தாய்ச்சிறகு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 10,203 
 

ஆயியே சாப்! ஆயியே சாப்! அல்லாரும் ஜோரா கைதட்டுங்க சாப்! என கையில் டம்டம்முடன் குரல் கொடுத்துக் கொண்டிருந்தான் தலைப்பாய்க் காரன்.

நீலநிறத்தில் சட்டையும் அதே நிறத்தில் கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தான். அவனின் பூனைக்கண்களும் முறுக்கிய மீசையும் குழந்தைகளை அச்சுறுத்துவது போலிருந்தது. நரை முடியினைக் கொண்டும் உடல் சுருக்கத்தைக் கொண்டும் பார்ப்பதற்கு நாற்பது வயதிற்கு மேல் இருக்கும். வடநாட்டுக்காரன் என்பதால் தமிழ் தத்தளித்தது.

உச்சி வெயிலில் இரண்டு பெருக்கல் குறி குச்சியின் நடுவே இரட்டைப் பின்னலுடன் ஒட்டுப் போட்ட ரோஜாப்பூ நிற பைஜாமா அணிந்திருந்த எட்டு வயது சிறுமியான சொக்கி புத்தகம் ஏந்த வேண்டிய கையில் சிறு கம்புடனே மெல்லிய நீள் கம்பியில் மென்பாதங்கள் நடக்க அவளின வாழ்க்கை கேள்விக் குறியாயிருந்தது.

வித்தைக் கும்பலில் இரண்டு விடலைப் பசங்க குழுமியிருந்த கூட்டத்திலிருந்து டப்பாவில் காசுகளை வாங்கிக் கொண்டிருக்க போலிசின் காக்கிச்சட்டை தலைப்பாய்க்காரன் கண்ணில்பட அரே க்யா காம் கர்த்தே !

ஜல்தி ஆவோ! என அடுத்த தெருவிற்கு அழைக்க இரண்டு மூட்டை முடிச்சுகளுடன் பயணித்தது வித்தைக் கும்பல். இன்னும் இரண்டு மூன்று இடங்கள் வித்தைக் காட்டிய பின் அனைவருக்கும் கிடைத்த சில்லரை காசுகளை வாங்கிக் கொண்டபின் தலைப்பாய்க்காரன் மூன்று விடலைப் பசங்களுக்கும் சொக்கிக்கும் தலைக்கு இரண்டு ரொட்டித் துண்டுகள் கொடுக்க பசிக்கு மட்டுமல்ல தெருநாய்களுக்கும் பயந்து அள்ளிப் போட்டுக் கொண்டார்கள். ஒதுக்குபுறமான மரநிழலில் கண் அயர்ந்தான் தலைப்பாய்க்காரன்.

சொக்கிக்கு நா வறண்டு போனது. தண்ணீர் தேடி அலைந்து போன வீட்டிலினிலெல்லாம் கதவினைத் தாழிட்டார்கள். தெருக்குப்பைகளை கொட்டி வைத்திருக்கும் மைதானத்தைச் சுற்றி போடப்பட்டிருந்த முள் போட்ட வேலிக்கம்பியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சொக்கி.

அப்பேதையின் கண்களில் ஆயிரம் கனவுகள் இல்லையென்று சொல்லிடுமோ ஈரத்தை தாங்கிடும் இதயந்தானோ என அவளின் கண்கள் நீர்த்துளிகள் இன்றி அழுதது.

சில ஆண்டுகளுக்கு முன் அடித்த சுனாமி எனும் கடல் கொந்தளிப்பினால் பெற்றோர்களை இழந்து உயிருக்குப் போராடி கிராம மக்களுடன் தத்தளித்து வந்தாள் சொக்கி. கரை ஒதுங்கிய அகதிகள் முகாமில் இருந்த சொக்கியைக் கண்ட தலைப்பாய்க்காரன் வித்தைக்கு ஆள் சேர்க்க வித்தைக் கும்பலுடன் ஐக்கியமாயிருந்தது அவளின் வாழ்க்கை.

தெருக்களிலும் தொடர் வண்டிகளிலும் பிச்சை எடுக்க அனுப்புவதுடன் நித்தம் பாலியல் தொடர்பு கொள்ள அழைப்பதும் சொக்கி மறுப்பதும் வித்தைக் காட்டும் சமயத்தில் திட்டுவதுடன் அடித்து சித்ரவதை செய்யும் இந்தத் தலைப்பாய்க்காரனிடமிருந்து தப்பிப்பது எப்படி?

மஞ்சள் நிறத்தில் கருப்புப் புள்ளிகள் கொண்ட சிறகை விரித்துப் பறக்கும் அழகான பட்டாம்பூச்சி ஒன்று சொக்கியின் பார்வையில் கவர தனக்கும் இப்படியொரு சுதந்திரம் எப்பொழுது கிடைக்குமோ என்று ஏங்கிக் கொண்டே கண் அயர்ந்தாள்.

அஸ்தம வேளையில் சொக்கியின் பின்னங்காலில் ஓங்கி தலைப்பாய்க்காரன் ஒரு உதைவிட திடுக்கிட்டு எழுந்தாள். கண்ணை கசக்கிய போது கட்டுமஸ்தான் ஆள் ஒருவனிடம் ஏதோ பேசிக் கொண்ட பணத்தை வாங்கிக் கொண்டிருந்தான் அந்த தலைப்பாய்க்காரன். சர்க்கஸ் நடத்தும் ஒரு பிரபலமான கம்பெனியிடம் பேரம் பேசி சொக்கியினை விற்றுவிட்டதாக தெரிய வந்தது.

பெரிய டெண்ட் கொட்டாயும் பல சர்க்கஸ் கலைஞர்களும் பஃபூன்களும் பூனை நாய் முயல் யானை ஒட்டகம் போன்ற விலங்குகளின் பட்டாளமும் விதவிதமான வண்ணமயமான மிளிரும் ஆடைகளும் சொக்கியின் மனத்தை ஆர்ப்பரித்தது. ரிங் மாஸ்டர் வித்தைகளை கற்றுக் கொடுக்க ஆர்வத்துடன் பயின்றாள். இரண்டு வருடங்கள் போனதே தெரியவில்லை.

சொக்கியின் நிலவு போன்ற வட்ட முகமும் சுண்டி இழுக்கும் மேனி எழிலும் சிறுமி என்பதால் பேசுவது போல் பேசி பாலியலுக்கு வற்புறுத்தியபோதுதான் ஒரு சிறையில் இருந்து மற்றொரு சிறைக்கு அழைத்து வரப்பட்ட கைதியைப் போல் உணர்ந்தாள்.

பல் இளிக்கும் கும்பலுடன் பல்லைக் கடித்துக் கொண்டு எப்படி நாட்களை புரட்டுவது என்ற ஐயப்பாடு மனதில் எழ மனநிலை பாதிக்கப்பட்டது போல் நடித்து சர்க்கஸை விட்டு வெளியேறினாள்.

அவள் கால்கள் பயணித்ததே தவிர எங்கு செல்வது என தெரியாது குழம்பிப் போனாள். வெயிலின் கொடுமையைத் தாங்காது அவள் கால் தடங்கள் கடற்கரையோரம் பார்வை செலுத்தி பயணிக்க உப்புத் தண்ணீரை உமிழ்ந்து குடித்தாள்.

சற்று தொலைவில் மீன் பிடிக்கும் வலையினை சுவர்போல் கம்பியில் கட்டிய குடிசை ஒன்று தென்பட அருகே செல்ல பைத்தியம் போல் தனியே பேசிக்கொண்டிருந்த சுமார் நாற்பது வயது மேற்பட்ட அந்தப் பெண்ணின் பெருத்த உடம்பினையும் நரைத்த சடைத்தலையினையும் கண்ட சொக்கியின் கண்களில் மிரட்சி தென்பட்டது.

தரையில் மீன்களை உலர்த்திய கைகள் வெயிலின் நிழலில் உருவம் தெரிய அந்தப் பெண் ஏதோ பொருளைத் தேடி தூக்கிவீச முற்பட சொக்கியின் கண்களைக் கண்டதும் யாரு நீ? என தலையை மேலும் கீழுமாக ஆட்டி சைகை காட்ட முகத்தில் தாய்மை தென்பட்டது கண்ட சொக்கி சற்று அருகில் செல்ல வா என அழைத்து கையில்சில பழங்களை கொடுக்க பசிக்கு லபக் லபக் என கடித்து சாப்பிட்ட சொக்கியைக்கண்டு என்ன இந்த பைத்தியம் பேசுதேன்னு பாக்கிறியா?

நானு ஒன்னை மாதிரிதான் சொந்த பந்தம்னு யாருமில்லை. உலகத்திலே தன்னந்தனியா வாழமுடியாது. அதனாலதான் பைத்தியமா நடிக்கிறேன் என சொக்கியின் தலையைக் கோதிவிட திசை அறியா பறவையான சொக்கிக்கு தாய்ச்சிறகு கிடைத்தது போலிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *