தீர்ப்புக்கு பின்னால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 23, 2023
பார்வையிட்டோர்: 1,213 
 

கோர்ட்டில் நீதிபதி அந்த தீர்ப்பை வாசித்ததும், காயத்ரியிடம் வந்த ரகுபதி ரொம்ப தேங்க்ஸ் மேடம், அவங்க கிட்ட இருந்து என் குழந்தையை வாங்கி கொடுத்ததுக்கு. மெல்லிய தலையாட்டலுடன் அவன் நன்றியை ஏற்றுக்கொண்ட காயத்ரி ஓ.கே மிஸ்டர் ரகுபதி மத்ததை எல்லாம் என்னோட ஜூனியர்ஸ் பார்த்துக்குவாங்க, நான் கொஞ்சம் அவசரமா வெளியே போக வேண்டியிருக்கு, வரட்டுமா, அவனிடமிருந்து விடை பெற்றவள் தன் ஜூனியர்ஸிடம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டு தன் கார் நிறுத்துமிடம் நோக்கி வந்தவள். தன் ரிஸ்ட் வாட்சில் மணி

பார்த்தாள் மணி 4. 30 காட்டியது, சரியாக இருக்கும் கல்பனாவுக்கு ஸ்கூல் விட்டிருக்கும்.

கோர்ட்டில் எவ்வளவு பெரிய கேஸ் நடந்து கொண்டு இருந்தாலும் தன் மகளை ஸ்கூல் விட்டவுடன் வீட்டிற்கு கூட்டி வரும் வேலைதான் மிக முக்கியம் காயத்திரிக்கு. அந்த அளவுக்கு மகள் கல்பனாவின் மேல் பற்றை வைத்திருந்தாள்.

தன் மகள் கல்பனாவை பள்ளியில் இருந்து வீட்டுக்கு கூட்டி வரும் வழியில் இருந்த காய்கறிக் கடையில் காய்களை பொறுக்கி எடுத்து எடை போடுவதையே உற்று பார்த்து கொண்டிருந்த காயத்ரி சற்று சலனப்பட்டு தன் கார் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை பார்க்க காருக்குள் உட்கார்ந்திருந்த தன் மகளிடம் யாரோ ஒரு பெண் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள்.

நூத்து பத்து ரூபாய் ஐம்பது காசு, எடை போட்டுக்கொண்டிருந்த பெண் சொல்வதை காது கொடுத்து கேட்காமால் சட்டென தன் பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து கொடுத்து காய் கூடையை எடுத்துக்கொண்டு விறு விறு வென தன் கார் நிற்குமிடம் வந்தாள்.அதற்குள் அந்த பெண் அங்கிருந்து நகர்ந்து விட இவள் தன் மகளிடம் யார் கூட பேசிகிட்டு இருந்தே? கோபத்தை குரலில் காட்டினாள்.

இல்லே அந்த ஆண்ட்டி எந்த ஸ்கூல்ல படிக்கிறே? அப்படீன்னு கேட்டு கிட்டு இருந்தாங்க, நான் பதில் சொல்லி கிட்டு இருந்தேன். அப்படி எல்லாம் அறிமுகம் இல்லாதவங்க கிட்டே பேச்சே வச்சுக்க கூடாது புரிஞ்சுதா? அம்மா இந்த சாதாரண விசயத்துக்கு இவ்வளவு கோப்படுவதை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் கல்பனா.

மகள் சொன்னதில் சமாதானமடைந்திருந்தாலும், மனசுக்குள் சின்ன கேள்விக்குறி காரை ஸ்டார்ட் செய்வது வரை அது உறுத்தியது. யார் அந்த பெண், இத்தனை பேர் இங்கு வந்தும் போய்க்கொண்டிருக்க தன் பெண்ணிடம் வந்து அதுவும், காருக்குள் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் வந்து பேர் கேட்க வேண்டுமா?

இரண்டு மூன்று நாட்கள் ஓடியிருக்கும், குளித்து விட்டு முன் அறைக்கு வெளியில் இருந்த பால்கனியில் முடியை உலர்த்த வந்தவள் கீழிருந்த வண்டி பாதையை பார்க்கும்போது இவள் இருந்த வீட்டையே பார்த்து கொண்டிருந்தாள் ஒரு பெண். ‘அந்த பெண்’ சட்டென்று இவளுக்கு இந்த பெண்ணை எங்கோ பார்த்தது போலவே தெரிந்தது. மனசு கருக்கென்றது. யார் இவள்? பார்த்தால் நாகரிகமானவளாக தெரிகிறாள், ஆனால் வீதியில் நின்று வீட்டையே முறைத்து பார்த்துக்கொண்டிருக்கிறாளே.

இறங்கி போய் யார் என்று விசாரிப்போமா? வேண்டாம், உண்மையிலேயே வேறு எதற்கோ நின்று கொண்டிருந்தாள் நாம் போய் கேட்டால் வீணான பிரச்சினை வரும். என்னதான் சட்டம் படித்த வக்கீலாய் இருந்தாலும், இந்த கேள்விக்கு பதில் எப்படி சொல்வது?

பார்ப்போம்.. தன் மகள் தயாராகி விட்டாளா? என்று பார்ப்பதற்காக உள் அறைக்கு வந்தவள் மகள் பள்ளி சீருடையுடன் புறப்படுவதற்கு தயாராய் இருந்தாள்.

சாரி டியர் ஒரு ஃப்வைய் மினிட்ஸ் கொடு, அம்மா ரெடியாகிட்டு வந்திடறேன், நீ ஷூ போட்டுட்டு வெளியே கார்கிட்டே நில்லு, ஆனா காம்பெளண்டை விட்டு வெளியே போயிடாதே, சட்டென உள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

ஐந்தே நிமிடத்தில்,உடையை மாற்றியவள் வெளியே வந்து செருப்பை மாட்டிக்கொண்டு, தன் கைப்பையில் சாவி இருக்கிறதா என்று கை விட்டு பார்த்துக்கொண்டு கார் நிறுத்திமிடத்திற்கு வந்தாள்.

கார் நின்று கொண்டிருந்தது, கல்பனா அங்கில்லை. கோபம் கோபமாக வந்தது,

காயத்ரிக்கு, இங்கதான நிக்க சொன்னேன், அதுக்குள்ள எங்க போய் தொலைஞ்சா? கல்பனா..கல்பனா.. இவள் குரல் பக்கத்து பிளாட்டில் வசிப்பவர்களை ஜன்னல் வழியே எட்டி பார்க்க வைத்தது. அவர்களுக்கு தன் குரல் தொந்தரவு பண்ணி விட்டதோ என்ற குற்ற உணர்வில், சாரி கல்பனாவை இங்க நிக்க சொன்னேன், அதுதான்..இழுத்தாள்.

ஐந்து, பத்து நிமிடங்களாயிற்று, கல்பனா அங்கில்லை. பதட்டமடைய ஆரம்பித்தாள், சுற்றும் முற்றும் இவள் அலைவதை பார்த்த மற்றவர்கள் உதவிக்கு வந்தனர். அவர்களும் சுற்றுமுற்றும் தேடினார். கல்பனா காணவில்லை. காய்த்ரிக்கு இன்றைய செய்திகளில் அடிபடும் பயங்கர நிகழ்ச்சிகள் கண் முன் வந்து பயமுறுத்தின. சட்டென அவளுக்கு அந்த ஞாபகம் வந்தது, காலையில் பார்த்த அந்த பெண், அங்கிருக்கிறாளா? வேகமாக காம்பவுண்டுக்கு வெளியே வந்து ரோட்டில் பார்க்க, அங்கு சாரி சாரியாய் வாகனங்கள் சென்று கொண்டிருக்க..அந்த பெண்ணை காணவில்லை.

சே..எப்படி யோசிக்காமல் விட்டேன், இதை சாதாரணமாக எடுத்து கொண்டதால் இப்பொழுது என் பெண்ணே காணாமல் போயிருக்கிறாள். இப்பொழுது என்ன செய்வது? அழுது அரற்றிக்கொண்டு உட்கார்ந்திருக்க முடியாது. போலீஸ் ஸ்டேசன் போகலாமா? பிரபல வக்கீல், செய்தி பரப்பி விடுவார்கள். அப்படியானால் என் பெண் கதி? சட்டென்று ஜெகன் ஞாபகம் வந்தது, அவனுக்கு போன் போட்டாள்.

அன்று முதலமைச்சர் அந்த இடத்துக்கு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ஜெகன், எரிச்சலாய் போனை எடுத்தவன் காயத்ரியின் போனை பார்த்தவுடன் மென்மையானான், என்ன சித்தி இந்த நேரத்துல, கோர்ட்டுக்கு போகலையா?

இந்த கேள்வி அவள் இறுகிய மனதை இளக செய்து விட்டது. கண்ணீருடன் கல்பனா காணாமல் போன விசயத்தை சொன்னாள். ஒண்ணும் ஆயிருக்காது, கவலைப்படாதீங்க, நான் அங்க வந்துடறேன், சொன்னவன் தன் போலீஸ் ஜீப்பை எடுத்துக்கொண்டு ஸ்டேசனுக்கு விரைந்தான். சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமனை அழைத்து நீங்கள் முதலமைச்சர் வரும்போது சார்ஜ் எடுத்துக்கொள்ளுங்கள். நான் அவசரமாய் ஒரு இடத்துக்கு போக வேண்டும். முடிந்தால் சீக்கிரம் வந்து விடுகிறேன்

‘யெஸ் சார்’ சல்யூட்டை வாங்க கூட நேரமில்லாமால் தன்னுடைய மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு காயத்ரி வீட்டுக்கு பறந்தான்.

ஜெகனிடம் அனைத்தையும் சொல்லி விட்டு பிரமை பிடித்தாற்போல் சோபாவில் உட்கார்ந்திருந்தாள் காயத்ரி. ஜெகன், எல்லாவற்றையும் கேட்டவன் சரி காலையில நீங்க பார்த்த பெண் எப்படியிருந்தாள்?

மாநிறம்தான், கொஞ்சம் உயரம், சாதாரண சாரிதான் கட்டியிருந்தாள், கூந்தல் விரிந்தாற் போல்தான் இருந்தது.

இதற்கு முன் இந்த பெண்ணை எங்காவது பார்த்திருக்கிருக்கீங்களா? பார்த்த ஞாபகம் வருகிறது, ஆனால் எங்கே பார்த்த ஞாபகம் என்றுதான் தெரியவில்லை.. ம்…ம்…யோசித்தாள்….யோசித்தாள்..சட்டென ஞாபகம் வந்தது போல அன்று மாலை காய்க்கடையில் என் பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தாள். கரெக்ட் அவளேதான், ஜெகன், இப்பொழுது புரிகிறது, அவள் இரண்டு மூன்று நாட்களாய் எங்களை வாட்ச் செய்து கொண்டிருக்க வேண்டும். கண்டிப்பாய் அந்த பெண்தான் என் மகளை கொண்டு போயிருக்க முடியும். ப்ளீஸ் ஜெகன் எப்படியாவது என் பெண்ணை கண்டு பிடித்து கொடு.

கொஞ்சம் இருங்க, ட்ராபிக் போலீஸ் நிலைத்தில் பேசினான், காலையில் இருந்து தற்பொழுது வரை இந்த தெருவை கேமராவில் ”கவர்” செய்து கொண்டிருக்கும் வீடியோ வேண்டும்.

சிறிது நேரம் கழித்து ஜெகனை கூப்பிட்டார்கள், நம்முடையது பழுதாகி விட்டது, அதனால் படம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் நான்கைந்து கடைகள் தள்ளி மரக்கடை ஒன்றுள்ளது, அவர்கள் ரோட்டில் வைத்திருந்த காமராவில் பதிவாயிருக்கிறது,

ஜெகன் உற்சாகமானான், கமான் வாங்க, சித்தி கேமாரவுல பதிவானதுல அந்த பொண்ணு தெரியறாளா பாக்கலாம், உங்க வீட்டுல இருந்து அந்த பொண்ணு எப்படி போனாங்கன்னு பாக்கணும்.

கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து கொண்டிருந்த காயத்ரி சரியாக அந்த பெண்னை அடையாளம் காட்டினாள். இவள் தான் இவள்தான் சத்தம் போட ஜெகன் அவளை அமைதிபடுத்தி அடுத்து அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்கலாம்.

ஆனால் இவர்கள் எதிர்பார்த்த்து போல அந்த பெண் காயத்ரி வீட்டை நோக்கி வர வில்லை, எதிர்ப்புற திசையில் நடந்து கொண்டிருந்தாள். சற்று தூரம் நடந்து வழியில் வந்த ஆட்டோவை கை காட்டி ஏறுவது தெரிந்தது, அவ்வளவுதான், ஆட்டோவின் முதுகு மட்டுமே தெரிந்தது.

கேமராவை இவள் வீட்டுப்புறம் காண்பிக்க சொல்ல அது அந்தளவுக்கு “வியூ” கிடைக்காது மேடம் கடைக்காரர் பணிவாக சொன்னார். அது போலவே அவள் வீடு பக்கம் கேமராவின் கோணம் வரவே இல்லை.

சோர்ந்து போனால் காயத்ரி, அந்த பெண் இல்லை என்றால் யார் என் பெண்ணை கடத்தி இருக்க முடியும். கடவுளே என் பெண்ணுக்கு ஒன்றும் ஆகியிருக்க கூடாதே? கடவுளை வேண்டுவதை தவிர அவளுக்கு இப்பொழுது ஒன்றும் தோன்றவே இல்லை.

இரண்டு நாட்களாகி விட்டன. ஜெகன், எப்படியும் கண்டு பிடித்து விடலாம், நீங்கள் மன தைரியத்தை இழக்க வேண்டாம், சொன்னது மட்டுமல்லாமல் அடிக்கடி வந்து பார்த்துக்கொண்டான்.

அவளுக்கு யார் எதிரிகள்? அவளால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் அவளை பழி வாங்க இதனை செய்திருக்கலாமோ? பல கோணங்களில் தன் மூளையை குழப்பி கொண்டிருந்தாள் காயத்ரி..

மூன்றாம் நாள் மாலை எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கொண்டிருந்த காயத்ரியின் வீட்டு காலிங் பெல் ஒலித்தது. சட்டென தலை தூக்கிய காய்த்ரி எழுந்து வேகமாய் வந்து கதவை திறந்தாள். எதிரில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் கல்பனா..அன்று காணாமல் போன போது போட்டிருந்த பள்ளி யூனிபார்னுடனே.

தான் ஒரு பெரிய வக்கீல் என்பதையும் மறந்து கல்பனா..கல்பனா..அவளை இழுத்து அணைத்து உச்சி மோர்ந்த காயத்ரி, எங்க போயிட்டே? என் செல்லமே, அவளை தடவி எங்காவது காயம் உள்ளதா? பதற்றத்துடன் தடவி பார்த்தாள்.

அம்மா எனக்கு ஒண்ணுமில்லை, நான் நல்லாத்தான் இருக்கேன். இவள் தகவல் சொல்ல, ஜெகன் அங்கு வந்து விட்டான். அவனும் ஒரு சில கேள்விகள் கேட்க கல்பனா, யாரோ அழைத்தது போல இருந்த்தாகவும், அதற்கு பின் என்ன நடந்தது தெரியவில்லை என்றும் சொன்னாள்

அன்று இரவு காயத்ரியின் கண்களில் கண்ணீர் ஆறாக வழிய தன் மகளை இழுத்து அணைத்து படுத்துக்கொண்டிருந்தவளை. அம்மா..ரொம்ப பயந்துட்டியாம்மா. கல்பனாவின் கேள்வியில் உணர்ச்சி வசப்பட்ட காயத்ரி, ஆமாண்டா என் செல்லம், உங்கப்பா போன பின்னாடி நீதாண்டா எனக்கு எல்லாம், உணர்ச்சி வசப்பட்டாள்.

அவளின் பிடியில்லிருந்து தன்னை விடுத்து எழுந்து உட்கர்ந்த கல்பனா, இப்படித்தானம்மா நீ அன்னைக்கு அந்தம்மா கிட்டயிருந்து அவங்க பொண்ணை பிரிச்சி அவங்கப்பா கிட்டே கொடுக்கறதுக்கு ஏற்பாடு பண்னே?

என்ன சொல்கிறாள்? அதிர்ந்தாள் காயத்ரி? கல்பனா அதுக்கும் நீ காணாம போறதுக்கும் என்ன சம்பந்தம்? அது என்னோட தொழில்மா.

இருக்கலாம்மா, ஆனா அந்த பொண்ணு என்னோட பிரண்டும்மா, அவளுக்கு அவங்கப்பா கூட போறதுக்கு விருப்பமே இல்லைம்மா. இருக்கும்போதெல்லாம் அவங்கம்மாவை அடிச்சுகிட்டே இருப்பாராமாம்மா, அதை தினமும் எங்கிட்ட வந்து சொல்லி அழுவா.. அவளுக்கு தெரியாது, அவளை பிரிச்சி அவங்கப்பாகிட்டே சேர்க்கறது நீதான்னு.

அன்னைக்கு நீ காய் வாங்கும்போது அந்தம்மா என் கிட்டே வந்து உங்கம்மா இப்படி பண்ணலாமா? அப்படீன்னு கேட்டாங்க. அவங்களை எனக்கு ஏற்கன்வே தெரியும், அவங்க வீட்டுக்கு என்னோட பிரண்டை பார்க்கறதுக்கு போயிருக்கேன்.

எனக்கு மனசு கஷ்டமாயிடுச்சு, நம்ம ஜெகன் அண்ணன் கிட்டே யோசனை கேட்டேன், ஆரம்பத்துல ஒத்துக்க மாட்டேன்னுட்டார், என் பிரண்டுக்காக இதைய செய்யுன்னு சொன்னேன். ஒண்ணும் பதில் சொல்ல்லை.

ஒரு நாள் அவங்களை வர சொன்னேன், அதுக்கப்புறம்தான் யோசிச்சேன், எப்படியும் நீ அந்தம்மாவை கண்டு பிடிச்சிருவேன்னு. அதனால அவங்களை இங்கிருந்தே போக சைகை பண்ணிட்டு, சட்டுன்னு வெளியில் வந்த ஆட்டோவுல ஏறி அவ்ங்க கிட்ட போய் ஏத்திகிட்டேன். ஜெகன் அண்ணன் கூட சொல்லுச்சு நீ கேமராவுல அவங்களை ஒரு ஆட்டோ ஏத்திகிட்டு போனதை பாத்தியாமாம். அந்த ஆட்டோவுக்குள்ள நான்தான் உட்கார்ந்திருந்தேன். அப்படியே அவங்க வீட்டுல போய் என் பிரண்டுக்கு பதிலா நான் அவங்களை சமாதானப்படுத்தி எப்படியும் எங்கம்மாவை மறுபடியும் உங்க பொண்ணை உங்க கிட்டே சேர்க்கறதுக்கு ஏற்பாடு பண்ண்றேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.

அழுகையும் ஆத்திரமுமாய் வந்த்து காயத்ரிக்கு, ஏழாவது படிக்கும் ஒரு பெண் தன்னை எந்தளவுக்கு ஏமாற்றியிருக்கிறாள், கூட கணவனின் தம்பி மகனும் உடந்தை. போலீஸ், சட்டம் இரண்டின் இரத்தமல்லவா அதுதான் மிக திறமையாக ஏமாற்றியிருக்கிறாள்.

எனக்கு என் பெண் பிரிந்திருந்தது எந்தளவுக்கு பாதித்திருக்குமோ அந்த அளவுக்கு அந்த பெண்ணுக்கும் பாதித்திருக்குமே.

கண்டிப்பாய் அந்த பெண்ணை அவங்கம்மாகிட்ட சேர்க்கறதுக்கு ஏற்பாடு பண்ண்றேம்மா..

காயத்ரியின் கழுத்தை கட்டிக்கொண்டாள் கல்பனா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *