தீபாவளி எப்படி?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 4, 2024
பார்வையிட்டோர்: 230 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ஜானகி அம்மாள் தன் வீட்டு வாசலைப் பெருக்கிக் கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது தெருக்கோடியிலிருந்து ஒரு குடுகுடுப்பைக்காரன் தன் முழுப்பலத்துடன் ‘குடு குடு’ என்று அடித்துக்கொண்டு அவள் பக்கத்தில் வந்து நின்று, “நல்ல காலம் வருகுது ! நல்ல காலம் பொறக்குது!” என்று கூவினான். ஜானகி அம்மாள் கோலம் போட்டுக்கொண்டிருந்தவள் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்து, “வாடா அப்பா, வா! உனக்காகத்தான் பெருக்கி மெழுகிக் கோலம் போடறேன், வா” என்றாள். 

“ஆண்டவரு கொடுப்பாரு. குடு, குடு! புது மனுசங்க ரயில்லே வந்து இறங்கறாங்க. குடு குடு! வூட்டிலே கண்ணாலம் வறது; அம்மாவுக்குச் சந்தோசம் பொங்கிக்கிட்டு வரப் போறது!” 

“போடா, கட்டேலே போறவனே! எப்போடா பொழுது விடியப்போறதுன்னு காத்திண்டிருந்தயோ?” என்று கேட்டுக் கொண்டே அம்மாள் உள்ளே சென்றுவிட்டாள். 

ஆனால் அவன் நின்ற இடத்தைவிட்டு நகராமல் என்னவெல்லாமோ பிதற்றிக்கொண்டிருந்தான். “ஏய், யாரடி உள்ளே! வாசல்லே அவனை நிறுத்தி வைச்சுண்டு எதுக்காக வேடிக்கை பார்த்திண்டிருக்கே? ரெண்டு அரிசியைப் போட்டுப் போகச்சொல்றதுதானே!” என்று ஐயர் கேட்டதும் ஜானகியம்மாள் ஒரு படியில் அரிசியைக் கொண்டுவந்து அவர் எதிரில் வைத்து, “இந்தாங்கோ, அந்தக் கடங்காரனுக்கு நீங்களே கொண்டு தொலையுங்கோ. நான் போனா அது இதுன்னு என்னெல்லாமோ சொல்றான். எனக்குப் போனது வந்தது எல்லாம் ஞாபகத்துக்கு வந்து வேதனைப்படுத்தறது” என்றாள். 

அகோரமையர் போட்ட அரிசியைப் பணிவாக வாங்கிக் கொண்டு,”ஐயருக்குத் தீவிளி வருகுது; வூட்டிலே சந்தோசமாக் கொண்டாடப் போறாரு” என்று சொல்லிக் கொண்டே சென்றான். 

“ஒரு வழியாத் தொலைஞ்சானோன்னோ கடங்காரன்? காலங்கார்த்தாலே வந்துட்டான், எனக்கு வரங் கொடுக்கறதுக்கு!” என்று அவனை வைதுவிட்டு ஜானகி யம்மாள் குடத்தை எடுத்துக் கொண்டு ஸ்நானத்திற்குச் சென்றுவிட்டாள். 

ஜானகி அம்மாளுக்கு இருந்ததெல்லாம் ஒரே ஒரு குறைதான். பகவான் அவளுக்குச் சொத்து சுதந்தரத்தைக் குறைக்கவில்லை. அகோரமையர் அந்தக் கிராமத்தில் பெரிய மிராசுதார். மிகவும் செட்டாகவும், தப்புத் தண்டா வழிகளில் இறங்காமலும் குடித்தனத்தை நடத்திவந்ததால், சொத்துக் கரையாமல் வளர்ந்து வந்தது. அவர்களுக்குப் புத்திர சந்தானத்திற்கும் குறைச்சல் இல்லை. பஞ்ச பாண்டவர்களைப்போல் ஐந்து பிள்ளைகளுக்குத் தாயாகும் பாக்கியத்தைப் பெற்றிருந்தாள் ஜானகியம்மாள். சில சமயம் அகோரமையர் அவளை வேடிக்கையாகக் ‘குந்திதேவி’ என்றுகூட அழைப்பதுண்டு. பிள்ளைகளில் ஒருவனாவது சோடை போகவில்லை. எல்லாப் பையன்களும் தலையெடுத்துச் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். 

மலை மலையாக ஐந்து பிள்ளைகள் இருந்து என்ன பயன்? தாய்க்கு இருந்த ஓர் அற்ப ஆசையை நிறைவேற்றி வைக்க ஒருவனாவது முன் வரவில்லை. ஜானகி அம்மாளுக்கு இந்த உலகத்தில் இருந்தது ஒரே ஆசைதான். அதாவது, தான் பிள்ளை யகத்துச் சம்பந்தியாகப் போய்ப் பெண் வீட்டில் அட்டகாசம் செய்து பார்க்கவேண்டும். பிள்ளையின் தலைத்தீபாவளிக்குத் தானும் தன் புருஷரும் ஒரு தடவையாவது போய் இருந்து பெண் வீட்டாரின் கண்களில் விரலைக் கொடுத்து ஆட்டவேண்டும்.- ஜானகியம்மாளின் மனோரதங்கள் இவ்வளவுதான். முதல் நான்கு பிள்ளைகளும் தாயின் இந்த மனோரதத்தை நிறைவேற்றி வைக்காமல் ஏமாற்றிவிட்டார்கள். 

“மூத்தது மோழை” என்று மூத்த பிள்ளை சீனுவை வீட்டில் எல்லாரும் அடிக்கடி பட்டம் சூட்டிக் கூப்பிடுவதுண்டு. ஏனென்றால், குடும்ப விஷயத்தில் அவன் தலையிடுவதே இல்லை. எது. எப்படிப் போனாலும் அவனுக்குக் கவலையில்லை. அவன் காரியம் ஒரு குறைவும் இல்லாமல் நடந்தால் சரிதான். ஆனால் கல்யாணமானதும் அவனுடைய மோழைக் குணங்கள் ஆச்சரியமாக மறைந்துவிட்டன. மாமனாரிடமிருந்து தலைத் தீபாவளிக்கு வரும்படி அழைத்ததும் ஏதோ ஒரு வேகம் வந்தவன் போல் யாரைக்கண்டாலும் சீறி விழத் தொடங்கினான். “ஏண்டா, சீனு, நானும் வரலாமென்று பார்க்கிறேண்டா!” என்று ஜானகியம்மாள் ஸம்மனில்லாமல் ஆஜரானபோது, “ஏன், ஒரு நாய்க் குட்டியையும் அழைச்சிண்டு வா” என்று சீறினான். 

“அவன் எக்கேடு கெட்டுத் தொலையட்டும் ; ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்” என்று சீனுவைப் பற்றிய தன் அபிப்பிராயத்தைப் பெருமூச்சோடு அடிக்கடி சொல்லித் தனது துக்கத்தை அவள் மறைத்துக்கொண்டாள். 

இளைய பெருமாள், அதாவது, இரண்டாவது பிள்ளை ராமு, வீட்டிற்கே மைனராக விளங்கினான். எல்லாருமே அவனை ‘மைனர் என்றுதான் அழைப்பார்கள். ஜானகிக்கோ ராமுவிடம் ஒரு தனிப் பிரியம் உண்டு. அவனும் தாயிடம் அன்பாகத்தான் இருந்தான். உலகமெல்லாம் தேடி ராமுவுக்குக் கடைசியாக ஒரு பெரிய உத்தியோகஸ்தரின் பெண் மனைவியாகக் கிடைத் தாள். ஜானகியம்மாள் இரண்டாவது சம்பந்தியைப்பற்றித் தினம் ஒரு தடவையாவது புகழ்ச்சியாகப் பேசாமல் இருக்கமாட்டாள். “மூத்த காளைதான் அப்படி ஒரே குதியாக் குதிச்சுட்டுப் போயிடுத்து. எங்க ராமுவின் தலைத் தீபாவளிக்கு எனக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கப் போகிறது! பாரு” என்று அடிக்கடிச் சொல்லிப் பெருமையடித்துக் கொண்டிருந்தாள். 

தீபாவளிக்கு ஒரு மாதத்திற்குமுன் ஓர் உத்தியோகம் காலி இருப்பதாகவும் உடனே கிளம்பி வரும்படியாகவும் ராமுவுக்கு மாமனாரிடமிருந்து தகவல் கிடைத்தது. அவன் அன்றே ஊருக்குக் கிளம்பிவிட்டான். வண்டியில் ஏறும் சமயத்தில் ஜானகியம்மாள் அவனிடம் வந்து, “கடுதாசு போடு; தீபாவளிக்கு ரெண்டு நாள் முந்தியே உங்கப்பாவை அழைச்சிண்டு வரேன்” என்றாள். ‘உம்’ என்று போன மைனர் ராமு தீபாவளிக்குப் பிறகுதான் போய்ச் சேர்ந்த விவரத்திற்குப் பெற்றோர்களுக்குக் கடிதம் எழுதினான். கடிதம் கிடைத்ததும், “பெண்டாட்டியாத்தே,பெரியாத்தே, பிழைக்கும் வழியைச் சொல்லாத்தேன்னு மாமனாராத்தையே சுத்த ஆரம்பிச்சுட்டாரோல்லியோ மைனர் ராமஸ்வாமி ஐயர்?” என்று ஜானகியம்மாள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். 

கிட்டுவுக்கு வீட்டில் ‘அப்பா பிள்ளை’ என்று பெயர். ஏனென்றால் தகப்பனாருக்கு அடங்கி அவர் சொற்படி நடப்பான். அவனுக்கு அவரே பார்த்து ஒரு கிராமாந்தரப் பெண்ணை மணம் செய்துவைத்தார். கல்யாணத்தின் போதே கிட்டுவின் தலைத் தீபாவளிக்குத் தான் நிச்சயமாகப் போகலாம் என்று தீர்மானித்திருந்தாள் ஜானகியம்மாள். ஆனால் புரட்டாசி மாதக் கடைசியில் அகோரமையருக்கு உடம்பு சரியில்லாமல் படுக்கையில் போட்டு விட்டது. ஜானகியம்மாளுக்கு அவருக்குச் சுசுருஷை செய்யத்தான் பொழுது சரியாயிருந்தது. மாமனாரிடமிருந்து அழைப்பு வந்ததும் கிட்டு, “தகப்பனாரின் உடம்பு அசௌக்கியத்தால் இந்த வருஷம் எனக்குத் தீபாவளிக்கு வரச் சௌகரியப்படாது” என்று பதில் எழுதி அகோரமையரிடம் அதைக் காட்டியபோது, அவர், “சீசீ! நன்றா யிராது. அம்மாவை அழைத்துக்கொண்டு நீ போயிட்டு வா” என்றார். 

தீபாவளிக்கு முதல்நாள் கிட்டு கிளம்புவதாக இருந்தான். அன்று ஜானகியம்மாளும் கிட்டுவும் வண்டியில் ஏறும் சமயத்தில் சகுனம் சரியாயில்லாததைக் கிட்டு கவனித்துவிட்டான். உடனே வண்டியில் ஏறி உட்கார்ந்திருந்த ஜானகியைக் கீழே இறக்கி, அமமா, சகுனம் சரியாயில்லை. எனக்கு என்னவோ மனசு சரியாகப்பட வில்லை. அப்பா உடம்புதான் நமக்குப் பெரிசு. நீ அப்பாவைப் பார்த்துக்கொள்ள வேணும். நான் மட்டும் போய்விட்டு நாளை மறுநாள் கிளம்பி ஓடி வந்து விடுகிறேன்” என்றான். 

“நீ ஓடி வரவேண்டாமடா, அப்பா. மெதுவாக இருந்து ஆற அமர விருந்து சாப்பிட்டு வா!” என்று குறையோடு பதிலளித்து விட்டு அவள் உள்ளே போய்விட்டாள். 

“ஏன் நீ போகலையா?” என்றார் அகோரமையர். “அப்பா பிள்ளையோன்னோ! சகுனம் சரியாயில்லையாம் அந்த ரிஷிக்கு அப்பாவைப் பார்த்துக்கொள் என்று உத்தரவு போட்டுவிட்டுப் போயிருக்கார் மகரிஷி” என்றாள். 

பாலு ஜானகியின் நான்காவது பிள்ளை. அவனுக்கு வடக்கு ஜில்லா ஒன்றில் பெண் நிச்சயம் செய்தபோது ஜானகி, “வடக்கே யெல்லாம் அவ்வளவாக மரியாதை தெரியாது. என்னமோ எதிர் ஜாமீனைக் கண்ணை மூடிண்டு கொடுக்கிறான்னா எதை வேணுமானாலும் இழுத்துப்போட்டுக் கட்டிப்பிடறதா என்ன?” என்று அகோரமையரிடம் கேட்டாள். ஆனால் பாலு பெண்ணைப் பார்த்துவிட்டு வந்தபின், “அவளைத் தவிர வேறு யாரையும் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேன்” என்று பிடிவாதம் பிடித்த தனால் கல்யாணம் நிச்சயமாகி நடந்துவிட்டது. ஆனால் அவள் எதிர்பார்த்ததுபோல் கல்யாணத்தின்போது கொஞ்சங் கூட மரியாதை இல்லாமல் பெண்வீட்டார் பழகிக் கொண்டார்கள். கல்யாணத்தன்று ஜானகியம்மாள் மற்ற ஸ்திரீகளுடன் சம்பந்தி அதிகாரம் செய்துகொண்டு சாப்பிட்டபோது, யாரோ ஒரு பெண் பந்தியில் இருந்தபடியே, 

“கந்தாடை சம்பந்தி கறுப்பில்மிக ஜோரு
அவருடைய பெண்ஜாதி அழகான மங்கு
அவளுடைய முகத்திலே மலைபோல மூக்கு
கண்டத்தைத் தின்னுமாம் அலைபோல நாக்கு
ஏரிக் கலுங்குபோல் இழிவான பல்லு
பாதாள பிலம்போலே பயமான கண்ணு
சம்பந்தி அம்மாளுக்கு ஒருகாது மூளி 
மற்றொரு காதிலே பித்தளை வாளி 
யாருக்கும் அடங்காத அவபத்ர காளி 
அகப்பட்டால் சாப்பிடுவள் ஒருகூடை போளி
ஏலேலோ ! ஏல லேலோ!” 

என்று சம்பந்திப் பாட்டை ஒடமெட்டில் ஏற்றி இறக்கிப் பாடி முடித்ததும் கையை உதறிக்கொண்டு கிளம்பிவிட்டாள் ஜானகி யம்மாள். அன்று இரவே ஊருக்குத் திரும்பிவிட்டாள். அதுமுதல் அந்த மாட்டுப் பெண்ணைப்பற்றியோ அவளுடைய பெற்றோர்களைப்பற்றியோ அவள் பேசுவதே இல்லை. அதனால் பாலுவுடன் தலைத் தீபாவளிக்கு அவள் போகாததில் ஆச்சரியம் இல்லை. 

கடைக்குட்டி மணிக்கு இந்த வருஷந்தான் கல்யாணம் நடந்தது. அவனுடைய தலைத் தீபாவளியைப்பற்றிய கவலைதான் இப்போது ஜானகியம்மாளைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தது. மணியோ டெல்லியில் உத்தியோகத்தில் இருக்கிறான். அவனுக்கு வரச் சௌகரியப்படுமோ, படாதோ? 

“அடுத்த பிள்ளையின் தீபாவளிக்குப் பார்த்துக்கொள்ளலாம்” என்று இத்தனை தடவையாகத் தள்ளிப்போட்டது போல் இந்தத் தடவை தள்ளமுடியாது. ஏனென்றால், ‘ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு’ என்று மணியின் தலைத் தீபாவளி ஒன்றுதான் பாக்கி. ஆதலால் ஜானகியம்மாளுக்கு அவள் ஆசையைப் பூர்த்தி செய்துகொள்ள மணியின் தலைத் தீபாவளி ஒன்று தான் மணியான சந்தர்ப்பம். எப்படியும் இந்தத் தடவை ஏமாறக் கூடாது என்ற தீர்மானத்துடன், தாழ்வாரத்தில் நாற்காலியில் சாய்ந்துகொண்டிருந்த அகோரமையரின் எதிரில் போய் அம்மாள் உட்கார்ந்துகொண்டாள். 

“என்னடி ஒரு மாதிரியாயிருக்கே! குடுகுடுப்பாண்டி ஏதாவது காலம்பரக் குருட்டு ஜோசியம் சொல்லி உன் மனசைக் குழப்பி விட்டிருக்கானோ?” என்று அகோரமையர் அவள் வாயைக் கிளறினார். 

“எனக்கு என்ன குருட்டு ஜோசியம் வேண்டிக்கிடக்கு? உங்களுக்குத்தான் என்னமோ தீபாவளி கொண்டாடப் போறேளுன்னு வரங்கொடுத்துட்டுப் போயிருக்கான். சரி, தீபாவளியோ இன்னும் பத்து நாள் கூட இல்லை. இந்தச் சம்பந்திப் பிராமணன் ஏன் ஒரு கடுதாசு கூடப் போடலை? மணி கிட்டேயிருந்து நேத்திக்குக் கடுதாசு வந்துதே, என்ன எழுதியிருந்தான்? ஒண்ணுமே எங்கிட்டே சொல்றதில்லே…”

“ஏதாவது இருந்தால்தானே சொல்றதுக்கு ? தலைத்தீபாவளிக்கு வரதாக உன் பிள்ளை எழுதியிருக்கான். அவ்வளவு தான்”. 

“இங்கே ஏதுக்காக அவன் வரான்? இங்கே என்ன வச்சிருக்கு? தலைத் தீபாவளின்னா மாமனாராத்துக்குப் போறது, பொண்டாட்டி கிட்டே பல்லை இளிக்கிறது, அப்பா அம்மாவை அன்னியிலேயிருந்து மறந்துடறது, இதுதானே உங்க பிள்ளைகளுக்குத் தொழில்? நானுந்தான் எத்தனை வருஷமாச் சொல்றேன், ஒரு தடவையாவது, ஒரு பிள்ளையோடு தீபாவளிக்குப் போயிட்டு வரணும்னு! உம்…” 

“உன்னையும் கூட்டிண்டு போறதுக்குத்தான் மணி டெல்லியி லிருந்து நேரே இங்கே வரான். மற்றப் பிள்ளைகளைப்போல் நம்ம மணி இருக்கமாட்டான். கவலைப்படாமல் இரு”. 

“எரிகிற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? நானும் அப்படித்தான் எண்ணிண்டிருந்தேன். மூத்தவன் நாலு பேரும் நாமத்தைச் சாத்திட்டானுக. இவன் ஒருத்தன்தான் என்னை அப்படியே கோபுரத்திலே தூக்கி வச்சுண்டு கூத்தாடப் போறானாக்கும்! என்னமோ போங்கோ. அவன் என்ன நிலைமையிலே இருக்கானோ? பெரிய உத்தியோகம் கிடைச்சுடுத்துன்னு தலைகால் புரியல்லையோ என்னமோ? அதோடு அவன் மாமனார் வேறே துப்பட்டி கலெக்டர் பண்றார். இவ்வளவு அந்தஸ்துலே அவன் எங்கே இந்தக் கிழத்தை லக்ஷ்யம் செய்யப் போறான்?” 

“எல்லாத்தையும் நீயே சொல்லிவிடு. கட்டாயம் அழைச்சுண்டு போவான். மணியே ஒரு அலாதி தினுசு. அவன்களுக்கும் மணிக்கும் ரொம்ப வித்தியாசமுண்டு”. 

“என்னமோ, பார்ப்பம். மணி எப்போதுமே ஒரு கொரளி. நீங்க என்னமோ அவனை ஒசத்திண்டிருக்கேளே ; உங்க எண்ணத் தையுந்தான் நான் கெடுப்பானேன்? எனக்கு மட்டும் நம்பிக்கை ல்லை. ‘ஆண்டி பெத்தது அஞ்சும் குரங்கு என்கிற கதையாய்த் தான் முடியுமோ என்னமோ?” 

“சரி, ஏதாவது அஸ்து சொல்லிண்டிருக்காதே. நடக்கிறதை யெல்லாம் பொறுத்துண்டு பாரு ‘” என்று அகோரமையர் ஜானகி யம்மாளைச் சமாதானப்படுத்தி வைத்தார். 

“வந்து சேருகிறேன்” என்று எழுதியிருந்தபடியே மணி ஊருக்கு வந்து சேர்ந்தான். பிள்ளை வந்த சந்தோஷத்தில் ஜானகி அம்மாளுக்குத் தலைகால் புரியவில்லை. மணியும் தாயுடன் பழைய கொரளித்தனத்தையெல்லாம் விட்டுவிட்டுப் பழகினான். இது ஜானகிக்குக் கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது. ஒழிந்த நேரத்தில் மணியிடம் வந்து தீபாவளியின்போது மாமனார் வீட்டில் அப்படி நடந்துகொள்ளவேணும், இப்படி நடந்து கொள்ளவேணும் என்றெல்லாம் கூறினாள். மணியும் தாய் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டி வந்தான். 

தீபாவளிக்கு முதல் நாள் காலையிலேயே ஆகாரத்தை முடித்துக்கொண்டு பத்து மணி வண்டிக்கு மணி, ஜானகியம்மாள், அகோரமையர் மூவரும் கிளம்பினார்கள். ஸ்டேஷன் பிளாட்பாரத் துக்குச் சென்றதும் ஜானகியம்மாளுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. வடக்கேயிருந்தும், தெற்கேயிருந்தும் வரும் வண்டிகள் அங்கேதான் சந்திப்பது வழக்கம். 

வடக்குப் பக்கத்திலிருந்து வரும் வண்டி வந்து நின்றதும் யாரோ, “மணி, மணி” என்று கூப்பிட்ட சத்தம் மட்டுந்தான் ஜானகியின் காதுகளில் விழுந்தது. மணி மாயமாய் மறைந்ததைத் தாய் தகப்பனார் இருவரும் கவனிக்கவில்லை. 

சற்று நேரத்துக்கெல்லாம் தூரத்தில் மணியும் அவன் மாமனார் டிபுடி கலெக்டர் சுந்தரமூர்த்தி ஐயரும் வருவதை ஜானகி யம்மாள் கவனித்தாள். “ஏன்னா அதோ பார்த்தேளா? சம்பந்திப் பிராமணனும் மணியும் வராளே? பிராமணன் நம்மை எதிர் கொண்டு அழைக்க வரார் போலேயிருக்கு. அதெல்லாம், மணி மாமனார் மரியாதை விதரணை எல்லாம் தெரிஞ்சவர்தான்…” என்று சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் சமீபத்தில் வந்து விட்டார்கள். 

“வாருங்கோ, சம்பந்தி” என்று அகோரமையர் வாய்நிறையச் சொல்லி வரவேற்றார். சம்பந்தியும் பதிலுக்கு, “நேத்தே வந்து இருக்கணும்; இன்னிக்கு அநியாயக் கூட்டம். பொம்மனாட்டிகளை அழைச்சுண்டு வரத்துக்குள்ளே பிராணன்போய்ப் பிராணன் வந்துடுத்து. சரி, கிளம்பலாமே; அவாள்ளாம் தனியா நிக்கறா. எங்கே, சம்பந்தியம்மா கூட ஸ்டேஷனுக்கு வந்திருக்காப்பலே யிருக்கே?” என்றார். 

ஜானகியம்மாளுக்கு இடி விழுந்தது போலாகிவிட்டது. கோரமையருக்கும் ஒன்றுமே புரியவில்லை. வந்தவர்களை வரவேற்காமல் என்ன செய்கிறது? எல்லாரும் திரும்பி ஊருக்கு வந்து சேர்ந்தார்கள். 

அன்று மாலை மணி மாட்டுக்கொட்டிலில் தனியாக இருந்த போது அகோரமையர் மணியைத் தொடர்ந்து சென்று, “என்னடா இது?” என்று கேட்டார். 

“டில்லியிலிருந்து மாமனாருக்கு நான்தான் கடிதம் எழுதியிருந்தேன். ‘முடியுமானால் எங்கள் ஊருக்கு வந்து எங்கள் வீட்டிலேயே இந்த வருஷம் தீபாவளியை நடத்தலாம்’ என்று எழுதியிருந்தேன். அதற்கு நான் கிளம்பும் வரை பதில் வரவில்லை. அதனால்தான் ரெயிலுக்கு நாம் எல்லோருமாகக் கிளம்பினது. அவர்கள் வராவிட்டால் நாம் அங்கே போய்விடலாமென்று தீர்மானித்திருந்தேன். அவர்களே இங்கே வந்து விட்டார்கள்” என்றான். 

ஜானகியம்மாள் தீபாவளியன்று விடியற்காலையில் அகோரமையரைத் தனியாகக் கூப்பிட்டு, “நான் சொன்னது சரியாப் போயிடுத்தா? ‘ஆண்டி பெத்தது அஞ்சும் குரங்கு’ தானே இப்போ?” என்று கேட்கும்போது வாசலில் குடுகுடுப்பைக்காரன் கூவும் சப்தம் இன்றைக்கும் கேட்டது!

– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *