தனக்கு வந்தால்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2023
பார்வையிட்டோர்: 2,008 
 
 

ஹலோ! நீங்க டாக்டர் தியாகுதானே!

எஸ். டாக்டர் தியாகு! சைக்கியாட்ரிஸ்ட்.

டாக்டர் இப்ப எனக்கும் என் பெண் குழந்தைக்கும் இந்த உலகத்தை விட்டு போயிடலாமுன்னு தோணுது.

மைகாட் ! அப்படி எல்லாம் நினைக்காதீங்க, இந்த மாதிரி மன நிலை வரவே கூடாது.

தெரியுது டாக்டர், ஆனா நடக்கற சூழ்நிலைகளை பார்க்கும்போது எங்களால தாங்க முடியலை.

அப்படியா ? இப்ப மணி என்ன? பத்து மணியாகுது, ஒண்ணு பண்ணுங்களேன், நீங்க எங்க இருக்கறீங்கன்னு சொல்லுங்க, நானே அங்க வந்து  இது விஷயமா பேசறேன்., அதுக்குள்ள விபரீதமான முடிவு எதுவும் எடுக்க வேண்டாம்.

அவ்வளவு சீக்கிரம் அந்த முடிவுக்கெல்லாம் போக மாட்டேன், ஆனா நீங்களே சிந்திச்சு பாருங்க, கல்யாணம் ஆகி ஆறு வருசம் ஆச்சு, ஆனா எங்க வீட்டுக்காரரு இத்தனை வருசத்துல எண்ணி வச்சு பத்திருபது நாள்தான் நேரத்துல வீட்டுக்கு வந்திருப்பாரு  

 ஓ ஐம் சாரி மேடம் உங்க வருத்தம் புரிய்து, ஆண்களுக்கு சில பிரச்சினைகள் இருக்குதே மேடம் பட்., அதுக்காக அவங்க செய்யறது கரெக்ட்ன்னு சொல்ல மாட்டேன். இப்ப நீங்க “ரிலாக்ஸ் “ ஆயிடுங்க, உங்களுக்கு ஆட்சேபணை இல்லையின்னா நாளைக்கு என்னைய வந்து மீட் பண்ணுங்க, கூடவே உங்க ஹஸ்பெண்டையும் கூட்டிட்டு வாங்க, அவர்கிட்டேயும் கொஞ்சம் பேசணும்.

அவர் நான் கூப்பிட்டா வருவாருன்னு தெரியாது, நான் படிச்சதே சமூகத்தை திருத்தறதுக்குத்தான் அப்படின்னு பேசுவாரு.குடும்பமெல்லாம் அடுத்ததுன்னு தத்துவம் பேசுவாரு.

ஹா ஹா உண்மைதான் மேடம், சமூகத்துக்காக சேவை செய்யறேன்னு சொல்லற பாதி பேரு தன்னுடைய குடும்பத்தை கவனிக்க மறந்துடறாங்க, இதுனால இப்ப பாருங்க, உங்களை மாதிரி சில பேரு தேவையில்லாத எண்ணங்களுக்கு போயிடறாங்க.

அதை விட கொடுமை டாக்டர் அந்த குடும்பத்துல ஏற்படற முக்கியமான ( இல்லை ) சந்தோஷமான நாட்களை கூட ஞாபகம் வச்சுக்கமாட்டேங்கறாங்க.

யெஸ்..யெஸ்..புரியுது உங்க ஆதங்கம், ஆண்கள் கிட்டே இருக்கற வீக்னஸே இதுதான், அதுக்காக அவங்களுக்கு சப்போர்ட் பண்னறேன்னு நினைச்சுக்காதீங்க. இப்ப தயவு செய்து நல்லா படுத்து ரெஸ்ட் எடுங்க, நாளைக்கு ஒன்பது மணிக்கெல்லாம் நான் வந்துடுவேன், பர்ஸ்ட் அப்பாயிண்ட்மெண்ட் உங்களுக்குன்னு என் செகரட்டரி கிட்டே சொல்லி வச்சிடறேன்,கண்டிப்பா வாங்க, நாம நிதானமா பேசுவோம், இப்ப உங்களுக்கு தேவை நிம்மதியான தூக்கம் மட்டும்தான்.

நான் தூங்கத்தான் முயற்சிக்கறேன், ஆனா பாவம் என் குழந்தை இவ்வளவு நேரம் அவங்கப்பாவுக்காக எதிர்பார்த்து, இப்பத்தான் தூங்குனா, அதுக்குப்பின்னாடிதான் யோசிச்சேன், ஒண்ணா “டைவர்ஸ்” வாங்கிட்டு போயிடலாம், இல்லையின்னா முதல்ல நான் சொன்ன எண்ணம் இந்த இரண்டு மட்டும்தான் என்னுடைய “ஜாய்ஸா” இருக்கு. இருந்தாலும் நான் இப்பவும் அவரை மனசார நேசிக்கறேன், காரணம் அவர் எங்க கிட்ட காட்டற உண்மையான அன்பு, ஆனா அவர் சொந்த பொண்டாட்டியையும், குழந்தையையும் மறந்துட்டு வேலை செய்யறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை..

பளீஸ்…மறுபடி அந்த எண்ணங்களுக்கு போயிடாதீங்க, கண்டிப்பா நாளை காலையில உங்க கிட்டே நான் பேசணும்.

காலையில எதுக்கு டாக்டர் பேசணும், இப்ப கூட பேசிகிட்டுத்தானே இருக்கோம்,

புரியுது ஆனா இந்நேரமாயிடுச்சு, மணி பதினொன்னு பக்கம் ஆயிடுச்சு, தயவு செய்து உங்க ஹஸ்பெண்ட் போன் நம்பர் கொடுங்க, அவர்கிட்டே பேசி உங்க வீட்டுக்கு உடனே வர சொல்றேன்.

அவர் நம்பர் உங்க கிட்டேயே இருக்கு டாக்டர் !

ரியலி ! தட்ஸ் குட்.. அவர் பேர் சொல்லுங்க, என் போன்ல கண்டுபிடிச்சு பேசறேன்

உங்க பேரேதான் டாக்டர் அவர் பேரும் !

மை காட் என் பேரேதானா ? அப்படீன்னா ! …சியாமளா..நீயா பேசறே ?

கட்டுன பொண்டாட்டி குரலை கூட கண்டு பிடிக்காத உங்களோட ஆறு வருசம் குப்பை கொட்டி..

ப்ளீஸ்..ப்ளீஸ் சியாமளா கோபிச்சுக்காதே, சாயங்காலத்துல இருந்து வரிசையா பேஷண்ட்..வந்துட்டாங்க.

பேஷண்டை கட்டியே அழுங்க, பாவம் வர்ஷிதா..அவளுக்கு இன்னைக்கு பர்த்டேன்னாவது தெரியுமா? சாயங்காலம் வந்து அவுட்டிங்க் கூட்டிட்டு போறேன்னு சொல்லி இவ்வளவு நேரம் டாடி..வந்துடுவாரு அப்படீன்னு காத்திருந்து இப்பத்தான் தூங்க போனா..

ப்ளீஸ் சியாமளா அப்படியே லைன்லயே நில்லு, ராமசாமி ராமசாமி..இந்தா நான் போறேன் நீ கதவை சாத்திக்கோ… சார்..சார்..உங்க சூட்கேஸ்..அது கிடக்கட்டும், நாளைக்கு பாத்துக்கலாம், நான் இப்பவே என் வீட்டுக்கு போயாகணும், ஐயோ என் பொண்ணு பர்த்டேன்னு கூட மறந்து தொலைச்சுட்டேன்… தலை தெறிக்க காரை நோக்கி ஓடுகிறான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *