வீட்டுக்குள் நுழைந்த போது வழமையாக கணணிக்கு முன்னால் உட்கார்ந்து இன்ரநெட்டில் உலகம் முழுவதும் சட்டன் செய்யும் என் கடைக்குட்டி வரவேற்பறையில் France 98 (உலக வெற்றிக் கிண்ண கால் பந்துப் போட்டி) பார்த்துக் கொண்டிருந்தான். நான் வந்ததே தெரியாத அளவுக்கு விளையாட்டு வீரர்களிலும் அவர்களிடம் உதைபடும் பந்திடமும் தன்னை மறந்து ஊன்றிப் போயிருந்தான்.
அவனுக்கருகில் இருந்து France 98 ஐப் பார்த்துக் கொண்டிருந்த என் கணவர் மட்டும் திரும்பி கேள்விக் குறியுடன் என்னைப் பார்த்தார்.
– என்ன வேலை முடிஞ்சு வழக்கம் 8.10 க்கே வாறனீர்..? இண்டைக்கென்ன..? அதுவும் இந்த இரவு நேரம் 9 மணி தாண்டி வருகிறீர்..! – என்பது போல் இருந்தது அவரின் பார்வை.
நான் மெல்லிய சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு நேரே எனது அறையுள் போய் உடைகளை மாற்றி குளியலறைக்குள் புகுந்து கொண்டேன். தண்ணீரை அளவான சூட்டில் விட்டு சவரைப் பிடித்த போது உடம்புக்கு இதமாக இருந்தது. ஆனாலும் மனதுக்குள் இன்னும் புழுக்கமாகவே இருந்தது.
நான் வேலை முடிந்து என் சக வேலையாட்களுடன் பேரூந்துக்காக விரைந்த போது எனது ஸ்வெபிஸ்ஹால் நகரம் கோடைகாலத்துக்கே உரிய கலகலப்புடன் தெரிந்தது. ஆங்காங்கு உணவுச்சாலைகளின் முன்பும், சிற்றுண்டிச்சாலைகளின் முன்பும், ஐஸ்கிரீம் கடைகளின் முன்புமாக பெரியவர்கள், சிறியவர்கள், காதலர்கள், நண்பர்கள் என கும்பல் கும்பலாக இருந்து எதையாவது சுவைப்பதுவும், கதைப்பதுவும் சிரிப்பதுவுமாக இருந்தார்கள். வீதிகள் கண் பார்த்துக் கதை பேசும், உதட்டோடு உதடுரசும், இடைவளைத்து உடல் உரசித் தமை மறந்து செல்லும் ஜோடிகளும், ஆங்காங்கு சிறுவர்கள் சிறுமியர்களும் என்று நிறைந்திருந்தது.
விருட்சமாக விரிந்திருந்த கஸ்தானியன் மரங்களில் வெள்ளைப் பூக்கள் கொத்தாகப் பூத்திருந்தன. இன்னும் ஒரு மாதத்தில் கஸ்தானியன் காய்கள் காய்த்து விடும்.
வீதியோரங்களில் சிவப்பாய், வெள்ளையாய், மஞ்சளாய்.. என்று பல வர்ணங்களில் மலர்கள் சிரிக்க, இதமான காற்று உடலை வருட.. – வேலை முடிந்து விட்டது. இனி வீட்டுக்குத்தானே..! – என்ற திருப்தியில் நடக்கையில் சந்தோசமாக இருந்தது. கதையும் பகிடியும் சிரிப்புமாய் வந்த நானும் என் சக வேலையாட்களும் பேரூந்து தரிப்பு நிலையத்துக்கு அருகில் வந்ததும் பிரிந்து எமக்கெமக்கான பேரூந்துகளை நோக்கி நடந்தோம்.
மைக்கல் தேவாலய மணிக்கூடு எட்டு முறை அடித்து ஓய்ந்தது. பக்கத்திலிருந்த பெயர் தெரியாத மரத்தின் வெள்ளைப் பூக்கள் என்னை ஈர்த்தன. அந்தப் பூக்களில் லயித்துப் போய் நின்ற என் மனதையும், கண்களையும் வலுக்கட்டாயமாக பேரூந்தின் பக்கம் திருப்பி பேரூந்தில் ஏற முற்பட்ட போதுதான்….. பேரூந்து நிலையத்துக்கு அருகில் வீதியோரமாக இருந்த மரவாங்கிலில் மல்லாக்காகப் படுத்திருந்த அவன் என் கண்ணில்பட்டான். அவன் படுத்திருந்த விதம் வித்தியாசமாகவே இருந்தது.
அவன் வேறு யாருமல்ல. எனது நாட்டவன். எனக்கு என்ன செய்வதென்று தெரியாத தடுமாற்றமாய் இருந்தது. சொற்ப விநாடிகளில் எனது பேரூந்து புறப்படப் போகிறது. என்ன செய்வது..? எனது நாட்டவன் ஒருவன் அப்படியிருக்க பாராமுகமாய் சென்று விடவும் மனசு ஒப்புக் கொள்ளவில்லை.
என்ன பிரச்சனையாக இருக்கும்..? அவன் போக வேண்டிய இடத்துக்கான பேரூந்து வந்திருந்தும் அவன் அதைப் பொருட்படுத்தாது ஏன் அப்படி…..? ஏதாவது சுகவீனமோ..? எனக்குள் குழப்பமான கேள்விகள் எழுந்தன.
என்னைச் சட்டை செய்யாது எனது பேரூந்து புறப்பட்டு விட்டது. சற்று நேரத்துக்கு முன்னர் இருந்த சந்தோசத்தில் ஏதோ குறைந்து விட்டது போலிருந்தது. நான் அந்த வாங்கிலை நோக்கி நகர்ந்தேன். அருகில் சென்றதும் அவன் என்னைக் கண்டு திடுக்கிட்டு தட்டுத் தடுமாறி எழும்பினான். கையில் இருந்த பியர் பேணியை அவசரமாய் பின் பக்கம் மறைத்தான். அக்கா….! என்று சங்கடப்பட்டான்.
எனக்கு அவனது கோலம் ஆச்சரியமாகவும் நம்பமுடியாததாகவும் இருந்தது. பத்து வருடங்களாக நான் வாழும் இந்த ஸ்வெபிஸ்ஹால் நகரில் என்னையும் என் கணவரையும் எனது பிள்ளைகளையும் விட்டால் மருந்துக்குக் கூட வேறு தமிழர்களே இருக்கவில்லை. இரண்டு வருடங்களின் முன்புதான் 1989 வரை அமெரிக்க இராணுவத்தினரின் முகாமாக இருந்த டோலன்பறக்ஸ் அகதிகள் முகாமாக்கப்பட்டு அங்கு பல்வேறு நாட்டு அகதிகளோடு நாற்பது தமிழர்களும் குடியமர்த்தப்பட்டனர். அவர்களுள் இப்போ என் முன்னால் பியர் பேணியோடு நிற்கும் கோபுவும் ஒருவன்.
எமது நகரத் தினசரிப் பத்திரிகையொன்றில் நாற்பது தமிழர்களின் வரவு செய்தியாக வந்த போது – எமது நகரில் தமிழரா..! – என்று மனசு சந்தோசத்தில் துள்ள குடும்பமாகச் சென்று அவர்களைச் சந்தித்தோம். கோபுவையும் அன்றுதான் முதன் முதலாகச் சந்தித்தோம். மிகவும் அடக்கமானவனாகக் காணப்பட்டான். அவன் தாயகத்திலிருந்து புறப்பட்டதிலிருந்து பாங்கொக், உக்ரையின் என்று ஏஜென்சியால் அலைக்கப்பட்டு உக்ரையின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு.. சில வருடங்களோடு தனது வாழ்க்கையின் சில வசந்தப் பொழுதுகளையும் தொலைத்திருந்தான். அவனிடம் மட்டுமல்ல. வந்திருந்த நாற்பது பேரிடமும் விரக்தியான சோகமான உண்மைக் கதைகள் பல இருந்தன. அவர்களுக்குள் இவன் படித்த பண்பான குடும்பத்தில் இருந்து வந்த ஒருவனாகவே தெரிந்தான். தந்தை பாடசாலை அதிபர் என்றான்.
அவனைப் பின்பும் பலமுறை சந்தித்திருக்கிறேன். ஓரளவு தேறியிருந்தான். பொறுப்புள்ளவனாக ஊர்க்கனவுகளைச் சுமந்தவனாக வேலை தேடிக் கொண்டிருந்தான்.
சில மாதங்களின் பின் மீண்டும் ஒரு முறை சந்தித்த போது பிற்சாக் கடை ஒன்றில் நிலத்தைக் கழுவிக் கொண்டிருந்தான். என்னைக் கண்ட போது வெட்கப்பட்டு ஒழித்தான். – இதிலை ஒண்டும் வெட்கமில்லை. அடுத்தவன் கையை எதிர்பார்க்காமல் அடுத்தவனை ஏமாற்றாமல்.. யாருக்கும் தீங்கு விளைவிக்காத.. உங்களாலை முடிஞ்ச வேலையை நீங்களே செய்து பணம் சம்பாதிக்கிறது ஒண்டும் வெட்கமான விசயமில்லை. – என்றேன்.
அதன் பின்னர் – அவன் நிலம் கழுவிக் கொண்டிருக்கும் போது என்னைக் கண்டாலும் கூச்சப்படாமல் – அக்கா – என்று கூப்பிட்டு வணக்கம் சொல்லுவான்.
அப்படிப் பண்போடும் மரியாதையோடும் பழகும் அடக்கமான பொறுப்பான கோபுவைத் தான் எனக்குத் தெரியும். இன்று இப்படி குடிபோதையில் தோய்ந்து போயிருந்த கோபு எனக்கு முற்றிலும் புதியவன்.
– என்ன கோபு..? ஏன் இன்னும் வீட்டை போகேல்லை. உங்கடை பஸ்ஸில்லோ வெளிக்கிடப் போகுது..?
இல்லை.. அக்கா.. போப்போறன்.. என்று தடுமாறியவன் – நீங்கள் போங்கோ அக்கா நான் அடுத்த பஸ்ஸிலை போறன். – என்றான்.
– இல்லை.. மினக்கடாமல் இப்பவே ஓடிப் போய் அந்த பஸ்ஸிலை ஏறி வீட்டை போய்ச் சேருங்கோ.. – என்றேன்.
அவன் எனக்குத் தெரியக் கூடாது என்ற பிரயத்தனத்துடன் கையில் இருந்த பியர் பேணியை மெதுவாக அவனருகில் நாட்டப் பட்டிருந்த குப்பை வாளியினுள் போட்டான். நான் கண்டும் காணாத மாதிரி நின்றேன். அதற்கிடையில் அவனது பேரூந்தும் போய்விட்டது.
– பார்த்திங்களே இப்ப பஸ்ஸை விட்டிட்டிங்கள். –
– வீட்டை போயும் என்னத்தைச் செய்யிறதக்கா..? –
– இந்த ரோட்டிலை நிண்டு மட்டும் என்ன செய்யப் போறிங்கள்..?
நாளைக்கு வேலையில்லையோ..? –
– இல்லை நான் வேலையை விட்டிட்டன். –
– ஏன்..? அப்ப காசுக்கு என்ன செய்யிறிங்கள்..?
அம்மாக்கு காசு அனுப்பினனிங்களே..? அக்கான்ரை தாலிக்கொடியை அத்தானுக்கும் தெரியாமல் அடைவு வைச்சில்லே உங்களை இங்கை அனுப்பினவையள். மறந்திட்டிங்களோ..? –
அவன் தள்ளாடியபடி மௌனமாய் நின்றான்.
நான் மேற்கொண்டு எதுவும் கேளாது அவனை ஒரு ரக்சியில் ஏற்றி அவனது வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். இரவு நேரமாதலால் ஒரு மணி நேரங்கழித்தே எனது அடுத்த பேரூந்து வந்தது. வழியெல்லாம் ஏன் இவன் இப்படியானான்..? என்ற கேள்வி என்னைக் குடைந்து கொண்டேயிருந்தது. அவன் மீது கோபமாகக்கூட இருந்தது. பேரூந்து தரிப்பு நிலையத்தில் எத்தனை பேர் பார்த்துக் கொண்டு நின்றார்கள். எல்லாருக்கும் அவன் எனது நாட்டவன் என்பது புரிந்திருக்கும். அவமானம் அவனுக்கு மட்டுமா? அல்லது அவனுக்கும் எனக்கும் மட்டுமா? எங்கள் நாட்டுக்கும் அல்லவா..! தமிழரையே கேவலமாக நினைப்பார்களல்லவா..! ஏன் இப்படி எம்வர்கள் மாறிப் போகிறார்கள் என்று யோசித்ததில் எனக்கு எரிச்சலாகவும் மனசுக்குள் புகைச்சலாகவும் இருந்தது.
வெளிநாட்டுக்கு வந்து எமது இளையவர்கள் கெட்டுப் போகிறார்கள் என்ற சிலரின் வாய்ப்பாட்டை உண்மையாக்குவது போலல்லவா இவன் நடந்து கொண்டிருக்கிறான். குளித்து முடித்து வெளியில் வந்த போது கால் பந்து மிகவும் சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருந்தது. தேநீர் தயாரித்து கணவருக்குக் கொடுத்த போது கண்களை தொலைக்காட்சியில் இருந்து விலத்தாமலே தேநீரை வாங்கிச் சுவைக்கத் தொடங்கினார்.
கோபு ஒழுங்காக வீடு போய்ச் சேர்ந்து விட்டானா என்பதை அறிந்து கொள்வதற்காக, நான் எனது தேநீரை உறிஞ்சிய படி தொலைபேசியில் கோபுவின் வீட்டு இலக்கத்தை அழுத்தினேன். அவனோடு கூட வாழும் அவனது நண்பன்தான் அழைப்பில் வந்தான். – கோபு வாந்தி எடுத்து விட்டு படுத்துவிட்டான். – என்றான்.
அவனிடம் கோபுவைப் பற்றி விசாரித்த போது முதலில் சங்கடப்பட்டு எதையும் சொல்லாது மழுப்பியவன் பின்னர் சொல்லத் தொடங்கினான் – என்னத்தைச் சொல்லுறது அக்கா…! இவனுக்கு அங்கை ஊரிலை ஒரு காதலி இருக்கிறாள். அவளை இங்கை வந்த உடனை கூப்பிடுறதாச் சொல்லிப் போட்டுத்தான் இவன் இங்கை யேர்மனிக்கு வந்தவனாம். பாங்கொக் மொஸ்கோ எண்டு அலைஞ்சதிலை அங்கை அவளுக்கு ஒழுங்கா கடிதமொண்டும் போகேல்லை. பிறகு இரண்டு வருசம் உக்ரையினிலை யெயில்லை இருந்த விசயம் உங்களுக்குத் தெரியும்தானே. அந்த நேரம் இவனைப் பற்றி ஒரு தகவலும் அங்கை ஒருத்தருக்கும் கிடைக்கேல்லை.
அவன் ஒரே அவளின்ரை நினைவாத்தான் இருந்தவன். ஆனாலும் அவள் இவனை நம்புகிறாளில்லை. அவள் நினைச்சிட்டாள் இவன் இவ்வளவு காலமும் இங்கை யேர்மன்காரியோடை சுத்திப் போட்டு இப்ப அலுத்துப் போக தனக்கு ரெலிபோன் அடிக்கிறான் எண்டு. இவன் ரெலிபோன் அடிச்சாலே – வையடா ரெலிபோனை.. – எண்ட பதில்தான் வருது.
நானும் இவனுக்காண்டி அவளோடை கதைச்சுப் பார்த்தன். ம்கும்… சரிவரேல்லை.இவனுக்கு தொலைபேசிக் கட்டணம் தலைக்கு மேலே வந்ததுதான் மிச்சம். இப்ப இங்கையிருந்து காட் கிடைச்ச வேறை ஒருவன் அங்கை போய் அவனுக்கும் அவளுக்கும் கல்யாணம் நிச்சயமாகிட்டுதாம். அந்த விரக்தியிலைதான் இவன் இப்படியாப் போனான்…..
எனக்கு கோபுவின் நிலை புரிந்தது. ஆனால் புலம் பெயர்ந்தவர்களின் இப்படியான அவலங்களை தாயக உறவுகளுக்கு எப்படிப் புரிய வைக்கலாம் என்பதுதான் புரியாமல் இருந்தது.
– 10.4.1999