தன் மோட்டார் பைக்கை கேட்டுக்கு வெளியே தள்ளிக்-கொண்டு வந்து ஸ்டார்ட் செய்தான் சேகர்.
மணி பார்த்தான். 8.50.
‘‘மீரா, சீக்கிரம் வா..! லேட்டாச்சு!’’
‘‘நீங்கபாட்டுக்கு சட்டையை மாட்-டிட்டு வந்து வண்டில உட்கார்ந்துட்-டீங்க… நான் இந்த மகாராணிய ரெடி பண்ணி அழைச்சுட்டு வர வேண்-டாமா..?’’ & ஐந்து வயது மகள் வர்ஷா-வின் புத்தகப் பையையும் தூக்கிக் கொண்டு, கதவைப் பூட்டினாள் மீரா.
வண்டியின் டேங்க் அருகில் காதை வைத்து வண்டியை ஆட்டிப் பார்த்து நிமிர்ந்த சேகர், ‘‘எது சொன்னாலும் பதிலுக்கு ஒரு கேள்வி-யைக் கேளு! போற வழியில பெட்ரோல் வேற போட்டுக்கணும்…’’ என்றான்.
‘‘டேங்க் நெறைய பெட்ரோல் போட்டா என்னவாம்? எப்பப் பார்த் தாலும் ஒரு லிட்டர், அரை லிட்டர்னு போடறது… சரியான கஞ்சூஸ்..!’’
செல்லமாகக் கோபித்துக்கொண்ட மீரா, வர்ஷாவை வண்டியில் உட்கார வைத்துத்தானும் ஏறிக்கொண்டாள்.
‘‘உனக்குத் தெரியாது மீரா… அப்பப்ப எவனாவது வண்டிய ஓசி வாங்கிட்டுப் போவான். பெட்ரோல் ரிசர்வ்ல இருக்குன்னா போற வேலையை மட்டும் பார்த்துட்டு வருவான். டேங்க் நெறைய இருந்தா, வெட்டியா ஊரைச் சுத்தி அதைக் காலிபண்ணிட்டுதான் வருவான்!’’& சேகர் சொல்ல, மீரா சிரித்தாள்.
பள்ளிக்கூட வாசலில் வர்ஷாவை இறக்கிவிட்டாயிற்று. அடுத்து மீராவின் அலுவலகம். அவளை-யும் அங்கே விட்டுவிட்டுத்தான் தனது அலுவலகம் போவான் சேகர். இதற்காகச் சில கிலோ-மீட்டர் சுற்ற வேண்டும் என்றா லும்கூட, இதுதான் அன்றாட நியதி!
ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்ப ரம், அம்பத்தூர் எனச் சற்றுத் தள்ளியிருக்கும் நண்பர்கள், உறவி னர்கள் யார் வீட்டுக்காவது குடும்பசகிதம் செல்வது வாராந்-திர நியதி. இடையில், ஏதாவது அரசு விடுமுறையெனில் கடற்-கரை, கோயில் என அப்போதும் பயணம்தான். டிராஃபிக் குறை-வான விடுமுறை நாளில், பைக் பயணம் செய்யும் சுகம் மூவருக்-குமே பிடித்திருந்தது.
பைக்கில் போகும்போது மீரா ஏதாவது பேசிக்கொண்டே செல்வாள். அவளுக்குப் பேசப் பிடிக்கும்; சேகருக்குக் கேட்கப் பிடிக்கும். வர்ஷா மட்டும் உடன் இல்லாமல் இருந்தால், அவர் களைப் பார்த்தால் காதல் ஜோடி போலத்தான் தெரியும்.
தேனாம்பேட்டையில் ஏறக்-குறைய ஒண்டுக்குடித்-தனம் போல் அமைந்த அந்தக் குடியிருப்பில் வசிக்கும் எல்லோரையும் விடவும் சேகரும் மீராவும் சந்தோஷமாகக் குடும்பம் நடத்தினர். இரண்டு பேரும் வேலைக்குப் போய் ஓரளவு சம்பாதிப்பதும் அதற்குக் காரண-மாக இருக்கலாம்.
ஒரு நாள், சர்வதேச வங்கி ஒன்றின் பிரதிநிதி சேகரின் அலுவலகத்துக்கு வந்தான். தங்கள் வங்கி சுலபத் தவணையில், குறைந்த வட்டியில் கார் வாங்கக் கடன் தருவதாக கனிவாகப் பேசினான். அவனிடம் இருந்து தப்பித்துக்-கொள்ள நினைத்த ஒவ்வொருவரும், ‘‘சேகரைப் பாருங்க சார்… அவர்-தான் ரெட்-டைச் சம்பளக்காரர்…’’ என்று கை காட்டினர்.
வங்கிப் பிரதிநிதி சொல்வதெல்-லாம் நியாயமாகவும், ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும் சேகருக்குத் தோன்றியது. ஆனால், மீரா அதற்குச் சம்மதிக்க-வில்லை. ‘‘நமக்கு பைக்கே போதும், சேகர்! கடன் வாங்கி கார் வாங்க வேண்டிய அவசியம் என்ன?’’ என்றாள்.
‘‘மாசம் 5,000 கட்டப் போறோம். கொஞ்சம் அப்படி இப்படி அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா நமக்கு அது பெரிய விஷயமே இல்ல. வேர்க்க விறுவிறுக்க ஆபீஸ் போக வேண்டியது இல்ல. ஏ.ஸி&யைப் போட்டு ஜாலியா பாட்டுக் -கேட்டுக்-கிட்டே ஜம்முனு போகலாம்…’’
‘‘மாசம் 5,000 கட்டற-துன்னு முடிவெடுத்தா, அதுகூட இப்பத் தர்ற வாடகையும் சேர்த்து, போரூர் தாண்டி சின்னதா ஒரு பிளாட்டே வாங்கலாமே..?’’ என்றாள் மீரா.
‘‘நாம வாடகை வீட்ல இருக்-கோமா, இல்ல… சொந்த வீட்ல இருக்கோமான்னு யாருக்கும் தெரி யாது மீரா! ஆனா, பைக்ல போற தும், கார்ல போறதும் எல்லோருக்கும் தெரியுமே!’’ என்ற சேகரின் வாதம் மீராவிடம் எடுபடவில்லை.
அந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கள் வெளியே எங்கேயும் போக வில்லை. பிரபு மாமா வீட்டுக்குப் போகலாம் என்ற வற்புறுத்தலுக்கு, ‘‘முதுகுவலி. பைக் ஓட்ட முடியாது!’’ என்று சொல்லிச் சமாளித்தான்.
இறுதியில், சேகரின் பிடிவாதமே வென்றது. ஒரு சுபயோக சுப தினத்தில், வீட்டு வாசலில் கார் வந்து நின்றது. ஆர்வமும், பொறா மையும் கலந்த விசாரிப்புகளுக்கு சேகர் பொறுமையோடும் பெருமை யோடும் பதில் சொன்னான்.
காம்பவுண்ட் உள்ளே நிறுத்த வசதி இல்லாததால், தெருவில் ஓரமாக நிறுத்தி, கவர் போட்டு மூடி வைத்தான். இரவு தூங்கப் போவதற்கு முன் ஜன்னல் வழியாக காரைப் பார்த்த-போதுதான், அது நிகழ்ந்தது. வீட்டுக் குப்பைகள் அடங்கிய ஒரு பாலித்தீன் பை காரின் மேல் விழுந்து, நாலாவித கழிவுப்பொருட்கள் சிதறின.
பதறிப்போய் ஓடி வந்து பார்த்தான். பக்கத்து வீட்டு மாடியிலிருந்து பரமேஸ் வரன்தான் வீசியிருக்கிறார்.
‘‘யோவ்! கார் மேல குப்பையை வீசியிருக்கியே… அறிவிருக்கா?’’ என்றான் கோபமாக!
‘‘வாயை அடக்கிப் பேசுங்க தம்பி… உங்க கார் மேல நான் குப்பையைப் போடல. நான் குப்பை போடற இடத்துல நீங்க காரை நிறுத்தியிருக்-கீங்க…’’ & சண்டைக்குத் தயாராக இருந்தது அவர் பேச்சு. பாதிக்கப்பட்ட-வனான சேகரால் சும்மா இருக்க முடியவில்லை. கைகலப்புதான் நடக்க வில்லையே தவிர, பெரிய வாய்ச் சண்டை ஆனது.
அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்தும் கூட்டம் கூடி வந்தது. அதில் சிலர் சமாதானப்படுத்துவது போல் தோன்றி னாலும், ஏகதேசம் அனைவரும் பரமேஸ் வரன் செய்ததை ரசித்த-தாகவே தோன்றியது.
இதற்கிடையில் ஒரு நாள், வீட்டு உரிமையாளர் அதிகாலையில் வந்து, ‘‘நீங்க கார் நிறுத்தறது இடைஞ்சலா இருக்குன்னு நெறையப் பேர் கம்ப் ளையின்ட் பண்றாங்க!’’ என்றார்.
‘‘அதுக்கு நான் என்ன சார் செய்யறது?’’
‘‘உங்களை மாதிரி வசதியான-வங்க வாடகைக்கு வருவாங்கன்னு தெரி யாம வீட்டைக் கட்டிட்-டேன். நீங்க உங்க சௌகரியத்-துக்கு ஏத்தமாதிரி பார்க்கிங் இருக்கிற பெரிய வீடாப் பார்த்துப் போயிடலாமே..? இங்கே கூட 1,000 ரூபா வாடகை தர்றதுக்கு நான், நீனு போட்டி போடறாங்க…’’
தெருவில் நிற்கும் காருக்காக வாடகையை உயர்த்த வந்திருக்கிறார் என்பது புரிந்துபோயிற்று.
‘‘சரி சார், நீங்க சொல்றது புரியுது. வாடகை அதிகம் தர்றவங்களுக்கே கொடுங்க. ரெண்டு மாசத்துல நான் வீட்டைக் காலி பண்ணிக்கிறேன்!’’
‘‘அட, என்ன தம்பி நீங்க! காசு பணமா பெரிசு? ஒரு ஃபைவ் ஹண்ட்ரட் சேர்த்துக் கொடுத்துடுங்க… நீங்களும் திடீர்னு எங்கே போய் வீடு தேடுவீங்க..?’’ தன் தொனியை மாற்றிக்கொண்டு குழைந்தார்.
‘‘பரவால்ல, சார்! அது என் கஷ்டம். நான் பார்த்துக்கறேன்!’’ & கதவை மூடிக்கொண்டு உள்ளே போய் விட்டான்.
காலி செய்வதாகச் சொல்லிவிட்டு குடியிருக்கும் ஒவ்வொரு நாளும் கொடூரமானது. இந்த வீடு, சுற்றுப் புறம், மனிதர்கள்… எதுவுமே இனி நமக்குச் சொந்தமில்லை என்னும் நிதர்சனத்தை ஒவ்வொரு கணமும் உணர்த்திக்கொண்டே இருக்கும்.இதைவிடக் கஷ்டம் புது வீடு தேடுவது!
வேலை தேடுவதைவிடவும், வரன் தேடுவதைவிடவும் அது கடின மானது. குலம், கோத்திரம், தொழில், வருமானம், வீட்டிலுள்ளோர் எண் ணிக்கை, வந்து போவோர் எண் ணிக்கை எல்லாவற்றையும் சமர்ப்பித் தாக வேண்டும். இதுபோக விதவித மான, விநோதமான நிபந்தனை களுக்கும் கட்டுப்பட வேண்டியிருக்கும். வாடகை வீட்டில் வசிக்கும் வயதா னவர் யாராவது கொஞ்சம் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந் தால், ஒருவேளை அவர் மரணம் அடைய நேர்ந்தால் பிரேதத்தை இந்த வீட்டுக்குக் கொண்டு வரக் கூடாது என்று கட்டளையிடும் வீட்டு உரிமை யாளர்களும் உண்டு.
இப்படியான பல தடைகள் தாண்டி வீடு கிடைத்தாலும் பார்க்கிங் வசதியோடு கூடிய வீட்டின் வாடகை, பராமரிப்புக் கட்டணம் என மாதம் 10,000&ஐத் தொடும் என்பது தெரிந்த போது சேகருக்கும் மீராவுக்கும் மலைப்பாக இருந்தது. போரூர் தாண்டி சின்னதாக ஒரு பிளாட் வாங்கும் எண்ணத்துக்கு மீண்டும் உயிர் வந்தது. வாடகையாகத் தரு-வதை தவணைத் தொகையாகக் கட்டினால் வீடு சொந்தமாகி விடுமே!
ஒரு மாதம் அலைந்து திரிந்து ஒரு வழியாக அட்வான்ஸ் கொடுத்தா யிற்று. கொஞ்ச நஞ்சமிருந்த சேமிப்பு கள், மீராவின் நகைகள் எல்லாம் இதில் முடங்கிப் போயின. பைக்கைக் கூட விற்க நேர்ந்தது.
‘டைல்ஸ் போடறதுக்குப் பதிலா மார்பிள் போடலாமே… கதவு, ஜன்னல், அலமாரியெல்லாம் தேக்கு லேயே போட்ருங்க… ஒரு தடவை பண்ற செலவு, கொஞ்சம் கூடப் போனாலும் அப்புறம் பிரச்னை இருக்காதுல்ல…’ எனப் பலரும் பலவிதமாக அறிவுரைகள் வழங்கி யதில் திட்டமிட்டதைக் காட்டிலும் செலவுகள் எகிறின. வர்ஷாவை அந்தப் பகுதியில் உள்ள நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்க்க கணிச மான நன்கொடை தர வேண்டி இருந்தது. புது வீட்டுக்கேற்றவாறு கொஞ்சம் ஃபர்னிச்சர்களும் வாங்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக வீட்டுக் கடன் போக, வெளியிலும் கடன் வாங்க வேண்டியிருந்தது.
கூட்டிக் கழித்துப் பார்க்கையில் காருக்கு 5,000, வீட்டுக் கடனுக்கு 12,000, வெளிக் கடனுக்கு 6,000 என மாதம் 23,000 ரூபாய் தவணையாகக் கட்ட வேண்டியிருந்தது. இதுபோக ஸ்கூல் ஃபீஸ், வீட்டுச் செலவுகள், காருக்கு பெட்ரோல் என கட்டுக் கடங்காமல் செலவுகள் எகிறின. மீரா வாயைத் திறப்பதே புலம்பு வதற்குத்தான் என்றாகிவிட்டது.
தேதி தவறிய தவணைத் தொகை வசூலிப்பவர்கள் வீடு தேடி வர ஆரம்பித்தபோது, நிலைமை இன்னும் சிக்கலானது. தொடர்ந்து பேசாமல் இருப்பாள்; அல்லது, சம்பந்தம் இல்லாமல் பேசிக் கொண்டே இருப்பாள். அது தன் விதியை நொந்துகொள்வதாகவோ, எங்கேயாவது கண்காணாத இடத் துக்கு ஓடிப்போவதாகவோ, அல்லது எதையாவது தின்றுவிட்டு நிம்மதியாகக் கண்ணை மூடிடலாம் என்பதான தொனியிலோ அமைந் திருக்கும்.
வர்ஷாதான் பாவம்… வீட்டின் இறுக்கமும், அப்பா, அம்மாவின் எரிச்சலான அதட்டலும் அவளுக்கு புதிதானவை; புரியாதவை.
ஞாயிற்றுக்கிழமை பயணங்கள் அறவே நின்றுபோயின.
‘‘அமிர்தாக்கா வீட்டுக்குப் போலாமா டாடி? இனியா வீட்டுக் குப் போலாமா மம்மி..?’’ என்று கேட்டால், ‘‘ஏன், கழுதைக்கு ஊர் சுத்தாம இருக்க முடியலையா? பெட்ரோல் வெல என்ன தெரி யுமா… ஒழுங்கா உக்காந்து ஹோம் வொர்க் பண்ணு!’’ என்ற வசவே பரிசாகக் கிடைத்தது. சமயத்தில் அடி, உதையும்! எல்லா நாளுமே பள்ளிக்கூடம் இருந்திருக்கக் கூடாதா என்று அந்தக் குழந்தை ஏங்கியது.
இப்படியான ஒரு ஞாயிற்றுக் கிழமையில்தான் சேகரின் நண்பன் சங்கர், தன் மனைவியோடு வீடு தேடி வந்தான். வீட்டில் நிலவிய அழுத்த-மான மௌனத்துக்கு இடையில் அவனது வருகையை எதிர்கொள்வது சேகருக்கு அவஸ்தையாக இருந்தது. அதே நேரம், ஆறுதலாகவும் இருந்தது.
‘‘வாங்கண்ணா… வா சுமதி!’’ என்று வரவேற்ற மீராவின் முகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு புன்னகை யைக் காண முடிந்தது.
‘இவர்கிட்டயும் கடன் வாங்கிட்டு திருப்பித் தராமல் இருக்காரோ?’ என்று மீரா உள்ளூர சந்தேகப்பட்டாள். இதையறியாத சேகர், ‘‘என்னடா திடீர்னு வந்து நிக்கறே? எதிர்பார்க்-கவே இல்லை…’’ என்று சொன்னதுகூட அவள் சந்தேகத்தை வலுப்படுத்து-வதாகவே அமைந்தது.
‘‘புது வீடு, புது கார்னு சார் வசதியா இருக்கீங்க. வாடகை வீடு, பைக்குன்னு இருக்கிற இந்த ஏழையை நீ வந்து பார்ப்பியா… அதான், நாங்களே வந்துட் டோம்!’’ என்றான் சங்கர் தமா ஷாக. பதில் சொல்ல இயலாத சேகர், அசட்டுத்தனமாகச் சிரித்த படி ‘‘உட்காருடா…’’ என்றான்.
வீட்டைச் சுற்றி பார்வையை ஓட்டிய சங்கர், ‘‘நம்ம ஃப்ரெண்ட்ஸ் -லேயே நீதான்டா எதையும் வெல் பிளான்டா செய்யறவன். நீ புது வீடு வாங்கி செட்டிலானது சந்தோஷமா இருக்குடா!’’ என்றான்.
சுமதியின் வாஞ்சையான பிடி-யிலிருந்த வர்ஷா, ‘‘போங்க அங்கிள்! தேனாம்பேட்டை வீடுதான் சந்-தோஷமா இருந்தது..!’’ என்றாள். சேகர் செய்வதறியாமல் பார்க்க, மீரா அவளைத் தன்னருகில் இழுத்து மேலும் பேசவிடாமல் செய்ய முயன்றாள்.
‘விடும்மா…’ என்று தன்னை விடுவித்துக்கொண்ட வர்ஷா, அப்பாவின் அருகில் வந்து மிச்சத்தைத் தொடர்ந்தாள்… ‘‘டாடி! அங்கிளோட பைக்கை வாங்கி நீ, நான், மம்மி மூணு பேரும் பழைய மாதிரி ஜாலியா ஒரு ரவுண்ட் போய்ட்டு வரலாமா..?’’
திகைத்து மீராவைப் பார்த்தான் சேகர். பின், ‘‘சங்கர், சாவியைக் குடுடா!’’ என்றான்.
– 27th ஜூன் 2007
யதார்த்தமான சிறுகதை.கவிதா பாரதி நிறைய எழுதுங்கள்.