காலை வேலை, பூக்களின் மணம் இதமாகப் பொங்கியது. சூரியன் அப்போதுதான் உதித்திருந்தான். மரங்களின் இலைகளின் மீதும் புற்களின் தண்டுகளின் மீதும் பனிநீர் இன்னமும் மினுமினுத்துக் கொண்டிருந்தது.
அந்த உடைந்துபோன நாடாக்கட்டிலைவிட்டு அவசர, அவசரமான எழுந்தாள் கமலி.
அந்த அரண்மனையில் அதுதான் அவளின் சுகபோக சிங்காதனம். அவள் எழுந்ததும் அந்தக் கட்டில் இறக்கம் குறைந்து நடுவில் குழியாகத் தொங்கியது.
அதுவும் இல்லாவிட்டால் இந்த டிசம்பர் மாதக்குளிரில் தரையில் பாய் போட்டுப் படுக்க முடியுமா? பனிக்கட்டியாகிப் பாயைக் கிழித்துக் கொண்டு சில்லிப்பு முதுகைப் பிளக்காதா?
தினமும் அவசர, அவசரமாக எழுந்து, குளித்து, ஆடை அணிந்து, கைப்பையை எடுத்துக் கொண்டு அவசர, அவசரமாக பஸ் பிடித்து, அதிலும் இடம் கிடைத்து உட்காரும் அதிர்ஷ்டம் கூட அவளுக்குக் கிடையாது.
அவளைப் பொறுத்தவரை அவள் ஒரு பணம் காய்ச்சி மரம், அவள் தேவைகளுக்கோ, உணர்வுகளுக்கோ அங்கே இடமில்லை.
சுமார் நாற்பது வருஷமா வீட்டிற்காக உழைப்பதைத் தவிர வேறொரு சுகமும் அவள் அனுபவிக்கவில்லை.
அவள் ஒருத்தி சம்பளத்தில் அம்மா, அப்பா, தம்பி, தங்கை என்று மொத்தக் குடும்பமுமே பயன் அடைகின்றன.
தன் வயதுள்ள பெண்கள் எல்லாம் தோளிலும், இடுப்பிலும் சுமந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருக்க அவள் மட்டும்…..
அவளுடைய தசாபுக்தியில் குருபலம் ஒரு நாளாவது வந்ததாகத் தெரியவில்லை. அவள் மட்டும் பிரம்மச்சரிய வகுப்பில் கடைசிப் பெண்ணாக சம்சார சூனியமாய் நாட்களைக் கழிக்கிறாள்.
அவளுக்குள் இருந்த ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் எல்லாம் வெடித்துப் போன பலுhன் போல் வானளாவிய ஆசைகள் எல்லாம் காற்றாய்ப்போய் உள்ளம் வெம்பி நிற்கிறாள்.
பந்தம், பாசம், பொறுப்பு, கடமை எல்லாம் அவள் ஒருத்திக்குத்தாள். இல்லேன்னா, அவள் தங்கைக்கு இத்தனை சீக்கிரம் கல்யாண ஆசை வருமா?
நன்றாகப் படிக்கணும், வேலைக்குப் போகணும், வயதான அக்காவை விடுவிக்கணும் என்ற உணர்வுகள் எல்லாம் அற்றுப் போகுமா? ஒருவேளை நாம வேலைக்குப் போனா அக்கா மாதிரி சுமைதாங்கி ஆகிவிடுவோமோ என்ற எண்ணத்திலேதான் அவசரமாக ஒருவனைக் காதலித்து அக்கா பணத்திலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனாளா?
அவள்தான் அப்படியென்றால் சொந்தத் தம்பி, அக்கா பணத்திலே படிச்சு, அன்பளிப்புக் கொடுத்து ஒரு வேலையையும் வாங்கிக்கிட்டான். ஆனாலும் இன்னமும் அவன் செலவுக்குக் கூட அக்காவைத்தான் எதிர்பார்க்கிறான்.
நாளை தான் வாழப் போகும் வாழ்க்கைக்குத் தேவையான பொருளைச் சேமித்து பணத்தைச் சேமித்துக் கொண்டு அவள் பணத்தில் வாழ்கிறான்.
வீட்டில்தான் இந்த நிலை என்றால் அவள் வேலை பார்க்கும் அலுவலகத்திலும் அதே கதைதான்.
அவளைப் போலவே பழசாகி இருக்கும் டைப்ரைட்டிங் மிஷின், அவளைப் போலவே அதுவும் ஓடாய்த்தேய்ந்து உருமாறிப் போயிருந்தது.
வீட்டில் உள்ளவர்கள்தான் அவள் உழைப்பை உறிஞ்சுகிறார்கள் என்றால் அலுவலகத்திலும் சக ஊழியர்கள் உங்களுக்கென்ன குடும்பமா, குட்டியா? எங்கள் வேலையும் சிறிது பார்த்துக் கொடுங்களேன்” என்பார்கள்.
இரண்டு இடத்திலுமே அவள் ஒரு இயந்திரமானாள். வாழ்வு எத்திரையிலும் வெறுமை என்ற நினைவே அவளை இன்னும் முதுமையாகக் காட்டியது. அந்த வெறுமையை எதைக் கொண்டு மறைப்பது?
அலுவலகம் முடிந்து வீடுவரும் வழியெல்லாம் அவள் உள்ளம் கூடிழந்த பறவையென அந்திவேளையில் தென்படும் ஒவ்வொரு வீட்டின் அறை தோறும் சிறகடித்துத் திரியும். அங்கு நடக்கும் சம்சாரசித்திரம் அவள் உள்ளத்தை இன்னும் அதிகமாகவே அழுத்தும்.
உடல் மட்டும் எந்திரமாகச் செயல்பட்டாலும் உள்ளம் எரிமலையாகக் கொதித்துக்கொண்டுதான் இருக்கிறது.
அலுவலகத்தில் வேலையில் ஒன்றிவிடுவதால் அந்த நேரத்தில் மட்டுமே உள்ளம் எதையும் நினைப்பதில்லை. இந்த வேலையும் இல்லையென்றால்… அதை நினைக்கவே அவள் உடல் நடுங்கியது.
சே! இன்று ஏனோ மனம் இப்படி ஆற்றாமையால் அழுகிறது. வேண்டாத எண்ணங்களை ஒதுக்கிவிட்டு வேகமாக நடையைப் போட்டாள்.
எதிரிலே, காதலர்கள் இருவர் சல்லாபித்தபடியே சென்றனர். தனக்கும் இப்படி ஒரு தனிமையின் சுகத்தில் திளைக்கும் தழுவல் கிடைக்கவில்லையே என்ற தவிப்பு கலந்த ஆத்திரம். வயதுப்பெண்ணுக்கே உரிய ஆசைகள் நிராசையான எரிச்சல்.
சொல்லமுடியாத, விவரிக்க இயலாத உணர்ச்சிக் குவியல்களால் அவள் நெஞ்சு தடுமாற அலுவலகத்தை அடைந்தாள்.
தன்னுடைய மனச்சுமைகளை இறக்கி வைத்துவிட்டு டைப்ரைட்டிங் மெஷினில் அமர்ந்து ஸ்டேட்மெண்ட்டுகளை டைப் செய்ய ஆரம்பித்தாள். வேலையில் உட்கார்ந்து விட்டால் உலகத்தையே இப்படித்தான் மறந்துவிடுவாள் கமலி.
சில மணித்துளிகளில் அவனை மானேஜர் கூப்பிடுவதாக வேலையாள் மாணிக்கம் வந்து சொன்னான். அவசரமாக எழுந்து போனாள்.
“மிஸ் கமலி, ஒரு மகிழ்ச்சியான செய்தி இன்னைக்குத் தான் தபாலில் வந்தது. நம் ஆபீஸில் கம்ப்யூட்டர் கொண்டுவர இருக்கிறார்கள். நீங்களும்தான் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தீர்கள் டைப்ரைட்டர் தேய்ந்து போய்விட்டது என்று மாற்றச் சொல்லி. இனி நம் அலுவலகத்தில் டைப்ரைட்டருக்கு வேலையில்லை”
“சார்… அப்படின்னா… என் வேலை?” அத்ர்ச்சியும், திகைப்பும் அடைந்தவளாகக் கேட்டாள் கமலி.
“சாரி, மிஸ் கமலி. வேறெங்காவது வேலை தேடிக் கொள்ள வேண்டியதுதான். இந்த மாதச் சம்பளத்தோடு உங்களை வீட்டிற்கு அனுப்புவதற்காக நாற்பது வருஷமா உழைத்த உழைப்புக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கச்சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. உங்க உழைப்புக்கு நன்றி”.
எத்தனை நாழி அவள் அப்படி உட்கார்ந்திருந்தாளோ தெரியாது. தன் நிலையைப்பற்றிய பிரக்ஞை உணர்ச்சியின் வேதனையோடு அப்படியே நாற்காலியில் விழுந்து கிடந்தாள். மனதிலே கவிந்திருந்த சோக உணர்ச்சியால் சுற்றுப்புறத்தில் இருந்து பழகிப் போன பொருள்கள் அனைத்தும் உயிரற்றவையாகவும், அன்னியமாகவும் தோற்றம் அளித்தன.
அவளால் முடியவில்லை. அவளது இதயமே வற்றி மெலிந்து வறண்டு போயிற்று. உண்டு, கொழுத்து, மதர்த்துப் போன உதவாக்கரை மனிதர்களின் முட்டாள்தனமான நப்பாசைகளை யெல்லாம் பூர்த்திசெய்து வைப்பதற்காகத் தன்னுடைய உழைப்பையும், வாழ்வையும் விழலுக்கு இறைத்து தன்னுடைய வாழ்க்கையை துயரத்துக்கும் துன்பத்துக்கும் ஆளாக்கிக்கொண்டோமே!
கடைசியாக ஒரு முறை அந்தத்தேய்ந்து போன டைப்ரைட்டரை ஆழ்ந்தசோகத்தோடு பார்த்துவிட்டு நடந்தாள்.
இனி அவளுடைய குடும்பத்தைப் பொறுத்தவரை தேய்மானம் ஆன டைப்ரைட்டர் நிலைதான் அவளும்!
அவளைப் பொறுத்தவரை, இப்படி மெல்ல, மெல்ல உள்ளுக்குள்ளேயே எரிந்து சாம்பலாகிவிட வேண்டும் என்பதுதான் விதியின் எண்ணமோ?