தனிக்குடித்தன ஆசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 5,185 
 
 

நித்யாவுக்கு மனதில் சந்தோஷ ரேகைகள் கீற்று விட்டன.

பத்து வருட கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு – அவள் மாமனார், மாமியார் அவளின் தனிக்குடித்தனத்திற்கு சரியென்று சொன்னது… மிகவும் சந்தோஷமான தருணங்கள்.

கணவருக்கு ஒரு தங்கையும்; இரண்டு தம்பிகளும்.

நாத்தனாரின் புடுங்கல்தான் நித்யாவுக்கு வேதனை என்றால்; மாமனாரின் பிக்கல் புடுங்கல் அதைவிட மரணவேதனை. மாமியார் ரொம்பவும் அப்பாவி.

கடந்த பத்து வருடங்களாக தனிக்குடித்தனத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தவளுக்கு, தற்போது கடைசி மச்சினரின் திருமணத்திற்குப் பிறகு விடுதலை கிடைத்துவிடும் என்றால் எவ்வளவு சந்தோஷம்?. அவளுக்கு கல்யாணமான புதிதில், மாமனாருக்கு அடுத்தபடியாக அவளது நாத்தனார் நித்யாவை படுத்தி எடுத்தாள். நல்ல வேளையாக அடுத்த இரண்டு வருடங்களில் அவளுக்கு திருமணமாகி கணவருடன் சென்றாள்.

ஆனால் அதற்குப் பிறகும் முதல் நான்கு வருடங்கள் வருடா வருடம் தன் வயிற்றைத் தள்ளிக்கொண்டு பிரசவத்திற்கு இங்கு வந்து விடுவாள். மொத்தமாக ஆறு மாதங்கள் இருந்துவிட்டு நித்யாவை உலுக்கி எடுத்து விட்டுத்தான் செல்வாள். நான்கு குழந்தைகளுக்குப் பிறகு இப்போதுதான் அடிக்கடி வருவதைக் குறைத்துக் கொண்டாள்.

அடுத்ததாக மூத்த மச்சினர் கம்ப்யூட்டர் படிப்பு முடிந்ததும் பெங்களூரில் வேலை கிடைத்து தனியாக கழண்டு கொண்டார. அதன்பின் ஒரு அழகான கன்னடப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு பெங்களூரிலேயே செட்டிலாகி விட்டார.

தற்போது கடைசி மச்சினருக்கு வரும் ஞாயிறு மாம்பலத்தில் பெண் பார்க்கப் போகிறார்கள். அவருக்குத் திருமணமானதும், புதுமணத் தம்பதிகளை இங்கு இருக்கச் சொல்லிவிட்டு; தன் இரண்டு குழந்தைகளுடன் அவள் தனிக் குடித்தனம் செல்ல அனைவரும் ஒப்புக்கொண்டது நித்யாவுக்கு பெரிய நிம்மதி.

இதுவரை அவளது தனிக்குடித்தன ஏக்கம், பல காரணங்களால் ஒவ்வொரு முறையும் தட்டிப் போனது.

எப்படா மச்சினருக்கு நல்ல படியாக சீக்கிரம் கல்யாணம் ஆகும் என்று ஆவலுடன் காத்திருந்தாள். தன்னுடைய பத்து வருடக் காத்திருப்பு வீண் போகவில்லை என்று அவளுக்குத் தோன்றியது. பூஜையறைக்குச் சென்று அகிலாண்டேஸ்வரி அம்மன் முன்பு நின்று எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டிக் கொண்டாள்.

அவர்கள் இருக்கும் வீடு சொந்த வீடுதான் என்றாலும், இரண்டு பெட்ரூம்களுடன் கூடிய சிறிய வீடு என்பதால் மச்சினரின் திருமணத்திற்குப் பிறகு அனைவரும் அந்த வீட்டில் இருப்பது மிகவும் கஷ்டம்.

அதனால் அங்கிருந்து கழண்டு கொள்ளத் துடித்தாள். குறிப்பாக அவளின் மாமனாரிடமிருந்து.

அவருக்கு வயது 70. எப்பவும் சிடு சிடுப்பார். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். அவள் கணவரை அடிக்கடி ஏதாவது வேலை ஏவிக்கொண்டே இருப்பார்.

அப்படித்தான் ஒருநாள் நித்யாவின் கணவர் வேலைக்கு கிளம்பும்போது அவரிடம் வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் ஷுகர் மாத்திரைகள் வாங்கி வரச் சொன்னார். அவள் கணவர் அவற்றை வாங்க மறந்து வீட்டுக்கு திரும்பி விட்டார்.

“ஜெயராமா… ஷுகர் மாத்திரை வாங்கினயா?”

“ஓ… ஸாரிப்பா. மறந்துட்டேன். சட்டையை மாட்டிண்டு ஸ்கூட்டர்ல போய் இப்பவே வாங்கிண்டு வரேன்…”

“அதெப்படிடா மறக்கும்? நீ எங்கியும் இப்ப போக வேண்டாம்…”

ஈஸிச் சேரிலிருந்து எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி படிகளில் இறங்கி தானே விர்ரென்று மெடிகல் ஷாப்வரை நடந்து சென்று மாத்திரைகளை வாங்கி வந்தார்.

அத்தோடு நில்லாமல் “இனிமே உங்கிட்ட நான் ஏதாவது கேட்டேன்னா என்னைச் செருப்பால அடி…” என்று கோபத்தில் கத்தினார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த நித்யாவுக்கு அழுகை வந்தது.

இரவு பெட்ரூமில் நித்யா தன் கணவரிடம், “என்னங்க அப்பா இப்படி பேசறாரு…” என்று வருத்தமடைந்தாள்.

“அவரப் பத்திதான் நமக்கு தெரியுமே… இன்னும் கொஞ்ச நாள்தானே… அப்புறம் நாம தனிக்குடித்தனம் போயிடலாம்…”

“கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… பெத்த அம்மா அப்பாகூட ஜாயின்ட் பேமிலியா இருக்கிறது அப்படியொரு பெரிய கஷ்டமா?”

“ஆமா. அது யாராக இருந்தாலும் சரி; கல்யாணமாகாமே பிரம்மச்சாரியா இருக்கிற வரைக்கும்தான் அம்மாவும் அப்பாவும். கல்யாணம் ஆயாச்சுன்னா அடுத்த நிமிஷமே மனசு மாறிப் போயிருது”.

“அப்படியா சொல்றீங்க?”

“ஆமா. இந்த அம்மாக்களையாவது ஒரு வகையில் சேர்த்துக்கலாம். ஆனா இந்த அப்பாக்கள் இருக்கானுங்களே – அவனுங்களை எந்த வகையிலும் சேர்த்துக்க முடியாது நித்யா. யப்பாடி…. வயசாக வயசாக அவனுங்க பண்ற அலம்பல் இருக்கு பார், அதை வால்யூம் வால்யூமாக எழுதலாம். அவ்வளவு அலம்பல் இருக்கு! அதுவும் வயசான காலத்தில் தன் பெண்டாட்டிகளை அவனுங்க படுத்தற பாடு இருக்கே… அதை எழுத உட்கார்ந்தா லேசில் முடியாது. அது பாட்டுக்கு அனுமார் வால் மாதிரி நீண்டுகொண்டே போகும்.”

“டி.வி.யில் சீரியலா காட்டினா, ஒரு வருஷத்துக்குப் போகும்னு சொல்றீங்க…”

“நீ வேற… ஏழெட்டு வருஷம் காட்டலாம்.”

அன்று ஞாயிற்றுக்கிழமை.

மச்சினருக்கு பெண் பார்க்க நித்யா தான் வரவில்லை என்றதும், மற்ற அனைவரும் மாம்பலம் போவதாக ஏற்பாடு.

மாலை நான்கரை ஆறு ராகுகாலம் என்பதால் நான்கு மணிக்கே மாமனார், மாமியார், கணவர் மற்றும் மச்சினர் கிளம்பினார்கள்.

எட்டு மணிக்கு அனைவரும் வீடு திரும்பினார்கள்.

காரிலிருந்து இறங்கிய மாமனாருக்கு வாயெல்லாம் பல். என்னமோ இவரே அந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாகப் போகப் போகிறாப்பலத்தான் துள்ளினார். ஆனால் நித்யாவின் கணவர் உம்மென்று இருந்தார்.

தனியாக அவரை பெட்ரூமுக்குள் தள்ளிக்கொண்டு போய் ஆவலுடன், “என்னங்க ஆச்சு?” என்றாள்.

“தம்பிக்கு கல்யாணம் ஆனதும், அதுதான் சாக்குன்னு சொல்லிட்டு தனிக் குடித்தனம் போயிடலாம்னு நானும் நீயும் ப்ளான் போட்டு, அப்பாகிட்ட அப்ரூவலும் வாங்கினோம். ஆனால் நம்ம ப்ளான் நடக்காது போல…”

“ஏங்க?” – குரலில் ஏமாற்றம்.

“தம்பிக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிடிச்சி[ks1] [ks2] … ஆனா அவங்க வீட்ல ஒரு பெரிய கண்டிஷன் போட்டாங்க…”

“என்ன கண்டிஷன்?”

“என் தம்பி அவங்க வீட்டோட மாப்பிள்ளையா இருக்கிறதுக்கு நாங்க சம்மதிக்கனுமாம்… அதுக்கு சம்மதம் இருந்தாத்தான் இந்தக் கல்யாணமே நடக்குமாம்.”

“ஓ காட். அப்புறம் என்ன ஆச்சு?”

“இந்த கண்டிஷனுக்கு அப்பா ஒருநாளும் ஒத்துக்க மாட்டார்னுதான் நெனச்சோம்..”

“அதானே – பயங்கரமான ஆளாச்சே அப்பா…”

“என்ன நெனச்சாரோ சற்று யோசிச்சுப் பார்த்திட்டு மனுஷன் சரின்னு சொல்லி பல்டி அடிச்சிட்டார்…”

“அப்படி ஒரு வீட்டோட மாப்பிள்ளையா இருக்கிறதுக்கு உங்க தம்பியும் சம்மதிச்சிட்டாரா?”

“நீ ஒண்ணு, விஷயம் புரியாத ஆளா இருக்கே. பெரிய பணக்காரனோட வீட்டுக்கு வீட்டோட மாப்பிள்ளையா போய் இருக்கிறதுக்கு கசக்குமாக்கும்? எனக்கும் ஒரு சான்ஸ் அந்தக் காலத்தில் வந்திருந்தா நானும்தான் சரின்னு சொல்லியிருப்பேன்.”

“…………………………”

“கல்யாணம் முடிஞ்சாச்சுன்னா என் தம்பி மாமனார் வீட்டோட போய் இருந்துடுவான். அப்புறம் நாம எந்தச் சாக்கை வச்சுக்கிட்டு தனிக்குடித்தனம் போக முடியும் சொல்லு?”

நித்யாவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ள விறு விறுவென பூஜையறையினுள் சென்று அகிலாண்டேஸ்வரி முன்பு கை கூப்பி அமைதியாக நின்றாள்.

‘பரவாயில்லை… பல நேரங்களில் நமது ஆசைகள் நிறைவேறுவதில்லை. புரிதலுடன், அன்பாக, அனுசரணையுடன் கூடிய கணவன் எப்போதும் அருகில் இருக்கும்போது எனக்கு என்ன குறை.? இந்த உலகத்தையே தான் ஜெயித்துக் காட்டலாமே’ என்று தன்னையே சமாதானப் படுத்திக்கொண்டாள்.

நித்யாவின் தனிக்குடித்தன ஆசை மறுபடியும் நிராசையாகிப் போனது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *