தாய்க்கே……தாயுமானவன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2019
பார்வையிட்டோர்: 6,722 
 

நீங்க எல்லோருமே பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளை விரும்பிப் படிப்பவர்கள் தானே! கதை படிப்பது ஒரு சுவாரஸ்யமான பொழுது போக்கு என்று நினைத்துத் தானே கதைகளை தேடித் தேடிப் படிக்கிறீர்கள்?

நான் உங்களுக்கு ஒரு செய்தி சொல்கிறேன்! அது சுவாரஸ்யமான விஷயமாக மட்டும் இருக்காது. உங்களை ஒரு நிமிஷம் நிறுத்தி, சிந்திக்க வைத்து விடும்!

நான் சொல்லப் போவதை நீங்கள் கதையாக எடுத்துக் கொண்டாலும் சரி, செய்தியாக எடுத்துக் கொண்டாலும் சரி, உங்களை சிந்திக்க வைத்தால் சரி!

எங்க துடுப்பதி கிராமத்தில் ராமச்சந்திரன் என்ற ஒரு மகன் இருந்தான். அது என்ன ஒரு மகன் என்று கேட்கிறீர்களா? எனக்குத் தெரிந்து ‘என் மகன்’ என்று பெருமையாகச் சொல்ல முற்றிலும் தகுதியான ஒரே நபர் ராமச்சந்திரன் தான்!

ராமச்சந்திரனின் அப்பா நாகராஜன் இறந்து பத்து வருஷங்கள் இருக்கும்! எங்க கிராமத்தில் நாகராஜன் குடும்பம் வசதியான குடும்பம். பூர்விக சொத்துக்கள் நிறைய இருந்தன. அவருக்கு நான்கு பசங்க. எல்லோரும் பெரியவங்க ஆனவுடன் சண்டை, சச்சரவு இல்லாமல் சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு தனித்தனியாக வசித்து வந்தாங்க!

நாகராஜன் காலமான பிறகு அவர் மனைவி பழனியம்மா மூத்த மகன் ராமச் சந்திரன் வீட்டில் தான் வசித்து வந்தாங்க!

அது என்ன பழக்கமோ தெரியவில்லை! இந்த கொங்கு நாட்டில் தந்தை காலமான பிறகு தாய், தன் மூத்த மகன் வீட்டில் தான் வசித்து வர வேண்டுமாம்!

ராமச்சந்திரன் அதை தப்பாக நினைத்துக் கொள்ள வில்லை! அவர் தாய்க்கு எந்தக் குறையும் இல்லாமல் நன்றாகப் பார்த்துக் கொண்டு வந்தார்.

எங்க ஊரு கொங்கு நாட்டில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். கொங்கு நாட்டைப் பற்றிச் சொல்லும் பொழுது ஒரு விஷயத்தைச் சொல்லித் தான் ஆக வேண்டும்!

தப்பாக நினைக்காதீர்கள்! இந்த செய்தி இந்தக் கதைக்கு அவசியமாக இருப்பதால் தான் சொல்கிறேன்!

சாப்பாட்டில் கொங்கு நாட்டு ஸ்பெஷல் என்று ஒன்று இருக்கிறது! அது என்ன தெரியுமா?

அது தான் நாட்டுக் கோழிக் குழம்பு!………அட நான் சொல்லச் சொல்ல உங்களுக்கே அந்த வாசம் வருது ….பார்த்தீங்களா?

இந்த கொங்கு நாட்டுக் கோழிக் குழம்பை நினைத்தாலே நாவில் எச்சில் ஊறுகிறது! அட அடா… நிறைய சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டை வதக்கி, காரத்திற்கு மிளகாயோடு மிளகையும் சேர்த்து அந்தக் குழம்பை கொதிக்க விடும் பொழுது அந்த வாசம் எட்டூருக்கும் மணக்கும்! குழம்பு கொதிக்கும் பொழுதே வீட்டில் இருக்கும் சிலபேர் கறியில் உப்புக் காரம் பார்க்கிறேன் என்று பாதியைக் காலி செய்து விடுவார்கள்!

கொங்கு நாட்டில் பண்டிகை நாட்களில் ஏழை. பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் எல்லோருடைய வீட்டிலும் இந்த மணம் வீசும்!

சாப்பிடுவது கூட இரண்டாம் பட்சம்! அந்த நாட்டுக் கோழி குழம்பு கொதிக்கும் பொழுது வரும் வாசத்தைப் பிடித்தாலே வயிறு நிரம்பி விடும்!

உங்களுக்கு கொங்கு நாட்டில் ஏதாவது உறவுகள், நட்புகள் இருந்தால், அங்கு போகும் பொழுது, ஒரு முறையாவது இந்த நாட்டுக் கோழிக் குழம்பு வைத்து தரும்படி கேட்டுச் சாப்பிடுங்கள்! அப்புறம் ஆயுசுக்கும் இந்த கொங்கு நாட்டை மறக்க மாட்டீர்கள்!

சரி கதைக்கு வருவோம்! இந்த நாகராஜன் மனைவி பழனியம்மா இருக்கிறார்களே, அவங்களுக்கு இந்த நாட்டுக் கோழி குழம்பு என்றால் உசுரு!…வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிட்டு விடுவாங்க!

நாட்டுக் கோழியில் இளம் குஞ்சாக வாங்கி அவர்கள் வீட்டில் கொழம்பு வைத்து அது கொதிக்கும் பொழுது, அந்த தெருவே மணக்கும்!

கிராமத்தில் அவர்கள் பக்கத்து வீட்டில் தான் நான் குடியிருந்தேன். ‘ஆசை வெட்கமறியாது’ என்று சொல்வார்கள்! பழனியம்மா வீட்டில் குழம்பு கொதிக்கும் வாசம் வரும் பொழுது, நான் மெதுவாக ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு போய் “அத்தை!…கொஞ்சம் குழம்பு கொடுங்கள்!…” என்று கேட்டு விடுவேன்.

அவர்கள் சிரித்துக் கொண்டே பாத்திரத்தில் நிறைய குழம்பு விட்டு, கரண்டியில் நாலு கறித்துண்டுகளை எடுத்துப் போட்டு சிரித்துக் கொண்டே கொடுப்பார்கள். அதை நான் வாங்கிக் கொண்டு வரும் பொழுது என் மனைவி தலையில் அடித்துக் கொள்வாள்!

என் தொழில் நிமித்தம் பக்கத்து நகரமான ஈரோட்டிற்கு நான் குடி வந்து ஐந்து வருஷமாச்சு… கிராமத்திற்குப் வாய்ப்பு கிடைத்துப் போகும் பொழுது எல்லாம் ராமசந்திரன் வீட்டிற்குப் போய் பழனிம்மாவையும் பார்த்து விட்டு வருவது என் வழக்கம்!

இரண்டு நாட்களுக்கு முன்பு ராமச்சந்திரனை ஈரோட்டு கடை வீதியில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் கொஞ்ச நாளா அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்லை என்று சொன்னார்.

உடனே ஞாயிற்றுக் கிழமை சற்று நேரத்தை ஒதுக்கி கிராமத்திற்குப் போகத் திட்டமிட்டேன்.

இந்தப் பிராய்லர் கோழி வந்தவுடன் வர வர ஈரோட்டில் நாட்டுக் கோழி கிடைப்பதே அரிதாகி விட்டது. கஷ்டப்பட்டு தேடிப் பிடித்து நாட்டுக் கோழி வாங்கி வந்து என் மனைவிடம் கொடுத்து பழனியம்மாவை பார்க்கப் போகும் விஷயத்தைச் சொன்னேன்.

இரண்டு மணி நேரத்தில் குழம்பு, வருவல் என்று வகை வகையாகச் செய்து அசத்தி ஒரு நான்கு அடுக்கு டிபன் கேரியரில் போட்டு நிரப்பிக் கொடுத்தாள்.

என் கார் ராமச்சந்திரன் வீட்டு வாசலில் நின்றவுடன், அவரே ஓடி வந்து “வாங்க மாப்பிள்ளை!..” என்று வாய் நிறைய சொல்லி கைகளைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துப் போனார்.

நானும் டிபன் கேரியரை எடுத்துக் கொண்டு பழனியம்மாள் படுத்திருந்த ரூமிற்குள் நுழைந்தேன்.

பழனியம்மாளுக்கு இப்பொழுது சுமார் எழுபது வயசிருக்கும்!…முதுமை முற்றிலும் அவர்கள் மேல் தன் கைவரிசையைக் காட்டியிருந்தது! அதற்காக விருந்தினர்களை வரவேற்கும் கொங்கு நாட்டுப் பண்பை விட்டு விட முடியுமா?

என்னைப் பார்த்தவுடன் கட்டிலில் படுத்திருந்த பழனியம்மாள் ““வாங்க..தம்பி!…” என்று சிரித்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

என் மேல் பழனியம்மாளுக்குப் எப்பொழுதுமே பிரியம் அதிகம்! அதோடு நான் வெளியூர் போய் விட்ட விருந்தாளி.

என்னைப் பார்த்தவுடன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் அந்தம்மாவின் உடற்சோர்வெல்லாம் போய் விட்டது போலும்!

என்னை அந்த ரூமில் விட்டு விட்டு, ராமச்சந்திரன் தன் வேலையைக் கவனிக்கப் போய் விட்டார்.

“ அத்தை!…போன தடவை நான் வந்த பொழுது நீங்க நல்லாத்தானே இருந்தீங்க?..”

“ ஆமாம் தம்பி! இந்த ஒரு வருஷமாவே…உடம்பு சுத்தமா சரியில்லே! என்னால் சமையல் வேலை கூட செய்ய முடியலே!….. இப்ப என் மருமகள் பூமா தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறா……அவளுக்கு கூடமாட என்னால் ஒத்தாசை செய்யக் கூட முடியலை என்பது தான் என் வருத்தம்!…எனக்கு சுகர், பிரஸரோடு மூட்டுவலியும் சேர்ந்து இருப்பதால் பார்க்கிற டாக்டர்கள் எல்லோருமே இனி மேல் நீங்க ஓய்வா இருக்க வேண்டும் என்று சொல்றாங்க!…”

“ அவங்க சொல்லறது சரிதான் அத்தை!…இனிமே நீங்க ஓய்வா இருப்பது தான் நல்லது!…”

“ அது என்ன தம்பி…அந்த டிபன் கேரியரில்…வாசனை ஊரைத் தூக்குது?…”

“ அத்தை நான் உங்களுக்காக…ஆசை ஆசையா நாட்டுக் கோழி வாங்கி குழம்பு வைத்து கொண்டு வந்திருக்கிறேன்….உங்களுக்குத் நாட்டுக் கோழினா உசிரு ஆச்சே!…”

பழனியம்மா வாய் விட்டு சிரிச்சாங்க!

“ அத்தை!…எதற்குச் சிரிக்கிறீங்க?….எனக்குப் புரியலே!…”

“ தம்பி!…நான் கோழிக் கறி சாப்பிடறதை விட்டு ஆறு மாசமாகிறது!…இப்ப அந்த வாசமே பிடிப்பதில்லே…… நீங்க அந்த டிபன் கேரியரை எடுத்து சமையறையில் இருக்கும் பூமா கைகளிலே கொடுத்திடுங்க!…” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

சத்தியமாக என்னால் நம்ப முடியவில்லை!

“ என்ன தம்பி…பேய் அடிச்ச மாதிரி உட்கார்ந்திட்டீங்க!…இந்த டிபன் கேரியரை பூமாவிடம் கொடுத்திட்டு வாங்க!…உங்க கூட பேசிக் கொண்டிருந்தா எனக்கு கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்கும்!…” என்றார் மீண்டும் சிரித்துக் கொண்டே!

“அத்தே!…நிஜமாத் தான் நீங்க சொல்றீங்களா?….என்னால் நம்பவே முடியலே!…நான் எத்தனை வருஷமா உங்களைப் பார்க்கிறேன்…..உங்க உசிரே இந்த நாட்டுக் கோழி குழம்புலே தான் இருக்கும் என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருந்தேன்!…”

“ நீங்க சொல்லறது கூட ஒரு விதத்திலே சரி தான் தம்பி!….ஆனா ஒரு பொண்ணுக்கு உசிரை விட தாய் பாசம் பெருசு!…”

“ அத்தே!…இன்னும் எனக்குப் புரியலே!…”

“ அப்ப எழுந்து போய் ரூம் கதவை சாத்திட்டு வாங்க!….உங்களுக்கு விபரமாச் சொல்றேன்!….என் மனசில் இருப்பதை யாரிடமாவது சொன்னால் தான் எனக்கும் ஆறுதலாக இருக்கும்!..”

நான் எழுந்து போய் ரூம் கதவை சாத்தி விட்டு, பழனியம்மா கட்டிலுக்கு அருகில் போய் உட்கார்ந்து கொண்டேன்.

“ தம்பி!.…கடந்த ஒரு வருஷமாவே என் உடம்பு ரொம்ப பலகீனமாகி விட்டது….. ஜீரண சக்தி குறைஞ்சு போச்சு! அசைவம் சாப்பிட்டா சுத்தமா ஒத்துக்கறதில்லே! அன்று முழுவதும் வயிற்றாலே போகுது!… அதற்காக சிக்கன் சாப்பிடாம இருக்க முடியலே!….அது ராமச்சந்திரனுக்கும் தெரியும்!…அவன் ஒண்ணும் சொல்ல மாட்டான்…. ஜெலுசிலை பாட்டில் பாட்டிலா வாங்கி வைத்து விட்டுப் போய் விடுவான் நானும் சிக்கனைச் சாப்பிட்டு விட்டு, அதை குடித்து விட்டு படுத்துக் கொள்வேன்..”

ஒரு நாள் இரவு. நடுச் சாமம்…வீட்டிலே யாரோ பாத் ரூமில் துணி துவைத்து கும்முவது கேட்டது!… நம் வீட்டில் இருப்பது ஆட்டோமேட்டிக் வாஷிங் மிஷின். எதற்கு இந்த அர்த்த ராத்திரியில் யார் துணி துவைக்கிறார்கள்? மெதுவாக எழுந்து போய் பார்த்தேன்.

நீயே பார்த்திருப்பாய்…உங்க மாமா போன பிறகு நான் கட்டும் வெள்ளைப் புடவைகள் தும்பை பூ நிறத்தில் இருக்கும்…அந்த வெள்ளைப் புடவைகளில் இருக்கும் கறைகள் மேல் சோப்பு போட்டு உரசி ராமச்சந்திரன் புடவைகளை கும்மி அலசிக் கொண்டிருந்தான்!

“ ராமச்சந்திரா!….உனக்கு அறிவு இருக்கா?…நீ ஆம்பிள்ளையாடா?…நடு ராத்திரியில் பாத் ரூமில் உட்கார்ந்து இப்படி பொம்பளை புடவைகளை துவைத்துக் கொண்டிருக்கிறாய்?…” என்று சத்தம் போட்டேன்.

உடனே அவன் எழுந்து வந்து என் வாயைப் பொத்தி அப்படியே என் ரூமிற்கு இழுத்து வந்து விட்டான்.

“ அம்மா!…பிளீஸ்!…சத்தம் போடாதே!…பூமா எழுந்து கொண்டால் அவ ரொம்ப வருத்தப் படுவா…”

“ நீ என்னடா…சொல்றே?…”

“ அம்மா!…நீ அசைவம் சாப்பிட்டா…உனக்கு வயித்துப் போக்கு இருப்பதால் உன் வெள்ளை புடவைகளில் பின் பக்கம் அசிங்கம் ஆகி விடுகிறது..அதனால் மற்ற துணிகளோட உன் புடவைகளை வாஷிங் மிஷினில் போடுவதில்லை!

…தனியாகத் தான் துவைக்க வேண்டியிருக்கு!…அதனால் பூமா தான் அவைகளை தனியாகத் துவைத்துக் கொண்டிருந்தாள்…ஒரு நாள் ரொம்ப அசிங்கமா இருந்தது…பூமா முகத்தை சுளித்துக் கொண்டே உன் புடவைகளுக்கு சோப்பு போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்!..என்ன இருந்தாலும் அவள் வேறு வீட்டில் இருந்து இங்கு வாழ வந்த பெண்..அவள் வெளியில் சொல்லா விட்டாலும், அவளுக்கு சங்கடமாக இருக்கத் தான் செய்யும்?…

நான் உன் ரத்தம் அம்மா!….உன் வயிற்றிலிருந்து வந்த உருவம் நானம்மா!..உன் ரத்தத்தையே பாலா உருஞ்சிக் குடித்து வளர்ந்தவன் தானே நான்!…அந்தக் காலத்தில் இந்த லெட்ரின் எல்லாம் வராத காலத்தில் எனக்கு ஏழு எட்டு வயசு வரை நீ என் பின்பக்கம் தேய்த்து தேய்த்து ஆயி கழுவி விட்டதை நான் மறக்க வில்லை அம்மா! நான் உயிரோடு இருக்கும் பொழுது வேறு யாரும் உனக்கு இது போன்ற வேலைகளைச் செய்யக் கூடாதம்மா!….பெத்த தாய்க்கு இது போல் சேவை செய்யும் பொழுது எனக்கு சந்தோஷமாத் தானிருக்கு!… என்று நான் பெற்ற தங்கம் ராமச்சந்திரன் என்னிடம் சொன்னதைக் கேட்ட பிறகு என் பிள்ளைக்கு சிரமம் தரும் இந்த சிக்கனை மீண்டும் தொட்டால் நான் எப்படி ஒரு பாசமுள்ள தாயாக இருக்க முடியும்! …அதையும் மீறி இந்தச் சிக்கனைச் சாப்பிட்டால் நான் ஒரு மனுஷியே இல்லை!..அதனாலே விட்டு விட்டேனப்பா!…..”

என்ற பழனியம்மாவின் பேச்சு என்னை நிலை தடுமாற வைத்து விட்டது!

பெற்ற மகன் சிரமப் படக் கூடாது என்று, உயிருக்கு மேலாக விரும்பி பல வருடங்களாக பழகிய ஒரு பழக்கத்தை ஒரு நொடியில் துறந்த அந்த பழனியம்மாவின் தாய் பாசத்தைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்து விட்டேன்!

பாசத்தில் சிறந்தது தாய் பாசம்! அதை ஒரு தாயால் தான் காட்ட முடியும்! அப்படிப்பட்ட பாசத்தை தாய் இல்லாத ஒரு பிள்ளைக்கு தகப்பன் காட்டி வளர்த்து விட்டால் அப்படிப்பட்ட தகப்பனை தாயுமானவன் என்று பெருமையாச் சொல்வார்கள்!

முகம் சுளிக்காமல் தாய் அசிங்கப் படுத்திய சேலையைத் துவைக்கும் அந்த தாய்க்கே உரிய உன்னதமான பாசத்தை தன்னிடம் காட்டிய பிள்ளை தான், தன் வயிற்றில் பிறந்த பிள்ளை என்ற சந்தோஷத்தை தன்னை பெற்ற தாய்க்கே தந்து, தாய்க்கே தாயுமானவனாக வாழ்ந்து வரும் அந்த ராமச்சந்திரனை போன்ற மனிதர்கள் வாழ்வது நம் ஆண் குலத்திற்கே பெருமை தானே?.

– தேன்சிட்டு 2018 டிசம்பர் இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *