தன் பிள்ளை தானே கெடும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 7,652 
 
 

ரமணியை அனுப்பிவிட்டு வனரோஜா வீட்டிற்குள் வந்தாள். காபி குடித்துக் கொண்டே இருந்த தனபாலன் ‘’என்னவா ரகசியமா பேசிட்டு போகுது’’ என்று கேட்டான் ‘’ஆமாம் அவளுக்கு என்ன, அவள் மாமியார் ஆம்பள புள்ள பெறச் சொல்லுதாம். ஏற்கனவே ரெண்டு பொட்டப்புள்ள இருக்கு. எந்த சொத்து பத்து வச்சிருக்கா? ஆம்பள புள்ள பெத்து அதை கட்டி ஆளப் போகுது? சும்மா கிழவி பேச்சை கேட்டுக்கிட்டு நாளை தள்ளிக்கிட்டே போறாள். நமக்கென்ன? சொன்னால் கேட்டால் தானே? இனி அஞ்சாவது மாசம் வருவாள். அப்புறம் அதை துண்டு துண்டாக தான் வெட்டி எடுக்கணும்’’ என்று சொல்லி விட்டு அடுப்படிக்குள் போய் விட்டாள்.தனபாலனுக்கு புரிந்தது அவன் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டான்.

அவன் வாசலுக்கு போகும்போது உள்ளே இருந்த வனரோஜா ‘’யாரோ உங்க பிரண்டு ஒய்ஃபுக்கு சொன்னீங்களே அது என்னன்னு கேட்டுட்டு வாங்க என்று சத்தம் போட்டு சொன்னாள். ‘’சரி சரி கேட்கிறேன். நல்லவேளை ஞாபகப்படுத்தின. இல்லன்னா மறந்தே போய் இருப்பேன். அவனைப் போய் பார்த்துட்டு ‘’ என்று சொல்லிவிட்டு செருப்பை மாட்டிக் கொண்டான்.

வனரோஜா தனக்கு காபி போட்டுக் கொண்டு வந்து ஹாலில் உட்கார்ந்து குடித்தபடி மகளிர் சுய உதவி குழு நோட்டை எடுத்து விரித்து வைத்தாள். மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவியாக இருக்கும் வனரோஜா பல பெண்களுக்கும் பல விதமான உதவிகளைச் செய்து வருகிறாள். அவர்களின் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் ; அவளுக்குத் தெரிந்த அந்த ஒரே பள்ளிக்கூடத்தில் மட்டும்தான் கொண்டு போய் சேர்ப்பாள். அவளுக்குத் தெரிந்த ஃபேன்சி ஸ்டோரில் அந்த பிள்ளைகளுக்கான ஸ்கூல் பேக், பென்சில் பாக்ஸ், பிரவுன் பேப்பர் போன்றவற்றை கடனில் வாங்கிக் கொள்ளும்படி சொல்லிவிடுவாள்.

சிலருக்கு அடுத்தவர் பெயர் போட்டு கடன் கொடுப்பாள். இவ்வாறு கொடுக்கும் கடனுக்கு மகளிர் குழு வட்டி கிடையாது. அஞ்சு வட்டி வாங்குவாள். சில பெண்களுக்கு வங்கியிலும் கடன் வாங்கிக் கொடுப்பாள். அப்போது அந்த பெண்களிடம் வாங்கி கொடுத்த கடனுக்கு நூற்றுக்கு ஐந்து சதவீதம் கமிஷன் பெற்றுக் கொள்வாள். இப்படியாக இவள் பலப்பல உதவிகளைச் செய்து வந்தாள்.

அருகில் இருக்கும் அமுதா மருத்துவமனைக்கு இவள் அடிக்கடி போவாள். தங்கள் குழுவில் யாருக்காவது சுகமில்லை என்றால் டாக்டர் அமுதாவிடம் தான் அழைத்துச் செல்வாள். அமுதா அம்மா ரொம்ப நல்லவங்க வனரோஜா அழைத்துக் கொண்டு வரும் அனைவருக்கும் அவ்வப்போது இலவச மருந்துகளை கொடுப்பார்கள். சில சமயம் கையில் காசில்லை என்றால் கூட ஃபிரியாக ஊசி போட்டுவிடுவார்கள். இதனால் அமுதா அம்மாவை போய் பார்ப்பது என்றால் குழு பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் சிலருக்கு நாள் தள்ளிப் போகும் போது கூட அம்மாதான் மாத்திரையோ ஊசியோ போட்டு உதவுவார்.

வனரோஜா ஆதாயம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டாள். சர்க்கரையாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வாள். இன்று ரமணியை அமுதாவிடம் அழைத்துப் போய் விட வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன் நயமாகப் பேசி மாமியாரிடம் சம்மதம் வாங்கிக் கொண்டு வரும்படி அனுப்பி இருக்கிறாள். எப்படியும் நாளைக்கு ரமணியால் 2000 ரூபாய் கிடைத்துவிடும். இந்த சந்தோஷக் கனவுடன் அவள் மகளிர் சுய உதவிக்குழு நோட்டை வரிசை வரிசையாக பார்த்துக்கொண்டு வந்தாள்.

ராமலட்சுமி மூன்று மாதமாக பணம் செலுத்தவில்லை போய் பார்த்தால் என்ன; எப்போது போனாலும் புலம்பத்தான் செய்வாள்? ஒரு காபி கூட கிடைக்காது. ஒவ்வொரு வீட்டில் என்னென்ன தருகிறார்கள்? பணம் கொடுக்கிறார்களோ இல்லையோ காபி சாப்பாடு பழம் எல்லாம் கிடைக்கும். ஆனால் இந்த ராமலட்சுமி தரித்திரம் பிடித்தவள். போனால் எதையாவது புலம்பிக் கொண்டே இருப்பாள். என்ன செய்வது பணம் வந்தாக வேண்டுமே இல்லையென்றால் பேங்க்காரனுக்கு யார் பதில் சொல்வது? போய்க் கேட்டு விட்டு வருவோம். நாலு வார்த்தை நறுக்கென்று நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவது போல கேட்போம் என்று ஆத்திரத்துடன் புறப்பட்டாள்.

ராமலட்சுமி வீட்டில் அவள் மகள் மூன்று பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் புளியமுத்து வைத்து ஏதோ விளையாடிக் கொண்டிருந்தனர். ஒத்தையா ரெட்டையா விளையாடி இருப்பார்கள். ஏனென்றால் கைகளை மூடிக் கொண்டுதான் இருந்தார்கள்.

‘’எங்கடி உங்க அம்மா?

அம்மா வெளிய போய் இருக்கு. காசுக்கு தான்க்கா ஒரு இடத்துக்கு போய் இருக்காங்க. இப்ப வர்ற நேரம் தான்க்கா இருங்க’’ என்றால் ஒருத்தி

‘’உங்க அம்மா நான் வரும்போது இருக்கமாட்டேங்குது. காசு கொண்டு வந்து கட்ட மாட்டேங்குது. நீங்க என்னடி வேலை செய்றீங்க/ என்று வனரோஜா கேட்டாள்

‘’அக்கா நாங்க படிச்சுக்கிட்டு இருக்கோம்கா. எங்களுக்கு ஃபீஸ் கட்ட தான் ஒரு இடத்துல காசு கேட்டு போயிருக்கு எங்க அம்மா வேலை பார்க்கிற வீட்ல அவங்க பிரெண்ட்ஸ் ஒருத்தவங்க ஏழைப் பிள்ளைகளுக்கு பீஸ் கட்ட பணம் குடுப்பாங்களாம். அவங்க கிட்ட போயி எங்க ரெண்டு பேருக்கும் பள்ளிக்கூடத்துக்கு பணம் கட்டுவாங்கலான்னு கேட்க போயிருக்கு’’.

பாவம் அந்த பிள்ளைகள் அப்பாவித்தனமாக உண்மையைச் சொல்லி விட்டனர். வனரோஜா அந்த பெண்களை கடுப்புடன் பார்த்தாள். பின்பு வாசலில் கிடந்த ஒரு கல்லில் உட்கார்ந்தாள். தரையைப் பார்த்துக் கொண்டே அமைதியாக இருந்தாள். மூன்று பிள்ளைகளும் நின்று கொண்டிருந்தன. அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நிமிர்ந்து பார்த்தாள்.

‘’ இந்த மூன்றும் படிச்சு என்ன பண்ணப் போகுது எங்கயாவது வேலைக்கு அனுப்பலாமே என்று யோசித்தவள், என்னடி படிக்கிறீங்க என்று கேட்டாள் ‘அக்கா நான் பிளஸ் 2 படிக்கிறேன் தங்கச்சி டென்த் படிக்கிறாள். எங்க அக்கா படிக்கலக்கா. வீட்லதான் இருக்கு’’ என்றாள் ஒரு பெண்.

தேவி வந்ததிலிருந்து இவள் மட்டும்தான் பதில் பேசினாள். மற்றவர்கள் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். சற்று தள்ளி மூன்று சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர் அவர்களும் அந்த வீட்டுப் பிள்ளைகள் தான்.

‘’ சரி உங்க அம்மா வந்த தேவி அக்கா வந்துட்டு போனாங்கன்னு சொல்லு. பணத்தை கொண்டு வந்து குடுக்க சொல்லடி’’ என்று சொல்லிவிட்டு விறுவிறு என்று மனதுக்குள் ஒரு யோசனையுடன் நடந்தாள்.

வனரோஜா வேகமாக நடந்து போய் பெரிய பங்களாவும் இல்லாமல் நடுத்தர வீடும் இல்லாமல் இருந்த ஒரு பெரிய வீட்டுக்குள் போனாள். இவள் இரும்பு கேட்டை திறந்த சத்தம் கேட்டு உள்ளேயிருந்து ஒரு பெண் ஜன்னல் வழியாக பார்த்து விட்டு ‘’வாங்கக்கா’’ என்று கதவைத் திறந்தாள். உள்ளே போய் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு .இருந்தாள். காபி டிபன் எல்லாம் கிடைத்தது. மெல்ல கனியை எய்தாள்.

‘’ எப்ப நீ கடைக்கு போகணும் என்று கேட்டாள்

‘’மணி 6 ஆயிடுச்சு இல்ல, இப்ப நான் போனேன்னால் அவர் பஜாருக்கு போவாரு. அவர் வர எட்டு எட்டரை ஆகும். இந்த பிள்ளைங்க டியுஷனுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள வந்து விடுவேன். அப்புறம் அவர் கடையை பாத்துக்குவார்’’ என்றால் அதற்கு வனரோஜா

‘’ பிரியா நான் சொல்றதை கேளு. உங்க கடைக்கு காலைல இருந்து சாயந்திரம் வரைக்கும் ராத்திரி ஒன்பது மணி வரைக்கும் இருக்குற மாதிரி ஒரு பிள்ளையை வேலைக்கு போடு. மத்தியானம் உங்க வீட்டுக்காரர வீட்ல வந்து சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கி எந்திரிச்சு போகச் சொல்லு; அல்லது மத்தியானம் பஜாருக்கு போயிட்டு வரச சொல்லு. சாயந்திரம் அவரை கடையில் உட்காரச் சொல்லு. நீ கடைக்கு போகாதே. நீ பாட்டுக்கு ராஜாத்தி மாதிரி வீட்டில் இரு. உன் பிள்ளைகளை படிக்க அனுப்பிட்டு, கொஞ்ச நேரம் உட்கார்ந்து டிவி பாரு பிள்ளைங்க படிச்சிட்டு வந்த பிறகு, அதுகளுக்கு ஏதாவது டிபன் பண்ணி குடு. சரியா அதை விட்டுவிட்டு நீயும் போய் கடையில் உட்கார்ந்துகிட்டு ரெண்டு பெரும் அல்லாடுறிங்க. ஒரு பிள்ளையை வேலைக்கு போடு’’ என்று மெதுவாக தன் அஸ்திரத்தை எடுத்து விட்டாள்.

அதற்கு பிரியா, அக்கா ஒரு பிள்ளையை வேலைக்கு வச்சா அதுக்கு சம்பளம் கொடுக்கணும். எங்கக்கா நல்ல பிள்ளைகள் கிடைக்கிது’’

‘’நீ எதுக்கு கவலைப்படுற, நான் உனக்கு நல்ல புள்ளையா கொண்டு வர்றேன். எவ்வளவு சம்பளம் கொடுக்கலாம். நீயே சொல்லு. காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை அங்கேயே உட்கார்ந்து இருக்க சொல்றேன். நீங்க கல்யாணத்துக்கு போகலாம்; நல்லது கெட்டதுக்கு ஜோடியாக போகலாம். சினிமா ஷாப்பின்குனு சேர்ந்து போகலாம் சொல்லு’’ என்றாள்

‘சரிக்கா எங்க வீட்டுக்காரர் கிட்ட கேட்டு சொல்றேன்’ என்றாள் ‘சரி நீ கேட்டு சொல்லு, நான் ரெண்டு நாள் கழிச்சு காலையில புள்ளைய கூட்டிட்டு வரேன்’’ என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

வனரோஜா மனதில் கொஞ்சம் நிம்மதி. வீட்டுல சும்மா இருக்கிறவள இங்கே அனுப்பிரலாம் .. இனி அடுத்த ரெண்டு பிள்ளையையும் அந்த வீட்டை விட்டு கிளப்பி விட்டால் தான் நமக்கு மாதாமாதம் பணம் வரும், என்று முடிவு செய்தாள்.

இவளுகளுக்கு கடன் கொடுத்துவிட்டு நம்ம இவளுக்கு வேலை வாங்கி கொடுத்து அப்புறம் கடன் வசூல் பண்ண வேண்டி இருக்கு என்ன கஷ்ட காலம் என்று புலம்பிக் கொண்டே வந்தாள்.

வீட்டிற்கு வந்தவள் அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தாள். ‘அது ரொம்ப சின்ன பிள்ளையா இருக்கே அதை எங்கு அனுப்புவது?’ என்று யோசித்தவளுக்கு திடீரென்று ஒரு ஞானோதயம் ஏற்பட்டது. அப்படி செய்வோம் என்ற முடிவுடன் ரெண்டு வீடு தள்ளி இருக்கும் ஆயாவை போய் சந்தித்தாள்.

‘’என்ன பள்ளிககூட வேலையெல்லாம் எப்படி இருக்கு என்று கேட்டாள். என்ன அம்புட்டு பிள்ளைக்கும் கால் கழுவி விடுற வேலை. இதெல்லாம் ஒரு வேலையா என்று ஆயாம்மா சலித்துக் கொண்டாள். அப்போது பார்த்து தேவி தன் அஸ்திரத்தை எடுத்து வீசினாள்.

‘’எதுக்கு நீங்க அந்த வேலையை எல்லாம் செய்யுறீங்க நீங்க பிள்ளைகளுக்கு தலை சீவி பவுடர் போட்டு அந்த வேலை மட்டும் பாருங்க. இதுக்கெல்லாம் வேற ஒரு பிள்ளையை போட்டுக்கங்க என்றாள். ‘’நீங்களே பெரிய டீச்சர் கிட்ட சொல்லுங்க’’ என்றார் ஆயாம்மா. மறு நாள் ஸ்கூலுக்கு போனாள் வனரோஜா. பெரிய டீச்சர் எனப்படும் தலைமை ஆசிரியையிடம் நைசாக பேசினாள்

‘’பாவம் கஷ்டப்படும் குடும்பம்; எட்டு பிள்ளைகள்; சாப்பாட்டுக்கே கஷ்டம்; நீங்கள் ஒரு சின்ன வேலை போட்டு கொடுங்கள்; என்று கேட்டால். வேலையே இல்லையே என்றார் அந்த பெரிய டீச்சர்.

‘’ஆயிரம் ரூபாய் குடுங்க மேடம். ஆயாவுக்கு துணைக்கு பிள்ளைகளுக்கு கால்கழுவி விட வச்சுக்குங்க. என்றாள் வனரோஜா. உங்களுக்கு புண்ணியமா போகட்டும் அதைச் செய்யுங்க என்று கெஞ்சி கேட்டாள். சரிம்மா வைரஸ் சொல்லுங்க என்றார் அந்த மேடம். நன்றி சொல்லிவிட்டு சந்தோஷமாக வெளியே வந்தால் வனரோஜா.

மனதிருப்தியுடன் புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தாள். வாசலில் ரமணி உட்கார்ந்து இருப்பதை பார்த்தாள். ‘’என்ன ரமணி உன் மாமியா என்ன சொல்லுச்சு? நான் எவ்வளவோ சொன்னேன்கா அது வேண்டாம்னு சொல்லுதுக்கா’ ‘’ சரி சரி இதைச் சொல்லத்தான் வந்தியா? உனக்கெல்லாம் பெத்து போட்டு சீரழிஞ்சா தான். தெரியும்’’ என்று கோபித்து கொண்டாள். அவளுக்குள் ஆத்திரம் ரெண்டாயிரம் ரூபாய் போய்விட்டதே என பொருமினாள்

மறுநாள் ராமலட்சுமியை பார்க்க தனியாகப் போகாமல் தன் வீட்டுக்காரர் ரிட்டயர்டு மிலிட்டரிகாரரை அழைத்துக்கொண்டு போனாள். அவரை விட்டு போலீஸ்காரரை போல மிரட்டி பேசச் சொன்னாள். பயந்து போன ராமலட்சுமி ‘இனி மாதாமாதம் பணம் ஒழுங்காக பணம் கட்டி விடுவதாக சொன்னாள்’ அந்த நேரத்தில் எப்படி கட்டுவ நீ? உன் பிள்ளைகளை படிச்சு என்ன கலெக்டர் ஆகப் போகுதா? ஆளுக்கு ஒரு வேலைக்கு அனுப்பு என்றாள்

அக்கா படிக்காம தான இவ்வளவு கஷ்டப்படுறேன். பிள்ளைகளாவது படிச்சு வரட்டும். அவுங்களுக்கு பள்ளி கூட பணம் கட்டுறேன்னு ஒரு மிஸ் சொல்லி இருக்காங்க அதுக்குதான் அலைஞ்சுகிட்டு இருக்கேன்’’ என்றாள் ‘’பிள்ளைகளுக்கு பீஸ் கட்டி அதை படிக்க வச்சுட்டு நீ பிச்சை எடுக்க போறியா? ஒழுங்கா இரண்டு பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும. ஒரு பிள்ளை மட்டும் படிக்கட்டும்’’ என்றால். ராமலட்சுமி விழித்தாள். எந்த பிள்ளையை வேலைக்கு அனுப்புவது என்று யோசித்தாள்.

‘’இந்த பிளஸ் டூ படிக்கிற பிள்ளை படிக்கட்டும் . வீட்டுல சும்மா உட்கார்ந்திருக்க மூத்தவள நான் ஒரு கடையில நான் சேர்த்துவிட்ரேன் அனுப்பு. இந்த சின்னப்பிள்ள இருக்கு பாரு. இது என்னது ஒன்பது படிக்குதா? இதை நிறுத்திட்டு வேலைக்கு அனுப்பு அதை ஒரு ஸ்கூலுக்கு ஆயா வேலைக்கு உதவிக்கு அனுப்பு. நாளைக்கு இரண்டு புள்ளைய கூட்டிட்டு என் வீட்டுக்கு வர்ற. நான் வேலைக்கு சேர்த்துவிட்டதும் மாசம் மாசம் ஒழுங்கா வட்டி கட்டனும்’’ என்று கோபமாக சொல்லிவிட்டு போனாள்

சின்னவளுக்கு ஆயா வேலைக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. சம்பளத்தை ஆயாம்மா வாங்கி வனரோஜாவிடம் 200 ரூபாய் மாதாமாதம் ரகசியமாக கொடுத்துவிட வேண்டும் என்று ஒரு ஏற்பாடு . அந்த ஹெட்மாஸ்டர் அம்மாவிடம் பேசி உங்கள் பள்ளிக்கூடத்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் செய்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு மாதம் 200 கிடைக்கும் மகிழ்ச்சியில் பிரியா வீட்டுக்கு கிளம்பினாள் பிரியாவும் தன வீட்டுக்காரரிடம் பேசி வைத்திருந்தாள் தேவி அக்கா கொண்டு வந்து சேர்த்து விடும் பொண்ணுக்கு 2000 ரூபாய் சம்பளம் குடுக்கணும் என்று பேசி வைத்திருந்தாள். பாவம் அந்தக்கா அதுக்கு விட்டுக்காரருக்கு தெரியாம நாம் ஏதாவது குடுக்கணும் என்று முடிவு செய்திருந்தாள். வனரோஜா அக்காவிடம் தன முடிவை சொன்னாள். சரிபா நமக்குள்ள என்ன என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியோடு வீட்டுக்கு வந்தாள்.

இனி மாதாமாதம் ராமலட்சுமி மகளிர் சுய உதவிக்குழு பணத்தை கட்டிவிடுவாள். அத்துடன் இவளுக்கும் ஒரு தொகை கிடைக்க வழி செய்து கொண்டாள். இந்த ரமணி தான் கழுத்தை அறுத்து விட்டாள். அவள் மட்டும் சரி என்று சொல்லி இருந்தால் அமுதா அம்மாவிடம் அழைத்துச் சென்று அவளுக்கும் வயிற்றைக் கழுவி விட்டு இரண்டாயிரம் ஆயிரம் ரூபாய் டாக்டரிடம் வாங்கியிருப்பாள். கெடுத்துட்டா பாவி என்று திட்டிக் கொண்டிருந்த போது அவள் கணவன் உள்ளே வந்தான் ‘’என் ஃபிரண்டு கிட்ட பேசிட்டேன். அவன் நாளைக்கு ஒய்ஃப் கூட்டிட்டு வரேன்னு சொன்னான். அமுதாம்மா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வரச் சொல்லிட்டேன்.. நீ கூட போயி இருந்து எல்லாம் பார்த்துக்கோ’ என்றான்.

வனரோஜாவுக்கு ஒரே மகிழ்ச்சி. ரமணியிடம் விட்டதை இவர்களிடம் பார்த்துவிட வேண்டும் என்று சந்தோஷமாக இருவரும் சாப்பிட உட்கார்ந்தனர். வீட்டுக்குள் நுழைந்த அவர்களின் ஒரே மகன் நவீன் எஞ்சினியரிங் கல்லூரிக்கு போய் வருகிறான். அவன் ’’இன்னைக்கு என்ன சொல்லி அம்மாவிடம் பார்ட்டிக்கு ஐயாயிரம் கேட்கலாம்’’ என யோசித்தான். வாராவாரம் இப்படி பொய் சொல்வது அவனுக்கு சகஜமாகிவிட்டது. இன்னைக்கு வெள்ளிக்கிழமை தானே ‘’நாளைக்கு ஜமாய்ச்சுடலாம்’’னு தன் ரூமுக்குப் போனான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *