கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 1,086 
 
 

தேசயாத்திரை செய்ய நாள், நட்சத்திரம், போக்குவரத்து வசதிகள், செலவுக்குப் பணம் என்ற இந்த விஷயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தைரியமாகப் பிரயாணம் செய்கின்ற கூட்டத்தில் திடீரென்று இந்த நான்காண்டு காலத்திற்குள் சில ஆயிரம் மக்கள் சேர்ந்தார்கள் – அவர்கள் யார்? – கைத்தறி நெசவாளிகள். அவர்களில் ஒருவன் தான் தங்கசாமி.

தங்கசாமி! – அவனுடைய உடலிலே ஒரு குண்டுமணி எடை பொன்கூட ஒட்டியிருக்கவில்லை. ஆனால் அவன் உள்ளம் மட்டும் அவன் பெயரைப் போலவே தங்கமாக இருந்தது. அதோடு அவன் மனைவி தங்கத்திற்கும் அவன் சாமியாக இருந்தான்.

பணத்திற்கு மதிப்புத் தருகின்ற உலகத்தில் அவன் குணத்திற்கு யார் மதிப்புத் தரப் போகிறார்கள்? அதனால்தான் அவன் தேச யாத்திரை செய்யப் புறப்பட்டு விட்டான் பெண்டு பிள்ளை சூழ!

நூல் கிடைக்காததால் தங்கசாமி தனக்குத் தெரிந்த ஒரே தெழிலான நெசவுத் தொழிலை விட வேண்டியதாயிற்று. வாழ வேறு வழியோ, துறையோ தெரியாத காரணத்தால் அவனும் இந்தக் கூட்டத்தில் சேர்ந்துவிட்டான்.

மழையை நம்பிப் பயிரிடும் உழவனைப்போல் நூலை நம்பி தறியிலே உழைத்தவன் தான் தங்கசாமி. அவனது பொருள் சில தறிகள், ஒரு சிறிய வீடு ஆக இவ்வளவுதான். இந்த ஆஸ்திகளோடு அவன் தன் உழைப்பையும் மூலதனமாக வைத்துக் கொண்டு வயிறு வளர்த்து வந்தான். நூல் தட்டப்பாடு வந்தது; மாதத்திற்குச் சில நாட்கள் உண்ணா நோன்பிருக்கக் கற்றுக் கொண்டான். நூலே கிடைக்கவில்லை – அதனால் தறி போடவில்லை. அதைத் தொடர்ந்து தங்கசாமியின் வாழ்க்கைத் தேரும் அசைய மறுத்துவிட்டது. தேர் ஓடாது என்று தெரிந்து கொண்டதும்தான் அவனும் அவன் மனைவியும் தங்கள், தங்கள் கால்களை நம்பிப் பயணத்தைத் தொடங்கினார்கள்.

அவர்கள் துவக்கிய பயணத்தில் திட்டமோ குறிக்கோளோ இருக்கவில்லை. எங்கெங்கோ சுற்றினார்கள்; கிடைத்ததைச் சாப்பிட்டார்கள். சத்திரம் சாவடிகளிலே அதைக் கட்டி வைத்த புண்யவான்களை வாழ்த்திக் கொண்டு குடியிருந்தார்கள்.

ஊரிலே நன்றாக வாழ்ந்த காலத்தில் சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் பக்கத்து வீட்டாருடன் பெரிதாகச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் தங்கசாமியும் அவன் மனைவியும். ஆனால் இப்பொழுது நடந்துவிட்ட எவ்வளவோ பெரிய தவறுகளையெல்லாம் பொறுத்துக் கொண்டு சகித்திருந்தார்கள். காலம் அவர்களுக்குச் சகிப்புத்தன்மையை மட்டும் கற்றுக் கொடுக்கவில்லை. இன்னும் எவ்வளவோ பெரிய விஷயங்களைக் ‘காலம்’ என்ற ஞான போதகர் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தார்.

சமயவழியிலே உயர்ந்தவன் – தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகள் காட்டாமல், பொருளாதாரத் துறையிலே பணக்காரன் ஏழை என்ற பிரிவினைகள் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். ‘ஒன்றே குலம் – ஒருவனே தேவன்’ என்ற உயரிய தத்துவம் eதெரிய வந்தது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த மனப்பான்மை பழக்கத்தில் வந்தது.

காலம் கற்றுக் கொடுத்த இந்த உண்மைகளை எப்பொழுதும் கடைப்பிடிப்பார்கள் என்று சொல்வதற்கும் இல்லை. பின்னர் அவர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும் பொழுது காலம் கற்றுக் கொடுத்த இந்த உயர்ந்த பண்பாட்டை, சிறந்த பழக்கங்களை மறந்தாலும் மறப்பார்கள். ஏன்?… மனம் அப்படிப்பட்டது.

மனித மனம் ஒரு நூலறுந்த காற்றாடியைப் போன்றது. சாந்த சூழ்நிலை என்ற சூறாவளிக் காற்றுகளையெல்லாம் அது தனக்குச் சாதகமாகக் கொள்ளும். அந்தச் சூறாவளிக் காற்றுகள் தன்னை எங்கே கொண்டு போய் விடும் என்ற கவலையே அதற்குக் கிடையாது.

ஒரு காலத்தில் தங்கசாமி பத்துத் தறிகளுக்குச் சொந்தக்காரன்; அவன் பதினாறு தொழிலாளிகளுக்கு வேலை கொடுத்து வந்தான். ஊம்… அதையெல்லாம் நினைத்துக் கொண்டால் இந்த வேளைப் பசி போகுமா? அதனால் தான் அவன் நடையை எட்டிப் போட்டுக் கொண்டிருந்தான், பக்கத்தில் உள்ள கிராமத்தை நோக்கி

தோளுக்கு ஒரு குழந்தையாக அவனுடைய குழந்தைகள் இரண்டும் வாகனமேறியிருந்தன. அவைகள் இரண்டும் சுற்றுப்புறக் காட்சிகளைக் கண்டு கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்தபடியே இருந்தன. பாவம்! அவைகளுக்குத் தெரியுமா தன்னைப் பெற்றெடுத்தவர்களின் பரிதாப நிலைமை?

தங்கசாமி தன்னுடைய கஷ்டகாலத்திலும் அந்தப் பசலைகள் வெம்பிவிடாதபடி பாதுகாத்து வந்தான். இனிமேல் அவர்களை எப்படிப் பாதுகாப்பது என்பதுதான் அவனுக்குப் பெரிய புதிராக இருந்தது.

இந்த வேளைப் பசியை எப்படிப் போக்குவது என்ற பிரச்சனையில் மூழ்கியவாறே நடந்து கொண்டிருந்ததால் அவன் முதுகில் தொங்கிய கந்தல் துணி மூட்டையின் பாரம்கூட அவனுக்குத் தெரியவில்லை. தன்னுடைய கோலத்தைக் கண்டு குலைக்க வரும் நாய்களை விரட்டுவதற்காகக் கையில் வைத்திருந்த குச்சியை ஊன்றிக் கொண்டே கிராமத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான். ஆனால் அவன் மனைவி தங்கமோ நெடுந்தொலைவு நடந்த களைப்பினால் சோர்ந்து போய் பின்தங்கி வந்து கொண்டிருந்தாள். தங்கத்தோடு சேர்ந்து போவதற்காக குடை போல் விரிந்து குளிர்ந்த நிழலைத் தந்து கொண்டிருந்த ஆலமரத்தின் நிழலில் குழந்தைகளை இறக்கிவிட்டு, பாரம் குறைந்ததனால் வெளிவந்த பெருமூச்சை விட்டுக் கொண்டே உட்கார்ந்தான். அப்பொழுது சூ…சூ…. சூ…. என்ற சப்தம் பக்கத்தில் இருந்த தென்னந்தோப்பில் இருந்து வந்தது. சத்தம் கேட்கும் திசையைப் பார்த்தான் தங்கசாமி. பத்துப் பன்னிரண்டு குரங்குகள் இளநீர்க் காய்களைத் திருடிக் கொண்டு தென்னந் தோப்பிலிருந்து ஆலமரத்தை நோக்கி ஓடிவந்தன. அதைப் பார்த்த அவன் இந்தக் குரங்குகள் செய்த பாக்கியம் கூட நாம் செய்யவில்லையே என்று எண்ணி நொந்து கொண்டான். உண்மையிலேயே அவன் நிலை குரங்கைவிட மோசமாகத்தான் இருந்தது.

குரங்கு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மனிதனாக மாறியதாகடார்வின் என்ற பெரியார் கூறியிருக்கிறார். ஆனால் அந்த முன்னேற்றத்தினால் என்ன பிரயோஜனம்? மனிதன் குரங்கைவிட மோசமாகச் சில சமயங்களில் மதிக்கப்படுகிறானே.

குரங்குகள் தன் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக இளநீர்க் காய்களை திருடியது. அதைக் கண்ட தோட்டக்காரன்… சூ…. சூ.. என்று அவைகளை விரட்டியடித்தான். அவ்வளவுதான், குரங்குகள் திருடிய அந்த இளநீர்க் காய்களை திரும்ப அடைவதற்கு அவன் எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால் தங்கசாமி தன் பசிக்காக – வேண்டாம்; குழந்தைகளின் பசிக்காக ஒரு இளநீர்க் காயைப் பறித்துவிட்டால் சும்மா விடுவானா தோட்டக்காரன்?

குழந்தைகள் இருவரும் குரங்குகளைக் கண்டு சந்தோஷ மிகுதியால் கை தட்டிக் கொண்டு குதித்தார்கள். ஆனால் தங்கசாமி மாத்திரம் கல்லை எடுத்துக் கொண்டு எதிர்த் திசையில் இருந்து வேகமாகக் குரங்குகளை விரட்டினான். எங்கிருந்து அவனுக்கு அவ்வளவு சக்தி வந்ததோ தெரியவில்லை. அவ்வளவு வேகமாக ஓடி குரங்குகளை விரட்டினான். பசி அதிகமாக இருக்கும்பொழுது சக்தியும் அதிகமாக இருக்குமோ என்னவோ!

சிறிது தூரம் குரங்குகள் இளநீர்க் காய்களைத் தூக்கிக் கொண்டு ஓடின. தங்கசாமியும் அவைகளை விடுவதாக இல்லை. தொடர்ந்து விரட்டினான். இந்தப் பந்தயம் சுமார் அறுபது, எழுபது கெஜ தூரம் நடந்திருக்கும். ஆபத்து அண்மையில் வந்துவிட்டதை உணர்ந்த குரங்குகளில் சில இளநீர்க் காய்களைப் போட்டுவிட்டு ஓடின. அவ்வளவுதான்! தங்கசாமியின் முகம் சந்தோஷத்தால் புடம் போட்டு எடுக்கப்பட்ட தங்கத்தைவிடப் பிரகாசமாகியது.

இளநீர்க் காய்களையெல்லாம் ஒன்று சேர்த்தான். எண்ணிக்கையில் அவைகள் ஏழாக இருந்தன. தலைக்கொன்றாக வைத்துக் கொண்டாலும் மூன்று மிச்சம் இருந்தது. அதனால் கொஞ்சம் தாராளமாகவே இளநீர் குடிக்கலாம் என்ற ஆசையில் கக்கங்களில் இரண்டும் கையிலே ஐந்துமாக எடுத்துவந்தான். அப்பொழுது ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்த தங்கம் அவனை ஆச்சரியத்தோடும் சந்தோஷத்தோடும் பார்த்தாள். நடந்த வேடிக்கையைக்கூடச் சொல்லாமல், தங்கசாமி பக்கத்தில் இருந்த கருங்கல்லில் இளநீர்க் காய்களை மோதி அதன் மட்டைகளை நீக்கி இளநீரைப் பகிர்ந்து குடும்பத்தோடு குடித்தான்.

வெயிலில் நெடுவழி கடந்து நாவறண்டு போன சமயத்தில் நல்ல இளநீரும் குளிர்ந்த மரநிழலும் கொடுத்த இன்பத்தில் பல மாதங்களுக்குப் பிறகு அவர்கள் அனைவரின் முகங்களும் மலர்ந்தன.

கிராமத்தின் எல்லையில் இருந்த அந்த ஆலமரத்தின் நிழல் அவர்களுக்கு அதிகமாகப் பிடித்துவிட்டதால் தங்கசாமி தன் கந்தல் துணிக் கூடாரத்தை அங்கேயே போட்டான். பிறகு கிராமத்தில் வேலை தேடி இரண்டு மூன்று நாட்கள் அலைந்தான். ஒன்றும் கிடைக்கவில்லை. பக்கத்தூரில் இருக்கும் பஞ்சாலையில் வேலைக்கு ஆள் எடுப்பதாக யாரோ சொன்னார்கள். வழியை விசாரித்துக் கொண்டு பஞ்சாலையை நோக்கி பசியையும் பொருட்படுத்தாமல் போனான். ஒரு மைல் நடப்பதற்குள்ளாகவே அந்தப் பஞ்சாலையின் பிரம்மாண்டமான பெரிய உருவம் கம்பீரமாகத் தெரிந்தது. இவ்வளவு பெரிய உருவம் நம்மோடு போட்டியிட்டால் நம்மால் எதிர்த்து நிற்க முடியுமா என்ன? என்று உள்ளம் தளர்ந்து பெருமூச்சுவிட்டான் தங்கசாமி. ஆம்! அவ்வளவு பெரிய போட்டிதான் கைத்தறித் துணிக்கும், மில் துணிக்கும் மார்க்கெட்டில் நடந்தது. இறுதியாக அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது யார்?.

பூஊம்…ம்…… என்று அப்பொழுது அந்த ஆலை மில் சில நிமிஷநேரங்கள் தன் வெற்றிச் சங்கநாதத்தை ஊதியது. ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் அதன் அழைப்பை ஏற்றுக் கொண்டு உள்ளே போனார்கள். தங்கசாமியும் போனான். தான் வந்த விஷயத்தை விளக்கமாகச் சொல்லி தன்னை உள்ளே விடுமாறு வேண்டினான். அவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த காவலாளி வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஆனால் அவன் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருந்த ஒரு போர்டைச் சுட்டிக் காட்டினான். தங்கசாமியைப் போன்று ஆயிரமாயிரம் பேர்களுக்குப் பதில் சொல்லி அவர்களை அனுப்பி வைத்த அந்த அழகான போர்டு தங்கசாமியின் கண்களில் தென்பட்டது. அந்தப் பச்சை நிற போர்ட்டில் இரத்தச் சிவப்பு வர்ணத்தால் எழுதப்பட்ட வேலை காலி இல்லை’ என்ற மூன்று வார்த்தைகளும் பளபளத்தன. வார்த்தைகளின் பளபளப்பு தங்கசாமியின் கண்களைக் கூசின. கண்களைக் கைகளால் மூடிக் கொண்டு திரும்பி நடந்தான் தங்கசாமி.

வயிறு காய்ந்தது; மழலைகளின் சிரித்த முகம் வாடியது. பசிக்கு அதிகப் பழக்கமில்லாத தங்கம் சோர்ந்து போனாள். நிலைமையைச் சமாளிக்க மானத்தை விட்டு வெட்கத்தை விட்டு யாசகம் கேட்கச் சென்றான் தங்கசாமி. யாசகமும் கிடைக்க வில்லை. ஆனால் ‘ஆளை பாரு! ஆறடி இருக்கிறாயே! உழைத்துப் பிழைக்கக் கூடாதா?” என்ற வசைவுகளும், திட்டுகளுமான வாசகங்கள் நிறையக் கிடைத்தன. தங்கசாமிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கையை மோவாய்க்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு யோசித்துக் கொண்டே இருந்தான். அப்பொழுது அவனுக்குப் பக்கமாகக் காக்கைகள் கூட்டம் ஒன்று கரைந்து கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். அங்கே ஒரு பிச்சைக்காரக் குழந்தை தான் பொறுக்கி வந்த எச்சிலிலைகளில் ஒட்டியிருந்த பருக்கைகளை உதிர்த்துக்கொண்டு இலைகளை விட் டெறிந்து கொண்டிருந்தது. அந்த எச்சிலிலைக்குத்தான் அப்படி அடித்துக்கொண்டன காக்கைகள்.

அந்தக் காட்சியைப் பார்த்த தங்கசாமியின் உள்ளத்தில் ஒரு எண்ணம் உதித்தது. உடனே துள்ளியெழுந்தான். உள்ளே ஓடினான். ஒரு கிழிந்த வேட்டியை எடுத்துப் பை போல் கட்டி பசிக்கு ஆலம்பழம் பொறுக்கித் தின்று கொண்டிருந்த தன் மகனை இழுத்து வந்து அவன் முதுகிலே தொங்கவிட்டான். பசியால் சோர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மூன்றாண்டுகள் நிரம்பிய தன் மகனை அந்த இளந்தளிரை எழுப்பினான். அந்தக் குழந்தை தூக்கக் கலக்கத்தில் இமைகளை மூடி மூடித் திறந்தது. கலயத்தில் இருந்த நீரில் தன் மேல் துண்டை நனைத்து குழந்தையின் கண்களைத் துடைத்துத் தூக்கத்தைத் தெளிய வைத்தான். பிறகு தன் எதிரே இரு குழந்தைகளையும் நிற்க வைத்துப் பாட்டு சொல்லிக் கொடுத்தான். அந்தப் பிஞ்சு நெஞ்சங்கள் பாட ஆரம்பித்தன.

“ரகுபதி ராகவ ராஜா ராம்
பதீத பாவன சீதா ராம்”

இன்னும் சில அடிகளைச் சேர்த்துதான் தங்கசாமி சொல்லிக் கொடுத்தான். ஆனால் அந்த மழலைகள் இந்த இரண்டடிகளைத் தவிர மற்ற அடிகளைச் சொல்ல மறந்தன.

இவ்வளவாவது வந்ததே என்ற எண்ணத்தோடு அந்த இரண்டடிகளையும் பலமுறை பாடச் சொல்லிப் பழக்கப்படுத்தினான். இறுதியில் தான் பெற்றெடுத்த அந்த அன்புச் செல்வங்களை, அழகுத் தெய்வங்களைத் தொட்டு முத்தமிட்டு, தன் கண்கள் வடிக்கும் நீர் முத்துக்களைத் துடைத்துக் கொண்டு தைரியம் கூறி வழியனுப்பி வைத்தான்.

அந்தப் பசுந்தளிர்கள் பழக்கமில்லாத காரணத்தால் தயங்கித் தயங்கி திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றன. அந்தக் காட்சியைக் காணச் சகிக்காமல் குமுறி வந்த அழுகையை நீர்சொட்டும் கண்களைத் திரும்பி மறைத்துக் கொண்டான். அப்பொழுது சற்று தூரத்தில் பாத்திரம் துலக்கி சம்பாதித்த காசில் குழந்தைகளுக்கு இட்லி’ வாங்கி வரும் தன் மனைவியைக் கண்டான். அவளிடம் இந்த ஈனச் செய்கையைச் சொல்ல தைரியம் இல்லாதவனாய் அவள் அருகே வந்ததும் அழுதேவிட்டான். தங்கசாமியின் வாயிலாக கொஞ்சம் கொஞ்சமாக விஷயத்தைத் தெரிந்து கொண்ட தங்கம் அவன் செய்தது சரிதான் என்று கூறி தங்கசாமியைச் சமாதானப்படுத்தினாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் ஓடேந்திச் சென்ற அந்த ஓவியக் குழந்தைகள் ஒன்பது காசும் வட்டியில் சிறிது சோறும், பையில் கொஞ்சம் அரிசியும் கொண்டு வந்தன. அதை நிரந்து சாப்பிட்டு அன்றையப் பொழுதைக் கழித்தார்கள்.

தங்கசாமிக்கு தான் ஒரு ஆண்மகனாக இருந்து கொண்டு மனைவியையும் மக்களையும் வெளியே அனுப்பி அவர்கள் சம்பாதித்து வருவதைச் சாப்பிட வேண்டியிருக்கிறதே என்ற அவமானத்தை அவனால் தாங்க முடியவில்லை. பலவிதமான எண்ணங்கள் அவனுள்ளே படமெடுத்து ஆடின…

குழந்தைகள் பிச்சை எடுக்கச் சென்ற இடத்தில் ” எந்தப் பாவிமகன் உங்களைப் பெற்று இப்படி நடுத்தெருவில் பிச்சை எடுக்கவிட்டானோ, ஐயோ பாவம்!” என்று ஊரார் குழந்தைகளைப் பார்த்து கண்டன இரக்கம் பேசுவதுபோல் ஒரு பிரமை.

பைத்தியம் பிடித்தவன் போல் தலை மயிரைப் பிய்த்துக் கொண்டான் தங்கசாமி!

தன் மனைவி வேலை செய்யச் சென்ற இடத்தில் அவள் அழகை வேற்று ஆண்கள் ஏற இறங்கப் பார்ப்பது போன்ற ஒரு தோற்றம் அவ்வளவுதான்! தங்கசாமியால் தாங்க முடியவில்லை. எழுந்தான். எங்கேயோ ஓடினான். கால் போன போக்கில் களைத்துச் சோரும் வரை ஓடினான்.

பிச்சை எடுக்கச் சென்ற குழந்தைகள் பெரியவர் ஒருவர் பின் தொடர வருவதைக் கண்டாள் தங்கம். எழுந்து நின்று வரவேற்று விசாரித்தாள்.

அதற்கு வந்தவர், தான் அந்த ஊரில் உள்ள இந்து அனாதை ஆசிரமத்தின் தலைவர் என்றும் குழந்தைகளை ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ள அனுமதி கேட்கவே வந்ததாகவும், தங்கம் விரும்பினால் ஆசிரம வேலைகளைச் செய்து கொண்டு ஆசிரமத்திலேயே இருக்கலாம் என்றும் கூறினார்.

இதைக் கேட்டதும் தங்கத்திற்கு உண்டான ஆச்சர்யத்தில் பேச்சே வரவில்லை. இந்த விஷயத்தைத் தங்கசாமியிடம் சொல்லுவதற்கே மரத்தடிக்கு ஓடினாள் ! ஆனால் அவன் அங்கே இருந்தால் தானே!..

விஷயத்தை ஊகித்தறிந்து கொண்ட பெரியவர், “கலங்காதேயம்மா! நான்தான் தங்கசாமியை என் நண்பரிடம் அனுப்பியிருக்கிறேன். அவனுக்கு நல்ல வேலையும் நிறைய சம்பளமும் கிடைக்கும்” என்று சொல்லித் தேற்றி அவர்களை ஆசிரமத்திற்கு அழைத்துப் போனார். ஆசிரமத் தலைவர் தங்களைத் தேடி வந்து உதவி செய்வது எதனால் என்பது தங்கத்திற்குத் தெரியப்போகிறதா என்ன?…

வழக்கம்போல் அன்று அதிகாலையில் எழுந்த ஆசிரமத் தலைவர் காவேரியில் நீராட ஆலமரப் படித்துறைக்குப் போனார். ஆனால் அங்கே அவர் கண்டது என்ன?…

அந்த ஆலமரம் வழக்கம் போலத்தான் தன் விழுதுத் தோரணங்களைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அவற்றிலே ஒரு விழுதிற்கு மிகுந்த பேராசை போலிருக்கிறது. விரைவாக வளர்ந்து நிலமகளினைத் தீண்டுவதற்காக அருகே வந்த ஒரு மனிதக் கொடியைச் சுருக்கிட்டு முடிந்து கொண்டு நீளமாக வளர்ந்திருந்தது. அவனும் அதன் அன்புப் பிணைப்பிலே மயங்கியவனாய் தூங்கிக்கொண்டிருந்தான். தென்றல் தன் நீண்ட கரங்களை நீட்டிப் பறவைகள் இடும் சப்தத்தால் அவன் விழித்துக் கொள்ளாமல் இருப்பதற்காக அவனைத் தாலாட்டிக் கொண்டிருந்தது. காதிற்கு இனிமையான ஜலதரங்க தாலாட்டுப் பாட்டை இசைத்தவாறு காவேரி ஓடிக் கொண்டிருந்தது. இவ்வாறு தென்றலின் மிருதுவான அசைவும், காவேரியின் தாலாட்டும் கிடைத்துவிட்டால் இடி இடித்தாலும் தெரியாதவாறு எந்த மனிதன் தான் தூங்கமாட்டான்?

அவன் தூங்கிய விதம்தான் விநோதமாக இருந்தது. நின்றபடியே தூங்கிக் கொண்டிருந்தான். இதைவிட அழகாக அதிக வசதியோடு இயற்கை அன்னையால் தொட்டில் கட்டித்தர முடியுமா என்ன? நின்றபடியே தூங்குவது முதலில் சிறிது சிரமாக இருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது…!

அவனும் எவ்வளவோ முறைகள் தன் வாழ்நாளில் தூங்கியிருக்கிறான். ஆனால் இது போன்ற இயற்கைத் தூக்கத்தின் சுகத்தை இதற்குமுன் என்றாவது அவன் அனுபவித்திருக்க முடியுமா?

ஆசிரமத் தலைவர் அவனைப் பற்றிய தகவல்களையெல்லாம் சேகரித்தார். அவன் தறிகார தங்கசாமி என்று தெரியவந்தது.

‘பாவம்! உலகத்தோடு போராட இவனுக்குச் சக்தி இல்லை. பயந்து பின் வாங்கியிருக்கிறான். உலகம் கொன்றுவிட்டது’ என்று எண்ணி இரக்கப்பட்டு அவனை அடக்கம் செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். அப்பொழுது தூரத்தில் இருந்தபடியே பூஊம்ம் என்று தன் வெற்றிச் சங்கநாதத்தை ஊதித் தீர்த்தது ஆலை.

பிறகுதான் ஆசிரமத் தலைவர் தெருவில் ஓடேந்தி வந்த குழந்தைகளை அழைத்துக் கொண்டு தங்கத்தைக் காண வந்தார்.

தங்கத்திற்குத் தன் சாமி எப்பொழுது வருவார் என்று தெரிந்து கொள்ள ஒரே ஆவலாக இருந்தது. ஆவலை அடக்க முடியாமல் கேட்டும் விட்டாள். பலவிதத் துன்பங்களால் துளைக்கப்பட்டுப் புண்ணான அந்த மென்மையான நெஞ்சத்தை மேலும் துன்புறுத்த விரும்பாத அந்த நல்ல மனம் ‘நிறைய சம்பாதித்துக் கொண்டு ஒரு மாதத்தில் திரும்பி வருவான்’ என்று சொல்லி வைத்தது.

தங்கமும் மனதிற்குள் ‘அப்பனே முருகா! அவருக்கு கஷ்டங்கள் வராமல் நீதான் காப்பாற்ற வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டாள்.

(தமிழ்ப் பொழில், 1955)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *