தப்பித்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 8,192 
 

”இப்ப நா என்னா செய்யணும் அத்தா” காத்தாயி அத்தனை பயத்துடன் மெதுவாகவே கேட்டாள்.

அடுப்பில் சோறு வெந்து கொண்டிருக்கிறது. மகள் இருக்கிறாள்தான். அதைப் பார்ப்பாளா எனத் தெரியவில்லை. அழகருக்கும், ராவுத்தருக்கும் வாய்த்தகராறு எனக் கேள்விப்பட்ட நிமிசத்தில் பதட்டத்தோடு வந்தவள், வந்ததும் முதல் வேலையாய் அழகரைக் கடத்தி விட்டாள். ”நீ கெளம்பு”

எட்டாக நெளிந்து கிடந்த சைக்கிளின் முன்புற சக்கரத்தை கண்களால் அளந்தபடி வாயடைத்துப் போயிருந்த ஐசக் ராவுத்தர், பதில் ஏதும் சொல்லாமல் காத்தாயி பக்கம் திரும்பினார்.

காத்தாயி புருசன் அழகர், வாடகைக்கு என எடுத்துப்போன சைக்கிளை எதன் மீதோ மோதவிட்டு இந்தக்கோலத்தில் கொண்டுவந்து சேர்த்திருந்தான்.

“அதுகிட்ட (அழகர்) எதும் கேக்காதீங்க என்னான்னாலும் நானே தாரேன் த்தா” மீண்டும் அவளே பேசினாள்.

அழகர் போதைக்காரன் என்பது ஊரறிந்த உண்மை. காத்தாயியிடம் பேசுவதுதான் உத்தமம்கூட.

“ஐநூறு ரூவா ஆகும் மா. வீல், டயர் டீப்பு எல்லாமே சேதாரம் ஆகிக்கிடக்கு. நா, சைக்கிள் வாடகைகூட கேக்கல” புருசன் பொண்டாட்டி இருவருமே கூலிவேலை செய்பவர்கள். ஐசக் ராவுத்தர் பாவம் பார்த்தார். “நாங் கேட்டது சேதாரமும், கூலியும் மட்டுந்தாம்மா “

”ஒங்களுக்கென்னா, ப்ளேனும் கப்பலுமா ஓடுது ? உள்ள வாடகயச் சேத்து வாங்கிக்கங்க அத்தா. நாலுநாள் கழிச்சு நானே கடையில் வந்த தந்துட்டுப் போறே. வீட்டுக்கு விருந்தாடிக வந்துருக்காக”

தப்பித்து வந்தாள். சட்டிச் சோறு காப்பாற்றப்பட்டது.

***

“ஒருவாரம் ஆச்சு காத்தாயி ?”

“ஆமாங்த்தா, . மறக்கல . இப்பக்கூட வீட்ல ஒங்க பேச்சுத்தே”

”ஆரக்கேட்டு காஸ் தரேன்ன ?” தண்ணிதெளிக்கப்பட்ட சேவலாய் தலையை குலுக்கி கேட்டான் அழகர்.

”செத்துப்போன ஒங்க ஆயாவயா கேக்கமுடியும். ஒடச்சா தண்டம் குடுக்க வேணாமா? வேற ஒருத்தன்னா கட்டிவச்சுருப்பான். அந்தமட்டு தப்பிச்சுகிட்ட” மேலும் ராவுத்தர் கண்ணில் படாமல் இருக்க சொல்லிக்கொடுத்தாள். ஆவுகம் வந்து தொந்தரவு பண்ணுவார். எந்த செலவைக் குறைத்து அவருக்கு கடன் அடைக்க ? கண்ணில் இருட்டுக் கட்டியது.

”மொத்தமாத் தர வேணாம்மா, பாவம் நீயும் ஓடி ஆடி ஒழைக்கிற பிள்ள, சன்னஞ் சன்னமாக் குடுத்துக் கழிச்சுவிடும்மா. இப்ப ஒரு இறநூறாச்சும் குடு”

“அள்ளிக்குடுத்தாலும் கிள்ளிக்குடுத்தாலும் நாந்தான தரணும். இஷ்டம்போல வாங்கிக்கங்க அத்தா”

“வண்டிய ரிப்பேர் பாத்து செமபண்ணி ஓட்டிவிட்டா, தெனத்துக்கு அம்பது நூறுன்னு கஞ்சிக்கு கொண்டுவரும்”

“இவெனால, ஒரெடத்துல நாணயமா இருக்க முடியலத்தா. நா ஒராள், வேலபாத்து புள்ளகுட்டின்னு குடும்பத்தப் பாக்கறதா, இப்பிடி, தெண்டத்துக்கு குடுக்கறதா ? குடிகாரப்பெய கிட்ட மாட்டிவிட்டு எங்காத்தா நிம்மதியாப் போய்ச் சேந்திட்டாத்தா. நா என்னங்கட்டும்”

. . . . . . . .

“வருத்தப்படதீக த்தா, நாள மக்யா நாளு, வேல முடிச்சு நேர கடைக்கு வந்து ஒங்க கணக்க முடிச்சிட்டுப் போறேன்”

* * *

”நாந்தே கடைக்கு வாரேன்னு சொன்னேல்ல த்தா . அதுங்குள்ள வீடுதேடி வந்துட்டீக”

குறுகிய சந்துக்குள் இன்னும் குறுகித்தான் நிற்கவேண்டி இருந்தது ஐசக் ராவுத்தருக்கு.

“என்னைக்கிமா ? சொல்லி எத்தன நாளாச்சு ?” வாடகை சைக்கிள் கடைகள் ஊருக்குள் வழக்கொழிந்து அனேக காலம் ஆயிற்று. வேறு வேலை தெரியாததால் தன்னால் விடமுடியவில்லை. அதில் இப்படியெல்லாம் வில்லங்கம்.

“இருக்கட்டும் த்தா, வெறும் ஆளா கடைக்கு வரமுடியுமா ? கையில காசுவந்ததும் நானே தேடிவருவேன் ல,. ஒங்க காசு பேங்குல கெடக்கமாதிரின்னு நெனச்சுக்கங்க”

“பேங்குல போடற அளவுக்கு வசதியில்லம்மா’ எனச் சொல்ல நினைத்தார்.

“ஒங்க தரத்துக்கும் தண்டிக்கும் நீங்கெல்லா வீட்டுக்கு வந்து நிக்கலாமா த்தா ! போங்க த்தா, கடைக்குப் போங்க. காசு வரும்”

தனது வாலை மிதித்த ஐசக் ராவுத்தரை பெருந்தன்மையோடு குரைக்காமல் முறைத்துப் பார்த்து மன்னித்து அனுப்பியது. சந்துக்குள் கிடந்த செவலை நாய் ஒன்று.

***

நெளிந்து கிடந்த சைக்கிள் சக்கரம் ஒன்றை நெஞ்சுக்கு நேராய் நிறுத்தி வைத்து கோட்டம் பார்த்துக் கொண்டிருந்தார், ராவுத்தர்.

“டெய்லி போதையிலேயே விட்டுக்கு வாரவன என்னா செய்ய அத்தா ?” வெயிலுக்கு தலையில் முக்காடு போட்டிருந்தாள் காத்தாயி. முக்காட்டையும் மீறி கண்டுவிட்டார்.

அவளுக்கு பதில சொல்லும் நிலையிலில்லை ராவுத்தர். கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

“ஏம்மா ரோசன சொல்லத்தானா ஒன்னியக் கூப்புட்டேன். பேச்ச மாத்தாம இப்ப காசக்குடும்மா, எனக்கும் வவுறுன்னு ஒன்னு இருக்கு”

அதனை ஏற்றுக் கொண்டவளாய், “இந்தா வீட்டுப்போனதும் வந்து பாக்கறேன்” என்ற காத்தாயி தொடர்ந்து, “அளும்பு தாங்க முடிலேத்தா, என்ன பெத்தாரா ஒங்கள பாக்கறேன்” என்று உருகினாள்..

“தாங்க முடிலேன்னா, பாலிடாய்ல கரச்சு வாய்ல ஊத்திவிடு. போய்ச்சேரட்டும்” என்றார்.

திடுக்கிட்டவளாய், முக்காட்டினை நீக்கியவள் “ ம் ? எனக்கு புருசெ வேணும்ல” சொன்னபடியே நகர்ந்தாள்.

***

”ஏம்மா, புருசனும் பொஞ்சாதியும் சேந்துகிட்டு நாடகமாடுறீங்ளா மாசக்கணக்கா ஆகிப்போச்சு. ஒண்ணு குடுக்கறேன்னு சொல்லு இல்ல. கிடைக்காதுன்னு சொல்லு. வெட்டியா அலக்கழிக்காத”

“நா என்னா காசு ஒங்களுக்குத் தரணும்? இம்பிட்டுச் சடப்பு சடச்சுப் பேசறீக !” முன் நெற்றியில் விழுந்த தலைமயிரை ஒதுக்கிவிட்டபடி கேட்டாள் காத்தாயி.

“என்னா காசா ? ஓவ் வீட்டுக்காரெ எனக்குத் தரவேண்டிது ஆவுகமில்லியா”

”அந்தக் குடிகாரப் பய தரணும்னு சொல்லுங்க. என்னியச் சொல்றீக”

“நீதானம்மா தாரேன்ன !”

“அப்பிடியா சொன்னே, அந்தாள்ட்ட கேக்காதீக, சண்ட சத்தம் வரும். பாத்து வாங்கித் தாரேன்னு சொன்னே. இங்க எம்பொழப்பே கீழ்பூழ் நு கெடக்கு. அவனயெல்லா வெளக்கமாத்தக் கொண்டி அடிச்சாலும் எம்மனசு ஆறாது. ந்தா வாரேன் பாருங்க”

சட்டென சந்துக்குள் நுழைந்து கொண்டாள். ஒருவேளை புருசனை அடித்து இழுத்து வருவாளோ !

***

“அதே எம்பொண்டாட்டிகிட்டக்க வாங்கிட்டீகள் ல, இப்ப எங்கிட்டயும் காசு கேட்டா ?” என்ற அழகர், “ராவுத்தரே எங்கிட்டவே டபுள் கேம் ஆடுறீக, நீ ! பெரிய தீவிரவாதிதே !” ஆடாமல் ஆடியபடியே கடையைக் கடந்தான் அழகர்.

தீவிரவாதியா ? உண்மையிலேயே பயந்துபோனார் ஐசக் ராவுத்தர்.

***

“காத்தாயி”

“என்னாங்க த்தா இது ? போறப்ப வாரப்பயெல்லா ஒரு பொம்பளப்பிள்ளய மறிச்சு மறிச்சு கூப்பிட்டுக்கிருக்கீக”

அவளது வேகமான பேச்சில் வாயடைத்துப்போன ராவுத்தர், “ஏம்மா எனக்கென்னா வேண்டுதலா ஒன்னிட்ட பேசணும்னு”

“ஒங்களால அனுதெனமும் வீட்ல ஒரேகரச்சல், அந்தாள்ட்டயும் கேக்கறீக எங்கிட்டயும் பேசறீக. என்னிய விட்ருங்க எவெங்கிட்ட குடுத்தீங்களோ அவெங்கிட்டவே கேட்டுக்கங்க. நல்லதுக்குக் காலமில்ல. ம்கூம் !”

“ஏம்மா . . .”

“ஒரு நல்லதுக்குப் போவம் பொல்லதுக்குப் போவம், என்னமோ நீங்கதே பேரு வச்சமாதிரி கூட்டுக்கிட்டு ச்சே ! பெரிய மனுசெ இப்பிடியா நடந்துக்கறது.

சொல்லிவிட்டு புயலாய்க் கிளம்பினாள் காத்தாயி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *