துபாய்க்காரர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2020
பார்வையிட்டோர்: 4,920 
 

மிச்சமுள்ள ரெண்டு பிரட் பீஸ்ல ஜாமத்தடவி முழுங்கிட்டு ஏர்போர்ட்டுக்குக் கிளம்ப வேண்டியதுதான் பொறியாளர் சந்திரன் தீர்மானித்தார்.

அப்பாடா இந்த வந்தே பாரத் ப்ளைட் டிக்கெட் கெடைக்கறதுக்குள்ள நானும் என் நண்பனும் ஒருவழியாயிட்டோம். கொரோனாவால வேலையும் போச்சு. எப்படியோ ஊருக்குப் போய்ச் சேந்தாப் போதும். அப்பறம் திரும்ப வரதா வேணாமான்னு அங்கபோய் முடிவுபண்ணிக்கலாம்.

போன தடவை ஊருக்குப் போனபோது நடந்த நிகழ்வுகளை அசைபோட ஆரம்பிச்சேன். கையிலிருந்த காய்ந்த பிரட்டும் டீயும் தேனாய் இனித்தது..

ஊருன்னு நெனச்சவொடனயே புது உற்சாகம் பொறக்குது. எவ்வளவு பாசமான சொந்தக்காரங்க எனக்கு. நிசமாவே நான் நெறய புண்ணியம் பண்ணியிருக்கேன்.

ஏர்போர்ட்டிலேந்து வந்திறங்கி ஊருக்குள்ளார என் கார் நுழைஞ்ச வொடனேயே மக்கள் பாசமா திண்ணைக்கு வந்து பாக்க ஆரம்பிச்சுடுவாங்க. தெருவுல நடக்க ஆரம்பிச்சா மொத வீட்லேந்து கடைசி வீடு வர

என்ன தம்பி எப்ப வந்தீங்க. சுகமா? உள்ள வந்திட்டுப்போங்க போன்ற உபசரிப்புகள் தான். அக்கம்பக்கத்தாரே இப்டின்னா சொந்தக்காரங்களுக்கு கேக்கவா வேணும்.

போனதடவ தேங்குளம் அத்தை வீட்ல இட்லி சாப்பிட்டுட்டேன்னு சித்தப்பா கோவிச்சுக்கிட்டாரமா. அடுத்தமுறை அவுங்கவீட்ல மறக்காம விருந்து சாப்பிட்டுறு. சோத்தையும் உட்டுட்டு சொல்லையும் ஏன் கேக்கணும். அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ஆனாலும் இந்த சாப்பாட்டு விசயம் ரொம்ப கஷ்டம். ஊருக்குக் கெளம்பறதுக்குள்ள ஒவ்வொரு முறையும் ஜீன்ஸ் டைட் ஆயிடும்.

தெக்கு வீட்டு ஆச்சி எப்டியிருக்கோ தெரியல. போனதடவ ஏன்சாமி சீமயில வேலபாக்குதன்னு சொன்னாவ. இந்தக் கிழவிக்கு ஒரு வெத்தலப் பொட்டி வேங்கிட்டு வரமாட்டியானு கேட்டிச்சு. பாவம் இந்த முறை வாங்கிக் குடுத்துடணும்.

ஒவ்வொருதடவையும் பாத்துப் பாத்து கிப்ட் வாங்கிச் சேத்துட்டுக் கிளம்புவோம். இந்தத்தடவ எதிர்பாராத விதமா போறதால ஒண்ணும் வாங்கல. எப்படியும் போய்ச்சேந்தாப் போதும்னு தோணிப்போச்சு.

காருக்குள்ள ஏறியதிலிருந்து இரண்டுதடவை சானிடைஸர் போட்டாச்சு. பிறகும் கார் டிரைவர் எங்க ரெண்டுபேரையும் பலத்த சந்தேகத்தோடயே தீவிரவாதியைப் போல பார்க்கிறார். மறந்தும் கூட இருமிவிடக் கூடாது. அவ்ளோதான். ஒருவழியா விமானநிலைத்தை அடைந்து ஒவ்வொரு நிலைகளையும் கடந்து விமானத்தில ஏறி உக்காரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிப்போச்சு. இரண்டுபேரும் ஒரே விமானத்தில் தான் பயணிக்கப் போறோம். அவன் மும்பையில் இறங்கிவிடுவான். நான் சென்னையில் இறங்கி கோவில்பட்டி பக்கத்துல உள்ள எங்க கிராமத்துக்குப் போகணும்.

இறங்கினவொடனே எங்க போகமுடியும். அதான் வனவாசம் மாதிரி தனிவாசம் வச்சிருவாங்களே. இராமருக்கு பதினாலு வருசம்னா எங்களுக்கு பதினாலு நாள்.

பக்கத்து சீட்டில் பேச்சுத் தொணைக்கு யாரும் இல்லை. விமானப் பணியாளர்களும் முழுவதும் சீருடையை மறச்சி வெளியுறை அணிஞ்சிருக்காங்க.. ஏதோ தமிழ் பேசற நபர் இதென்ன எல்லாரும் அரிசி மூட்டைக்கு உறை தச்சுப்போட்டதுபோலப் போட்டிருக்காங்களே எனச் சொல்றது கேக்குது.

எப்படியோ திரும்பவும் ஊரைப் பத்தி யோசிக்கலாம். நேரம் போயிடும்.

யோசிக்க ஆரம்பிச்சேன். ஊர்ல இருக்கறவங்கயெல்லாம் உழைப்பாளிங்க, பலசாலிங்க. அங்க இந்த கொரோனா பிரச்சினை அதிகமா இருக்காது. அம்மா கூட போன்ல பேசும்போதும் பெரிசா ஒண்ணும் சொல்லலியே. நாமளும் இந்தத் தடவ மறுக்காம கல்யாணம் செஞ்சிறணும். ஒவ்வொரு தடவ ஊருக்கு வரும்போதும் இப்ப என்ன அவசரம்னு தட்டிக்கழிச்சேன். அப்பாவும் அனுப்பற பணத்த வச்சி வீடுகட்ட ஆரம்பிச்சார். வீடு முடியற நிலையிலதான் இருக்கு. மாடி கட்டுமானம் கொஞ்சம் பாக்கி இருக்குனு சொன்னதா ஞாபகம். அதுக்கப்புறம் உன் கல்யாணத்த புதுவீட்லயே ஜாம் ஜாம்னு முடிச்சிடலாம்னு சொன்னார். ஜானகியத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும். மொதல்லயே ரெண்டு குடும்பமும் முடிவு பண்ணி வச்ச வரன்தான். தூரத்துச் சொந்தம்ங்கறதால அவ்வளவு பரிச்சயம் இல்ல. டிகிரி படிச்சிருக்கான்னு பேரு. அவ அவ்வளவு சோசியல் கெடையாது. இனிமே கொஞ்ச நாள் வீட்ல சும்மாதானே இருக்கப்போறோம். அப்போ போன் நம்பர வாங்கி பேசிப் பழகிற வேண்டியதுதான். முக உறையும்தாண்டி பின் சீட்டிலிருந்து சன்னமாக என் நண்பனின் குரல்.

பாயி சுனோ. ஆமாம் அவன்தான் ஹிந்தியில் என்னை அழைக்கிறான். இருக்கைகளுக்கு இடையிலுள்ள இடைவெளி வழியே அவன் தொடர்ந்தான். ஹிந்தியில்.

வீட்டுக்குப் போனவுடனே கல்யாணம் முடிச்சிரு. அல்லது வாழ்க்கை போரடிச்சுடும். பாரு எனக்காக என் நாலு வயசு ஜில்லு பாப்பா காத்திட்டிருப்பா. பொழுது போகறதே தெரியாது. வாயாடி. மறக்காம அடிக்கடி போன் பண்ணி பேசு. எல்லாத்துக்கும் சரி என மண்டயை ஆட்டினேன். தொடர்ந்து பேசுவது பெரிய இடைஞ்சல். வாயையும் மூக்கையும் மூடி நாங்கள் அணிந்து வந்த முகக் கவசத்துடன். தொப்பி போன்று தலையில் அணியும் கவசம் வேறு.அதில் கண்ணாடி போன்ற திரையின் வழியேதான் வெளியில் பார்க்கவே முடிகிறது.

ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த குரல் ஒலிப்பேழையில் விமானம் மும்பையில் தரையிறங்கப் போவதை அறிவித்தது. அப்பாடா ஒருவழியாக துபாயிலிருந்து கிளம்பி இந்தியாவில் தரையிறங்கப்போறோம். நண்பனுக்கு கையசைத்து வாழ்த்து கூறி அனுப்பியபின் திரும்பினால் மிச்சமிருப்பவர் என்னையும் சேர்த்து நான்குபேர்தான். என்ன அநியாயம். இவ்வளவுபெரிய விமானத்தில் பயணிக்க ஆளில்லை. அதனால்தான் ஒரே விமானத்தில் ஏற்றிவிட்டார்கள் போல.

சிலமாதங்களுக்குள் நிலைமை எவ்வளவு தலைகீழாக மாறிவிட்டது. மனதுள் பேச ஆரம்பித்தேன். விமானத்தின் இறக்கைகளையே பார்த்துக்கொண்டு வந்த எனக்கு ஏதோ நானே கைவிரித்து வானத்து மேகங்களைக் கிழித்துக்கொண்டு பறப்பதுபோன்ற உணர்வு. சிறிது நேரத்திற்குப்பின் அறிவிப்பைத் தொடர்ந்து விமானம் கீழிறங்க ஆரம்பித்தது. கோடுபோல் தெரிந்த சாலைகள் சிறிதுசிறிதாய் பெரியதாகிக் கொண்டே வந்தன. எறும்பு போல் தெரிந்த பெரும் கட்டிடங்களெல்லாம் இப்போது தெளிவாய்த் தெரிகின்றன. என்ன ஆச்சரியம். உயரத்தில் பறந்துகொண்டிருக்கும்போது எல்லாமே என் கைக்குள் அடக்கம் எனத் தெரிந்த இந்த நகரம் நான் இறங்க ஆரம்பித்தவுடன் பிரம்மாண்டமாய் மாறிக்கொண்டே வருகின்றது. விமானத்திலிருந்து இறங்கியவுடன் இந்த பிரம்மாண்ட நகரம் என்னை ஒரு சிறு எறும்பாய்ப் பாவித்துச்சிரிக்குமா. இதுதான் நிதர்சனம்.

உலகமே என் கைக்குள் என நினைத்த வல்லரசுகள் சுதந்திரமாய்ப் புவிதாண்டிப் பறந்து ஏதேதோ ஆராய்ச்சி செய்து உலகம் என்வசம் என நினைத்துக்கொண்டிருந்த வேளையில் இப்படியொரு நிலை. நம் உடல் தவிர எதுவும் நமக்குச் சொந்தமில்லை என்பதுபோல். சுதந்திரத்தின் அர்த்தத்தைக் கற்றுக்கொடுக்க இயற்கை நம்மை வீட்டுச் சிறையில் அடைத்துவிட்டதோ. எதற்கெடுத்தாலும் பயம், யாரைத் தொடுவதற்கும் பயம். மனிதனைப் பொறுத்தவரை சுதந்திரம் எனும் சொல் இனி வரலாற்றில்மட்டுமே இடம்பெறும் போலும்.

சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கியாகிவிட்டது. நேராக வீட்டிற்குச் செல்லமுடியாது. தனிமைவாசத்திற்குப் பின்தான் ஊர்போகமுடியும். ஓட்டலை அடைந்தவுடன் அந்தத் துன்பத்திலும் ஒரு சந்தோசம். நான் தனியாக இல்லை இந்த ஓட்டலில். என்னைப்போல் எத்தனைபேர்.

என் அறைக்கு வெளியே வர எத்தனித்தவுடன் விசாரிப்புகள் தொடங்கியது.

என்ன சார். துபாயிலேந்து வறீங்களா. எந்த ஊரு உங்களுக்கு. நான் நேத்தைக்குத்தான் சிங்கப்பூரிலேந்து வந்தேன். என்னசார் பொழப்பு இது. கஷ்டப்பட்டு படிச்சேன். வெளிநாட்டுக்குப் போயி நாலு காசு பாக்கலாம்னா ஆண்டவனுக்கே பொறுக்கல. நம்மளாவது பரவாயில்ல. அந்த கடைசி ரூமுல இருக்கறவரு பாவம் குடும்பத்தோட அமெரிக்காவிலேந்து வந்துட்டாராமா. இருந்த சாமான்கள அப்பப்படியே குடுத்துட்டு முக்கியமானதமட்டும் எடுத்துட்டுவந்திட்டாரு. ஊரு தூத்துக்குடி போல. அவரும் என்னயமாதிரி பரம்பரைத்தொழில்தான் பண்ணப்போறேன்னு சொன்னாரு. அவுங்க பல தலைமுறைக்கு துணி வியாபாரம் செஞ்சவங்க போல. இவர் படிச்சு அமெரிக்கா போயிட்டாரு. அவர் அப்பா காலத்துக்கப்பறம் கடையெல்லாம் பாத்துக்க ஆளில்லாம வித்துட்டாங்களாம். இப்போ நான் திரும்ப வாங்கி சின்னதா ஆரம்பிச்சு விரிவுபடுத்தணும்னாரு. நான் சொந்த ஊர்ல அப்பாவுக்கு உதவியா இனி மாவுமில்ல பாத்துக்கப் போறேன். காசுகொஞ்சம் கம்மியா வந்தாலும் பாதுகாப்பா வாழலாமில்லயா. இன்னொருத்தன்கிட்ட கைகட்டி நிக்கவேண்டியதில்லையே.

என்னசார் நான் பேசிக்கிட்டே போறேன். நீங்க ஏதோ யோசனையிலேயே இருக்கீங்களே. மெதுவா ஓய்வு எடுத்துட்டு இந்தத் தனிவாசத்துல அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிங்க. நாளைக்குப் பாக்கலாம். அவர் சென்றுவிட்டார்.

நான் யோசிக்க ஆரம்பித்தேன். இது எவ்வளவு பெரிய கேள்வி. இவ்வளவு நேரம் நான்கடந்த காலத்தப் பத்தி மட்டுமே யோசிச்சேன். ஆனாலும் என்னயப் பொறுத்தவரை இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. அப்பா ஏற்கனவே விவசாயம் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கார். நான்தான் ஏதோ ரொம்பப் படிச்சுட்டேங்கற பெருமிதத்துல வயல் பக்கம் போனதேயில்ல. போனதடவ கூட அப்பாகிட்ட நீங்க எதுக்கு வயல்வேல பாத்து கஷ்டப்படறீங்க. பேசாம நிலபுலன வித்துட்டு நிம்மதியா உக்காந்து சாப்பிடுங்க. நான் உங்களுக்கு வேணுங்கிற பணம் மாசாமாசம் அனுப்பறேன்னு சொன்னேன்.

அடபோடா. நம்ம நிலம் என்னயப் பெத்த ஆத்தாளுக்குச் சமானம். இத்தன வருசமா நம்மள வாழ வச்சது அது. அத எதுக்காகவும் விக்க மாட்டேன்னு சொன்னார். ரிங்டோன் என் நினைப்பைக் கலைத்தது. ஹலோ என்றவுடன் மறுமுனையில் பாயி… ஆம் என் மும்பை நண்பன்தான். அவன் தங்கியிருக்கும் ஓட்டலில் பேச்சுத்துணைக்கு யாரும் இல்லையாம். போரடிக்கிறதாம். வீட்டிற்கும் போகமுடியாது. ஏதாவது பேசு என்கிறான்.

நான் நிதானமாகச் சொன்னேன். நான் ஊருக்குப்போயி என்ன செய்யணும்னு தீர்மானிச்சிட்டேன். ..விவசாயம் தான்.. மறுமுனையில் பதிலில்லை.

நான் தொடர்ந்தேன். விவசாயக்குடும்பம் அப்டின்னு எல்லாரும் முத்திரை குத்தி கூப்பிடறது எனக்குச் சுத்தமா பிடிக்கல. அத மாத்தறதுக்குத்தான் கஷ்டப்பட்டு படிச்சு துபாய்ல வந்து வேலபாக்கறேன். இப்போ எல்லாரும் எங்க வீட்ட துபாய்க்காரர் வீடுன்னுதான் அடையாளம் காட்டுவாங்க அந்த அளவு பிரபலம். அப்டின்னு பலதடவ உன்கிட்ட நான் சொல்லியிருக்கேன். ஆனா இப்பதான் எனக்கே புரிஞ்சது.

இயற்கைய நாம மதிக்காம நடந்துக்கிட்டதாலதானோ என்னவோ நம்ம எல்லாரையும் தீண்டத்தகாதவங்க மாதிரி அது நடத்துது. சுதந்திரமா பறவைகளையும், விலங்குகளையும் நடமாட விட்டுட்டு நம்மள வீட்டுச் சிறையில அடைச்சிருச்சு. இயற்கையா காத்தக்கூட சுதந்திரமா சுவாசிக்க முடியாம முகக்கவசம் போட வச்சிருச்சு. போதாதுக்கு வெட்டுக்கிளி படை வேற. அதனால என்னய வளத்துவிட்ட நிலத்த மதிச்சு நான் விவசாயம் பண்ணப்போறேன்.

அறையின் சன்னலுக்கு வெளியே அந்த வழியாய்ப் பரந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கண்ணுக்குத் தெரியாக் கொரோனா பட்டதாரிவிவசாயி சந்திரனை மன நிறைவுடன் வாழ்த்தி விட்டுத் திரும்பாமல் சென்றுவிட்டது.

இக்கதையை நீங்கள் படித்துமுடிக்குமுன் இயற்கையோடு இயைந்த வாழ்வை நமக்கு உணர்த்த வந்த கொரோனாவெனும் மரணத்தொற்று மாண்டு சென்றிருக்கும் மீண்டும் திரும்பமுடியா உலகிற்கு. மகிழ்வோடு வாழ்வோம். புதிய உலகு படைப்போம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *