கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2018
பார்வையிட்டோர்: 8,526 
 
 

அவசரமாக எழுப்பப்பட்டேன்.

யாரோ ஒருத்தி முத்தம் தர தயாராயிருந்த கனவு தடைபட்டது.

விழி திறந்து பார்த்தபோது அம்மா தெரிந்தாள்.வெளியே எதையோ சுட்டிக் காட்டினாள்.

எழுந்து அவசரமாக பார்வையை ஜன்னல் வழியாக வீசினேன்.அங்கே காலை பத்திரிகை படித்தபடி இருப்பது…”ஓ மைகாட்…ஜெனிபர்..” வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து வந்தேன்.

கழுவாத என் முகத்துக்கு ‘குட் மார்னிங்’ சொன்னாள்.

“ஏம்பா விடியறதுக்குள்ள வந்திருக்க..எனி பிராப்ளம்’

“மன்னாங்கட்டி மணி இப்ப எட்டரை.”

நான் மறுவார்த்தை பேசாமல் அவசர அவசரமாய் பல் தேய்த்து,குளித்து,சாப்பிட்டு….எல்லாம் முடித்து ஜெனிபரிடம் போய் “கிளம்பலாமா?” என்ற போது மணி ஒன்பதாகியிருந்தது.

ஜெனிபர் மௌனமாகவே நடந்தாள்.முகத்தில் சோகம் இருந்தது.இருந்தாற்போல் “செத்து விடலாம் போல் இருக்கிறது”என்றாள் மொட்டையாக.

கால் பெருவிரலை குதிரை குளம்பு மிதித்த மாதிரி பதறிப் போனேன்.

“இதை சொல்லத்தான் காலையிலே வீட்டுக்கு வந்தியா?” ஜோக் சொல்லிவிட்ட மாதிரி சிரித்தேன்.அவள் அழுவாள் போலிருந்தது.சிரிப்பை நிறுத்தி விட்டு கேட்டேன். “மறுபடியும் ஏன் இப்படி நினைப்பு வருது..”மௌனமாக இருந்தாள்.

நான் ஒரு பாரத்தை சுமப்பது போல் உணர்ந்தேன்…

இவளும் சரி இவள் பேச்சுகளும் சரி எப்போதுமே எனக்கு புதிராகத்தான் படுகிறது.முதன்முறையாக என் வீட்டுக்கு வந்தபோதும் இப்படித்தான்..

ஒரு பெண்ணை எந்த முறையில் வரவேற்பது,உபசரிப்பது என்று நான் விழித்துக் கொண்டிருக்கையிலே ” வீடு ஏன் இவ்வளவு அலங்கோலமா இருக்கு..”என்றாள்.

அவமானமாயிருந்தது.

“இப்படி இருந்தாதான் அன்னியோன்யமா இயல்பா இருக்கும்.பளிச்சினு இருந்தா ஆபீஸ் மாதிரியில்ல தோணும்…”

நான் உளறுவதைக் கேட்டு தெருவுக்கு கேட்கிற மாதிரி சிரித்தாள்.பாதியில நிறுத்திவிட்டு கேட்டாள்…”உனக்கு தெரியுமா…அப்பா அம்மா பாசத்தை நான் அனுபவிச்சதேயில்ல…”

“ஏன்..இறந்திட்டாங்களா?”

“இருக்காங்க..”

“ஐ’ம் சாரி..”

“அவங்க இறக்கலையேன்னுதான் கவலைப்படணும்”

“மைகாட்..ஏம்பா அப்படி நினைக்கிறே..?”

“உனக்கு எல்லாமே பொண்ணுங்களா பிறந்தா வெறுப்பு வராதா!”

‘தெரியலை”

“எங்க அம்மாவுக்கு அது நிறைய உண்டு. நான் ஏழாவது பெண்.” சொல்லிவிட்டு ஏனோ சிரித்தாள். நான் பாதி புரிந்தும்,புரியாமலும் மௌனமாக இருந்தேன்.

மறுநாள் அலுவலகம் வந்தபோது கேட்டாள்.”உங்க பேமிலி பார்க்க சந்தோசமாயிருக்கு.அடிக்கடி வரவா?”மறுத்துவிடக் கூடாதென்ற தொனி கேள்வியில் இருந்தது

“சரி” என்றதும் சந்தோசமானாள்.திடீரென்று நினைத்துக் கொண்டவள் போல “பெத்தவங்களை வச்சிட்டு ஹாஸ்டல்ல தங்குற வாழ்க்கை இருக்கே…சூசைட் பண்ணிக்கலாம்னு தோனுதுப்பா..”என்று முதல்முறையாய் அப்போதுதான் சொன்னதாக ஞாபகம்.

இந்த அளவுக்கு நினைக்க தோன்றுகிறதென்றால் நிறையவே நொந்திருப்பாள் என்று தோன்றியது.ஆகவேதான் அனுசரணையாய் பேசுகிறவர்களிடம் பிரியமாய்,உரிமையாய் நடந்து கொள்கிறாள் என்று நினைத்தேன்.

ஐம்பது வயது கடந்த சேதுராம் சாரிடம் “இருங்க உங்க மீசையில இருக்கிற ஒரே ஒரு கறுப்பு முடியையும் எடுத்திடறேன்..”என்று நெற்றியில் கைவைத்து முகம் நிமிர்த்தி,வலது கையால் மீசை முடியை பட்டென இழுத்தது இந்த உணர்வோடுதான்…

ஆனால் கிளுகிளுப்படைந்த அந்த சேதுராம் அவளை ஒரு சல்லாப சிங்காரியாக சித்தரித்து ஊழியர்களிடம் கதை கதையாய் அவிழ்த்து விட….துடித்து போய் விட்டாள் ஜெனிபர். டேபிளில் கவிழ்ந்து கதறி அழுதாள்.மறுநாள் அலுவலகம் வரவில்லை.ஹாஸ்டலில் போய் விசாரித்த எனக்கு அதிர்ச்சி…’ஜெனிபர் தூக்கு மாட்டிக் கொள்ளப்போனாளாம்’

இயலாமையுடன் படுத்திருந்தவளை நெருங்கினேன்.மௌனமாக வெறித்தாள்.கண்களில் நீர் திரண்டிருந்தது.

“முடியலைப்பா.என்னால சகிச்சிக்க முடியலை..”என் கையை பற்றிய அவள் கரங்கள் நடுங்குவதை உணர முடிந்தது.

தாய் மடிக்காக ஏங்குகிற ஒரு குழந்தையின் தவிப்பு தெரிந்தது அவளிடம்.

“துரத்துகிறார்களே என்று ஓடிக்கொண்டிராதே… நில்…துரத்துபவர்களும் நின்று போவார்கள்.உன் சங்கடங்களை விட சந்தோசங்களையே நினை..சாவின் நினைப்பு உனக்கு வராது..” நிறைய சொன்னேன்.சமனித்தாள்.

ஆனால் இன்று மறுபடியும் தற்கொலை எண்ணம் ஏன் வந்தது.

“ஜெனிபர் சொல்லு…என்ன நடந்தது..”மீண்டும் கேட்டேன்.

“சிவா என்னை கைவிட்டுட்டது” என்றாள் விசும்பலாய்.

“நிசமாவா?” நம்பமுடியவில்லை.

சிவா இவள் காதலன். இவ்வுலகில் எதையும்விட அவனை அதிகமாய் நேசித்தாள்.அவனுக்காக குங்குமம் வைத்திருக்கிறாள்.விரலைக் கீறி இரத்தமெடுத்து போட்டோவில் கையெழுத்திட்டு அவனுக்கு கொடுத்திருக்கிறாள்.அவன் பெயருக்கு ஸ்டிக்கர் செய்து வாங்கி கைப்பையின் உட்புறம் ஒட்டி வைத்திருக்கிறாள்.எல்லாம் அவனுக்காக…அவன்…அவனே கைவிட்டு விடுவதென்றால்…சில்லறைக்காக ஒருமுறை கண்டக்டர் கத்தியபோதே பஸ்ஸிலிருந்து குதித்து தற்கொலை செய்யப்போனவள்…இந்த இழப்பை எப்படி…எப்படி தாங்குவாள்.

“பாரு ஜெனி..இது ஒரு சாதாரண விசயம்..” நான் தொடங்கியதும், ” நீ அனுபவிச்சாதான் தெரியும்… ” கை நீட்டி தடுத்தாள்.

பஸ் வந்தது.கூட்டத்தோடு கூட்டமாய்தொற்றிக்கொண்டோம்.”வாழ்க்கையில் சின்ன அம்சம்தான் காதல்…அதுவே வாழ்க்கைனு நினைச்சாதான் சிக்கல்..”

‘தத்துபித்தென்று’என்ன உளறுகிறான் என்று நினைத்திருப்பாள்.

” நீ எழுதிற சாதி.அப்படித்தான் இலக்கியமா பேசுவ! இப்ப சிக்கலே நான் உன் கூட பேசுறதுதான்…”

“புரியலை…”

” நான் உன் கூட பழகுறதை தப்பா யாரோ சிவாகிட்ட சொல்லியிருக்கு.அதான் என்னை…”

என் நட்பு ஏ.கே 47னால் துளைக்கப்பட்டதாய் உணர்ந்தேன்.

“விடு.அப்படி நம்பிக்கை கெட்டவனோடு இணைவதே பெரும்பாவம்..” சொல்லிவிட்டேனே ஒழிய எனக்கே பொறுக்கவில்லை. பாவி இப்படி சொல்லி விட்டானே.வேலையில் ஈடுபட மனம் மறுத்தது.

அவ்வப்போது நிமிர்ந்து பார்த்த ஜெனிபர் நெற்றியை சுருக்கினாள்.மதிய இடைவேளையில் ,”இப்படி டல்லாயிடுவேன்னு தெரிஞ்சிருந்தா சொல்லியிருக்கவே மாட்டேன்.” என்றாள்.

” நம்மை பத்தி நமக்கு தெரியும்…யாரு என்ன சொன்னா என்ன… நிம்மதியா பழைய மாதிரி இரு..”என்று ஆறுதல் படுத்தினாள்.ஒருவகையில் என்னை ஆறுதல் படுத்துகிற அளவுக்கு தெளிவாகி விட்டாள் என்ற நினைப்பு இதமாய் இருந்தது.

* * *

“ஏண்டா. அவ பின்னாடி சுத்திட்டிருக்க…கேவலமாயிருக்கு…” என்றாள் அம்மா. ‘அது உன் மனசின் வரையறை என்றால் புரிந்து கொள்ளவா போகிறாள்.

“லவ் பண்றியோ..”

மறுத்து தலையசைத்தேன்.

“பின்னே?’

“பிரெண்ட்.”

“என்னன்னு நம்புறது.ஊரு அப்படி இப்படி பேசுதே.”

“அது நீ இருக்கிறதே பாவம்னு நினைக்கும்.அதுக்காக செத்துரமுடியுமா.”

“சுத்தி வளைச்சி என்னை சாவுன்னு சொல்ற..அதானே…அதானே உன் ஆசை.. நேத்து வந்த பொட்டச்சிக்காக பெத்த அம்மாவையே செத்து போன்னு சொல்ல வந்திட்ட… ஆண்டவனே..”அம்மா நீண்டதாய் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

நான் சொன்னதை இப்படி கூட அர்த்தப்படுத்த முடியுமா? என்று யோசித்தபடியே,செஇவதறியாமல் நான் நின்ற சரியாய் அந்த வினாடியில் ஜெனிபர் வந்தாள்.

அம்மா அழுகையை நிறுத்தி அவளை ஏறிட்டாள்.’ஏண்டி உனக்கு ஊரு உலகத்தில வேற பயலுகளே கிடைக்கலியா..”

ஜெனிபர் பேயை பார்த்துவிட்டவள் மாதிரி மிரண்டாள்.அம்மாவின் இந்த அதிரடி என்னையும் நிலைகுலைய வைத்தது.

“அம்மா என்ன ஆச்சி உனக்கு.என்ன இருந்தாலும் என்னை பேசு.அவளை திட்ட உனக்கு உரிமையில்லை.”என்று சொல்லி பார்த்தேன்.கேட்டால்தானே..?

“…கொஞ்சம் லட்சணமா இருந்தா விடமாட்டியா.துரத்திகிட்டே திரியுற…”மூச்சு விடாமல் அம்மா கத்திக் கொண்டிருக்க நான் அவள் கையை பற்றி ஆவேசமாய் வீட்டிற்குள் இழுத்தேன்.

“அடிடா.. நல்லா அடி..கஷ்டப்பட்டு உன்னை ஆளாக்கிவிட்டேன் பாரு…தெருவில போற மினுக்கி உனக்கு பெரிசா போயிட்டா இல்ல…அடி..ஏண்டியம்மா இப்ப உனக்கு சந்தொசம்தானே…”

அம்மா இன்னதுதான் என்றில்லாமல் சரமாரியாக ஏசிக்கொண்டிருக்க…தெரு கூடி சுவாரசியமாக வேடிக்கை பார்க்க..

சிலைபோல் நின்றிருந்த ஜெனிபர் என்னை நிமிர்ந்து நோக்கினாள்.விழியில் நீர் திரண்டிருக்க…ஆவேசமாய் திரும்பி கூட்டத்தை பிளந்தபடி ஓட அரம்பித்தவள்தான்.

எங்கே போனாள்..என்ன ஆனாள்…இன்னும் தேடிகொண்டுதான் இருக்கிறேன்.

– ஏப்ரல் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *