கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2021
பார்வையிட்டோர்: 3,420 
 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் மலையடிவாரத்தைத் தழுவிச் சென்ற கடலலைகள் அன்று மிகவும் உக்கிரமாக வீசுவது போன்ற உணர்ச்சியில் மூர்த்தி கண்ணிமைக்காமல் சில நிமிட நேரம் அந்த அலைகளையே பார்த்து நின்றான். சிறுவர்கள் விளையாடும் போது சிலவேளைகளில் எப்படிப் பெரியவர்கள் தங்களை அவதானிப்பதை விரும்பமாட்டார்களோ அப்படித்தான் மூர்த்தியும் தன்னை அவதானிப்பதை விரும்பாதது போல் அந்த அலைகளும் வானளாவ எழுந்து தண்ணீரை அவன் மீது வாரி இறைத்தன. அவற்றில் ஓரிரு துளிகள் அவன் உதட்டோரத்திற் பட்டுத் தெறித்தபோது அவனுந் தன் நினைவு பெற்றான். ஏதோ நினைத்துக்கொண்டவனாய்ப் பின்னோக்கிச் சென்று மணல் மேட்டில் ஏறிக் கொண்டான். அந்த உயர்ந்த பகுதியில் நின்றபடியே சுற்றுப்புறத்தை நோட்டம் விட்டான். திருக்கோணமலையின் இயற்கையழகு அவனைக் கொள்ளை கொண்டது. இந்த இயற்கை எழிலை ரசிப்பதற்கென்றே தினந்தினம் ஆயிரக் கணக்கானவர்கள் வருகிருர்கள், போகிறார்கள். அவர்களை யாருந் கடுப்பதில்லை.

Theerpu-pic

ஆனால் மனிதன் அப்படியில்லை. ஒருவனிடம் உள்ள அழகையும் குணத்தையும் ரசிக்கவும் போற்றவும் சில வேளைகளில் மனிதனுக்கு மனிதனே தடை விதிக்கின்றான். ஒரு பெண்ணிடமுள்ள நல்ல பண்புகளுக்காக அவளைச் சகோதர பாசத்துடன் நேசிப்பது தவறு என்றால் எதைத்தாள் இந்த உலகம் சரியென்று ஒப்புக்கொள்ளப் போகிறது…!

“மணஞ் செய்து கொண்டவன், மாற்றானின் மனைவி என்பதை நன்குணர்ந்து என் சொந்தச் சகோதரிக் கொப்பாக என்னிடம் அன்பும் ஆதரவும் காட்டும் ஒரு பெண்மீது நான் அன்பு கொள்ளக்கூடாதா..? என்னை விடப் பெரியவள் என்பதால் – அக்கா என அழைத்துங் கூடவா இப்படியொரு சந்தேகம்? ‘அக்கா’ என்ற புனிதமான பதத்திற்கே மாசு கற்பிக்கும் இந்த வஞ்சக உலகத்தில் எதைத்தான் நாம் நேர்மையாகச் செய்வது? உண்மைக்கும் நேர்மைக்கும், புனிதமான அன்புக்கும் வேறுபாடு தெரியாமல் நடந்து கொள்ளும் இந்தச் சமூகத்தில் மனிதன் எப்படி முன்னேற முடியும்?”

மூர்த்தி மணல் மேட்டில் நின்றபடியே சிந்திக்கிறான். அவனது காற்சட்டைப் பைக்குள் இருந்த கடிதம் கற்பாறைபோற் கனத்தது. அவன் உள்ளத்தில் அமைதியில்லை. இந்த நிலையில் அவன் நடைப்பிணமாக நின்றான், அவன் சிந்தனை எங்கோ தாவுகிறது. ஆம் தேவிக்குக் காலையில் இருந்தே உடல் நிலை சரியில்லை, வழமைபோல அவன் அங்கு சென்ற போது சாடையான காய்ச்சல் என்று கூறினாள். கடையில் இரண்டு டிஸ்பிறின் வாங்கிக் கொடுத்துவிட்டுப் பின்னேரம் வந்து பார்ப்பதாகக் கூறியிருந்தான், ஆனால் அங்கு செல்லக் கூடிய மனநிலையில் அவன் இப்போது இல்லை. ஆயினும் மனத்தில் ஒரு துடிப்பு அவள் உடல் நிலை எப்படியிருக்குமோ என்ற பரபரப்பு, அவன் உள்ளத்தில் ஒரு ஏக்கம். கால்கள் அங்கு செல்வதற்குத் துடிப்பது போன்ற உணர்ச்சியேற்பட்டபோது அவன் அப்படியே மணல் மேட்டில் அமர்ந்துகொண்டான்.

அவளை அவன் இன்று நேற்றுத் தான் அறிந்திருந்ததாக இருந்தால் மற்றவர்கள் கூறுவது நியாயமாக இருக்கும். கடந்த ஐந்தாண்டுகளாக அவளது குடும்பம் அந்தத் தெருவுக்குக் குடிவந்த நாளிலிருந்தே அவனுக்கு அவள் அறிமுகமானாள். அவளுடைய இனியகீதம் அவனைக் கவர்ந்தது – அந்தத் தெருவிற்கு அவள் குடிவந்த அக்கிய நாட்களில் இரவு நேரத்தில் அவள் வெகு நேரம்வரை பாடிப் பழகுவாள். அந்த இனிய கானத்தைக் கேட்பதற்கென்றே பலர் தூங்காமல் தங்கள் திண்ணைகளில் அமர்ந்து கொள்வர். அதிர்ஷ்டவசமாக அவள் குடியிருந்த வீட்டுக்கும் அவனுடைய வீட்டிற்கும் இடையில் ஒரு சுவர்தான். அதனால் இருவீட்டுப் பெரியவர்களும் விரைவில் பரிச்சயமாகிக் கொண்டனர்.

ஒரு நாள் மூர்த்தியின் விருப்பத்திற்கிணங்க பெரியவர்களின் அனுமதியின் பேரில் தேவி பாடினாள். மூர்த்தி பக்கத்தில் அமர்ந்து கொண்டே ரசித்தான். அவள் பாடிமுடிந்ததும் இனிமையான விருந்தக்கா என்று அன்று அவன் மனத்தூய்மையோடழைத்த பதம் இன்றுவரை மாறியதில்லை.

தேவிக்குத் திருமணம் நடந்த போது கூட மூர்த்தி தான் ஒரு கூடப் பிறந்த சகோதரன் போல சகல அலுவல்களையும் நின்று செய்து முடித்தான். தேவியின் கணவன் சந்திரன் கூட அவனை மூர்த்தி! மூர்த்தி?! என்று அக்கொருமுறை அன்புடன் அமைத்து உரிமை பாராட்டினான். சந்திரன் அன்புடன் நடந்து கொண்டது மூர்த்திக்கு எவ்வளவோ ஆறுதலாசு இருந்தது. திருமணம் என்ற புதிய உறவின் மூலம் அக்காவின் உறவை முற்றாக இழந்துவிட வேண்டி ஏற்படுமோ என்று பயந்தவனுக்கு அவளுடன் தொடர்ந்து உறவு கொண்டாட வாய்ப்புக் கிடைத்தது. சந்திரன் வெளியூரில் வேலை பார்த்து வந்தால் தேவியையும் அவனது வயோதிபத் தாயையும் பார்த்து வேண்டிய உதவிகளைச் செய்யும் பொறுப்பை மூர்த்தியிடமே விட்டுச் சென்றிருந்தான். மூர்த்தியும் தன் கடமையைச் சரிவரச் செய்து வந்தான்.

ஆனால்-

ஆமாம்! ஆனால் இனிமேலும் அவன் தொடர்ந்து அவர்ளுக்குச் சேவை செய்ய முடியுமோ என்பது கேள்விக்குரியதாகவே இருந்தது. சில வேளைகளில் மூர்த்தியும் சந்திரன் வீட்டிலேயே உணவருந்துவான். இருவருக்கும் தேவியே உணவு பரிமாறுவாள். அப்போதெல்லாம் ‘என்னைக் கண்டபின் மூர்த்தியை மறந்து விடாமல் அவனை நன்றாகக் கவனி’ என்று கேலி செய்வான் சந்திரன்! அக்காவின் அன்பு எனக்கு எப்போதும் இருக்கும் என்று பதிலுரப்பான் மூர்த்தி, சந்திரன் விடுதலைக்கு வரும் போதெல்லாம் மூர்த்தி அதிகான பொழுதை அவனுடன் தான் கழிப்பான். அப்படியொரு அந்நியோன்யம் ஒரு அன்புப் பிணைப்பு அவர்களை இணைத்திருந்தது.

சந்திரன் கூட அவர்களின் புனிதமான உறவை அங்கிகரித்திருக்கும் போது அவர்களைப்பற்றி மற்றவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும். இந்த உலகத்தில் உண்மைக்கும் நேர்மைக்கும் எப்போதுமே இடமிருப்பதில்லை. அதற்காக உண்மையும் நேர்மையும் உலசை வீட்டு மறைந் விடம் இல்லை. அதற்குமேல் அவன் சந்திக்க வில்லை. சிந்திக்க விரும்பவுமில்லை.

தன் உடையில் ஒட்டியிருந்த மணலைத் தட்டியபம் எழுந்தவன் நேராக தேவியின் வீட்டுக்குச் சென்றான். வழக்கத்திற்காக அன்று வீடு ஓய்ந்து போய் தந்தது. தேவியின் உடல் நிலை எப்படியிருக்குமோ என்ற எண்ணத்துடன் உள்ளே நுழைந்தவன் கண்கள் அவளைத் தேடின. வெளித் திண்ணையில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து தேவாரப் புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தாள் தேவியின் வயோதிகத் தாயார் செல்லம்மா. முர்த்தி வந்தது கூட அவளுக்குத் தெரியவில்லை.

“அக்கா இல்லையம்மா…?” தேவிக்கு உடல் நிலை எப்படி என்று நேரடியாகக் கேட்காமல் இப்படிக் கேட்டு வைத்தான்.

“மூர்த்தியா! நீ வந்தது கூடத் தெரியவில்லையப்பா! தேவி காலையில் படுத்தது. இன்னும் எழும்பவில்லை. உடல் அசதியாக இருக்காம். அதோடு சாடையான காய்ச்சலும் காயுது. நான் எழுப்பிப் பார்த்துக் களைத்திட்டன். நீ வந்திருப்பதால் எழும்புதோ தெரியாது. பொறு! எழுப்பிப் பார்க்கிறேன், நீ மத்தியானம் வருவாய் என்று எதிர்பார்த்தன். எங்கயாவது போயிருந்தாயா தம்பி…?” என்று செல்லம்மாள் கேட்ட வினா ஒன்றுக்கும் மூர்த்தி பதிலளிக்கவில்லை.

தேவியின் தாயார் செல்லம்மா வெளியில் நிறைபடியே மகளை அழைத்துப்பார்த்தாள். பதில் கிடைக்காது போகவே உள்ளே சென்று தேவியிடம் ஏதோ பேசிவிட்டு வெளியே வந்து “தம்பி கொஞ்சம் இருக்கட்டாம்…வருகுதாம்…” என்று கூறிவிட்டு மீண்டும் தேவாரப் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டாள்.

ஏதோ சிந்தளையில் ஆழ்ந்திருந்த மூர்த்தி காலடி ஓசை கேட்டு நிமிர்ந்தான். தேவிவந்து கொண்டிருந்தாள், ஒருநாளும் அறிமுகமற்ற ஒரு பெண்ணைப் பார்ப்பதுபோல் மூர்த்தி அவளைப் பார்த்தான். அவள் முகத்தில் சோர்வு காணப்பட்டது. கண்கள் இரத்தச் சிவப்பேறியிருந்தன. பல நாள் காய்ச்சல் வாட்டிய தோயாளி போற் தோற்றமளித்தாள் அவள்.

“என்னக்கா.. காய்ச்சல் இன்னும்விடவில்லைப்போல் இருக்கு டாக்டரிடம் போகலாமா…?” என்று கேட்டுவிட அவள் உதடுகள் துடித்தபோதிலும் அவன் தன்னை மிகுந்த சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான். அங்கே மௌனம் நிலவியது. அதை விரும்பாதவள் போல “என்ன மூர்த்தி காலையிற் சென்ற நீ இப்பத்தான் வருகிறாய். இடையிற் செத்திருந்தாற் கூடத் தெரியாதாக்கும்”. தேவி வேண்டுமென்றே அவனைச் சீண்டுவது போற் சொன்னாள்.

“வரத்தான் இருந்தேன் அக்கா எதிர்பாராதவிதமாக நண்பர்கள் இருவர் வந்து விட்டனர். அப்புறம் நேரம் போனதே தெரியவில்லை”.

அவன் வேண்டுமென்றே பொய் பேசினான்.

“எப்படியோ பொழுது நல்லபடியாகக் கழிந்ததில் மகிழ்ச்சி மூர்த்தி, எனக்குக் கூடக் காலையிற்தான் காய்ச்சல் அதிகமாக இருந்த்து. இப்போ ஏதாவது குடிக்கிறயா மூர்த்தி …?!”

“வேண்டாம் அக்கா… இப்போது தான் குடித்து விட்டு வந்தேன். ஆமாம்! டிஸ்பிறின் எடுத்தீர்களா?”

“இரண்டு எடுத்தேன்”

“சாப்பாடு….?”

“ஒன்றுமில்லை. சாப்பிடவேண்டும் போல் இல்லை.”

“… நான் வரட்டுமா அக்கா” மூர்த்தி விடை பெற்றான்.

“சரி மூர்த்தி!”

அவ்வளவு சீக்கிரத்தில் தேவி அவன் செல்வதற்கு விடைகொடுத்ததில் அவனுக்குப் பெரும் ஆச்சரியம். இந்த மனநிலையில் இருவருக்குமிடையே ஒரு மாயத்திரை விரிக்கப்பட்ட உணர்வில் இரண்டு நாட்கள் கழிகின்றன. இந்த நிலை நீடித்தால் ஏதாவது அனர்த்தம் விளையலாம் என்று பயந்த மூர்த்தி மூன்றாம் நாள் மாலை அங்கு செல்கிறான். தேவியின் தாயார் அந்நேரம் வெளியே போயிருந்ததால் தேவியுடன் மனம் விட்டு பேச சந்தர்ப்பம் கிடைக்கிறது அவனுக்கு.

நாற்காலியில் அமர்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்த தேவி வாருங்கள் மூர்த்தி …என அவனை வரவேற்றாள், அந்த அழைப்பு அவனுக்குச் சற்று இதமாக இருந்ததால் அவள் எதிரிற் சென்று அவன் அமர்ந்து கொண்டான்.

“உனக்கு ஏதாவது சுகமில்லையா மூர்த்தி…?”

“இல்லையே அக்கா . ஏன்..?”

“நீ இப்போதெல்லாம் ஒரு மாதிரி”

“ஒரு மாதிரியா…? அப்படி யென்றால்” அவன் சிரித்தான்.

“ஒரு மாதிரித்தான்”

“எனக்கு விளங்கவில்லையே… அக்கா…?”

“நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய்…கடந்த சில நாட்களாக நீ எதையோ என்னிடம் இருந்து ஒழிக்கப் பார்க்கிறாய் …அப்படியொரு உணர்வு எனக்குத் தென்படுகிறது”.

மூர்த்தி திடுக்கிட்டான். எனது உணர்க்சியை அறியக் கூடிய சக்தி இவளுக்கு எங்கிருந்து வந்ததோ. என் மனதை அறிந்து விட்டாள். ஆயினும் உண்மையைக் கூறக்கூடாது என்ற முடிவுடன், “நீங்கள் வீணாக எதையோ கற்பனை செய்து கொண்டு…” அவன் இழுத்தான்.

“இல்லை மூர்த்தி நீ என்னை ஏமாற்றுகிறாய்”

“அது உண்மையென்றால் நீங்கள் கூடத்தான் என்னை ஏமாற்றுகிறீர்கள் என்று நான் கூறுகிறேன், அதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?”

“நிச்சயமாக நான் ஒத்துக் கொள்கிறேன் மூர்த்தி, நீ என்னை ஏமாற்ற நினைப்பது போல் நானும் உன்னை ஏமாற்ற விரும்பவில்லை” என்று கூறியபடி தன் சேலை மடிப்புக்குள் மறைத்துவைத்திருந்த கடிதமொன்றை இழுத்து அவனிடம் நீட்டினாள்

அதை வாங்கத் தயங்குபவன் போல் அவன் உற்றுப்பார்த்தான்.

“அதைப்படித்துப் பாருங்கள் எல்லாம் புரியும்”

Theerpu-pic2

அவள் மனதில் ஏதோ ஒரு குழப்பம். பேசிக்கொள்ள முடியாததை தேவி கடித மூலம் விளக்க எத்தனிக்கிறாளோ அவன் சிந்திக்கும்போது அவள் எழுந்துவந்து அக்கடிதத்தை அவன் மடியில் வைத்து விடுகிறாள்.

அதற்கு மேலும் தாமதிக்க முடியாமல் மூர்த்தி அக்கடிதத்தைப் படிக்க முயற்சிக்கிறான். சந்தர்ப்பம் பார்த்திருந்தவள் போல் தேவி சமையலறைப் பக்கம் நழுவுகிறாள்.

கடிதத்தைப் படித்து முடித்த மூர்த்திக்கு வியர்த்துக் கொட்டுகிறது. அவன் தன் கைக்குட்டையை எடுத்து முகத்தை ஒற்றிக் கொள்கிறான்.

“களைத்திருப்பீர்கள் காப்பி குடி மூர்த்தி…” அந்த வார்த்தைகளிற் கலந்திருந்த குதர்க்கத்தை விளங்கிக் கொள்ள முடியாமல் அவள் நீட்டிய காப்பியை வாங்கி அருந்தத் தொடங்குகிறான்.

“கடிதம் படித்தாயா மூர்த்தி?”

“படித்தேன் அக்கா..!”

“அதைப்பற்றி என்ன நினைக்கிறாய்….?”

“யாரோ கோழைகள் பொறாமையாற் செய்தவேலையாக இருக்கும்”

“இருக்கலாம் மூர்த்தி… ஆயினும் எங்கள் குடும்பத்தைப் பாதிக்காமல் இருக்கவேண்டுமல்லவா. என் கணவர் பரந்த நோக்கமுடையவர். சந்தேகம் என்ற பெயருக்கே அர்த்தத் தெரியாதவர். அவர் இதை அறியவந்தால்” அவள் குரல் கம்மிக்கொள்கிறது.

“தெரிந்து தான் ஆக வேண்டும் அக்கா… அண்ணாவிடம் இருந்து நாம் எதையுமே ஒழிக்கக்கூடாது. அவரிடம் நடந்தவற்றைக் கூறிவிடுவோம் அவர் கூட எம்மீது சந்தேகப்பட்டால் நான் இந்த ஊரைவிட்டே போகத் தீர்மானித்துவிட்டேன்.”

“மூர்த்தி!” அவள் இடைமறித்தாள்.

“சொந்தச் சகோதரம் போற் பழகிவிட்டுப் பிரிவது கொஞ்சம் கஸ்டந்தான். ஆயினும் என் அக்காவின் நன்மைக்காக நான் எதையுஞ் செய்யச் சித்தமாயிருக்கிறேன். ஆமாம்! நான் உங்களிடம் இருந்து எதையோ மறைப்பதாகக் கூறினீர்களல்லவா? அது உண்மைதான் அக்கா. உங்களிடம் இருக்கும் விசால மனப்பான்மையும் துணிவும் எனக்கில்லை, அதனால் என்னை மன்னித்து விடுங்கள். உங்களுக்கு வந்த அதே கடிதம்போல் ஒன்று எனக்கும் வந்துள்ளது. படித்துப் பாருங்கள்”.

அவன் தன் காற்சாட்டைப் பைக்குள் இருந்த கடிதத்தை எடுத்து அவனிடம் நீட்டுகிறான்.

அவள் அவனை வியப்போடு பார்க்கிறாள்.

நீ என்னை நிஜமாகவே ஏமாற்றி விட்டாய் என்று கூறுவதுபோல் இருகிறது அந்தப் பார்வை.

தேவி பரபரப்புடன் கடிதத்தை பிரித்துப் படிக்கிறாள்.

அவள் கண்கள் கலங்குகின்றன அவள் அவனைப் பார்க்கும் அதேசமயம் அவனும் அவளைப் பார்க்கிறான் இருவர் கண்களிலும் நீர்.

“அக்கா! அக்கா…நீங்கள் அழ கூடாது”.

“நீ மட்டும் அழலாமாக்கும்…?”

“இருவருமே அழவேண்டாம் அக்கா”.

“அப்போ எங்கள் பிரச்சனை தீர வேண்டுமே மூர்த்தி!”

“சந்திரா அண்ணா வரட்டும்! அவரிடம் எங்கள் இருவருக்கும் வந்த மொட்டைக் கடிதங்களைப் பற்றிக் கூறுவோம்! அவற்றைப் படித்து அவர் தீர்ப்புக் கூறும் வரை நான் இந்தப் பக்கம் வரப்போவதில்லை அக்கா. அண்ணாவுக்கும் உங்களுக்கும் இடைஞ்சலாக இருக்க நான் விரும்பவில்லை நான் சென்று வருகிறேன்”.

தேவியின் பதிலுக்குக் கூடக் காத்திராமல் விசையாக வாயிற்படியைக் கடந்து செல்லும் மூர்த்தியை இருளில் மறைந்திருந்த ஓர் உருவம் கையைப் பிடித்து நிறுத்துகிறது.

“யாரது” என்று பயத்தினால் அலறிவிடுகிறாள் மூர்த்தி.

அவன் குரல் கேட்டு வாயிலுக்கு வந்த தேவி எதுவும் பேசமுடியாத சிலையாகி நிற்கிறாள். சந்திரன் தான் மூர்த்தியின் கரங்களைப் பற்றி நின்றான்.

“என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா…” மூர்த்தி ஏதோ கூற முயற்சிக்கும் போது,

“நான் வெகு நேரமாக இங்கு மறைந்து நின்று உங்கள் சம்பாஷணையை உற்றுக் கேட்டேன். இன்று காலையில் வந்த நான் உங்கள் இருவரையும் கவனிப்பதற்காக மறைந்து நின்றேன்.பெருந்தன்மை படைத்தவர் என்று உங்களால் பட்டம் சூட்டப்பட்ட நான் உண்மையில் ஒரு நயவஞ்சகன், இரண்டு தினங்களுக்கு முன் எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் கிடைத்தது, அதை நம்பக் கூடாது என்று எவ்வளவோ முயற்சித்தேன், என்னைச் சந்தேகம் ஆட் கொண்டுவிட்டது. அதனால் உளவு அறியத் துணிந்தேன். உங்கள் புனிதமான சகோதர அன்பின் முன் நான் ஒரு தூசி. இனி எத்தனை பொட்டைக் கடிதங்கள் வந்தாலு அவற்தை மதிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து. விட்டேன். அதுவே என் தீர்ப்பு” என்றபடி அவன் தன் மனைவியைப் பார்க்கிறான், அந்தப் பார்வை தேவி என்னை மன்னித்து விடு என்பது போற் கெஞ்சியது.

– அஞ்சலி மாத சஞ்சிகை – ஆகஸ்ட் 1971

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *