கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 9,155 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

நான் வழக்கம்போல என் கதிரையிலே சாய்ந்திருந்தேன். அந்த இலையுதிர் பருவத்தின் மௌனமான மாலை வேளையில் மின்கணப்பு மெதுவாக எரிந்து கொண்டிருந்தது. துரி என் காலடியில் படுத்திருந்தது. அன்று முழுக்க அது சாப்பிடவில்லை. சாப்பாட்டை போய் முகர்வதும், மறுபடியும் வந்து படுப்பதுமாக இருந்தது. என்னுடைய மகன் கல்லூரிக்கு போன நாள் தொடங்கி இப்படித்தான்.

இரண்டு நாள் முன்பு நானும் என் மனைவியும் காரிலேபோய் எங்கள் மகனை அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இருக்கும் பேர்க்லி கல்லூரியிலே சேர்த்துவிட்டு வந்திருந்தோம். அந்தக் கல்லூரி எங்கள் வீட்டிலிருந்து 3000 மைல் தொலைவில் இருந்தது.

எங்களைப்போல இன்னும் பல பெற்றோரும் அமெரிக்காவின் பலபகுதிகளிலும் இருந்து அங்கே வந்திருந்தனர். பதினேழு வயது தாண்டிய பிள்ளைகளை இப்படி பெற்றோர் கூட்டிவந்து கல்லூரிகளில் சேர்ப்பது இங்கே ஒரு சடங்கு. பிள்ளைகளுடன் பெற்றோருடைய உறவுகள் துண்டிக்கப்படும் முக்கியமான நாள் இது. இதன் பிறகு பெற்றோர் வேறு, பிள்ளைகள் வேறு என்று தங்கள் பாதையில் பிரிந்து சென்று விடுவார்கள்.

என் மகனுடைய சாமான்கள் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு போய் அவனுக்காக ஒதுக்கப்பட்ட அறையிலே வைத்தோம். முதன்முறையாக எங்களைப் பிரிந்து இருக்கப் போவதால் அவன் கண்கள் கலங்கிவிட்டன. அதைக் காட்டாமல் இருக்க அவன் பெரிதும் பிரயத்தனப்பட்டான். என் மனைவியோ பொங்கிவந்த அழுகையை அடக்கத் தெரியாமல் விம்மத் தொடங்கினாள். செய்வதறியாது துரியை வாரியெடுத்து திருப்பித் திருப்பி கொஞ்சினான் என் மகன். அவனுடைய பத்தாவது வயதிலே பிறந்த நாள் பரிசாக நாங்கள் கொடுத்த நாய்தான் துரி. கடந்த ஏழு வருடங்கள் அவன் துரியைவிட்டு பிரிந்திருந்ததே இல்லை. முதன் முறையாக இப்படி பிரிவது எங்கள் எல்லோருக்கும் வருத்தமாகத்தான் இருந்தது.

நாங்கள் வீடு வந்து சேர்ந்தபோது வீடு ஓவென்று சுடுகாடு போல காட்சியளித்தது. மனம் கேளாமல் மகனுடன் டெலிபோனில் கதைத்தோம். அவன் துரியைப் பற்றித்தான் விசாரித்தான். நாங்கள் துரியை டெலிபோன் வாய்க்கருகே கொண்டுபோய் பிடிக்க அது ‘வள், வள்’ என்று குரைத்து தன் ஆற்றாமையை தெரியப்படுத்தியது. என் மகனுடைய அறைக்குள் ஓடிப்போய் அவன் படுக்கையையும், புத்தகங்களையும், உடுப்புகளையும் மணந்து மணந்து பார்த்துவிட்டு மறுபடியும் திரும்பி வந்து என் காலடியில் படுத்துக்கொண்டது. நீர் தேங்கிய கண்களை உயர்த்தி முகத்தை என் மடியிலே தேய்த்து ‘ங்…ங்’ என்று முனகியது. அதனுடைய துக்கத்தை யார் தேற்றுவார்கள்?

அந்த நாய்க்குட்டி பிறந்து ஆறு வாரங்களிலேயே எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. கால்களைத் தூக்கி ஆண் நாய் என்று நிச்சயித்துக் கொண்டு என்ன பெயர் வைப்பது என்ற விசாரத்தில் மூழ்கினோம். பல பெயர்களை நிராகரித்த பின்பு ‘துரியோதனன்’ என்ற பேரை நான்தான் முன்மொழிந்தேன். என் மகன் என்னை கீழ்க்கண்ணால் ஊடுருவிப் பார்த்தான். பேர்களை ‘வீட்டோ’ பண்ணும் உரிமை அவனிடம் இருந்தது. ‘ஆ, துரி என்று கூப்பிடுவோம்’ என்று இறுதியில் சொல்லிவிட்டான். பெயரும் அப்படியே நிலைத்துவிட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ’ல் இருந்து எங்களைப் பார்க்க அடிக்கடி வரும் நண்பர் ஒருவருக்கு அந்தப் பேர் பிடிக்கவில்லை. ‘ஏன், வேறு பேர் கிடைக்கவில்லையா? என்று கேட்டார். நான் ‘இல்லை, முதலில் திருதராட்டினன் என்று வைப்பதாகத்தான் இருந்தோம். ஆனால் அந்தப் பேரில் நாய்க்கு அவவளவாக சம்மதமில்லை; அதுதான் ‘துரியோதனன்’ என்று வைத்திருக்கிறோம். இந்தப் பேர் அதற்கு நன்றாகப் பிடித்துக்கொண்டது’ என்று சொல்லிவிட்டேன். பிறகு அந்த நண்பர் வாயே திறக்கவில்லை.

இடக்காக அவருக்கு பதில் கூறினாலும், துரியோதனன் என்று பேர் வைத்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. மகாபாரதத்திலே சிறப்பாக பேசப்படும் நம்பு கிருஷ்ணன், அர்ஜுனன் நட்புதான். இரண்டுபேருமே ராஜவம்சம்; நெருங்கிய உறவு. இதிலே என்ன அதிசயம்? உண்மையில், எங்கள் இதிகாசங்களில் கூறியபடி மிகச்சிறந்த நம்புக்கும், விசுவாசத்திற்கம், அன்புக்கும் இலக்கணம் துரியோதனன்தான். அர்ஜுனனுடன் துவந்தயுத்தம் தொடங்க முன்பு ‘உன் குலத்தை உரைப்பாயாக’ என்று சபை நடுவே கேட்டதும் தலைகுனிந்த கர்ணனை கட்டித் தழுவி அந்தக்கணமே அவனை அங்கததேசத்து அரசனாக அபிஷேகம் செய்த துரியோதனனை மறக்க முடியுமா? சொக்கட்டான் விளையாட்டின் உச்சக்கட்டத்தில் பானுமதியெழுந்ததும் அவள் முந்தானையை கர்ணன் பிடித்து இழுக்க, முத்துமாலை அறுத்து திறிவிழ, உள்ளே வந்த வணங்காமுடி மன்னன் துரியோதனன் முழங்காலில் இருந்து ‘பொறுக்கவா, கோக்கவா’ என்று கேட்ட அவனுடைய ஆழ்ந்த நட்பின் அடையாளமாக வைத்த பெயரல்லவா இது? இந்த வியாக்கியானம் எல்லாம் கழிவுநீர் கால்வாய் திருத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் நண்பருக்கு விளங்கவா போகிறது என்று நானும் பேசாதிருந்துவிட்டேன்.

துரி சிறு வயதிலே செய்த கூத்தை இங்கே வர்ணிக்க முடியாது. அது வந்த நாளில் இருந்து எங்கள் வீட்டு நடைமுறைகள் எல்லாம் மாறிவிட்டன. எங்கள் எல்லோருடைய செயல்பாடுகளும் அதை மையமாக வைத்துத்தான் நடந்தன. அதற்கு பால் பருக்குவது, சாப்பாடு ஊட்டுவது, குளிக்க வார்ப்பது என்று எல்லாவற்றையும் போட்டி போட்டுக்கொண்டு செய்தோம். என் மகனுடன் செய்த ஒப்பந்தப்படி துரியன் கழிவு உபாதைகளை அவனே பார்த்துக்கொண்டான். படுக்கப் போகுமுன் பத்திரிகைகளையெல்லாம் பரப்பி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டோம். பனிக்குளிர் அடிக்கும் இரவு நேரங்களில் என் மகன் துரியைக் கூட்டிக்கொண்டு வெளியேவிட்டு நடுக்கத்துடன் காத்துக்கொண்டிருப்பான். அந்தக் காட்சி என் மனதை வெகுவாக உருக்கிவிடும்.

சில வேளைகளில் துரி தவறுதலாக விலையுயர்ந்த கார்பெட்டில் ஒன்றுக்குப் போய்விடும். நாங்கள் அதை அதட்டும்போது அது மிகவும் நொந்துபோகும். அவமானப்பட்டு போய் உடலைக் கூனிக்குறுகி ஒரு மூலையிலே அனுங்கிக்கொண்டே ஒளியப் பார்க்கும். அது புத்திசாலியான நாய் என்றாலும் சிறுபிள்ளைகளுக்கே உரிய விஷமத்தோடு அது செய்த லீலைகளுக்கு அளவில்லை.

முதலில் இருந்தே சில ரூல்ஸை நாங்கள் துரிக்காக ஏற்படுத்திக் கொண்டோம். அதிலே ஒன்று துரிக்கு நாங்கள் சாப்பிடும் உணவு கொடுப்பதில்லை என்பது தான். காலையிலே இரண்டு கப் பால்; பின்னேரம் ஐந்து மனியளவில் டின்னிலே வரும் நாய் உணவை அளவோடு எடுத்து துரியுடைய பிளேட்டில் போட்டு விடுவோம். அது பாய்ந்தடித்து சாப்பிடாது; வைத்து வைத்து வேண்டியபோது சாப்பிட்டுக் கொள்ளும். ஒரு நாய் தன் சாப்பாட்டிற்காக கெஞ்சுவதோ, வாயைப் பார்த்துக்கொண்டு நிற்பதோ அதனுடைய தன்மானத்திற்கு இழுக்கு என்பது எங்கள் கருத்து.

குட்டி நாயான துரிக்கு குழந்தைப்புத்தி சுபாவம் அதிகம். பதுங்கி பதுங்கி வந்து நாங்கள் அணியும் ‘சொக்ஸை’ திருடிக் கொண்டுபோய் தோட்டத்திலே புதைத்துவிடும். இப்படியாக எங்கள் சொக்ஸ் எல்லாம் அதிதீவிரமாக மறைந்துகொண்டு வந்தன. ஒருநாள் பிடிபட்டு விட்டது. ‘எங்கே? என்று உறுக்கி கேட்டதும் தோட்டத்திலேபோய் பரபரப்பாகத் தோண்டியது. சுந்தரமூர்த்தி நாயனார் பரவையரை ‘இம்பிரெஸ்’ செய்வதற்காக ஆற்றிலே போட்ட பொற்காச திருவாரூர் தாமரைக்குளத்தில் எடுத்துக் கொடுத்தாரல்லவா? எங்களுடைய துரியும் எங்களை இம்பிரெஸ் செய்ய எடுத்துக்கொண்ட முயற்சிகளெல்லாம் படுதோல்வியடைந்தன. அதற்குப் பிறகு நாங்கள் எல்லாரும் எங்கள் சொக்ஸை கண்ணும் கருத்துமாக காவாந்து செய்யத் தொடங்கினோம்.

ஆனால் இதை எதிர்பார்த்த துரி இன்னொருபடி முன்னேறி விட்டது. ஒருநாள் இரவு என் மகனுடைய காலணியை கடித்து வைத்திருந்தது. அன்று நாங்கள் இது எங்களுக்கு ஒப்பான விஷயம் இல்லை என்பதை மிகவும் கஷ்டப்பட்டு துரிக்கு விளங்க வைத்தோம். ஆனால், அடுத்த நாலாம் நாளே என்னுடைய நூற்றி நாற்பது டொலர் சப்பாத்தை இது கடித்து ஓட்டை போட்டுவிட்டது. இது ஒரு சீரியஸ் விஷயம் என்பதை துரிக்கு எப்படி உணர்த்துவது? அடுத்த நாள் சாப்பாட்டு நேரத்துக்கு துரியினுடைய பிளேட்டில் உபயோகத்தில் இல்லாத பழைய சப்பாத்துகள், செருப்புகள் எல்லாவற்றையும் போட்டு அதன் முன்னால் வைத்தோம். துரி திடுக்கிட்டு விட்டது. இரண்டு நாள் தொடர்ந்து இப்படியே செய்து கொண்டு வந்தோம். அதுவும் சிவபட்டினியாகக் கிடந்தது. இந்தச் சம்பவத்திற்கு பிறகு துரி சப்பாத்தை கண்டால் பக்கமாக ஓடும்.

துரியை வாங்கும்போது எங்களுக்கு அதனுடைய பெடகிறி கார்டையும் தந்திருந்தார்கள். பெடிகிறி கார்டு என்பது அந்த நாயுடைய பூர்வாங்கத்தை கூறும் அட்டை. அது ஒரு ஓஸ்ட்ரேலியன் செப்பர்ட். அதனுடைய மூதாதையர் ஸ்பெயினில் இருந்து ஓஸ்ரேலியா போய் அங்கேயிருந்து நூறு வருடங்களுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு வந்தவை. பிறக்கும்போதே ஒட்டிய வாலுடன் பிறக்கும் இந்த நாய்கள் ஓட்ஸ்ரேலியாவில் ஆட்டு மந்தைகளை சீராக வைத்திருப்பதற்கு ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்டவை. நீலநிறக் கண்களும், மடிந்த காதுகளும், மெத்தென்று பத்தையாக இருககும் மயிரும் இந்தச் சாதி நாயை சட்டென்று இனம் காட்டி விடும். அறுபது பவுண்ட் எடையும் இரண்டு அடி உயரமும் கொண்ட இது மனிதனுக்கு கடவுளால் அளிக்கப்பட்ட விசுவாசமான ஒரு தோழன்.

துரியுடைய மேல்முடி சொக்லேட் கலரில் அடர்த்தியாக இருக்கும். முகமும் கீழ்கால்களும் மாத்திரம் தேக்குமர நிறம்; அதன் கழுத்துக்குக் கீழே கொஞ்சம் வெள்ளைப் பிரதேசம். கண்கள் கனிந்து இருக்கும்; அண்ணாந்து பார்க்கும்போது ‘என்னை அணை’ என்று கெஞ்சவதுபோல தோன்றும். கண்களுக்கு மேலே இரண்டு வட்டங்கள். அது படுத்து நித்திரை கொள்ளும்போதும் கண் விழித்திருக்கிறது போன்ற பிரமையை உண்டு பண்ணும். ஆட்டு மந்தைகளை மேய்க்கும்போது ஆடுகள் இது தூங்கும்போதும் விழித்திருக்கிறது என்று நினைத்து மயங்கி பயபக்தியோடு செயல்படுமாம்.

மேய்ச்சலில் இருக்கும்போது இது மந்தையை சுற்றிச் சுற்றி வந்து ஆடுகளின் கால்களை மெல்லக் கடித்து அவற்றை ஒழுங்கு படுத்தும். அந்தப் பழக்கத்தை இது இன்னும் முற்றிலும் மறக்கவில்லை. நாலைந்து பேரோடு இது ஆட்களைச் சுற்றிச்சுற்றி வந்து குதிக்காலை மெல்லக் கடித்து ஒழுங்குபண்ணப் பார்க்கும். இன்னொரு பரம்பரை விசேஷமும் இதற்கு உண்டு. ஆட்டு மந்தையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு போக வேண்டுமென்றால் இது சுற்றி வந்து போகாது. ஒரு ஆட்டின் மேலேறி அந்தக் கரை போய் சேர்ந்து விடும். இந்தப் பழக்கம் இன்னமும் இதன் ரத்தத்தில் ஊறி இருக்கிறது. ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு போவதற்கு இன்றுகூட இது தன் குலாசாரப்படி எதிர்ப்பட்ட தெல்லாவற்றையும் ஏறிப் பாய்ந்து பாய்ந்து தான் போய்ச் சேரும்.

நான் வளர்த்த நாய்களில் துரி போன்ற அறிவுக் கூர்மையுள்ள நாயை நான் கண்டது கிடையாது. ஆனாலும் அதற்கு ஒரு வயதுப் பிராயம் முடிவதற்கிடையில் தகுந்த ட்ரெயினரிடம் பயிற்சி கொடுப்பதென்று முடிவு செய்தோம். ட்ரெயினர் சொன்ன வாசகம் எனக்கு இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. ‘நாய்கள் நல்ல புத்திகூர்மை உடையவை. அவைக்கு ட்ரெயினிங் தேவையில்லை. ட்ரெயினிங் எல்லாம் உங்களுக்குத்தான்’ என்று அந்த மெக்ஸ’க்கோக்காரன் என்னைச் சுட்டிக்காட்டி கூறினான். எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.

நாலே நாலு வார்த்தைகள்தான் எங்களுக்கு கற்பித்தான். அதன் பிறகு துரியில் எவ்வளவு மாற்றம். ‘கம்’வா என்பது; ‘சிட்’ இரு என்பது; ‘ஸ்டே’ நில் என்பது; இவை எல்லாவற்றையும் நானும் துரியும் வெகு சிரத்தையாகக் கற்றுக்விட்டோம். வீட்டுப்பாடம் கூட சரியாக செய்தோம். ஆனால் ‘ஹ“ல்’ என்பது எங்கள் இரண்டு பேரையும் வாட்டி எடுத்துவிட்டது. இடது கையிலே நாயுடைய சங்கிலியை பிடித்துக்கொண்டு நாயையும் இடது பக்கமாக நடத்திச் செல்லவேண்டும். செய்து பார்த்தால் தெரியும் வினை. நடக்கும்போது நாய் என்னுடைய குதிக்காலுடனேயே வந்து கொண்டிருக்க வேண்டும். நான் நிற்கும்போது அதுவும் நிற்க வேண்டும்; நடக்கும்போது அதுவும் நடக்கவேண்டும். கொஞ்சம் முந்தியும் போகக்கூடாது. பிந்தியும் வரக்கூடாது. நாயுடைய வேகத்துக்கு ஏற்ப நான் என்னுடைய வேகத்தை மட்டுப்படுத்த பார்ப்பேன். மெக்ஸ’கோக்காரன் கத்துவான். நாய்தான் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும்; நானல்ல. காசையும் கொடுத்து இந்த மெக்ஸ’கோக்காரனிடம் இப்படி பேச்சு வாங்க வேண்டியிருக்கிறதே என்று நான் என்னை நொந்து கொள்வேன். கடைசியில் ஒருவாறாக பரீட்சையில் இருவருமே பாஸாகி விட்டோம்.

இது தவிர மெக்ஸ’கோக்காரன் ஒரு விஸ’லும் தந்திருந்தான். அந்த விஸ’லை ஊதினால் சத்தமே கேட்காது. அந்தச் சத்தம் நாய்க்கு மாத்திரம்தான் கேட்கும். அது எங்கே இருந்தாலும் ஓடி வந்து விடும். அதற்கு பிறகு துரியுடன் வாக் போவதும், பார்க்கிற்கு போய் விளையாடுவதும் எனக்கும் என் மகனுக்கும் சொர்க்க வாசலைத் திறந்துவிட்டதுபோல ஆகிவிட்டது. இந்த நாலு வார்த்தைகளும் எங்களுக்கு ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்திவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.

‘போ’ என்று சொல்வதற்கு மெக்ஸ’கோக்காரன் ட்ரெயினிங் இல்லை என்றும், நாயை அந்தவார்த்தை குழப்பும் என்றும் கூறியிருந்தான். ‘போ’ என்ற வார்த்தை உண்மையில் தேவையில்லை என்பதை நாங்கள் வெகுநாள் கழித்துத்தான் கண்டு கொண்டோம்.

எங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் துரி அவசரமாக வந்து அவர்களை ஒருமுறை முகர்ந்து பார்க்கும். பிறகு போய் விடும். அதனுடைய கம்ப்யூட்டர் மூளையில் விருந்தினருடைய மணம் பதிவாகி எஜமானருக்கு இவர்கள் வேண்டியவர்கள் என்ற செய்தி ஆயுளுக்கும் நிச்சயமாகிவிடும். சூப்பர் மார்க்கட் போனால் துரி எங்களுக்காக வெளியே காத்து நிற்கும். எவ்வளவுதான் அதற்கு தொந்தரவு வந்தாலும் அசையாது. ஒரேஒரு முறை மாத்திரம் அதற்கு ஒரு சோதனை ஏற்பட்டது.

துரி இப்படி ஒருநாள் வெளியே இருக்கும் சமயம் பார்த்து சடை வைத்து சிலுப்பிய பெண் நாய் ஒன்று அதை மயக்கி விட்டது. வேத அத்யயனத்தில் கவனமாயிருந்த ரிஷ்யசிருங்கரைப்போல விஷபானுபவங்கள் தெரியாமலே இது வளர்ந்து விட்டது. இதற்குமுன் இப்படியான உணர்ச்சிகளை அது அனுபவித்ததில்லை. அந்தச் சடை நாயைக் கண்டதும் அதன் பின்னாலேயே சுற்றிக் கொண்டு போய் விட்டது. நாங்கள் துரியைத் தேடிக் கண்டுபிடித்தபோது எங்களை அந்நியர்போல பார்த்தது. ‘ங், ங்’ என்று அழுதுகொண்þ எங்களுடன் வேண்டா வெறுப்பாக வந்தது. அந்தச் சடைக்கார சிறுக்கி துரியின் மனத்தை அப்படி கெடுத்துவிட்டது.

அப்போது நான் ஒரு துரோகமான காரியத்தை செய்யவேண்டி வந்தது. கடவுளால் படைக்கப்பட்ட ஒரு ஜ“வனின் பால் உணர்ச்சியுடன் விளையாட எனக்கு என்ன உரிமை இருக்கிறது. சுயநலம் கருதி மிருக வைத்தியரிடம் போய் துரிக்கு ‘நலம் அடித்து’ (பால்நீக்கம்-neutering) வந்தோம். ஆண் நாய்கள் பெண் நாய்களுக்குப் பின் தறிகெட்டு அலையாமல் இருந்து வீட்டை நலமாகக் காப்பதற்காக யாழ்ப்பாணத்தில் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வந்த உபாயம். நாங்கள் செய்த துரோகம் தெரியாது என் செல்லக்கட்டி துரி எங்களை நக்கியபடியே விசுவாசமாக பின் தொடர்ந்தது என் மனதை மிகவும் கஷ்டப்படுத்தியது.

ஒருநாள் இப்படித்தான் துரியை காரிலேயே விட்டுவிட்டு கண்ணாடியையும் உயர போட்டுவிட்டு ஒரு அவசர காரியமாக டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ணு ஒன்றுக்குள் போய்விட்டேன். ‘ஐந்து நிமிடங்களில் வந்து விடுவேன்’ என்று தான் நினைத்திருந்தேன். அங்கே கனநாள் காணாத ஒரு நண்பரை கண்டு நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருந்துவிட்டேன். அவருடைய வற்புறுத்தலுக்கு இணங்கி அவருடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு திரும்பும்போதுதான் துரியினுடைய ஞாபகம் சடுதியாக வந்தது.

அது ஒரு கோடைகாலம். பதைத்துக்கொண்டு நான் ஓடிவந்தபோது காரைச் சுற்றி இரண்டு மூன்று பேர்; ஓரு போலீஸ்காரர். பாண் போறணை பேல வேகிக் கொண்டிருக்கும் காரிலே இப்படி வாயில்லாத பிராணியை விட்டுப்போவது எவ்வளவு பாபமான காரியம் என்பது எனக்குத் தெரியும். தவறுதலாக நடந்துவிட்டது என்று பொலீஸ்காரரிடம் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். ஆனால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு துரியிடம் மன்னிப்பு கேட்பேன்? துரி முகத்தை உயர்த்தி நீர் கசிந்த கண்களால் என்னைப் பார்த்துவிட்டு தலையை என் மடியில் உரசி தன் மன்னிப்பை அறிவித்தது; ஆனால் நான மாத்திரம் என்னை மன்னிக்கவே இல்லை.

இந்த சமயத்தில்தான் துரி தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பாடத்தைக் கற்றது. நாங்களும் தான். எங்கள் வீட்டில் பின்னால் மரங்களடர்ந்த ஒரு தோப்பு இருந்தது. மரங்களென்றால் கவையாகிக் கொம்பாகி வளர்ந்த ஓக் மரங்களும், அமெரிக்கன் ஹைவே போன்று வளைவே இல்லாத சிவப்பு மரங்களும் அந்தத் தோப்பை நிறைத்து இருந்தன. நிமிர்த்தி வைத்த நாதஸ்வரம் போன்ற டக்ளஸ் மரங்களில் வண்ணக்கலர் மரங்கொத்திகள் நேர் நேராய் ஓட்டைகள் துளைத்து அவற்றிலே வரப் போகும் பனிக் காலத்துக்கு ஓக் விதைகளைச் சேமித்து வைத்திருப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தேன் சிட்டுகளும், மரங்கொத்திகளும், கொண்டைக் குருவிகளும், ஹம்மிங் பறவைகளும் அங்கே நிரந்தரமாக குடியிருந்தன. அவைகளுடைய சலசலப்பு அதிகாலை வேளையிலேயே எங்களையெல்லாம் எழுப்பிவிடும்.

துரிக்கென்று ஒரு சிறிய மரக்கதவு ரப்பர் வளையம் போட்டு எங்கள் வீட்டு சுவரிலே பொருந்தியிருந்தோம். துரி வேண்டிய நேரம் போகவும் வரவும் அது வசதியாக இருந்தது. துரி அடிக்கடி வெளியே போய் தன் கீழ் பிரஜைகளாகிய அணில்களுக்கும், தேன் சிட்டுகளுக்கும், மரங்கொத்திகளுக்கும் காட்டும் முகமாக ராஜநடை நடந்து தன் ராஜ்யத்தை பரிபாலனம் செய்து திரும்பும். அவையும் இதைக் கண்டவுடன் ‘கீ, கீ,’ என்று சத்தமிட்டு மரியாதை செய்து ஒதுங்கி நிற்கும். துரி இப்படி புது லாடம் அடித்த குதிரைபோல தலையை நிமிர்த்தி நகர் வலம் வரும்போது அந்தந்த மூலைகளில் ஓரொரு சொட்டு சிறுநீர் தெளித்து தன் எல்லைகளை திரும்பவும் வலியுறுத்தி வைக்கும்.

ஒரு நாள் இரவு பதினொரு மணியிருக்கும். என் மகன் ஹைஸ்கூல் சோதனைக்கு விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தான். நானும் மனைவியும் தொலைக்காட்சி பார்த்தவாறு இருந்தோம். எங்கள் காலடியில் துரி கதகதப்பாக படுத்திருந்தது. திடீரென்று ஒரு வாடை வீசியது. நாங்கள் இதற்கு முன்பு அறிந்திராத ஒரு நெடி. நாங்க ளஆளையாள் பார்ப்தற்கிடையில் துரி விசுக்கென்று எழும்பி நாய்க்கதைவை தள்ளிக்கொண்டு வெளியே பாய்ந்தது அங்கே வேவு பார்க்க வந்த வரிபோட்ட தேவாங்கு (Stiped Skunk) ஒன்றை துரி துரத்தியபடி போய்க் கொண்டிருந்தது. ஒரு நொடிதான் அந்தக் காட்சியை பார்த்தாலும் மனதை விட்டகலாத காட்சியது. அந்த தேவாங்கு ஒன்றரை அடி உயரம் தான் இருக்கும். கறுப்பு நிறத்தில் முதுகிலே மட்டும் வெள்ளைக்கோடு; அத்தோடு குஞ்சம் கட்டியதுபோல அடர்த்தியான வால் அதற்கு.

‘இனி ஆத்தாது’ என்று தெரிந்ததும் தேவாங்கு பக்கவாட்டில் நின்று கால்களைத்தூக்கி இப்படியான ஆபத்து சமயங்களுக்கென்று கடவுளால் கொடுக்கப்பட்ட, பின்னாங்கால்களுக்கிடையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத இரு சுரப்பைகளில் இருந்து ஒரு திரவத்தை பீச்சியடித்தது. துரியின் கண்களை நோக்கித்தான் இந்த திரவம் வந்தது. துரி எவ்வளவு முயன்றும் அதனால் இதைத் தவிர்க்க முடியவில்லை. துரி புல்தரையிலே விழுந்து உருண்டு உருண்டு கதறியது.

நாங்கள் ஓடி அதனிடம் வந்தபோது வெளிர் மஞ்சள் கலரிலே இருந்த அந்தத் திரவம் அதன் உடம்பு பூராவும் பரவி விட்டது. ‘ஓ,ஓ’ என்று ஓலமிட்டு ஊரைக் கூட்டியது. நாங்கள் துரியைக் கிட்ட அணுகாதபடி அந்த நெடி எங்களையும் தாக்கியது. ரப்பரை எரிக்கும்போது வருமே அப்படியாக நாசித்துவாரத்தை அரித்துக் கொண்டு போகும்படியான துர் நெடி அது. துரியை உள்ளே கொண்டு வந்து அது ஓலமிட, ஓலமிட குளிக்க வார்த்து அதன் வேதனையை தீர்க்க முயன்றோம். முடியவில்லை. கடைசியில் தக்காளிப் பழச்சாறு பிழிந்து அதில் அதை முக்கி முக்கி எடுத்தோம். மூன்று நாள் வரை அதன் ரணம் ஆறவில்லை; வீட்டைச் சுற்றி அப்பியிருந்த மணமும் போகவில்லை. தேவாங்கு அதற்குப் பிறகு என்ன நினைத்ததோ தெரியவில்லை. துரியின் ராஜ்யத்தில் அதனடைய மணம் கமழும் படையெடுப்பு மீண்டும் நடைபெறவேயில்லை.

ஆனால் இந்த சமயத்தில்தான் துரி வேறொரு நிரந்தரமான எதிரியைத் தேடிக் கொண்டது. பின் தோட்டத்திலே பறவைகளுக்காக ஒரு தட்டிலே எப்பவும் தண்­ர் வைத்திருக்கும். பறவைகளும், அணில்களும், தேன்சிட்டுகளும் வந்து இந்த தண்­ரைக் குடித்து இளைப்பாறி செல்லும். சில வேளைகளில் இந்த தண்­ர் மண் கலந்து சேற்றுத் தண்­ர் போல கலங்கி இருக்கும்.

முதலில் நான் இது பற்றி சட்டை செய்யவில்லை. ஆனால் நாளாக நாளாக எனக்கு அதிசயமாக இருந்தது. இரவிலே தெளிந்த ஓடைபோல இருக்கும். தண்­ர் இப்படி சகதியாவது எப்படி?

ஒருநாள் தற்செயலாக இதற்கான விடை கிடைத்தது. நடுச்சாமம் போல நாங்கள் பின்னால் வைத்திருக்கும் குப்பை வாளியை அடிக்கும் சத்தம் கேட்டது. நல்ல நிலா எரியும் மோகனமான இரவு வேளை அது. ஒரு றக்கூன் (Reccoon) வந்து குப்பை வாளியை உருட்டி கையை விட்டு எதையோ தேடிக் கொண்டு இருந்தது. கையிலே கிடைத்த மிச்சம் மீதி பழவகையை கொண்டுவந்து தண்­ரிலே அலம்பி சாப்பிட்டது. ஒரு சிறிய நாய் அளவுக்கு உயரமாக அது இருந்தது. கறுப்பும் வெள்ளையும் கலந்த நிறம். வாலிலேயும், கண்களிலும் மஞ்சளும் வெள்ளையுமான வளையங்கள். இதன் கண்களுக்கு மேலே இருந்த கறுப்புவட்டம் முகமூடி போட்டது போல பார்க்க அழகாக இருந்தது.

இது ஒரு இரவுப்பட்சணி. பழங்கள், தானியங்கள், தவளை, குருவி முட்டை போன்றவற்றை தேடியெடுத்து சாப்பிடும். ஆனால் இதில் ஒரு விசேஷம். எடுப்பவற்றை தண்­ரில் கழுவித்தான் இது சாப்பிடும். மிருகங்களிலேயே றக்கூனுக்குத்தான் இப்படி சுகாதாரத்தில் இவ்வளவு ஈடுபாடு. கரடியைப்போல இந்த ரக்கூனும் எல்லாவிதமான சாப்பாடும் ஒருவித தயக்கமுமின்றி சாப்பிட வல்லது.

தானம் தன்பாடுமான இருந்த துரிக்கு இப்படியாக றக்கூன் வந்து தன்னுடைய ராஜ்யத்தில் தலையிடுவது பிடிக்கவில்லை. அன்றிலிருந்து அதிதீவிரமாக அது தன்னுடைய கடமைகளை கவனிக்கத் தொடங்கியது. இரவு நேரங்களில் றக்கூன் ரகசியமாக வந்து குப்பை வாளியைத் தட்டி உணவு தேடுவதும், கிடைப்பதை தண்­ரில் அலம்பி சாப்பிடுவதும், ஆற்ற முடியாத ஆவேசத்துடன் துரி துரத்திப் போவதும் இப்போது வழக்கமாகி விட்டது. அச்சவாரம் குடுத்து பிடித்த இணுவில் தவில் செட் ‘டம்டம்’ என்றுவிடாப்பிடியாக அடிப்பதுபோல நடு இரவு வேளைகளில் தவறாமல் குப்பை வாளி சத்தம் நீட்டுக்கு கேட்கத் தொடங்கியது. அந்த நேரங்களில் துரி பிய்த்துக் கொண்டு நாய்க் கதவு வழியாக ஓடுவதும், நாய்க் கதவு டக்கென்ற சத்தத்துடன் திறப்பதும், மூடுவதும் இப்பவெல்லாம் என் காதுகளுக்கு கேட்டுக் கேட்டு பழக்கமாகி விட்டது.

துரியோதனனுக்கும் வீமனுக்கும் நடந்தது போன்ற இந்த துவந்த யுத்தம் முடிவேயின்றி ஒவ்வொரு இரவும் நடைபெற்றது. பகல் நேரங்களில் நிர்ப்பந்தமாக ஒத்தி வைக்கப்பட்டு இரவு நேரங்களில் பழைய மூர்க்கத்துடன் இது தொடர்ந்தது. துரியும், றக்கூனும் அந்த ஆவேசமான இரவு நேரங்களுக்காகவே வாழ்வதுபோல எனக்குப் பட்டது. துரி பகல் நேரங்களில் மூசி மூசி நித்திரை கொண்டு இரவுநேரங்களுக்காக தன்னைத் தயார் செய்து கொண்டது.

எங்கள் வீதியில் ஆயிரம் பஸ்கள் ஓடியபடியே இருக்கும். ஆனால் என் மகன் வரும் பள்ளிக்கூட பஸ் சத்தம் மட்டும் துரிக்கு நிதர்சனமாகத் தெரிந்துவிடும். ஓடிப்போய் வாசலில் நின்று அவனைக் கூட்டி வரும். அவன் வந்த பிறகு அவனுடைய காலுக்கு பின்னலேயே போய்க்கொண்டிருக்கும். வெளியே போய் அவனுடன் விளையாடவும், பிறகு அவன் வந்து படிக்கும்போது அவன் காலின் கீழ் படுத்திருக்கவும், காலை நேரங்களில் அவன் காலை நக்கி எழுப்பவும், வாசலிலே விழும் பேப்பரை ஓடி எடுத்துக்கொண்டு வரவும் பழகியிருந்தது.

நண்பனாக, ஆசானாக,விளையாட்டுப் பிள்ளையாக எங்கள் வீட்டை துரி முழுக்க ஆக்கிரமித்த இந்த இனிமையான நேரத்தில்தான் என் மகன் இப்படி சடுதியாக எங்களையெல்லாம் விட்டு கல்லூரிக்கு படிக்கச் செல்ல வேண்டி வந்தது. அதற்குப் பிறகு துரி முற்றிலும் ஒரு புதிய துரியாக மாறிவிட்டது. நானும், மனைவியும் எவ்வளவோ முயன்று எங்கள் மகனுடைய இடத்தை ஈடுகட்ட முயன்றோம். முதலில் என் மகன் இரண்டு கிழமைக்கு ஒருமுறை வந்து போனான்; பிறகு, மாதத்திற்கு ஒருமுறை என்றானது. அதற்குப் பிறகு ஒவ்வொரு செமஸ்டர் முடிவிலும் வந்து போகத் தலைப்பட்டான்.

துரி கொஞ்சம் கொஞ்சமாக இந்த புதுச் சூழ நிலையை ஏற்று அதற்கேற்றமாதிரி தன்வாழ்க்கையை அமைத்துக் கொண்டது. என் மகன் கல்லூரியை முடித்து நல்லதொரு தனியார் கம்பெனியில் வேலையில் சேர்ந்து விட்டான். இப்பொழுது அவன் வேலை பார்க்கும் இடமோ இன்னும் தூரமானது. வீட்டிற்கு வந்து சேர்வதற்கு அரை நாள் எடுக்கும். சில வேளைகளில் டெலிபோனில் கூப்பிடும்போது துரியைப் பற்றி கேட்பான்; நாங்களும் அவ்வப்போது துரியைப் பற்றிய புதினங்களைச் சொல்லி வைப்போம்.

சூரியன் யாருடைய உத்தரவையும் எதிர்பாராமல் மாலை நேரங்களில் ஒளிவது போல சொல்லாமல் கொள்ளாமல் துரியனுடைய யௌவனப் பிராயத்து சேட்டைகளும் மறையத் தொடங்கின. முந்திய வீர்யம்போய் சில மாற்றங்கள் தென்பட்டன. விடியும்போது அதனால் முன்புபோல் துள்ளிக்கொண்டு எழும்பமுடிவதில்லை. கால்களை நிமிர்த்தி வளைத்து மெதுவாகத்தான் சோம்பல் முறித்தது. இருந்தாலும் அது தன் கடமைகளைச் சரிவர செய்வதில் குறியாகவிருந்தது. தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தில் மற்ற பிராணிகளோ, பறவைகளோ ஆக்கிரமிக்காமல் இருப்பதில் மிக்க கவனமாக செயல்பட்டது. ஓர் அணிலையோ, குருவியையோ துரத்தியபின் மிகக் கெப்பருடன் நடந்து தன்னுடைய ராஜ்யத்தின் மூலைகளில் போய் ஒவ்வொரு சொட்டு சிறுநீர் பாய்ச்சி சுற்றுலா வந்து கம்பீரமாக படுத்துக் கொள்ளும்.

இந்த நேரங்களில் றக்கூன் துரியை ஒரு புதுவிதமான மூர்க்கத்துடன் தாக்கத் தலைப்பட்டது. அடிக்கடி வந்து தொல்லை கொடுத்தது. துரி அடக்க முடியாத ஆங்காரத்துடன் எழும்பி அதைத் துரத்திவிட்டு மீண்டும் வந்து படுத்துக்கொள்ளும். மறுபடியும் றக்கூன் வேண்டுமென்றே வந்து இதைச் சீண்டத் தொடங்கியது. அது வேகத்துடன் மரத்திலேறும் வல்லமை படைத்ததால் துரி தொண்டை வறளக் குரைத்தும், உறுமியும் தன் பாத்தியதையை நிலை நாட்டிவிட்டே திரும்பும்.

ஒரு நாள் தருணம் பார்த்து துரியினுடைய பரம எதிரியான றக்கூன் ஒரு வஞ்சகமான சூழ்ச்சி செய்தது. அதிகாலை ஐந்து மணி இருக்கும். ‘டங்டங்’ என்று வாளிச் சத்தம் கேட்டது. துரி வழக்கம்போல் தன் வாசல் வழியாக பாய்ந்து ஓடியது. அது அப்படி கடக்கும்போது அதன் கதவு ‘டக்’ என்று சத்தத்துடன் திறந்து மூடிக்கொள்ளு. றக்கூனும் இங்கும் அங்கும் ஓடுவது போல் பாய்ச்சல் காட்டிவிட்டு வழக்கம்போல் மரத்தில் ஏறாமல் வேலியிலே அது செய்துவைத்த ஒர் ஒட்டை வழியாக பாய்ந்து போனது. யுத்தத்தின் உத்வேகத்தில் அறிவு மழுங்க துரியும் அதைத் துரத்திக்கொண்டு ரோட்டைக் கடந்து ஒடியது. அந்த நேரம் பார்த்து வேகமாக வந்த ஒரு கார் துரியின் மேல் ஏறிவிட்டது.

நான் ஓடிப்போய் துரியை அள்ளி எடுத்தபோது அதனுடைய மூச்சு இழைபோல ஓடிக்கொண்டிருந்தது. அதன் பனித்த கண்கள் என்னையே பார்த்தபடி இருந்தன. எனது நீண்டகால நண்பனான துரியினுடைய கடைசி சுவாசம் என் கைகளில் மெதுவாக ஊர்ந்து முடிந்தது. துரியோதனன் என்ற தலை வணங்கா மன்னன் அறியாயமாக இடது தொடையில் அடிபட்டு இறந்ததுபோல துரியும் தனது இடது தொடை நசுக்கப்பட்டு என் மடியில் உயிரை நீத்தது.

என் மகனுக்கு உடனேயே டெலிபோனில் அறிவித்தேன். அன்று பின்னேரமே அவன் வந்துவிட்டான். ஒரு பழைய கம்பளியில் துரியை சுற்றி பின் தோட்டத்தில் ஒரு கிடங்கு தோண்டி அங்கே புதைத்தோம். கண்களை பிறங்கையால் துடைத்தபடி துரியை புதைத்த இடத்தில் அதன் ஞாபகமாக என் மகன் ஒரு ‘ஓக்’ செடியை நட்டு வைத்தான்.

அன்று இரவும் குப்பை வாளிச் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து தண்ணியில் சளசளவென்று அலம்பும் ஓசை வந்தது. வழக்கமாக நாய்க் கதவு ‘படக்’ என்று திறக்கும் ஓசையும் அதைத் தொடர்ந்து துரி சறுக்கி சறுக்கி ஓடும் சத்தமும் கேட்கும். இனிமேல் துரியின் உயிர்ப்பு என் காதுகளுக்கு கேட்கப்போவதில்லை.

ஓ! என் இனிய நண்பனே! நீயும் தொடையிலே அடிபட்டு இறக்கக்கூடும் என்கிற சிறு சமுசயமாவது எனக்கு இருந்திருந்தால் ‘துரியோதனன்’ என்கிற பேரை உன்மீது சுமத்த நான் பிரியப்பட்டிருக்க மாட்டேனே!

– 1995, வம்ச விருத்தி, மித்ரா வெளியீடு, முதல் பதிப்பு 1996

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *