(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காலையிலிருந்து பெருமாள் பலவாறான சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அந்தியானதும் பங்களாவுக்கு வந்து தன்னைச் சந்திக்கும்படி கண்டக்டர் பிரட்டுக்களத்தில் கூறியிருந்தார். அவர் அப்படிக் கூறினால் ஏதோ முக்கியமான சங்கதியாகத்தான் இருக்க வேண்டும்.
லயத்தின் முன்னால் பையன்களுடன் விளையாடிக் கொண்டிருந்த தங்கராசுவிடம் “ஆயா வந்தா நான் கண்டக்டரையா பங்களாவுக்குப் போயிருக்கேன்னு சொல்லுடா” எனக்கூறிவிட்டுக் குறுக்குப் பாதையில் ஏறிக் கண்டக்டரின் பங்களாவை வந்தடைந்தான் பெருமாள்.
முன்விறாந்தையில் செக்றோல் செய்து கொண்டிருந்த கண்டக்டர் பெருமாளைக் கண்டதும், “வா பெருமாளு ஒன்ன எதிர்பாத்துக்கிட்டுத் தான் இருக்கேன்” எனக் கூறியபடி செக்றோலை மூடிவைத்துவிட்டு நிமிர்ந்தார்.
“என்னங்கையா ஏதும் அவசரங்களா?”
“கொழும்பில நம்ம மச்சினன் ஒருத்தர் கடை வச்சிருக்காரு… அங்க வேலை செய்ய நம்பிக்கையான பொடியன் ஒருத்தன் வேணுமாம். சாப்பாடு, படுக்கை வசதி, தங்கிறதுக்குத் தனியான றூம் எல்லாம் இருக்கு; நல்ல சம்பளமும் கொடுப்பாங்க… அதுதான் ஒன் மகனை அனுப்பிவைக்கிறியான்னு கேட்கத்தான் கூப்பிட்டேன்.” கண்டக்டர் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தார்.
பெருமாள் ஒரு கணம் யோசித்தான். வீட்டில் கையுதவிக்குத் தங்கராசு மட்டுந்தான் இருக்கிறான். விறகுக்குச்சி பொறுக்குவதற்கும் கடைகண்ணிக்குப் போவதற்கும் சிறுசுகளைக் கவனித்துக் கொள்வதற்கும் அவனை விட்டால் வேறு ஆளில்லை. அவனைக் கொழும்புக்கு அனுப்பிவிட்டு என்ன செய்வது? அவனை விட்டுப்பிரிய தாயும் சம்மதிக்கமாட்டாள்.
“என்ன பெருமாளு, யோசனை பண்ணிக்கிட்டிருக்க….?”
“இல்லீங்க, அவன் எனக்கு ஒரே ஆம்பளப்புள்ள….. ஸ்கூலுக்கும் போய்க்கிட்டிருக்கான்…. ஆறாம் ஆண்டு படிக்கிறான்… அத எப்படிங்க கெடுக்கிறது?” கண்டக்டரின் மனங்கோணாமல் பொருத்தமான பதிலைக் கூறிவிட்ட திருப்தி பெருமாளுக்கு.
“இந்தாப்பா, தோட்டக்காட்டில பயலுக படிக்கிறேன்னு சொல்லி அப்பன் ஆயிக்கு செலவுதான் வைப்பானுக, அப்புறமா கொஞ்சம் வளந்தோடன கொழும்புக்கும் கண்டிக்கும் கோப்பை கழுவப் போயிறுவானுக…. ஒன் மகன் படிச்சது போதும்; நான் சொல்றமாதிரி நம்ம மச்சினன்கிட்ட அனுப்பிவை… தொழிலும் பழகுவான்… நல்ல பழக்க வழக்கமும் வரும்.”
கண்டக்டரது இளைய மகன் அப்போது அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான். “டடி, நாளைக்கு ஸ்கூல்பீஸ் கட்டணும்…. அப்புறம் பொக்கற் மனியும் வேணும்….” எனச் செல்லமாகத் தந்தையின் கையைப் பற்றினான்.
“சரி கண்ணா, நீ இப்ப உள்ள போ…. கதைச்சுக்கிட்டிருக்கேன்… அப்புறமா வந்து தாறேன்” எனக்கூறிய கண்டக்டர் மகனை உள்ளே அனுப்பிவைத்தார்.
பெருமாள் கண்டக்டரின் மகனை உற்றுப் பார்த்தான். தங்கராசுவின் வயசுதான் அவனுக்கும் இருக்கும்…. தினமும் டவுனில் உள்ள பாடசாலைக்குப் போவதற்காகக் காலை வேளைகளில் அவன் பஸ்ஸிற்குக் காத்திருப்பதை பெருமாள் பலதடவை பிரட்டுக் களத்திற்குப் போகும் வழியில் பார்த்திருக்கிறான்.
“ஐயா, கோவிச்சுக்காதீங்க… ஒங்க மகனூட்டு வயசுதான் என் மகனுக்கும் இருக்கும்…. அவனும் கொஞ்சம் படிக்கட்டுங்கையா… அப்புறமாப் பாப்பங்க….”
பெருமாளின் வார்த்தைகள் கண்டக்டரின் நெஞ்சில் சுரீரெனத் தைத்தன. அவரது மகனோடு தனது மகனையும் ஒப்பிட்டுப் பேசிய பெருமாளின் ராங்கித்தனம் அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
“என்ன பெருமாளு பேச்சுப் பேசுறே… லயத்தில இருந்துக் கிட்டு ஒன் புள்ளயைப் படிக்கவைக்க ஏலுமா…? வாழையடி வாழையா ஒங்க அப்பன் பாட்டன் காலத்தில இருந்து அந்தப் பத்தடிக் காம்பராவில கத்தியும் சுரண்டியுமாத்தானே வாழுறீங்க…. இப்ப மட்டும் ஒன்மகன் பெரிசா படிச்சுக்கிழிச்சுடப் போறானோ…?”
“அப்புடிச் சொல்லாதீங்க…. எங்கவூட்டு காலந்தான் போச்சு… இனிமேசரி புள்ளைங்க படிக்கட்டுமே…”
கண்டக்டர் ஏளனமாகச் சிரித்தார். “இப்படிச் சொன்னவங்க ரொம்பப்பேரு…. நானும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்…. ஒம்புள்ள தங்கராசுவும் தோட்டத்தில பேரு பதிஞ்சு எங்கிட்ட ஒரு நாள் வேலைக்கு வரத்தான் போறான்… அப்ப பாத்துக்கிறேன்.”
பெருமாள் விருட்டென எழுந்தான். “தெருத்தெருவாப் பிச்சை எடுத்தாலும்சரி எம்புள்ளயப் படிக்க வைப்பேனே தவிர ஒங்க காலடிக்கு வரவுடமாட்டேன்.”
கண்டக்டரும் நாற்காலியைப் பின்புறமாகத் தள்ளியபடி வேகமாக எழுந்தார். ஆத்திரத்தில் அவரது உடல் நடுங்கியது. கதவின் பக்கம் கையைக் காட்டி “போ வெளியே” என உரத்த குரலில் கத்தினார்.
பெருமாள் விருட்டென வெளியே வந்தான். கண்டக்டர் படீரெனக் கதவை அடித்துச் சாத்தியது அவனுக்குப் பிடரியில் அறைவதைப் போலிருந்தது.
முற்றத்தில் பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த தோட்டக்காரன் “என்னண்ணே, என்ன நடந்துச்சு…? ரொம்பக் கோபமாப் போறாப்புல இருக்கே…” எனக் கேட்டான்.
“இந்தக் கண்டக்டர் சொல்றான் …. இவரு வூட்டுப் புள்ளைங்க மட்டுந்தான் படிக்குமாம்…. படிக்கணுமாம்… நம்ம வூட்டுப்புள்ளைங்க படிக்காதாம்… படிக்கக் கூடாதாம்.”
தோட்டக்காரன், கண்டக்டர் கவனிக்கிறாரா எனப் பங்களாப் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டுத் தாழ்ந்த குரலில் “சரி சரி, போங்கண்ணே…. அப்புறமாப் பேசிக்குவோம்” என்றான்.
“ஒங்கமாதிரி தலையச் சொறிஞ்சிக்கிட்டுப் போறவனில்ல நானு; நெனச்சத செஞ்சுகாட்டுவேன். நீ இருந்துபாரு எம்புள்ளயப் படிக்க வைக்கிறேனா இல்லையான்னு…” பெருமாளின் குரலில் உறுதி தொனித்தது.
நடுக்காம்பராவில் சுவரோரமாகச் சாக்கை விரித்து அதனருகே பலகைக் கட்டைமீது குப்பி விளக்கை வைத்துப் படிப்பதற்கு ஆயத்தமானான் தங்கராசு. சாக்கின்மேல் சம்மணம் கொட்டியிருந்து முன்னால் கொப்பியை விரித்துவைத்துக் கொண்டு குனிந்து எழுதத்தொடங்கினான். தமிழ்ப்பாடத்தில் வாத்தியார் கொடுத்த வீட்டுவேலையைச் செய்துகொண்டு போகாவிட்டால் மறுநாள் பாடம்முடியும்வரை முழங்காலிலேதான் நிற்கவேண்டி வரும்.
இஸ்தோப்பின் பக்கமிருந்து கிளம்பிய புகை நடுக்காம்பராவை நோக்கி வரத்தொடங்கியது.
“என்ன ஆயா, எந்தநாளுந்தான் சொல்லிக்கிட்டிருக்கேன்…. நான் படிக்க ஒக்காந்தேன்னா நீயும் அடுப்பில பொகையப் போடுற… எனக்குக் கண்ணு எரியுது ; படிக்க முடியல்ல” என்றவாறு கண்களைக் கசக்கியபடி நிமிர்ந்தான் தங்கராசு.
“மெலாரு பச்சயா இருந்தா நான் என்ன செய்யட்டும்?; பொகைதான் வரும். காஞ்ச மெலாரு பாத்துப் பொறுக்கிட்டுவான்னு சொன்னா நீ எந்த நாளும் பச்சை மெலாருதான் கொண்டாறே…” எனக் கூறிக்கொண்டே அவனது தாய் அலமேலு ஊதாந்தட்டையை எடுத்து அடுப்பை ஊதத்தொடங்கினாள். அடுப்பிலிருந்து வரும் புகை குறைந்தது. ஆனாலும் இஸ்தோப்பின் சுவருக்கும் கூரைக்கும் இடையே உள்ள நீக்கல் வழியாக இப்போது பக்கத்து வீட்டுப்புகை வரத்தொடங்கியது.
தங்கராசுவிற்கு மூக்கு அரித்தது. பலமாக இரண்டு தடவை தும்மிவிட்டு மூக்கிலிருந்து வடிந்த நீரைப் புறங்கையால் துடைத்தபடி நிமிர்ந்தான். முன்புறமாகக் குனிந்திருந்து எழுதியதால் முதுகு வலிக்கத் தொடங்கியது. சம்மணங்கொட்டிய கால்களை விரித்து நீட்டிநிமிர்ந்து உட்கார்ந்தான்.
குப்பி விளக்கிலிருந்து கிளம்பிய புகையும் அடுப்புப் புகையுடன் சேர்ந்துகொண்டது. கண்களில் எரிச்சல் அதிகமாகியது. அவனுக்குத் தெரியும் கண்கள் எரியத் தொடங்கிவிட்டால் சிறிது நேரத்தில் தூக்கம் வந்துவிடும்.
காம்பராவில் எதிர்மூலையில் அவனது தங்கை நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். அவன் தும்மிய சத்தத்தினாலோ என்னவோ தொட்டில் சீலைக்குள் இருந்த குழந்தை நெளிவது தெரிந்தது.
தங்கராசு எழுந்து வெளியேவந்து வாசலில் மூக்கைச் சிந்திவிட்டு மூலையிலிருந்த அலுமினியக் குடத்திலிருந்து கோப்பையில் தண்ணீரை ஊற்றிக் கண்களையும் முகத்தையும் கழுவிக்கொண்டான்.
வெளியே பந்தத்துடன் யாரோ சோலைமலை வீட்டுப் பக்கம் போவது தெரிந்தது. லயத்து நாய்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து குரைக்கத் தொடங்கின. அந்திபட்டாலே இப்படித்தான், பந்தத்தோடு யாராவது அடிக்கடி சோலைமலை வீட்டுப்பக்கம் போவார்கள்; அப்போதெல்லாம் இந்த நாய்கள் பெருங்குரல் எழுப்பத் தொடங்கிவிடும் சோலைமலை மாட்டுத் தொழுவத்தில் வைத்து நாட்டுக்கள்ளு விற்பதாகப் பேசிக்கொண்டார்கள். அவனது தந்தை பெருமாளும் இப்போது அங்குதான் போயிருக்கிறாரென்பது தங்கராசுவிற்குத் தெரியும். இந்த லயத்து நாய்கள் பலமாகக் குரைக்கும் சத்தம் லயத்தில் உள்ளவர்களுக்குப் பழகிப்போய் விட்டது. யாருமே அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.
தொட்டில் சீலைக்குள் நெளிந்து கொண்டிருந்த தங்கச்சிப் பாப்பாகூட இப்போது அமைதியாகத் தூங்குவது தெரிந்தது. ஆனால் தங்கராசுவிற்குமட்டும் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டால் அமைதியாகப் படிக்கமுடிவதில்லை. புத்தகத்தை மூடிவைத்துவிட்டுச் சத்தம் ஓயும்வரை சுவருடன் சாய்ந்து கொள்வான்.
தங்கராசு மீண்டும் படிக்கத் தொடங்கியபோது தங்கச்சிப் பாப்பா அழுகையோடு நெளியத் தொடங்கினாள்.
“அடே தங்கராசு, அம்மாபுள்ளய கொஞ்சம் ஆட்டிவிடு…. சோறு வடிச்சுக்கிட்டு இருக்கேன்.”
“என்ன ஆயா, கொஞ்சங்கூட படிக்க வுடமாட்டேங்கிற….. வேலை வச்சுக்கிட்டே இருக்கே….” எனச் சினத்துடன் கூறிக் கொண்டே எழுந்த தங்கராசு தொட்டிலை ஆட்டத் தொடங்கினான்.
குழந்தையின் அழுகை குறையவில்லை. ‘சுர்’ரென்ற சத்தத்துடன் நிலம் நனைவது தெரிந்தது. தொட்டிலை அங்கும் இங்கும் அசைத்து நிலத்திலே கோலம் வரைந்தான் தங்கராசு; அவனுக்கு எப்பவுமே இது ஒரு விளையாட்டு.
“ஏய் மாடு, காது கேக்கலியா…. புள்ள கத்திறது….?” எனக் கூறிக்கொண்டே வந்த அலமேலு அவனது காதைப்பிடித்துத் திருகிவிட்டு பிள்ளையைத் தூக்கினாள்.
தங்கராசு மீண்டும்போய் ஒருதடவை கண்களைக் கழுவிக் கொண்டான்.
“என்னடா தங்கராசு, என்ன பண்ணிக்கிட்டு இருக்கே… படிக்கலியா?” எனக் கேட்டுக்கொண்டே தள்ளாடியபடி உள்ளே நுழைந்தான் பெருமாள்.
“ஒரே பொகைப்பா…. அதுதான் கண்ணைக் கழுவிட்டு வந்தேன்…”
“ஏன்டி அலமேலு, அவன் படிக்கிற நேரத்திலதான் பொகையைப் போடணுமா….. அந்திக்கு வந்த ஒடனேயே ஆக்கியிருக்கலாந்தானே….”
அலமேலு பதிலேதும் பேசாமல் பிள்ளைக்குப் பாலூட்டத் தொடங்கினாள். அடுத்த வீட்டிலிருந்துதான் புகைவருகிறது என்று சொன்னால் கணவன் அங்கு சண்டைக்குப் போய்விடுவான் என்பது அவளுக்குத் தெரியும். சிறிது நாட்களாக கணவனிடத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை அவள் அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறாள். தங்கராசுவின் படிப்புக் காரணமாக அவனுக்கும் லயத்தில் உள்ளவர்களுக்கும் அடிக்கடி சச்சரவுகள் ஏற்படுவதுண்டு.
போன வாரத்தில் ஒருநாள் லெச்சுமன் பூசாரி மூன்றாவது காம்பரா மூக்காயிக்குப் பிடித்திருந்த பேயை விரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். மூன்று மாதங்களுக்கு முன்னர் நஞ்சுகுடித்து இறந்துபோன முனியாண்டிதான் பேயாகி ‘மூணு ரோட்டு’ முச்சந்தியில் வைத்து அவளைத் தொடருகிறான் என லயத்தில் பேசிக்கொண்டார்கள். பூசாரியின் உடுக்குச் சத்தத்துடன் பேய்விரட்டும் ஓசையும் மூக்காயியின் அலறலும் பயங்கரமாகக் கேட்டுக்கொண்டிருந்தன.
சோலைமலை வீட்டுக்குப் போய்விட்டுத்திரும்பிய பெருமாளுக்கு உடுக்குச்சத்தம் ஆத்திரத்தைக் கிளப்பியது. “இதென்னடா மசிரு பூசாரி, எந்தநாளும் உடுக்கு அடிச்சு ஆளுங்கள ஏமாத்திக்கிட்டிருக்கான்… லயத்தில ஒரே சத்தம்; புள்ளைங்க படிக்கேலாது. இப்பவேபோயி செவிட்டில ரெண்டு குடுத்து உடுக்கைப் புடுங்கிக்கிட்டு வாரேன்” எனக் கூறிக் கிளம்பினான்.
“சும்மா இருங்க, ஏன் ஊர்வம்புக்குப் போறீங்க…. அப்புறம் பூசாரி ஒங்கமேல எதையாவது ஏவிவிடுவான்” என்றபடி அலமேலு இஸ்தோப்புக் கதவை மூடி உள்ளே கொண்டியைப் போட்டாள். அவளுக்குத் தெரியும் பேய் விரட்டும் இடத்துக்குச் சென்றால், அங்குள்ளவர்களும் மதுவெறியிலேதான் இருப்பார்கள்; கணவனை அடித்து நொருக்கிவிடுவார்கள் என்று.
பெருமாள் சிறிது அமைதியானான்.
அன்றொருநாள் தங்கராசு படிக்கும் தோட்டப் பாடசாலையில் நடந்த கட்டிடத் திறப்பு விழாவிற்கு அவன் சென்றிருந்தபோது நடந்த நிகழ்வுகள் அவன் நினைவில் வந்தன…. அப்போது அவனுக்கு எவ்வளவு உற்சாகம் ஏற்பட்டது. அவன் படித்த காலத்தில் சிறிது மடுவமாக இருந்த அந்தப் பாடசாலை மூன்று புதிய மாடிக் கட்டிடங்களுடன் கம்பீரமாகக் காட்சியளித்தது.
விழாவிலே பேசிய கல்விப் பணிப்பாளர் மலையகக் கல்வி முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள்பற்றி விரிவாக எடுத்துரைத்தார். முக்கியமாகக் கட்டிட வசதிகள், தளபாடங்கள், பாடசாலைச் சீருடைகள், இலவசப் புத்தகங்கள், விளையாட்டு மைதானம் முதலியன வழங்கப்படுவதோடு மலையகத்திலே பிறந்தவர்களை ஆசிரியர்களாகவும் உயர் அதிகாரிகளாவும் நியமித்து மலையகக் கல்வியில் மறுமலர்ச்சி ஏற்பட வகைசெய்வதாகக் குறிப்பிட்டார். அத்தோடு அந்தப் பாடசாலையைத் தரம் உயர்த்தி உயர்வகுப்புவரை கல்விகற்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.
பெருமாளுக்கு உற்சாகம் தாங்கமுடியவில்லை; கைகளைத் தட்டித் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தான். கண்டக்டரிடம் அவன் விடுத்த சவாலை அவனால் நிறைவேற்றிவிட முடியும். தங்கராசுவை அந்தப் பாடசாலையிலேயே உயர்வகுப்புவரை படிக்கவைக்க முடியும்.
“என்னங்க யோசனை…. சாப்புட வாங்க” என அலமேலு அழைத்தாள். அப்போதுதான் பெருமாளின் சிந்தனை கலைந்தது.
தங்கராசு மறுநாள் நடக்கவிருக்கும் தமிழ்த்தினப் பேச்சுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக தமிழ்ப்பாடல் ஒன்றை மனனம் செய்துகொண்டிருந்தான்.
“தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்குப்
போவென்று சொன்னாள் உன் அன்னை…..
கடிகாரம் ஓடுமுன் ஓடு …. என் கண்ணல்ல……
மலைவாழை யல்லவோ கல்வி…..”
தங்கராசுவின் குரல் லயத்துச் சத்தங்களிலும் பூசாரியின் உடுக்கு ஒலியிலும் கலந்து நலிந்தும் தேய்ந்தும் ஒடுங்கியும் ஒலித்துக் கொண்டிருந்தது.
அரிசிச்சாப்புலயத்து மோகனகுமார் பள்ளிக்கூடம் போகும் வழியில் தங்கராசுவைச் சந்தித்தான். இரண்டு நாட்களாக அவன் பாடசாலைக்கு வரலில்லை. கல்லுமலையில் கவ்வாத்துத் தொடங்கியதால் ‘வெறகு கழிக்கப்’ போவதாகக் கூறினான்.
“அடே தங்கராசு, நம்ம லயத்து மருதைக் கங்காணி வீட்டில டீ.வி. வாங்கியிருக்காங்க…. அந்திப்பட்டா நான் அங்கதான் போவேன்…. நேத்து ராவு கிரிக்கட் மெட்ச் போட்டாங்க, லயத்துப் பயலுக எல்லாம் அங்கதான்… ஒரே ‘சொலி’ தான்டா.”
“எங்கப்பா அதெல்லாம் பாக்க வுடாதடா…” தங்கராசு ஆதங்கத்துடன் கூறினான்.
மோகனகுமார் கவ்வாத்து மலைப்பக்கம் திரும்பியபோது மேட்டுலயத்துக் கணேசு எதிரே வந்தான்.
“ஏன்டா, ஸ்கூலுக்கு வரல்லியா?”
“இல்லடா தங்கராசு, நம்ம வீட்ல ஆயாவுக்கு ‘அம்மா’ போட்டிருக்கு… அப்பா வேலைக்குப் போயிறும்…. நான்தான் சமைக்கணும், மாட்டுக்குப் பில்லு அறுக்கணும், எல்லா வேலையும் செய்யணும்டா.”
தங்கராசுவின் வீட்டிலும் முன்பொருமுறை அம்மை வருத்தம் வந்திருந்தது. ஆயாவுக்கும் தங்கச்சிக்கும் ஒரே நேரத்தில் வருத்தம் வந்தபோது நடுக்காம்பரா மூலையில் வெள்ளை வேட்டி ஒன்றினால் மறைவுகட்டி, வாசலில் வேப்பிலை செருகி உள்ளே ஆயாவும் தங்கச்சியும் படுத்துக்கொண்டார்கள். அடுத்த வீட்டு அம்மாயி தினமும் வந்து மாரியம்மன் தாலாட்டுப் பாடித்தான் அந்த வருத்தத்தை மாற்றினாள்.
அந்த நாட்களில் இஸ்தோப்பின் ஒருமூலையில் இருந்துதான் தங்கராசு படிக்கவேண்டி ஏற்பட்டது. அம்மாயி கரகரத்த குரலில் நடுக்கத்தோடு பாடிய மாரியம்மன் தாலாட்டுத்தான் அவனுக்கு மனதில் பதிந்ததேதவிர பாடங்கள் மனதில் பதியவில்லை.
தங்கராசுவுக்கு நண்பர்கள் கூறும் கதைகளைக் கேட்கும் போது தானும் அவர்களைப்போன்று சந்தோஷமாக இருக்கமுடியவில்லையே என ஏக்கம் உண்டாகும்.
“போன கெழமை மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு கொழும்புல இருந்து ராஜபாட்டு அண்ணன் வந்திருந்தாரு. அவரும் மயிலு மாமாவும் டோலாக்கு அடிச்சி பாட்டுப்பாடத் தொடங்கினாங்கன்னா லயத்துப் பயலுக எல்லாம் அந்த எடத்திலதான் இருப்பாங்க…. ‘பஜா’ முடிய ராவு பதினொரு மணியாகிடும். கைதட்டி பைலா போட்டுக்கிட்டே இருப்போம்… ஆயா சாப்பிடக் கூப்பிட்டாலும் அந்த எடத்தவுட்டு வரமாட்டோம்… ராஜபாட்டு அண்ணே கொழும்புக்குப் போறவரைக்கும் ஒரே பஜாதான்டா.”
பக்கத்து வாங்கிலிருக்கும் பரமதேவன் இதைக்கூறிய போது தன்னைக் கட்டுப்படுத்தி எந்நேரமும் படி படியென நச்சரித்துக் கொண்டிருக்கும் தனது தந்தைமேல் தங்கராசுவுக்கு வெறுப்புத்தான் ஏற்பட்டது,
தொங்கல் காம்பரா சுப்பன் கங்காணி வீட்டில் அவரது மகளுக்குச் சடங்கு நடந்துகொண்டிருந்தது. பெருமாள் தங்கராசுவையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றிருந்தான். கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் கங்காணியின் மூத்தமகன் சடங்கிற்காக வந்திருந்தான். வேலைக்குச் சென்ற ஆறுமாதத்தில் ஆளே உருமாறியிருந்தான். நன்றாகக் கொழுத்து சதைப்பிடிப்போடு நிறம்பெயர்ந்திருந்தான். ‘டிஸ்கோ’ பாணியில் தலையை மேவிவாரி டெனிம்சேட் காற்சட்டையுடன் வெகு ஸ்டைலாகக் காட்சியளித்த அவன், சிறிய ரேடியோவுடன் கூடிய ‘இயர்போன்’ கருவியைக் காதில் மாட்டி பொப்பிசைப் பாடலொன்றை ரசித்து, நிலத்திலே காலால் தாளம் போட்டுக் கொண்டிருந்தான். அவனது நடையுடை பாவனை யாவும் தங்கராசுவைப் பெரிதும் கவர்ந்தன. கொழும்புக்குச் சென்றால் கங்காணியின் மகனைப் போன்று தானும் ஸ்டைலாக வரலாமென அவனது மனம் எண்ணியது.
கங்காணி வாயோயாமல் தனது மகனைப் பற்றியே புகழ்ந்துகொண்டிருந்தார். “இந்தா பெருமாளு, இந்தச் சடங்கே எம்புள்ள ஒழைச்ச காசிலதான் நடக்குது… அவன் வேலைசெய்யிற ஓட்டல் மொதலாளி ரொம்ப நல்லவரு…. ரொம்பப் பணம் குடுத்து ஒதவி செஞ்சிருக்காரு… ஓம் புள்ளயையும் கண்டக்டரையா கொழும்புக்கு அனுப்பச்சொல்லி கேட்டாருதானே….. அந்தநேரம் அனுப்பியிருந்தி யென்னா அவனும் இப்ப ஒரு நெலமைக்கு வந்திருப்பான்….. அநியாயமாக் கெடுத்திட்டே…..”
பெருமாளின் சிந்தனையில் ஒரு மின்னல்கீற்று…. தான் தவறு செய்துவிட்டேனா என்ற தடுமாற்றம்… மறுகணமே அவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். தொடர்ந்தும் சடங்கு வீட்டில் தங்கியிருக்க அவனுக்குப் பிடிக்கவில்லை. தங்கராசுவையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிவிட்டான்.
மறுவாரத்தில் ஒரு நாள்….
பக்கத்துக் காம்பரா கந்தையா புதிதாக ரேடியோ வாங்கி யிருந்தான். அதில் இந்திச் சினிமாப் பாட்டுகள் உச்சஸ்தாயியில் ஒலித்துக் கொண்டிருந்தன. படித்துக்கொண்டிருந்த தங்கராசு தனது இரு காதுகளுக்குள்ளும் சுட்டு விரல்களைச் செலுத்திக் காதுகளைப் பொத்திக்கொண்டு அன்றைய பாடத்தை உரத்துப் படிக்கத் தொடங்கினான்.
சில நாட்களில் கந்தையாவின் வயோதிபத் தந்தை இரவிரவாகப் பலமாக இருமிக்கொண்டிருப்பார். அவருக்கு நெஞ்சுச்சளி அடைத்து மூச்சுமுட்டி கதைக்க முடியாமல் திணறும்போது, தாத்தா சாகப் போகிறாரோ எனத் தங்கராசு எண்ணுவான் . அப்போதும் இப்படித்தான் அவன் காதுகளுக்குள் விரல்களைச் செலுத்திக்கொண்டு உரத்த சத்தமாகப் படிப்பான்.
“ஏய் கந்தையா, வீட்டில ரேடியோ வாங்கியிருக்கேன்னு எங்களுக்குப் போட்டுக் காட்டிறியா….. சத்தத்தைக் கொஞ்சம் கொறைச்சுவை…. என் வீட்டில புள்ள படிக்கிறான்….” பெருமாள் பலமாக் கத்தினான்.
“என்ன இவரு பெரிய ஆள் மாதிரி ‘ரூல்ஸ்’ பேசுறாரு… லயத்தில நம்ம வீட்டிலயுந்தான் புள்ள படிக்குது…. அதுக்காக பாட்டுக் கேக்காம இருக்க முடியுமா?” அடுத்த வீட்டில் இருந்து கந்தையா குரல் கொடுத்தான்.
“ஏய் பாட்டுக் கேக்கவேணாமுன்னு சொன்னேனா…? நல்லாக் கேளு… கொஞ்சம் ரேடியோவைக் கொறைச்சு வையேன்… தேத்தண்ணிக் கடைமாதிரி இருக்கு வீடு….”
கந்தையா ஆக்குரோசத்துடன் வெளியே வந்தான். “இந்தா பெருமாளு தேவையில்லாத பேச்சு பேசாத. போன கெழம சுப்பன் கங்காணிவீட்டில சடங்குக்கு நாலுநாளா ஸ்பீக்கர் போட்டாங்க… அப்பமட்டும் சத்தம் இல்லியா… அந்த நேரம் ஒம்புள்ள படிப்பு எங்க போச்சு…?”
லயத்தின் முன்னால் பலர் கூடிவிட்டனர்.
“அப்புடிக் கேளு கந்தையா, இந்த ஆளு எந்த நாளும் லயத்தில ஆளுங்கள சண்டைக்கு இழுத்துக்கிட்டே இருப்பது… இவரோட புள்ளதான் பெரிசாப்படிக்கிற மாதிரி…” என்றான் லெச்சுமன்.
அப்போது கந்தையாவின் மனைவி இஸ்தோப்பு வாசலில் நின்றபடி பலமாகக் கூறினாள். “அந்தாளோட ஒங்களுக்கு என்ன பேச்சு…. வாங்க உள்ளுக்கு, அந்த மனுசனுக்கு நாம ரேடியோ வாங்கினதுல பொறாமை…. அதுதான் அதுஇதுன்னு சொல்லிக் கிட்டிருக்காரு.”
அலமேலு பெருமாளை உள்ளே இழுத்து வந்தாள். பெருமாளுக்குச் சார்பாகப் பேச அங்கு எவருமே இருக்கவில்லை.
கந்தையாவின் தந்தை இப்போது வெளியே வந்து, “லயமுன்னு சொன்னா பத்துக்குடும்பம் இருக்கும்….. பத்துப்பேச்சு வரும்…. ஒம்புள்ள படிக்குதுன்னு மத்தவங்க வாயமூடிக்கிட்டு இருப்பாங்களா…. நீ வேணுமுன்னா ஒம்புள்ளயக் கூட்டிக்கிட்டு போயி எங்காவது தனியா வீடுகட்டி இரு…. அப்ப சத்தம் வராது, புள்ளயும் படிக்கும்” எனக் கரகரத்த குரலில் கூறினார்.
பெருமாள் இஸ்தோப்பின் சுவரோரமாகச் சாய்ந்து கொண்டான். அவனது மனக்கண்ணிலே தோட்டப்பாடசாலை தெரிந்தது…. உயர்ந்த கட்டிடங்கள், தளபாடங்கள், சீருடைகள், இலவசப் புத்தகங்கள், ஆசிரியர்கள், உயர் அதிகாரிகள்… இருந்துமென்ன?
கற்றலுக்கு வேண்டிய சூழல் இல்லையே.. ..
தங்கராசு இப்போது வளர்ந்துவிட்டான். பிரட்டுக் களத்தில் தொழிலாளர்கள் வரிசையாக நிற்கின்றனர். தங்கராசுவும் ஒரு தொழிலாளியாகக் கடைசி வரிசையில் நிற்கிறான்.
கண்டக்டர் பிரட்டுக் கலைக்கிறார். தொழிலாளர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்வதற்காகக் கலைந்து செல்கின்றனர்.
“ஏன்டா தங்கராசு, நீயும் பேர் பதிஞ்சு வேலைக்கு வந்துட்டியா… ஒங்கப்பன் பெரிசா ஒன்னப் படிக்க வைக்கிறேன்னு சம்புராயம் புடிச்சானே… முடிஞ்சுதா…? வாழையடி வாழையா நீங்கெல்லாம் பத்தடிக் காம்பராவில கத்தியும் சுரண்டியுமா வாழவேண்டியவங்கன்னு அன்னிக்கே சொன்னேனே….. ஒங்கப்பன் கேக்கலியே… அடேய், நீயும் ஒங்கப்பன்கூட கவ்வாத்து வெட்டப் போடா…. அப்பதான் தோள்பட்டை கழண்டு வரும், ஒங்களுக்கெல்லாம் புத்தி வரும்…” கண்டக்டரின் குரலில் ஏளனம்; தான் ஜெயித்துவிட்டதில் ஏற்பட்ட மமதை.
“அடே தங்கராசு”! எனப் பலமாகக் கத்தினான் பெருமாள். அவனது உடல் படபடத்தது; வியர்வையிலே தெப்பமாக நனைந்தான். மறுகணம் அவன் விம்மத் தொடங்கினான்.
தங்கராசு ஓடிவந்து தந்தையின் தோள்களைப் பிடித்து உசுப்பினான். “என்னப்பா என்ன…, எந்திருங்கப்பா…”
“ஏதோ கெட்ட கனவடா, கண்டாக்டர் சொன்ன மாதிரியே நீ தோட்டத்தில பேரு பதிஞ்சு கவ்வாத்து வெட்டப் போறதா கனவு கண்டேன்…. அதான்டா….”
தங்கராசுவுக்குத் தந்தையின் நிலைமையைப் பார்த்த போது அழுகை வந்தது. கண்களுக்குள் நீர் முட்டியது. அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். கொழுந்துக் கூடைக்குள் கிடந்த தாயின் தலைவேட்டியை எடுத்து வியர்வையில் நனைந்திருந்த தந்தையின் முகத்தையும் உடலையும் துடைத்து விட்டான்.
அவனது மனதிலே வைராக்கியம் புகுந்து கொண்டது.
செலவுப் பெட்டியை மேசையாகப் பாவித்து அதன்மேல் புதிதாக வாங்கிய லாந்தரை ஏற்றிவைத்து, பலத்த குரலில் மீண்டும் அவன் படிக்கத் தொடங்கியபோது, சூழலில் இருந்த கவனச்சிதறல்கள் யாவும் அவனது வைராக்கியத்தில் கரைந்து போயின.
– வீரகேசரி 1998.
– அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், முதற் பதிப்பு: மே 1998, மல்லிகைப் பந்தல் வெளியீடு.