கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 7, 2018
பார்வையிட்டோர்: 7,224 
 
 

சுள்ளென்ற வெயில்.வெறுமை ரீங்காரமிடும் பொழுது.இரண்டு நாளாய் ஊணுறக்கம் இழந்த களைப்பு. நடந்து நடந்து தலை கிறுகிறுக்க…சட்டென்று நட்ட நடு வெளியில் தரையில் உட்கார்ந்து விட்டேன்.உச்சி முதல் பாதம் வரை வியர்த்து வழிந்து..குளித்த மாதிரியாயிற்று.

மனசுக்குள் ‘எங்கே..எங்கே’என்ற கேள்வியின் அரிப்பு.பார்வையெல்லாம் அவன் போலவே….மாய தோற்றங்களாகி…தேடுதல் எத்தனை சிரமமானது.இப்போதுதான் புரிகிறது.

அது சரி.யாரைத் தேடுகிறேன்.சொல்லவில்லையே.

அருண்.உங்களுக்குத் தெரிந்திருக்காது.என் ஒரே மகன். அவனை..மூன்று நாட்களாக காணவில்லை.

முதலில்,வழக்கம் போல பின்னிரவில் வந்து வராண்டாவில் படுத்திருப்பான் என்று நினைத்து இருந்து விட்டேன்.மறுநாள் மதியம் வரை தேடத் தோன்றவில்லை. நேரம் ஆக ஆக என் மனைவியின் அங்கலாய்ப்பு அதிகமாக, “கழுதை வேறெங்கு போயிரப் போகுது.தாத்தா வீட்டுக்குதான் போயிருக்கும்.”என்று சமாதானப்படுத்தினேன்.

ஆனால் மாலையில் வந்து நின்ற தாத்தா,விசயம் அறிந்து குதியாய் குதித்தார்.

“நீங்க புள்ளையைப் போட்டு பாடாய் படுத்தியிருப்பிங்க.அதான் எங்காவது ஓடிப் போயிருக்கும்.ஒரு நிமிசம் இருக்க முடியாம பிள்ளையை நைநைனு நச்சரிச்சா வீட்டில இருக்க எப்படி மனசு வரும்.இப்ப எங்க போச்சோ…என்ன ஆச்சோ…” அவரது கத்தலில் எனக்கெ எங்காவது ஓடிப்போய்விடலாம் என்று தோன்றியது.

ஒரு விசயம் மட்டும் உறுதியானது.அருண் எங்கேயோ ஓடிவிட்டான்.

சட்டையை மட்டிக் கொண்டு விசாரித்துக் கிளம்பினேன்.அருணின் கூட்டாளிக் கூட்டமே ஒரு மாதிரியானது.விதவிதமாய் தலைமுடியை அசிங்கமாய் வெட்டிக்கொண்டு,ஒவ்வா நிறத்தில் சட்டையும்,லுங்கியும்,வாயில் புகையும் சிகரெட்டும்…

என்னைப் பார்த்ததும் விறைத்தான்கள். “அவன் இப்ப எங்க கூட வரதேயில்ல..” மொத்தமாய் கை விரித்தான்கள். இவனுகளே ஏடாகூடமாய் ஏதாவது பண்ணி தொலைத்திருப்பான்களோ. ஆறு,குளம்,பாழடைந்த கிணறு எல்லாம் தேடிவிட்டு சோர்வாய் வீட்டுக்கு வந்தேன்.மாமனாரின் தொணதொணப்பு தொடங்கிற்று.

“இப்படி உட்கார்ந்தா ஆச்சா..போய் கண்டுபிடிங்களேன்…ஆங்..உங்களுக்கு என்ன கவலை.எப்ப போய் தொலைவான் நிம்மதினு நினைச்சிருப்பீங்க.இப்படி ஒரு மனுசனா..’

தலையே வெடித்தாலும் பதில் பேச முடியாது.பேசினால் பழைய சங்கதி ஒன்றை குத்திக் காட்டுவார்.அது நான் செய்த தவறுதான்.

அருண் அப்போது ஆறாவது படித்துக் கொண்டிருந்த நேரம்.முதல் முறையாக காணாமல் போயிருந்தான்.

பள்ளிக்குப் போகாமல் வீராத்தோப்பில் ஒளிந்திருந்து விட்டு வருவதை காலையில் கண்டித்திருந்தேன்.அன்று பள்ளிக்குப் போனவன் வீடு திரும்பவில்லை.

வீட்டில் ஒரே கதறல்.அக்கம் பக்கம் பரபரத்தது.ஆளாளுக்கு ஐடியா என்ற பெயரில் பயமுறுத்திய போது…கையை பிசைந்து கொண்டு நின்றேன்.கோபம்.’ராஸ்கல்.வரட்டும்’கறுவினேன்.ஸ்கூலில் போய் விசாரித்து வரலாம் என்று கிளம்ப,எதிரே மாவுமில் வாட்ச்மேனுடன் அருண் வந்து கொண்டிருந்தான்.

“என்ன சார்.புள்ளைய காணமின்னு தேடமாட்டீங்களா.”

பதில் சொல்வதை தவிர்த்தேன்.

“…எங்க மில் சுவரோரமா இருந்து அழுதுட்டு இருந்தான்.கிட்டக்க போய் பார்த்தா..இவன்.” வாட்ச்மேன் சொல்ல எனக்குள் கோபம் எகிறியது.அருண் சட்டையை கொத்தாய் பிடித்து தூக்கினேன்.

மில்காரன் கத்தினான்,”சார்,அடிக்காதீங்க.பாவம் குழந்தை மிரண்டு போய் இருக்கு.”

” நீங்க போங்க சார். நான் பார்த்துக்கறேன்.”

“இல்ல…குழந்தை….”

“அட.விட்டாச்சுல்ல…போய்யா உன் வேலையை பார்த்துகிட்டு..”

“ஆமா பெரிய இவுரு.குழந்தைகிட்ட வீரத்தை காட்டிட்டு…தூ…இவனெல்லாம் ஒரு ஆம்பளை..”

வாட்ச்மேனின் அவமதிப்பு பெரிதாய் உறுத்தியது.அது உள்ளுக்குள் ஜ்வாலையாய் பரவி…

கண்மூடித்தனமாக விளாசினேன்.விக்கி விக்கி மூச்சுமுட்ட அழுதான்.வீசியெறிந்துவிட்டு குப்புற போய் படுத்தேன்.

அன்று இரவில் மனைவி என்னை உலுக்கி எழுப்பினாள்.குழந்தை உடம்பு தூக்கிதூக்கி போட்டது.ஜுரத்தில் உளறியது. “நான் படிக்க போலப்பா..சார் அடிக்காருப்பா..” எனக்கு துணுக்குற்றது.என்ன காரியம் பண்ணி விட்டேன். நொந்தேன்.

அள்ளி போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேன்.ஆறு நாட்கள்.அனேக வசவுகள்.பணச்செலவுகள்…அவனை மீட்டெடுப்பதற்குள் நான் ரணமாகிப்போனேன்.

அன்றிலிருந்துதான் எல்லாரும் பேச்சுக்கு பேச்சி என்னை தூக்கி எறிவது என்றாயிற்று.

அதிலிருந்து அவனை எதற்கும் கடிந்து கொள்வதில்லை.அப்படி ஒரு முடிவிற்கு வந்தேன்.

ஒரு விசயம்.இந்த எனது கொள்கை அருணுக்கு மட்டும் ரொம்ப பிடித்து போயிற்று.ஏனென்றால் அன்று முதல் நான் அவனோடு பேசிக்கொள்வதேயில்லை.அது அவனுக்கு ரொம்ப சௌகரியமாயிற்று.

தட்டு தடுமாறி பத்தாவது வரை எட்டியவன் அதை தாண்ட மறுத்தான்.தனிகல்லூரியில் படிக்கப் போனான்.படிப்பைத் தவிர சகல கலைகளும் கைகூடின.சினிமா,சிகரெட்,கூடா நட்பு…

வெளியே வராண்டாவில் படுக்கை எடுத்து வைத்திருப்பான்.இரவில் பூனை போல் வந்து படுப்பான்.புகைவாசம் காட்டிக் கொடுக்கும்.

“ஏண்டா இப்படி ராத்திரியெல்லாம் சுத்தறே. எங்கெல்லாம் தேடறது.”

“நானென்ன பச்சைகுழந்தையா தானே வரமாட்டனா”

“அதுக்காக உன் இஷ்டத்துக்கு வரது போறதா..”

அப்பா..வேணாம்.மிரட்டாதீங்க..சொல்லிட்டேன்.”

‘மிரட்டாதீங்க’ என்று என்னை மிரட்டுகிறான் கோபம் வந்தது.காட்ட முடியாது.கூடாது.காட்டினால் அப்பா என்றும் பாராமல் எதிர்க்கத் தோன்றும்.சண்டை வரும்.அப்படி ஒரு சந்தப்பத்தை நாமாகத் தரக்கூடாது.

இதெல்லாம்விட மேலாக என் மனைவி.ஒரு நாலு நாளைக்கு மௌனவிரதம் அனுஷ்டிப்பாள்.முகத்தை திருப்பிக் கொண்டு காப்பி நீட்டுவதும்,சாப்பாட்டு தட்டை ‘டங்’கென்று தட்டி கூப்பிடுவதும்…இதை விட கன்னத்தில் நான்கு அறை தந்து விட்டிருக்கலாம் என்று தோன்ற வைத்துவிடும்.

அதோடு இன்னொரு தொந்தரவும் இருக்கிறது.செய்தி எப்படிதான் எட்டுமோ தெரியாது.அடுத்த பஸ்ஸில் அவள் அப்பா வந்திறங்குவார். “எத்தனை ஆபீசருங்க கியூவில நின்னாங்க.போயும் போயும் ஒரு குமஸ்தாவுக்கு வாழ்க்கைபட்டு என் பொண்ணு என்ன நிம்மதிய கண்டா…தப்பு பண்ணிட்டேன்..”

எதற்கு இந்த உபத்திரவம்.பேசாமல் இருந்து தொலைப்போம் என்று வழக்கமாயிற்று.

அதுவே இப்போது வினையாயிற்றோ.

இப்பொது அவனை எங்கு போய் தேடுவது.இப்படி கிடந்து தவிக்க விட்டு விட்டானே.’சவம் போனா போகட்டும்’ என்று இருக்க முடியுதா.மனசு கிடந்து குமையுதே.என்னதான் கெட்டு குட்டிசுவரானாலும் மனசின் தவிப்பு இந்த பிள்ளைகளுக்கு எங்கே புரிகிறது.

வியர்வையை துடைத்துவிட்டு எழும்பி நடந்தேன்.எதிரே வந்த அலுவலக நண்பன் என் தோற்றத்தைக் கண்டு ஒரு டீ வாங்கி தருகிற அளவுக்கு பரிதாபப்பட்டான்.

“பேசாம போலிஸ்ல ஒரு கம்ப்ளைன்ட் குடு.அப்படியே பேப்பர்ல போடு.”ஆலோசனை சொன்னான்.”ஒரு அவசர சோலி.வரட்டா.” காணாமல் போனான்.

ஸ்டேஷனுக்கு போனபோது பயமாயிருந்தது. “பையன் பேர் என்ன” என்று கேட்டதே கலக்கமூட்டியது.

“அருண்.வயசு பதினேழு.மூணு நாளா காணலை.”அந்த அதிகாரி தனக்குள்ளே சொல்லிப்பார்த்துக் கொண்டார்.ஏற இறங்க பார்த்துவிட்டுச் சொன்னார்,”அந்த மூலைல ஒருத்தன் இருக்கான்.அவனான்னு போய் பாரு.”

இருட்டு மூலையில் கூர்ந்து பார்க்க,குத்துகாலிட்டு,குனிந்து இருந்தவன்…அட..அவனேதான்.படாரேன்று பாரம் இறங்கிய மாதிரி இருந்தது.காணக்கிடைத்தலும் சந்தோஷம்தானே.ஓடிப் போய் கட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.அவன் நிமிர்ந்து பார்த்தான்.படக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டான்.

திடீரென்று அந்த கேள்வி எழுந்தது.’இவன் எப்படி இங்கே’

“திருட்டு கேசு.பஸ் ஸ்டாண்ட்ல மாட்டினான்..”

“இல்ல சார் இவன் அப்படிப்பட்ட பையன் இல்ல.”

அதிகாரி முறைத்தார், “அப்ப நான் பொய் சொல்றனா.உங்களுக்கு இந்த பையனை பத்தி என்ன தெரியும்.”

தலைகுனிந்தேன்.

அருண் திரும்பிப் பார்த்து என் தலைகுனிவை ரசித்தான் போலிருக்கிறது.

“லோக்கல் ஆளுங்கதான் பிடிச்சு கொண்டு வந்தானுங்க.அவனுக அடிச்சி கை காலெல்லாம் வீங்கியிருக்கு.பாருங்க ஒரு சொட்டு கண்ணீர் விட்டானா கேளுங்க. நாங்க எத்தனை விசாரிச்சாலும் முறைச்சிட்டு இருக்கான்.சரியான கிரிமினல்தான் இப்படி இருப்பான்.”

“சார் திருடற அளவுக்கு அவன் போமாட்டான் சார்..”

“திரும்பவும் அப்படித்தானே சொல்றீங்க.டேய் வாடா இங்க. நீங்களே கேட்டுப் பாருங்க.”

அருகில் வந்தவனைப் பார்த்து நெஞ்சு பதறிற்று.உடம்பெல்லாம் அடிபட்டு அங்கங்கே வீங்கி போயிருந்தது.புறங்கையில் தடித்து..கொப்புளம் போல…

“என்னடா செய்த.பயப்படாம உள்ளத சொல்லிரு..”

நிமிர்த்து என்னை பார்க்கவே இல்லை.போலிஸ் அதட்டலுக்கு பிறகுதான் வாய் திறந்தான்.

” நைட் ஷோ பாத்திட்டு பஸ் ஏற வடசேரி வந்தேன்.பஸ் ஸ்டாண்டில ஒருத்தன் பக்கத்தில இருந்த பையை எடுத்துக் கேட்டான்.குடுத்தேன்.”

“அட பாவி அவன் கேட்டா..அப்படியே குடுத்திடறதா..”

“கேட்டீங்களா.இவனுக எல்லாம் ஒரே குரூப்.ஆனா காட்டி குடுக்க மாட்டானுக.”

போலிஸ் மேட்டர்.கையாள்வது எனக்கு பழக்கமில்லை.தவித்தேன்.

“இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டுடுங்க சார்.”

“விட்டுடறேன்.இவன் பையை குடுத்தது யாருன்னு சொல்லிரட்டும்.விட்டுறேன்.”

“சொல்லேண்டா.”

“எனக்கு தெரியாது.”

“இவனை நாங்க விசாரிச்சிகிடறோம். நீங்க போங்க சார்.”

என்ன செய்வது.எனக்கு எதுவும் ஓடவில்லை.அவமானத்தால் சிறுத்து போயிற்று.வெளியேறினேன்.கால் போனப்
போக்கில் நடந்தேன்.சுற்றி நடப்பது எதுவும் புலனாகவில்லை.

திடீரேன்று என்னை உரசியபடி ஒரு பைக் வந்து நின்றது.”என்னப்பா கண்ணே தெரியாத மாதிரி போய்கிட்டிருக்க.”

கேட்டவனைப் பார்த்ததும் எனக்கு ஜீவன் வந்தது போல் இருந்தது.செல்வபாபு.ஒண்ணா படிச்சவன்.இப்ப கட்சி ஆள்.

அவனை பிடித்துக் கொண்டேன்.குமுறலை கொட்டித் தீர்த்தேன்.

“ப்பூ..இவ்வளவுதானா.இதுக்க இப்படி பித்து பிடிச்ச மாதிரி அலையிற.கவலையை விடு. நீ இப்ப என்ன பண்ற. நேரா வீட்டுக்கு போ.ஒரு ஐயாயிரம் ரூபா ரெடி பண்ணு.அப்படியே சாயுங்காலம் ஆறு மணிக்கு இங்க வந்து நில்லு.மத்ததை நான் பார்த்துக்கறேன்.” என்றான்.

“ஐயாயிரமா” நான் வாய் பிளந்ததை கண்டு நகைத்தான்.”ஆமாம்பா, நீ சொல்ற மேட்டருக்கு கொஞ்சம் செலவு இருக்குப்பா.” போய் விட்டான்.

வீட்டுக்கு வந்து விசயத்தை சொன்னால் ‘ஓ’வென்று மனைவி அழுதாள்.பணம் வேண்டும் என்றறிந்ததும் மாமனார் குதித்தார்.”ஒரு ஐயாயிரம் பணம் கூட எடுக்க துப்பில்ல. என் மக எப்படிதான் குப்பை கொட்டுறாளோ.” சம்பந்தமில்லமல் ஆவேசப்பட்டார்.

எப்படியோ பணம் புரட்டி அரக்க பரக்க ஆறு மணிக்கு போய் நின்றால் செல்வபாபுவைக் காணவில்லை.ஆறு,ஆறரை ஆயிற்று.ஏழாயிற்று.கிலி பிடித்தது.பாவி ஏமாற்றிவிட்டானா. நகத்தை கடித்து துப்பி விசனப்பட்டுக் கொண்டிருந்தேன்.பசியில் காது அடைத்து,மனசுக்குள் பரபரப்பு எழுந்தது.பைத்தியம் பிடித்துவிடும் என்ற கட்டம் வந்ததும் ஜிபும்பா மாதிரி பாபு வந்தான்.மணி ஏழரை…”என்னப்பா பண்றது.வரவழியில ஒரு லோக்கல் மேட்டர்.பைசல் பண்றதுக்குள்ள நேரம் ஆகிப்போச்சி…சரி..சரி பணத்தை எடு..பையன் பேரு என்ன சொன்ன..”

சொன்னேன்.பணத்தை மடியில் செருகிக் கொண்டான்.

உள்ளே நுழைந்தான்.அவனுக்கும் அங்கு வேறு பல வேலைகள் இருந்ததோ என்னவோ,யாரிடமெல்லாமோ தனித் தனியாகப் பேசினான்.சுற்றி சுற்றி அவன் காட்டிய பாவ்லாவிற்கு என் பதட்டம் அதிகரித்தது.

நாற்பது நிமிஷத்திற்கு பிறகு அருணுடன் திரும்பி வந்தான்.”அப்பப்பா. கேசு பெரிய சிக்கல்பா..ஏதோ நான் தலையிட்டதுனால சால்வ் ஆச்சு.இல்லேன்னா மேட்டர் பெருசாயிருக்கும் தெரியுமா.”

திருப்தியாயிருந்தது. “பெரிய ஆளுப்பா நீ’ என்றேன்.திரும்பி அருணை பார்த்தேன்.வேறெங்கோ வெறித்துக் கொண்டிருந்தான்.

“பாரு.உனக்காக எவ்வளவு பெரிய ஆளு..வேலையெல்லாம் விட்டுட்டு வந்திருக்காரு.ஒரு தாங்ஸ் சொல்லேண்டா.”

அவன் திரும்பி பாபுவை பார்த்த பார்வையில் நட்பு தெரியவில்லை.

“சரி..சரி..பையனை விரட்டாதே.வீட்டுக்கு போங்க தேடிட்டு இருப்பாங்கல்ல.”

வீட்டுக்கு வந்தால்..அவனுக்கு ஆரத்தி எடுக்காத குறைதான்.

“இனியாவது புள்ளையை பத்திரமா பாருங்க.கண்டதுக்கும் ஏசி தொலைக்காதீங்க.” மாமனாரின் உபதேசம்.

எனக்கு தாங்க முடியாத கோபம், “மரியாதையா வாய மூடிட்டு இருக்கணும் எல்லாரும்.சத்தம் போட்டீங்க என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது…” கோபமாய் கத்தினேன்.மீறினால் என்ன செய்வதென்று உண்மையிலே எனக்கு தெரியாதுதான்.ஆனால் ஆச்சரியம்.எல்லாரும் கப்சிப். “வீட்டில இருந்துகிட்டு ஆளாளுக்கு அதிகாரம் பண்றீங்க.எனக்கு ஒத்தாசையா ஒரு துரும்பை எடுத்து போட்டீங்களா.வந்திட்டாங்க பெரிசா..”

அப்படியே போய் சாய்வு நாற்காலியில் மல்லாந்து படுத்தேன்.ஆயாசத்தில் கண்கள் மூடின.

திடீரென்று என் பக்கத்தில் யாரோ நிற்பது போல் பிரமை தட்ட..விழித்தேன்.

அருண் நின்றிருந்தான்.

“சாரிப்பா” என்றவன் கடைசியாய் செய்த செயலுக்குதான் நான் இன்னும் திகைத்து போய் கிடக்கிறேன்.

என்னை கட்டிகொண்டு என் கன்னத்தில் அவன் தந்தது ஒரு…ஒரு…முத்தம்.

– ஏப்ரல் 2009

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *