கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2023
பார்வையிட்டோர்: 1,748 
 
 

வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மாலினி, வீட்டின் ஒவ்வொரு அறையாகத் தன்னுடைய கணவனைத் தேடிக் கொண்டிருந்தாள். வாசற்பக்கம் சென்று பார்த்தாள். அங்கும் காணவில்லை.

சற்று நேரத்தில் கணவர் சேனாபதி வந்தார்.

‘என்ன காணோமேன்னு தேடினியா?’

‘ஆமா நலங்கு இட்டு குளிக்க போங்கன்னு சொன்னா பக்கத்து அபார்ட்மென்ட் ல போய் பசங்களோட பட்டாசு வெடிச்சுட்டு வர்றீங்களா’

‘ஆமா மாலினி, பசங்க வாங்க அங்கள்னு கூப்பிட்டாங்க….’ நெளிந்தார் சேனாபதி.

‘பிள்ளை இல்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாடுவான்னு சொல்வாங்க சரியாத்தான் இருக்கு ‘

‘நான் கிழவன் மாதிரியா இருக்கேன் மனசாட்சிய தொட்டு சொல்லு ‘

குழைந்தார் சேனாபதி.

‘போதும். மனையில் உக்காருங்க ‘

அதட்டினாள் மாலினி.

மாலினி, அவரது பாதங்களில் நலங்கு இட்டாள். வெற்றிலை மடித்துக் கொடுத்தாள். சேனாபதி அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘பார்த்தது போதும் போய் குளிங்க அங்க புது துண்டு போட்டு வைச்சிருக்கேன்’

சேனாபதி குளியலறையை நோக்கிச் சென்றார். மாலினியைப் பார்தால் நாற்பத்தைந்து வயது பெண்மணி என்று யாரும் சொல்ல மாட்டார்கள். மாலினிக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் இருப்பதற்கான காரணங்களில் அவளது மலரந்த முகமும் என்றும் மாறாத இளமைத் தோற்றமும் அடங்கும். வேலை வாங்கவும் வேலை செய்யவும் தெரிந்த மாலினி, சேனாபதியைக் கரம் பிடித்தது மறக்க முடியாத ஓர் அத்தியாயம்.

மாலினியின் அக்காவும் அவரது கணவரும் அவளுக்குத் திருமண ஏற்பாடு செய்தனர். அப்பா அம்மா இல்லாததால், அவர்களே முன் நின்று தாரை வார்த்துக் கொடுக்கும் திருமணம். சினிமாவில் நடப்பது போல், முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளை வரவில்லை. பிள்ளை வீட்டார், மறுநாள் முகூர்த்த வேளைக்கு கண்டிப்பாக வந்து விடுவான் என்று உறுதி அளித்தனர். பெண் வீட்டார் கண்களில் அன்றிரவு உறக்கம் இல்லை.

மறுநாள். முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மாலினியின் அக்கா சாந்தாவும் மாமா சுந்தரமும் செய்வது அறியாமல் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த டாக்டர் ரங்கநாயகி, சாந்தாவையும் சுந்தரத்தையும் அழைத்துப் பேசினார். சேனாபதியை அறிமுகப்படுத்தினார்.

‘ வயதானவர்னு பார்க்காதீங்க நிலையான உத்யோகம் இல்லைன்னு பார்க்காதீங்க. நல்ல கணவரா இருப்பார்’

‘நாங்க பார்த்த ஜெனரல் மேனேஜர் மாப்பிள்ளை இப்படி ஆயிடுச்சு. மாலினிக்கு சரின்னா எங்களுக்கும் சரி’ என்றார் சுந்தரம். நால்வரும் மாலினி இருந்த அறைக்குச் சென்றார்கள். அவர்கள் எதுவும் பேசாமல் இருந்தனர். மாலினி, சேனாபதியைப் பார்த்தாள். சரி என்ற வார்த்தையை அவள் வாய் உதிர்த்தது.

அவரைக் கரம் பிடித்து பதினைந்து ஆண்டுகள் ஓடி விட்டன. அவராக பிசினஸ் கன்சல்டன்சி, செமினார் நடத்துதல் என்று அலைந்து சம்பாதித்து வருவார். அவள் பார்க்கும் வேலையில் போதுமான வருமானம் இருந்ததால் அவர் போக்குக்கு அவரை விட்டு விட்டாள் மாலினி.


படுக்கை அறையில் கட்டிலில் அமர்ந்து இருந்தாள் மாலினி. புத்தாடை அணிந்து சேனாபதி அங்கு வந்தார்.

‘என்ன முடியலையா.. எதுக்கு லீவு போட்டு பட்சணம் பண்ணணும் முடியலைன்னு உட்காரணும்’

அவளுடைய கூந்தலை வருடினார்.

‘ஒவ்வொரு தீபாவளிக்கும் இதான் பேசறீங்க. அங்க தட்ல வெச்சு இருக்கேன். டிவி பார்த்துக்கிட்டே சாப்பிடுங்க போங்க’

‘என்ன பரிவோட பேசினா விரட்டறே’

‘ஒங்க பரிவு எங்க கொண்டு விடும்னு தெரியும் போங்க. நான் அஞ்சு நிமிஷம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்’

சேனாபதி நகர்ந்தார்.

அங்கிள் என்று வாசலில் குரல் ஒலித்தது. சேனாதிபதி சென்று பார்த்தார். டாக்டர் ரங்கநாயகியின் மகள் வசுமதி நின்று கொண்டிருந்தாள்.

‘வாம்மா வசுமதி ‘

‘இந்தாங்க அம்மா தீபாவளி பட்சணம் கொடுத்துட்டு வரச் சொன்னாங்க ‘என்று கூறியபடியே வசுமதி என்னும் அந்த இளம்பெண் உரிமையோடு டிவி ரிமோட்டைக் கையில் எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தாள். ‘மாலினி ஆன்ட்டி எங்கே’

‘இதோ வருகிறேன்’ என்றபடியே மெதுவாக வந்த மாலினி, ஹேப்பி தீபாவளி’ என்று இளம்பெண்ணின் கையைக் குலுக்கினாள். அதற்குள் சேனாபதி, காபி கோப்பையுடன் வந்து நின்றார்.

‘அங்கிள், நான் காபிய தொடறது இல்ல ‘

‘அப்ப கொடுங்க என்கிட்ட என்று ஈனஸ்வரத்தில் கூறியபடியே வாங்கிக் கொண்டாள் மாலினி.

‘அப்ப பட்சணம் சாப்பிடும்மா’

‘நல்லா இருக்கே. எங்க வீட்டுக்கு வந்து கொடுங்க. மாலினி ஆன்ட்டி பண்ற மிக்சர் மாதிரி வரவே வராது ன்னு இப்ப கூட சொன்னாங்க. ஆன்ட்டி இந்த புடவையில நீங்க மேலும் அழகா இருக்கீங்க. அங்கிள் ஒங்க ஒயிட் சபாரியும் கலக்குது.’

அவளுடைய மொபைல் ஒலித்தது.’ பாருங்க அண்ணன் பசங்க வெடி வெடிக்க கூப்பிடறாங்க. நான் வரேன் அங்கிள் ஆன்ட்டி ‘என்று கூறியபடியே வசுமதி சிட்டாகப் பறந்தாள்.

‘சமையல் மெதுவாக பண்ணு அவசரம் இல்ல ‘

‘ நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் மெதுவாக தான் ஆகும். இந்த ரெண்டு டப்பால இனிப்பு காரம் டாக்டர் அம்மா வீட்டுக்குன்னு வெச்சிருக்கேன். போய் கொடுத்துட்டு உடனே வாங்க. ரங்கநாயகி மேடம் சிரிக்கிறாங்க உன் புருஷனும் என் புருஷனும் பேச ஆரம்பிச்சா பக்கத்துல பட்டாசு வெடிச்சாலும் எழுந்திருக்க மாட்டாங்கன்னு ‘

:அறிவாளிகள் உரையாடல் அப்படித்தான் இருக்கும்’

‘ ஆமாமாம் அப்படித்தான் சொல்லிக்கிட்டாங்க போய்ட்டு உடனே வாங்க’


சற்று நேரத்தில் அருகில் இருந்த மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றார் சேனாபதி. அங்கே முதல் மாடியில் இருந்த டாக்டர் ரங்கநாயகியின் வீட்டு வாசலில் நின்றார். வாங்க வாங்க என்று ரங்கநாயகியும் அவருடைய கணவர் ரங்கராஜனும் வரவேற்றனர். அவர்களுடைய மகன் கேசவனும் மருமகள் மைதிலியும் வரவேற்றனர். அவர்கள் அனைவரின் முகம் மலர்ந்த வரவேற்பில் சேனாபதி திக்குமுக்காடிப் போனார்.

ரங்கராஜனும் சேனாபதியும் வழக்கம்போல் சூழலை மறந்து உரையாடலில் மூழ்கினர். மைதிலி அவருக்கு பழரசம் கொடுத்து உபசரித்தாள். அங்கு வந்த வசுமதி, அம்மாவின் காதுகளில் கிசுகிசுத்தாள். மைதிலி, அவர்களுடன் கலந்து கொண்டாள்.

‘அத்தை நான் போய் பார்த்து விட்டு வரவா?’

‘இன்னிக்கு ஒரு நாளாவது புருஷனோடயும் பசங்களோடயும் நேரத்தை செலவழி. நான் பார்த்து விட்டு வரேன். அவர் கேட்டா சொல்லு’

டாக்டர் ரங்கநாயகி வாசலை நோக்கி நகர்ந்தார்.


சேனாபதியின் வீடு. மாலினியின் அருகில் சோபாவில் அமர்ந்து இருந்தார் ரங்கநாயகி.

‘ என்ன மேம் வரச் சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே. நீங்களே வந்துட்டிங்க ‘

‘ நான் வரக் கூடாதா? ஆன்ட்டி பலவீனமா இருக்காங்கன்னு வசுமதி சொன்னா. என்ன ஆச்சு?’

‘அதெல்லாம் ஒன்னும் இல்ல மேம்’

என்று கூறியவள் சோபாவில் மயங்கி சரிந்தாள்.

ரங்கநாயகி எழுந்து நின்று அவளுடைய நாடியைப் பிடித்துப் பார்த்தார். புன்னகை பூத்தார்.

சில நிமிடங்களில் மாலினி மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தாள். மாலினியிடம் தண்ணீர் புட்டியைக் கொடுத்தார் ரங்கநாயகி.

‘வாழ்த்துக்கள் நீ தாயாக போற’

‘போங்க மேம் காலம் போன காலத்துல எங்களுக்கு தான் அதெல்லாம் இல்லன்னு ஆயிடுச்சே’

‘உண்மை பா என்ன ஒரு டாக்டர் சொல்றதை நம்ப மாட்டேங்கற’

‘தீபாவளி தானே இன்னிக்கு ஏப்ரல் பூல் இல்லையே’

‘தருவது என்றே தெய்வம் முடிவு செய்தால் தடுப்பவர் யார் இல்லை மறுப்பவர் யார் ‘

‘கண்ணதாசன் பாடல் வரியா? அவர்கிட்டேந்து ஒங்களுக்கு ஒட்டிகிச்சா? வேணாம் மேம் ஆசை காட்டாதீங்க ‘

மாலினி, நம்ப முடியாமல் ரங்கநாயகியைப் பார்த்தாள். அவரது மொபைல் சிணுங்கியது.

‘மைதிலி, மாலினி அம்மாவாகப் போறா. நான் இனிப்பு சாப்பிடக் கூடாது. இருந்தாலும் நம்ம சேனாபதி மாலினிக்காக பரவாயில்லை ன்னு சாப்பிட போறேன். சேனாபதி கிட்ட சொல்லு. அவர் கிட்ட சொல்லி சொல்ல சொல்லு. அப்பதான் சேனாபதிய ரிலீஸ் பண்ணுவாரு’

சில நிமிடங்களில் சேனாபதியும் வசுமதியும் அங்கு வந்தார்கள். வசுமதி, மாலினியின் கைகளைக் குலுக்கினாள்.

‘ரங்கம்மா நீங்க சொன்னது உண்மையா? ‘

சேனாபதியின் குரல் தழுதழுத்தது.

‘இதே தொழிலா இருக்குற என்னைய சந்தேகப்படறிங்களா? நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு வாங்க. உறுதிப்படுத்தலாம்’

சேனாபதி உணர்ச்சி வசப்பட்டு மாலினியின் அருகில் தரையில் அமர்ந்து அவளுடைய கால்களைப் பற்றிக் கொண்டார்.

‘அங்கிள் இங்க ரெண்டு பெரிய உருவம் நிக்கறோம் ‘ என்றாள் வசுமதி.

ரங்கநாயகி கூறினார் : நாம ஏன் நிக்கணும். வந்த வேலை முடிஞ்சுது வா போகலாம். ரெண்டு பேரும் நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு வாங்க ‘

சேனாபதி. ‘தேங்க்ஸ் ரங்கம்மா’ என்றார்.

‘அதெல்லாம் அப்புறம் சொல்லிக்கலாம். நீங்க தொடருங்க’

வசுமதி புன்னகை பூத்தாள். இருவரும் அங்கிருந்து சென்றனர். மாலினி சேனாபதியை இறுக அணைத்துக் கொண்டாள்.

‘நாம் சிரிக்கும் நாளே திருநாள் ன்னு கண்ணதாசன் பாடல் வரி’

‘அப்ப நல்லா மகிழ்ச்சியோட சிரிங்க’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *