கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2023
பார்வையிட்டோர்: 3,366 
 
 

நான்கு மணிக்கே விழிப்புத் தட்டியது. தூரத்தில் அடிக்கிற உறுமிச் சத்தம் காதில் கேட்டது. எந்தத் திசையிலிருந்து சத்தம் வருகிறது என்பதைக் கணிக்க முடியவில்லை. நேற்றிரவு எட்டு மணிக்கெல்லாம் உறங்கச் சென்றுவிட்டதால் ஊரின் அப்போதைய சேதி எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மனைவி ஊர்க்கதை சொல்ல வந்தபோதுகூட காலையில் பேசிக் கொள்ளலாம் என்று அதட்டிவிட்டுப் படுத்துவிட்டேன். தெருவில் இறங்கி நடந்தபோது மேளமும், உறுமியும் கூடுதல் சத்தத்தோடு காதில் விழத் தொடங்கியது. அந்தச் சீரான தாளகதியைக் கவனிக்கும்போது அநேகமாக அது நான் போக வேண்டிய வடக்குத் தெருவாகத்தான் என்று நினைத்தேன். வடக்குத் தெருவினைக் கடந்துதான் எங்கள் வயலுக்குச் செல்ல வேண்டும். நேற்று வாங்கி வந்த கலப்பு உரத்தினை அடிக்க வேண்டும். கலப்புர அடிக்கும்போது வயலில் கூடுதலாகத் தண்ணீர் இருக்கக் கூடாது என்பதால் ஒரு எட்டு வயலைப் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் நடக்கத் தொடங்கினேன். அதிகாலை நேரத்தில் கைகளை வீசி நடப்பது உற்சாகமாகவும் இருந்தது.  

சின்னப்பா வரும்வரை காத்திருக்க முடியாது. அவன் வருவதுக்குள் மணி ஏழாகிவிடும். அதன் பிறகு தண்ணீரை வடிகட்ட இரண்டு மணிநேரம் பிடிக்கும். அதனால் அவன் வருவதற்கு முன்பாக மடையை மாற்றி விட்டால் போதுமான நீரை வெளியேற்றி விடலாம் என்ற எண்ணத்தில்தான் வயலுக்குப் புறப்பட்டேன்.  

வடக்குத் தெருவினை நெருங்கும்போது தெருவினை அடைத்துக்கொண்டு ஒரு சிறிய கூட்டம் நின்று கொண்டிருந்தது. இன்னும் சற்று நெருங்கிப்போய் விசாரிக்கும்போதுதான் தமயந்தி இறந்துவிட்டதாக தகவல் தெரிந்தது.  

தமயந்தி ஒரு வகையில் எனக்கும் உறவுகார பெண்தான் ஆரம்ப பள்ளிகூடத்தில் ஐந்தாவது மட்டுமே படித்துவிட்டு வீட்டோடு இருதுவிட்டாள். நான் கல்லுரிஎல்லாம் படித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றிகொண்டிருத காலத்தில் எதாவது ஒரு சந்தர்பத்தில் தமயந்தியை சந்திப்பதுஉண்டு. என்னிடம் பேசக்கூடிய அந்த நேரங்களில் அவள் முகமெல்லாம் சிவந்துவிடுவாள் ரொம்ப வெகுளியனவள் யாரிடமும் கோவப்பட்டு பேசமாட்டாள் விவசாயம் மட்டும்தான் தமயந்தியின் குடும்பத்திற்கு வருமானம் வேலைகிடைத்தவுடன் தமயந்தியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எனக்கும் உள்ளுர ஆசை இருந்தது அரசாங்க வேலை கிடைக்காத விரக்தியில் ஒரு கட்டத்தில் வெளிநாடு சென்று நீண்டகாலம் அங்கேயே தங்கிவிட்டேன் மீண்டும் ஊருக்கு திரும்பி வரும்போது தமயந்திக்கு உள்ளுரில் கல்யாணம் நடந்து முடிந்து இருந்தது  

பொழுது விடியத் தொடங்கியது. வயலுக்குப் போகும்போது கூடியிருந்த கூட்டம் திரும்பி வரும்போது மூன்று மடங்காக மாறியிருந்தது. ஊர் ஜனங்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். அந்த இடம் திடீரென ஒரு பரபரப்புக்கு உள்ளானது. அக்கம் பக்கத்துப் பெண்கள் சாணம் தெளிப்பதை நிறுத்தி விட்டு தமயந்தியின் வழிகூட்டலுக்காக வந்து சேர்ந்தனர். ஊரின் முக்கியமானவர்கள் ஆக வேண்டிய காரியங்களை ஒவ்வொன்றாகத் தங்களுக்குள் பட்டியலிட்டுக் கொண்டே நாற்காலிகளில் அமர்ந்தனர். ஒவ்வொருவரும் அவரவர் பங்கிற்கு, ஒவ்வொரு வேலையை செய்யத் தொடங்கினர். ஒரு குடம் நிறையத் தண்ணீர், ஒரு தட்டில் வெற்றிலை சீவலும் உடனடியாக அங்கு வந்து சேர்ந்தது. 

தமயந்திக்கு வரிசையாக ஐந்து மகன்கள். பெண் குழந்தைக்காக அவள் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. கணவர் ரங்கசாமியின் வருமானம் ஐந்து பிள்ளைகளுக்கே போதாத நிலையில் பெண் குழந்தை ஒரு கேடா? என விசனப்படும்போது பார்க்கவே சங்கடமாக இருக்கும். ரங்கசாமிக்கு நிரந்தரமான வேலையெதுவும் கிடையாது. விவசாய வேலையும் செய்யத் தெரியாது. நாடகம், கூத்து என்று பல ஊர்களுக்கும் சென்று வாரக்கணக்கில் தங்கி விடுவார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வரும்போது உளுந்து, பயறு, நிலக்கடலை என தானியங்களைத் தனித்தனியாகக் கட்டிக்கொண்டு வருவார்.அப்படி அவர் வருவதைப் பார்க்கும்போது ஒரு சந்தையையே அவர் தன  தலையில் சுமந்து வருவது போலவே தோன்றும். கூத்துக்கட்டும் பிழைப்பில்லாத காலங்களில் மாட்டுத்தரகு வேலைக்குப் புறப்பட்டுவிடுவார். ஜெயங்கொண்டம், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர் என அவர் சுற்றாத ஊரில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் அவருக்குத் தோதான ஒரு சிநேகிதர் ஒருத்தர் கட்டாயம் இருப்பார். இரவு நேரங்களில் அந்த சிநேகிதர்களின் வீடுகளில் தங்கிக்கொண்டு, அடுத்த நாள் பிழைப்பிற்கு அடுத்த ஊருக்குப் புறப்படுவார். ஒவ்வொரு கிராமத்திலும் இரவு தங்கிவிட நேரும்போது அந்த சிநேகிதர் வீட்டிலலையே சாப்பிட்டுவிட்டு அவ்வூர் கோயில்களில் அமர்ந்து, கூத்துப் பாட்டுகளை ஒன்றொன்றாக  பாடத் தொடங்கி விடுவார்.  

அவரது கூத்துப்பாட்டுக்கு ஊதியமாக அவ்வூர் மக்கள் அவருக்கு கட்டிக்கொடுத்து அனுப்புகிற மூட்டைகள்தான் இந்தத் தானியங்கள. இந்த மூட்டைகளை அந்தக் கிராமத்து மக்கள் ஒன்றாகச் சேர்ந்து கட்டித்தரும்போது வேண்டாமென அவரும் மறுத்ததில்லை  சொந்த ஊருக்கு வந்தால் கூலி வேலைகூட செய்யத் தெரியாத ரங்கசாமிக்குச் சொந்தமாக நூறுகுழி வயல்கூட கிடையாது. அவருடைய பங்காளிகள் பலரும் நிலபுலத்தோடு சௌகரியமாகமாகவே வாழ்கிறார்கள். ஆனாலும், அவர்களிடம் கூட எத்தனமுறைதான் உதவியென்று கேட்பது! கடன் வாங்குவது! என்று பேச்சுவார்த்தையோடு நின்று கொண்டாள் எல்லாம் ஒரு கட்டத்தில் கசப்பாகவே முடித்தும் போனது. பங்காளிகள் கூட்டம் அதிகம் என்றாலும் நல்லது கெட்டது தவிர மற்ற நேரங்களில் ரங்கசாமி வீட்டுப்பக்கம் யாரும் அண்டுவதில்லை. அதை நினைத்துத்தான் ரங்கசாமிக்கு ஏகப்பட்ட வருத்தம். ஆனால், இதையெல்லாம் தமயந்தி ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொண்டதில்லை. ஐந்து ஆண் குழந்தைகளும் இரண்டு வருட இடைவெளியில் தொடர்ந்து பிறந்ததால் அவர்களைப் பராமரிப்பதும், அக்குழந்தைகளை வளர்த்து எடுக்கும் அக்கறையிலுமே அவள் கவனம் முழுவதும் இருந்து வந்தது. மூத்தவன் பள்ளிக்கூடம் போகத்தொடங்கிய காலத்தில் மற்றக் குழந்தைகள் நான்கும் வீட்டில் இருந்துகொண்டு தமயந்திக்கு உதவியாக வீட்டு வேலைகளைப் பார்ப்பதும் கொல்லைப் புறத்தில் மண்டிக் கிடக்கும் டிசம்பர்ச் செடியிலிருந்து பூக்களைப் பறித்துக்கொண்டு பக்கத்துத் தெருக்களில் விற்று வருவதுமாக இருந்து வந்தனர்.  

கூத்துக்கட்டும் வேலையின் பொருட்டு வெளியூர் செல்லும்போது ரங்கசாமிக்கு பீடி குடிக்கும் பழக்கம் எப்படியோ தொற்றிக்கொண்டது. கடைசிவரை அந்த பழக்கத்தை அவர் கை விடவில்லை. சளி, இருமல் எனத் தொடங்கி காசநோய் வந்து படுத்தவர் ஒரு மழைக்காலத்தில் பெரும் வாதையோடு தனது உயிரைத் துறந்தார். இதை எதிர்பாராத தமயந்தி பெரிதும் கலங்கிப் போனாள். அவள் வைத்த ஒப்பாரியில் ஊரே கலங்கி விட்டது. ஒப்புக்காவது புருசன்னு ஒருத்தர் இருந்தார். இப்போது  அவரும் இல்லையே என்ற வேதனையில் அவள் ஒப்பாரி நிற்கவே இல்லை. பங்காளிகள் அனைவரும் ஒற்றுமையாக நின்று ரெங்கசாமியின் ஈமச்சடங்குக் காரியங்களையும் செலவுகளையும் பார்த்துக் கொண்டார்கள். பெரியவனைத் தவிர மற்றக் குழந்தைகளுக்கு தந்தையின் மரணம் பெரிய துயரமாகத் தெரியவில்லை. தமயந்தி அழுவதையே பார்த்திராத அவர்களுக்கு இப்போது அவள் அழுது புரள்வதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் அவ்வப்போது அழுவதும், ஓய்வதுமாக இருந்தார்கள். 

மூத்தவன் முகம் இருண்டு விட்டது. அழத்தெரியாமல் சுவரோரமாக நின்றபடியே இருந்தான். அப்பா வரும்போதெல்லாம் அவர் தலையிலிருந்து இவன்தான் அத்தனை மூட்டைகளையும் இறக்கி வைப்பான். ஒவ்வொரு மூட்டையும் அவ்வளவு கனமாக இருக்கும். அப்போதெல்லாம் அப்பாவை இந்தத் துன்பத்திலிருந்து சீக்கிரமாகவே விடுவிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வான். நடந்து வந்த களைப்பில் சோர்ந்துபோன அப்பா கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டே ஒரு சொம்பு தண்ணீரையும் ஒரே மடக்கில் குடித்து விடுவார். அந்தக் காட்சிதான் அவனை விட்டு அகலாது இபோதும் சுற்றிச் சுற்றி வந்தது. அப்பாவை இவ்வளவு சீக்கிரமாய் இழந்து விடுவோம் என்று அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பங்காளி வீட்டுக் குழந்தைகள் ஆடி ஓடிக் கொண்டிருந்தார்கள். மதியத்திற்கு மேல் அப்பாவின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. மயானத்திற்கு சென்று கொள்ளி சாத்திவிட்டு வீடு வந்து சேர்ந்தபோது மணி ஆறைதாண்டிவிட்டது வீட்டிற்குள் வந்து பார்த்தால் சாமி மாடத்திற்குக் கீழே அப்பா ஒரு அகல் விளக்காக எரிந்து கொண்டிருந்தார். 

கணவரின் மறைவிற்குப் பிறகு நிரந்தரமாக ஒரு வருமானத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமயந்தி இட்லி வியாபாரத்தைத் தொடங்கிவிட்டாள், படிப்படியாக அதில் முழு அளவில் வெற்றியும் கண்டாள். தனது குடும்பத்திற்குப் போதுமான அளவினையும் தாண்டிய வருமானத்தில் அவளுக்குள் உள்ளூர சந்தோஷம்தான். கணவன் உயிரோடு இருந்த போதே இந்தக் கடையை ஆரம்பித்திருக்கலாம் என்ற எண்ணம் கூட அவளுக்குத் தோன்றியது. கணவரும்கூட ஊர் ஊராக அலைந்து கஷ்டப்பட்டிருக்க மாட்டார் என்பதையும் நினைத்து வருத்தப்பட்டாள். 

நிரந்தர வருமானமும் தேவையான ஓய்வும் கிடைத்ததில் தமயந்தியின் மனதைப் போலவே உடலும் பூரிப்பாக இருந்தது. கணவனோடு வாழ்ந்த காலங்களில் வரிசையாகப் பிள்ளைகளைப் பெற்றுப் போட்டதை விட முழுமையான தாம்பத்தியம் என்பதைக் கடைசிவரை தன்னால் அடைய முடியவில்லையே என்ற ஏக்கமும் தமயந்திக்கு உள்ளூர இருந்து வந்து. தற்போது அது வெளிப்படையாக ஏங்கும்படியாக உருமாறி விட்டது.  உடல் வேட்கையை அவளால் எளிதில் கடந்துவிட முடியாமல் தடுமாறினாள் அதை கடந்துவிடவும் அவள் விரும்பவில்லை. நள்ளிரவில் கணவன் ரங்கசாமியின் தொடுகையில் அவ்வப்போது எழுந்து அடங்கிய வேட்கை இப்போது உடல் முழுவதுமாகவே பரவியதை உணரத் தொடங்கினாள். தன்னால் வெளியே வந்து வேறொரு துணையைத் தேடிக்கொள்ள முடியுமா? அதை இந்த ஊரும், சொந்த சாதி சனமும்தான் ஏற்றுக்கொள்ளுமா? என்று தனக்குள்ளேயே கேட்டுப் பல நாளாகப் போராடிக் கொண்டிருந்தாள். நாளுக்கு நாள் இந்த மனப் போராட்டம் அவளிடம் அதிகரித்ததே தவிர அடங்கியபாடில்லை.  

ஐந்து பிள்ளைப் பேறின் போதே இந்த வேட்கை அடங்கியிருக்க வேண்டும். அப்போது இது போன்ற எண்ணமே தேவையில்லாமல் இருந்தது. குழந்தைகளை வளர்க்கவும், எடுக்கவுமான வாழ்க்கையே ஓடிக் கொண்டிருந்தது. பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் போதுமான வாழ்வை வாழ்ந்து விட்டதாகவே இப்போதும் தோன்றுகிறது. ஒரு நாளும் உடல் தேவைக்காக கணவரை அணுகியதில்லை. அவரும் கூட தன்னை உடலாக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கவில்லை. தனக்குத் தேவையான காலங்களில் மட்டுமே நெருங்கி வருவார். இச்சை தீர்ந்ததும் திண்ணையில் சென்று படுத்துக் கொள்வார். பிள்ளைகள் மீதோ, மனைவியின் மீதோ பெரிய அளவில் பற்றுக் கொண்டவரல்ல ரங்கசாமி. தன் இஷ்டம் போல் வாழ்ந்து மறைந்து போனவருக்குக் கடைசியாக அவரது சாவிற்குக் கூட பெரிய கூட்டம் கூடவில்லை. ரங்கசாமியோடு கூத்துக்கட்டும் கூட்டத்தில்கூட யாரும் வந்ததாகத் தெரியவில்லை.  

தமயந்தி இந்த நெருக்கடியை, மனத்தடுமாற்றத்தைக் கடந்து விட்டால் போதும் என்றே ஒவ்வொரு நாளாகக் கடந்து போனாள். ஆனால், இந்த நிலையே அவளைக் கொன்று விடும் போல் இருந்தது.  

அம்மாவின் போக்கினை மூத்தவன் இப்போது புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறினான். இரவுகளில் வெகுநேரம் விழித்திருக்கிறாள். மனதுக்குள் ஏதோ பேசிக் கொள்கிறாள். எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை. விடியும்போது அடுப்படியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அடிக்கடி குளித்துவிட்டு வந்து வெகு நேரம் அப்பாவின் படத்திற்கு முன்னே நின்று அழுது கொண்டேயிருக்கிறாள். யாரிடமோ பேசுவதைப் போல தனியாகப் பேசிக்கொண்டிருக்கிறாள். அம்மா என்று அவன் சத்தமாக அதட்டினால் சிறிது நேரம் அமைதியாக இருப்பாள். பிறகு மறுபடியும் பேசத் தொடங்குகிறாள். இரவு நேரங்களில் பச்சைக் குழந்தையைப் போல் அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டே உறங்குகிறாள். திடீரென விழித்துக் கொண்டு நெடுநேரம் உட்கார்ந்திருக்கிறாள்.  

கடைசியாக அவன் ஊருக்குக் கிளம்பிச் செல்லும் காலையில் அம்மாவும் அவனக்கு முன்னதாகவே எழுந்து, சமையலறையில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாள். அவனும் குளித்து முடித்துவிட்டுக் கிளம்பி அப்பாவின் படத்தின் முன்பாக நின்று ‘அம்மாவை இந்தத் துன்பத்திலிருந்து காப்பாற்றி விடுங்கள்’ என்று அப்பாவிடம் மனதிற்குள் வேண்டிக்கொண்டு புறப்பட்டான். அப்போது எதிர்பாராத விதமாக தமயந்தி அங்கே வந்து நின்றாள். ‘அப்பாவைப் போலவே நீயும் என்னை விட்டுவிட்டுப் போய்விடாதடா!’ என அழத் தொடங்கினாள். அம்மாவின் பேச்சைக் கேட்கக் கூடிய தைரியம் இல்லாமல் பிடிவாதமாக அவன் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தான்.  

தமயந்தியின் இறப்புச் செய்தியைக் கேட்டு வெவ்வேறு ஊர்களில் வேலை செய்யும் தமயந்தியின் மகன்கள் ஒவ்வொருவரும் குடும்பமாக வரத் தொடங்கினர். வாசல் நிறைய ஊர்க்கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தின் மத்தியில் சிலரது போதையின் நெடியும் ஆங்காங்கே வீசியது.  

‘மூத்த மகன் மட்டும் வருவதில் தாமதமாகிறது. அவன் மட்டும் வந்துவிட்டால் போதும், ஆக வேண்டிய காரியங்களைப் பார்த்து விடலாம்’ என்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ரங்கசாமி மறைவுக்குப் பிறகு தமயந்திக்குக் கூடமாக உதவியாக இருந்து வந்த மூத்தவன், அப்பாவின் தலைதிவசம் முடிந்தவுடன் கொத்தனார் வேலைக்காக வெளியூர் கிளம்பியவன் ஒவ்வொரு ஊராக வேலை பார்த்து வருகிறான். தமயந்தியின் இறப்புச் செய்தியைக் கூட அவனுக்குத் தெரிவிப்பது மிகுந்த சிரமமாகப் போய்விட்டது. ஒருவாறாக அவனும் புறப்பட்டு விட்டதாக சகோதரர்களுக்குத் தெரிவித்து விட்டான். 

தமயந்தியின் வயதைக் கொண்ட உறவுக்காரப் பெண்ணொருத்தி மட்டும் தனது ஒப்பாரியை நிறுத்தாமல், அழுதுகொண்டே இருந்தாள். இடையிடையே தமயந்தியின் பெருமைகளைச் சொல்லிச் சொல்லி மூக்கைச் சிந்தினாள். ‘புருசன் போனதுக்குப் பெறகும், புள்ளைகளப் பாத்து பாத்து வளத்தியே தமயந்தி! எதுக்கும் கலங்காம கல்லு கணக்கா இருந்தியே! கடேசீல, இப்பிடி அநியாயமா உத்தரத்துல தொங்கியிட்டியே தமயந்தீ…!’ என ஆற்றாமையோடு சொல்லி ஒப்பாரியை வேகப்படுத்தினாள்.  

வெயில் உச்சியில் நின்று எரித்தபடி இருக்க, உறுமிச் சத்தம் கூடுதலாகவே ஒலித்துக் கொண்டிருந்தது. ஒருவர் பேசுவதை மற்றவர் கேட்க முடியாத அளவிற்கு இரைச்சல் அதிகமானது. ‘மூத்த மகன் வந்துட்டானப்பா! ஆக வேண்டிய காரியத்த சீக்கிரமா பாக்கலாம்!’ என ஒருவர் சத்தமிட்டார். அந்தச் சத்தம் மூத்தவனின் காதில் விழுந்து எதிரொலித்தது. 

Print Friendly, PDF & Email

1 thought on “தமயந்தி

  1. கதைமாந்தர் தமயந்தி போன்ற பல தமயந்தி இன்னும் வாழ்ந்து தான் வருகிறார்கள். தமயந்தி இயற்கை மரணம் அடைந்திருந்தால் அவளின் உழைப்பு தியாகம் அனைத்தும் மகன்கள் மதித்ததாக இருந்திருக்கும். தன் உயிரை தானே மாயித்துக்கொள்ளும் அளவிலான மன நெருக்கடி கலந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்கும் தமயந்தி ஆன்மா அமைதி கொள்ளட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *