட போய் இருக்கப்போறேன்…”

‘உனக்கு இங்கே வேலையில்ல ‘ என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது.

குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டது போல மனம் விட்டுப்போனது..

அம்மா சுய முடிவு எடுக்கும் நிலையிலிருந்தால் இதற்கு சம்மதிப்பாளா…?


அண்ணா மூர்த்தி இளைத்திருந்தான்… அவளைக் கண்டதும் கண்ணீர் கோர்த்து நின்றது…

“கற்பகம் வாம்மா..! இங்கேயே இருக்க முடிவு பண்ணிட்டியாமே… அபினவ் உன்னப்பத்தி பேசாத நாள் கிடையாது…!“

“அபினவ்..? அவன் கிட்டேயிருந்து ஒரு கம்யூனிகேஷனும் இல்ல… எங்க இருக்கான்…?”

“நீயூசிலாண்டல செட்டில் ஆகி ஆறு வருஷம் ஆச்சும்மா…!”

“அண்ணா…நீ தனியாவா இருக்க? நான் உங்கூட இருந்து உன்னப் பாத்துக்கறேன்..!”

“டோன்ட் ஒர்ரி கல்பா… அபினவ் ஒரு முழு நேர நர்ச ஏற்பாடு பண்ணிட்டுதான் போயிருக்கான்… ஐ வில் மேனேஜ்… பை த பை… இதுதான் அவனோட மனைவி எம்மா… குழந்தைகள் கெவின்…ஜூலி…”

கற்பகத்துக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் வெளியே வந்து விழக்காத்திருந்தது… ஆனால் அவள் உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக மரத்துப் போன நிலையில் எந்தக் கேள்வியும் அர்த்தமற்றதாகத் தோன்றியது. பதிலும் அது போலத்தான் இருக்கப்போகிறது..!

எம்மாவை அணைத்து ஏற்றுக் கொள்ள முடிந்த உறவுகள் மார்க்கை உதறித் தள்ளியது ஏன்…?

‘அபினவ்..! எங்கேயிருந்தாலும் ‘மை பெஸ்ட் விஷஸ்’

மனம் வாழ்த்தியது…

சின்னக்கா அமுதாவுடன் கல்கத்தாவில் இருக்கிறாளாம்… பேச்சு வார்த்தையே இல்லையாம்…

தேவைகள் பூர்த்தியானபின் உறவுகளுக்கு மதிப்பேது…?

கற்பகம் இடிந்து போய்விடவில்லை..! அவளது உலகம் பெரியது..!


“ஹலோ… நான் நான்சி பேசறேன்.. கற்பகம்?”

“ஹேய்…! வாட் எ ப்ளஸன்ட் சர்ப்ரைஸ்…! உன்ன எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு தலைய பிச்சிட்டிருக்கேன்..! உன்னப்பாக்கணுமே…!”

“நாளைக்கு எலியட்ஸ் பீச்சில ஆறுமணிக்கு மீட் பண்றோம்… ஓக்கே..!”

“வானத்தப்பாரு… வளர்பிறை..“

இருவருக்கும் ஹாவ் மூன் பேயில் நிற்பது போன்று ஒரு உணர்வு..!

நிறைய, நிறைய பேசினார்கள்…

“கற்பகம் ! நான் ஓரளவுக்கு இத எதிர்பார்த்தேன்.. நீ மார்க்க போய் பாத்தது பெஸ்ட் டெசிஷன்… கற்பகம் ஆர் யூ ஓக்கே…?”

“கொஞ்சம் ஏமாத்தமாதான் இருக்கு..! இது நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கல..!”

“எதிர்பார்ப்பு இருக்கிற இடத்தில்தான் ஏமாத்தமும் இருக்கும்… நாளைக்கு நீ என்னோட ஒரு இடத்துக்கு வர… நான் உன்ன வந்து கூட்டிட்டு போறேன்…”

அடையாறு கேன்சர் இன்ஸ்ட்டிட்யூட்..!

“இங்க யாரு இருக்கா…?”

“கமான்.. நான் இங்கதான் குழந்தைகள் புற்றுநோய் வார்டுக்கு சீஃப் நர்ஸ்…

இவங்களப்பாரு..! நாளைக்கு உயிரோட இருப்போமான்னு தெரியாது.. இன்றைக்கு இருக்கும் மகிழ்ச்சிதான் அவர்களுக்கு வாழ்க்கைல நிரந்தரம்.!

நிச்சியமாக உன்னோட சேவை இவங்களுக்குள்ள பல மாற்றத்தை ஏற்படுத்தும்…

கற்பகம் இவங்களுக்கு நீ தரப்பபோறத விட இரண்டு பங்கு மனநிம்மதிய வீட்டுக்கு எடுத்துட்டு போவ…நம்பு..!

இது ஒன்வே ட்ராஃபிக் இல்ல…வின்-வின் சிச்சுவேஷன்..!”

குழந்தைகள் கற்பகத்தை ஒடி வந்து கட்டிக் கொண்டனர்… எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *