தேய்ந்துபோன பாதைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 26, 2023
பார்வையிட்டோர்: 1,825 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

மாலைச் சூரியனை கடற்கரைக்கு போய் வரலாமென 

அன்று வசந்த கால ஒரு ஞாயிற்றுக் கிழமை. மேகங்கள் மறைத்த மந்தார வேளை. திட்டமிட்டிருந்தோம். 

திருமணமாகி ஓராண்டு காலம் அவர் வேலை பார்த்து வந்த சென்னையில் வசித்து வந்தோம் புறநகரில் குடியிருந்ததால் வாடகை கொஞ்சம் கம்மியாகவும் ஓரளவுக்கு போதுமான வசதியும் இருந்தது. அலுவலகத்திற்கு அவர் மின்சார ரயிலில் சென்று வந்ததால் நேரமும் மிச்சம். அலுப்பும் தெரியாது. சென்னையில் அலுவலகமும் இருப்பிடமும் மின் ரயில் நிலையங்களுக்கு அருகில் இருந்தால் அவர் கொடுத்து வைத்தவர் என்று சொல்லலாம். 

எனக்கு நாகப்பட்டினத்தில் ஆசிரியை வேலை கிடைத்தது. கணவரின் சொந்த ஊர் நாகையிலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரம் உள்ள திருப்பூண்டிதான் என்றாலும் அங்கிருந்து தினம் பள்ளிக்கு சென்று வருவது கடினம் என்பதால் எனது மாமியாரோடு நாகையில் ஒரு வாடகை வீட்டில் தங்கி பணிபுரிந்து வந்தேன். என் வேலையை காரணம் காட்டி தம்பதிகள் ஒரே இடத்தில் வேலை பார்க்க அனுமதிக்க வேண்டும் எனற விதியின் கீழ் மாற்றல் கேட்டு ஓராண்டு கழித்துதான் அவருக்கு மாற்றல் கிடைத்தது. அதுவும் பார்க்க வேண்டியவரை பார்த்து கொடுக்க வேண்டியதை கொடுத்து. ச்சே என்ன கேவலமான அதிகாரிகள். ஒரே துறையில் வேலை செய்பவர்களிடமே கை நீட்டுகிறார்கள் என்றால் அறிமுகமில்லாத பொது மக்களிடம் கையுட்டு வாங்க கூச்சமே இருக்காதே. இத்தனைக்கும் என் கணவர் துறையில் நேர்மையான அனைவருக்கும் நன்கு தெரிந்தவர். மாற்றல் ஆணை கிடைத்தும் உடனடியாக அவரை அலுவலகத்திலிருந்து விடுவிக்க அலுவலகத் தலைவர் ரோம்ப சங்கடப்பட்டாராம். அவரது மனைவி மேல் மாடியில் உள்ள தனது அறைக்கென்று தனியே பெரிய தொலைக்காட்சி பெட்டி வேண்டுமேன்று அடம் பிடித்தாராம். அதை என் கணவரிடம் அவர் சொல்ல சனியன் தொலைந்தது என்று கருதி இருபதாயிரம் ரூபாயை கொடுத்து ‘டிவி வாங்கிக்கிடுங்க. இது எனது கிப்டா இருக்கட்டும்’ என்றதும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். நல்ல உலகம் இது. 

மாமியாரும் தற்போது எங்களுடன் இருக்கிறார். மூவருக்கும் இந்த வீடு போதுமானதோடு சகல வசதியும் உள்ள பகுதி. 

எனக்கு சென்னையில் விடுமுறை நாட்களில் கூட வெளியே செல்ல பிடிக்காது. அவருக்கும். எனவே வற்புறுத்த மாட்டார் என்பதுடன் செலவாகும் என்ற சந்தோஷத்தில் வெளியே போகலாமா என ஒப்புக்கு கேட்பார். பின் நல்ல படம் டிவியில போடுறானா பாரு பாப்போம் என்பார். ஒரே ஒரு முறை மெரினாவுக்குப் போனோம். சமாதிகளில் ஏகப்பட்ட கூட்டம். எல்லாம் வெளியூர் ஜனங்கள் சிலர் சமாதிகளை தொட்டு கும்பிட்டனர். சிலர் ஏளனமாகப் பார்த்தனர் ஊருக்கு போய் அண்ணா சமாதியை பார்த்தேன் எம்.ஜி.ஆர். சமாதியை பார்த்தேன் என பெருமையாகச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பார்ப்பதும், பார்ப்பது போல படம் பிடிப்பதுமாக இருந்தனர். உண்மையில் சென்னை வாசிகளைவிட அலுவல் காரணமாகவும் உறவினர் வீட்டிற்கு வருபவர்களுமே சென்னையை அதிகமாக சுற்றிப் பார்க்கிறார்கள். குறிப்பாக மெரினா கடற்கரையை. காதலர்கள் அதில் விதிவிலக்கு. அவர்களை வெயிலைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவதே அங்கேதான். நாங்களும் பார்த்தோம். அங்கிருந்து கடற்கரையை பார்த்தேன். கரும் புள்ளிகளாக தலைகளால் நிரம்பியிருந்தது. இவ்வளவு கூட்டமென்றால் வந்திருக்கவே மாட்டோம். நான் வருகிறேன் என்பதற்காக அவர்கள் வராமலா இருப்பார்கள்! மணல் வெளியில் காலடிகளை மிதித்து கூட்டமில்லாத இடத்தில் அமர்ந்தோம். கொரோனா கால சமூக இடைவெளி போல ஒழுக்க இடைவெளியோடு. அதெப்படி? நாங்கள் எப்பவும் வெளியில் இப்படித்தான். ஒருவர் மற்றொருவரை செம்பருத்தி பூ கிடைத்தால் தொடலாம் என்பது போன்ற இடைவெளியில் தொட வேண்டும். அவரவர்கள் தங்களின் விருப்பப்படியும் கட்டாயத்தின் பேரிலும் பொழுதை கழித்தனர். பெரும்பாலும் இளைஞர்களும் இளைஞிகளும் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தனர். எனக்கு முகச்சுழிப்பு ஏற்பட்டது. 

“ஏங்க. என்னங்க இப்படி நாகரிகமில்லாம நடந்துகிடுறாங்க” 

“பீச்சுன்னா அப்படித்தான் இருக்கும். அவங்க இங்க வாரதே அதுக்கவதான” 

“வீட்ல ராத்திரியில பண்ணுறதெல்லாம் இங்க பண்ணினா. அசிங்கமில்லையா?” 

“லவ்வர்ஸ் எப்படி வீட்டுல பண்ண முடியும். இன்னும் கல்யாணமே ஆகலையே” ஆகாது. 

“அதுக்காக இப்படியா ஆடு மாடு மாதிரி?” 

“ம்” என்றார். 

“அவங்கள பாருங்க. மேரேஜ் ஆனமாதிரி தெரியுது. தன்ன மறந்து நடந்துகிறாங்க.” 

“அதயேன் பாக்குறே நீ.” 

“அப்பறம் எதத்தான் பாக்குறது? வீட்ல என்ன பண்ணுறாங்களோ?” 

“அப்படி கடல பாத்து ரசிடா கண்ணு” எனக்கு வழி சொல்லிக் கொடுத்தார். 

“வாங்க யாருமே இல்லாத எடத்துல போய் உட்காருவோம்” என மக்களே இல்லாத தூரத்து மணல் வெளியை காட்டினேன். 

“தனியே அது மாதிரி யாருமில்லாத எடத்துக்குப் போக்கூடாது. ரவுடிங்க வந்தாலும் வருவாங்க. வா கூட்டம் குறைவான இடத்துக்குப் போவோம்” 

என்றதும் எழுந்துபோய் புதிய இடத்தில் அமர்ந்தோம். 

அந்த இடம் சற்று ஏற்புடையதாக இருக்குமென நினைத்தேன். சுண்டல் பையன் வந்தான். 

“அக்கா சுண்டல்” என்றான் 

“வேண்டாம்” என்றேன். 

“இந்தாடா தம்பி ரெண்டு பாக்கெட் கொடு” என்றார். 

“வேண்டாம். வாங்காதிங்க” 

“பரவாயில்ல கொடு” என அவர் இரண்டு பாக்கெட்டை வாங்கிக் கொண்டதும் நகர்ந்தான் அவன். 

“இதெல்லாம் எப்படி செஞ்சாங்களோ. என்ன சுத்தமோ. இதபோய் வாங்குறிங்க” என்றேன். 

“இது திங்கிறத்துக்கு இல்லப்பா. கையில வச்சிகிட்டு இருந்தமுன்னா வேற சுண்டல் பையன் இங்க வர மாட்டான். இந்தா ஒண்ண நீ வச்சிக்கோ. இதெல்லாம் ஒரு டெக்னிக்.” 

வாங்கிக்கொண்டு “பெரிய டெக்னிக் பாருங்க. ராக்கெட் விடப்போங்க” என்றேன். 

கொஞ்ச நேரம் தான் பேசியிருப்போம் அதற்குள் ஒரு புதுமண தம்பதி எங்களை தேடி வந்ததைப் போலவே வந்து சற்று அருகில் அமர்ந்து ஆராய்ச்சியில் ஈடு பட்டார்கள். 

என் முகச்சுழிப்பை பார்த்து “என்னம்மா, என்ன?” என்றார். ஒண்ணும் புரியாதது போலவும் தெரியாதது போலவும். பின் சிரித்தவாறு அவங்களும் கூட்டமில்லா எடத்துக்கு வந்திருக்காங்க.” என்றார். 

அவர்களை பார்க்க முடியாதவாறு திரும்பிக்கொண்டேன். சற்று நேரத்தில் அந்த பக்கத்திற்கு ஒரு குடும்பம் வந்தது. கணவன், மனைவி ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாமென்ற ஐந்து வயது மதிக்கத் தக்க குழந்தை. வீட்டிலிருந்து கொண்டு வந்த நொறுக்கு தீனியை அவனிடம் கொடுத்து சாப்பிட்டுக்கொண்டு தூரத்தில் விளையாடும்படி எப்படியோ மல்லுக்கட்டி ஏற்பாடு செய்துவிட்டு அவர்கள் தங்கள் வேலையைத் தொடங்கினர்கள். 

“ஏங்க இவங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தன வருஷம் இருக்கும்?” 

ஏன் கேட்கிறேன் என தெரிந்தும் தெரியாதது பொல அப்பாவியாக “ஒரு ஆறு ஏழு வருஷம் இருக்கும்” என்றார். 

“இத்ன வருஷமா வீட்ல என்னதான் செஞ்சாங்க?” 

“உனக்கு உலகம் தெரியலன்னு சொல்லணும். பீச்சின்னா இப்படித்தான் இருக்கும். அவங்க அவங்களொட சுதந்திரம் அது” 

“சுதந்திரமுன்னு மற்றவங்க அசிங்கமா நெனக்கிற மாதிரி நடந்து கிடலாமா? சுதந்திரங்குறது ஒருத்த கைத்தடி அடுத்தங்க மூக்கத் தொடக்கூடாது” 

“சரி வா மூக்க எட்டி வச்சிக்கிடலாம்” என கையை பிடித்து இழுத்தார். நான் உதரிவிட்டேன். இருவரும் வீடு வந்தோம். நான் உண்மையில் மெரினா கடற்கரையை பார்க்கவே இல்லை. 

நாகைக் கடற்கரையில் கூட்டமே இருக்காது ஓரிருவர்தான் வருவார்கள் என்று பக்கத்து வீட்டு மேடம்தான் சொன்னார்கள். நாகை கடற்கரையென்று கேள்விப்பட்டதே இல்லையே. மெரினா, கோவா, கோவளம் போல கூட்டமாக இருந்தால்தான் கடற்கரையா என்ன. கடலென்றால் கரையிருக்கும். இங்கும் கடலைத்தானே பார்க்கப் போகிறோம். கூட்டம் இல்லையென்றால் நல்லதுதானே என்ற மகிழ்ச்சியில்தான் பார்க்க போகலாமென திட்டம் போட்டோம். 

எனக்கு கக முச என கூட்டம் என்றாலே பிடிக்காது. விசேஷ நாட்களில் கோவிலுக்கு போகும்போது அம்மா பிடிவாதமாய் அழைப்பார்கள். நான் போகமாட்டேன். மற்ற சாதாரண நாட்கள் என்றால் அடித்துப் பிடித்து கிளம்புவேன். கூட்டமில்லாமல் அமைதியாக கடவுளை தரிசிக்க வேண்டும். கூட்டத்தோடு கோவிந்தா போடுவது என்ன பாலிசி. கடவுளிடம் எந்த கோரிக்கையையும் வைக்க மாட்டேன். அவனுக்குத் தெரியாதா பள்ளியில் படிக்கும் போதே பத்தாம் வகுப்புக்கு பிறகுதான் அண்ணாவோடு ஓரிரு சினிமாவுக்கு போயிருக்கிறேன். தரமான படமாயென தெரிந்து கொண்டு ஓடி கூட்டம் குறைந்துபோய் கடைசி நாட்களில் போவேன். நான் மட்டுமில்லை அண்ணன் கூட செலக்டியுவான படத்தைத்தான் பார்ப்பான். கல்லூரியில் கூட சில படங்களே சினேகிதிகளோடு பார்த்திருக்கிறேன். விடுமுறை நாட்களில் விடுதியிலிருந்து பகல் காட்சிக்கு அனுமதி வாங்கிக்கொண்டு போய் கூட்டமாக இருக்க வரிசையில் நின்றெல்லாம் டிக்கெட் வாங்க முடியாதயென்று திரும்பி வந்த நாட்களே அதிகம். என்னமோ தெரியவில்லை. 

என் குணம் மற்றவர்களை விட வித்தியாசமாகத் தெரியலாம். அது என் தந்தையின் தனித்த குணத்தின் ஜீனாகக்கூட இருக்கலாம். ஒரு கோடு போட்டுக்கொண்டு வாழ்பவள். இது சுமதி கிழித்துக்கொண்ட கோடு. நீங்களே சொல்லுங்கள் எனது நடவடிக்கை வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் தவறானது இல்லையே. 

“ஏங்க ஸ்கூட்டிய நான் ஓட்டுறங்க” கடற்கரை இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறதாம். 

“கூட்டமா இருக்கும் நானே ஓட்டுறேன்.” 

“மெட்ராஸ்லயே உங்க வச்சி ஓட்டிருக்கிறேன். இங்க ஓட்ட முடியாதா என்ன?” 

“அது என்ன மெட்ராஸ்?” 

“ஒரு காலத்துல மெட்ராஸ் தானே அதுக்கு பேரு. இவங்களே மாத்திட்டாங்க. மெட்ராஸ்ன்னா நல்லாதானே இருக்கு. இப்பயும் ஹை கோர்ட் ஆப் மெட்ராஸ்ன்னுதான் சொல்றாங்க. இன்டர்நேஷனல் ஏர் போர்ட்ஸ் எல்லாத்திலும் மெட்ராஸ்ன்னுதான் அனோன்ஸ் பண்ணுறாங்கலாம் பிளைட் டிக்கெட்டே அப்படிதான் எடுக்கணுமாம். முட்டைக்குன்னு ஒரு மினிஸ்டர போட்டா….”

“போதும் போதும்மா தாயை நீயே ஓட்டு” 

“சுமதியே ஓட்டட்டுமேப்பா” என்று மாமியார் எனக்கு சப்போட் செய்ததோடு “பொழுது இருக்கும் போதே திரும்பிடுங்க” என்றார். 

“சரிங்க மாமி” 

எனக்கு ஏனோ நல்ல மாமியார் கிடைத்து விட்டார். நல்ல தன்மையானவர். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வோம். வேலை நாட்களில் இன்னக்கி என்ன சமைச்சி வைக்க என்று கேட்டால் சாம்பாரே வைங்க என்பேன். அவருக்கு அதுதான் பிடிக்குமென்பதால் உற்சாகப் படுத்துவேன். எனக்கும் அதுதானே பிடிக்கும். இதெல்லாம் கூட்டுக் குடும்ப டெக்னிக். 

‘என்ன பெரிய டெக்னிக்?’ என்கிறீர்களா. ராக்கெட் விடுற டெக்னிக்கை விட மேலே. குடும்பம் இல்லன்னா நாடு ஏது? ரமேஷும் அப்படிதான். நான் விரும்பும் குணம் ஓரளவுக்குதான் அவருக்கு இருந்தும் மெல்ல மெல்ல முழுமையாக மாறியதும் இயல்பானதுதான். வேறு முகம் ஏதேனும் இருக்கலாம்தான். இருந்தால் வெளிப்படும் போது பார்த்துக் கொள்ளலாம். அதற்கு இப்போது என்ன? 

ஸ்கூட்டியை சாலை ஓரமாக நிறுத்தினேன். பக்கத்து வீட்டு மேடம் சொன்னது போலவே கடற்கரை படு அமைதி. கூப்பிடு தூரமே கடற்கரை போன்ற மணற்பரப்பு. இரண்டு பெண்கள் உட்கார்ந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். நாற்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் தன் மகனுக்கு பட்டம் விட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். மகன் நூலை தன் கையில் கொடுக்குமாறு அடம் பிடிதான். வேறு வழியின்றி அவனிடம் கொடுத்ததும் பட்டம் அவனை இழுத்துக் கொண்டு ஓடியது. இவரும் பின்னே ஓடி நூலை இவரும் பிடித்து அவனே விடுவதுபோல பாவனை செய்தார். இன்னொரு ஜோடி எங்களைப் போலவே. ஆனால் வயதானவர்கள். மற்றபடி சுண்டல் வியாபாரமோ கடல் மட்டிகளை சேகரித்து மாலையாக்கி விற்றுக் கொண்டிருக்கும் கடைகளோ மீன் வருவலின் நாற்றம் மூக்கை பிடித்துச் செல்லவைக்கும் வேலையோ இல்லை. கடலில் கால்களை நனைத்தோம். ஒரு புத்துணர்ச்சி வந்தது. அலை அடித்து அடித்து திரும்பி போக பத்து நிமிடம் ரசித்ததும் கரையேறி மணல் வெளியில் அமர்ந்தோம். தூரத்தில் ஒரு கப்பல் நங்கூரமிட்டு நின்றது. இங்கே கரையோரம் கப்பல் வர இயலாது. சரக்குகளை படகுகளின் மூலமே ஏற்றி இறக்கும் குட்டித் துறைமுகம். இரண்டு விசைப் படகுகள் கப்பலை நோக்கி காலியாக பயணித்தன. ஒரு படகு சுமையுடன் திணறியபடி கரையை நோக்கி நகர்ந்து வந்தது. 

அக்கரை பற்றிய யோசனை என்னை பற்றிக் கொண்டது. நேராக போனால் மறுகரை என்னவாக இருக்கும் மியான்மரா, மலேசியாவா? ஏதாவது வரும். 

‘வரலாம்’ 

‘இடையில் அந்தமான் தீவுகள் கிடக்கலாம். எண்ணற்ற தீவுகள்’ 

‘அதில் ஏதேனும் ஒரு தீவில் மனித நடமாட்டமே இல்லாமல் இருக்கலாம்’ 

“என்ன யோசனை” கணவர் குறுக்கிட்டார். 

“ஒண்ணுமில்லை” 

“சரி யோசி” என என்னை சுதந்தரமாக்கினார். 

‘நான் மட்டுமா?’ 

‘இல்லை கணவருடன்தான்’ 

‘எப்படி காலம் தள்ள முடியும்′ 

‘அதானே’ 

‘வேலைக்கும் போகமுடியாது அத்தியாவசிய பொருட்களுக்கு என்ன செய்வது’ 

‘காஸ்ட் அவே ஆங்கிலப் படத்தில் வரும் கதாநாயகன் போல கொஞ்ச நாட்களாவது வாழ்ந்து பார்த்தால் என்ன?’ 

‘முடியாதோ’ 

‘இந்த மனிதர்களோடுதான் கூடி வாழ வேண்டுமா?’ 

‘ஆம்.’ 

‘அந்தமானைப் போல தனித்தனி தீவுகளாய். ஒரே பெயரில்’ 

“ஏங்க இப்படியே ஓரமா போனா மெட்ராஸ் வந்துடுமா?” என்றேன் 

“போவலாம். ஆனா நடுவுல ஆறுகள் இருக்கே” 

“ஓ கடற்கரைய ஆறுகள் துண்டாக்குதோ” 

“க்கும். ஆமா ஆமாம்” கிண்டலாக சிரித்து ஆமோதித்தார். 

பட்டம் விட்ட சிறுவனையும் அவனது தந்தையையும் காணவில்லை. 

வயதான தம்பதிகளும் வீடு திரும்பி விட்டார்கள் போல. ஆம் நாங்கள் கடலையும் கரையையும் ரசித்துக் கொண்டிருந்தோம். பற்பல கற்பனைகள். நிறைவேற்ற முடியாத விருப்பங்களும் தேவைகளும். 

அப்பப்பா நாட்களை நகர்த்தித்தானே ஆக வேண்டும். எல்லாமும் கலந்துதானே வருகிறது. ருசிக்கலாம். வாழ்வென்றால் வாழத்தானே வேண்டும். 

வடப்புறமாக தூரத்தில் ஒருவர் ஓடினார். ஏன் ஓடுகிறாரென யோசிப்பதற்குள் அவரை இரண்டு பேர் துரத்துவது தெரிந்தது கையில் நீண்ட கத்தியுடன். 

“ஏங்க அங்க பாருங்க” என்றேன் படபடத்துப்போய். 

பார்த்தவர் திடீரென எழுந்து என் கையை பிடித்து மேலே இழுத்துக் கொண்டு “அங்க பாக்காதே” என என்னை அணைத்தவாறு சாலையை நோக்கி விரைந்தார். இரண்டு பெண்களும் செருப்பைக்கூட மாட்டாமல் தலைதெறிக்க சாலை பக்கம் ஓடினார்கள். திரும்பி பார்க்கலாமென்றால் வா வா என இவர் இழுக்க வண்டியின் அருகில் வந்ததும் துணிந்து திரும்பி பார்த்தேன். அவர்கள் கண்ணில் படவில்லை. எங்களுக்கு படபடப்பும் நிற்கவில்லை. 

வண்டியை இயக்கினார். நான் ஓட்டுகிறேன் என கேட்கவில்லை. பின் இருக்கையில் சுருட்டி முடங்கியவாறு அமர்ந்தேன். பயத்தில் கொஞ்ச தூரம் அவரை கட்டிப் பிடித்து அணைத்துக் கொண்டேன். ஒன்றும் கோர்வையாக யோசிக்கத் முடியாத அச்சத்தில் இறுகிப் போயிருந்தேன். நாளை காலை செய்தித்தாள் படிக்கும் போது ஏதாவது அசம்பாவிதம் நடந்ததா என தெரிந்துகொள்ளலாம் என்பது மட்டும் புரிந்தது.

– எட்டி மரக்காடு சிறுகதை தொகுப்பில் வெளியான சிறுகதை (நன்றி: FreeTamilEbooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *