தவறுகளோ தன்மைகளோ!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2024
பார்வையிட்டோர்: 5,079 
 

(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தன் மாமனுடனும் அத்தையுடனும் உதகமண்டலத்திற்கு வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஒரு நாள் காலை, ஜானகி ‘ராஜபவன்’ வராந்தாவில் உட்கார்ந்துகொண்டு சுற்றிலுமுள்ள மலைக் காட்சிகளைக் கவனமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவற்றின் மட்டற்ற வனப்பில் அவள் மனம் ஈடுபடவில்லை. எந்த ஒரே எண்ணத்தை மனத்திற்கொண்டு சாதித்துவிட அவள் நீலகிரிக்கு வந்தாளோ, அது முற்றிலும் முடியாமற் போனதுதான் அவளை அப்பொழுது துன்புறுத்தியது. சென்னையில் வசித்த இறுமாப்புக்கொண்ட வாலிபன் ஒருவனுடைய அருகிலிருந்து தப்பி விலகிப்போய், சற்று மனச்சமாதானமடைய வேண்டுமென்றே அவள் தானாகவே மாமனிடம் நீலகிரிக்கு வருவதாகச் சொன்னாள்.

கலாசாலையில் வேணுகோபாலன் ஜானகிக்கு ஒரு வருஷம் மேற் படிப்புடையவன். அதே பிரஸிடென்ஸி கலாசாலையில் அப்பொழுது தர்க்க ஆசிரியனாக இருந்தான். அவள் அந்த வருஷம் எம்.ஏ.பரீக்ஷைக்குப் போயிருந்தால், தன் மாமனுடைய நெருங்கிய நண்பனின் மகன் என்ற காரணத்தால் தன்னுடன் நெருங்கிப் பழகும்படி அவனுக்கு ‘அவள்’ இடம் கொடுத்துவிட்டான். இப்பொழுது அவனை விட்டு விலகிச் சுயேச்சையாக இருக்க வேண்டுமென்று ஜானகி விரும்பினாள்.

வேணுகோபாலனும் ஜானகியும் அடிக்கடி சந்தித்துப் பல விஷயங் களைப் பற்றிப் பேசித் தர்க்கிக்கும்போது அவன் அவள்பேரில் ஓர் ஆதிக்கியம் கொண்டவன்போல நடந்துகொண்டான். முதலிலிருந்தே என்ன காரணத்தினாலோ ஓர் அதிகாரத் தோரணை கொண்டுவிட்டான்; தீர்மானத்துடனே பேசினான். அவள் தன்னுடைய அபிப்பிராயங்களை யும், வார்த்தைகளையும் மறுக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டு விடவேண்டுமென்றும் எதிர் பார்த்தான்.

புதுமையாலும், சங்கோசத்தாலும் கொஞ்சநாள் ஜானகி அவனைத் தன் வழியே போகவிட்டாள். ஆனால் போகப்போக அவனுடைய தொனியில், ‘நாம் பேசவேண்டும்; அவள் கேட்கவேண்டும்’ என்ற அகங்காரத்தைக் கண்டதும் அவள் அதைக் கண்டிக்க வேண்டும் என்று எண்ணினாள். அவளைக் காட்டிலும் அவன் விஷயங்களைப்பற்றி அதிகமாக யோசித்தும் அனுபோகப்பட்டும் இருந்தான் என்பது வாஸ்தவம். அவளைத் திருத்திச் சரியான பாதையில்தான் கொண்டு போனான். அதிலும் சந்தேகம் இவ்வை.

ஆனால் அப்படிச் செய்வதில் அவன் கையாண்ட தோரணைதான் அவளுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. சம்பாஷணையின் நடுவில் ஒவ்வொரு சமயம் அவன் தன் அபிப்பிராய பேதத்தைத் தெரிவித்தால், ‘இல்லை! நீ எண்ணுவது பிசகு!” என்று லவலேசமேனும் இங்கித மாவது மரியாதையாவது இல்லாமல் கர்ஜிப்பான். அவன் விஷயத்தை விளக்கியதிலிருந்து தன் அபிப்பிராயம் பிசகென்று கண்டுகொண்டாலும், அவன் அவ்வளவு முரட்டுத்தனமாக அதைக் கூறுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவன் தன்மேல் கொண்ட ஆட்சியைத் துராக்கிரகம் என்று கருதினாள். அதை நீக்கவேண்டும் என்பதற்காகவே அவனைச் சில நாட்கள் சந்திக்காமல்கூட இருந்தாள். ஆனால் அவன் விடவில்லை. அவளைத் தேடிக்கொண்டு வந்துவிட்டான்.

‘என்னைக் காண உனக்குப் பயமா இருக்கிறதா என்ன?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

இல்லவே இல்வை. பூலோகத்தில் ஒருவர் மற்றவரைக் கண்டு பயப்படுகிறாரென்று நீங்கள் எப்படித் தீர்மானம் செய்துகொள்ளு கிறீர்கள்?’ என்று சொல்லிவிட்டு, அவனுடைய அந்த அபிப்பிராயத்தை மாற்றுவதற்காகவாவது அவனுடன் எப்பொழுதும் போலத் தினமும் பேசிப் பழகவேண்டுமென்று தீர்மானித்தாள்.

நட்பு வலுத்துத் தர்க்கங்களும் சம்பாஷணைகளும் முற்ற முற்ற, அவள் அவனுடைய ‘கணீர்’ என்ற குரலைச் சதா கேட்டுக் கொண்டி ருப்பதுபோலவே பிரமைகொள்ள ஆரம்பித்தாள். மூக்குக் கண்ணாடி அணிந்த அவனடைய முகம் எப்பொழுதும் அவள் அகக் கண்முன் தோன்றிக் கொண்டிருந்தது. ‘கனவிலும் நினைவிலும் அவனுடைய தோற்றம் அவள் மனதில் உதித்துக் கொண்டிருக்க ஆரம்பித்தது. கடைசியில் அந்த மனவேதனை தாங்கமுடியாமல் போனதால் தான் அவள் சொல்லிக்கொள்ளாமல் நீலகிரிக்குப் புறப்பட்டுச் சென்றாள்.

அங்கிருந்து அவனுக்கு, ‘இந்தப் பிரயாணத்தால் உங்கள் ஆதிக்கத்தி லிருந்து விலகிவிட்டேன்’ என்று கர்வத்துடன் கடிதம் எழுதினாள்.

அப்பொழுது அவனுடைய பதிலைக் கையில் வைத்துக் கொண்டி ருந்தாள்.

சென்னை
20-4-1938

‘அம்மா’?

தங்கள் அன்பார்ந்த கடிதம். உங்கள் தைரியத்தை மெச்சுகிறேன். தாங்கள் ‘விடுதலை வாழ்வு’ என்று கூறும் நாட்களை உங்கள் சிநேகிதரான கவியுடன் ஆனந்தமாகப் போக்குவீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள்
வேணுகோபாலன்.

கேலி செய்தான்! பிரிவுக்குப் பிறகு எழுதிய அந்தக் கடிதமே அவளது உறுதியின் பலஹீனத்தைக் காட்டி விட்டதென்று அப்பொழுதுதான் அவளுக்குப் பட்டது. கடிதம் எழுதினதே பிசகு என்று நினைத்தாள்.

மனச் சமாதானமற்ற அந்த மாதம் கழிவதற்குள்ளேயே வேணுவை விட்டுப்பிரித்த அந்தத் தனிமையில் ஜானகி தன் உள்ளம் சூன்யமா யிருப்பதை அறிந்தாள். எதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை. உதக மண்டலத்தில் அவ்வளவு அழகாயும் மிதமிஞ்சியும் இருந்த இயற்கைக் காட்சி அவளுக்கு மகிழ்ச்சி தரவில்லை. அவனுடைய விளக்கமின்றி அது அர்த்தமற்றதுபோல் இருந்தது அவள் கண்களுக்கு. புத்தகங்களைப் படித்துப் பார்த்தாள். அதனாலும் சிறிது கூடச் சமாதானம் அடைய வில்லை. அவன் உதவியின்றிப் படிப்பிலும் அவள் பயன்பெறவில்லை. அந்தப் படிப்பு உரையற்ற மூலத்தைப் போல இருந்தது அவளுக்கு. அப்பொழுது அவள் மனம் பட்டணத்துப் பழக்கத்தின் பழைய நினைவு களை நாடிச் சென்றது.

‘சரி என்று நினைத்ததை அவர் எனக்கு எடுத்துரைத்ததில் என்ன பிசகு? அவருடைய அபிப்பிராயங்களைச் சரி என்று ஒப்புக்கொண்ட பிறகு அவரிடம் நான் மனஸ்தாபம் கொண்டது சரியா? பழக்கமில்லாத வேறு பெண்ணிடம் அவ்வளவு உரிமையுடன் பேசியிருப்பாரா அவர்? ஆ’ இதை ஏன் நான் அப்பொழுது அறியவில்லை? நெருங்கிய சிநேகத்தின் பாத்தியத்தால் அவர் சொன்னதை நான் இவ்விதம் பிசகாக எண்ணுவேன் என்று அவர் எப்படி அறிந்திருக்கக்கூடும்? ஒருவேளை வெறும் சிநேகத்தைக் காட்டிலும் மேலான பத்தம் ஒன்று ஏற்பட்டுவிட்டது என்று எண்ணித்தான் அவர் அப்படி இருந்தாரோ?… ஓஹோ, ஒருகால் என் மெய்ம்மறந்த கவனத்தை அவர் ‘காதல்’ என்று கருதினாரோ? தாமும் என்னிடம் காதல் கொண்டுவிட்டாரோ?… இல்லை. ஏனென்றால் அவர் பிரிவாற்றாமை கொள்ளவில்லை. ஆனால் எப்படிச் சொல்வது ? அவர் எழுதவில்லை. நானும் எழுதவில்லை. இன்னும் நான் ஏன் அவரைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்? அவருடைய பேச்சுக் காகவும் பழக்கத்திற்காகவுமா? என்று பலவிதமாக ஜானகி நினைத்தாள்.

அவள் மனம் அப்படிக் கலக்கம்கொண்டு பழைய நினைவுகளில் ஒரு புதிய புனித உணர்ச்சி பெற்றிருந்த பொழுது அது கலைவதற்குக் காரண மாக நாதன் வந்தது அவளுக்குக் கொஞ்சம் கோபத்தை உண்டாக்கிற்று.

‘வாருங்கள், நாதன். இன்று ஏதாவது விசேஷம் உண்டா?’ என்றாள் போலி உல்லாசத்துடன்.

‘நீலகிரி இரவு’ என்று ஒரு சிறு இசைப்பா எழுதியிருக்கிறேன். அதைப்பற்றி உங்கள் அபிப்பிராயத்தை அறிய விரும்புகிறேன்.’

அவன் கையிலிருந்த காகிதத்தை வாங்கிப் படித்தாள். இரண்டு வரி வாசித்தாள். மேலே போக முடியவில்லை. முழுவதும் வாசித்தது போலப் பாவனை செய்துவிட்டு, ‘பேஷ், நிரம்பவும் நன்றாக இருக்கிறதே!’ என்றாள்.

‘நன்றாய் இருக்கிறதா? தான் எவ்விதச் சிரமமும் எடுத்துக் கொள்ளாமல் அது முற்றும் என் மனத்திற்கு வந்தது. அதைத்தான் இலக்கியத்தில் ‘ஆவேசம்’ என்கிறார்கள்.நான் உட்கார்ந்து ஒன்றையும். புனைவதில்லை. சூரியகிரணங்கள்போல என் மனத்திற்கு விஷயங்கள் தாமே வருகின்றன. இன்னும் கொஞ்சநாள் போனால் என் பேச்சே செய்யுளாகிவிடும்போல் இருக்கிறது! அதற்கெல்லாம் காரணம் யார் தெரியுமா? ஜா-ஓ மன்னிக்கவேண்டும்.-நீங்கள் தான் காரணம்’

ஜானகிக்குத் தலைவலி எடுத்துவிட்டது. இன்று என்னவோ அவனு டைய குரல் நாராசம்போல அவளைத் தாக்கிற்று. அவனது ஆபாஸமான பேச்சு, உச்சரிப்பு, துஷ்ட அகங்காரம் – இவை அவனைப் புண்படுத்தின. ‘சீ’ இந்த மிருகத்தை நாகரிகமுள்ளவன் என்று கருதினது பிசகல்லவா?’ என்று எண்ணினாள்.

பேசிக்கொண்டே தினசரியின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருத்த நாதன் திடீரென்று, ‘இதென்ன, இப்பொழுது எல்லோருக்கும் டாக்டர் பட்டம் கிடைத்து விடுகிறதே; இது யார் இவன், டாக்டர்? என்றாள். ‘யாருக்குப் பட்டம் கிடைத்திருக்கிறது ?’

‘சென்னை ஸர்வகலாசாலை ஆசிரியர் யாரோ கே. வேணுகோபாவன் என்பவன், ‘பிரபத்தியும் நவீன ஆராய்ச்சியும்’ என்ற புஸ்தகத்தை எழுதியதற்காக டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறான். கற்றுக்குட்டி என்று நாதன் உதாசீனமாக ஆரம்பித்தான்.

ஜானகிக்கு உடனே கோபம் பொங்கி எழுந்தது. ‘அவர் யார் என்று தெரியாமல் பேசுகிறீர்கள். சென்னை ஸர்வகலாசாலையிலேயே அவர் சிறந்த அறிவானி-‘

‘தெரியும் அம்மா இவன்களை எல்லாம் எனக்கு-‘

ஜானகிக்கு அப்பொழுதுதான் வேணுவின் மேன்மையும், அந்த வறட்டு ஜம்பக் கவியின் அற்பத் தனமும் விளங்கின. அவன் மேலே பேச முடியாமல் குறுக்கிட்டு, ‘சரி, மாமா வெளியே இருந்து வருகிற நேரமாய்விட்டது. நான் போஜனம் செய்யப் போகவேண்டும்’ என்று பேச்சை முடிப்பதற்காகச் சூசனையாகச் சொன்னாள் ஜானகி.

‘நேற்றிரவு ஒரு சிறு பாட்டு எழுதினேன். அதன் சொல்லழகும் பொருளழகும்-‘

‘மன்னிக்கவேண்டும். நான் இப்பொழுது அதைப் படித்து மகிழ முடியாததற்கு வருந்துகிறேன்-‘

‘அது பதினான்கு வரி கொண்டதுதான்-‘

ஜானகிக்குப் பொறுக்க முடியவில்லை. வெறுப்பை அடக்கிக் கொண்டு, ‘மன்னிக்க வேண்டும்’ என்று கூறிவிட்டு எழுந்தாள். ‘அது உங்களுக் க எழுதியதுதான். முதற்பாகத்தில்’ ஜானகி உள்ளே போய்விட்டாள்.

‘இந்தப் பெண்கள்!’ என்று சொல்லிக்கொண்டு கவி வெளியேறினான். பிற்பகலில் மழை தூறிக்கொண்டிருந்தது. தினசரியைப் படித்துக் கொண்டிருந்த ஜானகி அதில் ஒரு செய்தியைக் கண்டு திடுக்கிட்டான்.

‘டாக்டர் கே. வேணுகோபாலனுக்கு

அபாயமான ஜூரம்.

சென்னை ஸர்வகலாசாலை ஆசிரியரும், கொஞ்சகாலத்திற்குமுன் டாக்டர் பட்டம் பெற்றவருமான கே. வேணுகோபாலன் கடும் ஜூரத்தால் ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்.’

கொஞ்சநேரம் அப்படியே உட்கார்ந்திருந்தான் ஜானகி; சிறிது நேரம் கழித்துத்தான் செய்யவேண்டியது முழுதும் அவள் மனத்திற்குப் புலப்பட்டது.

அன்று சாயங்கால வண்டியிலேயே சென்னைக்குப் புறப்பட்டாள். ‘ப்ளு மவுண்டன் எக்ஸ்பிரஸ்’ ஊர்வது போலத் தோன்றியது அவளுக்கு, அந்தப் பிரயாணமே தாங்கமுடியாத உபத்திரவத்தைக் கொடுத்தது. இடத்தில் உட்காரமுடியாமல் துடித்தாள்.

‘ஒருவேளை காலத்தில் போய்ச் சேரமுடியாமல் போய்விடுமோ? ஈசுவரா! எப்படியாவது போய்விடமாட்டோமா? ஒருகால் ஜூரம் சற்றுப் படிமானமாக இருந்தால் இனிமேல் அவரைத் தனியே விட்டிருப்பதில்லை. உலகில் ஒருவரும் இல்லை என்று அவரை ஏங்க. விடுவதில்லை?’ என்று தனக்குள்ளேயே கூறிக்கொண்டான்.

ஜெனரல் ஆஸ்பத்திரியில் ‘இன் பேஷன்ட்’ வார்டு ஒரு விசேஷமான நிச்சப்தத்தில் ஆழ்ந்திருந்தது. ஒவ்வொரு சமயம் டாக்டரோ, நர்ஸோ போகும்போது பூட்ஸ் சப்தந்தான் கேட்டது. மருந்தின் வாசனை மூக்கைத் துளைத்தது. வேணுகோபாலனின் பக்கத்தில் ஒரு நர்ஸ் உட்கார்ந்து கொண்டு வியாதியுடன் அவன் போராடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் மெதுவாகவும் சிரமத்துடனும் மூச்சுவிட்டான். அவன் கண்களை அடிக்கடி திறந்து ஹாலைச் சுற்றிப் பார்த்தான். அடிக்கடி குடிக்கத் தண்ணீர் கேட்டபோது அவனுக்கு நர்ஸ் ஏதோ கொடுத்துக் கொண்டிருந்தாள்.

காலை ஏழு மணிக்கு டாக்டர் வந்து பரீக்ஷைசெய்து பார்த்தார். நாடி தளர ஆரம்பித்துவிட்டதைக் கண்டு, ‘யாராவது நெருங்கியவர்கள் உண்டா?’ என்று நர்ஸைப் பார்த்துக் கேட்டார்.

‘இல்லை’ என்றாள் நர்ஸ்.

நோயாளியின் கண்கள் திறந்தன. இரண்டு திவலைகள் ஜலம் வெளியே வந்தன. டாக்டர் ஓர் இஞ்ஜெக்ஷனைக் கொடுத்துவிட்டு, தர்ஸிடம் வேண்டிய தகவலைச் சொல்லிவிட்டுச் சென்றார்.

ஜானகி பத்து மணிக்கு அவன் படுக்கையண்டை பதறிக்கொண்டு வந்தாள். வேணு பிரக்ஞையற்று இருந்தான்.

‘நீங்கள் தான் ஜானகியா?’ என்று கேட்டாள் நர்ஸ். ‘ஆமாம், ஏன்?’

‘அப்படித்தான் இருக்குமென்று நினைத்தேன். நேற்றிரவு முழுவதும் ஜன்னியில் உங்களைப் பற்றித்தான் பிதற்றிக்கொண்டிருந்தார் – கர்வம் கொண்டவளென்றும், இரக்கமில்லாதவளென்றும், என்ன என்னவோ சொன்னார். ஏன் அம்மா அவரை விட்டுவிட்டுப் போனீர்கள்? பாவம் ரொம்பப் புண்பட்டுவிட்டார்!’

‘எப்பொழுது பிரக்ஞை வரும்?’ என்று கேட்டுக் கொண்டே ஜானகி வேணுகோபாலன் நெற்றியைத் தடவினாள். வேணு கண்களைத் திறந்து பார்த்தான்.

‘உடம்பு எப்படி இருக்கிறது? – என்ன செய்கிறது இப்பொழுது?’ என்று அவள் உடனே கேட்டாள்.

வேணுகோபாலன் ஒன்றும் பதில் சொல்லாமல் அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘ஆரம்பத்திலேயே என் பெயரை ஆஸ்பத்திரிக்காரர்களுக்குச் சொல்லி இருக்கக்கூடாதா?’ என்று ஜானகி கேட்டாள்.

‘நீதான் என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாயே!’ என்று அவன் மெள்ளச் சொன்னான்.

‘அப்படி நான் செய்தது பிசகு என்று நீங்கள் எனக்குச் சொல்லக் கூடாதா? மற்ற எல்லா விஷயங்களிலும் பிசகு பிசகு என்று சொன்னீர் களே?’ என்று விம்மினாள் ஜானகி.

‘நீயே அறிந்து திரும்பி வந்துவிடுவாய் என்று இருந்தேன் தீ வந்தும் விட்டாய். ஆனால் உனக்கு முன்னால் யமன் வந்துவிட்டானே!” என்று வேணு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டே சொன்னான்.

‘இப்பொழுது உடம்பு என்ன செய்கிறது?’

‘நீ’ என்று ஆரம்பித்தான். திடீரென்று ஓர் ஆழ்ந்த இருமல் ஏற்பட்டது. கட்டியாகக் கபம் வெளியே வந்து விழுந்தது.

சட்டென்று நர்ஸ் அருகில் வந்து கவனித்துப் பார்த்தாள்; மூச்சுத் திணறவ் கொஞ்சம் மட்டுப்பட்டது. உடனே கஸ்தூரி கலந்த ஒரு மருந்தைக் கொடுத்து மெதுவாகச் சாப்பிடச் சொன்னாள்.

‘அம்மா, இவர் பிழைத்துவிடலாம்!’ என்று நர்ஸ் மலர்ந்த முகத்துடன் சொன்னாள்.

‘ஆ’ என்று தான் ஜானகியால் சொல்ல முடிந்தது.

‘ஜனகம்! இங்கே வா! உன்னுடன் உயிரும் திரும்பி வந்துவிட்டது போலத்தான் இருக்கிறது!’ என்றான் வேணுகோபாலன் மெதுவாகத் திணறிக்கொண்டு.

– 1939

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *