முன்விழுந்த ஈர முடியை ஒதுக்கிவிட்டு புருவ மத்தியிலிருந்து ஸ்ரீசூரணத்தை மேலிழுத்தான் ரங்கன். ஆள்காட்டி விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடையே பாலமாக இடுக்கிக்கொண்டிருந்த சதுரக்கண்ணாடியில் தலையை மேலும் கீழும் ஆட்டி சரிபார்த்தான். நெற்றியை சமமாகப் பிரித்திருந்தது. மேல் நெற்றியில் தலை முடி தொடங்குமிடத்தில் மெலிதாக இருந்தது. நான்கைந்து சொட்டு நீரை இடது கையில் விட்டுக்கொண்டு நாமக்குச்சியில் வண்ணத்தை சேகரித்தான்.
மீந்துப் போன நேற்றைய சாதத்தை அவனது அம்மா வழித்துக் குப்பையில் கொட்டிக்கொண்டிருந்தாள். வாய் பாசுரத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. குழாயில் கையலம்பி அடுக்களைத் தரை மூலையில் இருந்த அரிவாள்மணையை நன்றாகத் தட்டி தேங்காயத் துருவல்களைக் கீழிருந்த பேப்பரில் சேகரித்தாள். அடுக்களைக்குள் அவன் வருவதைப் பார்த்து, கை அலம்பிக் கொண்டு, ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த நாட்காட்டிக்கு கீழே இருந்த கோலமாவுப் பெட்டியை எடுத்தாள். சீராக நறுக்கியிருந்த செம்மஞ்சள் வாழைக்காய்கள் வாணலியில் வெந்து நுரைத்துக் கொண்டிருந்தன.
நெத்தியில வழியறது பாரு. நாமக்கட்டிய கெட்டியா கொழச்சிக்கோயேன்.
எனச் சொல்லிவிட்டு பதில் எதிர்பார்க்காமல் அவள் பாசுரத்தைத் தொடர்ந்தாள். சிவப்பேறிய விரலால் வேகவேகமாக நாமக்கட்டியை குழைத்துக்கொண்டான். உருட்டி பிரட்டி ஸ்ரீசூரணக்குச்சியில் சேகரித்து அழுத்தமாகக் கோடு போட்டு மீண்டும் கண்ணாடியில் சரிபார்த்துக்கொண்டான். ரங்கன் குழாயில் கையலம்பப் போகும்போதுஅவனது நெற்றியைத் தீர்க்கமாகப் பார்த்தாள். அவள் நெற்றியிலிருந்த நாமம் சுருங்கி விரிந்தது.
திருமண் இட்டுக்காம உட்கார்ந்துராதே. லட்சுமிய தனியா விட்ட பாவம் வேற நமக்கு வேண்டாம்.
மென்மையானக் குரலில் அழுத்தமாக சொல்லிவிட்டு, அடுக்களைக்கு வெளியே சென்று சாப்பாட்டு மேஜை பக்கத்தில் வெள்ளியில் இழைக்கப்பட்ட அலங்கார மனையைக் கிழக்கு பார்த்துத் தரையில் வைத்தாள். வெள்ளி தாம்பாளத்தட்டு, தர்ப்பைக் கட்டு, வெண்கலக் குமிழில் எள், ஈயக் கிண்ணத்தில் ஜலம் எனப் பஞ்சப் பாத்திரங்கள் மனையின் முன் வைக்கப்பட்டிருந்தன.
ஸ்ரீசூரணப் பெட்டியை மூடப் போனவன்,அம்மா சொன்னதைக் கேட்டதும், சதுரக்கண்ணாடியைப் பட்டென அடுக்களை மேடை மீது வைத்தான். திருமண் கட்டியை கையிலெடுத்துக் கொண்டு மேடை முடியும் சுவருக்குப் பெட்டியை வேகமாகத் தள்ளி விட்டான். சிவப்பேறிய கையை குழாயில் அலம்பியபின் திருமண் கட்டியை சுருசுருவென வேகமாகக் குழைத்துக்கொண்டான். அவன் முன் படத்திலிருக்கும் பார்த்தசாரதி நெற்றியில் இருப்பது போன்ற பளீர் வெள்ளையில்லை, கொஞ்சம் சிகப்பு கூடிய வெள்ளை. வேகவேகமாக புருவ மத்தியிலிருந்து ரெண்டு இழு மேல் நோக்கி இழுத்தான். ஸ்ரீசூரணத்தின் சமதூரத்தில் கச்சிதமான V வடிவில் அமைந்துவிட்டது.
ஸ்ரீசூரணப்பெட்டியின் மேல் கண்ணாடியை கவிழ்த்து மூடி ராமானுஜர் படத்துக்குக் கீழே வைத்தான். திரும்புவதற்குள் ரங்கனுக்கு அருகில் அவள் வந்தாள். ஸ்ரீசூரணப்பெட்டியைத் தொட்டுக்கொண்டிருந்த மஞ்சள் நிறச் சாலிக்கிராமக் குமிழியை நகர்த்தி வைத்தாள். வாய் நிறுத்தாமல் பிரபந்தத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தது.
விருட்டென அடுக்களையிலிருந்து வெளியேறி பஞ்ச பாத்திரங்கள் முன்னால் உட்கார்ந்துகொண்டான். புஸ் புஸ்சென அவனது மார்பு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. ஆசமனம் செய்து பவித்ரத்தை மோதிர விரலுக்குள் நுழைத்தான். கையில் கிடைத்த தர்ப்பைக் குச்சிகளை அள்ளி எடுத்தபின், எண்ணிப்பார்த்து ஒன்றை வைத்துவிட்டு மூன்று குச்சிகளை பவித்ரத்தோடு இடுக்கிக்கொண்டு அமாவாசை தர்ப்பண மந்திரங்களை வேகமாகச் சொல்லத் தொடங்கினான்
அஸ்மத் குருப்யோ நம:
பழக்கப்பட்ட ஆகம அசைவுகளை கைகள் இயந்திரமாகச் செய்தாலும், அவனது பார்வை அம்மாவைத் தொடர்ந்துக் கொண்டிருந்தது. ஒன்பது கெஜத்தில் இன்னும் உயரமாகத் தெரிந்தாள். சமையலறையின் எல்லாப் பகுதியிலிருந்தும் சரசரக்கும் புடவை, விட்டு விட்டு விசிலடிக்கும் குக்கர் சத்தம், முணுமுணுக்கும் ஸ்லோகம் என சகலமும் கலவையாக அவன் காதில் விழுந்தன. வேகும் வாழைக்காய் கறிமுது வாசனை மூக்கைத் துளைத்தது.
பிரபந்தத்திலிருந்து ராமானுஜ நூற்றந்தாதிக்குத் தாவி இருந்தாள். பிரபந்தப் பாராயணம் செய்யும் வழக்கம் சுயமாச்சார்யர்களான அவளது அப்பா தாத்தாவிடமிருந்து வந்தது. அதுவும் அவள் ராக பாவத்தோடு உருகிப் பாடும்போது அவளது அப்பாவின் கண்கள் ஈரமாகிவிடும். ரங்கனின் அப்பாவும் அடிக்கடி அவளைப் பாட சொல்லிக் கேட்பார். அரையர்கள் போல அவள் பாடி அபிநயிக்கும்போது புடவைத் தலைப்பைப் பிடித்து ரங்கனும் கொணஷ்டை செய்வான். பாட்டு முடிந்ததும் அவனை அள்ளி அணைத்துக்கொள்வாள்.
அவாள்லாம் ராமானுஜ சம்பந்தம் பெறறவாடா. குரு பரம்பரையில் ஆழ்வார்கள், ஆச்சார்யர்களின் சம்பந்தம் பெற்றவா பெருமாளை விட ஒசத்தி தெரிஞ்சுக்கோ. ஆச்சார்ய சம்பந்தம் இருந்தா தான் சரணாகதிக்கே அருகதை உண்டு. நமக்கு வேற கதியில்லை..
கண் மூடி கை கூப்பி அவள் சொல்லும்போதெல்லாம் சிறுவனான அவனுக்குப் புரிந்ததில்லை. புரியாததால் பல கேள்விகள் எழவில்லை.
அவன் காலேஜ் சேருவதற்கு முன்னரே அப்பா இறந்து விட்டதால் குடும்பத்தைப் பல சிரமங்களுக்கு நடுவே நிலைப்படுத்தும் பொறுப்பு அவள் தலையில். வசதிக்குக் குறைவில்லை என்றாலும், ஊரில் ரேழி தாண்டாமல் இருந்தவள், வங்கிக்கு செல்வது கடையில் பேரம் பேசி சாமான் வாங்குவது எனப் பொறுப்பான வேலைகளை ஓரளவு பழக்கப்படுத்திக் கொண்டாள்.
எள் ஒட்டியிருந்த கையை உதறிக்கொண்டு, பூணுலை தோள் மாற்றிப் போடும்போது அம்மா நினைப்பு நிழலாடியது. இயந்திரம் போல அடுக்களைக்குள் திரியும் அம்மா அல்ல. அவனது சிறு வயதில் ரத்தமும் சதையுமாகக் கம்பீரமாகக் கருணை காட்டிய அம்மா. சின்ன வயசில் பார்த்ததிலிருந்தே அதிர்ந்து பேசாத சுபாவம் தான் என்றாலும் வைராக்கியம் அதிகமுள்ள திட மனதுக்காரி.
முதல் முறை பிராணாயாமம் பண்றது என ரகஸ்ய மந்திரத்தை காதில் சொல்லிமுடித்து வாத்தியாரும் அப்பாவும் அவன் மேல் மூடியிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை எடுத்தனர். நெடு நேரம் குத்துக்காலிட்டு உட்கார்ந்ததால் வலித்த கால்களை எழுந்து நின்று உதறிக்கொண்டான்.
ஒக்காருடா. இனிமே டிராயர் போடாம வெளிய ஓடக்கூடாது தெரியுமோல்லியோ? நோக்கு மொத கல்யாணம் முடிஞ்சுடுத்தே.
கல்யாணம் எனக் கேட்டதும் அவனுக்கு ரொம்ப வெட்கம் வந்தது. பக்கத்து ஆத்து வத்சன் பய இதக் கேட்டா ரொம்ப கேலி பண்ணுவானே.
அடுத்த கல்யாணம் எப்பன்னு அப்பாவ கேளு என்ன? இனி நீ ஆசார அனுஷ்டானங்களை அனுசரிக்கும் பிரம்மச்சாரி தெரியறதா? கையிலிருந்த பவித்ரத்தைப் பிரித்தபடி அப்பாவைப் பார்த்துச் சொன்னார்.
இதைக் கேட்டதும் அம்மாவைத் தேடினான். புகை மூட்டத்துக்கு நடுவே அம்மா சித்திரமாகத் தெரிந்தாள். அவனையே உற்றுப் பார்த்தபடி அறை ஓரத்தில் கதவருகே நின்றிருந்தாள். அம்மா எவ்வளவு உயரம். என்னிக்குமில்லாமல் புடவையை கணுக்கால் தெரிய கட்டிண்டா இன்னும் ரொம்ப உயரமா தெரியறா என நினைத்துக்கொண்டிருக்கும்போது,
இனி டெய்லி சந்தி பண்ணனும், தெரியறதா? அப்புறம் என்ன, மேத்ஸுல நூத்துக்கு நுறு தான். அப்பா கூடவே உக்கார்ந்துண்டு பண்ணிடு.
ஒரு கணம் அப்பாவின் கண்கள் அம்மாவுடையதைச் சந்தித்து வாத்தியாரிடம் திரும்பின.
ஏழு வயசிலேயே பண்ணனும்னு நீயும் நாலு வருஷமா தொணதொணத்திண்டே இருந்தியே. அந்தண்ட இந்தண்ட அலைபாயாம சீமந்த புத்திரனின் உபனயனத்தை பெரும கொள்ளாம பாத்தியோன்னோ? சாப்பாடு முடிந்து கூடம் காலியான பின் அப்பா கேட்டார்.
பார்க்காமையா? திருமண் எல்லாம் இட்டுண்டு எவ்வளோ லட்சணமா இருந்தான். ரொம்ப களையா இருக்கேடா. தெனமும் ஸ்கூலுக்கு போம்போது இட்டுண்டு போயேன்?
போம்மா..ஏற்கனவே வத்சன் ஐயரு தயிருன்னு கிண்டல் பண்றான்..ஐயங்காருடான்னு சொன்னா அவன் மோட்டார்காருன்னு எல்லார்கிட்டயும் கிண்டல் பண்ணறான்.
என்ன அநியாயமா இருக்கு? நம்மளவா பசங்களே இப்படி பேசினா அடுத்தவா ஏன் இன்னும் அதிகமா பண்ண மாட்டா? அவனம்மா கிட்ட சொல்லறேன்..
சும்மா இருடி. அவங்கப்பா ஒரு கம்யூனிஷ்டுன்னா. நானே அழிச்சுட்டுதானே ஆபிசுக்கு போறேன். எல்லாம் மனசில இருந்தா போதும்.
அவளது முகம் சட்டென வாடியது. எதையோ மறந்து வைத்துவிட்டவள் போல அடுக்களைக்குப் போய் திரும்ப வந்தாள். நடுக்கூடத்து வெயில் தரையில் அப்பாவின் பழைய வேஷ்டி மேல் உலர்த்தியிருந்த ஜவ்வரிசி வடாம் அருகே உட்கார்ந்தாள். கைகள் வடாமை பிரட்டிக் கொண்டிருந்தாலும் பார்வை புழக்கடை வாசலில் இருந்தது. ரங்கன் ஒரு மூலையில் காயாத வடாம் மாவை உருட்டி திரிதிரியாக்கி வாயில் போட்டுகொண்டிருந்தான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. சிறிது நேரத்தில் முன் போல சிரித்தபடி காலையில் ஹோமத்துக்கு முன் உட்கார்ந்திருந்த போது அவன் எவ்வளவு களையாக அழகாக இருந்தான் என சொல்லத் தொடங்கினாள். தினம் ஸ்லோகம் சொன்னால் புத்தி கூர்மையாகும், கணக்கு வாத்தியாரிடம் அடி வாங்கத் தேவையிருக்காது. மாவை அள்ளிய அவன் கையை மென்மையாகத் தட்டி உதறிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.
அப்போதிலிருந்தே தினப்படி சந்தி, பிரபந்தம் சொல்வது, வாரம் தவறாம பெருமாளுக்கு ஆராதனை செய்வது எனக் கூடப் பிறந்த தங்கை போல அவனுக்கு அனுஷ்டானப் பழக்கங்கள் உருவாகிவிட்டன. நேரடியாக கோபித்துக் கொண்டதில்லை என்றாலும் சண்டை, விலக்கம், உடனடி உருகல் என தங்கைக்குரிய அனுஷ்டானங்கள் பெருமாளிடத்திலும் உண்டு.
நான்கு வருட காலேஜ் ஹாஸ்டல் வாழ்வை முடித்து வேலைக்காக பெங்களூர் வந்த கடந்த இரண்டு மாதங்களாக மீண்டும் அவளுடைய சமையல். ஊரை விட்டு வர மிகவும் யோசித்தவளை வயது, அவனது முதல் வேலை எனக் காரணம் காட்டி வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருந்தான்.
அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் விண்ணவர்கோன் .
பிரபந்தத்துக்கு மாறியிருந்தாள். அவனது அப்பா போனபின் செல்லப்பெருமாள் அவளது மடியில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார். அவரை ரங்கன் மேல் ஏற்றிப்பார்க்கும் ஆசையும் அவளுக்கு அதிகரித்திருந்தது.
ஸ்ரீசூரணத்தைப் போட்டுண்டு என்னால ஆபிஸ்ல எல்லார்கிட்டயும் சகஜமா பேச முடியலை. அவாளுக்கும் சில விஷயங்களைப் பத்தி பேசறதில சங்கோஜமா இருக்கு. பெருமாள்னா ரொம்ப பெர்சனலான விஷயம்மா. உடம்புல பன்னெண்டு திருநாமம் போட்டுண்டு இந்த காலத்துல தெருவில இறங்கி நடக்கமுடியுமா? அப்பா கூட அப்படிப் போகலியே?
தனிப்பட்ட விஷயந்தான். பொதுவில யாரையும் மாறச் சொல்லலியே. உனக்குன்னு பரம்பரையா வந்ததை மாத்தாதேன்னு தான சொல்றேன். ஸ்லோகம் சொல்ற நேரத்தில உபயோகமா ஏதாவது செய்யலாம்னு உங்க அப்பா சொல்லும்போதேல்லாமும் இததாண்டா சொல்லுவேன். ஆசார்யாளை விரோதிக்கக்கூடாதுடா. அவாளுக்கு இருந்த காருண்யம் கொஞ்சம் நமக்கு இருந்தாப் போதும். இப்ப வர்ற சண்டையெல்லாம் வரவே வராது. அவாவா பெருமாளை அவாவா சேவிச்சுண்டுப் போறா..விழுந்து சேவிக்க வேணாம், கொறஞ்சபட்சம் எதிர்த்துப் பேசாமையாவது இரேன்?
அவாவா நம்பிக்கைன்னாவது விடலாமோல்லியோ?
கடந்த இரண்டு மாதங்களாய் அவனது பல கேள்விகள் மெளனத்தில் முடிந்திருக்கின்றன.
அவனாக இதுவரை ஸ்ரீசூரணத்தை அழித்தது கிடையாது. முகம் அலம்பும் போது அழிந்தால் உண்டு. நாம் என்ன செய்தாலும் பிரேமையுடன் நம்மை நோக்கி கை நீட்டும் பெருமாள் என அவள் சொல்லிக் கொடுத்திருந்ததால், பாவ புண்ணியம் பற்றிய பயமில்லை. ஆனாலும் ஆச்சார்ய பந்தம் என வரும்போது அப்பா, தாத்தா என மூதாதையர்கள் நிழலாடும்.
தர்ப்பணம் முடித்தபின் பவித்ரத்தை திருகி பிரிக்க முயன்றான். பவித்ரம் விரலில் இறுக்கமாக இருந்தது. அவசரமாகப் பிய்த்து உருவியத்தில் விரலில் மோதிரம் போல உண்டான சிராய்ப்பு எரிந்தது.
தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு எழுந்த போது எள், தர்ப்பை எல்லாம் நீரில் கலந்து சுழன்றன. காலில் இடறிய மனையை சாப்பாட்டு மேசைக்குக் கீழே காலால் தள்ளிவிட்டான். வேகமாக நகர்ந்ததில் தாம்பாளத்தைப் பிடித்திருந்த விரல்களில் ஒட்டிய எள்ளை உதறி, தர்ப்பையை சக்கையாகப் பிழிந்து குப்பையில் எறிந்தான். பின்கட்டு அம்மிக்கு அருகே ஓடிய சாக்கடையில் தாம்பாளத்தை கவிழ்த்தான். தர்ப்பை குச்சிகள், எள் சாக்கடை மேல் மிதந்தன.
அப்பா படத்தை சேவிச்சுடு. மறந்துடாதே.
குழாயைத் திறந்து இரு கைகளையும் சேர்த்து பரபரவெனத் தேய்த்தான். எவ்வளவு முறைத் தேய்த்தும் கையில் இருந்த சிகப்பு தீற்றல் போகவில்லை. தர்ப்பை போல வேண்டிய நேரத்தில் எடுத்து மாட்டி வேண்டாதபோது தூக்கி எறியும்படி எல்லாமே இருந்தால் எவ்வளவு நன்னா இருக்கும் என நினைத்துக்கொண்டான்.
பார்த்தசாரதி படத்தின் கீழே சின்னக் கிண்ணத்தில் சாதம்வைக்கப்பட்டிருந்தது. அவள் சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்துக்கொண்டிருந்தாள். ஒல்லியான அவளது இடது கை சட்டைக்குக் கீழே பரண்யாசம் செய்த சங்கு சக்கரத் தழும்பைப் பார்த்தபடி அவனது முறைக்காகக் காத்திருந்தான். பிராஞ்சு மேனேஜர் தேசிகாச்சாரி ஒரு முறை கேட்ட போது ரொம்ப பொசுங்கிச் சுடுமே சார், பண்ணிப்பேன்னு தோணலை என ரங்கன் விலக்கமாகக் கூறியிருந்தான்.
சாதத்தை ஆராதானப் பண்ணிடு. சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து.
விரலில் ஒட்டியிருந்த சாதப்பருக்கைகளை வேஷ்டியில் துடைத்தபடி வேகவேகமாகப் படுக்கை அறைக்குள் நுழைந்தான். வானம் கறுத்துக்கொண்டு வந்தது. விளக்கைப் போட்டு வேஷ்டியை அவிழ்த்து கட்டில் மேல் வீசிவிட்டு பேண்ட் சட்டை அணிந்து கொண்டிருந்தபோது ‘தளிகை ஆயிடுத்து சாப்ட்டுப் போ’ என அடுக்களையிலிருந்து சன்னமாகக் கேட்டது.
படுக்கையறை அலமாரிக் கண்ணாடியைப் பார்த்து தலை வாரியபோது நெற்றியில் இருந்த ஸ்ரீசூரணம் வெளிச்சத்தில் பளீரெனத் தெரிந்தது. நெற்றியையும் சேர்த்துத் தேய்த்தபடி சீப்பால் தலைமுடியைப் படிய வாரினான். கொஞ்சம்போல் முடியில் ஒட்டியிருந்த காய்ந்த ஸ்ரீசூரணம் சிகப்பு வெள்ளைத் துகள்களாக உதிர்ந்தன. கழற்றிப் போட்ட வேஷ்டியில் மிச்சத்தை துடைக்கலாம் என ஒரு கணம் நினைத்து கட்டிலுக்குப் போக எத்தனித்து கை அலம்பும்போது துடைத்துக்கொள்ளலாம் எனத் தீர்மானத்தை ஒத்திப்போட்டான். உடுத்தும் பிரயத்தனத்தில் பூணூல் வெளியே வந்து கழுத்தருகே தொங்கியது. மஞ்சள் தடவிய பிரம்ம முடிச்சை கவனமாக முன்னுக்கு இழுத்து சட்டைக்குள் தள்ளி தோள்பட்டைக்கருகே பத்திரப்படுத்திக்கொண்டான்.
மெதுவா சாப்பிடுடா. ருசி தெரியாம அடைச்சிக்காதே.
நிதானமாகச் சாப்பிடத் தொடங்கினான்.
வர்ற சனிக்கிழமை ஆண்டவர் சுவாமிகள் கோயிலுக்கு வர்றாராம். அவரை சேவிச்சுட்டு அப்படியே உனக்கு சமாஸ்ரயணம் பண்ணிண்டு வந்துடலாம். அஞ்சு நிமிஷம்தான் கொஞ்சம் எரிச்சல் இருக்கும். ஆனா மொதப் படி இல்லையா?
கறமுது நன்னாயிருக்கா? இன்னுங்கொஞ்சம் சாய்க்கட்டுமா?
சமாஸ்ரயணம் பற்றி சொல்லிக்கொண்டே அவள் அடுக்களைக்குள் போனாள். முடிவுக்கு வந்தவனாய், சட்டென மேஜை மேல் இருந்த தட்டைத் தள்ளிவிட்டு கை உதறி படுக்கை அறைக்குள் நுழைந்து கதவை அடித்துச் சாத்திக்கொண்டான்.
சிறிது நேரத்தில் வேகமாக வீட்டிலிருந்து வெளியேறி பைக்கில் உட்கார்ந்து இரண்டு முறை உதைத்து கிளம்ப ஆயத்தமானான். மெலிதாகத் தூறத் தொடங்கியது. கையில் ஜெர்கினோடு அவள் வேகமாக வெளியே வந்ததைப் பார்த்தும் பார்க்காதது போல வண்டியைக் கிளப்பினான்.
தெரு முனைக்குப் போவதற்குள் சடசடவென மழை பிடித்துக் கொண்டது. அவனது மூக்கு நுனியில் கரைந்து கீழே வழியத் தொடங்கியது ஸ்ரீசூரணம்.