கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 27, 2019
பார்வையிட்டோர்: 30,176 
 
 

சிவராமன் நியூ ஜெர்ஸிக்குப் போய் கிட்டத்தட்ட முப்பது வருஷங்களாகி விட்டன. இன்று சிவராமனும் அவர் மகன் ஶ்ரீதரும் அமெரிக்காவில் புகழ் பெற்ற டாக்டர்கள்.

சிவராமனின் மகன் ஶ்ரீதர் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் அமெரிக்காவில் தான்!

சிவராமனுக்கு தன் மருமகள் தமிழ்நாட்டுப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஆசை! கோவையிலிருக்கும் தந்தை விசுவநாதனுக்கு விபரமாக எழுதி, மகனை ஒரு மாத விடுப்பில் கோவைக்கு அனுப்பி வைத்தார்.

விசுவநாதன் தன் மனைவி சாந்தியுடன் நியூஜெர்ஸிக்குப் போய் மாதக் கணக்கில் தங்குவது உண்டு!

விசுவநாதன்- சாந்திக்கு பெண் குழந்தை இல்லை என்ற குறை மருமகள் கல்பனா வந்தவுடன் போய் விட்டது..

அமெரிக்கா போய் விட்டால் கல்பனா அவர்களிடம் “அப்பா!…அம்மா!…” என்று உயிராக இருப்பாள். அவர்களை ஒரு வேலை செய்ய விட மாட்டாள்.

அவர்கள் இந்தியாவுக்கு புறப்படும் பொழுதெல்லாம் விமான நிலையத்தில் கண்ணீர் மல்க கல்பனா விடை கொடுப்பாள். அப்படி பட்ட மருமகள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

விசுவநாதன் சாந்திக்கு மகன் மருமகளைப் பிரிந்து, இந்தியா வருவதற்கே மனசு வராது. ஆனால் நிர்பந்தம் அவர்களை தமிழ் நாட்டுக்கு இழுத்து வந்து விடும்.

விசுவநாதனுக்கு கோவையில் ஐநூறு பேர் வேலை செய்யும் ஒரு நூற்பு ஆலை இருக்கிறது. அதன் மேற்பார்வை எல்லாம் இன்னும் விசுவநாதன் கைகளில் தான்! வேறு வழியில்லாமல் தான் அவர்கள் இந்தியா திரும்புவார்கள்!

சிவராமனுக்கு பெண் பார்க்கத் தொடங்கிய பொழுது, கல்லூரி நண்பர் கந்தசாமி தன் பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாக ஒரு முறை சொன்னது நினைவுக்கு வந்தது!

கந்தசாமிக்கு கோபிக்குப் பக்கத்தில் பூங்குளம் கிராமத்தில் நிறைய நஞ்சை, புஞ்சை நிலங்கள் உண்டு. கந்தசாமி நல்ல மனிதர். தூரத்து உறவும் கூட. போய் பார்த்தால் என்ன என்று விசுவநாதனுக்குத் தோன்றியது.

மறுநாள் கந்தசாமி வெளியே எங்கும் கிளம்புவதற்கு முன்பு பார்க்க வேண்டும் என்று நினைத்த விசுவநாதன், அதிகாலையில் மகனோடு காரில் பூங்குளம் புறப்பட்டார்.

காலை ஆறு மணிக்குள் பூங்குளம் கிராமம் கந்தசாமி வீட்டிற்குப் போய் விட்டார்கள்.

வீட்டு வாசல் முன்புறம் ஒரு பெரிய கலர் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் ஒரு இளம் பெண். லட்சுமிகரமான தோற்றம். காலையில் குளித்து முடித்த கையோடு நெற்றி நிறைய குங்குமப் பொட்டு வைத்திருத்தாள். அடர்ந்த ஈரக் கூந்தலை அள்ளி முடித்து ஒரு துணியால் சுற்றியிருந்தாள்.

“ மாமா! நீங்க யாரை பார்க்க வேண்டும்?..” என்ற கணீர் குரலில் அந்தப் பெண் இவர்களைப் பார்த்துக் கேட்டாள்.

“ இது கந்தசாமி வீடு தானே?…”

“ எங்கப்பா தான் கந்தசாமி… அவரையா பார்க்க வந்திருக்கிறீங்க.. உள்ளே வந்து உட்காருங்க… நான் அப்பாவை வரச் சொல்கிறேன்… அவர் மாடியில் இருப்பார்…” என்று சிரித்த முகத்துடன் சொன்னாள் அந்த இளம் பெண்.

விசுவநாதனும், சிவராமனும் ஹாலில் இருந்த சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.

ஒரு தட்டில் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து வைத்து விட்டு, “அப்பா!..அப்பா!”

என்று கூப்பிட்டுக் கொண்டு அந்தப் பெண் மாடி ஏறிப் போகும் அழகையே இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் கந்தசாமியும், அவர் மனைவியும் “வாங்க!… வாங்க!..” என்று சிரித்துக் கொண்டே மாடியிலிருந்து இறங்கி வந்தார்கள். கூடவே அந்த இளம் பெண்ணும் வந்தாள்.

“என்ன விசு!… ஒரு பேச்சுக் கூட சொல்லாமல் திடீரென்று…” என்றார் கந்தசாமி.

“அது என்னவோ நேற்று திடீரென்று உன்னைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது..தள்ளிப் போட்டால் வேறு ஏதாவது வேலை வந்து விடும்! அதனால் தான் உடனே புறப்பட்டு வந்தேன்!.. என்றார் விசுவநாதன்.

கந்தசாமி அருகில் வந்து விசுவநாதனை தழுவிக் கொண்டு, “இவள் தான் என் மனைவி பூங்கோதை… அவள் தான் என் ஒரே பெண் கல்பனா..” என்று நண்பருக்கு அறிமுகப் படுத்தி வைத்தார்.

“நீ என்னம்மா படிக்கிறே?…” என்று கல்பனாவைப் பார்த்து சகஜமாகக் கேட்டார் விசுவநாதன்.

“ எம். ஏ. முடிச்சிட்டு அம்மா அப்பாவுக்கு உதவியா இருக்கிறேன்!”

“படிச்ச பொண்ணு நீ… உனக்கு கிராமத்தில் எப்படியம்மா உனக்குப் பொழுது போகிறது?..”

“ காலையில் வசதியில்லாத சில குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருவேன். மாலையில் கிராமத்தில் ஒரு நற்பணி மன்றம் வைத்து கிராம பெண்களுக்கு கல்வியில் அவசியத்தை சொல்லிக் கொடுப்பேன். எனக்கு நேரம் போவதே தெரியாது!…”

சிறிது நேரத்தில் எல்லோரும் சகஜ நிலைக்கு வந்து பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். விசுவநாதன் கடைசியாக தாங்கள் வந்த விஷயத்தைச் சொன்னார்.

“எங்களுக்கு உங்க பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு! …நீங்கள் விருப்ப பட்டால் அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம்!” என்றார்.

அது வரை சகஜமாக பேசிக் கொண்டிருந்த கல்பனா, வெட்கத்தோடு உள்ளே எழுந்து போய் விட்டாள்.

பகல் உணவுக்குப் பின் எல்லாம் பேசி முடித்து விட்டார்கள். மாலை எல்லோரும் வாசல் வரை வந்து சிவராமனை வழி அனுப்பி வைத்தார்கள்!

கடந்த அரை நூற்றாண்டுக்குள் தமிழ் நாட்டுப் பெண்களிடம் தான் எத்தனை மாறுதல்கள்! குங்குமப் பொட்டு வைத்து, கூந்தல் பின்னி தலைக்குப் பூ வைப்பதைக் கூட இன்றைய படித்த பெண்கள் விரும்புவதில்லை!

மாற்றங்கள் விசுவநாதனுக்குப் புரியாமல் இல்லை! மகன் ஆசைக்காக பேரன் ஶ்ரீதரை பல ஊர்களில் இருக்கும் நெருங்கிய உறவினர் வீட்டிற்கெல்லாம் அழைத்துப் போய், இரண்டொரு நாள் தங்கி, அப்படியே பல பெண்களையும் பார்த்து விட்டு வந்தார்.

ஶ்ரீதர் எதையும் உன்னிப்பாகப் பார்க்கும் பழக்கம் உடையவன். அவன் பார்த்த வரை பள்ளி, கல்லூரி மாணவிகள் எல்லாம் எந்த நேரமும் செல்போன்களை கைகளில் வைத்துக் கொண்டு, பேஸ் புக்கில் வரும் பதிவுகளுக்கு லைக் போடுவதும், வாட்ஸ்அப் வீடியோக்களைப் பார்ப்பதிலுமே கவனமாக இருப்பதை கவனித்திருக்கிறான்.

இரவில் கூட கல்லூரி மாணவிகள் இணைய தளங்களில் வரும் வேண்டாத விஷயங்களைப் பார்த்து விட்டு, நள்ளிரவுக்குப் பிறகு தூங்கப் போவதும், காலையில் நேரம் கழித்து எழுந்தவுடன், செல்போனை எடுத்து ஏதாவது லைக்ஸ் வந்ததா என்று பார்ப்பதையும், அவர்களை பெற்ற தாய்மார்கள் எல்லோருமே டி.வி.யில் இரவு பத்துமணி வரை ஆர்வமாக எல்லாத் தமிழ் சீரியல்களையும் பார்த்துக் கொண்டிருப்பதையும் கவனித்திருக்கிறான்.

பெண்கள் எல்லாம் விழுந்து விழுந்து பார்ப்பதற்கு அந்த தமிழ் சீரியல்களில் என்ன இருக்கிறது என்று ஶ்ரீதரும் ஒரு வாரம் விடாமல் அந்த சீரியல்களைப் பார்த்தான்.

தமிழ் சீரியலில் வரும் எல்லாப் பெண்களுமே பயங்கர ‘வில்லி’களாக இருக்கிறாங்க…. ஒரு குடும்பத்தை எப்படி கெடுப்பது…யாரை எப்படி…எந்த எந்த வழிகளில்…பழி வாங்கலாம்….. புருஷனை கைக்குள் போட்டுக் கொண்டு அவன் தம்பி தங்கைகளை எப்படி வீட்டை விட்டு விரட்டுவது, வயசான பெரியவங்களை எப்படி முதியோர் இல்லங்களுக்கு கொண்டுப் போய் தள்ளுவது என்று புதிய புதிய யோசனைகளை பாடம் போல் நடத்தறாங்க…எல்லாக் குடும்பப் பெண்களும் அதைத்தான் விரும்பி பார்க்கிறாங்க..ஏற்கனவே அவர்கள் பெற்ற பெண்கள் செல்போன் போதையில் மிதக்கிறாங்க…..இந்த லட்சணத்தில் இந்த டி.வி சீரியல்களில் பாடம் படிக்கும் இந்த அம்மாக்களின் குழந்தை வளர்ப்பு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே ஶ்ரீதருக்கு பயமாக இருந்தது!

ஶ்ரீதர் மெதுவாக தன் கருத்தை தாத்தாவிடம் சொன்னான்.

“தாத்தா! .. அப்பா ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருந்த தமிழ் நாடு அப்படியே இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்…தமிழ் பெண்கள் எல்லோருமே அம்மா மாதிரி இருப்பாங்கனு நினைச்சிட்டு என்னை இங்கு அனுப்பி வச்சிட்டாரு….இங்கு வந்து பார்த்தா நம்ம தமிழ் பண்பாடு என்ற கப்பலே இந்த நவீன அறிவியல் சாதனங்களால் கொஞ்சம் கொஞ்சமா தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கு…. இந்த ஐம்பது வருடங்களில் தமிழ் நாடே தலைகீழா மாறிப்போச்சு…… இங்கிருந்து ஒரு பெண்ணை நான் கல்யாணம் செய்து……. அமெரிக்காவுக்குக் கூட்டிக் கொண்டு போனா…அவ என்னை அம்மா அப்பாவிடமிருந்து கூட பிரித்து விடலாம்…….இதையெல்லாம் அப்பாவிடம் எடுத்துச் சொல்லி, கல்யாண விஷயத்தில் என்னை வற்புறுத்த வேண்டாம் என்று நீங்க தான் சொல்ல வேண்டும்!….” என்று தீர்மானமாகச் சொல்லும் பேரனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விசுவநாதன் விழித்தார்.

– 25-9-2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *