கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2023
பார்வையிட்டோர்: 2,489 
 
 

பகுதி 7 | பகுதி 8

அப்போது டி. வியில் பொதிகையில் தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.. அப்போது ப்ரியா, ”ஏன் பாட்டி, உங்க காலத்துல இது மாதிரி தெருக்கூத்து பார்த்திருக்கேளா?” என்றாள். தைலா பாட்டி, ”அந்தக் காலத்துல நான் இதெல்லாம் நெறைய பாத்திருக்கேன், சில சமயம் விடிகாலை வரை கூட நடக்கும். சினிமாவெல்லாம் அதிகம்  கிடையாது, இந்த மாதிரி பெரிய தியேட்டர்கள் அப்பொழுது இல்லை. டூரிங் டாக்கீஸ்ங்கற கீத்துக் கொட்டாயில் தான் சினிமா காட்டுவா. கீழ மணல் பரப்பியிருப்பான். எல்லாரும் அதுல ஒக்காந்து பாக்கணும். யாருமே செருப்பு போட்டுக்க மாட்டா. அதனால செருப்பு தொலஞ்சிடும்னு பயம் இருக்காது.  16 மிமீ ப்ரொஜெக்டர் வெச்சு ஒவ்வொரு ரீலா காமிப்பான். அடுத்த ரீலுக்கு முன்னாடி முறுக்கு, கடல மிட்டாய் விப்பான். கொறிச்சுண்டு ஜாலியா சினிமா பார்ப்போம். தெருக்கூத்துங்கற பேர்ல நாடகம் போடுவா. ரத்தக் கண்ணீர், ஹரிச்சந்திரன், தாரா சசாங்கம்னு போட்டு விதூஷகன் (கோமாளி) பாடி ஆரம்பிப்பான். ‘பீமன் மரத்தைப் பிடுங்கினானே – டிங்கினானே-டிங்கினானே’ன்னு உ.வே.சாமிநாதய்யர் சொன்ன மாதிரி, ஒரு மொழம் இழுப்பான். படா தமாஷா இருக்கும்.  அந்தக் காலத்து படத்துல நொடிக்கு நொடி பாட்டு இருக்கும். சில சமயம் 38க்கு மேல. எல்லாம் கர்னாடக ஸங்கீத ராகத்துல. நிறய ப்ராஸம் போட்டுப் பாடுவா. அதனால லேட்டா வந்தா கூட கதை மிஸ் ஆகாது.  தியாகராஜ பாகவதர், சின்னப்பா, கிட்டப்பா, சுந்தராம்பான்னு நல்ல நல்ல பாடகாள்ளாம் பாடுவா. அருமையா இருக்கும். பாட்டு, வசனமெல்லாம் நறுக்கு தெரிச்சா மாதிரி இருக்கும்” என்றாள்.

மங்களம் குறுக்கிட்டு, ”நான் கூட சின்ன வயசுல பாத்திருக்கேன். ஒரு கிராமஃபோன் பெட்டியோடு  லௌட்ஸ்பீகர் வெச்சிருக்கும். அது வழியா பாட்டு வரும்.  முன் பக்கத்துல கண்ணாடி இருக்கும். அதுல பாட்டுக்கு தகுந்த திரைப்படக் காட்சி வரும். பயாஸ்கோப்புன்னு பேர். காமிக்கறவன் கைல சலங்கை வெச்சுண்டு டிங் டிங்னு பேக் க்ரௌண்ட் ம்யூசிக்ல கதை சொல்லி ஓட்டுவான். அதுக்கு ஒரு நிமிடத்துக்கு இவ்வளவு காசுன்னு வாங்குவான்,” என்றாள்.  இப்ப  மாதிரி  டி.வி.யோ,  ஃபோன் மாதிரி எந்த பொழுது போக்கும் இல்லாம எப்படி பாட்டி உங்களுக்கு போரடிக்காம இருந்தது”ன்னு ப்ரியா கேட்க, ”எங்களுக்குப் பொழுது போக்க, பல்லாங்குழி, அம்மானை, பரமபதம், சொக்கட்டான்னு நெறைய விளையாட்டுகள் உண்டு, நேரம் போறதே தெரியாது” என்றாள் தைலா.

இரவு படுக்கப் போகு முன் ந்யூஸ் பாத்து விட்டுப் படுப்பது தைலாவின் வழக்கம். ப்ரியா, நிம்மி எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். கொரோனா வாக்ஸின் எல்லோருக்கும் கூடிய சீக்கிரத்தில் கிடைக்கும் என்றும் அதைப் பற்றிய விவாதமும் நடந்து கொண்டிருந்தது. நிம்மி, ”கொள்ளுப் பாட்டி, நீங்க வாக்ஸின் போட்டுப்பேளா? மோசமான விளைவுகள் பின்னாட்களில் வரும்னு பயமுறுத்தறாளே சில பேர்”னு  கேட்க, ”தாராளமா போட்டுப்பேன், எனக்கோ வயசாயிடுத்து, போட்டுக்காம தினம் பயந்துண்டு இருக்கிறத விட போட்டுக்கறது நல்லது. அதுவுமில்லாம புதுசா ஒரு வாக்ஸின் வந்தா அப்படித்தான் புரளியைக் கிளப்புவா. எல்லாரும் போட்டுண்டு ஒண்ணும் ஆகலன்னா வாயை மூடிப்பா. பி.ஸி.ஜி வாக்ஸின் வந்தபோது  அதை குழந்தைகளுக்குப் போடக் கூடாது, போட்டா கண்ணை பாதிக்கும், நரம்பை பாதிக்கும்னு சொன்னா, ஆனா பி.ஸி..ஜி. போட்டுண்டதால தான் இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஜாஸ்தி இல்லன்னு இப்ப சொல்றா” என்றாள்.

அதைக் கேட்ட ப்ரியா, ”ஏன் பாட்டி, உங்க எல்லாருக்குமே வயசாயிடுத்து, வீட்டில ஓடியாட சின்னவா யாரும் இல்ல, நாங்களும் தள்ளி இருக்கோம், ஒரு அவசரத்துக்கு உடனே வர முடியாது, எவ்வளவு நாளைக்கு இப்படி தனியா இருக்க முடியும்?” என்றாள். அதற்கு தைலா, ’நாங்களும் அதை யோசிக்காம இல்லை. என்னோட அண்ணா பொண்ணு, மாப்பிள்ளை ரெண்டு பேருமே டாக்டர். அவா பசங்களும் டாக்டர். அவா நம்மாத்து பக்கத்தில பெரிய வீடு எடுத்திருக்கா, அதை ஹாஸ்பிடலா மாத்தப்போறாளாம். அங்கேயே ஸ்கேன், எக்ஸ் ரே, எல்லா வித டெஸ்ட் செய்யற வசதியும் இருக்காம். வேலைக்கோ, சமையலுக்கோ ஆள் தேவைப்பட்டாலும் அவாளே அர்ரேஞ்ச் பண்ணுவாளாம். இந்தக் காலத்தில தான் ஃபோன், ஈ மெயில், வாட்ஸ் ஆப் வசதி எல்லாம் இருக்கே, அப்புறம் என்ன பயம்?” என்றாள்.

”கொள்ளுப்பாட்டி, நீங்க சொல்லறதெல்லாம் கேட்க ரொம்ப இண்டெரெஸ்டிங்கா இருக்கு, அந்தக் காலத்து தலை முறைலேர்ந்து இந்தக் காலத் தலை முறை வரைக்கும் அழகா சொன்னேள். நீங்க ஒரு கதையா இதை எழுதுங்கோ. பிற்கால சந்ததிக்குத் தெரியட்டும்” என்ற நிம்மியிடம், ”கதை எதுக்குடி? நானே ஒரு நாவல், புஸ்தகத்திலயும் எங்கிட்ட இருக்கற மாதிரி தான் பழங்கதைகள் நெறைய இருக்கும். வாழ்க்கைங்கிற கடல்ல நீஞ்சி கரையோரம் ஓய்வெடுக்கற என்னைப் போல புஸ்தகமும்  ஆன் லைன் வரவாலே இப்போ ஓய்வுல இருக்கு. ஆனால் புஸ்தகம் கூட ஒரு குறிப்பிட்ட காலத்தைப் பத்தித் தான் சொல்லும், அதோட மறு பதிப்பு இருந்தால் தான் அடுத்தடுத்த காலத்தைப் பத்தி தெரிஞ்சுக்கலாம் ஆனால் என்னை மாதிரி லைவ் மனுஷா கிட்ட எல்லாக் காலத் தகவலும் இருக்கு. எவ்வளவு மாற்றங்கள் பாத்துட்டேன்! இன்னும் பழைய காலத்திற்கு அதாவது கற்காலத்துக்கு போனால் மனுஷாள் எப்படி இயற்கையோடு ஒன்றிப் போயிருந்தான்னு தெரிஞ்சுக்கலாம். நாகரிகம் வளர, வளர வாழ்க்கை முறைகளும் மாறிடுத்து. என் 99 வயசுக்கே இவ்வளவு மாற்றம்னா இன்னும் ஒரு 100 வருஷம் கழிச்சு என்னென்ன மாறுதல்கள் வருமோ! ஆனால் ஒண்ணு உலகம் முழுக்க நல்லவா, கெட்டவான்னு ரெண்டே ஜாதி தான் இருக்கப் போறது. மனுஷத் தன்மைங்கிற மதம் தான் ஓங்கி நிற்கப் போறது. இந்தப் பாடத்தைக் கத்துக் குடுக்கத் தான் இயற்கை புதுப்புது வைரஸ்களை அனுப்பறது” என்று முடித்தாள் தைலா பாட்டி. அவ ஆசை நிறைவேறுமா இல்லையா என்று காலம் தான் சொல்லும்!

(முற்றும்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *