செய்தியை கேட்ட கனகராஜ் ஆச்சரியப்பட்டார்; கூடவே, அனுதாபமும் வந்தது அவருக்கு. குமாரையும், அவனது மனைவியையும் பார்த்து, “அட்வைஸ் தரலாமே…’ என்று தோன்றியது. அதற்கான உரிமை கண்டிப்பாக கனகராஜுக்கு உண்டு. குமாரின் குடும்பத்தோடு, கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக பழகியவராயிற்றே!
அந்த செய்தி உண்மையானதா என்று, தன்னிடம் சொன்ன நபரை மீண்டும் கேட்டார்…
“”அட… குமாரும், அவரது சம்சாரமும், லாரில பொட்டி சாமான்களோட தனியா போனதை என் கண்ணால் பார்த்தேன்… நான் உங்க அளவுக்கு நெருக்கம் இல்லாததால் ரொம்ப விசாரிக்க முடியல… போற முகவரியை மட்டும் கேட்டேன். நாலு தெரு தள்ளி சன்னதி தெருன்னாரு… ஆனா, முகத்துல வருத்தமோ, கலக்கமோ இல்லீங்க… சந்தோஷமாத்தான் இருந்தாரு!”
தகவல் உறுதியாயிற்று.
வீட்டில், தன் மனைவியிடம் ஆதங்கப்பட்டார்; அவரது மனைவிக்கும் ஆச்சரியம்.
“”அந்த குடும்பத்தில் தனிக்குடித்தனமா?
நம்ப முடியலீங்க! அதுவும் இது… அப்பா பேச்ச தட்டாத புள்ள… நல்ல குடும்பத்து மருமக, மகன் கிட்ட பாசத்த கொட்டற அப்பா, அம்மா. ஒரே செல்ல பேரன். என்ன குறை இருக்க முடியும்? அவங்க வீட்ல முன்னையாவது பாட்டி, தாத்தான்னு படுத்த படுக்கையா இருந்தாங்க. இப்ப எதுவுமில்லையே!” என்று விரக்தியோடு புலம்பினாள்.
“”எனக்கு மனது ஆறல. நான் போய் பார்த்துட்டுவர்றேன். இது மாதிரி முக்கிய விஷயத்துல, என்கிட்ட ஒரு வார்த்தையாவது கேட்பான். இப்ப நம்ப முடியலயே… அதுக்காக நான் கண்டுக்காம இருக்க மாட்டேன். அது நல்ல நட்பா இருக்க முடியாது!”
விருட்டென்று தன், “டி.வி.எஸ்., சேம்ப்’பில் குமாரின் ஊருக்கு கிளம்பினார் கனகராஜ். அவரது வீட்டிலிருந்து நான்கு கிலோ மீட்டரில், குமாரின் ஊர்.
அந்த நான்கு கிலோ மீட்டர் பயணத்தில், தன் குடும்பத்து ஞாபகம் வந்தது கனகராஜுக்கு.
அவரது ஒரே மகனுக்கு, பெரிய இடத்திலிருந்து பெண் பார்த்து முடித்து, பேத்தியும் பிறந்து, வடிவேலு சொல்வது போல், “நல்லாத்தானே போயிட்டிருந்தது’ என்ற நிலையில், அவரது சம்பந்தி, இயற்கை எய்தினார்.
அவர்கள் வீட்டையே நிர்வகிக்கும் பொறுப்பு, அவர் மகன் தலையில் விழுந்தது. அப்போது அவர் மகன் எடுத்த முடிவு, “மகன் தந்தைக்காற்றும்’ என்ற குறளுக்கு எதிராகவே இருந்தது.
“அப்பா… முடிஞ்சா நீயும், அம்மாவும் இந்த வீட்ட வித்துட்டு, என் மனைவி ஊருக்கே வாங்க… முடியாட்டி நான் அப்பப்ப வந்து பார்த்துக்கிறேன். நான் அந்த குடும்பத்து ஒரே மாப்பிள்ளை… சொல்லப்போனா ஒரே வாரிசு!’ என்று அவர் மகன் சொல்ல, கனகராஜுக்கு வலி புரிந்தது. ஆனால், மறைத்துக் கொண்டு, மகனை ஆசீர்வதித்து அனுப்பினார்.
சண்டை போட்டு என்ன பயன்? இன்று விட்டுக் கொடுக்க வேண்டியது, பெரியவர்கள் தானே. ஏறக்குறைய அதே நிலைமை தானே. தன் நண்பர் குடும்பத்திற்கும் வந்திருக்கிறது.
சன்னதி தெருவில்…
அந்த புதுக்குடித்தனத்தில், கொஞ்சம் சாமான்கள் ஒழுங்கு படுத்தப்படாமல் இருக்க, அந்த வீட்டை கண்டுபிடித்து, கனகராஜ் உள்ளே வந்தார்.
“”நீயா?” குமாரசாமி ஆச்சரியப்பட்டார்.
“”என்ன குமார்… இது உனக்கு தேவையா? சட்டுன்னு முடிவு பண்ணிட்டு வந்திட்டியே? எனக்கு அட்வைஸ் பண்றவன் நீ… எவ்வளவு அட்வான்ஸ் கொடுத்திருக்க? ஹவுஸ் ஓனர் யாரு? நான் வாங்கித் தரேன். முதல்ல கிளம்புப்பா… எதா இருந்தாலும் பேசிக்கலாம்…” கனகராஜ் படபடத்தார்.
பொறுமை காத்த குமாரசாமி, சிரித்துக் கொண்டே இருந்தார். அவர் பின்புறம் அவரது மனைவி லட்சுமி. அவளது முகத்திலும் எந்த பெரிய வருத்தமுமில்லை.
“”என்ன பேசியாச்சா… இன்னும் பேசணுமா?” என்று குமாரசாமி கேட்டார்; ஆனால், கனகராஜ் விடவில்லை.
“”என்னப்பா சிரிக்கிறே…விளையாடறியா? அது உன் வீடு. லோன் போட்டு வாங்கினது. பிடிக்காட்டி உன் பையன் பிரகாஷ் கிளம்பியிருக்கணும். இதுலயும் நீ விட்டுக் கொடுத்துட்டு, பைத்தியம் மாதிரி… இந்த புது வீட்டுக்கு ஏன் வரணும்? என்னை பார்த்து, மறைக்காம சொல்லு… ” பொருமினார்.
“”முதலில் நீ முடி. அப்புறம் நான் சொல்றேன்.”
“”சரிப்பா… இனிமே நான் பேசல…”
ஒரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார் கனகராஜ். எதிரில் குமாரசாமியும் உட்கார்ந்தார்.
“”கனகு… நாங்க பையன விட்டு தனியா வந்திருக்கோம் என்பது உண்மை. ஆனா, என் வீட்ல பிரச்னை இல்ல. இங்க நானும், என் மனைவியும் வந்தது என் சொந்த விருப்பத்துல தான். அதை என் மனைவிக்கு புரிய வெச்சேன். அப்புறம் பையன், மருமக கிட்ட சொன்னேன். எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க. அப்பறம் தான் இந்த தனிக்குடித்தனம். என்ன புரிந்ததா?”
குமாரசாமி கேட்க, கனகராஜுக்கு வியப்பு.
“”உண்மையாவா சொல்ற? என்னப்பா புதுமையா இருக்கு? ஒரு கூட்டுக் குடும்பத்திலிருந்து, பெரியவங்க பிரிஞ்சு போறதும், அத சந்தோஷமா எல்லாரும் ஏத்துக்கறதும், நம்ப முடியல்லப்பா…
“”சரி… என்னோட ஒரு கவல விட்டது. இப்ப வேற குடைச்சல் மண்டைல ஓடுதுப்பா… அது, நீ எத புரியவச்ச, எந்த காரணத்துக்காக இத ஒத்துக்கிட்டாங்க என்பதை சொல்லேன்…”
அதற்குள் லட்சுமி, இரண்டு டம்ளரில் காபியுடன் வர, அதை குடித்து விட்டு குமாரசாமி தொடர்ந்தார்.
“”கனகு… உனக்கே தெரியும். எனக்கு கல்யாணம் ஆகும் போது, என்னோட அப்பா, அம்மா, கூட தாத்தா, பாட்டியும் இருந்தாங்க. கடைசி பத்து வருஷத்துக்குள்ளதான் தாத்தா, பாட்டி, அம்மா காலமானாங்க. அப்பா ரெண்டு வருஷத்துக்கு முன்பு தவறினாரு.
“”ஆக, என் மனைவிக்கு இந்த நாலு நாளைக்கு முன்பு வரை… எப்பவும் கூட்டுக் குடும்பம் தான். சாதாரணமா எல்லார் குடும்பத்துலையும் வர்ற சின்ன, சின்ன மனஸ்தாபங்கள் எங்க குடும்பத்துக்குள்ள வந்தாலும், தனிக்குடித்தனம் போகணும்ன்னு என் லட்சுமி சொன்னதில்ல.
சொல்லியிருந்தாலும் நான் சம்மதிச்சிருக்க மாட்டேன்…
“” அப்புறம்… எங்க வீட்ல பெரியவங்க போனதும் மருமக, பேரன்னு குடும்பம் வளர்ந்து, சரியாகவே இருந்திச்சு. இதுல லட்சுமியால் எனக்காகவும்… இல்ல, தனக்காகவும், எதுவும் சிந்திக்கவும் முடியல, செஞ்சுக்கவும் முடியல. மொத்தத்தில் பொறுப்பான மருமக, அப்புறம் பொறுப்பான மாமியார்ன்னு மாற வேண்டிய சூழ்நிலை…
“”அதை அவ ஆசையாத்தான் செஞ்சா. ஆனா, எனக்குத்தான் சின்ன குற்ற உணர்வு… இந்த காலத்து பெண்கள் மாதிரி, தான், தன் கணவர், தன் குழந்தைகள்ன்னு ஒரு கூட்டுக் குடும்பத்துல கூட சாமர்த்தியமா இருக்கற மாதிரி அவளால இருக்க முடியல.
“”எனக்கும் கூட என் மனைவிகிட்ட, ரொம்ப அன்னியோன்யமா இருக்க முடியல… வீட்ல, நேரம் காலம் பார்த்து தான் பேச வேண்டி இருக்கு. வெளியில் கூட்டிட்டு போக முடியாத சூழ்நிலை. இது, கிட்டத்தட்ட முப்பது வருஷமா… எனக்கு புரிஞ்சும், புரியாமலுமே இருந்தது…
“”எங்க உடம்புல இன்னும் கொஞ்சம் தெம்பு இருக்கு. முழுசும் போறதுக்குள்ள ஏன் தனியா வாழ்ந்து பார்க்க கூடாது? முன்ன விட இப்பதான் பரஸ்பரம் அன்பு, பரிவு, உதவிகள் தேவைப்படுது. அத ஏன் ஆசையா அனுபவிக்கக் கூடாதுன்னு தோணிச்சு. மொதல்ல லட்சுமி ஒத்துக்கல்ல. ரொம்ப கஷ்டப்பட்டு சமாதானம் செஞ்சேன்… “வெளியூரா போறோம். இதோ நாலு தெரு தள்ளிதான்னும்…’ சொன்னேன்… அப்புறம் மெதுவா பையன்கிட்டையும் சொன்னேன்…” என்று கூறி, சற்று நிறுத்தினான் குமாரசாமி.
பிரகாஷின் ரியாக்ஷன் பற்றி அறிய ஆவலானார் கனகராஜ்.
“”அவனுக்கும் ஆச்சரியம்… இனிமே அம்மா கூட தனியாவா… என்னப்பா சொல்றீங்கன்னு கேட்டான். அப்புறம் மருமககிட்டயும் சொன்னோம்.”
“” உங்கள போகக் கூடாதுன்னு அவங்க உறுதியா தடுக்கலயா?” கனகராஜ் கேட்டார்.
“”ஒன்ன புரிஞ்சுக்கணும் கனகு… இந்த காலத்துல வயசானவங்க கண்டிப்பா கூடவே இருக்கணும்ன்னு யாரும் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கு, அவங்களோட சுதந்திரம் தான் முக்கியம். சரி… என் விஷயத்துக்கு வர்றேன். “நல்லா யோசிச்சு முடிவெடுங்க…’ன்னு சொன்னாங்க…
“”முடிவெடுத்தேன்; வந்துட்டேன். இந்த நாலு நாள்ல, எட்டு தடவ பையன் மருமக, பேரன்னு வந்துட்டு போயிட்டாங்க. அது போகப் போக குறையலாம். எனக்கென்னமோ இந்த நாலு நாளும் ஒரு புது அனுபவமா இருக்கு கனகு. பெண்டாட்டி பின்னாடியே போறேன்… பக்கத்துலயே நிக்கறேன்.
“”பெண்டாட்டி தாசன்னு பேர் வந்திடுமோன்னு அப்போ பயமா இருந்திருக்கும்… இப்ப அந்த பேர் வரணும்ன்னு… அதுவும் லட்சுமி வாயால வரணும்ன்னு ஆசையா இருக்கு. அதுதானே வேணும்.”
குமாரசாமி முடித்ததும், கனகராஜ் புன்முறுவல் பூத்தார். “இது எத்தனை நாட்களுக்கு? உடம்பிற்கு ஏதாவது வந்தால்…’ என்று கேட்க நினைத்தார்; கேட்கவில்லை. “அதுவரை அவர்கள் அனுபவிக்கட்டுமே…’ என்று தோன்றியது.
ஆனாலும், அவர் மனதில் நியாயமான கேள்வி ஒன்று எழும்பியது.
“”இந்த முடிவு இப்போது எடுக்கப்பட என்ன காரணம்?” என்று குமாரசாமியிடம் கேட்டார்.
“”நீ கேட்பது சரிதான். ரெண்டு வாரத்துக்கு முன்னாடி எம் பையன், “அப்பா… என் மனைவிக்கு அவ சொந்த ஊர்ல எடம் வாங்கணும்ன்னு ஒரு ஆசை. அரை கிரவுண்டு வாங்கியிருக்கேன்பா… ஆனா அங்க வீடு கட்டும் ஐடியா இல்ல. ஏதோ அவ ஆசை!’ என்றான்.
“”அதுதான் எனக்கும் ஒரு பொரி தட்டிச்சு. அவன் கிட்டையும் கத்துக்க ஒரு விஷயம் இருக்குன்னு தெரிஞ்சது… நாம நம் மனைவிக்குன்னு ஸ்பெஷலா… செஞ்சு தான் ஆகணும்ன்னு…”
“”குமார்… உன் சந்தோஷம் எனக்கு புரியுதுப்பா. நான் வர்றேன்…” என்று, கிளம்பிய கனகராஜின் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.
“இது தனிக்குடித்தனம் அல்ல… குமாரசாமி, லட்சுமியின் பரவசம் இல்லாத பக்குவப்பட்ட ஒரு தேன்நிலவு வாழ்க்கை. நாம் கூட ஏன் அதை போல் வாழக் கூடாது? பிரிந்து போன மகன் உறவை நினைக்காமல், தேடி வந்த என் மனைவிக்காக நானும் நிறைவான ஒரு வாழ்க்கை வாழணும்…’ என்று நினைத்து, தன் புது தேன்நிலவுக்கு ஆயத்தமானார் கனகராஜ்.
– டி.சீனிவாசன் (ஜனவரி 2011)
டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை – 9
டி.சீனிவாசன்
வயது : 48. அரசு பொதுத்துறை நிறுவனத்தில் பணி. இதுவரை இவர் எழுதிய, 70க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. சமூகத்துக்கு பயன்படும் வகையில், நல்ல கருத்துள்ள சிறுகதைகளை எழுத வேண்டும் என்பது இவரது அவா.