தாத்தாவுக்கு மூக்குக் கண்ணாடி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 7,999 
 

“ஏண்டா இவ்வளோ சம்பாரிக்கிரியே எனக்கிந்த மூக்கு கண்ணாடிய மாத்தி தரக் கூடாதா ..”

“மாத்திடலாம் தாத்தா.. தோ இந்த மாசம் .. இந்த மாசம் கண்டிப்பா மாத்திடலாம் தாத்தா ”

“போடா.. போடா.. போக்கத்தவனே.., இதைத் தானே எப்பவும் சொல்ற.. பாரு என் கண்ணே அவுஞ்சி போச்சி ”

“இந்த மாதம்.. கண்ணாடியோட.. வந்தாதான் இங்க வருவேன் தாத்தா, கண்டிப்பா.. கண்ணாடி கண்ணாடி.. கண்ணாடிதான் இந்த மாசத்துக்கு முதல் பட்ஜெட் சரியா ?”

“இதைத் தானே போன மாசமும் சொன்ன? நீ வேணும்னா பாரேன்.. நான் செத்தா கூட நீ கண்ணாடி வாங்கித் தர மாட்ட….”

ச்ச.. இந்த தாத்தாவுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது ‘என் சம்பள பிரச்சனையையும் ‘வீட்டுப் பிரச்சனையையும், வேறு வழியே இல்லை, இந்த மாதம் எப்படினாலும் வாங்கியே தீரனும். மனதில் நினைத்துக் கொண்டேன்.

அடுத்த முறை சென்னையின் பக்கம் போன போது தாத்தாவின் நினைவு வந்தது.

”ஏம்பா இந்த கண்ணாடி எவ்வளோ வரும்..?”

“எம்பத்தைந்தாயிரம்…………….”

“என்பத்தஞ்சாஆஆஆஆஆஆஅ….” ஒரு நொடி ஆடித்தான் போனேன், கையைச் சுட்டது போல் வைத்து விட்டேன் கண்ணாடியை.

“என்னங்க ஒரு மூக்கு கண்ணாடி கேட்டா தங்கம் விலை சொல்றீங்க..”

“ஆமாங்க நீங்க எடுத்தது தங்கம்தான், தங்க பிரேமுங்க அது..”

“அப்படியா.. நமக்கு அப்படியெல்லாம் வேண்டாங்க.. சும்மா’ ஒரு’ தாத்தாவுக்கு போடுற மாதிரி எதனா இருந்தா காட்டுங்களேன்.. ”

“நீங்க எடுத்ததும் தாத்தா கண்ணாடி தாங்க.. ”

“ஏன் சகோ.. இப்படி தமாஸ் பண்றீங்க..? நம்ம அளவுக்கு தகுந்த மாதிரி எதனா காட்டுங்களேன்..

ஆங்… தோ.. இந்த பிரேம் எவ்வளோ வரும்..?”

“அது ஒரு ரெண்டாயிரத்துல சரி பண்ணிக் கொடுக்கிறேன் எடுத்துக்கோங்க..”

“அவ்வளோ ஆகுமா.. ‘அதுவேற கெழவனுக்கு பிரேம் எல்லாம் மெலிசா இருக்கனுமே..”

“அப்போ இந்தாங்க இது ரெண்டாயிரத்து ஐநூறு.. க்கு வரும், ஆனா ரொம்ப நல்ல பிரேம்”

“இதுக்கு கண்ணாடி வாங்கனும்ல?? அதுக்கு வேற தனியா பணம் ஆவுமா இல்ல அந்த ரெண்டாயிரத்திலேயே போட்டுக் குடுத்துடுவீங்களா? ”

“சும்மா எல்லாம் இங்க கண்ணாடி துடைக்கிற துணி கூட கிடைக்காது சார், தோ.. இது மாதிரி கண்ணாடி எடுத்தா ஒரு ஆயிரம் ரூபாய்க்கு போட்டுத் தரலாம்”

“அப்படியா, இது வேற கண்ணாடி மொத்தையா இருக்குன்னு சொல்லுமே அந்த கிழம்..”

“ரொம்ப நெட்டு பிடித்த கிழவனோ.. ”

“அட ரொம்ப நெட்டுங்க.. இப்பையும் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டைன்னு நலுங்காம போடும்னா பாருங்களேன்.., வயசு எண்பதாச்சு”

“அப்போ இதை எடுத்துக்கோங்க, ஆயிரத்தி எட்டுநூறு வரையும் வரும்”

“அப்படியா, மொத்தம் நாலாயிரத்தி முன்னூறு ரூபாவா?”

“வேலைக்கூலி டேக்ஸ் எல்லாம் சேர்த்து நாலாயிரத்து ஐந்நூறுக்கு செய்து தரலாம். இப்போ பணம் கட்டினீங்கனா ரெண்டு நாள்ல கண்ணாடி கிடைச்சிடும். அட்வான்ஸ் கட்டிட்டுப் போங்க, என்ன பவர்ன்னு தெரியுமா..?”

“அதலாம் தெரியுங்க. ஒரு நூறு ரூபா முன்பணம் கட்டினா போதுமா?”

“பாதி கட்டினா தாங்க வேலை ஆரம்பிப்போம், கிட்டதட்ட அஞ்சாயிரத்துக்கு பொருள் வாங்குறீங்க நூறெல்லாம் எப்படிங்க சரிவரும்..?”

“சரி சகோதரரே கோச்சிக்காதீங்க. தாத்தாக்கு கண்ணாடி வாங்கனும்னு ஒரு ஆசை. அதான் விசாரிக்கலாம்னு வந்தேன். இந்த மாசம் சம்பளத்துக்கு கண்டிப்பா வந்து வாங்கிக்கிறனே..”

“பரவாயில்லை பராவாயில்லை.. உங்கள் தேவை எங்கள் சேவை. எப்போ வேணும்னாலும் வரலாம்”

“நல்ல கடைக்காருங்க நீங்க சகோ.., உங்களை மாதிரி எலோரும் இருந்தா நல்லாத்தான் இருக்கும்’

“உங்களுக்கு நல்லாத்தான் சார் இருக்கும் நாங்க கடைய இழுத்து மூட வேண்டியது தான் அப்புறம்..”

“அப்படியா” சிரித்துக் கொண்டேன்.

எப்படியோ ஒருவழியா வெளியே வந்துவிட்டேன். அநியாயமா இருக்கே அஞ்சாயிரமா. சம்பளமே பத்தாதே, இந்தப் பெருசு தான் என்னமோ நான் பெருசா சம்பாதிக்கிறதா நினச்சி இப்படி தொல்லை பண்ணுது. சரி போட்டம், இந்த மாதம் கொஞ்சம் காசு வெச்சி அடுத்த மாதம் கண்டிப்பா வாங்குவோம், என்றுதான் நினைத்தேன்.

வீட்டில் நடந்திருப்பதே வேறு.

“காலைய்ல போனீங்க இப்போ தான் வரீங்களே. ஒரு போன் பண்ணிருக்கலாம்ல…”

“காசில்லைமா அதுல. ஒரு வேலையா சென்னை வரையும் போனேன். தாத்தா ஞாபகம் வந்துடுச்சி சரி கண்ணாடி விலை கேட்கலாமேன்னு போயிட்டேன்.

“………………..”

“வாங்கலமா ஏன் அப்படி பார்க்குற. சும்மா தான் விசாரிச்சேன்..”

வாங்குவீங்க வாங்குவீங்க கண்ணாடி…, இங்க பாருங்க இந்த மாதம் கரண்ட் பில் கட்டலைனா பீச புடிங்கிடுவாங்கலாம். இவனுக்கு வேற பீஸ் இப்பவே உடனே கட்டியாகனுமாம் . பள்ளிக்கூடத்துல சொல்லி விட்டிருக்காங்க. ஆறாவது போறான், பணம் கொஞ்சம் கூட கட்ட வேண்டியிருக்குமாம். வீட்ல ஒரு பொருள் இல்லீங்க. காலைல இருந்து வருவீங்க வருவீங்கன்னு உட்கார்ந்திருக்கேன்…”

“சரி சரி.. விடு.. ஒண்ணு ஒண்ணாச் சொல்லு, ஏன் இப்படின்னு ஓன்னு கத்தற.. சலிச்சிக்கிற.., வீட்டுக்கு என்ன வேணும் அதை முதல்ல சொல்லு, காலைல போகும்போது சொல்லி இருக்கலாம்ல.. வரும்போது கூட வாங்கியாந்திருப்பேனே..”

“மறந்துட்டேங்க.. ஒரு ஞாபகமாவா இருக்கு..”

“சரி சரி நீ ஏதோ நல்ல மனநிலைல இல்லைப் போல விடு, என்னென்ன வேணும் சொல்லு..”

என்னென்ன வேண்டுமோ குறித்துக் கொண்டு கடைத் தெருவிற்கு நடந்தோம் ‘நானும் என் மனைவியும் ஒற்றை மகனுமாக. ‘கண்ணாடி’ தாத்தாவிற்கு கனவோ இல்லையோ எனக்கு கனவாகவே இருந்தது. கனவுகளில் கடந்தன நாட்கள். ஒரு நாலைந்து மாதம் கழித்து தாத்தாவை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடப் போனேன்..

“வாடா பேராண்டி.. அடுத்த மாசத்திக்கு கண்ணாடி வாங்கி தரவனா நீயி.. ”

“ஆமாம் தாத்தா அடுத்த மாதம் வரும்போது கண்ணாடியோடு தான் வருவேன்..”

“போடா.. போக்கத்த பயலே.. ” அதே வசவு.. அதே சமாளிப்பு என எப்படியோ போன வேலையை முடித்துக் கொண்டு வந்து விட்டேன். தாத்தா பாவம் அவருக்குன்னு இருக்கறதெல்லாம் செல்லமா அடிக்கவும் திட்டவும் நான் ஒத்த பேராண்டி தான். பெரியண்ணன் இஸ்திரி போட்ட சட்டை மாதிரி. வளைஞ்சி கொடுக்காது. அதில்லாம, பாவம், அது தான் வீட்டு செலவு எல்லாம் பார்த்துக்குது. சின்னண்ணா இந்த ஊர்லையே இல்ல வெளிஊர்ல வேலை செய்து அங்கேயே தங்கிப் போச்சி. அப்படி ஒரு நிலையில, அப்பா மருத்துவச் செலவு தாண்டி ‘தாத்தா கண்ணாடி எல்லாம் பெரியண்ணாவுக்கு ரொம்ப கஷ்டம். தாத்தா தான் பாவம். ரொம்ப வருசமா அந்த தேஞ்சி போன ஒத்தை கண்ணாடியையே போட்டிருக்கு. அப்பாவுக்கும், உடம்பு சரியில்லாம படுத்துட்டாரு, கூட வந்துடுப்பான்னு கூப்பிட்டாலும் பெரியண்ணன் விடுறதில்லை. அதான் அப்பப்போ வந்து இப்படி நான் பார்த்துக்கறது. இந்த முறை மனைவியும் கூட வந்திருந்தாள். அவளுக்கும் எங்க வீடு தாத்தான்னா ரொம்ப பிரியம். சும்மா தான் ஒருமாதிரி கத்துவா ஆனா நல்ல மனசு அவளுக்கு.

“எப்படின்னா இந்த மாசம் தாத்தா கண்ணாடிய முதல்ல வாங்கிடுங்க. போயி சேர்றதுக்குள்ள புதுசா ஒரு கண்ணாடியை போட்டு வாழ்ந்துட்டு சாவட்டோம்” சொன்னேன்ல என் பொண்டாட்டி ரொம்ப நல்லவன்னு. அவன்னு இல்ல, எங்க மொத்த குடும்பமே அப்படித்தான், பாசம்னா உருகிப் போய்டுங்க. பொதுவாவே, நாங்க அவர்கள் வீட்டையோ, அவர்கள் எங்க வீட்டையோ ‘மாமனார் வீடு ‘மாமியார் வீடுன்னு எல்லாம் பார்த்ததில்லை. எங்களுக்கு எல்லா(ம்) வீடும் ஒண்ணுதான். ஆனாலும் எங்க கஷ்டம் எங்களோட, எங்க வாழ்க்கையில யாரையும் நாங்க மூக்க நுழைக்க விடுறதில்லை. அது எல்லோருக்குமே தெரிஞ்ச விஷயம் தான். என்ன ஒண்ணு சம்பளம் குறைவு. யாருக்குமே அப்படி பெருசா வருமானம் இல்ல. ஏழ்மை ஒண்ணுதான் எங்களுக்குப் பேய் மாதிரி. வறுமையால தான் இவ்வளவு கஷ்டப்படுறோம். ஆனாலும் நம்பிக்கை இருக்கு எல்லாத்தையும் கடவுள் சீக்கிரம் தீர்த்து வைப்பாருன்னு ஒரு நம்பிக்கை இருக்கு.

“என்னங்க யோசிக்கிறீங்க?”

“ஒண்ணுமில்ல மஞ்சு. தாத்தாவுக்கு கண்ணாடி வாங்கனும்னல்ல..”

“ஆமாங்க பாவம் வயசானவரு. இந்த மாதம் நம்ம கல்யாண நாளுக்கு புடவை எடுப்பீங்கள்ல, அதை வேணும்னா விட்டுடுங்க அப்புறம் பார்த்துக்கலாம். இதே ஒத்துமையும் அன்பும் சந்தோசத்தோடயும் ஒண்ணா வாழ்ந்தோம்னா போதாதா, கல்யாண நாளுக்கு வேணும்னா கோயிலுக்குப் போயிட்டு வருவோம்ங்க, நீங்க எப்படினாலும் முதல்ல தாத்தாவுக்கு கண்ணாடி வாங்குற’ வழியப் பாருங்க”

தாத்தாவின் கண்ணாடி எங்க சின்ன குடும்பத்தோட பெரிய கனவு மாதிரி வளர்ந்துடுச்சி. கடைத்தெரு வேலையெல்லாம் முடித்து வீட்டிலிருக்கிற மகனுக்கு பழமும், இனிப்பும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பினோம்.

ஆனால், வீட்டில் இப்படி ஒரு இடி காத்திருக்கும்னு நினைக்கல. தூக்கி வாரி போட்டது மகன் படுத்திருந்த கோலம் பார்த்ததும். மதியமே பள்ளிக் கூடத்துல இருந்து வந்துட்டானாம். காய்ச்சல்னு ரெண்டுபசங்க கூட்டி வந்துவிட்டாங்களாம். ஐயையோன்னு ஆயிபோச்சி, பக்கத்து வீட்டக்கா சொன்னதும்.

ஆன்னு வாய பிளந்துக்குனு படுத்திருந்தது குழந்தை. தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினோம். குளுக்கோஸ் ஏத்தனும், மலேரியா காய்ச்சல், இந்த மருந்து வாங்கு, அது வாங்கு, இது செய்யின்னு நாலு நாள் இழுக்கடிச்சி ரெண்டு நாள் வேலைக்கும் போகாம, அக்கம் பக்கத்துல கடன் வாங்கி, மகன் எழுந்து சிரித்து நடந்து பார்த்த பிறகு தான் அப்பாடான்னு உயிரே வந்தது.

எப்படியோ கல்யாண நாளுக்கு வாங்க இருந்த புடவையும், அதை மாத்த இருந்த கண்ணாடியும் வாங்க கூடாதுன்றது இந்த மாதத்தோட விதி போல. ரெண்டு மூணு மாதம் இதே போல ஓடிபோச்சி. நானும் அதே வசவு அதே சமாளிப்பும்னு அப்பாவை மட்டும் அப்பப்போ பார்த்துட்டு வந்தாலும், இந்த முறை தாத்தாவுக்கும் உடம்பு சரியில்லாம போக, அண்ணா தொலைபேசியில் கூப்பிட்டு சொல்லுச்சி. உடனே வந்துடுடான்னு வேற சொன்னதும் மனசுல ஒரு பயம் தாத்தாவுக்கு கண்ணாடியே வாங்கி தர முடியாதோன்னு.

ஒரு விசனத்தோடையே வேலைக்கு போனா அங்க வேலை ஓடுமா என்ன, இடிந்து போன மாதிரி ஒரு கலக்கம் இருந்துது. “ஏண்டா அருணாசலம், எதனா உடம்புக்குமுடியலையா. ஒருமாதிரி இருக்க?” உடன் வேலை செய்யும் நண்பன் கேட்டான். விவரங்கள் சொல்ல. அதனாலென்னடா நண்பா நான் எதுக்கு இருக்கேன் நான் தரேன்டா இந்தான்னு எடுத்துக் கொடுத்தான். ரெண்டு மூணு மாசத்துக்கு பிரிச்சி கொடு இந்தா வெச்சிக்கோன்னு கையில் வைத்து அழுத்தினான். பிரித்துப் பார்த்தால் ரெண்டாயிரம்தான் இருந்தது, அவனை ஏக்கமாகப் பார்க்க, மீதி மூவாயிரத்தை வங்கியில இருந்து எடுத்துக் கொடுத்தான். தெய்வதரிசனம் மாதிரி இருந்தது அவனோட நட்பு. இப்படி ஆபத்துல எதிர்ப்பார்ப்பில்லாம உதவறவன்தான் கடவுள்னு தாத்தா அடிக்கடி சொல்லுவாரு. ஆனாலும், பொதுவா நான் என் கஷ்டத்தை யார் கிட்டையும் அவ்வளவா பகிர்ந்துக்கிறதில்ல. பாக்குறவுங்க எல்லாம் ‘அருணாச்சலம்னாலே நல்லா இருக்கான், அவனுக்கென்னடா குறைச்சல்னு தான் பேசிக்குவாங்க. எப்படியோ பணம் கிடச்சுது. இது போதுமடா சாமின்னு அந்த கண்ணாடி கடைக்கு ஓடினேன். மனசுக்குள்ள வேற எங்க தாத்தாவுக்கு ஏதோ ஆயிடுமோன்னு ஒரு பயம் இருந்துகிட்டே இருந்தது.

கடைக்காரர் என்னைப் பார்த்ததும் முகம் சுழித்தார். அஞ்சாயிரத்தை எடுத்து நீட்டியதும், அவுத்து விட்ட குக்கர் மூடி மாதிரி புஸ்ஸுன்னு முடியெல்லாம் நட்டுக்குச்சி அவருக்கு. ‘வருத்தப் படாதீங்க ‘பார்த்து செய்யுங்க சாமின்னெல்லாம் கொஞ்சம் அப்படி இப்படி பார்த்து பேசியதும் கொஞ்ச இறங்கி வந்தாரு கண்ணாடிக்காரு. வருஷம் முடிய போவுது. அதே விலையா இருக்கும்னு குறை பட்டுகிட்டாரு. கடைக்காரருக்கு எல்லாம் கதையும் சொல்ல முடியாதேன்னு தயங்கி நிக்க என்ன நினச்சாரோ அப்புறம் ஒரு அஞ்சயிரம்னு போட்டு ரசீதையும் கண்ணாடியையும் கொடுத்துட்டாரு. எனக்கும் என் பொண்டாட்டிக்கும் கொள்ளை சந்தோஷம். என்னமோ ஒலிம்பிக்ல தங்கப் பதக்கம் வாங்கின மாதிரி அதைத் தூக்கிக்கிட்டு, எங்க மகனையும் கூட்டிக்கிட்டு பெரியண்ணா வீட்டுக்கு போனோம். வழியெல்லாம் ஒரு பயம் வேற ‘விடாத கருப்பு மாதிரி’ மனசை அரிச்சிக்கிட்டே இருந்துது. எங்கடா தத்தா சொல்ற மாதிரி தாத்தாவுக்கு எதனா ஆயிருக்குமோன்னு வெலவெலத்து ஓடினோம் ரெண்டுபேரும்.

“என்னங்க.. ”

“ஏன் மஞ்சு..”

“நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..”

“தப்பா எடுத்துக்காத மாதிரி சொல்லு..”

“விளையாடுறீங்களா..?”

“இல்ல இல்ல சொல்லு..”

“இல்ல.. இந்த தாத்தா எப்போ போனாலும், ‘நான் செத்த பிறகு தாண்டா வாங்கி தருவ’ செத்த பிறகு தாண்டா வாங்கி தருவன்னு சொல்லுமே.. இப்போ கண்ணாடிய ஒரு வழியா வாங்கிட்டோமே.. தாத்தாவுக்கு ஒன்னும் ஆயிருக்காதே?”

‘அடி பாவிமவ பெத்தவளே’ இடிபோல் வந்தது என் மனைவியின் கேள்வி எனக்குள்.

“சும்மா ஒரு பேச்சிக்கு கேக்குறேங்க.. மனசு பயத்துல கெடந்து தவிக்குதுங்க எனக்கு” நான் ஏதும் காட்டிக் கொள்ள வில்லை. ஆனா நானும் அதைத்தான் நினைத்தேன். மாத்தி மாத்தி நினைத்து அது வேற ஓன்னு கிடக்க ஓன்னு ஆயிடுமோன்னு உள்ளே ஒரு பயம் கவ்வி கொள்ள.

“பேசாம அண்ணாவைத் தொலைபேசில கூப்பிட்டு கேட்டுடட்டா மஞ்சு.. ”

“வேணாங்க.. நாம் ஏன் கெட்டதையா நினைக்கணும், தாத்தாவுக்கு ஒன்னும் ஆயிருக்காதுன்னே நினைப்போம், வேகமா நடங்க”

ஒரு வித பதட்டத்தோடு பேருந்தில் ஏறினோம். சற்று நேரம் நின்றிருக்க மகராசன் மகராசி குடும்பம் ஒன்னு எழுந்து உட்கார இடம் கொடுக்க ஜன்னலோரமா மகனை மடியில வைத்துக் கொண்டு ரெண்டு பெரும் உட்கார்ந்தோம். எப்படியோ மகனோட கேள்விகளால தாத்தா கண்ணாடி எல்லாம் மறந்து அவனுக்கு கண்ணில்பட்ட ‘கடைகளையும் ‘மனிதர்களையும் ‘உலகத்தையும் ஒரு பேருந்தின் ஜன்னலின் வழியாக காட்டிக் கொண்டும் ‘சொல்லிக் கொடுத்துக் கொண்டும் போனோம். ரெண்டு மூணு மணி நேர இடைவெளியில பெரியண்ணா வீட்டின் தெருவும் இறங்குவதற்கான இடமும் வந்து விட்டது. இறங்கி வெக்கு வெக்குன்னு நடந்தோம். நடக்க நடக்க ஒரு பயம். அதும் வாசலில் ஒரே கூட்டம் நிற்பது போலவே ஒருபிரமை வேறு.

என் மனைவிக்கு கூட அந்த பயம் நிறைய இருக்கும் போல. என் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். ஒரு முனை திரும்பி மறுமுனையில் பெரியண்ணா வீடு தெரிந்தது. யாரோ நின்றிருப்பது போல் தெரிந்தது. என் மகன் கைகாட்டி சிரித்தான்.. என்னடான்னு உற்று பார்த்தா(ல்) தாத்தா வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்.

என்ன ஆச்சர்யம் எங்களுக்கு. ஓடிப்போயி தாத்தாவைக் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. சற்றேறக் குறைய ஓடவே செய்தோம் நானும் என் மனைவியும் மகன் அறிவும்.

ஆமால்ல, என் மகன் பேரு சொல்லவே இல்லையே, அவன் பேரு அறிவானந்தம். அறிவு அறிவுன்னு கூப்பிடுவோம். இதோ அவன் தான் எங்களுக்கு முன் ஓடி தாத்தாவை கட்டிக் கொண்டான்.

“வாடா… பேராண்டி… தாத்தா போயட்டேனோன்னு பார்த்தியா…”

“ச்ச ச்ச இல்லை தாத்தா..”

“அப்ப ஏன் முகமெல்லாம் இப்படி வெளிறிப் போயிருக்கு” தாத்தா கேட்கும் போதே அதற்கு பதில் சொல்லாமல் கண்ணாடியை எடுத்து தாத்தாவிடம் நீட்டினேன் . தாத்தாவிற்கு வானமே கையில் கிடைத்த மாதிரி ஒரு சந்தோஷம். வாயெல்லாம் சிரிப்பு பொங்கியது. பழைய கண்ணாடியைக் கழற்றி விட்டுப் புதியக் கண்ணாடியை போட்டுப் பார்த்தார். கண்கலங்கி போனது.. தாத்தாவிற்கு.

”சோடாபுட்டி தெரியாம மெலிசா தான் வாங்கியிருக்க..”

“அப்படியா தாத்தா..”

“பிரேம் கூட பார்த்துப் பார்த்து வாங்கினியோ..?” என் மனைவி ஆமாம் தாத்தா என்று சொல்ல

“அதைச் சொல்லு, என் பேத்தி எடுத்திருப்பா அதான் இவ்வளவு அழகா இருக்கு..”

அவளைப் பார்த்து சிரித்தார் தாத்தா. அவளுக்கு உச்சி குளிர்ந்து போனது என்றாலும்,

“இல்லை தாத்தா அவர் தான் எடுத்தார் உங்களுக்கு இப்படித்தான் பிடிக்குமாமே.. ”

“ஆமா ஆமா.., எப்படி வாங்கின பேராண்டி ரொம்ப விலையா இருக்கும் போலிருக்கே.. ”

“அதலாம் இல்லை தாத்தா ‘உன்ன விடவா விலை!!! நீ சிரிச்சியே அந்த சிரிப்புக்கு கோடி கோடியா வாங்கித் தரலாம் தாத்தா”

நான் சொன்னது தான் தாமதம், தாத்தா என்னை கட்டிப் பிடித்துக் கொண்டார். கண்ணாடி பிடிச்சிருக்கா தாத்தா என் மனைவி மீண்டும் கேட்க அவளையும் அணைத்துக் கொண்டார். என் மகன் தாத்தா நானுன்னு இடையே வர அவனையும் தூக்கிக் கொண்டோம் ஆளுக்கொரு கையாக.

ஒரு மூக்குக் கண்ணாடி எங்களுக்கு அவ்வளவு சந்தோசத்தை வாங்கித் தந்தது. தெருவெல்லாம் என் தாத்தாவின் சிரிப்பு சப்தம் ‘ஒரு புதியதாய் பிறந்த குழந்தையின் சப்தமாக ஒலித்தது. அவ்வப்பொழுது கழற்றிக் கழற்றிப் பார்த்துக் கொண்டார். நான் பார்த்து பார்த்து வாங்கியதன் அத்தனை சந்தோசமும் அந்த ஒற்றை மூக்குக் கண்ணாடிக்குள் இருந்தது. எங்கள் குரல் கேட்டு உள்ளிருந்து அண்ணா அண்ணி குழந்தைகள் எல்லாம் வாசலுக்கு ஓடி வந்தார்கள். நாங்கள் வீட்டிற்குள் ஓடினோம்.

பொருள்: மனிதனை வென்றுவிடுவதில்லை தான், மனிதன் பொருட்களால் தன்னையே வென்று கொள்கிறான்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *