கச கச..வென்ற மக்களும்,வாகனங்களும் சென்று கொண்டிருக்கும் பாதையை சிரமப்பட்டு கடந்து வரும்போது அப்படியே அமைதியாக காட்சியளிக்கும், பெரிய பெரிய பங்களாக்களாக அமைந்துள்ள இப்பகுதியை கடக்கும்போது, நம் மனம் “வாழ்ந்தால் இப்படி வாழவேண்டும்” என்று மனதில் கண்டிப்பாய் தோன்றும். இதில் அதோ இரண்டாவது வரிசையில் நான்காவதாக இருக்கும் அந்த பங்களாவில் !
தலை சுற்றுகிறது, மயக்கம் வருவது போல இருக்கிறது. வயதானாலே எல்லா தொந்தரவுகளும் வந்து விடுகிறது, மனதுக்குள் சிரிப்பு வந்தது. வயசாயிடுச்சுன்னு சொன்னா அவ்வளவுதான் வீட்டுக்காரருக்கு அப்படி கோபம் வரும், அப்படி என்ன வயசாயிடுச்சு? எழுபதெல்லாம் ஒரு வயசா? எங்கப்பா தொன்னூறுலெயும் எப்படி இருந்தார். முகம் சிவக்க கத்துவார். இப்படி அடிக்கடி கோபம் வர்றது கூட வயசானதுக்கு அறிகுறிதான், மீண்டும் சீண்டுவாள். இப்பொழுது மாட்டிக்கொள்வார், கோபமும் பட முடியாது, உடனே சிரிப்பு வந்து விடும்.
அந்த நாற்காலியிலயாவது உட்காரலாம், உடல் அயர்வு தாளாமல் அங்கிருந்த
நாற்காலியில் உட்கார்ந்தாள். அப்படியே கண்ணை மூடப்போனவள் மனசுக்குள் வீட்டு போட்டோ ஆல்பம் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டது. வேலைக்காரி இரண்டு நாள் விடுமுறை கேட்டு போனது ஞாபகம் வந்தது. அவளிருந்தால் கூப்பிட்டு எடுத்து தர சொல்லலாம். ஆனால் உடம்பு மீண்டும் நாற்காலியை விட்டு எழும்புவதற்கு சோம்பேறித்தனப்பட்டது.
கண்டிப்பாய் பார்க்கவேண்டும் மனசு மீண்டும் ஆசையில் உந்த பல்லை கடித்துக்கொண்டு எழுந்தாள். தலை சுற்றல் அதிகமாக தெரிந்தது. அப்படியே நாற்காலியின் கைப்பிடியை இறுக்கமாய் பற்றிக்கொண்டு அடுத்த அடியை வைத்தாள்.
பக்கத்தில் இருந்த கட்டிலின் முனையை மாற்றி பிடித்து அடுத்த அடியை வைத்தாள்.
இன்னும் நான்கைந்து அடிதான் பீரோவை தொட்டு விடலாம். மனதை தைரியப்படுத்தி அடுத்த அடியை எந்த பிடிப்பும் இன்றி எடுத்து வைத்தாள். நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை. அப்படியே நடந்து விட வேண்டியதுதான். மெல்ல மெல்ல பீரோவை நெருங்கினாள். திறப்பதற்கு சிரமமாக இருந்தது. நல்ல வேளை பூட்டி வைக்கவில்லை. அடிக்கடி திறப்பதால் பூட்ட வேண்டாம் என்று நினைத்தது சரிதான். மனதுக்குள் பாராட்டிக்கொண்டாள்.
போட்டோ ஆல்பத்தை விரித்து முதல் படத்தில் அவளும், அவள் கணவனும் நிற்பதை இமை கொட்டாமல் பார்த்தாள். அன்று நடந்த நிகழ்ச்சி அப்படியே மனதிற்குள் ஓடியது. தர்மராஜ் கனவுலகத்தில் இருந்தான்.ஐந்து நிமிடம் முன்பு தாலி கட்டி மனைவியாக்கிக்கொண்ட பெண்ணின் கையை பிடித்துக்கொண்டிருப்பது அவனுக்கு பட்டுத்துணியை கையில் வைத்திருப்பது போல் இருந்தது.
அப்பா உன் கை எப்படி மெத்து மெத்துன்னு இருக்கு, மனைவியின் காதில் மெல்ல சொன்னான். அவளுக்கு அதற்கே முகம் குங்கும்மாய் சிவந்து விட்டது.பதினேழு வயது இருக்குமா?ம்..ஓரக்கண்ணால் தர்மராஜை பார்த்தாள். ஆள் வாட்டசாட்டமாய் இருந்தான். இருபது வயது காளைக்குரிய தோற்றத்துடன் காணப்பட்டான். சட்டென மீண்டும் திரும்பி மனைவியை பார்த்தான். இவளுக்கு ஒரே வெட்கமாக போய்விட்டது. சட்டென வெட்கத்தை மறைக்க கண்களை தாழ்த்திக்கொண்டாள்.
அடுத்து..அடுத்து..ஆல்பங்களை திருப்பிக்கொண்டே போனாள். சட்டென தோளில் ஒரு குண்டு பையனை சாய்த்து நின்றதை பார்த்தவள் இவன் பிறந்தப்பத்தான் இவருக்கு மானேஜர் புரோமோசன் கிடைச்சுது. எப்படி இருக்கான், கொழுக் மொழுக்குன்னு.. முதல் பிரசவம் அவங்க வீட்டிலயும், எங்க வீட்டிலேயும் எப்படி தாங்கு தாங்குன்னு தாங்குனாங்க, இப்பொழுது நினைத்தாலும் அவளுக்கு சிரிப்பு வருகிறது. நல்ல கலர் அவங்க அப்பா மாதிரி.
அடுத்து அடுத்து. பக்கங்கள் திருப்ப பட்டன. இப்பொழுது இடுப்பில் இருந்தவள் கண்களுக்கு மையிட்டு குண்டு குண்டு கன்னங்களுடன் இருக்கும் பாப்பாவை பார்த்தாள். ஐயோ என் கண்ணே பட்டுடும் மனதுக்குள் நினைத்துக்கொண்டவள், எப்படி இருந்தா சும்மா தள..தளன்னு. அவங்கப்பாவுக்கு முதல்ல பையன் பிறந்தது ஏமாற்றமானதுக்கு இரண்டாவது பொண்ணா பிறந்தது எவ்வளவு சந்தோசத்தை கொடுத்துச்சு. எப்ப பார்த்தாளும் புள்ளைய தூக்கி வச்சுகிட்டே இருப்பாரு. படிப்புலயும் கெட்டியாத்தான் இருந்தா..நினைத்துக்கொண்டவள் தன் கணவன் இவள் பிறந்த அன்று சொன்னதை ஞாபகம் வந்தது. அப்பாடி அழகு புள்ளைய பெத்து கொடுத்திருக்கே” மனசு விரிய சொன்னது இப்பொழுது நினைத்தாளும் சிரிப்பு வருகிறது.
மூன்றாவது பையன் பிறக்கும் போது உடம்பு தகராறு பண்ண ஆரம்பித்து விட்டது. தர்மராஜ் பயந்து விட்டான். போதும் கொஞ்ச நாள் கழிச்சு ஆபரேசன் பண்ணிக்கலாம். அவளை தாங்கு தாங்கு தாங்கினான். அவளுக்கு அப்பொழுது சிரிப்புத்தான். போட்டோவில் பார்த்தாலே தெரிகிறதே மூணாமவன், மற்ற இருவரை போல் கொழுக் மொழுக்கென்று இல்லாமல் வற்றலாய் தெரிந்தான். எப்படியோ இவனை மூத்தவங்க மாதிரி கொண்டு வர்றதுக்கு நிறைய கஷ்டப்பட்டோம். மனதுக்குள் சொல்லிக்கொண்டவள், அடுத்து நான்கைந்து பக்கம் திருப்பியவள்,”அட பெரியவன் அமெரிக்கா கிளம்பினப்ப எடுத்த போட்டோ”, எப்படி எங்க இரண்டு பேர் தோளையும் புடுச்சிகிட்டு நிக்கறான். இவருக்கு ஒரே சந்தோசம் பையன் பாரின் போய் படிக்கிறான்னு, அதுவும் அரசாங்க உதவியில. அன்னைக்கு இவருக்கு ஒரே கொண்டாட்டம்தான்.இருந்தாலும் அவன் பிரியறது மனசுக்கு கஷ்டமாத்தான் இருந்துச்சு.
அடுத்து அடுத்து இன்னும் நான்கு பக்கங்கள் புரட்ட அப்பா கல்யாண கோலத்துல எவ்வளவு அழகா இருக்கறா என் பொண்ணு. மனதுக்குள்ளே திருஷ்டி கழித்துக்கொண்டாள். அப்ப இருவத்தி இரண்டு இருக்குமா இவளுக்கு.இருக்கும் கல்யாணம் முடிச்ச ஒரு மாசத்துக்குள்ள ஆஸ்திரேலியா கிளம்பிட்டாங்க இல்லையா. இவங்கப்பாவுக்கு மூஞ்சியே இல்லை. பொண்ணு தன்னை விட்டு போறாளேன்னு. என்ன இருந்தாலும் அவ அடுத்த வீடு போறவதானே.
சே இதுல கூட கடைகுட்டியோட போட்டோ வரலை. இவனாவது கடைசி வரைக்கும் எங்களோட இருந்திருக்கலாம். பாசமாத்தான் இருந்தான் ஒரு நாள் நான் விரும்பின பெண்ணைத்தான் கட்டுவேன்னு சொன்னான்.அவங்கப்பா சரின்னு சொல்லியிருக்கலாம், இல்லே நானாவது அவங்கப்பா கிட்டே சொல்லி சம்மதம் வாங்கியிருக்கலாம். அதுதான் சாக்குன்னு கோபிச்சுகிட்டு போயிட்டான். அந்த பொண்ணோட போட்டாவை கூட கொண்டு வந்து காட்டலை. அவ மலேசியாவுல வேலை கிடைச்சு போறான்னு அவ கூடவே கிளம்பிட்டான். இப்போ எத்தனை குழந்தைங்கன்னு தெரியலை !
இவரு அங்க இங்கேயுன்னு வெளியே போய்ட்டு இருந்தவரைக்கும் ஒண்ணும் தெரியலை,உடம்புக்கு முடியாம போன பின்னாலதான்…. ..ம்… அப்படியே நாற்காலியில் தலையை சாய்த்தாள்.கண்களில் இருந்து கண்ணீர் இரு புறமும் வழிந்தது.
நான்கு நாட்களாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்த பங்களா வாசலில் விடுப்பு முடிந்து வேலைக்கு வந்த வேலைக்காரி கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகப்பட்டு அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் சொல்ல அவர்கள், காவல் துறைக்கு தகவல் தந்தனர். அவர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த பொழுது…
மறு நாள் வெளி வந்த பத்திரிக்கையில் நாற்காலியில் உட்கார்ந்த நிலையிலேயே ஒரு வயதான பெண் இறந்த நிலையில் கிடந்தார்கள். அவர்கள் மடியில் போட்டோ ஆல்பம் திறந்த நிலையிலேயே இருந்தது. இறந்து நான்கு நாட்களாகி இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களது மகன், மகள் இவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் அமெரிக்கா, மலேசியா, ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள். அவர்கள் சூழ்நிலை காரணமாக வர முடியவில்லை என தகவல் தெரிவித்துள்ளார்கள். வேண்டுமானால் காவல்துறையையே மற்ற காரியங்களை செய்து விட சொல்லிவிட்டாரகள். அதற்கான தொகை எவ்வளவு ஆனாலும் அனுப்பி விடுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இறந்து போன பெண்ணின் கணவர் மூன்று வருடங்களுக்கு முன்னால் காலமாகிவிட்டார். அதன் பின்னர் இந்த மாது மட்டும் தனியாக இந்த பங்களாவில் வாழ்ந்து கொண்டிருந்தார்.